Skip to Content

11. அன்னை இலக்கியம் - அன்னை வாழ்வு

அன்னை இலக்கியம்

அன்னை வாழ்வு

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

இல. சுந்தரி

வீட்டுப் படி இறங்கியதும் வீடு மறந்துவிட்டது. அலுவலகப் படி ஏறியதும் உலகம் மறந்துவிட்டது. பூரணமாகத் தன் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் இயல்பு அவளுக்கு. எல்லோரும் மதியம் ஒரு மணியை எதிர்பார்த்து சாப்பாட்டு இடைவேளைக்கு எழுந்து போய்விடும்போது, கையில் உள்ளதை முடிக்காமல் எழுந்திருக்க- மாட்டாள். ஒரே பெண் அலுவலர் என்பதால் தனியே சாப்பிடுவாள். அவள் அரட்டை அடிக்கவோ, ஓய்வெடுக்கவோமாட்டாள். சாப்பிட்டதும் கைப்பையில் வைத்திருக்கும் தெய்வீகப் புத்தகம் ஒன்றை எடுத்து சில வரிகளைப் படித்துவிட்டு புது உற்சாகத்துடன் மீண்டும் பணியில் ஈடுபடுவாள். அன்று அவள் சாப்பிட எழுந்தபோது மணி 2.20. எல்லோரும் சாப்பிட்டு, அரட்டையடித்து முடித்து சீட்டுக்குத் திரும்பிவிட்டனர். அவள் அப்போதுதான் ரூமை சார்த்திவிட்டு டிபன் பாக்ஸுடன் ஓய்வறைக்குப் போனாள்.

அப்போதுதான் முதலாளி உள்ளே நுழைந்தார். இப்போது அவள் ஏதேனும் மாட்டிக்கொள்ளமாட்டாளா என்று எல்லோர்க்கும் சுவாரஸ்யமான எதிர்பார்ப்பு. அவள் உயர்வு பொறுக்க முடியாத சில உள்ளங்களும் அங்கிருந்தன. பொறாமையைப் போல் தீயது உண்டா உலகில்? அவர்கள் ஆசைப்பட்டதுபோல், பியூன் அவளைத் தேடி வந்தான். அறை சார்த்தப்பட்டிருந்தது. முதலாளி வரும் முன் அவளுக்குத் தனி அறையோ, தனி கம்ப்யூட்டரோ கிடையாது. அறை சார்த்தி இருப்பதைப் பார்த்து பக்கத்து சீட்காரரிடம், "இவங்க எங்கே? ரூம் சார்த்தியிருக்கே?'' என்றான். காத்திருந்த வாய்ப்பு வந்தவுடன், "ரூம் சார்த்தியிருக்கு என்று போய் முதலாளியிடம் சொல்-விடு'' என்றார் அடுத்த சீட்காரர். பத்து நிமிடத்தில் விஜி வந்து அறைக் கதவைத் திறந்து சீட்டில் உட்கார்ந்து தெய்வீகப் புத்தகத்தைப் பிரித்தாள். ஒரு வரிதான் படித்தாள்.

உடனே பியூன் வந்து, "அம்மா, ஐயா கூப்பிடறாங்க'' என்றான்.

"இதோ வந்துவிட்டேன்'' என்று உடனே சென்றாள்.

"சாப்பிடவிடாமல் அழைத்துவிட்டேனா?'' என்றார் முதலாளி சிரித்துக்கொண்டே.

"இல்லை சார்'' என்றாள் விஜி.

இவளைக் கடுமையாகப் பேசாமல் இப்படி சிரித்துப் பேசுவது மானேஜருக்கு எரிச்சலூட்டியது.

தன் ஆத்திரத்தைக் காட்ட எண்ணி, "எங்கே போனீங்க?

சார் அப்பவே வந்து காத்திருக்காங்க'' என்றார்.

அவள் பதில் கூறும் முன்பே, முதலாளி, "எங்கே போவாங்க? சாப்பிடத்தான் போயிருப்பாங்க. இங்கே அவங்களுக்கு அரட்டை அடிக்க வேறு பெண்கூட இல்லையே'' என்று கூறவே, மானேஜருக்கு சப்பென்றிருந்தது.

"விஜி, நீங்க ஏதோ எக்ஸாம் எழுத வேண்டும் என்றீர்களே, அது எப்போது?'' என்றார்.

"அது ஏப்ரலில்தான் சார்'' என்றாள்.

"அதற்கு லீவு வேண்டியிருக்குமோ?'' என்றார் முதலாளி.

அதைப் பற்றி இவருக்கென்ன கரிசனம் என்று மானேஜருக்கு உள்ளூர ஆத்திரம்.

"இல்லை சார், நான் எக்ஸாமே எழுதப்போவதில்லை. வேலைக்கு வருவதால் என் குழந்தையைப் பெற்றோரிடம் விட்டு வைத்திருக்கிறேன். அவனை அழைத்து வரவேண்டும். அதனால் எக்ஸாம் எழுதுவது நிச்சயமில்லை. வேலையை விட்டுவிட வேண்டியிருக்கலாம்'' என்றாள் விஜி.

முதலாளிக்கு ஏமாற்றமாயிருந்தது. மானேஜருக்குப் பரம சந்தோஷம்.

சிறிது யோசித்தார். "சரி, சரி. நீ போய் உன் வேலையைப் பாரம்மா'' என்றனுப்பிவிட்டார்.

இதுதான் தருணமென்று மானேஜர், "போகட்டும் விடுங்கள் சார். பெண்கள் வேலைக்கு வந்தாலே நிறைய பிரச்சினைகள் வரும். ஏதோ வந்தோம், போனாம் என்பதற்குத்தான் அவர்கள் சரிப்படுவார்கள். எனக்குத் தெரிந்த கெட்டிக்காரப் பையன் ஒருவனிருக்கிறான். அழைத்து வரட்டுமா? உங்களுக்குப் பக்கபலமாக இருப்பான்'' என்று அவருக்கு ஆதரவுபோல் பேசினாலும், மானேஜரின் எண்ணம் அவருக்குப் புரியாமலில்லை.

மனத்தையே மனிதன் என்று நாம் நம்புவதுபோல, ஆன்மாவே நம் தலைவன் என்பதை மறந்ததுபோல, முதலாளியை மறந்து, மானேஜரையே நிறுவனம் தலைவனாக நம்பும் பொய்மைக்கு அவர் இதுவரை இடம் கொடுத்துவிட்டது உண்மைதான். இனி அவர் விழித்துக் கொண்டுவிட்டார்.

"பரவாயில்லை பி.ஆர். (பரசுராம்). அதைப் பற்றிப் பிறகு பார்ப்போம்'' என்று புறப்பட்டுவிட்டார். காரில் ஏறி அமர்ந்தவர் விஜியை அழைத்து வரச் சொன்னார். விஜியும் வெளியே வந்து காரில் அமர்ந்திருக்கும் முதலாளியைப் பார்த்தாள்.

"விஜி, உன் கணவரை அழைத்துக் கொண்டு நாளை இரவு 7 மணிக்கு என்னை வந்து பார்'' என்று அட்ரஸ் கார்டை அவளிடம் கொடுத்தார்.

"சரி சார்'' என்றாள் பணிவாக. எல்லோரும் இவள் வெளியே சென்றதையும், உள்ளே வந்ததையும் பார்த்தனர். மானேஜர் அறையில் இருந்ததால் அவருக்கு எதுவுமே தெரியாது. எல்லோருக்கும் என்ன நடந்திருக்கும் என்று அறிய ஆவல். ஆனால் விஜி கலகலப்பான பெண்ணில்லை என்பதால் எல்லோர்க்கும் தயக்கம். மேலும் இப்போது அவளுக்கு முதலாளியின் கவனிப்பு வேறு இருப்பதால் எச்சரிக்கையாயிருந்தனர்.

மாலை வீடு திரும்பியதும் விஜிக்கு வீட்டு நிலைமை நினைவுக்கு வர ஆரம்பித்தது. சில தினங்களாய் வாசன் வித்யாசமாய் நடந்து கொள்வது, காலையில் எதிர்வீட்டில் சாவியைக் கொடுத்தது எல்லாம் நினைவுக்கு வர, இந்நிலையில் நாளை இரவு தன் கணவனை அழைத்துக் கொண்டு வரச் சொல்லி முதலாளி கூறியதும் சேர்ந்து குழப்பம் ஏற்பட்டது. பிடிவாதமாய் அந்த எண்ணங்களைத் தவிர்த்து கதவைத் திறந்து உள்ளே போய், அவன் வந்து போனானா, சாப்பிட்டானா என்று பார்த்தாள். அவன் வந்திருக்கவில்லை எனத் தெரிந்தது.

உடனே எதிர்வீட்டில் போய் அவன் வந்து சாவி வாங்கிக் கொண்டானா என்று அறிய முற்பட்டாள். இவளைப் பார்த்தவுடன் எதிர்வீட்டு மாமி, "உன் கணவர் வந்து பார்த்துவிட்டுப் போயிருக்கிறார். நான் உள்ளே வேலையாய் இருந்ததால் அவர் வந்ததைக் கவனிக்கவில்லை. பிறகு பக்கத்து வீட்டு அம்மா சொல்லித்தான் தெரிந்தது. சாரி விஜி'' என்று சாவியைக் கொடுத்து விட்டாள்.

வந்து பார்த்துவிட்டுப் போயிருக்கிறான். என்ன ஆகுமோ என்று பயம் எழுந்தது. மனதைத் திடப்படுத்திக் கொண்டாள்.

பாலைக் காய்ச்சி சிறிது பருகினால் களைப்புத் தீரும் என்றெண்ணி பாக்கெட்டைப் பிரித்து பாத்திரத்தில் ஊற்றி அடுப்பை ஏற்றினாள். பால் பொங்கி அடுப்பை நிறுத்தவும், ஹாலில் எதையோ பொத்தென்று போடும் ஓசை எழவும் சரியாயிருந்தது.

ஹாலுக்கு வந்தாள். வாசன்தான் தன் வரவை, கோபத்தை வெளிப்படுத்த ஒரு புத்தகத்தை டேபிள்மீது ஓசையெழ வைத்திருக்கிறான்.

அந்தச் சூழலின் இறுக்கத்தை எப்படித் தளர்த்துவது? அவனை எதிர்த்துப் பேச அவளுக்குச் சந்தர்ப்பம் வந்ததேயில்லை. பணிவான மனைவியாகவே இருந்தாள். அவனே சில முறை அவளிடம், "நீ இன்னும் சற்றுத் தைரியமாய் இருக்க வேண்டும். தைரியமாய்ப் பேச வேண்டும்'' என்று சொல்வான்.

மெல்ல திடப்படுத்திக் கொண்டு, "காபி கொண்டு வரட்டுமா?'' என்றாள்.

"எதற்கு?'' என்றான் குத்தலாக.

இது என்ன கேள்வி? இதற்கு எப்படிப் பதில் சொல்வது என்று அவளுக்குத் தெரியவில்லை. மௌனமாய் நின்றாள்.

"காலையிலிருந்து பூட்டிக்கொண்டு போனாயே, சாப்பிட்டேனா? இருக்கிறேனா? இறந்துவிட்டேனா? என்று நினைத்துப் பார்த்தாயா?'' என்றான் கடுமையாய்.

இது வீண் வம்பு என்று அவளுக்குப் புரிந்தது. அவள் புறப்படும் நேரம் வரை வெளியே சென்ற அவன் திரும்பி வராதது அவன் தவறல்லவா? அல்லது போகும்போது ஏதேனும் சொல்லிச் சென்றிருக்கலாம் அல்லவா? அவன் பிழை அவனுக்கே தெரிந்- திருக்கும். முன்பு ஒரு முறை இப்படித்தான் அவசரமாக வெளியே சென்றவன் வரத் தாமதமாகிவிட்டது. என்ன செய்வதென்றறியாது அலுவலகத்திற்கு லீவு சொல்லி அனுப்பிவிட்டு வாசலிலேயே காத்திருந்தாள். அவசரமாய் வந்தவன் வருத்தப்பட்டான். "இதற்காக ஏன் லீவு போட்டாய்? சாவியை அக்கம் பக்கத்தில் கொடுத்து சொல்லிவிட்டுப் போயிருக்கலாமே'' என்று தன் தாமதத்திற்கு மன்னிப்புக் கேட்டான். அவளோ, "பரவாயில்லைங்க. ஏதோ போன இடத்தில் தாமதமாகிவிட்டது. நீங்கள் என்ன செய்ய முடியும்?'' என்று அவனைச் சமாதானப்படுத்தினாள். அப்பொழுதுதான் இரண்டு பேரும் தனித்தனி சாவி வைத்துக்கொள்ள ஏற்பாடாயிற்று. ஆனால் இன்று அவன் தன் சாவியை வைத்துவிட்டுப் போனான். அது யார் பிழை? அவள் ஒன்றும் பேசவில்லை.

"நீ உன் போக்கில் வீட்டைப் பூட்டிக்கொண்டு போனால் நான் வெளியே நிற்க வேண்டுமா?'' என்றான்.

"சாவியை எதிர்வீட்டில் கொடுத்துவிட்டுப் போயிருந்தேன்'' என்று மெல்லச் சொன்னாள்.

அவன் வேண்டுமென்றே சாவியெடுக்காமல் போய்விட்டு அவளை வம்பு செய்கிறான். ஆனால் நியாயமான காரணம்தான் புரியவில்லை.

"எதிர்வீட்டில் சாவியிருக்கும் என்று எனக்கெப்படித் தெரியும்? ஐந்து நிமிஷத்தில் உனக்கென்ன அவசரம்? வேலைக்குப் போகும் பெண் என்றால் இப்படித்தான் புருஷன் அவமானப்பட்டு, அனுசரித்துப் போக வேண்டும்'' என்று எரிச்சலாய்க் கூறினான்.

என்ன வேதனையிது. இந்த வேலையை அவனல்லவோ கட்டாயப்படுத்தி வாங்கிக் கொடுத்தான். அன்பும், பாசமும் உள்ள அவனா இப்படிப் பேசுகிறான்? இந்த நிலையிலும் அவளால் அவனை எதிர்த்துப் பேச முடியவில்லை. அவள் பயங்கொள்ளியல்லள். அவள் பக்கம் நியாயம் இருந்தும் அவன் அப்படிப் பேசுகிறானென்றால் அவனுக்குள் ஏதோ பிரச்சினை. சொல்ல முடியாமல் இப்படித் தவிக்கிறான். எனவே, எதிர்த்துப் பேசுவதோ, கோபப்படுவதோ சரியில்லை என அவள் உள்ளுணர்வு எச்சரித்தது.

"கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். இந்த மாதத்துடன் வேலையை விட்டுவிடப் போகிறேன். குழந்தையையும் அழைத்து வந்து பள்ளிக்கூடம் சேர்க்க வேண்டும். வேலைக்குப் போனால் குழந்தையையும் கவனிக்க முடியாது. அதனால் நானே உங்களிடம் சொல்லலாம் என்றிருந்தேன்'' என்றாள் அடக்கமாக. "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்'' என்று கூறியவர் தெய்வப் புலவரல்லவா?

எந்தச் சந்தர்ப்பத்திலும் அவள் பொறுமை இழந்தாளிலள் (இழக்கவில்லை).

அவளுடைய அன்பிற்கும், பணிவிற்கும் தான் காட்டிய கோபம் தேவைதானா? என்று உள்ளூர வெட்கமாயிருந்தது வாசனுக்கு. எழுந்து போய் குளித்துவிட்டு சாப்பிட வந்தான். காலையிலிருந்து அவன் சாப்பிடவில்லையே, பரிந்திரங்கி சாப்பாடு பரிமாறினாள். எதுவும் பேசாமல் அமைதியாய்ச் சாப்பிட்டான். அவன் மௌனம் அவள் முடிவை (வேலையை விட்டுவிடுவதை) ஏற்பது போலிருந்தது. புயலுக்குப் பின் அமைதி என்பார்களே, அது இதுதானோ? சில தினங்களாய் அவர்களுக்குள்ளே இருந்த பிணக்கு நீங்குவதன் அறிகுறி இது.

இருவரும் பேசிக்கொள்ளவில்லை. மறுநாள் எதுவும் நிகழாதது போல், ஆனால் (சில தினங்களாய் காரணமின்றி அவளைத் துன்புறுத்திய குற்றவுணர்வால்) இயல்பாக அவளுடன் ஒட்ட முடியாத நிலையில் பேசாதிருந்தான்.

அவள் வழக்கம்போல் வெந்நீர் எடுத்து வைத்து, டிபன் பரிமாறி, கைக்கு சாப்பாடு கலந்து கொடுத்து, தானும் புறப்பட்டாள்.

அவளை அழைத்துப் போக விருப்பம்தான். போலியாக அவசரமாய்ச் செல்வது போல் சாவியை அவள் எதிரில் எடுத்துக் கொண்டு புறப்பட்டான். எப்படியோ நேற்றுவரை இருந்த மேகமூட்டம் இன்று கலைந்துவிட்டது. அது போதும் என்று அலுவலகம் புறப்பட்டு விட்டாள். அப்போதுதான் இன்றிரவு ஏழு மணிக்குக் கணவரை அழைத்துக் கொண்டு வருமாறு பாஸ் கூறியது நினைவு வந்தது. நேற்றைய குழப்பத்தில் அதை அவனிடம் சொல்ல மறந்துவிட்டது. என்ன செய்ய? இன்று மாலை வந்ததும் வராததுமாய்ச் சொன்னால் எப்படி ஏற்பானோ? ஆனால் இது பெரிய இடத்து விஷயம். தான் வேலையை விடப் போவதாய்ச் சொன்ன பிறகும் வீட்டிற்கு அழைக்கிறார். அதுவும் கணவருடன். எதற்கு, என்னவென்று புரியவில்லை.

தொடரும்....

******



book | by Dr. Radut