Skip to Content

07. யோக வாழ்க்கை விளக்கம் VI

யோக வாழ்க்கை விளக்கம் VI

கர்மயோகி

II/1) அனந்தனின் வெளிப்பாடுகள் ஆயிரம்.
        மனிதனில் தனித்தன்மை அமையும் வரை அது வரும்.
       அந்நிலையில் அது பொதுத்தன்மையை இழக்கும்.
       இழந்து அனந்தனை முழுமையடையச் செய்யும்.

  • மனிதனில் மறைந்துள்ள தெய்வம்.
  • ஜடத்தின் பிரம்மம். கண்டத்தின் அகண்டம்.

  • சிருஷ்டியிலுள்ள பிரம்மம். 
  • பிரம்மம் அனந்தம்.
  • உலகில் உள்ள அனைத்துச் செயல்களும் அனந்தனின் வெளிப்பாடுகள் என்பதால் நம்மால் அதைப் பெரியதாக நினைக்க முடியவில்லை.
  • சூரியோதயம் அற்புதம், மழை பெய்வது அருள். அவற்றை நாம் கருதுவதில்லை.
  • சேல்ஸ்மேன் MLA ஆனால் நம் கண்ணில் படுகிறது. அவனே மந்திரியானால் உலகம் அதைப் பெரு நிகழ்ச்சியாகக் கருதுகிறது.
  • கல்கத்தாவில் அஷ்டோஷ் முகர்ஜி வைஸ் சான்ஸ்லர்.
  • திறமை வாய்ந்த இளைஞர்களை பொறுக்கி எடுப்பதில் நிபுணர்.
  • ஏதோ ஒரு சமயம் ராதாகிருஷ்ணன் பேச்சைக் கேட்டார். மகிழ்ந்தார்.
  • கல்கத்தாவுக்கு வந்து கமலா, லெக்சர்ஸ் - கமலா அவர் மகள் - தரும்படிக் கேட்டார்.
  • அதிலிருந்து ராதாகிருஷ்ணன் பிரபலமாகி ஆக்ஸ்போர்டில் Fellow ஆனார், வைஸ்சான்ஸ்லர் ஆனார். அமெரிக்க, ரஷ்ய தூதுவரானார், உபஜனாதிபதி, ஜனாதிபதியானார்.
  • இவ்வளவும் அவருள் புதைந்துள்ள திறமைகள். முகர்ஜி அவை வெளிப்பட உதவினார்.
  • மனிதனுள் தெய்வம் மறைந்துள்ளது.
  • எந்த அளவுக்கு மனிதன் அதை உணர்கிறானோ, அந்த அளவுக்கு அது அவன் வாழ்வில் வெளிப்படும்.
  • மனிதக் குரங்கில் மனிதன் மறைந்திருந்தான்.
  • குரங்கு விழித்தபின் இரண்டு கால்களால் நடந்தது.
  • அறிவை வளர்த்தது.
  • பகுத்தறிவு ஏற்பட்டது.
  • வேட்டையாடிய மனிதன் விவசாயம் செய்தான்.
  • விவசாயி வியாபாரியானான்.
  • நகரத்தை ஏற்படுத்தினான்.
  • கலை வளர்ந்தது, கற்பனை உற்பத்தியாயிற்று, நாடகம் எழுதினான்.
  • சாம்ராஜ்யம் சமைத்தான்.
  • கடலில் கப்பலோட்டினான்.
  • வானில் விமானத்தில் பறந்தான்.
  • விஞ்ஞானம் பிறந்தது.
  • கம்பனும், காளிதாசனும் பிறந்தனர்.
  • அமெரிக்கா போன்ற புது நாடுகளை ஏற்படுத்தினான்.
  • சந்திர மண்டலம் போனான்.
  • மக்களாட்சியை நிறுவினான்.
  • சிறுவர்களைப் பெரியவர்களாக மதித்து நடத்தினான்.
  • பணம் பெருவாரியாய்ப் பெருகியது.
  • கொடுமை ஏற்பட்டு ஒழிந்தது.
  • இத்தனையும் அவனுள் மறைந்திருந்தன.
  • இனி வரப்போவது ஏராளம்.
  • மனிதன் தெய்வமாகி, தெய்வத்தைக் கடக்கலாம்.
  • மனநிறைவு பெறலாம்.
  • மண வாழ்வும் மனநிறைவு பெற முடியும்.

*****

II/2) நாம் பரம்பொருளை எண்ணத்தால் அறிய முயல்கிறோம்.
எண்ணம் பரம்பொருளை விளக்கும் கருத்தை அறியும்.
ஒரு சிறப்பான (unique) எண்ணம் அனந்தனை அறியலாம்.
மனத்தால் பரம்பொருளைப் பார்க்கலாம்.
அதற்கு மனம் தன் நிலையில் பரம்பொருளை எட்ட வேண்டும்.
அதாவது சத்தியஜீவியத்துடன் தன் முந்தைய தொடர்பை மீண்டும் பெற்று அங்கிருந்து தன் ஆதியான ஜீவியத்தை அடைந்து தன்னையறிவதை நிறுத்தி, சத்தியமாகி, பின்னர் சத்திலிருந்து விலகி பரம்பொருளைத் தொட வேண்டும்.

மனம் வழி பிரம்மத்தை அடையும் வழி.

  • பிரம்மம் எல்லா லோகங்களிலுமிருப்பதால், எந்த லோகத்திலிருந்தும் - ஜடம், பிராணன், மனம் - பிரம்மத்தை எட்டலாம் என்பது தத்துவம்.
  • எந்த ஓட்டரும் (வாக்காளரும்) ஜனாதிபதியாகலாம் என்பது உண்மை.
    நடைமுறையில் அரிது. அது போன்ற தத்துவம் இது.
  • மனத்திலிருந்து பரம்பொருளை - பிரம்மத்தை - அடையும் வழியுண்டா எனக் கருதுவது இச்செய்தி.
  • தத்துவ ரீதியாக இது முடியும். நடைமுறைக்கு எப்படி என்பது கேள்வி.
  • பிரம்மம், பரம்பொருள் என்பது அவரவர் நிலைக்கேற்ப விளக்கப்படும்.
  • President, தலைவர் எனில் அவன் வேலை செய்யும் கம்பனி தலைவராகும். எத்தனையோ நிலைகள் இருப்பதால் - பஞ்சாயத்து, பாங்க், சட்டசபை, வாரியம் - தலைவர் என்ற பதவி அந்தந்த ஸ்தாபனத்திற்குப் பொருந்தும். நாட்டின் தலைவரை மனதில் நினைத்தாலும், நடைமுறையில் பதவி உயர்வு வரும்பொழுது, நாமுள்ள ஸ்தாபனத் தலைமையே நமக்குப் பலிக்கும்.
  • மோட்சம் என்பது பிரம்மத்தை, பரம்பொருளையடைவது, அப்படி அடைந்தவர் ஏராளம்.
  • அது சாட்சி புருஷனாகும். முழு பிரம்மமாகாது, பகவான் கூறுவது முழுமையான பிரம்மம்.
  • ஞானயோகம் மனத்தால் செய்யப்படுவது, மோட்சம் பெறுவது.
  • நம் உருவம் கண்ணாடி, போட்டோ, வீடியோவில் தெரிகிறது.
    கண்ணாடியில் இட-வல மாற்றமாகத் தெரிகிறது. போட்டோவில் மாற்றமின்றி அசைவின்றித் தெரிகிறது. வீடியோவில் அசைவோடு தெரிகிறது. எதுவும் நாமில்லை. நமது பிரதிபலிப்பு.
  • மனம் பிரம்மத்தை ஒரு கருத்தாக அறியும்.
  • உடல் பிரம்மத்தைச் சிலையாக அறியும்.
  • உணர்ச்சி பிரம்மத்தை நெகிழ்ந்த பக்தியாக அறியும்.
  • மனத்தின் ஆதி சத்தியஜீவியம். அது ஜீவியத்திலிருந்து எழுகிறது. ஜீவன் ஜீவியத்தை எழுப்புகிறது. ஜீவனின் மூலம் பரம்பொருள் என்ற பிரம்மம்.
  • உடல் விக்ரஹத்தை வழிபடுவது, நெகிழ்ந்த பக்தியால், உணர்ச்சியையடைந்து, மனத்தை அடைய பரம்பொருளை ஒரு கருத்தாகக் காண வேண்டும். சத்தியஜீவியம் பரம்பொருளைப் பிரபஞ்ச ஜீவியமாகக் கருதுவதால், பிரபஞ்ச ஜீவியம் பரம்பொருளை அடைய உதவும்.
  • தாலுக்காபீஸ் கிளார்க் தாசில்தார் உத்தரவை டைப் செய்கிறார். அவர் தாசில்தாராக வேண்டுமானால், உத்தரவு பிறப்பிக்கும் ஆபீசராக வேண்டும். தாசில்தார் கலெக்டராக வேண்டுமானால், உத்தரவு தாலுக்காவிலிருந்து, ஜில்லா உத்தரவாக வேண்டும்.

    செயலுக்குத் தகுந்த நிலை.
    நிலைக்குத் தகுந்த செயல்.
    நிலை உயர அதிகாரம் உயர்ந்து செயல் உயர வேண்டும்.

  • பிரம்மம், பரம்பொருள், கடவுள், இறைவன் என்பன எல்லா நிலைகளிலுமிருப்பதால், நிலைக்கேற்ப முறையும், பலனும் அமையும்.
  • மனம் கருத்தைச் சிந்திப்பது. அதனால் பரம்பொருள் கருத்தாகத் தெரிகிறது.
  • இப்படி உயர்வது ரிஷிகட்கே எளிதானதில்லை என்றாலும், இப்படியும் உயரும் வழியுள்ளது என்பதைச் செய்தி குறிப்பிடுகிறது.
  • நடைமுறை கடினமானாலும், இதுவரை உலகில் நடக்காதது இல்லை.
    29 வயது ராணுவ அதிகாரி நெப்போலியன் சக்ரவர்த்தியானது சரித்திரம்.
  • அன்று அரிபொருளாய் நடந்த பல, இன்று பரவலாக நடப்பதைப் போல் இதுவும் பரவலாக நடக்கும் வாய்ப்புண்டு.

******

II/3) நம் கரணங்கள் பதப்படுத்தப்பட்டவை.
ஒரு பழக்கத்தாலோ, திறனாலோ, அவை செயல்படுகின்றன.
பழக்கத்தை விட்டால், திறனைக் கடந்து வந்தால், கரணத்தின் முழுமையால் செயல்பட முடியும்.
மனிதன் பரம்பொருளை வெளிப்படுத்த அது போன்ற விழிப்பு தேவை.
மனிதனின் பிரம்ம விழிப்பு பரம்பொருளை வெளிப்படுத்தும்.

  • அன்னை புதியதாக வருபவர்களைக் காணும்பொழுது ஆன்மீக விழிப்பு இருக்கிறதா என கவனிப்பார்கள்.
  • ஒருவருக்கு அது இருந்தால், அவரை ஆசிரமத்தில் சேரும்படிச் சொல்வார்கள்.
  • அவர் சேர விரும்பினால், உடனே சேர்த்துக் கொள்வார்கள்.
  • ஆன்மீக விழிப்பற்றவர் சேர விரும்பினால், ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
    உன் சேவை நீயிருக்குமிடத்திலேயே இருந்து செய்ய வேண்டியது என்பார்கள்.
  • ஆன்ம விழிப்பில் பல கட்டங்களுண்டு.
  • ஆன்ம விழிப்பு சிறப்பாக இருந்தால் "நான் உனக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.
    உனக்காக எவ்வளவு நாள் நான் காத்துக் கொண்டிருக்கிறேன் என உனக்குத் தெரியாது'' என்று கூறுவதுண்டு.
  • பூர்வ ஜென்மத்தில் அன்னையுடன் தொடர்புள்ளவர் வருவது வழக்கம்.
  • சிலர் தங்கப் பிரியப்படுவார்கள்.
  • சிலர் அன்னை அழைப்பை மறுத்துவிடுவார்கள்.
  • ஒரு பேங்க் ஏஜெண்ட் மனைவி, குழந்தைகளுடன் வந்தார்.
  • அன்னையை தரிசித்தபொழுது அவர் மகன் அன்னையிடம் தாவிப் போனான்.
  • அவர்கள் போனபின் அன்னை குழந்தை போட்டோவைக் கேட்டார்.
  • போட்டோவை சோதனை செய்து "இந்தக் குழந்தை ஆசிரமத்திலிருந்த சாதகர்.
    இவர் தகப்பனாரையும், தாயாரையும் ஆசிரமத்தில் சேர்த்துக் கொள்கிறேன்'' என்றார்.
  • ஆன்ம விழிப்பு சூட்சும விழிப்பாக இருக்கும்.
  • ஆன்மாவே விழித்து வெளிவருவது சூட்சும விழிப்பைவிட உயர்ந்தது.
  • அப்படிப்பட்டவர் என் மூலம் அன்பரானவர்கள் சிலர்.
    அவர்கள் அனுபவம் சிறப்பானது.
    அவர்களது உடல் விட்டு உயிர் பிரிந்து வெளியில் போய் திரும்பி வரும்.
    உயிர் மேலே சென்று அவர் உடல் கீழேயிருப்பதைக் காணும்.
    உயிரற்ற ஜடப்பொருள்கள் அவருடன் சில சமயம் பேசும்.
    அன்பர் தினமும் பிரயாணம் செய்யும் பாதை அவருக்கு ஒளிமயமாய்த் தெரியும்.
    பகவான் ஸ்ரீ அரவிந்தர், அன்னை ஆகாயத்தில் கோபுரம் போல் உயர்ந்து தோன்றுவர்.
    நஷ்டமடையும் பெரிய சர்க்கார் நிறுவனத்தின் மீது அது போன்று தெரிந்தால், அந்த ஸ்தாபனம் மாறி இலாபகரமாகும்.
    சில மைல்களுக்கப்பால் நடப்பவர் உருவம் தெரியும்.
    ரயில் முன் ஸ்டேஷனை விட்டுப் புறப்படுவது கேட்கும், தெரியும்.
    பொன்னிறமாக பகவான் வேலை செய்யுமிடத்தில் காட்சி தருவார்.
    போட்டோவிலிருந்து உயிரோடு அன்னை வெளி வருவார்கள்.
    The Life Divineயைப் பிரித்தால் பகவான் தெரிவார்.
    அடுத்தவர் நினைப்பது தெரியும்.
  • இப்படிப்பட்டவர்க்கு யோகம் பலிக்கும்.

******

II/4) பிரபஞ்சத்தைச் சத்தியஜீவியம் நிர்ணயிக்கின்றது.
நம் வாழ்வை அகந்தை நிர்ணயிக்கிறது.
சத்தியஜீவிய செயலைக் காண இன்று நம்மை நிர்ணயிக்கும் அகந்தையை அழித்து சைத்தியப் புருஷனால் நாம் ஆளப்பட வேண்டும்.

அற்புதம் புலப்பட அனந்தனை வாழ்வில் காண வேண்டும்.

 

  • சட்டம், நியாயம், தர்மம், இலட்சியம் என சமூகம் பலவற்றைக் கருதுகிறது.
  • சூது விளையாடக்கூடாது என சட்டம் இன்று வரையில்லை.
  • தரும புத்திரர் சட்டப்படி ராஜ்யத்தையும், தம்பிகளையும், தன்னையும், மனைவியையும் இழந்தார்.
  • திரௌபதி சட்டப்படி துகிலுரியப்பட்டாள்.
  • இன்றைய நிலையில் உலகில் எங்கும் அது நடக்காது.
  • சட்டம் காலத்தால் அமைந்தது.
  • பூனாவில் ஒரு தகப்பனார் கோர்ட்டில் என் மகன் என்னைக் கவனிக்கவில்லை என வழக்கு தொடுத்தார்.
  • கோர்ட்டார் அனுதாபம் தெரிவித்தனர். மகன் கடமையை நிறைவேற்ற சட்டம் உதவாது என்றனர்.
  • இன்று விவாகரத்தைக் கோர்ட் அங்கீகாரம் செய்கிறது, மறுத்த கணவனும் மனைவியும் சேர்ந்து வாழ உத்தரவு பிறப்பிக்கிறது.
    கணவன் அன்பு செலுத்த சட்டம் போட முடியுமா?
  • மனிதன் சொத்துரிமை பெற்றிருக்கிறான்.
  • சொத்து நியாயத்திற்கும், அன்பிற்கும் தடை.
  • அன்பான குடும்பம் எழ சட்டம் இயற்ற முடியாது.
  • நண்பர்கள் காரணமின்றிப் பிரிகின்றனர். காரணத்துடனும் பிரிகின்றனர்.
    இதைத் தடுக்க சட்டம், நியாயம், தர்மம், இலட்சியம் இன்று உலகிலில்லை.
  • ஏசு கிருஸ்துவை சிலுவையில் அறைந்தனர்.
  • மதம் மாறச் சொல்லிக் கொடுமைப்படுத்தினர்.
  • இந்துக்களும், முஸ்லீம்களும் கிராமம் கிராமமாக ஆயிரக்கணக்கானவரைக் கொலை செய்தனர்.
  • உலகில் அன்பிற்குச் சட்டத்தின் பவரிருந்தால் இவற்றைத் தடுக்கலாம். இன்று இல்லை.
  • அகந்தையிருப்பதால் போட்டி, பொறாமை, பூசல், பிணக்கு, போர் எழுகிறது.
  • அகந்தை அழிய ஏதாவது செய்ய முடியுமா?
  • லாட்டரியில் இலட்சம், கோடி பெற்றவர் அப்பணத்தால் நல்ல வாழ்வு வாழ்வது அரிது.
    இல்லையெனவும் கூறுகிறார்கள். நாம் இதெல்லாம் தலைவிதி, உள்ளதுதான் நிலைக்கும் என மனத்தைத் தேற்றிக்கொள்கிறோம்.
  • திவாலானவர், மனம் உடைந்தவர், நிர்க்கதியானவர், நடுத்தெருவுக்கு வந்தவர் அன்னையிடம் வந்து நல்வாழ்வு வாழ்வது ஏராளம். இன்றைய வாழ்வு அவர்கட்கு அற்புதமாகத் தெரிகிறதா எனத் தெரியவில்லை. "நான் அன்னையிடம் வந்திராவிட்டால் நானிருந்த இடம் மண்ணாகி, மக்கி, புல் முளைந்திருக்கும்" எனக் கூறியவர் ஆயிரம்.
  • துரோகம் செய்யத் துடிப்பது மனித சுபாவம். சாது எனப் பெயர் வாங்கிய கணவனை, ஒரு நாளாவது உன்னை ஜெயிலில் நான் பார்க்க வேண்டும் எனக் கத்திய மனைவி கோர்ட்டில் ஜட்ஜ் காதுபட அப்படிப் பேசிவிட்டாள். விவாகரத்தை அதுவரை மறுத்த கோர்ட் அன்று ஏற்று மனைவியைக் கணவனிடமிருந்து பிரித்துவிட்டது.
  • அகந்தையை மனிதனே முன்வந்து அழிக்க வேண்டும்.
  • சுபாவத்தை அவனே மாற்ற முயல வேண்டும்.
  • அது நடந்தால், மனிதன் அவற்றை விழைந்தால், அனந்தனை வாழ்வில் காணலாம். அற்புதம் அன்றாட நிகழ்ச்சியாகும்.

******

II/5) விவேகம் என்பது எல்லோரும் அறிந்ததை நம் அனுபவத்தில் காண்பது பல சமயம் அமையும். சாதாரண மனிதன் யோசனை இல்லாமல் பெரிய விஷயங்களைப் பேசுவதுண்டு. அவனுக்கு அது பழமொழி.
அறிவாளிக்கு உலகத்து விவேகம், அறிவுக்குரிய கருத்து, யோகி அதை ஆன்மீக உண்மையாகக் கருதுகிறார். எவரும் அனந்தனின் செயலை அங்குக் காண்பதில்லை.
எல்லோரும் அறிந்த எளிய உண்மையாகக் காணும் விவேகம் நடக்கக்கூடியதற்கும் நடப்பதற்கும் இடையேயுள்ள சூட்சும நிர்ப்பந்தத்தை அறிகிறது.

  • உலகம் அறிந்ததை உன் அனுபவத்தில் உணர்வது விவேகம்.
  • காதில் விழுந்தது கருத்தில் படுவது விவேகம்.
  • உச்சக்கட்ட உயர்வுள்ள பெருநெறிகள் எல்லோரும் நெடுநாளாக அறிந்த எளிய உண்மைகள் என நாமறிவோம்.
  • பொய் சொல்லக்கூடாது என்பதை அறியாத சிறு குழந்தையுமில்லை.
  • அதைப் பின்பற்றியவர் அரிச்சந்திரனும், இந்தக் காலத்தில் காந்திஜியுமாவர்.
  • வாழ்க்கையில் பொய் சொல்லாதவன் வழக்கு என வந்தால் பொய் சொல்லுவான்.
  • உண்மையைச் சொன்னால் உள்ளதும் போய்விடும் எனில் பொய்யே சொல்லாதவனும் பொய் சொல்லுவான்.
  • தருமபுத்திரர் பொய் சொல்வதில்லை. கிருஷ்ண பரமாத்மாவால் சொன்னார்.
  • இந்த விஷயம் மனைவிக்குத் தெரிந்தால் உடனே என்னை விட்டுப் போய்விடுவாள் எனில் எவரும் அந்த இடத்தில் உண்மை சொல்லமாட்டார்கள்.
  • 5-45க்கு வந்தேன் என்பதை 6 மணி என்றால் அது பொய் என நாம் கருதுவதில்லை.
  • சொல்லக் கூச்சப்படும் விஷயங்களில் கூச்சத்தைத் தவிர்ப்பதற்காகப் பொய் சொல்வதுண்டு.
  • பொய் சொல்வது ருசிக்கிறது, பிறர் அதை நம்புகிறார்கள், அது எனக்கு வெற்றி எனப் பொய் சொல்வது பாவம், பாதகம்.
  • பொய் சொல்லக்கூடாது என்பது தெரியுமென்றாலும், சிறு பொய் பெரிய பாதகம், ஆத்ம துரோகம் என அறியும் சந்தர்ப்பம் வாழ்வில் பலருக்கு வருவதில்லை.
  • சிறிய பொய்யும் சில முக்கிய நேரத்தில் நம்மை அம்பலப்படுத்தும் எனப் பலரும் அறியார்.
  • ஐரோப்பிய நாடுகளில் அரசனைப் பிரபு எனக் கருதினார்கள்.
  • அனைவருக்கும் அரசன் போலிருக்க ஆசை.
  • பொய் சொன்னால் அரச பதவிக்கு அவமானம்.
  • அதனால் அரசன் பொய் சொல்லமாட்டான் என்பது நம்பிக்கை.
  • அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழியென உயர்குடி மக்களிடம் பொய் காணப்படுவதில்லை.
  • ஒரு பொய் சொல்லாவிட்டால் பெரிய ஜமீன் சொத்து போய்விடும் என்ற நிலையில் ஒரு ஜமீன்தார் மெய் சொன்னது ஆங்கில ஜட்ஜூக்கு ஆச்சரியமாயிருந்தது.
  • "நான் இந்தியா முழுவதும் பிரயாணம் செய்து பல்வேறு வகையான மக்களைச் சந்தித்திருக்கிறேன். எவரும் பொய் சொல்ல நான் கேட்டதில்லை' என மெக்காலே 150 ஆண்டுக்கு முன் இந்தியாவைப் பற்றிக் கூறினார்.
  • சாதாரண மனிதன் 30 நாள் எந்தச் சிறிய பொய்யும் கூறுவதில்லை என முடிவு செய்தால் அவருக்கு,
    • தியானம் அடுத்த கட்டத்தில் பலிக்கும்.
    • செய்யும் காரியங்கள் பெருவாரியாகக் கூடிவரும்.
    • மனம் ஆழ்ந்த சிறந்த நிம்மதியடையும்.
    • பெரும் அளவு நண்பர்களும் உறவினர்களும் தூரப் போவார்கள்.
    • மெய்யின் ஆன்மீகப் பெருமை தெரியும்.
    • காந்திஜியின் பெருமையைப் பல மடங்கு அதிகமாக உணர்வர்.
    • சிறு குழந்தைகள் அவரை விரும்பி நாடுவர்.
    • பொய் சொன்னதால் தடைப்பட்ட காரியங்கள் தானே கூடிவரும்.
    • அன்னை நினைவு தானே உள்ளிருந்து ஓரளவு எழும்.
    • மனைவி உயர்ந்தவளானால் நெருங்கி வருவார், தாழ்ந்தவரானால் அந்த ஒரு மாதமும் பார்க்க முடியாது.
    • வம்பர், வழக்கர், வலிய சண்டைக்கு வருவர்.
    • மனத்தில் படிந்த திரை விலகியது தெரியும்.
    • சாவித்திரி, The Life Divineஇல் புரியாத பகுதிகள் புரியும்.
    • ஒரு மாதத்திற்குப் பின் பழைய வாழ்க்கைக்குத் திரும்ப மனம் கூசும்.
    • அப்படித் திரும்பினால் வாழ்க்கை ஜீவனற்றிருக்கும்.

தொடரும்....

******

ஜீவிய மணி
 
செய்வதை சொல்லால் மறுப்பது நயத்தக்க நாகரீகம்.

*****



book | by Dr. Radut