Skip to Content

13. அன்னை இலக்கியம் - மனிதனும் மிருகமும்

"அன்னை இலக்கியம்"

மனிதனும் மிருகமும்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

சியாமளா ராவ்

பத்து நாட்கள் கடந்துவிட்டன. ஆனாலும் தெளிவாகவேயிருந்த சீனுவை, பாடம் சொல்லித் தந்த தாத்தாதான் அழைத்தார்.

"சீனு... உன்னோட மார்க்ஸைப் பார்த்து, அந்தப் பெரிய காலேஜுல உனக்கு இடம் கிடைச்சிருக்குடா. அந்த காலேஜ் "பிரின்சிபால்” எனக்குத் தெரிஞ்சவரானதால, அவர் உன்னைப்பத்தி, உன் மார்க்ஸ் பத்தி ரொம்ப புகழ்ந்து பேசினார். ஆனா... நான்... உன்னை எனக்குத் தெரியும்னு சொல்லலேப்பா... ஆனா... மனசுக்குள்ள ஒரே சந்தோஷம். பாட்டிக்கும் சந்தோஷம்டா. இதோ பாரு உனக்காக ஸ்வீட் செஞ்சு வச்சுருக்கா. எடுத்துக்கோ... ம்...''

மிக மகிழ்வோடு சொன்ன தாத்தாவையும், பாட்டியையும் வணங்கியவனின் விழிகளில் நீர்த்திவலைகள் சந்தோஷத்துடன் உருண்டு, அவன் கன்னக் கதுப்புகளில் ஆட்டம் போட்டது.

தட்டிலிருந்து எடுத்த ஸ்வீட்டைக் கையில் எடுத்தவுடன், ஒரு வினாடிக் கண்களை மூடி, அன்னை, ஸ்ரீ அரவிந்தரை நினைத்தான்.

அவர்களுக்கு சமர்ப்பணம் செய்து, பின் தாத்தா, பாட்டி இருவருக்கும் கொஞ்சம் விண்டு கொடுத்துவிட்டுப் பின் அவன் சாப்பிட்டான்.

"பாட்டி... ரொம்ப, ரொம்ப டேஸ்டாயிருக்கு பாட்டி. இதுவரை நான் இப்டி ஒரு ஸ்வீட்டை சாப்டதில்லே. ரொம்ப, ரொம்ப நன்னாயிருக்கு பாட்டி...''

சந்தோஷத்தோடு சொல்லும் சீனுவைத் தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டவள், "சீனு, நான் ஒரு டப்பாவுல போட்டுத் தரேன். அம்மாகிட்ட கொடுத்துடறியாப்பா. நான் எல்லோருக்குமாத் தான் பண்ணியிருக்கேன். அதனால எடுத்துண்டு போறியா...''

"இதோ பாரு... சீனுவோட நீயும் அவாத்துக்குப் போய், எல்லோருக்கும் கொடுத்துட்டு வா... போ. சீனு நம்பாத்துப் பிள்ளை மாதிரி... மாதிரியென்ன, நம்ம பேரன்கள்தான் அவா ரெண்டு பேரும்.

போ... ரெண்டு குழந்தைகளும் நன்னா படிக்கிறா. அவா எத்தனை படிச்சாலும் அதுக்கு நாம துணையாயிருக்கணும் சரியா... போ... நானும், கதவைப் பூட்டிவிட்டு வரேன்... மொதல்ல போங்கோ... சரியா...''

கணவன், மனைவி இரண்டு பேருமே தன்னந்தனியாக, ரெட்டைக் குருவிகள் போலிருக்கும் அவர்களுக்கு, பார்வதியின் சமையலும், அவளின் அமரிக்கையான குணமும் பிடித்துப் போக, அப்படியே குழந்தைகளின் டியூஷனும், இன்னும் அவர்கள் உறவை இறுக்கிப் பிணைத்ததில், ஒரு குடும்பம் போல் ஆகிவிட்டார்கள் என்பதுதான் நடந்தது.

அனைவருமே ஊதுபத்தி ஏற்றி, உட்கார்ந்து தியானம் செய்தார்கள்.

நல்ல உள்ளங்களின் தியானம், எந்தவிதமான மிகச்சிறிய இடையூறுகள்கூட இல்லாமல், அதீதமான அமைதியுடன், ஆழ்ந்த தியானமாக அமைந்தது. காற்றின் சலசலப்போ, தெருவில், விற்போர்களின் குரல்களோ, நாய், பூனைகளின் கத்தலோ, வேகமாகச் செல்லும் வண்டிகளின் "ஹார்ன்” சத்தமோ... ம்... ஹும்... எதுவுமேயில்லாமல் அமைதிஎன்றால், பேரமைதி அந்த வீட்டை மட்டுமன்று, தெருவைச் சுற்றி சூழ்ந்திருந்ததுதான் மிக ஆச்சரியம். அதுவும் அனைவரின் மனதிலும் அன்னை, ஸ்ரீ அரவிந்தர் தவிர வேறெந்த எண்ணமுமில்லாததால், தடையேதுமின்றி அரை மணி நேரம் நடந்தது.

ஒவ்வொருவராய் வணங்கி எழுந்தார்கள். ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் எண்ணமேயில்லாமல், ஒரு பரவச நிலையில் இருந்தனர். சந்தோஷமும், கற்பனைக்கும், சொல்வதற்கும் எட்டாத, ஓர் உன்னதமான நிலையை அனுபவித்தார்கள். மனம் ததும்பியதில், அங்கு மௌனம் மட்டுமே ஆட்சி செய்தது.

கீதாதான் எழுந்தாள், எல்லோருக்கும் எலுமிச்சம்பழத்தில் ஜூஸ் செய்து தந்தாள்.

"மாமா, மாமி, இன்னிக்கு எங்களோடவே டிபன் சாப்பிடுங்களேன். எல்லோருமா பிரார்த்தனை செஞ்சோம். அதே போல டிபனையும் எல்லோருமா சாப்பிடலாமே... சரியா... என்ன ஏதாவது... தப்பா...''

"நன்னாயிருக்கு... யார் சொன்னா தப்புன்னு? தனியா ரெண்டு பேருமா, தினமும்தான் சாப்டுட்டுண்டு இருக்கோமே... இன்னிக்கு எல்லோருமா சேர்ந்து தியானம் பண்ணி, சேர்ந்து சாப்பிடறது ரொம்ப சந்தோஷமாயிருக்கு. சரி... ஓ...கே...''

மாமா மகிழ்வோடு சொன்னதும், சட்டென பார்வதியினுள்ளே "பளிச்'சென மின்னல் போல் ஓர் எண்ணம் தோன்றி, தீட்சண்யமாய் நின்றது.

"மாமா... நீங்களும் மாமியும், நான் ஒண்ணு சொன்னா கேட்பேளா? உங்க விருப்பம்தான். ஆனாலும் எனக்கு என்னமோ இன்னிக்கு இதைக் கேட்கணும் போலிருக்கு. சொல்லவா?''

"என்னமா நீ... நாந்தான் எம் பொண்ணு மாதிரின்னு சொல்லிட்டேனோல்லியோ... இன்னுமா... தயங்கணும்... சொல்லும்மா பார்வதி...''

"மாமா... நீங்களும் மாமியும், தினமும் சாயந்திரம் இங்கேயே வந்துடுங்கோ. எல்லோருமா ப்ரேயரும், மெடிடேஷனும் செஞ்சுட்டு, அப்படியே பலகாரமும் பண்ணிட்டு, வீட்டுக்குப் போலாமே. காலம்பற வேளைதான் வீட்டுலேயே சாப்பிடறேள். சாயந்திரத்தில் எல்லோருமா சேர்ந்து... பேசிண்டு சாப்டா, உங்களுக்கும், மாமிக்கும் சந்தோஷம், எங்களுக்கும் திருப்தியும், சந்தோஷமுமாயிருக்குமே... மாமி... என்ன சொல்றேள்?...''

மாமி, சட்டென்று எழுமுன், "பாட்டி... பாட்டி... அம்மா சொல்றது போல தினமும் சாயந்திரமா வாங்களேன். எல்லோருமா சேர்ந்து சாப்பிடலாமே. எனக்கும், ராமுவுக்கும் கூட சந்தோஷமாயிருக்கும். தாத்தா... சரின்னு சொல்லுங்கோ தாத்தா... தாத்தா... பாட்டி... சொல்லுங்கோ''.

சீனுவும், ராமுவும், தாத்தா, பாட்டி, எனக் கூப்பிட்டபடி, அன்பின் பரிதவிப்போடு கேட்டபோது, இருவரும் மறுக்க இயலாமல், நெகிழ்ச்சியோடு சம்மதம் சொல்ல, குபீரென்ற சந்தோஷம் அங்கு வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வீடுபோல் பளிச்சென்றானது.

*******

மாமி, மாமா, இருவரும் மாலையில் வர ஆரம்பித்ததிலிருந்து, அனைவரின் மனதிலும் சந்தோஷம் பொங்கியது.

"அம்மா! அன்னையோட சிரிப்பு, இப்போ அதிகமாயிருக்காப்பல தோணறதோன்னோம்மா... பாரேன் எப்படி சிரிக்கிறார்னு. நாமள்ளாம் சேர்ந்து தியானம் பண்றது, ரொம்ப பிடிச்சுப் போச்சும்மா "அன்னைக்கு”. இல்லையாம்மா?''

ராமு கூறியதும், கீதா அப்படியே அவனைக் கட்டிப்பிடித்தாள்.

"ராமு, எனக்கே ரொம்ப சந்தோஷமாயிடுத்துடா. நான்

சொல்றதுக்குள்ளே நீயே சொல்லிட்டே. சமத்துக் குட்டிடா... அக்கா, நிஜத்துல அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் எனக்கு ரொம்ப நல்ல வழியக் காட்டியிருக்காங்கறதுதான் ரொம்ப சத்தியமாய் உணர்றேன்.

என்னோட இத்தனை கால வாழ்க்கையில, நான் சாப்பிடற சாப்பாட்டை நிம்மதியா, திருப்தியா, வயிறு ரொம்ப சாப்பிடறேங்கான்னா... அது இப்பத்தான். வாழ்க்கைங்கறது ஒரு சக்கரம்தான். ஆனா, அந்த சக்கரத்தோட சுழற்சி, எப்பப்ப, எப்டி சுத்தும்கறது நம்ம கையில கிடையாது. அப்டி நம்ம கையிலயிருந்திருந்தா... அந்த சக்கரத்தை நம்ம இஷ்டத்துக்கும், விருப்பத்துக்கும், ஆசைக்கும், கன்னாபின்னான்னு சுத்தி, அதையும் சங்கடப்படுத்தி, நாமளும், ஒரு இலக்கு இல்லாம சுத்திண்டிருப்போம். இப்போ மாமா, மாமியும் வரது... என்னோட அப்பா, அம்மாவே வந்துட்டாப்பலயிருக்குக்கா. அக்கா... பசிக்கு உங்க வீட்டுக்கு வந்தேன்... ஆனா... இங்கே ஒரு பெரிய குடும்பமே என்னை சுத்தியிருக்கு. இது போறும்கா. அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும், எனக்கு பாட்டியும், தாத்தாவும்தான்... ஆமாங்கா... எனக்கு தூக்கம் வராட்டா... அவா எதிர்க்கால போய் உக்காருவேன். அவாளோட என் மனம் தொறந்து பேசுவேன். அவாளும் நிச்சயமா அதைக் கேட்பா... ஆமாங்கா... அவா ரெண்டு பேரும் என்னை, அன்போட, மனசுல அரவணைப்போட பார்க்கறது என் மனசுக்குத் தெரியும், புரியும். இது பொய்யில்லே... நிஜம். சந்தோஷமா மனசு ரொம்பிடும். எனக்கு எந்தவிதமான கவலையோ, என் பழைய வாழ்க்கையைப் பத்தியோ... ம்...ஹும்... இதுவரை என் ஞாபகத்துலயும் வரலே, அதை அலசிப்பார்க்கவும் தோணலே. ஏன்னா, அது என்னோட வேலையில்லே. என்னை, கஷ்டத்துலேருந்து விடுதலைக் கொடுத்து, எப்பேர்ப்பட்ட இடத்துல சேர்த்துருக்கா ரெண்டு பேருமா. அது சும்மாவா! மனசு பொங்கிப் பொங்கி, எப்பவும் அவா ரெண்டு பேரையும் என் மனசுலேயே பிரதிஷ்டைப் பண்ணிட்டேனே... பாருங்கோக்கா... எப்படி... ஒரு நல்ல ஜபமாலையைப் பார்த்துப் பார்த்து வாங்கறோமோ, அப்படியொரு கூட்டுக் குடும்பமா, ஒவ்வொருத்தரா வந்து சேர்ந்துட்டோம். ரொம்பவே சந்தோஷமாயிருக்குக்கா... அன்னையும், ஸ்ரீ பகவானும் என்னென்னிக்கும் நம்மை இந்த மகிழ்ச்சியோடவே வைப்பார். நிச்சயமாத்தாங்கா சொல்றேன்... மாமா... மாமி... இன்னிக்குப் போல தினமுமே வரது நமக்கு சந்தோஷந்தான். அதுவும் இன்னிக்கு மாமி செஞ்சுண்டு வந்த "ஸ்வீட்”... ம்ம்... என்னமா... வாயில போட்டா கரையறது. மாமி... உங்க நல்ல மனசைப் போலவே சுத்தமான நெய்யும், உங்க நல்லவிதமான பேச்சைப் போலவே சர்க்கரையுமா கலந்து செஞ்ச இந்த இனிப்போட சுவை அதீதமாயிருக்கு மாமி. அதுவும் அன்னை, ஸ்ரீ அரவிந்தருக்கு அர்ப்பணிச்சுட்டு நாம எடுத்துக்கறோமில்லையா, அதனால சுவையும் கூடிப் போயிருக்கு மாமி. இன்னிக்கு "அபரிமிதம்”னு சொல்ற அளவுக்கு, எல்லாமே மனசை அப்படி ஆக்ரமிச்சிருக்கு. "எல்லாம் நன்மைக்குத்தான்” மாமி....''

"அதெல்லாம் சரி... இந்த "ஸ்வீட்' இன்னிக்கு அன்னைக்கும், ஸ்ரீ அரவிந்தருக்கும் கொண்டு வச்சதுக்குக் காரணம் தெரியுமா... ம்... சொல்லேன் கீதா...'' மாமி கேட்டாள்.

யோசித்தவள்... "தெரியலையே...''

"சீனுவுக்குப் பெரிய இன்ஜினியரிங் காலேஜுல இடம் கிடைச்சுருக்கு. அந்த காலேஜ் பிரின்சிபாலே மாமாகிட்டே சொல்லியிருக்கார். அவனோட மார்க்ஸைப் பத்தி புகழ்ந்து பேசியிருக்கார். "நானும், உன்னைத் தெரியும்னு சொல்லலேப்பா... ஆனா, அவர் புகழ்ந்து பேசப் பேச என் மனசுக்குள்ளே ஒரு பெரிய அலையே புரண்டு, புரண்டு, குதி போட்டதுன்னு', சீனுகிட்டே சொல்லும்போது... எனக்கும் மனசு பொங்கித்தான் போச்சு. நிச்சயமா... அவனுக்கு "ஸ்காலர்ஷிப்” கிடைச்சுடுமாம். அதையும் மாமா விசாரிச்சுட்டார். அதனால... எல்லாமே... அன்னையோட ஆசீர்வாதங்களும், அவங்களோட பார்வையில இருக்கிறதும்தான்னு புரிஞ்சுடுத்தோன்னோ கீதா...''

கீதா... மீண்டும் கண்கள் பொங்க, இரு கரம் கூப்பி "அன்னை, ஸ்ரீ அரவிந்தரை'' வணங்கினாள்.

*******

மாமா, மாமியின் வருகை, இப்போது காலையிலும் ஆரம்பமாகியது.

"இதோ பாரு, பார்வதி, ரெண்டு பேரும் அங்கே தனியாயிருக்கிறது அலுத்துப்போச்சு. இன்னொண்ணு, இந்த ஆறு மாசத்துல நானும், மாமாவும் ரொம்ப யோசிச்சு, அன்னைகிட்டேயும், ஸ்ரீ அரவிந்தர்கிட்டேயும் "பர்மிஷன்” கேட்டோம். அதுக்கு என்னமா... பதில் வந்ததுன்னு நினைக்கறே! தேகம் முழுசுமா புல்லரிச்சுப் போச்சுடி கீதா. மாமி... உங்க வீட்டுல ஸ்ரீ அரவிந்தரையும், அன்னையையும், நீங்க மட்டும் வணங்கிண்டிருந்தேள். அப்புறமா பார்வதியும், குழந்தைகளும் வந்தா. கொஞ்ச நாளுல கீதாவும் வந்தா, நாங்களும் இங்கே ராத்திரி சாப்பாடும், காலையில வீட்டுலயுமாயிருக்கோம். பார்வதி... எங்காத்தையே... ஸ்ரீ அரவிந்தருக்கும், அன்னைக்கும் கொடுத்துடலாம்னு இருக்கேன். இனிமே அந்த வீடு, அவா ரெண்டு பேருக்கும்தான் சொந்தம். மாமி... நான் சொன்னதுல ஏதாவது தவறிருந்தா சொல்லுங்கோ... ஏன்னா, இந்த ஆறு மாசத்துல இங்கே வந்து சாயந்திரத்துலே எல்லோருமா சேர்ந்து பண்ணின தியானத்துல, ஒரு நாள் "பளீர்”னு ஒரு வெளிச்சம் வந்தது போல இந்த எண்ணம் எனக்குத் தோணித்து. உடனே இவர்கிட்டே சொல்லணும்னு போனா, அவரோ... கையில "புஷ்பாஞ்சலி”ங்கற புஸ்தகத்தைப் படிச்சுண்டு இருந்தார். சட்டுனு நானும் ஒரு புஸ்தகத்தை எடுத்தேன். தலைப்பு என்ன தெரியுமா? "ஸ்ரீ அன்னை பராசக்தியின் அவதாரம்'. அதுல அன்னையோட நான்கு அம்சங்களைப் பத்தியும் படிச்சேண்டி பார்வதி. "மஹேஸ்வரி”, "மஹாகாளி”, "மஹாலக்ஷ்மி”, "மஹாசரஸ்வதி”ன்னு எழுதியிருக்கறதைப் படிச்சா, இந்த நான்கு அம்சங்களின் விளக்கம், என்னமாயிருக்கு கீதா. நமக்கும் கொஞ்சம் தெம்புயிருக்கிறபோதே, எல்லாத்தையும் தீர்மானம் பண்ணனும்னு நினைச்சவுடனேயே... "ஜிவ்”வுனு ஒரு ஆனந்தம். அன்னையையும், ஸ்ரீ அரவிந்தரையும் மாறி, மாறி, பார்த்தேன். அற்புதமாயிருந்தது. அதுக்கப்புறம் என்ன தாமதம்னு தோணித்து. எதுக்கும் உங்ககிட்டேயும் சொல்லிடலாம்னுதான் வந்தேன். சரியா?... நீங்க மூணு பேரும் என்ன சொல்றேள்...?''

மூவரும் ஓடி வந்து மாமியின் கரங்களைப் பிடித்துக் கொண்டனர். சந்தோஷம் பொங்கியது.

சீனுவும், ராமுவும், சொன்ன மாமியின் பாதங்களில் வணங்கினர். "பாட்டி... பாட்டி... அன்னை, ஸ்ரீ அரவிந்தருக்கே ஒரு வீடு முழுவதும்னா எவ்வளவு சந்தோஷமாயிருக்கு தெரியுமா? நிறைய பூக்களைப் பறிச்சுண்டும், வாங்கிண்டும் வந்து தட்டுல அடுக்கலாம். ஊதுவத்தி நிறைய ஏத்தலாம். பாட்டி... ஒவ்வொரு ரூமுலயும் அவா ரெண்டு பேரும் இருக்கும்படியா பார்த்துக்கணும். பாட்டி, நானும், ராமுவும், காலம்பற எழுந்து உங்காத்துக்கு வந்துடறோம். எதுக்கு தெரியுமா? தினமும் அந்த பூக்களைத் தட்டுல அடுக்கறதுக்கு மட்டுமில்லே... மொத நாள் தட்டுல வச்ச பூக்களையெல்லாம், ஒரு கவர்ல போட்டு, யாரும் மிதிக்காத எடத்துலயோ... இல்லேன்னா... ஒரு மரத்தடியிலயோ போட்டுட்டு வருவோம். வீட்டைப் பெருக்கி, துடைச்சு, தட்டு அலம்பறதையெல்லாம் நாங்க ரெண்டு பேரும் பார்த்துக்கறோம். பூக்களை, நீங்களும் மத்தவாளும் பாத்துக்கோங்கோ... சரியா... சீக்கிரமா எழுந்து, வெளியிலேருந்து... பூக்களையும் பறிச்சுண்டு வந்துடறோம்... சரியா...''

இரண்டு பேரையும் அணைத்தபடி ஆனந்தக் கண்ணீர் விட்டாள் மாமி.

"இதோ பாருங்கோ... அன்னைக்கு நீங்க சேவைன்னு செய்யிறது சந்தோஷந்தான். ஆனா... நீங்க ரெண்டு பேருமா, இவர்கிட்டே தினமும் பாடம் சொல்லிக்கணும். புரிஞ்சுதா?''

"நிச்சயமா... கண்டிப்பா... அது சரி... ஹால்ல எடம் போறுமா? நிறைய பேர் வந்தா என்ன செய்யிறது?...''

ராமுவின் கேள்விக்கு, அப்படியே, தன்னோடு சேர்த்து அணைத்து உச்சி மோந்தாள் மாமி.

"ராமு... அன்னை... எத்தனை சூசகமா உன்மூலமா கேள்வி கேட்டுட்டா பார்த்தியா? நிச்சயமா ஏதாவது வழி புலப்படும். அன்னை நமக்குக் காட்டுவாங்கற நம்பிக்கை எனக்கு இருக்குடா''.

"பாட்டி... நாம ஒரு ரூமை மட்டும் "ஆபீஸ் ரூமா” வச்சுக்கணும். ஏன்னா... அன்னையைப் பத்தின புத்தகங்களை நிறைய வாங்கி வைக்கணும். மாதாந்திர புத்தகம் "மலர்ந்த ஜீவியம்” வாங்கி வைக்கணும்''.

"ம்... அப்புறமா... சொல்லுடா... சொல்லு...''

"ஊதுவத்தியும் எப்பவும் நாம வச்சிருக்கணும். வரவா கேட்டா, நாம இல்லைன்னு சொல்லாமயிருக்கணும் பாட்டி... அதுக்கான ஏற்பாடுகளை நாம மொதல்ல செய்யணுமே... எப்படி பாட்டி?''

"எல்லாத்துக்கும் அன்னையே வழி செய்வார்டா. பாரு வேணும்னா... எப்படியாவது நம்ம விருப்பம் நிறைவேற அன்னையையே வேண்டிக்கலாமே... இன்னொண்ணு... அந்தாத்துலேருந்து அன்னை, ஸ்ரீ அரவிந்தரோட படத்தைக் கொண்டு வந்து வச்சுக்கலாம். ஏன்னா, அங்கே ஆறு படங்களிருக்கு. ரொம்ப நாளா, மாமியும் ஆராதிச்சு, நாமள்ளாமும் சேர்ந்து பிரார்த்தனை செஞ்சது. அவா ரெண்டு பேரும் இங்கே வந்தாலே... எல்லாமே சரியா நடக்கும்டா... அதுக்கும் அவாளே துணையா வருவா...''

"சரி பாட்டி... எல்லாமே அன்னையும், ஸ்ரீ அரவிந்தருமே ஏற்பாடு செய்வா. நாம அவங்களையே பிரார்த்தனை செஞ்சுப்போம். நீங்க சொல்றதுதான் சரி பாட்டி. வரட்டுமா...''

*******

"நாம எல்லாமே யோசனை செஞ்சோம். ஆனா ஒரு தியான மையம்னு ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி, என்னென்ன, எப்டியெப்படி, எந்தெந்த வேளையில செய்யணும்கறதை, தியான மையம் வச்சுருக்கிறவாளைக் கேட்டு, சரியாச் செய்யணும். நம்ம இஷ்டத்துக்கு நடந்துக்கக்கூடாது. ஏன்னா, நம்ம வீட்டுல நாம அன்னையையும், ஸ்ரீ அரவிந்தரையும் வச்சுண்டு, நாம பிரார்த்தனையையும், பூக்களையும் வச்சு, ஆராதிக்கறது வேறே. பல பேர் வர, வழி செய்யிற நாம், அதுக்கானதை சரியானபடி யோசிச்சு, சரிவர செய்யணும். புரிஞ்சுதா...'' மாமா கூறவும், மற்றவர்களும் ஆமோதித்தனர்.

"யாரைக் கேட்பது? எப்படிச் செய்வது? எந்தெந்த நேரம்? தினமும் அன்னை, ஸ்ரீ அரவிந்தரின் "ஸிம்பல்' வைக்கணுமா? இல்லே முக்கியமான நாட்களில்மட்டும் போதுமா?'' இப்படி பல யோசனைகள் எல்லோர் மனதிலும்.

மாமா கூறினார், "இதோ பாருங்கோ... நாம எல்லோருமா அன்னையையே வழிகாட்டும்படி பிரார்த்தனை செய்வோம். நிச்சயமா நமக்கு ஒரு வழி கிடைக்கும். வாங்கோ... எல்லோருமே சேர்ந்தே அன்னையோட பாத சரணங்களையே நினைச்சுண்டு தியானம் செய்வோம். வாங்கோ...''

எல்லோருமாக, ஆளுக்கொரு ஊதுபத்தியை கையில் ஏற்றியபடி அன்னையின் படத்திற்கு முன் நின்று வேண்டி, ஊதுபத்தி ஸ்டாண்டில் வைத்தனர்.

தியானம் ஆரம்பித்தது. ஆடாமல், அசையாமல் அமர்ந்திருந்த அவர்களின் மனம் அன்னையை வேண்டி, அவரிடமே லயித்தபடியிருந்தது. எத்தனை நேரம் என்பதை அவர்கள் உணர்ந்தாரில்லை.

யாரோ கதவைத் தட்டும் சத்தம் பலமாகக் கேட்டது.

சட்டென கலைந்தனர். ராமுதான் எழுந்து, அன்னையை வணங்கி பின், வாசற்கதவைத் திறந்தான். புதியவராகயிருந்ததில் ஒரு தயக்கம் ராமுவுக்கு. ஆனாலும்... "வாங்கோ... உள்ளே வாங்கோ...'' என்றபடி அவனும் உள்ளே வர, அந்த மனிதரும் உள்ளே வந்தார்.

"அட, அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் இங்கேயும் இருக்காளே... ரொம்ப நன்னாச்சு. மனசுக்கு சந்தோஷமாவும், திருப்தியுமாயிருக்கு... நான் ஒரு அஞ்சு நிமிஷம் தியானம் பண்ணலாமா?''

"ஓ... தாராளமா... ம்... பண்ணுங்கோ. ராமு... ஊதுவத்தி ஏத்தி அவரிட்ட குடுப்பா...''

ராமுவும் அவரிடம் தர, அவரும் தியானத்தில் அமர்ந்தார். சுமார் அரை மணி நேரத்திற்கு மேலேயே அமர்ந்திருந்தார். யாரும் ஒரு சின்ன சப்தம் கூடயில்லாமல் நடந்து கொண்டனர்.

நிதானமாக எழுந்தவர், சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கினார். சிரித்த முகத்துடன் அவர் மீண்டும் அவர்களெதிரில் அமர, கீதா ஒரு டம்ளர் பால் எடுத்து வந்து தந்தாள். அதை எடுத்துக் கொண்டவர், ஏதோ சொல்ல வேண்டும் என்பது போல், எல்லோரையுமே பார்த்தார். இவர்களும் பேசாமல் இருந்தனர்.

"நீங்க எல்லாருமே ரொம்ப சாந்தமானவாளாயிருக்கேள். எனக்கு ரொம்ப நன்னா இன்னிக்கு "தியானம்” லயிச்சு செய்ய முடிஞ்சுது. நான் எப்படி... வந்து உங்காத்துக் கதவை, ஏன் தட்டினேன்னு இது வரைக்கும் புரியலே. ஆனா... ஒண்ணே ஒண்ணுமட்டும் ரொம்ப நன்னா, மனசுக்கு இதமா புரிஞ்சுடுத்து. அதுவும், அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும்தான் என்னை இங்கே வரச் சொல்லியிருக்கான்னு புரிஞ்சுண்டேன். ஆமாம்... நான் சொல்றதை உங்களால கேக்க முடியுமா? நேரம் இருக்குமா? இல்லேன்னா... வேண்டாம்... சரி வேண்டாம்...''

வந்தவர் பேசி முடிக்கும் முன், பார்வதி உடனே கூறினாள்.

"மாமா! நீங்க பெரியவர். நீங்க என்ன சொன்னாலும், பேசணும்னாலும் பேசலாம் மாமா. ஏன்னா... நாங்க எல்லாருமே, அன்னை, ஸ்ரீ அரவிந்தரை வணங்கறவாதான். அதனால எது வேணும்னாலும் கேக்கலாம், பேசலாம். தயக்கமே வேண்டாம். சொல்லுங்கோ...''

"ஒண்ணுமில்லேம்மா... எனக்கு ஒரு ஆசை. ஆனா, அதை எங்காத்துல நிறைவேத்த முடியாது. ஏன்னா... முடியாதுதான். ஆனா... என் ஆசையை... எப்படியாவது நிறைவேத்தணும்னு மனசுக்குள்ள ஒரு எண்ணம், பெரிசா... ஒரு சுழற்சியா சுத்திண்டிருக்கு. இப்டி காலாற, என் எண்ணத்தை மனசுல சுழல வச்சுண்டு வந்தவன், ஏன் உங்காத்துக் கதவைத் தட்டினேன்னு புரியலே... தெரியவுமில்லே. ஆனா... நிஜம்மா சொல்றேன்... எனக்குள்ள ஒரு உந்துதல் இருந்ததால்தான் உங்காத்துக் கதவைத் தட்டியிருக்கேன். வந்ததும், என்ன சொல்றது? எப்படிப் பேசறது? புரியலே... ஏந்தெரியுமா? உங்காத்துல "சம்பிரமமா'' உக்காந்துண்டு, சிரிச்ச முகத்தோடயிருக்கிற அன்னையையும், அமைதியா, சாந்தமான முகத்தோடயிருக்கிற ஸ்ரீ அரவிந்தரையும் பார்த்தவுடனேயே, அதுவும் நீங்கள்ளாம் "தியானம்” செய்யிற நேரத்துல வந்துருக்கேனே... என்னை இப்டி... இங்கே அழைச்சுண்டு வந்ததே இவா ரெண்டு பேருந்தாம்மா... இவா ரெண்டு பேருந்தான்... ஆமாம்மா... ஆமாம்...'' சொல்லியவர் அடக்கிய விம்மலோடு, கண்கள் நிறைந்து பெருக, உதடுகள் துடிக்க, முகம் சிவந்து, மீண்டும் கரங்கூப்பி, வீழ்ந்து வணங்கினார்.

வந்தவரின் உணர்ச்சிகள் நிறைந்த வார்த்தைகள் இவர்களையும் ஆட்கொண்டன. ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.

"அம்மா! நீங்கள்ளாம் தப்பா என்னை நினைச்சுக்காதீங்கோ. எனக்கு... எனக்கு...'' மேலே பேச முடியாமல் திணறினார்.

சட்டென மாமா, அவரருகில் அமர்ந்து ஆசுவாசப்படுத்தினார்.

"உங்க மனசுல என்னமோ சொல்லணும்னு தோணறது. எதுவானாலும் சொல்லுங்கோ. தயக்கம் வேண்டாம்... ஏன்னா... நாங்க எல்லாருமே ஒரே குடும்பம் போலத்தான். யாரும் தப்பா நினைச்சுக்கமாட்டா...''

"நான் அன்னையையும், ஸ்ரீ அரவிந்தரையும், மனமார நேசிச்சு, மெய் சோர வணங்குறவன். ஆனா... என் வீட்டுல... அதைக் கடுமையா எங்குடும்பமே எதிர்த்து நின்னுட்டா. என்னோட அலமாரியிலதான் இவா ரெண்டு பேரையும், வச்சுண்டு பிரார்த்தனை பண்றேன். ஊதுவத்தி கூட ஏத்தறதில்லே. இந்த விஷயத்துல சாம, தான, பேத, தண்டமும் பண்ணிப்பார்த்தாச்சு. ஆனா, அது தப்புன்னு புரியறது. யாரையும், புண்படுத்தக்கூடாது, விருப்பமில்லாதவங்களை வற்புறுத்தக் கூடாதுங்கறதை மறந்து, அவாளோட வீண் தர்க்கம், அனாவசிய விவாதம், கோவம்னு நான் நடந்துண்ட முறை ரொம்ப தப்புன்னு புரிஞ்சுடுத்து. ஆனா, அன்னை, ஸ்ரீ அரவிந்தரை என் மனசுக்குள்ளேயே பிரார்த்தனை பண்ணிண்டிருந்தேன்.

"நல்ல வழி காட்டணும். அன்னை பக்தர்கள்ள யாராவது ஒருத்தரையாவது எனக்கு காண்பிச்சு விடுங்கோம்மான்னு...'' அனுதினமும் வேண்டிண்டேன். ஏன் தெரியுமா? என்னோட உயிர் நண்பன் ஒருத்தன் சொன்னது ஞாபகத்துல வந்தது. பாண்டியில இருக்கிற ஒரு "அன்னை பக்தரான மகான்'' கல்யாணமாகி கணவன் வீட்டுக்குப் போகறதுக்கு முன்னாடி அந்தப் பெண்ணிற்கு அவர்கிட்டே வணங்கினவளுக்கு ஆசீர்வாதம் பண்ணி கூறியது என்ன தெரியுமா?

"உன்னோட புக்ககத்துல அவாள்ளாம் எந்த தெய்வங்களையும் வணங்கலாம். நீ... அதை மறுக்கக்கூடாது. அன்னை, ஸ்ரீ அரவிந்தரை தியானிக்கும் உனக்கு, உன் மனதிலேயே பிரதிஷ்டை பண்ணி வேண்டிக்கோ. அவர்கள் அனுமதியுடன்தான், நீ அன்னை, ஸ்ரீ அரவிந்தரின் படங்களை வைத்து வணங்க வேண்டும். "சுமுகம்”தான் முக்கியம். புரிந்ததா'' என்றார்.

இந்த வார்த்தைகளை தேவவாக்காக அந்தப் பெண் ஏற்றுக்கொண்டு நடந்ததில், நடந்த அதிசயம்! அந்தப் பெண்ணின் வீடு, இப்போது "அன்னையின் சென்டரா'' மாறியிருக்கு. இதுவும் அன்னையின் அற்புதங்களில் ஒண்ணுதானே! அப்ப, ஏன், என் வீட்டை அப்டி செய்யக்கூடாதுன்னு நீங்க கேட்கலாம். அது... அது...

ம்...ஹும் வேண்டாம்... அந்தப் பேச்சை விட்டுடுவோம். எப்போ அவா அன்னைக்கு அருகே வராளோ வரட்டும். ஆனா, எனக்கு வயசு ஏறிண்டிருக்கு. அதற்குள்ள ஒரு "அன்னையின் தியான மையம் ஆரம்பிச்சுடணுங்கற ஆசை. அதனாலதான்... அதனாலதான்...'' மேலே பேச்சுக்கள் வராமல் கண்கள் மல்க நின்றார்.

ஆனால் இவர்களோ... அன்னையின் அன்றாட அற்புதங்களில் இதுவும் ஒன்று என மனம் நிறைந்து விகசித்து, விக்கித்துப் போய், கண்கள் தளும்ப, அனைவரின் முகங்களிலும் சந்தோஷம் பூரிக்க, அன்னையை நோக்கி மீண்டும் வணங்கி எழுந்தனர்.

"மாமா... நீங்க யாரு? உங்க பேரோ, ஊரோ... ஒண்ணுமே எங்களுக்குத் தெரியாது. ஆனா... நீங்க பேசின பேச்சுக்களும், உங்க ஆசையும்... ஆமாம் மாமா, அன்னையோட அற்புதங்கள், சத்தியமா சொல்றேன், தினம், தினம் எங்கெங்கோ நடந்துண்டிருக்குங்கறத உண்மைதான்னு, நிரூபிக்க, இதோ உங்களையே அன்னை, எங்காத்துக்கு அனுப்பியிருக்காளே... இதுல எதை சொல்றது... எதை... எப்படி... பேசறதுன்னு... அப்படியொரு ஆச்சரியத்தோடதான் நாங்க எல்லோருமே இப்ப இருக்கோம். நான் இப்டி பேசறது உங்களுக்குப் புரியாமயிருக்கலாம். ஆனா, எங்களுக்கு இது ரொம்ப ஆச்சரியத்தை மட்டுமல்ல, அன்னையோட அற்புதங்கள்... எப்டி... எந்தவிதத்துல, யாருக்கு வேணும்னாலும் நடக்கலாங்கறதுதான் நிஜமான சத்தியம். உங்களுக்குப் புரியறமாதிரி சொல்றேன்''.

"மாமா... நாங்களும் ஒரு "தியான மையம்” ஆரம்பிக்கணும்கற ஆவலோடத்தானிருக்கோம். இதோ... இந்த தம்பதிகள்தான் அவா வீட்டையே அன்னை, ஸ்ரீ அரவிந்தருக்குன்னு அர்ப்பணிச்சுட்டா. இந்தாத்துலேருந்துதான் அன்னை, ஸ்ரீ அரவிந்தரை அழைச்சுண்டு போறோம். தினமும் மையத்தை சுத்தம் பண்றதும், முடிஞ்ச பூக்களைப் பறிச்சுண்டு வரதும், சீனுவும், ராமுவும் செஞ்சுடுவா. ஊதுவத்திகளை பாண்டியிலயிருக்கிற சென்டர்லேருந்து வாங்கிண்டு வந்துடுவோம். புத்தகங்களும் அப்படியேதான். ஒரு ரூமை மட்டும் ஆபீஸ் ரூமா வச்சுக்கலாம்னு இருக்கோம். நாங்க இங்கே "கேட்டரிங்” பண்றதால அந்த வேலைதான் எங்களுக்கு மூலாதாரம்கறதால அதையும் விடமுடியாது. ஆனா... இதோ இவா ரெண்டு பேரும்தான் தியான மையத்தைப் பார்த்துப்பா. நாங்களும் ஒவ்வொருத்தர் ஒவ்வொரு நேரம் வச்சுண்டு, தியான மையத்தைப் பார்த்துக்கப்போறோம். உங்களுக்கும் ஏதாவது விஷயம் தெரிஞ்சுதுன்னா சொல்லுங்கோ... அதுபோலவே நடக்கலாம். சொல்லுங்கோ மாமா''.

வந்தவர், சட்டென எழுந்து... நெடுஞ்சாண்கிடையாக மீண்டும் அன்னை, ஸ்ரீ அரவிந்தரின் முன் வணங்கியவரின் கண்களிலிருந்து ஆனந்தபாஷ்பம் பொங்கிப் பொங்கி வழிந்தது. அப்படியே அமர்ந்தார்.

"அன்னையே... உன்னோட விளையாட்டை, ஆனந்தமா எங்ககிட்டே காட்டிக் கொடுத்துட்டியேம்மா... அதனாலதான் இந்த வீட்டுக் கதவைத் தட்டும்படி செய்தாயா? நன்றியம்மா நன்றி... உன்னாலதான் இப்டியெல்லாம் செய்ய முடியும். என்னைக்கும் உன்னுடைய சரணத்தை விடமாட்டேன்னா... விடமாட்டேன். ஆமாம். எத்தனை அழகா எங்க எல்லோரையும் பிணைச்சு விட்டிருக்கே. இதே போல எப்பவும் எங்களுக்கு வழிகாட்டிண்டிருக்கணும்மா. இதுதான் என்னோட பிரார்த்தனை. அன்னையே சரணம்... அன்னையே சரணம்... அன்னையே சரணம்''.

முணுமுணுத்த உதடுகளினின்று வெளியான சின்னஞ்சிறு சப்தம் அடங்க, அப்படியே தியானத்தில் ஆழ்ந்தார். அவரின் பெயர் "சத்தியன்”.

*******

சத்தியனின் உதவியுடன், வீட்டிலிருந்த சாமான்களை, இந்த வீட்டிற்குக் கொண்டுவந்தனர். வேண்டாதவைகளை கடைக்குப் போட்டனர். வீடு முழுவதும் சுண்ணாம்பு அடித்து, கதவுகளுக்குப் "பெயிண்ட்' அடித்து, புத்தம் புதியதாக ஆக்கினர். பின்புறமிருந்த சுமாரான இடத்தில், புல்களைக் களைந்து, இருக்கும் பூச்செடிகளுடன், நர்ஸரியிலிருந்து வாங்கி வந்த செடிகளை, நன்கு உர மண்ணைக் கலந்து, நட்டு வைத்தனர். இதெல்லாம் செய்யும்போது கூடவேயிருந்த சத்தியன், தியான மையம் ஆரம்பிக்கும் முன், ஊருக்குப் போய்விட்டு வருவதாகக் கூறியவர், சரியாக இரண்டு நாட்களுக்கு முன் வந்தார். அவருடன் கூட வந்தது, பெரியதான பட உருவில் வந்தது, சாட்சாத் அன்னையும், ஸ்ரீ அரவிந்தருந்தான். "அன்னையே சரணம், ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நம:'' "ஆனந்தமயி, சைதன்யமயி, சத்யமயி பரமே'' என்று கூறியபடியே அன்னையையும், ஸ்ரீ அரவிந்தரையும் உரிய இடத்தில் அழகாகக் கூடவே கொண்டு வந்திருந்த ஒரு ஸ்டாண்டில், பாந்தமாக அமர்த்தினர். உடனே ஊதுவத்தி ஏற்றி, அமர்ந்தவர்கள், எழுந்த போது நேரம் முக்கால் மணி நேரத்திற்கு மேல் ஆகியிருந்தது.

தியானத்திலிருந்து எழுந்து வணங்கிய பின், ஒருவரையொருவர் பார்த்து, மிதமிஞ்சிய சந்தோஷத்தை, முகத்தில் தேக்கி, சிரித்ததுடன் சரி. ஒரு வார்த்தைகூட பேசாமல், அன்னை, ஸ்ரீ அரவிந்தரின் கட்டுப்பாட்டிலிருப்பது போல் மகிழ்வோடு இருந்தனர். சரீரம் புளகிக்க, அவர்கள் மனம் வெகுவாக சாந்தத்தைத் தொடர்ந்தது.

"அன்னையும், ஸ்ரீ அரவிந்தருமே'' உயிர்ப்புடன் அவர்களைப் பார்த்து, எந்த மூலையில் நின்று பார்த்தாலும், இருவரின் கமலக்கண்கள் பார்த்து, சிரிப்பது போல் உணர, கண்கள் ததும்ப, அப்படியே இரு கரம் கூப்பி நின்றனர். அந்த நிலையிலிருந்து விடுபட எவருக்கும் விருப்பமேயில்லை. நகரவும் தோன்றவில்லை. அந்த "விஸ்வரூப தரிசனம்'' அவர்கள் மனதை விட்டு அகலவேயில்லை.

அப்போதுதான் அழைப்பு மணி அடித்தது. ராமுவும், சீனுவும் எழுந்து சென்றனர்.

"கண்ணுங்களா... இப்பத்தான் மார்க்கெட்லேருந்து பூக்களையெல்லாம் வாங்கிகினு வந்துருக்கேன். மாலையா கட்டித் தரவா. இல்லே உதிரியாவே தரவா...'' கேட்ட அந்த வயதான மூதாட்டியுடன், பூக்களையும் பார்த்து, பேச வாயெழாமல், உள்ளே ஓடினர்.

"அம்மா! அம்மா! நம்ப இடத்துக்கு "அன்னையே” வந்துட்டாப்பல, ஒரு பாட்டி கூடை நிறைய பூக்களை வச்சுண்டு வந்துருக்கா. வாம்மா... அம்மா... பார்க்கப் பார்க்க எனக்கு அன்னையையே பார்க்கறாப்பலயிருக்கும்மா. அம்மா... சந்தோஷமாவுமிருக்கு... பயமாவுமிருக்கும்மா... வாங்கோ... வாங்களேன்...'' கூடவே சத்தியனும் வந்தார்.

பெற்றவளின் கரங்களைப் பிடித்துக் கொண்டு வாசலுக்கு வந்தனர். சிரித்தபடி கூடையுடன் நின்றிருந்த அந்த முதியவளைப் பார்த்ததுமே, மனதுள் அப்படியொரு சந்தோஷம் பொங்க, இரு கரம் கூப்பினார்கள் இருவரும்.

"இதோ பாருங்கம்மா இன்னிக்கு இருக்கிற பூக்களையெல்லாம் இங்கே குடுக்க முடியுமா? இல்லே வாடிக்கைக்காரர்களுக்குத் தரணும்னா, அதை வச்சுண்டு, மிச்சத்தைக் கொடுத்துடுங்கோ. எவ்வளவுன்னு சொல்லுங்கோ. அப்புறமா, தினந்தோறும் எங்களுக்கு பூக்களைத் தர முடியுமா? வாடிக்கையா தந்தா நல்லதும்மா. அன்னன்னிக்கு காசு தரணும்னாலும் சரி, இல்லே மாசக்கணக்குல தரணும்னா சரி. உங்க விருப்பம்மா. ஆனா, எங்களுக்கு அன்னன்னிக்குத் தரதுதான் நல்லதுன்னு...''

"அப்படியே குடுத்துடுங்க ஐயா... நான் தினமுமே வாடிக்கையா கொணாந்து தரேன். இன்னிக்குத்தான் பூ வியாபாரமே ஆரம்பிச்சேன்யா. மருமவதான் வியாபாரம் செய்வா. ஒடம்புக்கு சரியில்லேய்யா. அதனால நானு வந்தேன். தெரு, தெருவா சுத்த முடியலே. என்னமோ... இங்கே கேக்கணும்னு தோணுச்சு. வத்தி வாசனை வந்துச்சா... சரி... என்னமோ விசேஷம்னு கேட்டுட்டேன்'' கூறியபடி, கண்களை இப்படியும், அப்படியுமா செலுத்தி, உள்ளே பார்த்தவள்... சந்தோஷத்தோடு புன்னகைத்தாள்.

"ஐயா... நீங்களும் அன்னையையும், ஸ்ரீ அரவிந்தரைந்தான் கும்புடறீங்களா... மனமே ரொம்பிப் போச்சுய்யா. எம் மருமவ சொல்லிகினேயிருப்பா. வூட்டுல... ஒரு சின்ன படங்களை வச்சுருக்கா. வேளைக்கு ஒரு ஊதுவத்திதான் ஏத்துவோம். எம் பேரன், பேத்தி, எம் மருமவ, கும்புடுவோம். எம் பையன்... ம்... அவனை... இந்த ஆத்தாதான் சரி செய்யணும் சாமி. இனிமேபட்டு, நானே நிதமும் பூக்களைக் கொணாந்து தரேன் சாமி. எம் மருமவ எல்லா வாடிக்கைக்கும் கொடுக்கட்டும். நான் பதிவா தரேன் சாமி. சரியா... இந்த ஆத்தா... நிச்சயமா நல்ல வழி காட்டுவா சாமி''.

சந்தோஷத்துடன் உள்ளே அன்னையையும், ஸ்ரீ அரவிந்தரையும் கும்பிட்டாள். தானே தினமும் பூக்களைத் தருவதாக மீண்டும், மீண்டும் கூறிவிட்டுச் செல்ல... அனைவரின் மனமும் நிரம்பியது சந்தோஷத்தால்.

சத்தியன், சீனு, ராமுவிடம் கூறினார் "நீங்க படிப்புக்கும் முக்கியத்துவம் தந்து, படிக்கிற நேரத்துல படிக்கணும். காலம்பற நீங்க செய்யிற வேலையை முடிச்சுட்டு, படிக்கலாம். இன்னொண்ணு, எனக்கு எந்த வேலையுமில்லாததால, நான் சாப்பாடு கொண்டு போறதை செய்யிறேன். சரியா? ஏன்னா... நீங்க காலையில செய்யிற வேலைக்கப்புறம் படிக்க நேரம் இருக்காது. அதனால சொல்றேன். மாமி, நீங்க என்ன சொல்றேள்?''

"இல்லே... அவா செய்யிற வேலை செய்யட்டும். அவா படிப்பா. அவாளைப்பத்தி நாம கவலைப்பட வேண்டாம். அவாளை இத்தனை நாளும் பார்த்துண்டதே அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும்தானே. அதனால, நாம் எந்த மாத்தத்தையும் செய்ய வேண்டாம்னு நினைக்கிறேன். தப்பா நினைச்சுக்கக் கூடாது. அவா, எப்போதும் போலவேயிருக்கட்டும்... சரியா...''

சொன்ன மாமியை, இரு கரம் கூப்பியபடி, அன்னையையும், ஸ்ரீ அரவிந்தரையும் பார்த்து சாஷ்டாங்கமாய் வணங்கினார். கண்கள் நிரம்பின.

*******

பூக்களைத் தினந்தோறும் தரும் பாட்டி அன்னம்மாவுக்கும், அவளுடைய மருமகளுக்கும் சந்தோஷம் சொல்லி முடியவில்லை. அன்னையையும், ஸ்ரீ அரவிந்தரையும் இன்னும் தீவிரமாய் வணங்க ஆரம்பித்தனர். இப்போது வருமானம் இரு மடங்காக வருகிறதல்லவா? மாமியாரும், மருமகளுமாக பூ வியாபாரம் செய்வது, குழந்தைகளுக்கு வயிறார உணவைத் தர முடிகிறதே. அந்த சந்தோஷத்தில், எப்போதுமே... அவர்கள் மனதில் அன்னையும், ஸ்ரீ அரவிந்தருமே, சுழன்று கொண்டிருந்தனர்.

எப்போதுமே, மகன் தள்ளாடியபடி வந்தால், எந்த ஒரு கோபத்தையும் காட்டாமல், வாசலில் திண்ணையில் உட்கார்ந்து விடுவாள், கண்ணீரைப் பெருக்கியபடி. ஆனால், இப்போது மருமகளும் சரி, இந்தக் கிழவியும் சரி, கண்களைப் பெருக்க விடவில்லை. அதே சமயம் ஒரு மனோதைரியம் இருவருக்குள்ளும் பெருகியதில், அன்னை, தன் மகனை, நிச்சயம் சரியான வழிக்குக் கொண்டு வந்துவிடுவார் என்கிற எண்ணம் ஊடுருவி, இருவரையுமே அந்தக் கவலையை அன்னையிடமே தந்துவிட்டனர். நிம்மதியாக இருந்தனர்.

படித்தவர்களாகிய நாம்தான், எந்த ஒரு காரியத்தையும், நிதானமாகச் செய்வதில்லை, யோசிப்பதில்லை. அந்தந்த சமயத்திற்கும், நிலைக்கும் ஏற்றவாறு, நம்மை மாற்றிக் கொள்ளும் "பச்சோந்தி''யாகத் தானிருக்கிறோம். "பச்சோந்தி'கூட தன்னைத் தன் எதிரிகளிடமிருந்து காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டே, தன் நிறத்தை, சூழ்நிலைக்கேற்ப மாற்றிக்கொள்கிறது. ஆனால், மனிதர்களாகிய நாம்... நம்மை நாமே நினைத்துப் பார்க்கலாமே.

இன்று ஒரு காரியம், ஒருவரிடம் ஆக வேண்டுமா? ம்... எப்படி வேண்டுமானாலும், நம் ஆதாரமில்லாத நாக்கைப் புரளவிட்டுப் பேசுகிறோம். நம் முகபாவங்களைத் தேர்ந்த நடிகரையும் மிஞ்சுமளவிற்கு மாற்றியபடி பேசுவதில் கில்லாடியாகயிருக்கிறோம். அவர்களின் புறஉணர்விற்கு மதிப்புத் தந்து, நாமும் ஆஹா, ஓஹோவென அவரை அதீதமாகப் புகழ்ந்து, மதித்துப் பேசுகிறோம். அதே, நம் காரியம் கைகூடவில்லையென்றால், அந்த நாக்கின் புரளல், எந்த விதம், எப்படியெப்படி, எங்கே வேண்டுமானாலும் திரும்பும் என்பதில் கடுகளவுகூட சந்தேகமேயில்லாமல் சொல்லலாம். இது மனித இனத்திற்கு மட்டுமே உரிய நீசத்தனமான இயல்பு.

ஐந்தறிவும், நான்கு கால்களுமுள்ள மிருகங்களைவிட, மனித இனம் உயர்ந்ததாகயிருக்க வேண்டுமென, இறைவன் உருவாக்கிய மனித இனத்திற்கு, உபரியாகத் தந்த ஆறாவது அறிவை வைத்துக் கொண்டு நாம் போடும் ஆட்டம்தான் எத்தனை, எத்தனை? ஐந்தறிவு மிருகங்களையும் நாம் விடுவதில்லை. அவைகள் நன்றியுடன் நடந்தாலும், அதை நம் ஆட்டத்துக்குப் பணிய வைத்து, மனிதர்களின் கட்டளைக்கு அடிபணிய வைப்பதில், மிருகங்களுக்குத் தங்களின் பலமே தெரியாமல் மழுங்கடிப்பதிலும், உற்றார், உறவினரை ஏமாற்றுவதிலும்தான் அந்த ஆறாவது அறிவு பயன்படுகிறதோ... என்கிற எண்ணம்தான் இப்போதைய நிலையைப் பார்த்துக் கூறத் தோன்றுகிறது. சாம, தான, பேத, தண்டத்தில், பேத, தண்டத்தை மட்டும் நாம், வெகு சௌகர்யமாக ஏற்றுக்கொண்டுவிட்டோம் என்பதுதானே உண்மை. இந்த உண்மையை மறுக்க இயலாது. ஆனால் மறைக்க முடியும் என்பதுதான் எல்லோரிடமுமுள்ள அசட்டு சாமர்த்தியம்.

சிலையாகயிருக்கும் தெய்வங்களையே கடத்தும் துணிச்சல் உள்ள மனிதர்களை, அன்னை நன்கு அறிந்ததால்தான், அவர் "படமாகவே'' நம்மிடம் இருக்கிறார். நிரந்தரமாகயிருக்கிறார். நம் வழிபாடுகளையும் ஏற்கிறார். நம் எண்ணங்களின், பிரார்த்தனை- களின், சத்தியத்திற்கேற்ப, பலனையும் அள்ளி, அள்ளித் தருகிறார். ஆனால், அன்னை தரும் பலனை, கிள்ளி எடுத்துக் கொள்ளக்கூடத் தெரியாத அறியாமையிலும், ஆத்திரத்திலும், அவசரத்திலும்தான் நாம் இருக்கிறோம்.

அன்னை, தன்னை வணங்குபவர்களை, பணக்காரர்களா, படித்தவர்களா, உயர்ந்த ஜாதியில் பிறந்தவர்களா என, எப்போதும் பார்ப்பதில்லை. ஜாதி, மத, இனமென்னும் பேதத்தையெல்லாம் தூரத் தள்ளியவர் அன்னை. மனித இனம் மட்டுமல்ல, மிருகங்களுக்கும் அருள்பாலிப்பவர்.

அன்னை என்றாலே தாய்மையுடையவர்தானே. அந்தத் தாய், நாம் தவறு செய்யும்போது, அதை உணர்த்த கொஞ்சமே கொஞ்சம் கடுமையாக நடத்தலாம். அதைத் தவறுஎனக் கொண்டு, நாம் பெரிதுபடுத்தி, மனதில் கிலேசங்களையும், சங்கடங்களையும் நிறைத்துக் கொண்டு, மறுக்க இயலுமா?

அன்னை என்றாலே நமக்கு "அம்மா' என்பதுதானே உண்மை. நமக்கு எப்போது, எது தேவை என அம்மாவிற்குத்தானே தெரியும். அந்த உண்மையை நாம் அறிவோம்தானே. அன்னை, எந்தெந்த சந்தர்ப்பத்தில், எதை, எதை... எப்படி... எந்த விதத்தில் தருவார்என நமக்குத் தெரியாது. ஆனால், அது நமக்குத் தேவைப்படும்போது, நாம் எதிர்பாராமல், நல்ல விதத்தில் நம்மை அடையும். இது திண்ணமான உண்மை என்பதுதான் நிஜம்.

பூக்காரி... அக்கம், பக்கம் சொல்லியிருப்பாள் போலும். கொஞ்சம், கொஞ்சமாய் "ஹால்' நிரம்பும் அளவிற்கு தியானத்தின் நேரத்தில் அமர்ந்தனர். அமைதியாக தியானம் செய்து, பூக்களைக் கவரில் போட்டதை, எடுத்துக்கொண்டு அமைதியாகவே வெளியேறினர்.

சிலர் தங்களின் சந்தேகங்களையும், சங்கடங்களையும் கூறி, அதற்கான வழிபாடு எப்படி, எவ்விதம், உணர்ந்து செயல்படவேண்டும் எனக் கேட்டு அறிந்தனர். நாள்கள், மாதங்களாகி, வருடங்களைத் தொட ஆரம்பித்தபோது, தியான மையம் ஓரளவுக்கு பலருக்கும் அறிமுகமாகி, அவரவர் நேரம் கிடைத்தபோதெல்லாம் வர ஆரம்பித்தனர். அதுவும் தியான நேரத்தில் கூட்டம் அதிகமானது. ஆனாலும், அமைதியும் "அபரிமித'மாக கோலோச்சியது. இத்தனையிலும் தியான நேரத்தில் தினந்தோறும், தவறாமல் வந்து பிரார்த்தனை செய்தது, பூக்காரக் கிழவியும், அவள் மருமகளுந்தான். இருவரும் மனமுருக வேண்டினார்கள். அதுவும் அன்னையைத் தன் மனதில் ஆத்மார்த்தமாக பிரதிஷ்டை செய்தது, அவர்களையறி- யாமலேயே செய்த அருமையானதாகும்.

"அம்மா... யம்மோவ்... எங்கே போய் உக்காந்துக்கினு... ம்... யம்மா... ம்மா...''

*******

வயதை நினைக்காமல், மகன் "அம்மா" என்று கூப்பிடுவதைக் கேட்டு, மனம், மகிழ்ச்சியில் துள்ள, வேக வேகமாய், ஓடாத குறையாய் வந்து நின்றாள். மூச்சு இறைத்தது.

"ஏம்மா... ஏம்மா... இப்டி ஓடியாந்து... மூச்சு எறைக்குது பாரு... மொள்ள வாம்மா... வாம்மா...''

பெற்றவளைப் பிடித்து நிறுத்தினான். அணைத்துக்கொண்டான். "இந்தாம்மா. துட்டு, இன்னிக்கு சம்பாரிச்சது. ம் பிடிம்மா. பிடிம்மான்னா. சத்தியமா சொல்றேன். நான் சம்பாரிச்ச துட்டுதாம்மா. எடுத்துக்கம்மா''.

பெற்றவளின் கரங்களில் இரண்டு அம்பது ரூபாய் நோட்டுகளை வைத்தவன், அப்படியே அணைத்தபடி உள்ளே சென்றான்.

கையில் இருந்த ரூபாய் நோட்டுகள் இரண்டையும், இரு வினாடிகளில் அன்னையின் பாதங்களுக்கு, தன் மனதிலேயே சமர்ப்பித்தாள். கண்கள் நிரம்பியதை, மகன் அறியாமல் துடைக்குமுன், மகனே தன் கரங்களால் அவள் கண்களைத் துடைத்தான்.

"அம்மா... அழுவாதேம்மா... இனிமேபட்டு, அப்பப்ப, வூட்டுக்கும் துட்டு தரேம்மா... அழுவாதேம்மா...''

அந்தக் கிழவியின் மடியில் படுத்து அழுதான். பிறகு எழுந்தவனை, "ராசா... சாப்பிட்டியாப்பா... வா... சாப்பிடு...'' என்று தட்டை வைக்க எழுந்தவளையே பார்த்தான்.

"யம்மா... நானு... குடுத்த ரூபாவைத் தாம்மா... அதுல அம்பது ரூவா குடுத்தா போதும்மா... வாயெல்லாம் நமநமங்குது... யம்மா''.

திடுக்கிட்டாள் அன்னம்மா. அன்னையை மனதுக்குள்ளேயே வேண்டினாள். சரி அவன் வழியிலேயே போகலாம் எனத் தோன்றியதை செயல்பட வைத்தாள்.

"சரி கண்ணு. அம்பது ரூவாதானே... தரேம்பா... ஆனா... அதுக்கும் முன்னே, நான் கூட்டிட்டுப் போற எடத்துக்கு கண்டிப்பா வரணும். அப்பத்தான் தருவேன் சரியா...''

யோசித்தவன்... சரி எங்கேதான்னு பார்க்கலாமே எனத் தோன்ற... ஆமோதித்தான்.

"சரிப்பா... மொதல்ல நல்லா குளிச்சிட்டு, சுத்தபத்தமா வாப்பா. பொறவு போலாம். போ... நல்ல துவைச்ச துணியை கட்டிகிட்டு வாப்பா. இனிமே உனக்கு எல்லாமே நல்லபடியா நடக்கும்பா... போ... சீக்கிரம் குளி... ம்...''

நன்றாய் தலைக்குக் குளித்தவன், நல்லபடியாக உடுத்திக் கொண்டு வந்தான். அப்போதுதான் அவன் மனைவியும் பூ மூட்டையை சுமந்தபடி வந்தாள்.

வீட்டிலிருந்த கூடையை, பொட்டலங்களைத் தனித்தனியாய் கூடையில் அடுக்கியவள் மாமியாரிடம் கொடுத்தாள். பாக்கியை தான் எடுத்துக்கொண்டு வெளியேறினாள்... விற்பதற்கு.

"வாப்பா...'' கூடையை இடுப்பில் வைத்தபடி நடந்த பெற்றவளைப் பார்த்தவனின் மனதில் என்ன தோன்றியதோ?

"அம்மா... யம்மா... நான் எடுத்துக்கினு வரேம்மா. ம்... நட...''

நேராக தியான மையத்தை அடைந்தனர். ஊதுவத்தியின் வாசம் அவன் மூக்கை துளைத்தது. "ம்ம்....' என உள்ளுக்கு இழுத்தான்.

"கோயிலாம்மா... இல்லையே வூடு போலயிருக்குதே...''

"ம்... இத பாரு. உள்ளாற யாரும் பேசவேமாட்டாங்க. இப்ப வாய மூடிகினு வா... வந்து பாரு...''

கூடையைச் சிரிப்புடன் வாங்கியது சத்தியன். உள்ளே உட்காரும்படிக் கையைக் காட்டினார்.

தாயும், மகனுமாய் ஒரு பக்கத்தில் உட்கார்ந்தார்கள்.

மகனான குமரன், நான்கு பக்கமும் கண்களை சுழற்றியவன், நட்டநடு கூடத்தில் உயிர்ப்புடனிருக்கும் "அன்னை, ஸ்ரீ அரவிந்தர்'' படத்தைப் பார்த்தான். அன்னையின் கண்கள் அவனையே தீர்க்கமாகப் பார்ப்பது போல் தோன்ற, திடுக்கிட்டான். அருகிலிருந்த பெற்றவளின் முகத்தைப் பார்த்தான். அவளோ கண்ணிமைகளை மூடியபடி, அப்படியே அமர்ந்திருந்தாள். மீண்டும் அன்னையைப் பார்த்தபோது... அன்னை, அவனைப் பார்த்துப் புன்னகைப்பதுபோல் தோன்றியது. கண்களை, விரல்களால் கசக்கினான். மீண்டும் பார்த்தபோது, இதென்ன... அன்னை இன்னும் அவனையேதான் பார்த்தபடியிருந்ததை உணர்ந்தான். "தப்பா செய்கிறாய்? ம்... ஹும்... நீ... செய்யமாட்டியே... எனக்குத் தெரியுமே'' என்று சொல்வதுபோல், கண்களில் தீட்சண்யமும், அதரத்தில் சிரிப்பையும், பார்வையில் கருணையையும் தேக்கியபடி அவனையே பார்ப்பது போலறிந்து திடுக்கிட்டான் மீண்டும்.

திரும்பி, தன்னருகில் அமர்ந்திருந்த பெற்ற தாயின் முகத்தையே பார்த்தான். ஊஹூம்... அவள் அசையாமல், தியானத்தில் லயித்திருந்தாள். உடனே அன்னையைப் பார்த்தான். இப்போது, அன்னை அவனது தாயைப் போலவே தோற்றமளித்தார். மாறி, மாறி இருவரையும் பார்த்தவன் மனதும், எண்ணமும், இருவரும் "தாய்"தான் என்கிற உணர்வு கொஞ்சம் கொஞ்சமாய் வந்தது. அவன் விழிகளும், இமைகளால் தானாகவே மூடப்பட்டன. ஏதும் புரியாத குமரனுக்கு, எதையும் வேண்டத் தெரியாதவனுக்கு, எண்ணங்களோ, புறத்தில் ஏற்படும் சின்னஞ்சிறு சத்தம்கூட காதில் விழாமல், அவனையறியாமலேயே, தியானத்தில் ஆழ்ந்தான், அதுவும் தான் செய்வது தியானந்தான் என்பதை அறியாமல்.

தொடரும்.....

******



book | by Dr. Radut