Skip to Content

07. முனைந்து செய்யும் காரியம்

முனைந்து செய்யும் காரியம்

கர்மயோகி

சுறுசுறுப்பானவர் (dynamic) காரியத்தை முனைந்து செய்வார்கள். அவர்கள் செய்வது பலிக்கும். உலகம் அவரைத் திறமைசாலியெனப் போற்றும். ஆசை உயிரை ஆட்கொண்டு ஆர்வமாக செயல்படுபவர் காரியம் அனைத்தும் பிசுத்துப்போகும். உலகம் அவரைப் பேராசைக்காரன்எனக் கொள்ளும். தன் கடமையைப் பிறர் உணர்த்தி செயல்படுபவர் காரியம் மனநிறைவு தரும்படிப் பூர்த்தியானபொழுது, "எனக்குத் தோன்றவில்லை. நீங்கள் சொல்லியதால் செய்தேன். எதிர்பாராதபடி ஏராளமாகப் பூர்த்தியாயிற்று" என்பார். பல நாள் திட்டமிட்டு மெனக்கெட்டு முயன்று முனைந்து செய்த காரியம் எதிர்பார்த்தபடி நிறைவேறுகிறது. மூன்று வருஷமாக எடுத்த மூன்று முயற்சி பலிக்காமல் கைவிட்டபொழுது அடுத்த உயர்ந்த கட்டத்தில் அற்புதமாக பலிக்கிறது.

ஒரு காரியத்தில் ஆசை வந்தால் அது ஆர்வமாகும். காரியம் மட்டும் நினைவிருக்கும். க்ஷணம் தரிக்காமல் செயல்படுவோம். அனைவரும் வேண்டாம் என்பதைச் செய்வோம். காரியம் கெட்டுப் போனபின் அடுத்தவரைக் குறைகூறுவோம். அடுத்த முறையும் இதையே செய்வோம். இது மனிதசுபாவம். Mrs.பென்னட் இதை மட்டும் தொடர்ந்து முழுமூச்சுடன் செய்து கூடிவந்த திருமணத்தைக் கெடுத்தார். சிறுபெண் ஓடும்படியாயிற்று. மற்றவர் பெருமுயற்சியால் கெட்டது விலக்கப்பட்டபின்னும் அதையே வற்புறுத்திச் செய்கிறார். பொறாமையால் மிக வேண்டியவருக்குக் கெடுதல் செய்தவர் முனைப்பாகச் செயல்பட்டார். முனைப்பு முதலில் வெற்றி பெற்றது. பிறகு தலைகீழாகப் போயிற்று. எவருக்குக் கெடுதல் செய்தாரோ, அவரை வணங்கி முனைந்து நாடி நட்புக் கொண்டாடவேண்டி வந்தது. காலின்ஸ் கோமாளி, தான் பெறப்போகும் எஸ்டேட் அந்தக் குடும்பத்தை விட்டுப் போகக்கூடாதுஎன்ற நல்ல எண்ணத்தால் அதிபுத்திசாலியான எலிசபெத்தை மணக்க முயன்றது முனைந்து செய்த கோமாளியின் அறிவுகெட்ட நல்லெண்ணம். அது எப்படி முடிந்தது? எலிசபெத் மீது நல்லெண்ணமுள்ள ஷார்லோட்டை மணப்பதிலும், எலிசபெத் சொத்து ஷார்லோட் பெறுவதிலும், எலிசபெத் பெம்பர்லியைப் பெறுவதிலும் முடிந்தது.

இளம்பெண் எலிசபெத் பார்ட்னரில்லாமல் உட்கார்ந்து இருக்கிறாள். அவளோடு டான்ஸ் ஆடச் சொல்கிறான் பிங்லி. அபிப்பிராயமில்லாவிட்டால் பேசாமலிருக்கலாம். அவள் காதில் விழும்படி "அவள் பரவாயில்லை" என்று பேசினான் டார்சி. அதன் விளைவு என்ன? அடுத்த முறை அவளை நாடி டான்ஸ் ஆட அழைத்தான், மறுத்துவிட்டாள். அடுத்த முறை ஒத்துக்கொண்டு டார்சி கோபத்தைக் கிளறும் வகையில் பேசினாள். அடுத்த முறை தன் வீட்டிற்கு எலிசபெத் வந்தபொழுது டான்ஸ் ஆட அழைத்தான், இருமுறை, மும்முறை அழைத்தான். "நீங்கள் சொல்வது எனக்குக் கேட்கிறது. எனக்கு இஷ்டமில்லை" என்றாள். 4 மாதம் கழித்து "என்னைத் திருமணம் செய்துகொள்" எனக் கேட்டபொழுது பதில் பரவாயில்லையென வரவில்லை. நான் மணக்கும் தகுதி உனக்கில்லை எனப் பதில் வந்தது. எனக்குத் தகுதியுண்டுஎன விவரமாக எழுதி மன்னிப்புக் கேட்டு, பெம்பர்லிக்கு வந்தபொழுது மனம் உருகி இதமொழி கூறி அவளிருப்பிடம் சென்றபொழுது லிடியா ஓடிய செய்தி அறிந்து, போகக் கூடாத இடம் போய், பேசக் கூடாதவரிடம் பேசி, பரம விரோதியைச் சகலராக வரும்படி மீண்டும் கேட்டுப் பெரும் பணம் கொடுத்து லிடியாவை மணக்கச் செய்து மீண்டும் எலிசபெத்திடம் வந்து "இப்பொழுதாவது மனம் கனிந்துள்ளதா?" எனக் கேட்க வேண்டியதாயிற்று.

"பரவாயில்லை" என்ற முனைப்பு, பல கட்ட அதிர்ச்சி கொடுத்து ஏற்றுக்கொண்டால் போதும் என்ற நிலைக்குக் கொண்டு வந்தது.

  • முனைந்து ஜேன் இலண்டன் வந்த செய்தியை, பிங்லியிடம் மறைத்த டார்சி தானே முனைந்து மறைத்ததைக் கூறி மன்னிப்புக் கேட்க வேண்டியதாயிற்று.
  • எலிசபெத் தகப்பனாரிடம் லிடியாவை பிரைட்டனுக்கு அனுப்ப வேண்டாம்எனக் கூறியபொழுது, முனைந்து விக்காமைப்பற்றி தானறிந்த சேதியை மறைத்தாள். அவன்மீது அவளுக்குள்ள ஆசை லிடியாவில் பூர்த்தியாகி, குடும்பம் சர்வ நாசமடையும் நிலை எழுந்தது.
  • தனக்கு திருமணமில்லைஎன்ற நிலையில் எலிசபெத் டார்சியை மணக்கவேண்டும், பிங்லி ஜேனை மணக்கவேண்டும்என்ற நல்லெண்ணம் நினைத்தபடி ஷார்லோட்டிற்குப் பூர்த்தியாயிற்று. யார் மீது தனக்கு நல்லெண்ணம் இருந்ததோ அவர் விலக்கிய வரனை ஷார்லோட் மணந்து எலிசபெத் சொத்தைத் தான் பெறும்படி அமைந்தது.
  • நல்லெண்ணத்தால் எலிசபெத்தை, சுற்றுப் பிரயாணத்திற்கு கார்டினர் அழைத்தார். அது பெம்பர்லியில் டார்சியை சந்திக்கும்படியாயிற்று. Mrs.பென்னட்டை விலக்கிய பெம்பர்லியை உரிமையுடன் அனுபவிக்க Mrs.கார்டினருக்கு அமைந்தது.
  • உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யும் வழி விக்காம் ஜார்ஜியானாவைக் கடத்த முனைந்தான். அது எதில் முடிந்தது? அவமானப்பட்டு, உள்ள வேலை போய், மண்ணாங்கட்டி லிடியாவை மணக்க நேரிட்டது.
  • முனைந்து செயல்பட்டாலும் எண்ணம் நல்லதானால், பலன் நல்லதாக இருக்கும். எண்ணம் கெட்டதானால் பலன் கெட்டதாகும்.
  • விக்காம் வளர்ந்ததும், படித்ததும், பெற்றதெல்லாமும் பெம்பர்லியால், எலிசபெத்தை சந்தித்தவுடன் பெரும்பொய்யை விரும்பி, முனைந்து, புனைந்து, சொன்னான். இவனுடைய வண்டவாளம் முழுவதும் எலிசபெத்திற்குத் தெரியும்நிலை எழுந்தது.
  • மேரி நன்றாகப் பாடுவாள். நடனசபையில் அவளைப் பாட எவரும் அழைக்கவில்லை. அழைப்பில்லாமல் பாட முன்வருவது அநாகரீகம். அவள் முனைந்து போய் பாடுகிறாள். தகப்பனார் வந்து "பாடியது போதும், எழுந்து வா'' என அழைக்கிறார். ஜேனும், எலிசபெத்தும் பிங்லியையும், டார்சியையும் மணந்தனர். லிடியா விக்காமை மணந்தாள். கிட்டி பிங்லி குடும்பத்துடன் நெருங்கிப் போகிறாள். முனைந்த மேரி தனியாக விடப்படுகிறாள்.
  • காலின்ஸ் லாங்பார்ன் வந்தபொழுது விஷமமாக பென்னட் அவனை லேடி காதரீனைப்பற்றிச் சீண்டுகிறார். அந்த முனைப்புக்குப் பதில் காலின்ஸ் கடிதமாக வருகிறது. லிடியா ஓடிப்போனபொழுது காலின்ஸ் நிந்தனையாகக் கடிதம் எழுதி தான் அந்த அவமானத்தினின்று தப்பித்துக் கொண்டதாகக் கூறுகிறான். அச்செயலின் பலன் அத்துடன் முடியவில்லை. டார்சியைப்பற்றி மீண்டும் ஒரு முறை கடிதம் எழுதி எச்சரிக்கிறான்.

    கேலியான முனைப்பு கேலியில் முடிகிறது.

    காலின்ஸ் எழுதிய கடிதங்களின் விளைவு லேடி காதரீன் கோபாக்னி இனி தாங்க முடியாமல் லாங்பார்ன் வந்து டார்சி, பிங்லிமுன் தன் கோமாளித்தனத்தை வெளியிடும்படியாயிற்று.

  • லேடி காதரீன் எடுத்த காரியம் - முனைந்தது - அவள் எதிர்பார்த்ததிற்கு எதிராக எலிசபெத் திருமணத்தை உடனே முடித்தது.
  • டார்சி விக்காமுக்கு £3000 கொடுத்தான். இது டார்சி தானே செய்த காரியமில்லை. விக்காம் கேட்டுப் பெற்றது. முனைந்தது விக்காம். உடந்தையானது டார்சி. விளைவு என்ன? £30,000 ஜார்ஜியானா மீதுள்ளது. விக்காம் அதைப்பெற முடிவுசெய்து செயல்பட அஸ்திவாரமானது டார்சி கொடுத்த 3000 பவுன். இது அவனே முன் வந்து செய்யாத காரியம்என்பதால் விக்காம் புறப்படும்முன் டார்சி விஷயமறிந்து ஜார்ஜியானாவைக் காப்பாற்ற முடிந்தது.
    • திறமையும் கடமையும் உள்ள இடத்தில் முனைவது பலன் தரும்.
    • பெற்றோர் கர்மம் உள்ள இடத்தில் பெருமுயற்சிக்குச் சிறுபலன் வரும். பெற்றோர் கர்மம் நிலைக்கும்.
    • ஆசைப்பட்டு, அவசரப்பட்டு முனைவது, அவதிப்பட்டுப் பொறுமையாகச் சீர் செய்யும்படி முடியும்.
    • தெளிந்த நல்லெண்ணம் உயர்ந்த பலனைத் தரும்.
    • தனக்கில்லாவிட்டாலும் பிறர் பலன்பெற முனைவது தனக்கில்லாத உயர்வைத் தேடிவந்து தரும்.
    • திருட்டுத்தனமாக கபடமான உள்ளத்தால் செய்வது மானம் போய் எதிரியிடம் மண்டியிடும்படி அமையும்.
    • காரியத்தைத் தட்டிக் கழிக்க எடுக்கும் முடிவு சிறுபலனுக்காகச் செய்தாலும் பெரும்பொறுப்பைப் பாரமாகக் கொண்டு வரும்.
    • யோகத்திற்கு முனைவது பொருந்தாது.
    • வாழ்க்கைக்கு நல்லெண்ணத்தில் முனைவது பொருந்தும்.
      அதுவும் செய்யாமலிருக்கும் பொறுமை ஆன்மீகப்பலன் தரும்.

********

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
நம்மை மாற்றிக் குறைகளை நீக்கலாம். அருளால் வரும் குறைகளை அதுபோல் மாற்ற முடியாது. அடுத்த - உயர்ந்த - நிலையில் அவற்றைத் திருத்த வேண்டும்.
 
அருளால் குறை வரும். நாம் உயர்ந்தால் அது திருந்தும்.
 
*******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
வாழ்வு நிலைக்கு மேற்பட்ட முன்னேற்றம் பிரச்சினையற்றிருக்கும். அல்லது நம் சக்திக்குட்பட்டு முயற்சி அமையும். வாழ்வு நிலையை முன்னேற்றம் மீறினால், சக்திக்குட்பட்ட முயற்சியானாலும் பிரச்சினை எழும்.
 
நிலையை மீறிய முன்னேற்றம் பிரச்சினை தரும்.
 
*******



book | by Dr. Radut