Skip to Content

02. மறுப்பு

மறுப்பு

N. அசோகன்

நம்மிடையே பல பேருக்கு மறுத்துப் பேசக்கூடிய குணம் இருப்பதைக் காணலாம். ஆங்கிலத்தில் இதை நெகட்டிவிசம் என்று கூறுவார்கள். அதிலும் குறிப்பாக, சிலபேர் எதையும் மறுத்துப் பேசுவார்கள். இப்படிபட்டவரிடம் அவர் முன்பு நம்மிடம் சொன்ன கருத்தை இப்பொழுது அவரிடம் நினைவுப்படுத்தினால் அதையும் இப்பொழுது மறுத்துப் பேசுவார். இப்படி மறுத்துப் பேசும் குண விசேஷத்தினுடைய மூலம் என்ன, அதன் இயற்கை என்ன என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அறிவில் தெளிவு பிறப்பதற்குமுன்னால் மனதில் குழப்பம் எழும். குழப்பத்திலிருந்து மறுப்பு எழும்.

ஆகவே மறுத்துப் பேசுவது சிந்திப்பதின் துவக்கம் என்று சொல்லலாம். இந்த மறுத்துப் பேசும் குணத்திற்கு ஓர் உச்சக்கட்டம் உண்டு. அதாவது வாழ்நாள் முழுவதும் தேடிய விஷயம் கைக்கூடி வரும்பொழுது அதையும் வேண்டாம்என்று சொல்லக்கூடிய இடமும் மனிதனிடம் உண்டு. இதற்கும் காரணங்கள் உண்டு.

  1. தேடிவரும் அதிர்ஷ்டத்தையும் வேண்டாம் என்பவர்களுடைய பிறப்பிலேயே தரித்திரம் நிரம்பி இருக்கும்.
  2. பெரும்பதவிக்கு ஆசைப்பட்டவர் அது கூடிவரும்பொழுது அதற்குண்டான, அப்பதவிக்குண்டான நிர்வாகத்திறன் தம்மிடம் இல்லையென்று உள்ளூர உணர்ந்திருப்பார்.
  3. “வேண்டாம்” என்று மறுப்பதிலும் ஒரு ருசி இருக்கிறது.
  4. இது மனிதசுபாவத்தில் உள்ள ஒரு முக்கிய அம்சமாகும்.

ஒரு பட்டப்படிப்புப் படித்த இளைஞர்க்கு அப்படிப்பை முடிக்கும் முன்னரே வேலை கிடைத்தது. இருந்தாலும் இந்த வேலை வேண்டாம் என்று சொல்லிவிட்டு மேற்படிப்பைத் தொடர்ந்தார். அதை முடித்துக் கொண்டு Gazette நிலையிலுள்ள officer வேலையை நாடினார். 1970இல் ரூ.650/- சம்பளத்துடன் அப்பதவியும் கிடைத்தது. இவருடன் கூட படித்தவர்கள் எவரும் இத்தகைய உயர்ந்த Gazette பதவிக்கு வரவில்லை. அவருடைய வாழ்க்கை லட்சியமே ரூ.1,000/- சம்பளத்தை எட்ட வேண்டும் என்பதாகதான் இருந்தது. ஆனால் அந்தச் சம்பளம் சர்க்கார் பணியில் கிடைப்பதற்கு அப்போது வாய்ப்பில்லை. ஆனால் Tea மற்றும் Coffee எஸ்டேட்டுகளில் மானேஜராகப் பணிபுரிபவர்களுக்குமட்டும் அந்த வாய்ப்பு இருந்தது. இருந்தாலும் இந்தச் சம்பளத்திற்காக சர்க்கார் வேலையை விட்டு விட்டு எவரும் Tea Estateற்குப் போகவும் மாட்டார்கள். இவர் தம்முடைய படிப்பை 1950இல் முடித்திருந்தார். 1970வரை ஏதேனும் புதுவேலைக்கு விண்ணப்பம் செய்து கொண்டேயிருந்தார். இப்பொழுது கடைசி முயற்சியின்பொழுது சர்க்காரிலேயே 2000/- ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்தது. கேட்டது கிடைத்தாலும் உள்ளூர இதை ஏற்றுக் கொள்வதற்கு அவருக்குத் தயக்கம். அதனால் 1300/- ரூபாய் சம்பளம் கிடைக்கக் கூடிய வேறு ஒரு புதிய சர்க்கார் வேலையில் சேர்ந்தார். மெடிக்கல் certificate வாங்கிக் கொடுக்க வேண்டியதாயிற்று. அவரைப் பரிசோதித்த Doctorரோ இதயம் பலகீனமாக இருக்கிறதுஎன்று எழுதிவிட்டார். வேறு ஒரு டாக்டரிடம் காண்பித்து அப்படி ஒன்றும் கோளாறு இல்லைஎன்று வேறு ஒரு certificate வாங்கி வந்தார். ஆனால் சர்க்காரோ இரண்டாவது டாக்டர் கொடுத்த certificateஐ மறுத்து முதல் டாக்டர் கொடுத்த certificate அடிப்படையில் வேலையில்லை என்று கூறிவிட்டது.

விரும்பியது கைக்கூடி வரும்பொழுது ஆழ்மனதிற்கு அதை ரத்து செய்யும் குணம் உண்டு.

Hound of Heaven என்ற ஓர் ஆங்கிலக் காவியம் உண்டு. பக்தன் ஆண்டவனை அடைய வேண்டும்என்று வேண்டுகிறான். அவனுடைய வேண்டுதலுக்கு இணங்கி ஆண்டவனும் அவனைத் தேடி வருகிறான். ஆனால் அப்படித் தேடி வரும்பொழுது பக்தனோ ஆண்டவனிடம் அகப்படாமல் இங்கும் அங்கும் ஓடி ஒளிகிறான். அவனைச் சமாதானம்செய்து இறுதியில் ஆண்டவன் அவனைத் தன்னிடத்திற்கு அழைத்து போகிறான்.

ஆசை மேலிடும்பொழுது மனிதன் தன் நிலைமைக்கு மீறிக் கேட்கிறான். பல பேருக்குக் கிடைப்பதில்லைஎன்றாலும் ஒரு சிலருக்குக் கிடைக்கிறது. அப்படிப்பட்ட நேரங்களில் கேட்டவர்கள் மறுப்பதற்குப் பல காரணங்கள் உண்டு. ஜாதகத்தில் தரித்திர அம்சம் உள்ளவர், அம்மாதிரியே ஜாதகத்தில் தரித்திரம் அமைந்த பெண்ணை மணந்து இருந்த சொத்தை இழந்தார். அப்படி இழந்ததையும் காப்பாற்றி அதிர்ஷ்டம் அவர் வாழ்க்கையில் மலர்ந்தபொழுது வேண்டாம்என்று விலக்கினார். வேறொரு தொழிலுக்கு வந்தார். அதில் அவர் போட்ட முதலை இரண்டே வருடங்களில் அருள் 30 மடங்காக உயர்த்தியது. என்ன நினைத்தாரோ தெரியவில்லை இதுவும் வேண்டாம்என்று விலகிப் போனார். The Life Divine படிப்பதால் தொழிலில் 800 மடங்கு அபிவிருத்தி வந்தபொழுதும், வறண்டு போயிருந்த வாழ்க்கை மலர்ந்த பொழுதும், பிடித்த சனியன் விலகியபோதும், எதைத் தீவிரமாகத் தேடினோமோ அது கைமேல் கிடைத்தபொழுதும் வேண்டாம்என்று மறுத்தவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள்.

மறுப்பு மனிதசுபாவம்.

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
வேலையிருந்தால் உறவு நீடிக்கும். உணர்வால் நட்பு நீடிப்பதில்லை. ஏனெனில் அடுத்தவரை ஆளும் நினைப்பு எப்பொழுதும் வரலாம். அக்குறையில்லாவிட்டாலும் உணர்வின் தீவிரம் குறைந்தால் நட்பு மறையும். தீவிரம் சற்று நேரத்திற்கு மேலிருக்காது.
 
உறவு நீடிக்க வேலை அவசியம்.

*****



book | by Dr. Radut