Skip to Content

09. பிரம்மம், புருஷா, ஈஸ்வரா - மாயா, பிரகிருதி, சக்தி

"அன்பர் உரை"

பிரம்மம், புருஷா, ஈஸ்வரா - மாயா, பிரகிருதி, சக்தி

(இராணிப்பேட்டை தியான மையத்தில் 15.8.2003 அன்று திருமதி. வசந்தா லக்ஷ்மி நாராயணன் நிகழ்த்திய உரை).

The Life Divineஇல் உள்ள ஒவ்வோர் அத்தியாயத்திற்கும் ஒரு தனிச்சிறப்புண்டு. இந்த அத்தியாயத்திற்கு - பிரம்மம், புருஷா, ஈஸ்வரா - உள்ள முக்கியத்துவம் முழுமை. முழுமையை 3 அத்தியாயங்களில் எடுத்துரைத்தாலும் முழுமையை முழுமையாகக் கூறும் அத்தியாயம் இது. முழுமை என்ற கருத்து, அனுபவம் உலகுக்கே புதியது என்பதால், அதை எடுத்துரைப்பது கடினம். முழுமையைச் சொல்லால் விவரிக்க முயல்வது மைக்ராஸ்கோப்மூலம் மனிதனைப் பார்ப்பது போலாகும். ஒருவர் உயரத்தை மட்டும் கேட்டு அவரை அறிய முயல்வது போலாகும். அத்தியாயத்தின் முதலிரு பக்கங்களில் உலகில் ரிஷிகள் இதுவரை பிரம்மத்தைப் பற்றிக் கூறிய அனைத்தையும் எழுதுகிறார். இவையெல்லாம் பகுதியானவை. இவற்றை ஒன்று சேர்த்து முழுமையை அறியலாம் என அத்தியாயத்தை ஆரம்பிக்கிறார்.

நாம் பூமி மீது நடக்கிறோம். நாம் பூமியில் பகுதி. நமக்கு கண்ணுக்கு எட்டியவரை தெரியும் பூமியும் பகுதி. பூகோளத்தில் பூமி உருண்டை எனப் படிக்கிறோம். பகுதியான மனிதன், பகுதியான பூமி மீது உலவி, முழுமையான பூமியைக் காண முடியுமா? அறிவு, ஆராய்ச்சிமூலம் கண்டதை ஏற்பதற்கு முடியும். இன்று வானவெளியில் சஞ்சாரம் செய்பவர் பூமியின் முழுமையை, கோள வடிவைக், காண முடிகிறது. இந்த அத்தியாயம் பிரம்மத்தின் முழுமையை பூகோளம், பூமி உருண்டை என்று ஆராய்ச்சிமூலம் கூறுவதுபோல் கூறுகின்றது. அதை அறிவு ஏற்கலாம்.

வானவெளிக்குப் போக முடிந்ததுபோல் ரிஷி Cosmic Consciousness பிரபஞ்சத்தை, அதன் ஜீவியத்தை எட்டலாம். பிரபஞ்ச ஜீவியம் விஸ்வரூப தரிசனத்தைக் கடந்தது. அலிப்பூரில் பகவான் பெற்றது நாராயண தரிசனம். அந்நிலையில் பூமியின் முழுமையை வானவெளியிலிருந்து பார்ப்பதைப்போல் பிரம்மத்தின் முழுமையைக் காணலாம். ஒரு கம்பெனிக் கணக்கை எழுதுபவர் கணக்கே கம்பெனி என நினைத்தால், அதன் மூலதனமே கம்பெனியென மற்றொருவர் கருதினால், கட்டிடங்களே கம்பெனி என வேறொருவர் கருதினால், அவையெல்லாம் பகுதிகள். அனைத்தும் சேர்ந்ததே கம்பெனி எனப்படும் என நாம் அறிவோம்.

இவ்வத்தியாயத்தின் கருத்துகளைவிட பகவான் என்ன கூற முயல்கிறார் என நாம் மனத்தை விலக்கி ஆத்மாவால், வளரும் ஆத்மா என்ற சைத்தியப்புருஷனால் அறிய முயன்றால், முயற்சி தோல்வியானாலும், முயன்றதற்குரிய பலன் பெரியது. அப்பலன் பிரம்மம் என்ற முழுமையை உணர்வது. USAஇல் 400 ஆண்டுகளுக்கு முன் போயிறங்கியவர் கண்டது காடு. 50, 80 தலைமுறை உழைப்பு, காட்டை நாடாக்கி, உலகத் தலைவனாக்கி உள்ளது.அத்தனை modern technology நவீன டெக்னாலஜியும் இந்தியாவில் இன்று கிடைப்பதால் அவர்கள் 400 ஆண்டுகளில் செய்து முடித்ததை நாம் 40 ஆண்டுகளில் முடிக்கலாம் என்ற கருத்து பிரம்மம் முழுமை என்ற ஆன்மீகச் சத்தியத்தை உலக வழக்கில் சுபீட்சமாக எடுத்துக்காட்டுவதாகும்.

பிரம்மம் முழுமை என்ற பெரிய உண்மை ஆன்மீகத்திலிருந்து வாழ்வுக்குப் பல்வேறு ரூபங்களில் வரும்பொழுது காலம் சுருங்கும் என்பது ஒன்று. காலத்தைச் சுருக்கிக் காரியத்தை முடிப்பவர், பிரம்மத்தின் முழுமையை ஒரு நாள் அறியக் கூடியவர்.

ஆன்மா உலகில் அவதரித்து உடலைத் தாங்கி உயிர் பெற்று மனத்தால் இயங்குவதை நாம் மனிதன் என்கிறோம். நாம் உடலைக் காண்கிறோம். இந்த உடலினுள் உயிரும் மனமும் இருப்பதாக அறிகிறோம். அவற்றினுள் ஆன்மா புதைந்து இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆன்மீக உண்மை என்னவென்றால் ஆன்மாவினுள் உடல் இருக்கின்றது. ஆன்மா உடலை ஏந்திச் செல்கிறது. ஆன்மா என்ற முழுமையில் உடல் என்பது பகுதி. நமக்கு உடல் மட்டும் தெரிகிறது, பகுதியை முழுமையாகக் கொள்கிறோம். முழுமை என்று ஒன்று இருப்பதாக நாம் அறிவதே இல்லை. குமார் என்பவருடைய பயோடேட்டா குமாரைப் பற்றிய விபரங்கள். அது குமார் அன்று. அவருடைய photoவில் அவரின் உருவம் இருக்கிறது, அவர் இல்லை. பிரம்மம் என்ற முழுமை பேர் என்ற பகுதியாகவும், photo என்ற பகுதியாகவும், வீடியோ என்ற பகுதியாகவும், பெரிய அளவிற்கு அவரைப் பற்றிக் கூறும் என்றாலும் எதுவுமே குமார் இல்லை. எல்லாம் குமாருடைய ஓர் அம்சம். மனத்தால் பிரம்மத்தைக் காணமுடியாது. மனம் காண்பது பெயர், photo, வீடியோ, எதுவும் குமார் அல்ல. குமாரை நேரடியாகக் கண்ணால் பார்க்கலாம், கையால் தொட்டு உணரலாம், பேசிப் பழகலாம். பெயருடனோ, photoவுடனோ, வீடியோவுடனோ, உயிருள்ள தொடர்புகொள்ள முடியாது. மனத்தால் பிரம்மத்தை எட்டமுடியாது என்பதால் சமாதியில் பிரம்மத்தின் ஒரு அம்சமான புருஷனையோ, ஈஸ்வரனையோ காண்கின்றனர். சத்தியஜீவியம் பிரம்மத்தோடு நேரடியான தொடர்புள்ளது. அதற்கு இந்த மூன்று அம்சங்களும் சேர்ந்த முழுமை தெரியும். அதனால் ஜீவனுள்ள தொடர்புகொள்ள முடியும். சத்தியஜீவியம் பிரம்மத்தோடு தொடர்புகொள்வது குமாருடன் நாம் நேரடியாகத் தொடர்புகொள்வதாகும். மனம் நிஷ்டையில் பிரம்மத்தை அறிவது பெயரை அறிவது போலும், photoவை அறிவது போலும், வீடியோவைப் பார்ப்பது போலும் ஆகும்.

மனிதன் பிரம்மத்தை அறியமுடியாது என்றும் மனிதனே பிரம்மம் என்றும் கூறுகிறார்கள். மனிதனே பிரம்மம் என்றால் அவன் பிரம்மத்தை அறிய ஒரு வழி இருக்கும். மனிதன் பிரம்மத்தை அறிய முடியாது என்று சொல்வதற்குப் பதிலாக மனிதன் பிரம்மத்தை அறிந்துகொள்ளும் வழிகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று சொல்லலாம். மனிதனுடைய முக்கியமான கருவி மனம். அவன் அக்கருவிமூலமாகவே பிரம்மத்தை அறிய முயலுகிறான். ஆனால் பிரம்மத்தை அறியக்கூடிய கருவி அது அன்று. நமக்கு, கீதையும் பிரபந்தமும் முக்கியம். ஆனால் அவை முக்கியம் என்பதால் பரீட்சைக்கு உரியவை அந்தப் புத்தகங்கள் இல்லை. பரீட்சை பாசாக பாடப்புத்தகம் படிக்கவேண்டும். கீதையும், பிரபந்தமும் பயன்படா. கீதையும், பிரபந்தமும் பயன்படா என்றால் நூலகத்திலுள்ள உயர்ந்த பாடப்புத்தகங்களும் பரீட்சைக்குப் பயன்படா. கதைப் புத்தகங்களும் பயன்படா. பரீட்சைக்குப் பாடப்புத்தகம் மட்டுமே பயன்படும். அதுபோல் நாமே பிரம்மம் என்பதால் பிரம்மத்தை நாம் அறியமுடியும். மனம் உயர்ந்த கருவியாக இருந்தாலும் மனம் பயன்படாது. நாம் பேசும் மொழியும் அதற்குப் பயன்படாது. அதற்குரிய கருவியாகிய சத்தியஜீவியமும், வேத காலத்து மொழி போன்ற மொழியும் பயன்படும் என்று பகவான் ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார்.

சத்தியஜீவியத்திற்கும் மனிதனுக்கும் இடையே நான்கு லோகங்கள் உள்ளன. இந்த லோகங்களுக்கு உரியவர்கள் முனிவர், ரிஷி, யோகி, தெய்வம். தெய்வலோகத்தையும் சத்தியஜீவியத்தையும் பிரிப்பது ஒரு பொன் மூடி. தெய்வங்கள் சக்தி வாய்ந்தவை. அவற்றிற்கு ஸ்தூல உடல் கிடையாது. சூட்சும உடல் உண்டு. அந்த சூட்சும உடல் உலகின் அளவு (பூமியின் அளவிற்கு) இருக்கும். அது ஒரு லோகம். அவர்களின் பிறப்பிடம் சத்தியஜீவியம். முனிவர், ரிஷி, யோகி மூவரும் மனிதர்கள்.தவத்தால் உயர்ந்து தபோவலிமை பெற்றவர்கள். இவர்களுக்கு எல்லாம் ஸ்தூல உடல் உண்டு. தெய்வம் இவர்களைவிட உயர்ந்தது என்றாலும் தெய்வங்களால் இறைவனை அடையமுடியாது. தெய்வங்கள் இறைவனை அடைய விரும்பினால் மனிதப் பிறவி எடுக்கவேண்டும். தெய்வங்களுக்கு மனிதர்களிடம் கடமை இல்லை. மனிதன் இறைவனை அடைய முயல்வதைத் தடுக்கவும் செய்வார்கள். அந்தவகையில் ரிஷிகள் தெய்வத்தைவிட உயர்ந்தவர்கள் என்று கருதப்படுகிறார்கள். இறைவன் என்று சொல்வது சத்புருஷன் ஆகும். இதனுடைய அம்சங்கள் மூன்று. மனிதனிடம் ஜீவாத்மாவாகவும், பிரபஞ்சத்தில் பிரபஞ்சத்தின் ஆத்மாவாகவும், அதைக்கடந்த நிலையில் பரமாத்மாவாகவும் சத்புருஷன் இருக்கின்றது. மனிதன் தவத்தால் இறைவனை அடைய முயலும்போது மனம் பகுதியான கருவியானதால் அது தன் நிலை இழந்து சமாதியை அடைகிறது. சமாதியில் இறைவனை அடையும்பொழுது, இறைவனின் அம்சங்களில் ஏதாவது ஒன்றைத்தான் அவனால் காணமுடியும். அவர்கள் கண்டது முழுவதையும் சொல்லமுடிவதில்லை. சமாதியில் கண்டதால் விழிப்பில் அது நினைவு இருக்காது. அதுவும் அவர்கள் கண்டதில் ஒரு பகுதி. அதனால் இறைவனைக் காணலாம், விளக்கமுடியாது என்றனர். அப்படி அவர்கள் கூறியவற்றை 36 வகைகளாக இந்த அத்தியாயத்தில் கூறுகிறார். அவர்கள் கூறியது பகுதியாக இருந்தாலும் ஸ்ரீ அரவிந்தரின் கிருபையில் அதை மனத்தால் அறிந்தாலும் அப்பகுதிகள் சேர்ந்து முழுமையாகும். பகுதியை முழுமையாக்குவது ஸ்ரீ அரவிந்த தரிசனம். முழுமைக்கு ஜீவன் அளிப்பது அன்னையின் அருள். அதை முழுமையாக நிரந்தரமாகப் பெற மனம் தூய்மையாக, சத்தியத்தால் நிரப்பப்பட்டு இருந்தால் போதும். அந்தக் கூற்றுகளில் சில,

1. சர்வம் பிரம்மம்

2. மனிதன் பிரம்மம்

3. தெய்வங்கள் பிரம்மம்

4. விலங்குகளும், குழந்தையும், கல்லும், மண்ணும், மரமும் பிரம்மம்.

5. அவை பிரம்மத்தால் ஆனவை.

6. பிரம்மம் அவற்றுள் உள்ளது.

7. அவை பிரம்மத்துள் உள்ளன.

8. பிரம்மம் காலத்தைக் கடந்தது.

9. பிரம்மம் இடத்தையும் இடத்திலுள்ள அனைத்தையும் கடந்தது.

10. பிரம்மம் ஆனந்தமானது.

11. பிரம்மம் உலகை சிருஷ்டித்தது.

12. நாமே அந்த பிரம்மம்.

இவை எல்லாம் பகுதியாக இருந்தாலும் இவற்றை எல்லாம் சேர்த்து முழுமையாக்கும் திறமை நம்மிடம் உள்ளது. ஒரு மிஷினுடைய எல்லாப் பகுதிகளையும் தனித்தனியாக நம்மிடம் கொடுத்தால் சில பகுதிகள் மற்ற பகுதிகளோடு சேர்வதை நாம் காணலாம். நம்மால் அவற்றை எல்லாம் முறையாகச் சேர்க்கமுடியுமானால் பகுதியாகப் பெற்ற மெஷின் முழுமையாக மாறிவிடும். அதைச் செய்யக்கூடிய சக்தி ஆத்மா. ஆத்மா என்பது, ஆத்மாவாகவும் இருக்கலாம், வாழ்வில் செயல்படும் ஆத்மாவாகவும் இருக்கலாம். ஆத்மா ஜீவனிலிருந்து பிரிந்து இறைவனை அடையும் திறமை உடையது. வாழ்வில் உள்ள ஆத்மா இறைவனாக மாறக்கூடியது. மேற்கூறிய கூற்றுகளை மனதில் ஏற்றுக்கொண்டால் மனத்திலுள்ள சைத்தியப் புருஷன் வெளிப்பட்டு இறைவனை முழுமையாக அறிவான். சைத்தியப் புருஷன் உயிரிலும், உடலிலும் வெளிப்பட்டால் மனிதன் சத்திய ஜீவன் ஆவான். ஏன் மனிதனால் பிரம்மத்தை அறிய முடிவதில்லை? அறியவே முடியாது என்பதுதான் முடிவான உண்மையா? என்றால் அறியமுடியும். மனிதன் அதைப் பொருட்படுத்துவது இல்லை என்று பகவான் கூறுகிறார். நாம் நம்மூரில் குடி இருக்கிறோம். நம்மால் தமிழ்நாடு முழுவதும் அல்லது இந்தியா முழுவதும் பார்க்கமுடியுமா என்றால், எவரும் முடியாது என்று சொல்லமாட்டார்கள். முடியாது என்பது இல்லை. அதற்கு உரிய முயற்சி எடுப்பது இல்லை என்று நாம் சொல்கிறோம்.


 

தொடரும்.....

****


 



book | by Dr. Radut