Skip to Content

10.இதுவோ உம் ரௌத்திரக் கருணை!

"அன்னை இலக்கியம்''

இதுவோ உம் ரௌத்திரக் கருணை!

                                                      (சென்ற இதழின் தொடர்ச்சி....)                      

                                                                                    இல. சுந்தரி

ஒவ்வொரு நாளும் வகுப்பு முடிந்தவுடன், உமாவும் ப்ரீத்தியும் தம் அந்தரங்க உணர்வுகளைப் பரிமாறியவண்ணம் தத்தம் தெருவிற்குப் போகும் கிளை பிரியும்வரை செல்வர். இவர்கள் பேச்சின் அடிப்படை இறையார்வம். எனவே, மற்றைய பெண்களுடன் பேச இவர்களுக்குப் பொருந்துவதில்லை. எனவே, உமா இன்று தனித்து விடப்பட்டது போலுணர்ந்தாள். ஏன் இன்று ப்ரீத்தி வரவில்லை? என்னவாக இருக்கும்? என்று அறிய மனம் விழைந்தது. சென்று பார்த்து வரவும் ஆவல் எழுந்தது. ஆனால் ப்ரீத்தி ஆசிரமவாசி என்பதால் தன் வீட்டாரை எண்ணித் தயக்கம் எழுந்தது. அக்காலங்களில் பாண்டிச்சேரி மக்கள் பெண்களை ஆசிரமத்திற்கு அனுமதிப்பதில்லை. அரிதாகச் சிலரே அன்னையின் அருமை அறிந்திருந்தனர். உமாவின் வீட்டாரும் ஆசிரமம் பற்றிச் சரியாகப் புரிந்துகொண்டிருக்கவில்லை. இந்நிலையில் மாமன் வீட்டிற்குச் சிறிது காலம் வந்துள்ள தான் யாரிடமும் அகப்பட்டுவிடக் கூடாதே என்று உமாவுக்கு அச்சம். அச்சம் இருப்பினும் அதையும் மீறி ஆவலும் உந்தித் தள்ளியது. தோழியின் வீட்டை அடையாளம் கேட்டறிந்திருந்தாள் என்றாலும் இடம் புதிதானதால் சிறிது தயக்கம். அவள் ஆர்வம் அவள் தயக்கத்தைத் தள்ளித் தகர்த்தெறிந்துவிட்டு அவளை ப்ரீத்தியின் இருப்பிடம் நோக்கி இழுத்துச் சென்றது.

தெருவில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். மெல்ல அருகே சென்று, "இங்கு ஆசிரமவாசிகள் குடியிருப்பு எது என்று சொல்லமுடியுமா?'' என்று மெதுவாகக் கேட்டாள்.

"அதில் உங்களுக்கு யாரைப் பார்க்கவேண்டும்?'' என்று ஒரு பையன் சுறுசுறுப்பாய்க் கேட்டான்.

"ப்ரீத்தி என்று ஒருவரை.....'' என்று தயங்கியவண்ணம் கூறும் முன்னே,

"! நீங்கள் அக்காவின் பிரெஞ்சு கிளாஸ்மேட்டா?'' என்றான் சிறுவன்.

"! நீதான் மனோஜா?'' என்றாள் உமா. முன்பின் பார்த்திராத இவர்கள் அன்னையின்பால் அறிமுகமானார்கள். மனங்கலந்த அன்புடன், "வாங்க அக்கா, ப்ரீத்தி அக்கா உள்ளே இருக்காங்க'' என்று அவர்கள் வீட்டிற்குள் அழைத்துச் சென்று,

"அக்கா! உன் ப்ரெண்ட் வந்திருக்காங்க'' என்று ப்ரீத்திக்குக் குரல் கொடுத்துவிட்டு விளையாட ஓடிவிட்டான் மனோஜ்.

உமா மெல்ல உள்ளே சென்றாள். உள்ளே, ஒரு சாய்வு நாற்காலியில் இரண்டு கைகளுக்கும் தலையணையை அண்டக் கொடுத்து சாய்ந்து படுத்திருந்த ப்ரீத்தி, உமாவைக் கண்டவுடன் அன்பால் முகம் மலர்ந்து, "உமாவா? வா, வா'' என்று ஆர்வம் பொங்க அழைத்தவண்ணம் எழுந்திருக்க முயன்றவள் இயலாமல் உடலின் நலிவு முகத்தில் தெரிய மறைக்க முயன்றாள். ஏதோ கடும் வலியால் பாதிக்கப்பட்டதுபோல் குரலிலும் அசைவிலும் தெரிந்தது.

"என்ன ப்ரீத்தி? உடம்புக்கு ஏதேனும் சுகவீனமா?'' என்று ஆதரவுடன் விசாரித்தவண்ணம் அருகில் வந்தாள் உமா.

"ஆமாம் உமா. கையில் கட்டி. தோளும், கையில் மேல் பகுதியும் இணையும் பந்து கிண்ண மூட்டின் உட்பகுதியை லேசாகக் கையை உயர்த்திக் காட்டினாள். கையைத் தூக்க முடியாமல் வலி எழவே துடித்தாள். இத்துடன் எல்லா வேலைகளும் செய்து கொண்டு இருக்கிறேன். வலியோ பொறுக்கவில்லை. எப்படி வெளியே வருவது?''என்றாள் ப்ரீத்தி.

"டாக்டரிடம் போகவில்லையா, ப்ரீத்தி? இவ்வளவு வலியுடன் பேசாமலிருந்தால் எப்படி?'' என்றாள் உமா.

ப்ரீத்தி ஒன்றும் பேசாதிருந்தாள்.

"ப்ரீத்தி! நான் வேண்டுமானால் என் மாமாவிடம் இது பற்றி விசாரித்து ஏதாவது மருந்து கொண்டு வரட்டுமா?'' என்றாள் பரிவாக.

"ஏன், உன் மாமா ஒரு டாக்டரா என்ன?'' என்றாள் ப்ரீத்தி.

"இல்லையில்லை. அவர் டாக்டரில்லை. இது மாதிரி கட்டிக்கெல்லாம் கைவைத்தியம் என்று ஏதாவது மருந்து சொல்லக் கூடியவர். வெளியே சொல்ல வெட்கப்படுகிறாயே என்று இந்த யோசனை தோன்றியது''.

"இல்லை உமா. விளையாட்டிற்குக் கேட்டேன். என் கட்டி பற்றி நீ யாரிடமும் தயவுசெய்து சொல்லிவிடாதே'' என்றாள் ப்ரீத்தி.

"சரி! இப்போது சிறிது வெந்நீர் ஒற்றடம் கொடுக்கவா? சற்று இதமாகவேனும் இருக்கும்'' என்று அன்பு பொங்க உமா கூற, மிகுந்த நன்றி பொங்க அவளைப் பார்த்தாள் ப்ரீத்தி.

"சரி உமா. உள்ளே ஸ்டவுக்குப் பக்கத்தில் தீப்பெட்டி இருக்கிறது. கெட்டிலில் தண்ணீர் இருக்கிறது'' என்று அடையாளங்கள் கூற, உமாவும் கெட்டிலில் நீரைக் காய்ச்சி ஒரு குவளையில் ஊற்றி, டர்க்கி டவலுடன் வந்து அருகில் அமர்ந்து இதமாக ஒற்றடம் கொடுத்தாள். எத்தனை இதமாக உணர்ந்தாள் ப்ரீத்தி.

"ப்ரீத்தி! நீ ஒரு நல்ல டாக்டரைப் பார்க்கக் கூடாதா?'' என்று மீண்டும் பரிவுடன் கேட்டாள்.

"ஏன், நீதான் ஒரு டாக்டரிடம் என்னை அழைத்துப் போயேன்?'' என்று விளையாட்டாய்க் கேட்டாள் ப்ரீத்தி.

"நான் என்ன செய்ய ப்ரீத்தி? எனக்கு ஆசைதான். ஆனால் ஆசிரமம், ஆசிரமவாசி என்றாலே என் வீட்டார்க்குப் பிடிக்காதே ப்ரீத்தி'' என்றாள் வருத்தத்துடன் உமா.

"சீச்சி. வேடிக்கைக்குச் சொன்னேன் உமா. நீ அழைத்தாலும் நான் வரமாட்டேன் தெரியுமா? மதரே என்னை டாக்டரிடம் போகச் சொல்லி நான் போகவில்லை. என் தோழியின் அண்ணனே டாக்டர்தான். அவரிடம் போக வெட்கப்பட்டுக்கொண்டுதான் போகவில்லை''.

"டாக்டரிடம் போகாமலிருப்பதற்கு அது மட்டும் காரணமில்லை. கத்தியின்றி, ரத்தமின்றி கணப்பொழுதில் குணமாக்கும் மிகச்சிறந்த டாக்டரை எனக்குத் தெரியும். அவருடைய மருத்துவ உதவிக்குத்தான் காத்துக்கொண்டிருக்கிறேன். அவர் எங்கள் ஆஸ்ரமத்தில் இருக்கிறார். அவர் மனது வைத்தால் போதும்'' என்று கூறும்போதே அவள் குரல் உறுதி, நம்பிக்கை அந்த ஒருவருக்கான ஏக்கம் யாவும் தெரிந்தது.

"யாரந்த விசித்திர டாக்டர்?'' என்று வியப்புடன் உமா கேட்டாள்.

"என் மருத்துவம் முடிந்து, கட்டி குணமான பிறகு அவரை உனக்குக் காட்டுகிறேன், உமா. அதுவரை காத்திரு'' என்றாள் ப்ரீத்தி.

"இறைவா! அந்த டாக்டரின் உதவி ப்ரீத்திக்கு விரைவில் கிடைக்க அருள் செய்'' என்று கூறிவிட்டு உமா விடை பெற்றாள்.

இரண்டு தினங்களுக்குப் பிறகு, ப்ரீத்தி வகுப்புக்கு வருகிறாள். சற்று தூரத்தில் வரும்போதே அவளைப் பார்த்துவிட்ட உமா மலர்ச்சியாகிவிட்டாள். ப்ரீத்தியின் முகம் தெளிவாகவும், உற்சாகமாகவுமிருந்தது.

வகுப்புக்கு வெளியிலேயே ப்ரீத்தியை எதிர்கொண்டு அவள் கையைப் பற்றியவள், சட்டென்று கையின் அசைவை ஒரு கணம் உற்றுநோக்க, ப்ரீத்தி புரிந்துகொண்டு, "! கட்டியைப் பார்க்கிறாயா? கரைந்துவிட்டது. கரைப்பார் கரைத்தால் கட்டியும் கரையும் என்பது என்வரை மெய்தான்'' என்று சிரித்துக்கொண்டே ப்ரீத்தி கூற இருவரும் ஏக மகிழ்வாய் வகுப்பறையில் நுழைந்தனர்.

"ப்ரீத்தி! ஒன்று அறிய ஆவலாயிருக்கிறது'' என்றாள் உமா, மெல்லத் தயங்கியவாறு.

"தெரியும், தெரியும். அந்த ஒன்று என்னவென்று. என்னைக் குணப்படுத்திய டாக்டரைத்தானே யாரென்று தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறாய்?'' என்று புன்னகையுடன் ப்ரீத்தி கேட்க, 'ஆம்' என்பதுபோல் தலையசைத்தாள் உமா.

அதற்குள் ஆசிரியர் வந்துவிடவே, இருவரும் வகுப்பில் கவனம் செலுத்தினர். உமா மிகுந்த உற்சாகத்துடன் பதிலளிப்பதைக் கண்ட ஆசிரியர், "! இன்று உங்கள் தோழி வந்துவிட்டாரா?'' என்று கேட்க, உமா வெட்கமாய்ச் சிரித்தாள்.

"ஏன் உமா ஆசிரியர் அப்படிச் சொல்கிறார்?'' என்று ப்ரீத்தி மிக மெல்லியக் குரலில் கேட்க, "அதுவா? நீ நேற்றுவரை வாராமல் எனக்கு வகுப்பில் ஆர்வம் இல்லாமருந்ததைச் சுட்டிக்காட்டுகிறார்'' என்றாள். இருவரும் மென்மையாய்ச் சிரித்துக்கொண்டனர்.

வகுப்பு முடிந்து வீட்டிற்குப் புறப்பட்டனர். "ப்ரீத்தி, அந்த அதிசய டாக்டர் யாரென்று சொல்லமாட்டாயா? எத்தனை ஆர்வமாய்க் கேட்கிறேன்?'' என்று சிணுங்கினாள் உமா.

"சரி, சரி. சொல்லிவிடுகிறேன். நீ அழுதுவிடாதே'' என்று அவளைக் கேலிசெய்தவாறே தொடங்கினாள். "நேரே நம் ஸ்வீட் மதரிடம் சென்றேன். கட்டியில் சீழ் வடிந்ததையும், நாளம் சிவந்திருப்பதையும் காட்டினேன். பொறுக்க முடியாத வேதனையைக் கூறி, என்னைக் காப்பாற்றமாட்டீர்களா? என்று கால்களைப் பற்றிக்கொண்டு அழுதேன்''.

"அப்படியா? மதரிடமே சென்று கூறினாயா? அதற்கு அவர் என்ன சொன்னார் ப்ரீத்தி?'' என்று உமா தன்னை மறந்து அதில் ஈடுபட்டாள்.

"தம் இரு கரங்களையும் என் தோள்மீது வைத்து என்னைப் பரிவுடன் பார்த்தார்'' என்று ப்ரீத்தி சொல்லிக்கொண்டு வரும்போதே உமா அந்நிகழ்ச்சியை அழகுறத் தன் அகத்திரையிலே பார்க்கத் தொடங்கிவிட்டாள். அதுவும் தன் தோள்கள்மீது அன்னை தம் கரங்களை வைத்திருப்பதுபோல் உணரத்தொடங்கினாள். அந்த நினைவே இனித்தது. மெய்சிலிர்த்தது. "அப்புறம், என்னாயிற்று ப்ரீத்தி? என்ன செய்தார்கள் மதர்'' என்றாள் மேலும்.

"அவர்க்குத்தான் நம்மீது எத்துணை கருணை! "இந்தக் கட்டிகளின் வலிமூலம் உன்னை எத்தனை இடர்களிலிருந்து காப்பாற்றினேன் என்று நீ விழிப்புணர்ச்சி அடையும்போது அறிவாய்'' என்று பரிவு பொங்கக் கூறினார். என்னை அணைத்தவாறு வெகுநேரம் தியானம் செய்தார். என் கோபத்தை எண்ணி வெட்கமாயிற்று. அவர் கால்களைப் பற்றிக்கொண்டு மன்னிப்புக் கேட்டேன். உமா! இப்போது புரிகிறதா, என் உடல் நலம் பெற்ற விதம்?''

"ஏன் புரியவில்லை? அந்த அதிசய டாக்டரை எண்ணி என் மனம் மிகவும் பரவசப்படுகிறது, ப்ரீத்தி! அந்த அற்புத மருத்துவம் மேற்கொண்ட ப்ரீத்தி என் தோழி என்பது மேலும் பரவசமாகிறது''என்று சொல்லும்போதே அவள் உணர்வு உயர்தளங்களில் சஞ்சரிப்பது யாருக்குத் தெரியும்? ஸ்வீட் மதர் என்றால் எண்ணம் இனிக்கிறது. உணர்வு குளிர்கிறது. ஆனந்தம் பெருகி அவளைத் திணறச் செய்கிறது.

"உமா! இதைக் கேட்டவுனக்கே இத்தனை ஆனந்தம் என்றால் அந்த ஸ்பர்சம் பெற்ற இந்த ஜீவன் எப்படிப்பட்ட ஆனந்தம் நுகர்ந்திருக்கும்'' என்று கூறும்போதே ப்ரீத்தியின் கண்கள் பனித்தன.

இனிய உணர்வுகளுடன் பிரிந்தனர்.

அன்றிரவு முழுவதும் உமா ஸ்ரீ அன்னை, அன்னையின் அருளை நினைந்து நினைந்து உருக ஆரம்பித்தாள். இன்னும் அவள் அன்னை என்னும் தெய்வத்தைப் பிறர் கூறக் கேட்டறிந்தாளே தவிர நேரில் கண்டதில்லை. ஆனாலும் அவள் தன் ஜீவனின் ஆழத்து அன்பால் அன்னைக்கு ஒரு புதிய வடிவம் அமைத்துத் தனக்குள் ஆராதித்துக்கொண்டிருந்தாள். ஒவ்வொரு நாளும் ப்ரீத்தி அன்னையைப் பற்றிக் கொண்டுவரும் அருட்செயல்கள், ஆசிகள், அறிவுரைகள், ஐயங்களைத் தீர்க்க அவரளிக்கும் எளிய விளக்கங்கள் யாவும் அவளை உச்சி முதல் உள்ளங்கால்வரை நிறைத்துக் கொண்டிருந்தன. தனக்குத்தானே அன்னையின் தலைமையில் ஒரு சாம்ராஜ்யம் அமைத்துக்கொண்டு அதில் இனிமையாக வாழ்ந்து கொண்டிருந்தாள். இந்த எண்ணங்களின் இனிமை சதா இருந்து கொண்டிருப்பதால் புறவுலகின் சஞ்சலங்கள் அவளை ஒன்றும் செய்யவில்லை.

மீண்டும் ஒரு நாள் ப்ரீத்தி வகுப்பிற்கு வரவில்லை. உமா சோர்ந்துபோனாள். இப்பரந்த உலகில் பெரு மக்கள் கூட்டத்தின் நடுவே அன்னை ஒருவரே அவள் இலக்காய் இருந்தார். அந்த இலக்கை அடைய உதவும் அன்னையைப் பற்றிய செய்திகளைக் கொண்டுவரும் ப்ரீத்தியே அவள் இலக்கை நாடும் வழியாய் இருந்தது.

வயதுப் பெண்ணான உமா, நாளுக்கு நாள் தனிமையை நாடுவதும், பெருத்த மோனம் சாதிப்பதும் மாமியின் மனதில் கவலையை உண்டாக்கிற்று.

மாமி வீடு முழுவதும் பரபரப்பாய் தேடிப்பார்த்தாள். மேல் மாடியில் தனியாக அமர்ந்து தனக்குள் ஆழ்ந்து அன்னையில் திளைத்திருந்தாள் உமா. ப்ரீத்தியின் தோள்களில் கை வைத்து பரிவுடன், "இந்தக் கட்டியின்மூலம் உன்னை எத்தனை இடையூறுகளிலிருந்து காத்திருக்கிறேன் என்பதை விழிப்புணர்வு வரும்போது அறிவாய்'' என்று அன்னை கூறியதை எண்ணுகிறாள். ப்ரீத்தியின் இடத்தில் தன்னை வைத்துப் பார்க்கிறாள். அன்னையின் திருக்கரங்கள் தன் தோள்களில் பதிந்திருக்கிறது. அவர் அவளைக் கனிவாய்ப் பார்க்கிறார். இந்த இனிய நினைவில் அவள் இதழ்கள் புன்னகை புரிகிறது. அருகில் வந்த மாமி, பதறிப் போனாள். தான் அழைப்பதுக்கூட காதில் விழாத நிலையில் எதை நினைத்துச் சிரித்துக்கொண்டிருக்கிறாள். சிறிது கவலையாக உணர்ந்தாள் மாமி.

"உமா!'' என்று மெல்ல அழைத்தவண்ணம் அவள் தோள்மீது மென்மையாய் தொடுகிறாள் மாமி. ஆனால் உமாவோ தன் தவம் பலித்து, ஸ்ரீ அன்னையே தன் தோளில் கை வைத்ததாய் மகிழ்ந்து, "அம்மா!'' என்றாள் உணர்ச்சி மேலிட.

அவள் அகத்தின் நிகழ்வுகள் மாமிக்குத் தெரியாததால், உமா தன் அம்மாவைத் தனியே அமர்ந்து எண்ணிக்கொண்டிருப்பதாய்ப் புரிந்துகொண்டாள்.

"என்ன உமா இது? உனக்கு அம்மாவின் நினைவு வந்துவிட்டதால் இங்கே தனியே வந்து உட்கார்ந்துவிட்டாயா? எங்களிடம் சொன்னால் ஒரு முறை ஊருக்கு அழைத்துப்போய் வந்திருப்போமே'' என்று இதமாகக் கூறினாள்.

சட்டென்று கற்பனை கலைந்து தன்னினைவு பெற்ற உமா, "என்ன மாமி? என்ன சொல்கிறீர்கள்?'' என்றாள்.

"இங்கே தனியே உட்கார்ந்து என்ன யோசனை? நான் தொட்டவுடன், 'அம்மா!' என்றாயே. அம்மாவின் நினைவு வந்துவிட்டதா'' என்றாள் மாமி.

"! அதுவா மாமி? நாளை, "பிரெஞ்சு கிளாசில்' அவரவர் ஏதாவது ஒரு தலைப்பில் கட்டுரை தயாரிக்கவேண்டும். 'அம்மா' என்ற தலைப்பைச் சிந்தித்துக் கண்டுபிடித்தேன். அதைச் சொல்லியிருப்பேன்'' என்றாள் உமா.

"சரிதான் போ. நீ இங்கே தனியே வந்து உட்கார்ந்து 'அம்மா' என்றவுடன், உன் அம்மாவை எண்ணி ஏங்க ஆரம்பித்துவிட்டாயோ என்று நினைத்து கலங்கிவிட்டேன்'' என்றாள் மாமி.

"நான் என்ன சின்ன குழந்தையா மாமி, அம்மாவை நினைத்து ஏங்குவதற்கு?'' என்றாள் உமா. அத்துடன் நிற்காமல், "எப்படியாவது இங்கு வந்ததற்கு அடையாளமாய் பிரெஞ்சு கற்றுக் கொண்டு டீச்சராய்விடுவேன்'' என்றாள் உமா.


 

தொடரும்.....

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஒரு நிலையைக் கடக்க ஆதாயம் உதவாது. இலட்சியமே உதவும். ஒரு முறையாக - நாமுள்ள நிலைக்குரிய தோற்றமாக இலட்சியம் மாறுகிறது. அடுத்த நிலைக்குரிய விஷயமாவதில்லை.

உயர உதவுவது இலட்சியம், ஆதாயமில்லை.


 


 


 

 


 


 


 book | by Dr. Radut