Skip to Content

01.யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V                                            கர்மயோகி

806) மேற்சொன்னவை மனித சக்திகள். பரிணாமச் சக்திகளும் நம்முள் உண்டு. அவை உயர்ந்தவை. இருக்கும் எல்லாப் பரிணாமச் சக்திகளையும் சேர்த்து உயர்த்தும் ஆர்வம்

பூரணயோகச் சாதனம். உயர்ந்தோருக்கும் இது எளிதில் முடியாதது.

உலகம் அறியாததைச் சாதிக்க உலகிலில்லாத பிரம்ம சக்தி வேண்டும்.

மனிதனுக்கு சக்தி தேவை.

யோகத்திற்கு ஆன்மீக சக்தி தேவை.

பூரணயோகத்திற்குப் பரிணாம சக்தி தேவை.

சக்தியும் ஆன்மீக சக்தியும் பூரண யோகத்திற்குப் பயன்படாது.

உலகம் பிரம்ம ஞானத்தையும், பிரம்ம ரிஷியையும் அறியும்.

அதன் சக்தியை உலகம் அறியாது.

அதுவே பூரண யோகத்திற்குத் தேவைப்படுவது.

****

807) கட்டுப்பாட்டை ஆனந்தமாக அனுபவிப்பவன் யோக வாழ்வுக்குரியவன். சாதாரண மனிதன் வாழ்க்கையை அனுபவிக்க முயல்வான். கட்டுப்பாடு உற்சாகமளிக்கும். அதன் கடுமை குறைந்து ஒரு attitude நோக்கமாகவும், பின்னால் மாறலாம். அதுவும் ஜீவியமாகும். இக்கட்டத்தில் வாழ்வே பரிணாமமாகி, பரிபூரண யோகமாகும்.

கட்டுப்பாடு நோக்கமாகி ஜீவியமாவது பூரண யோகம்.

கட்டுப்பாடு கசக்கும். நெடுநாள் கட்டுப்பாட்டை ஏற்றால் அது பழக்கமாகும். யோக வாழ்வுக்குரியவனுக்குக் கட்டுப்பாடு கசக்கக் கூடாது, பழக்கமாகக் கூடாது, ஆனந்தமாக இருக்க வேண்டும். சாதாரண மனிதன் வாழ்க்கையை அனுபவிப்பதுபோல் பூரணயோகி கட்டுப்பாட்டை அனுபவிக்க வேண்டும். அனுபவித்தால் கட்டுப்பாடு உற்சாகமளிக்கும். தற்சமயம் நமக்கு மரியாதை வாழ்வில் ஒரு attitude நோக்கமாகிறது. எதையும் மரியாதை கருதி செய்வதுபோல் ஆனந்தமாக அனுபவிக்கும் கட்டுப்பாடு யோகிக்கு வாழ்வின் நோக்கமாக வேண்டும். நோக்கம் உயர்ந்து ஜீவியமாகும்.

**** 

808) தத்துவத்தை அறிவால் அனுபவித்தாலும், நடைமுறையில் வாழ்க்கை அனுபவிப்பதைப் பெற்றாலும், அதன் சாரம் ஞானம். ஆன்மா இந்த ஞானத்தில்  பிரதிபலித்தால் விவேகம் எழும்

விவேகம் என்பது ஆன்மாவின் தத்துவ ஞானம்.

தத்துவத்தை அறிவால் அனுபவிக்கிறோம். நடைமுறையில் வாழ்வை அனுபவிக்கிறோம். தத்துவத்தை அறிவும் மனமும் பெறுகின்றன. வாழ்வை உணர்வு பெறுகிறது. இவற்றின் சாரம் மட்டும் ஆன்மாவுக்குப் போகிறது. வாழ்வு இந்த ஆன்மீக ஞானத்தைப் பின்பற்றுவது விவேகம்.

****

809) வாழ்வில் மனிதச் சூழ்நிலையை ஆர்வமாக அரவணைத்தால் முன்னேற்றம் பிறக்கும்.

இறைவனின் சத்தியத்தை ஆர்வமாக அணுகினால் அவனுக்கு பரிணாம வளர்ச்சியுண்டு.

சூழ்நிலையை ஏற்கும் மனிதன் உயர்வான்.

சூழ்நிலை குடும்பம் போன்றது. ஒரு மனிதனை உருவாக்குவது குடும்பம். குடும்பத்தை ஒதுக்கியவன் முன்னுக்கு வருவது சிரமம். மனிதன் சூழ்நிலையின் குழந்தை. குழந்தையை உற்பத்தி செய்த சூழ்நிலை, அதை நன்றாக வளர்க்கும். ஆன்மாவின் சூழ்நிலை உலகத்தின் ஆன்மா. சூழ்நிலையைப் புறக்கணிக்கும் மனிதன் உயிர்நாடியைத் துண்டிக்கிறான். தானே வளர்வதைவிட சூழ்நிலையை ஏற்பவன் அதிகமாக வளர்வான். சூழ்நிலை ஜீவனுள்ள மழை போன்றது. செடிக்கு மழைபோல மனிதனுக்கு சூழ்நிலை.

****

810) தனக்குத் தெரிந்ததையும், முடிந்ததையும் செய்து முடிக்க முன்வருபவனுக்கு முன்னேற்றம் உற்பத்தியானால் அது நிற்பதில்லை.

அறிவுடை முயற்சிக்கு முன்னேற்றம் முடிவில்லை.

பிறந்த குழந்தைக்கு நமக்குத் தெரிவதில் நூற்றில் ஒரு பங்கு, ஆயிரத்தில் ஒரு பங்குதான் தெரியும். அது கற்க முயன்றால் முடிவில்லை என்பதுபோல், உலகம் கண்டதில் நாமறிந்தது ஆயிரத்திலொரு பங்கா, இலட்சத்தில் ஒரு பங்கா என்று கூறமுடியுமா? அறிவு தெரிந்துகொள்கிறது, முயற்சி முடிக்கிறது. அறிவுக்கு முடிவுண்டா? முயற்சிக்கு முடிவுண்டா? இனி நான் தெரிந்துகொள்ள எதுவுமில்லை என யாராவது கூறமுடியுமா?


 

தொடரும்.....

****
 


 

ஜீவிய மணி

சொர்க்கத்திற்குப் போகும் வழி நரகம்.


 


 

 

 

 



book | by Dr. Radut