Skip to Content

08.சரணாகதி சமாதியைக் கடந்தது

"அன்பர் உரை''

சரணாகதி சமாதியைக் கடந்தது

(ஆகஸ்ட் 15, 2002 அன்று இராணிப்பேட்டை தியான மையத்தில் திருமதி வசந்தா லஷ்மிநாராயணன் நிகழ்த்திய உரை)

பூரண யோகம் பிரம்மத்தை வாழ்வில் கண்டு உலகில் துன்பமும், மரணமும் இல்லை என இருப்பது பேரானந்தப் பெருவழி. ஞானயோகம் ஜீவனின் நான்கு கரணங்களில் தலையான ஆன்மாவைப் பிரித்து மோட்சம் பெறுவது. பூரண யோகம் ஜீவனின் நான்கு கரணங்களிலும் உள்ள வளரும் ஆன்மாவை விடுவித்து ஜீவாத்மாவைப் பரமாத்மாவாக்கி வாழ்வை தெய்வீக வாழ்வாக்கியது.

ஹதயோகம் உடலில் உள்ள ஆன்மாவாகிய அன்னமயப் புருஷனை அடைந்து குந்தளினியைத் திறந்து ஒவ்வொரு சக்கரமாக மேலே போய் சகஸ்ரதளத்தை அடைந்து மோட்சம் பெறுகிறது. கர்மயோகம் அதே பாதையை பிராணமயப் புருஷன் மூலமாக அடைகிறது. ஹதயோகத்திற்கு ஆசனமும், கர்மயோகத்திற்குப் பிராணயாமமும் பயன்படுகின்றது. ஞானயோகம் அதே காரியத்தை மனோமயப் புருஷன் மூலமாக நிறைவேற்றுகிறது. இதன் முக்கியக் கருவி சமாதியில் முடியும் நிஷ்டை.

பூரண யோகம் மோட்சத்தை முடிவாகக் கொள்வதில்லை. மோட்சத்தை ஆரம்பமாகக் கொள்கிறது. இறைவன் எந்த ஆனந்தத்திற்காக சிருஷ்டித்தானோ அந்த ஆனந்தத்தைத் தன் ஆன்மீக அனுபவமாகக் கொள்கிறான். பரம்பொருள் உலகமாயிற்று என்பது கொள்கை. ஜடஉலகம் பரிணாமத்தால் மனிதனாயிற்று என்பது விளக்கம். பரம்பொருள் எந்த இன்பத்தை சிருஷ்டியில் நாடுகிறானோ அதுவே பூரண யோகத்திற்கு ஆத்மானுபவ மோட்சம் முதற்கட்டமானால் இந்த ஆத்மானுபவம் முடிவான கட்டமாகும். இதற்கிடையே உள்ள கட்டங்கள் :

  • ஆன்மா மட்டும் பரமாத்மாவை அடைவதற்குப் பதிலாக மனமும் ஆன்மாவும் பரமாத்மாவை அடையலாம்.
  • அவற்றுடன் உணர்வும் பரமாத்மாவை அடையலாம்.
  • உடலும் பரமாத்மாவை அடையலாம்.
  • பரமாத்மா இறங்கி மனத்தை அடையலாம்.
  • இறங்கி வரும் பரமாத்மா உணர்வை அடையலாம்.
  • மேலும் இறங்கி உடலை அடையலாம்.
  • ஒவ்வொரு கட்டத்திலும் ஜீவியம் அதற்கு அடிப்படையான பொருள் என்று இருப்பதால் இந்த ஆறு கட்டங்களும் 12-ஆகவும் பிரியும்.

மோட்சம் முதற்கட்டமானால் பூரண யோகம் கூறும் திருவுருமாற்றம் முடிவான 12-ஆவது கட்டமாகும். இந்த யோகத்தைப் பூர்த்தி செய்ய யோகங்கள் அறிந்த ஆசனம், பிராணாயாமம், மந்திரம், தியானம், சமாதி ஆகியவற்றைப் பயன்படுத்தாமல் பகவான் கூறும் முறை சரணாகதி. சரணாகதிக்கு முந்தைய நிலை சமர்ப்பணம். இந்த யோகம் மனிதனுக்கில்லை, இறைவனுக்கு என்று கூறிய பகவான் நமக்கு அளித்த முறை சரணாகதி. யோகத்தை மேற்கொண்டவர்கள் அவர்கள் அனுபவத்தைச் சரணாகதி செய்வது மனிதனுக்குரியதன்று; ஆண்டவனுக்குரியது என்று கண்டார்கள். சமர்ப்பணத்தைச் செய்ய ஆரம்பித்தால் இது மனித முயற்சிக்குட்பட்டதில்லை என்று தெரியும். சமர்ப்பணத்திலுள்ள சிரமத்தைக் கடந்து சரணாகதியை வெற்றிகரமாகப் பின்பற்றினால் முறை முடிவதற்குமுன் முழுப்பலன் வருகிறது. சரணாகதிக்கு அத்தகைய சக்தியைக் கொடுக்கும் தத்துவம் என்ன? இந்தத் தத்துவம் வெளிப்படுத்தும் சக்தி என்ன?

திறமை என்பது சிறு முயற்சியில் பெருங்காரியத்தைச் செய்வது. சரணாகதிக்குச் செய்யும் முயற்சி நம் முயற்சியை வாபஸ் வாங்குவது. அப்படி எனில் முயற்சியே இல்லை என்று பொருள். முயற்சியே இல்லாத பலன் எப்படி முழுப் பலனாக இருக்கமுடியும்? அது முழுப் பலனாக இருப்பதுடன் பலனைத் தன்னுட் கொண்ட முழுமையாகவும் இருக்கும். அந்த முழுமைக்குப் பெயர் பரம்பொருள். இதை வேறு வகையாகக் சொன்னால் எதையும் செய்யாமல் எல்லாவற்றையும் பெறுவது சரணாகதி என்று கூறலாம். இது ஒரு முறையானால், இதற்கு ஒரு தத்துவம் இருக்கும். இதுபோன்ற விஷயத்தை பிரம்மத்தில் மட்டும்தான் கேள்விபட்டு இருக்கிறோம். பிரம்மம் எதுவுமே இல்லாமல் எதுவுமாகவும் இருக்கும். சரணாகதியின் தத்துவம் பிரம்ம தத்துவமாகும். முழு சலனத்திற்கு முழுச் சக்தியுண்டு. முழுச் சக்தி முழுமையான இலக்கைப் பெறும். முழுமையாகத் தன்னை அழித்து முழுமையான குறிக்கோளை ஏற்பது அந்தச் சலனம். வாழ்க்கையில் குழந்தை தாயாரை நம்புவது அப்படிப்பட்டது. நாம் சமூகத்தை ஏற்பதும் அது போன்றதே.

நாம் மனத்தால் செயல்பட்டால் முயற்சி மனத்திற்குரியது. உடலால் செயல்பட்டால் முயற்சி உடலுக்குரியது. இவை பகுதியான லோகங்கள். பகுதியான லோகத்தில் பகுதியான முன்னேற்றம் உண்டு. இவை நம் சொந்த முயற்சியால் செய்பவை. சொந்த முயற்சிக்குரிய பலன் பகுதி. உடலால் செயல்படுபவன் மனத்திற்குப் போக முயல்வது அடுத்த கட்டத்திற்குப் போவது. அதற்காக உடலின் முயற்சி பயன்படாது. உதவி மனத்தில் இருந்து வரவேண்டும். உதாரணமாக ஒருவன் எலக்ஷனில் நிற்பதற்கு அவன் முயற்சி செய்யலாம். முயற்சிக்குத் தகுந்த பலனுண்டு. வெற்றி பெற்றபின் அவன் மந்திரியாவதோ மற்ற உயர்ந்த பதவிகளை அடைவதோ அவனுடைய முயற்சியால் நடக்காது. எங்குப் போக அவன் விரும்புகிறானோ அங்கிருந்து உதவி வரவேண்டும். இந்த உதவி இருந்தால் மனிதன் உடலிலிருந்து மனத்திற்கும், மனத்திலிருந்து சத்திய ஜீவியத்திற்கும், தொடர்ந்து சத் புருஷனுக்கும், அதையும் கடந்து பிரம்மத்திற்கும் போகமுடியும். அது நடக்க உயர்ந்த நிலை நம்முள் செயல்பட நாம் அனுமதிக்கவேண்டும். அப்படி அனுமதிப்பதை யோகம் சரணாகதி என்று கூறும். முழுப்பலனுக்கு முழுச் சரணாகதி தேவை. பிரம்மத்திற்குத் தன்னை அர்ப்பணிப்பதே தத்துவம். எதுவுமே இல்லாதவன் எல்லாமுமாக மாறுவது பலன்.

நாம் புதியவைகளைக் கற்றுக்கொள்கிறோம். கொஞ்சம் கொஞ்சமாகத் திறமை வளர்கிறது. திறமை வளர வளரத் திறமை மனத்திலிருந்து விடுபடுகிறது. அதாவது கைவேலை செய்யும்பொழுது மனம் வேறு ஒரு காரியத்தைக் கவனிக்கிறது. காரியம் மனத்தின் கவனம் இல்லாமல் நடைபெறுகிறது. இதை யோக பாஷையில் ஆழ்மனம் செயல்படுகிறது என்று கூறுகிறோம். ஆழ்மனம், மேல் மனமாவதே பூரண யோகத்தின் குறிக்கோள். இன்று நமது ஜீரணம், இதயத் துடிப்பு, போன்றவை இன்று ஆழ்மனத்தால் நடத்தப்படுகிறது. நாம் கற்றுக்கொள்பவைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆழ்மனத்தை அடைகின்றது. மேல்மனம் ஆழ்மனத்திற்குச் சரணாகதி அடைகிறது என்று சொல்லலாம். நாம் வளர்ந்து சமூகத்தை ஏற்கும்போது ஓரளவு சிரமப்படுகிறோம். நாளாவட்டத்தில் எளிமையாக முழுவதும் இணைகிறோம். இதை நாம் சமூகத்திற்குச் சரணடைவது என்று கூறலாம்.

நாம் சமூகத்தின் மூலம் வாழ்வோடு இரண்டறக் கலக்கிறோம். வாழ்வின் பின்னால் பரமாத்மா இருக்கிறார். வாழ்வு சமூகத்தின் மூலமும், பரமாத்மா வாழ்வின் மூலமும் நமக்கு இடைவிடாது சூட்சுமமாகத் தன்னை அறிவித்தபடி இருக்கிறார். பெரும்பாலும் இதுபோன்றவற்றை நாம் நம்புவது இல்லை. நம்பினால் பொருட்படுத்துவதில்லை. மூடநம்பிக்கை என்றும் ஒதுக்கிவிடுகிறோம். டெல்லியில் ஒருவருக்கு அடிக்கடி கனவில் ஒரு மாடு இவரை எங்கேயோ அழைத்துப் போவதுபோல் கனவு வரும். அதை அவர் நம்பினார். அவரால் ஒரு பால் பண்ணை நிறுவி பெரும் சொத்து சேர்க்க முடிந்தது. இராஜாஜி பிறந்தவுடன் ஜாதகம் கணித்தவர் இந்த ஜாதகன் ஜட்ஜாக வருவான், வைஸ்ராயாக வருவான் என்று சொன்னார்கள். ஜட்ஜை நம்பலாம், வைஸ்ராய் என்றால் எப்படி நம்புவது என்றார்கள். இவை மேலுலகத்தில் இருந்து வரும் சூட்சுமமான அறிகுறிகள். அவற்றை நாம் பொருட்படுத்தினால் அதிலுள்ள உண்மையை ஏற்றுக்கொண்டால் அது பலிக்கும். அது பரமாத்மாவை நாம் வாழ்வில் ஏற்பது ஆகும். பரமாத்மாவை வாழ்வில் ஏற்க அறிவால் செயல்படலாம். உணர்ச்சியால் செயல்படலாம். அவை பகுதியான முயற்சிகள். அதற்குப் பலன் பகுதி. பரமாத்மாவிற்குச் சரணடைவது முழு முயற்சி. முழு முயற்சிக்குரிய பலன் நாமே பரமாத்மாவாக ஆவது.

முனைந்து கற்பது காலத்திற்குரியது. சரணாகதி அதைத் துரிதப்படுத்தும். நாம் எந்த அளவு பரமனை அறிகின்றோமோ, அந்த அளவு வேகம் அதிகமாகும். இது காலத்தைக் கடக்கும் சரணாகதி, பூரணமாகக் காலத்தின் மூன்றாம் கட்டத்தை அடையவேண்டும்.அங்கு எதுவும் க்ஷணத்தில் முடியும். நாம் பரமனாவதும் க்ஷணத்தில் முடியும்.

சரணாகதி யோக தத்துவப்படி அறிவது சிறப்பு. எல்லா யோகத் தத்துவப்படியும் அறிவது மிகச் சிறப்பு. நாம் பல யோகத் தத்துவங்களை இங்குக் கருதுவோம். முரண்பாடு, உடன்பாடு என்பது ஒரு யோகத் தத்துவம். சரணாகதி இந்த மாற்றத்தில் எப்படிச் செயல்படுகிறது என்பது கேள்வி. இதன் வெளிப்பாடு தோல்வியே வெற்றி என்பது. தோல்வி வெற்றியாக மாற, சரணாகதி எப்படிப் பயன்படுகிறது? தோல்வி அடைந்தவன் சோர்ந்து விடுவான்,குறைபடுவான், நம்பிக்கையை இழந்துவிடுவான். இவை தோல்வியை எதிர்ப்பதாகும். அதை உடன்பாடாக்க இந்தத் தோல்வி நமக்கு நல்லது என்று அவன் மனம் ஏற்றுக்கொள்ளவேண்டும். இதனால் நல்லது வரப்போகிறது என்று அவன் நம்பவேண்டும். அப்படி நம்பினால் அவன் மனத்தில் முரண்பாடு உடன்பாடாகிறது. ஆந்திரா M.P.-க்கு எலக்ஷனில் சீட்டுத் தரவில்லை. அவர் மனம் உடைந்துவிட்டார்.தம் உரிமையை வற்புறுத்தினார். தலைமைபீடம் மறுத்துவிட்டது. அவரை யாரோ ஓர் அன்னை பக்தர் அன்னையைத் தரிசிக்கச் சொன்னார். தோல்வி ஏற்பட்டதால் அவருக்குக் கிடைத்தது அன்னையின் தரிசனம். அது தோல்வியில்லை. பெருவெற்றி. அன்னையைத் தரிசித்தார். மனத்திலிருந்த முரண்பாடு உடன்பாடாயிற்று. இவருக்கு அடுத்த மாநிலம் ஒரிஸாவில் இடம் கிடைத்தது. அது ஓரளவு ஏமாற்றமாக இருந்தது. அந்த எலக்ஷனில் எந்தக் காங்கிரஸ் M.P-யும் ஒரிஸாவில் ஜெயிக்கவில்லை. இவர் மட்டும் அன்னை அருளால் ஜெயித்தார். மத்திய மந்திரி சபை அமைக்கும்பொழுது, ஒரிஸா தலைவர்கள் எவரும் இல்லாததால் ஒரிஸா சார்பில் இவரை மத்திய மந்திரியாக்கினர். அன்னை சக்தி முரண்பாட்டை உடன்பாடாக்குகிறது. தோல்வியை ஏற்பது சரணாகதி. சரணாகதி முரண்பாட்டை இவ்வகையாக உடன்பாடாக்குகிறது.

அடுத்த தத்துவம் ஜடமும், ஆன்மாவும் ஒன்றே. Life Divine-இல் இரண்டாவது, மூன்றாவது அத்தியாயங்கள் விளக்கும் தத்துவம் இது. பிரம்மம் சிருஷ்டியில் சத், அசத்தாகப் பிரிந்து காண்பது. அதை ஜடம், ஆன்மா என்று கூறுகிறோம். இவை இரண்டும் ஒன்றாகச் சரணாகதி எப்படி எழுகிறது? மூன்றாம் அத்தியாயத்தில் இவை இரண்டும் சிருஷ்டியை கடந்து இணைவதும், இரண்டாம் அத்தியாயத்தில் இவை இரண்டும் சிருஷ்டியில் இணைவதும் விளக்கப்படுகின்றன. சிருஷ்டியில் இவை சக்தியாக இணைகின்றன. சக்தியாக இணைய ஜடம் ரூபத்தை விட்டு வெளிவருகிறது. ஆன்மா தன் தூய்மையை விட்டு சக்தியாக வெளிவருகிறது. ஜடம் ரூபத்தை விட்டுக்கொடுப்பதும், ஆன்மா தன் தூய்மையை விட்டுக்கொடுப்பதும் சரணாகதியாகும்.

சத், அசத் சேர்ந்தது பிரம்மம். சத் என்பது புருஷன். புருஷன் என்பது ரூபம். அது சிருஷ்டிக்குரியது. சிருஷ்டியில் இருப்பது. அசத் என்பது நிர்வாணம், சிருஷ்டிக்கு அப்பாற்பட்டது. பிரம்மம் சிருஷ்டியை ஏற்பது சத். பிரம்மம் சிருஷ்டியில் சிருஷ்டிக்கு அப்பால் இருப்பது. இவை இரண்டும் பிரம்மத்தில் இணைகின்றன. பிரம்மத்தில் இணைய சத் தன் சிருஷ்டிக்கும் திறனை விட்டுக் கொடுக்கவேண்டும். அசத் நிர்வாணத்தை விட்டுக் கொடுக்கவேண்டும். விட்டுக்கொடுக்கும் அளவில் சரணாகதி அங்கு ஏற்படுகிறது.

பாதாளமும், பரமனும், பாமரனில் இணையும் என்பது ஐந்தாம் அத்தியாயத்தில் விளக்கப்படும் தத்துவம். பரமன் பாமரனாக, தான் பரமன் என்ற நிலையை இழக்கிறான். பாதாளம் பாமரனாக, தன் பாதாளம் என்ற குணத்தை இழக்கிறான். இழப்பது சரணாகதி. இராமாவதாரம் மகாவிஷ்ணுவினுடைய அவதாரம். மஹாவிஷ்ணு தம் தெய்வ நிலையை சரணம் செய்து மனிதப் பிறவி ஏற்று வாழ்க்கையின் சட்டதிட்டங்களுக்குத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார். இது அவர் செய்யும் தியாகம். குரங்கு மனிதனாகிறது, குரங்கு குணத்தை விட்டு அது அறிவை ஏற்று நாகரீகமான மனிதனாக வாழ்கிறது. மனிதனான குரங்கிற்குக் குரங்கின் சுதந்திரம் பறிபோகிறது. குரங்கு மனிதனாவது பாதாளம் பாமரனாவது. மஹாவிஷ்ணு அவதாரமாவது பரமன் பாமரனாவது.

பிரபஞ்சமும், பிரம்மமும் மனிதனில் இணைகின்றன. பிரம்மம் பிரபஞ்சமாகி பிரபஞ்சம் மனிதனாகிறது என்பது ஸ்ரீ அரவிந்தம். பரிணாமத்தில் மனிதன் பிரபஞ்சமாகி பிரம்மமாகிறான். பிரம்மம், பிரபஞ்சம், மனிதன் மூன்றும் சேருமிடம் வாழ்வு. இது எப்படி ஏற்படுகிறது என்று இரண்டாம் புத்தகத்தில் மூன்றாம் அத்தியாயத்தில் கூறுகிறார். மனிதன் தன் அகந்தையை ஆத்மாவாகக் கருதுகிறான். அது உண்மையன்று. அது உண்மையில்லை என்று ஏற்றவுடன் அகந்தை கரைகிறது. அகந்தை கரைந்தபின் அங்கு இருப்பது புருஷன். இது உலகத்திற்குப் பொதுவான புருஷன். உலகத்திற்குப் பொதுவான புருஷன் ஒவ்வொருவர் நெஞ்சிலும் உள்ளது. உலகத்தின் அனுபவத்தை ஒருவருக்குப் பயன்படும்படி மாற்றிக் கொடுக்கிறது. மனிதன் இந்த உலகத்தின் அனுபவத்தைப் புறத்தில் காணலாம். அது பிரபஞ்ச ஆத்மாவின் வாழ்வு. அதை அகத்தில் காணலாம். அதன் மையமாக இருப்பது பரமாத்மா. பரமாத்மா மனித வாழ்வின் பிரபஞ்சத்தின் மையம். பரமாத்மாவும், பிரபஞ்சமும் தங்கள் உயர்ந்த நிலையைவிட்டு இறங்கிவந்து மனித வாழ்வின் மையமாகச் செயல்படுவது சரணாகதி.

கண்டமான அகந்தை அகண்டத்தால் கிரகிக்கப்படுகிறது. பிரம்மம் அகண்டம், பரமாத்மா அகண்டம். உலகமும், உலகத்திலுள்ள ஜீவராசிகளும் கண்டம். அகண்டம் விரும்பி தன் நிலையை விட்டுக்கொடுத்துக் கண்டமாகிறது. அது சிருஷ்டி. கண்டம் தன் நிலையை விட்டுக்கொடுத்து அகண்டத்தில் கரைய சம்மதிப்பது பரிணாமம். சரணாகதி என்ற தத்துவம் சிருஷ்டியில் பரிணாமத்தில் காண்கிறோம். பொதுச்சேவையில் உள்ள இளைஞன் தன் வாழ்வின் முன்னேற்றத்தை விட்டுக்கொடுத்துப் பொதுமக்களின் வாழ்வில் தன் வாழ்வைக் கரைத்துக்கொள்வது சரணாகதியாகும். கண்டம் தன்னுடைய ரூபம், சுபாவத்தை அழிக்க சம்மதிப்பது சரணாகதி. இதைத் தத்துவமாக நாம் காண்கிறோம். எல்லா மக்களுடைய வாழ்வில் இது இருந்தாலும் நாம் பெரிய தலைவர்களின் வாழ்வில் மட்டுமே இவற்றைக் காண்கிறோம்.

அறிவு உணர்விலிருந்து விலகி ஞானமாகிறது. அறிவும், உணர்வும் அனைவருடைய ஆனந்தம். ஆனந்தத்தை நாம் காண்பதே உணர்ச்சியால்தான். உணர்வு அறிவை அடைந்து அதற்கு உற்சாகம் கொடுக்கிறது. கிரிக்கெட் விளையாடும் சிறுவர்களுக்கும், நாட்டு விடுதலைக்காகத் தியாகம் செய்யும் தலைவர்களுக்கும் வீராவேசம் கொடுப்பது உணர்ச்சி. உணர்ச்சியை, தேச பக்தியாக்குவது அறிவு. தேசத்திற்காக உயிரை விடுவதே அவர்களுக்கு மகிழ்வு. எல்லா நாடுகளிலும் இதை நாம் காண்கிறோம். குழந்தை வளர்க்கும் தாயாரும், கோபுரம் கட்டும் கொத்தனாரும், கொல்லையில் பயிரிடும் கூலிக்காரனும் உணர்ச்சி வசப்பட்டு உலகத்தைக் கவர்கிறான். ஞானம் என்பது பெரியது, ஞானிகளுக்கேயுரியது. வாழ்க்கையைத் துலக்கித் தவம் செய்து பெறுவது. வாழ்க்கையைத் துலக்கும்போது உணர்ச்சி விலகுகிறது. உணர்ச்சி விலகியபின் அறிவு ஆனந்தமாகப் பரிமளிக்கிறது. ஆனந்தம் ஞானத்தின் பக்தி, உருவம். ஸ்ரீ அரவிந்தர் ஆனந்தத்தை அறிவின் அன்பு உருவம் என்று கூறுகிறார். உலகிற்கே உணர்வளிக்கும் உணர்ச்சி தன்னை இழக்க சம்மதிப்பதும் அனைவருக்கும் தலைவனாக விளங்கும் அறிவு தன் விறுவிறுப்பை விட்டுக்கொடுப்பதும் சரணாகதிக்குச் சிறப்பான உதாரணங்கள்.

ஹிருதய சமுத்திரம் நம் வாழ்வை ஏற்கிறது. ஹிருதய சமுத்திரம் என்பது சத் புருஷன் சக்தியாக மாறி சலனமற்று இருக்கும் நிலை. சிருஷ்டி, பிரபஞ்சம், உலகம் என்பன சலனமற்ற சமுத்திரத்தின் சலனத்தால் ஏற்பட்டன. இந்தச் சமுத்திரத்தை அகண்டம் என்பதைவிட பிரம்மாண்டம் என்று கூறலாம். நாம் என்பது அதில் ஒரு கடுகு. சமுத்திரத்திற்கு நாம் முக்கியம் என்பதே சரணாகதியின் உச்சக்கட்டம். சமுத்திரம் நம்மை ஏற்க முன்வருவது அறிவிற்கு எட்டாதது. அப்படி இருந்தாலும் நாம் நம் சிறு எல்லையைக் கடந்து வெளிவருவது நமக்கு முக்கியமான சரணாகதி. சமுத்திரம் நம் சரணாகதியை ஏற்று நம் வாழ்வை நடத்துகிறது. நம்மைச் சமுத்திரம் ஏற்பதை நாம் ஏற்பது சரணாகதி.

 மற்ற தத்துவங்களைக் கீழ்கண்டவாறு கூறலாம்.

  • பிரகிருதி புருஷனின் சக்தி.
  • ஆனந்தம் பொருள்களில் வெளிப்பட்டுப் பேரானந்தமாகிறது.
  • உலகை உற்பத்தி செய்த மாயை தன்னை மறந்த ஆண்டவனுக்கு நினைவுபடுத்தி அவனைத் தேடி ஆனந்தம் தருகிறது.
  • மனம் உடலுடன் கலந்ததிலிருந்து விழித்து வாழ்விலிருந்து விடுபட்டுத் தன்னிலிருந்தும் விடுபட்டு சத்திய ஜீவியத்தைக் காண்கிறது.
  • அகந்தை கரைந்து சைத்தியப் புருஷனாகி பிரபஞ்சம் முழுவதும் பரவி மீண்டும் சக்தியும் ஜீவியமும் சேர்கின்றன.
  • ஜடம் சத்தின் ஆனந்தமான சச்சிதானந்தம்.
  • ஜீவாத்மாவும், பரமாத்மாவும் இணைந்து பிரம்மமாகின்றன.
  • எழுவகை அஞ்ஞானம் கரைகின்றன.
  • மேல்மனம், உள்மனம் வழி அடிமனத்தை அடைகிறது.
  • இலட்சியம் எல்லா நிலைகளையும் கடந்து இருப்பதில் முடிவடைகிறது.
  • மூன்று திருவுருமாற்றங்கள்.
  • புறம் அகமாகிறது.
  • திருவுருமாற்றம் உலகை, பூலோகச் சொர்க்கமாக்குகிறது.
  • பிரம்மத்திற்கு அஞ்ஞானம் சலிப்புத் தருகிறது.

தொடரும்... 

****

ஸ்ரீ அரவிந்த சுடர்  

தான் கட்டுப்படவேண்டிய நிர்பந்தமில்லாத இடத்தில்,தன்னை அழித்து, அன்பாலும், அடக்கத்தாலும் அடுத்தவருக்குப் பணிந்து போகும் பண்பே வாழ்வில் சரணாகதிக்குச் சமமானது.

அன்பும், அடக்கமும் வாழ்வில் சரணாகதி.

*****

 

Comments

சரணாகதி சமாதியைக் கடந்ததுpara

சரணாகதி சமாதியைக் கடந்தது

para 4, line 8 - from ஆண்டவனுக்குரியது etc. etc. - to be joined to para 4

do.   6, line 5 - உடன் - உடலின்

do.   10, line 8 - அவன்மனம்ஏற்றுக்கொள்ளவேண்டும். - அவன் மனம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

para 10, line 14 - மனத்திருந்த - மனத்திலிருந்த

do.        do.  21 - from சரணாகதி to  உடன்பாடாக்குகிறது. - to be joined to para 10

para 17, line 5 - mஉச்சக்கட்டம்.  - உச்சக்கட்டம்.

after para 17, bullet point no.4 - line 1 - கலந்ததிருந்து - கலந்ததிலிருந்து

do.                       do.              do.  2  - தன்னிருந்தும் - தன்னிலிருந்தும்

do.                last bullet point - சப்புத் - சலிப்புத்



book | by Dr. Radut