Skip to Content

05.அன்பரும் - நண்பரும்

அன்பரும் - நண்பரும்

சத்தியத்தின் சங்க நாதம்

அன்பர் - "அன்னை'' என்ற நூலில் "மடையனை அவன் மடமைக்கேற்றபடி அன்னை வழி நடத்துகிறார்'' என்றொரு வாக்கியம் வருகிறது. புரியவில்லை.

நண்பர் - "விவேகிக்கு அன்னை பெரும் விவேகம் அளிக்கிறார்'' என்பது முன் வாக்கியம். இரண்டிற்கும் ஒரே பொருளாயிற்றே. அது புரிகிறதா?

அன்பர் - அது புரிகிறது. புத்தியிருந்தால் அன்னை அதிக புத்திசாலித்தனம் தருகிறார். அது சுலபம். அடுத்தது மடமையாயிற்றே.

நண்பர் - உங்கள் கம்பனி மேனேஜர் வேறு வேலைக்குப் போவதாகக் கூறினீர்களே அப்பிரச்சினையில் இக்கருத்து விளங்கும்.

அன்பர் - அந்தப் பிரச்சினை தீர்ந்தால் போதும், வேறெதுவும் புரியத் தேவையில்லை. மானேஜர் போனால் எனக்குக் கையொடிந்தது போலாகும், எழுந்திருக்கவே முடியாது. நானும் எவ்வளவோ பிரார்த்தனை செய்தேன், பலிக்கவில்லை.

நண்பர் - பிரார்த்தனை தீவிரமாகும்பொழுது பிரச்சினை சிக்கலாகுமே.

அன்பர் - அப்படித்தானிருக்கிறது. அதுவும் விளங்கவில்லை. பயம்தான் முன் நிற்கிறது.

நண்பர் - நாமே பிரச்சினையை வளர்க்கிறோம். எப்பொழுதும் மானேஜர் போய்விடுவார் என்ற எண்ணம் மூலம் நாம் பிரச்சினைக்கு உயிரளிக்கிறோம், அது வளர்கிறது.

அன்பர் - நம் நினைப்பு பிரச்சினையை வளர்க்கிறதா? அதை எப்படி மறப்பது? அதுதானே பிசாசுபோல் என்னைப் பிடித்துக்கொண்டுள்ளது?

நண்பர் - இது மிகச் சிரமமான காரியம். ஆனால் நாம் பிரச்சினையை மறக்காதவரை பிரச்சினை தீராது. ஒருவழி மனம் அன்னையை நாடிப்போனால், ஏதோ ஒரு கட்டத்தில் பிரச்சினை சற்று மறப்பது தெரியும். அதை வலியுறுத்தி பிரச்சினையினின்று விலகினால்,உடனே தீரும்.

அன்பர் - நாம் பேசும்பொழுது இதன் உண்மையை மனம் ஏற்கிறது. சற்று நிம்மதியாக இருக்கிறது. நாளை மறுநாள் பார்க்கலாம். இன்னும் 12 நாள் கெடுவு இருக்கிறது.

இந்த மானேஜர் திறமைசாலி . இவருக்கு ரூ.10,000 சம்பளம். நிறைய புதுக் கம்பனிகள் வருகின்றன. ரூ.12,000 சம்பளத்திற்கு வேலை வந்துள்ளது. எப்படி மானேஜர் தொடர்ந்து பழைய வேலையிலிருப்பார்? அவர் போனபின் அவர் போன்ற நாணயஸ்தர் கிடைப்பது சிரமம். இவையெல்லாம் அன்பர் மனத்தை உலுக்குகிறது. இந்த நேரத்தில் நம்பிக்கை போய்விடும். அதே சம்பளம் அன்பர் கொடுக்கமுடியாது. இவையெல்லாம் ஒருபுறமிருக்க பிரச்சினையின் கரு பிரச்சினையிலில்லை. அன்பர் கவலைப்படுவதில் உள்ளது. அவர் மனம் பிரச்சினையை விட்டு விலகினால், மானேஜர் மனம் மாறுவார். அது எவ்வகையாக வரும் என்று கூறமுடியாது. வீட்டுச் சந்தர்ப்பம், மார்க்கட் நிலவரம், மானேஜர் மனம் எனப் பல அம்சங்கள் எப்படி மாறும் என்று கூறமுடியாது. மாறும் என்று மட்டும் நிச்சயமாகக் கூறலாம். மானேஜரே போய்விட்டாலும், அன்பருக்குச் சிரமம் வாராது. புதிய மானேஜர் அதிகத் திறமைசாலியாக அமைவார். அடுத்த நாட்களில் அன்பர் பெருமுயற்சி செய்தார். தியானத்தில் பிரச்சினையை மறந்தார். அடியோடு மறந்துவிட்டார். தியானம் முடிந்து வெளியே வந்ததும் மானேஜர் வந்துவிட்டுப் போனதாகக் கூறினார்கள். செய்தியை அறிய மனம் பதைத்தது. நிதானமாக இருந்தார். மானேஜர் வந்தார். இரண்டு செய்திகள் அவர் மூலம் வந்தன. முதற் செய்தி அவருக்கு வீட்டு லோன் சாங்ஷன் ஆனதால் அவர் வெளியூரில் புது வேலையை ஏற்காமல் வீடு கட்டுவதில் இறங்கப்போவதாகச் சொன்னார். அடுத்தது கம்பனிக்குப் பெரிய ஆர்டர் வந்திருக்கிறது. இதை முடித்தால் மானேஜருக்கு கணிசமான incentive கமிஷன் உண்டு என்பதால் அவர் மனம் மாற வழியுண்டு. எல்லாம் முடிந்தபின் அன்பர் சந்தோஷமாக வந்தார்.

அன்பர் - ரொம்ப ஆச்சரியம். எல்லாம் நல்லபடியாக முடிந்துவிட்டது. பாரம் நீங்கியது. அன்னை சக்திவாய்ந்த தெய்வம்தான். நான் உங்களை விட்டுப் போனபொழுது ஓரளவு நிம்மதியாகப் போனேன். ஆனால் தியானம் செய்ய முடியவில்லை. தூங்கிவிட்டேன். காலையில் நிம்மதியிருந்தது. தியானம் கூட நேரமாயிற்று. படித்தேன், தியானம் வந்து என்னை ஆட்கொண்டது. எங்கும் அமைதி. இதேபோல் இரண்டொரு நாட்கள் கழிந்தன. மூன்றாம் நாள் நல்ல செய்தி வந்தது. உடனே உங்களிடம் கூறினேன்.

நண்பர் - அனைவருக்கும் இது நடக்கிறது. அப்பொழுது இதன் முக்கியத்துவம் நம் மனதில் படுவதில்லை. நம் அனுபவத்தில் காணும்பொழுது புரிவது போலிருப்பதில்லை. இங்கு ஒரு யோக தத்துவம் உண்டு. அதுவே முக்கியம். நாம் விலகினால் பிரச்சினைக்கு உயிரில்லை. பிரச்சினையை வளர்ப்பது நம் கவலை. நாம் கவலைப்படுவதாக நினைக்கிறோம், ஆனால் நடப்பது என்ன? பிரச்சினைக்கு உயிர் கொடுப்பது; இதற்கடுத்த இரு கட்டங்களுண்டு. இரண்டும் யோகத்திற்குரியவை, வாழ்வுக்குப் பெரிதும் உதவும். பொதுவாக வாழ்வை எளிதாகக் கருதுபவர்க்கு அவையில்லை. வாழ்வில் பெரிய பொறுப்பை ஏற்பவர்க்கு அது முடியும், பலன் தரும்.

அன்பர் - அவற்றைக் கேட்டுக்கொள்ளப் பிரியப்படுகிறேன்.

நண்பர் - நான் அதை வாழ்வின் கோணத்தில் விவரிக்கின்றேன். முறையை யோகப் பாணியில் கூறுகிறேன். வாழ்வில் சிறியது பெரியது என்றுண்டு. எல்லோரும் எலெக்ஷனில் நிற்கும் உரிமை பெற்றவரானாலும், அதெல்லாம் நமக்கில்லை என விலகுபவர் அநேகர். பெருஞ் செல்வம், உள்ளூரில், மாவட்டத்தில் பெரும் பதவி, பொறுப்பு என்பவை முதல் நிலைக்குரியவை. அடுத்தது நாட்டில், உலகில் பெரிய பதவி, பொறுப்பு,செல்வம், செல்வாக்கு.

அன்பர் - இந்த மானேஜர் பிரச்சினை எனக்கு வாழ்வா, சாவா என்ற பிரச்சினை. பிறருக்குப் புரியுமோ, புரியாதோ, இதைத் தீர்த்தபின் இதேபோல் தீர்க்கமுடியாத பிரச்சினை எனக்கு வாழ்வில் இல்லை என நான் நினைக்கிறேன். அது சரியா?

நண்பர் - அது சரி. அதன் சக்தியுள்ள இடம் மனம் பிரச்சினையிலிருந்து விலகுவது. விலகிய மனம் அன்னையை நாடி அங்கு லயிப்பது. பிரச்சினை நம்மைப் பொறுத்தவரை வெளியிலிருந்து வருவது. அடுத்த இரண்டு கட்டங்களில் முதல் நிலை மேல் மனம். பிரச்சினையிலிருந்து விலகியதுபோல் மேல்மனத்திலிருந்து (from its occupation) விலகினால் முதல் நிலை வாய்ப்பு வரும்.

அன்பர் - பிரச்சினை நம்மை ஆட்கொள்கிறது. விலகவேண்டும், விலக்கவேண்டும், என்றால் புரிகிறது. மேல் மனத்திலிருந்து விலகவேண்டும் என்றால் ஒன்றும் புரியவில்லை.

நண்பர் - நமக்குள்ள நம்பிக்கைகள் பெரியன, சிறியன என இருவகைப்படும். சிறிய நம்பிக்கைகளிலிருந்து விலகுவது முதல் நிலை. பெரிய நம்பிக்கைகளிலிருந்து விலகுவது இரண்டாம் நிலை.

அன்பர் - உதாரணம், விளக்கம் வேண்டும்.

நண்பர் - பயந்தவனுக்கும் தைரியசாலிக்கும் என்ன வித்தியாசம்? பயந்தவன் ஏமாந்தவன், எவரும் கேலி செய்வார்கள், அவன் அடங்கிப் போவான். தைரியசாலியை எவரும் மட்டம் தட்டிப் பேசமாட்டார்கள். அவனே அடுத்தவருக்குத் தொந்தரவு கொடுப்பான். பயந்தவனுக்கும் தைரியசாலிக்கும் உள்ள வித்தியாசம், சிறியவனுக்கும், பெரியவனுக்கும் உண்டு.

சிறியவன் தனக்கில்லை என ஒதுங்குபவை ஏராளம். மேடைப் பேச்சு எனக்கில்லை. முதல் மார்க் எனக்கு வாராது. வெளிநாடு போவதெல்லாம் என்னைப் போன்றவனுக்கில்லை. என்னை யார் பாராட்டப் போகின்றார்கள்?

அன்பர் - அது உண்மைதானே.

நண்பர் - உண்மை என நம்பினால் அது பலிக்கும். நம்பாவிட்டால் பலிக்காது. அது உங்கள் மானேஜர் பிரச்சினை போன்றது.

அன்பர் - என் கம்பனி சிறியது. நான் இப்படித்தான் நினைக்கிறேன். எனக்கு அதுவே சட்டமா?

நண்பர் - 1½ கோடி கம்பனி முதலாளிக்கு 70 கோடியாக ஆசையிருக்கும். நம்பிக்கையிருக்காது. முடியாது என்று நம்புவார்.

அன்பர் - என்ன செய்வது?

 நண்பர் - நேற்று ஒரு கம்பனி மானேஜர் வந்தார். அவர் மும்பையில் வேலை செய்கிறார். ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் சம்பளம். மாதம் 16 லட்சம் சம்பளம். கேட்டவர் 2 கோடியில்லை 1 கோடி என்கிறார். அவரால் நம்பமுடியவில்லை. அதைக் கேட்டால் "அதெல்லாம் நமக்கில்லை'' என்று மனம் உடனே கூறுகிறது. இரண்டு செய்ய வேண்டும்.

  1. முதலில் நம் மனத்திலுள்ள நம்பிக்கை நமக்குத் தெரியவேண்டும்.
  2. இரண்டாவது அவற்றை நம்பக்கூடாது என முடிவு செய்யவேண்டும்.

மானேஜர் பிரச்சினையிலிருந்து விலகியது போல் இதிலிருந்து விலகவேண்டும்.

அன்பர் - விலக முடிந்தால்,

நண்பர் - விலகியது நிரந்தரமானால், உங்கள் கம்பனி தொடர்ந்து வளரும். 70 கோடியை எட்டும்.

அன்பர் - நம்பமுடியவில்லையே.

நண்பர் - நம்பியவருக்குப் பலிக்கும்.

அன்பர் - அடுத்தது,

நண்பர் - முதல் கட்டத்தில் மேல் மனத்திலிருந்து விலகவேண்டும் என்று கூறினேன். அடுத்த கட்டத்திற்கு ஆழ்மனத்திலிருந்து (subconscious) விலகவேண்டும் என்று கூறலாம். எவ்வளவு பெரிய காரியமும் எனக்கு முடியும். மனத்தால் முடியாவிட்டால் ஆத்மாவால் முடியும் என நம்பவேண்டும். முதலில் கூறியபடி அன்னை எவரையும் அவரவர் மனப்பான்மையின்படி நடத்திச் செல்கிறார்.

அன்பர் - விஷயமே மனப்பான்மையில் தானிருக்கிறது என்று கூறலாமா?

நண்பர் - இதைப் பலவகையாகக் கூறலாம்.

  1. ஆழ்மனத்திலிருந்து விலகினால் வாழ்வு நாட்டளவு விரியும்.
  2. அமைதி ஆழ்மனத்தை எட்டினால், யோகம் ஆரம்பிக்கும்.
  3. எதை நம்புகிறோமோ அது பலிக்கும்.
  4. பரந்த மனம் பரநலம் பூண்டால் சிறியவன், பெரியவனாகிப் பெரியவர்கட்குத் தலைவனாவான்.
  5. பிரச்சினையை வளர்ப்பதும், வாய்ப்பை உற்பத்தி செய்வதும் உலகமன்று, வெளியாரில்லை, நாமே, நம் மனமே.
  6. நம் மனத்தின் திறமையை நாம் அறியவேண்டும்.

அன்பர் - அன்னை என்ற நூலிலிருந்து இரு வாக்கியங்களைப் பற்றி கூறினீர்களே, அது என்ன?

நண்பர் - இந்நூல் அன்னையின் அவதார நோக்கத்தை ஆன்மீகக் கண்ணோட்டத்தில் முழுமையாகக் கூறுகிறது. மஹேஸ்வரி, மகா காளி, மகாலட்சுமி, மகா சரஸ்வதி அம்சங்களுக்கு மேலாக மஹா சக்தி அம்சத்தைக் கூறி, இன்றுவரை உலகில் வெளிப்பட்ட அம்சங்கள் இவை. வெளிப்படாதவை உண்டு என்கிறது.

நீங்கள் மானேஜர் பிரச்சினையை விலக்கி நிம்மதி கண்டதுபோல் யோகம் சரணாகதியால் அன்னையின் எல்லா அம்சங்களையும் பெறும் என்பது கருத்து. அவ்வுயர்ந்த யோக இலட்சியத்தின் ஆரம்பமான வாழ்வின் இலட்சியத்தை நாம்

  • மேல் மனத்தை விலக்கி,
  • ஆழ் மனத்தை விலக்கிக் காணலாம்,

எனச் சொல்ல வந்தேன். மானேஜர் பிரச்சினை தீர்ந்து போனதால் அதைக் கருதவில்லை.

அன்பர் - அன்னையை அறியும் சரணாகதி என்பதால் நெஞ்சு நிறைகிறது. ஆத்மா வெளிவருகிறது. மேலும் கேட்க ஆசையாக இருக்கிறது.

நண்பர் - நமக்கு முறை என்பதேயில்லை. சரணாகதியே எல்லாம். சரணாகதி மனிதனுக்கு எளிதில் எட்டாது.

அன்பர் - நம்மால் ஏதாவது முடியுமல்லவா?

 நண்பர் - நெஞ்சு நிறைவதும், ஆத்மா வெளிவரும் மனம் அமைதியாக இருப்பதால், அமைதி வளர்ந்தால் ஆத்மா வெளிவரும். வளரும் அமைதி தானே வளர்ந்து ஒரு நிலையில் நின்றுவிடும்.

அன்பர் - நான் இப்பொழுது அதைக் காண்கிறேன்.

நண்பர் - வளரும் அமைதி நம்மை (நம் personality) மலர்ந்து விரியச் செய்யும். இதற்கு ஏற்புத்திறன் receptivity எனப் பெயர். நூலின் கருத்து ஒன்றை நாம் கருதினால், அக்கருத்தின் சக்தியும் நாமும் சந்திப்போம். அன்னையின் அந்த சக்தி நம் வாழ்வில் பலிக்கும்.

அன்பர் - நம் பர்சனாலிட்டியைப் பெரிது செய்யலாம். அன்னையை அதிகமாக உணரலாம். இரண்டும் சந்திப்பது சித்தியாகுமோ?

நண்பர் - நூலில் கூறும் எல்லா அன்னையின் சக்திக்கும் நம் பர்சனாலிட்டி முழுவதும் திறந்து, விரிந்து, மலர்ந்து ஏற்பது நம்மால் முடிந்த சரணாகதி.

அன்பர் - ஸ்ரீ அரவிந்தர் கேட்கிறார், "அன்னை உன் சரணாகதியை ஏற்றபின் வேறென்ன வேண்டும்'' என்கிறார்.

நண்பர் - ஏதோ ஓர் அளவில் சமர்ப்பணம், சரணாகதி பலித்தால் அதைத் தொடர்ந்து போற்றுவதும், வளர்ப்பதும் நம் கடமை.

அன்பர் - தொடர்ந்து அனுபவிப்பதும் நம் பாக்கியம் என்று தோன்றும்.

நண்பர் - சினிமா, கதை, இலக்கியம், காவியம் எல்லாம் மனிதனுடைய இந்த இலட்சியத்தைக் காதலாக, உண்மையாக, வீரமாக, தைரியமாக, தியாகமாக, தவமாக வர்ணிக்கின்றன. ஓர் இழை பலித்தால் அந்த சினிமா உலகப் பிரசித்தி பெறுகிறது.

அன்பர் - உலகில் பரிசு வாங்குபவர் எல்லாம் இப்படித்தானிருக்கிறார்கள்.

நண்பர் - உலகம் அன்னையை இந்த விதமாக ஏற்கிறது என நாம் அறிகிறோம். ஆரோவில் ஸ்தாபிக்கப்பட்டபின் உலகயுத்தம் வாராது என்றார் அன்னை. இந்த வாரம் அணுகுண்டு ஒழிப்பை - 2/3 பாகம் ஒழிப்பை - அமெரிக்காவும் ரஷ்யாவும் ஏற்று கையெழுத்திட ஒத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அன்பர் - இவ்வளவு பெரிய விஷயம் யார் கண்ணிலும் பட்டதாகத் தெரியவில்லையே.

நண்பர் - பெரு வெற்றிகள் பறையறைவிப்பதில்லை என்று அன்னை கூறுகிறார். ஆயுதத் தளவாடக் குறைப்பு அமைதியின் வெற்றி.

அன்பர் - நான் "அன்னை'' என்ற நூலைப் பலமுறை படித்திருக்கிறேன். இப்படியெல்லாம் எனக்குத் தோன்றவில்லை.

நண்பர் - மானேஜர் பிரச்சினையால் மனம் அமைதியாய் விட்டதால், இப்பொழுது "அன்னை''யைப் படித்தால் அதிகப் பலனிருக்கும்.

அன்பர் - இங்கு, இப்பொழுது நாம் அந்த அமைதியைப் பற்றிப் பேசும்பொழுது அவ்வமைதி பேரமைதியாகத் தெரிகிறதே.

நண்பர் - அமைதியை உணர்வது மனம்.

அமைதியைப் பெற்றிருப்பது ஆன்மா.

ஆத்மா விழித்து மனத்தில் வெளிப்படுவது, உணர்வில் வெளிப்படுவது, உடலில்

வெளிப்படுவது அடுத்த அடுத்த கட்டங்கள்.

அன்பர் - உடலில் வெளிப்படுவதை நன்றி என்கிறார் அன்னை. நன்றி எழும்பொழுது உடல் புல்லரிக்கும்.

நண்பர் - உடல் புல்லரித்து நன்றியை உணர்வது யோகம் என்கிறார் அன்னை.

அன்பர் - எப்பொழுதோ ஒரு முறை நாம் அதை உணர்கிறோம். நம்மைப் பொருத்தவரை அதுவே இறைவன் வரும் தருணம் என்று கூறலாமா?

நண்பர் - நாமாக ஒரு காரியத்தைச் செய்ய நினைக்கக்கூடாது என்கிறார் பகவான்.

அன்பர் - சர்வ ஆரம்பப் பரித்தியாகம் என்பது அதுதானே.

நண்பர் - சன்னியாசம் புறத்தியாகம். தியாகம் அகம் பற்றறுப்பது. அதனால் சன்னியாசத்தைவிட தியாகத்தை உயர்வாகக் கூறுகிறது கீதை.

அன்பர் - பகவான் சர்வ ஆரம்பப் பரித்தியாகத்தைப் பற்றிக் கூறுகிறார்.

நண்பர் - அதுவே பூரண சரணாகதியாகும்.

****

 

Comments

அன்பரும் - நண்பரும் para 1,

அன்பரும் - நண்பரும்

para 1, line 1 - நூல் - நூலில்

do.   5 - lines 3 & 4 are to be joined

do.  line 4 - பலி க்கவில்லை -  பலிக்கவில்லை

do. 12, line 3 - வேலையிலி ருப்பார் - வேலையிலிருப்பார்

do.        do. 7 - பிரச்சினையில்லை - பிரச்சினையிலில்லை

do.     do. 12 - திறமைசாலி யாக  - திறமைசாலியாக

do.  18, line 3 - வெளியிலி ருந்து - வெளியிலிருந்து

do.  22, line 1  :   -பயந்தவனுக்கும் தைரியசாலி க்கும் -

                          - பயந்தவனுக்கும் தைரியசாலிக்கும்

do. 22, line 4 - தைரியசாலி க்கும் - தைரியசாலிக்கும்

do.  25, line 1 : -உண்மை என நம்பினால் அது பலி க்கும். -

                        - உண்மை என நம்பினால் அது பலிக்கும்.

do.  27, line 2 - ஆசையிருக்கும்.நம்பிக்கையிருக்காது. -

                   ஆசையிருக்கும். நம்பிக்கையிருக்காது.

do.  29, 2nd point, line 1 - from மானேஜர் to விலகவேண்டும்.-

                                     separate sentence.

 do.  29,     do.    line 2 - பிரச்சினையிலி ருந்து - பிரச்சினையிலிருந்து

do.  33 - பலி க்கும். - பலிக்கும்.

do.  35, line 1 - மனத்திலி ருந்து  - மனத்திலிருந்து

do.       do.  2 - ஆழ்மனத்திலி ருந்து - ஆழ்மனத்திலிருந்து

do.  37, 3rd point - பலி க்கும். - பலிக்கும்.

do.  39 - line 4 - from நீங்கள் மானேஜர் to இலட்சியத்தை நாம் - separate para

para 45, line 2 - receptivityஎனப் - receptivity எனப்

do.         do.   - நூலி ன் - நூலின்

do.        do. 4 - பக்கும் - பலிக்கும்

do.  46, line 1 :  -நம் : - நம்

do.  47, line 1  : -நூலில் : - நூலில்  

do. 49,   do.    :  -ஏதோ :  - ஏதோ

 

       book | by Dr. Radut