Skip to Content

09.திருமண வாழ்வில் திருப்தி

 திருமண வாழ்வில் திருப்தி

       வாழ்வைப் பூர்த்தி செய்ய நாடுவது திருமணம். இதுவரை இல்லாத திருப்தியை நாடிச் செய்வது திருமணம். இதுவரை இருந்த திருப்தியையும் அழிப்பது அதன் நடைமுறை. இலட்சியத் தம்பதிகள் என சொல்லிக் கொள்ள அனைவரும் ஆர்வம் கொள்கிறார்கள். இலக்கியத்தின் இலட்சணம் திருமணம், அது வாழ்விலில்லை என்பது அனுபவம்.

       ‘கணவன் - மனைவி’ என்ற கட்டுரையில் திருமணத்தின் அடிப்படைகள் எழுதப்பட்டுள்ளன. காதல், அழியாக் காதல், இலட்சியத் திருமணம், ஆதர்சத் தம்பதிகள் என்ற கருத்துகளைக் கருதாது, திருமண வாழ்வு திருப்தி தாராது என்ற உலகம் கண்ட முடிவுக்கு நடைமுறையில் பயன்தரும் கருத்துக்களைக் கருதுவது இக்கட்டுரை. இதன் முடிவு,


முழு முயற்சிக்கு முழு திருப்தியுண்டு.

இக்கட்டுரைக்கு முக்கியமான கருத்துகள் :

  1. முயற்சியின்றி பலனில்லை.

  2. உறவு என்பது பிரியம், அதிகாரமில்லை.

  3. அதிகாரம் செய்யக் கூடாது என்றால் அங்கு அன்பு சுரக்க வழியுண்டு.

  4.  முடிந்தால் எதையும் செய்வேன் என்பவன் மனிதனில்லை, அவன் கணவனாக முடியாது.

  5.  நடக்கும் என்றால் நடத்திக் கொள்வேன் என்பது நல்லதன்று, அவள் மனைவியாக முடியாது.

  6. என்னால் சண்டை போட முடியாது என்பவரால் சுமுகம் எழும்.

  7. பிறர் குறை பிணக்கு.

  8.  மனம் மாற்றாரை நாடினால் மணம் இல்லை.

  9.  சுத்தம் என்பது கை சுத்தம், வாய் சுத்தம், மனம் சுத்தமாகும்.

  10.  சுத்தமில்லாதவர்க்குச் சுத்தமாக எதுவும் கிடைக்காது.

  11.  உழைப்பில்லை எனில் வருமானமில்லை.

  12. பொறுப்பில்லை எனில் வசதியில்லை.

  13. பொறுமையில்லை எனில் எதுவுமில்லை

  14. முயற்சி, பிரியம், பண்பு, சுமுகம், சுத்தம், உழைப்பு, பொறுப்பு, பொறுமை எந்த ஸ்தாபனத்திற்கும் அடிப்படை. ஸ்தாபனங்களில் சிறந்த குடும்பம் அவையில்லாமல் உருவாகாது.

       மனிதன் சந்திரனுக்கும் போகிறான் என்பது திறமை. திறமையால் குடும்பம் உருவாகாது. குடும்பத்தின் கரு பண்பு. பண்பு குடும்பத்தை உற்பத்தி செய்யும். திறமை அதை உயர்த்தும். வாழ்வின் அடிமட்டத்திலுள்ளவர் ஆயிரக்கணக்கில் உயர் மட்டம் போகும்பொழுது திருமண வாழ்வில் திருப்தியடைய முடியுமா என்பது கேள்வியில்லை. முயன்றால் முடியும். அடிமட்டம் இன்று தான் உயர்மட்டமாகவில்லை. எந்த நாளிலும் உயர்ந்தவன் ஒரு நாள் அடியிலிருந்து வந்தவன். உயரே உள்ளது அனைத்தும் கீழேயிருந்ததுதான் என்பது உண்மை. அன்று உயர நாளாயிற்று. இன்று சீக்கிரம் பயனடையலாம், சீக்கிரம் பலன் பெற முயற்சி பெரியதாகவும், சிறந்ததாகவுமிருக்க வேண்டும்.

முயல்வேன் என்பவனுக்கு முடிவில் திருப்தியுண்டு.

       பொதுவாக அனுபவமில்லாததால் இளம் வயதினர் திருமணமான 10 நாள், 20 நாளில் விவாகரத்து செய்வது மலிந்துவிட்டபொழுது அமெரிக்க சர்ச்சுகள் திருமணத்திற்கென 15 நாள் பயிற்சியை ஏற்படுத்தினர். இப்பயிற்சி பெற்றவர்கள் அவசரமாக ரத்து செய்வதில்லை. இதைக் கண்டபின் அமெரிக்க சர்ச்சில் திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் இப்பயிற்சியைப் பெற்றிருக்க வேண்டும் என்று சர்ச் சட்டம் போட்டது.
* விவரம் தெரியாமல் நடக்கும் குறையை விவரம் தெரிவது தடுக்கும்.

* அனுபவமில்லாமல் எழும் குறைகளைப் போக்க பயிற்சி அளிக்க முடியும்.

 தாலுக்காபீஸில் குமாஸ்தாவாகச் சேரும் பட்டதாரிகளில் சிலர் இன்று சர்வீஸ் முடியும்பொழுது டிப்டி கலெக்டராக வருகிறார்கள். அதே பட்டதாரிக்கு 1½ஆண்டு பயிற்சி அளித்து, I.A.S.இல் ஆரம்பத்திலேயே டிப்டி கலெக்டராக்குகிறார்கள். ஒரு டிப்டி கலெக்டர் செக்ரட்டரியாகவும், கவர்னராகவும் ஓய்வு பெறுகிறார். அதற்கெல்லாம் அடிப்படை இந்த 1½ ஆண்டு பயிற்சி. டிப்டி கலெக்டர் ஒரு ஜில்லாவில் பாதியை ஆள்கிறார். திருமணம் என்பது குடும்பத்தை ஆள்வது. திருமணத்தில் திருப்தி வர பயிற்சி பெற முடியும், நாமே நமக்குப் பயிற்சியளித்துக் கொள்ள முடியும் என்று நாம் அறிய வேண்டும். அதுபோன்ற பயிற்சிக்கூடங்கள் பரவலாக வந்துவிட்டால் விவாகரத்து 50%லிருந்து 5% ஆகக் குறையும். அது இன்று இல்லாததால், நாமே அப்பயிற்சியைப் பெற முயல வேண்டும்.

* திருமணத்தில் எழுபவை எளிய பிரச்சினைகள்.

* பயிற்சி எல்லா எளிய பிரச்சினைகளையும் முழுவதும் தீர்க்கும்.

* படிப்பு, பண்பு, நகர வாழ்க்கை, நாகரீகம் உள்ள குடும்பங்களில் குடும்பப் பூசல் குறைவாக இருப்பது, பூசலைத் தவிர்க்க பயிற்சி பெற முடியும் எனக் காட்டுகிறது.

* படிப்பும், பண்பும், பல தலைமுறைகளில் தரும் பயிற்சியை, ஒரு பயிற்சி சில நாட்களில் தரமுடியும் என்பது எல்லாத் துறைகளிலும் அனுபவம். திருமணம் விலக்கில்லை.

       எல்லாப் பயிற்சிகளும் எல்லோர்க்கும் தேவையில்லை. எந்தப் பிரச்சினை எழுகிறதோ பயிற்சி அதற்குத்தான் தேவை. திருமணம் என்பது உறவு. நெருக்கமான உறவு. உறவு என்றால் பிரியம். பிரியமாக மட்டுமிருந்தால் பிணக்கு வாராது. பிரியத்தைக் கண்டவுடன் மனித சுபாவம் அதிகாரத்தை நினைக்கும். அதிகாரத்தைக் கருதினால் பிரியம் மறையும், உறவு முறியும். யார் அடுத்தவரை அதிகாரம் செய்வது என்பது திருமணமான முதல் நாள், இரண்டாம் நாள் முடிவாகும். மனிதன் சூட்சுமமானவன். அதிகாரம் செய்ய அணுவளவு இடமிருந்தாலும் விட்டுக்கொடுக்க மாட்டான். ஆயிரமாண்டிற்கு முன் பெண் மண்ணாக இருந்த நாளிலும் எந்தக் கணவனும் மனைவி பேச்சைக் கேட்பவன் என்று உலகம் அறியும் வகையில் பெண் உள்ளூர ஆட்சி செலுத்தினாள். இன்று இந்தியாவில் பெண்கள் கார் ஓட்டுகிறார்கள். அமெரிக்காவில் ஓர் இந்தியப் பெண் கார் ஓட்டிச் சென்றாள். எவரும் கண்டு கொள்ளவில்லை. அமெரிக்காவிலுள்ள இந்திய ஆண்கள் இப்பெண்ணை கோபமாகப் பார்த்து முறைக்கின்றனர். அமெரிக்கா ஆனாலும், காலம் 2001 A.D. ஆனாலும், அதிகாரம் உள்ளவரை ஆண்மகன் அதைச் செலுத்துவான். இது மனித சுபாவம்.

* நாடு முன்னேறுகிறது.

* நாட்டின் முன்னேற்றம் படிப்பிலும், வசதியிலும், நாகரீகத்திலும் தெரிகின்றது.

* அதே தொழிலாளி, கூலிக்காரன், வேலைக்காரி, இளைஞர்கள், பெண்கள் ஆகியவர்கட்குச் சமூகம் தரும் மரியாதை உயர்வதும் நாகரீகச் சின்னம்.

* நம்மால் முடிந்தாலும், நியாயமில்லாவிட்டால், நாகரீகம் இல்லாவிட்டால் செய்யக்கூடாது என்பது அதுபோல் நாகரீக சின்னம். அதுபோல் கடந்த 50 ஆண்டுகளாக சமூகம் கைவிட்டன பல. குழந்தைகளை அடிப்பது, நடுத்தெருவில் சண்டை போடுவது, சத்தமாக ஆபீசில் பேசுவது, Qவில் நிற்காமல் கூட்டமாக அடித்து மோதுவது போன்றவை குறைகின்றன. இவை நாகரீகச் சின்னங்கள்.

* கணவனும், மனைவியும் இந்தச் சின்னத்தை அதிகமாக நாடினால், பூசல் குறைந்து மறையும், திருப்தி ஏற்படும். முழுத் திருப்தி ஏற்படும். மனைவியிடம் கோபப்பட்டால் பொறுத்துக் கொள்வாள் என்பதால் அவளிடம் கோபத்தைக் காட்டுவது, கணவனை ஏமாற்றினால் கோபப்பட மாட்டான் என்பதற்காக ஏமாற்றுவது என்பவை சிறு விஷயங்கள் என்றாலும், அவற்றை விட்டுக் கொடுக்க மனம் வாராது.

சிறு விஷயங்களில் உள்ள பெரிய மனப்பான்மை  பெரிய விஷயத்தைப் பூர்த்தி செய்யும்.

       இதுபோன்ற சிறு விஷயம் பெரிய விஷமாகி 10 நாள் ஆர்ப்பாட்டம், பெண் தாய் வீட்டுக்குப் போனது, அடிதடி சண்டை வரை வந்தது பலர் அனுபவம். விஷயம் சிறியது என்றாலும் விட்டுக் கொடுக்க மனம் வாராது. ஏன் அவர் விட்டுக் கொடுக்கட்டுமே என்று தோன்றும்.

பெரிய பலனான திருப்தி சிறு விஷயத்தில் மறைந்துள்ளதும், மிகப் பெரிய பலனைத் தரும் என்பதும் வாழ்வில் நாமறிந்தும் பின்பற்றாத உண்மை.

       அதிகாரம் செல்லாத இடங்கள் ஆயிரம் உண்டு. செல்லுமிடங்களும் அநேகம் உண்டு. கணவன் மனைவி சண்டையில், “இதெல்லாம் ஆபீசில் செல்லுமா, உன் அண்ணனிடம் நடக்குமா, ஏன் தெருவில் காய்கறி விற்பவனிடமும் நடக்காது” என்று வாதம் வருகிறது.

* செல்லாத இடத்தில் அதிகாரத்தைச் செலுத்த முயல்வதில்லை.

* செல்லுமிடத்தில் அதிகாரத்தைச் செலுத்த முயலாதது நாகரீகம்.

* செல்லாமல் செலுத்தவில்லை, செல்வதால் செலுத்துகிறோம் என்பதைவிட ஒரு சட்டம், முறை, ஒழுங்கு, நியாயத்திற்குக் கட்டுப்படுவது நாகரீகம்.

* இது சுயக்கட்டுப்பாடு.

* சுயக்கட்டுப்பாடு ஏராளமான சண்டை வாக்குவாதத்தை விலக்கும்.

       இது லேசான மாற்றம். ஆனால் வீடே மாறிவிட்டதாகத் தோன்றும். உண்மையில் இது பெரிய மனமாற்றம்.

மனிதனுக்குக் கட்டுப்படுவதை விட மனத்தின் நியாயத்திற்குக் கட்டுப்படுவது நீடிக்கும்.

       அடுத்தவர் மனதில் நியாயமில்லை என்றால் மனம் விட்டுப் போகும். அது சுயநலம் என்று தெரியும். சுயநலம் தலை எடுக்காமல் அதிகாரம் எழாது. நியாயமில்லாமல் சுயநலமாக இருப்பவர் அதிகாரத்திற்குப் பணியும்பொழுது மனம் வாடும், சுருங்கும், அதன்பின் உள்ள அன்பு போகும், பிறகு வாராது.

       திருமணத்தில் மட்டுமன்று, வாழ்வில் எல்லா இடங்களிலும் ஏராளமான கட்டுப்பாடுகளை நாம் ஏற்றுக் கொண்டிருப்பதால் வாழ்க்கை நடக்கிறது. திருமணத்தில் அதுபோல் நமக்குரிய கட்டுப்பாடுகள் ஏராளம். பண்பு வெளிப்பட, திருப்தி ஏற்பட நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டுப்பாடுகளில் முக்கியமானவற்றுள் பலவற்றை இங்குக் குறிப்பிடுவோம். இவை எல்லா இடங்களுக்கும் பொது என்றாலும், நாம் திருமணத்திற்காக மட்டும் இங்குக் கருதுபவை இவை. வயதான பெற்றோரை நாடி 5 பிள்ளைகள் தம்பதியுடன் வந்தனர். அது family reunion குடும்பம் ஒன்று சேரும் நேரம். சுமார் 50 ஆண்டாக இக்குடும்பத்தில் உடன்பிறந்தவர்கள், சண்டையிட்டதில்லை என்பதை சண்டையும் பூசலுமான குடும்பத்தில் வளர்ந்தவர் கண்டு இதன் இரகஸ்யம் என்ன? என்று கேட்டார். அவர் பெற்ற பதில்,

சிறு வயதிலேயே எங்கள் பெற்றோர் கற்றுக் கொடுத்தது ஒரு சட்டம். எவரிடமும் அரசியல், பணம், ஜாதி ஆகிய மூன்றைப் பற்றியும் விவாதம் கூடாது. இந்த சட்டத்தால் எங்கள் குடும்பத்தினர் யாரிடம் பழகினாலும் சுமுகமாக இருப்பார்கள். எங்கள் குடும்பத்தினுள் எப்பொழுதும் சுமுகம் உண்டு.

       நண்பரிடையே தகராறு அதிகமாக எழுவது பணத்தால்தான். வாக்குவாதம் அரசியலுக்கு வந்தால் வாதம் சண்டையாக மாறுகிறது. ஜாதியைப் பற்றிப் பேசிவிட்டால், அதுவும் தவறாகப் பேசிவிட்டால், அதுவே கடைசி முறை சந்திப்பாகும். மேற்சொன்னது எளிய சட்டம். ஆனால் 50 ஆண்டு சுமுகம் தந்த சட்டம் அது. அது போன்று திருமணத்திருப்திக்காக நாம் பின்பற்ற வேண்டிய சட்டங்களில் முக்கியமானவை,

* எந்தக் குடும்பம் உயர்ந்தது என்ற வாதம் எழக்கூடாது.

* அடுத்தவர் குறையைச் சுட்டிக்காட்டுதல் அவசியம் தவிர்க்கப்பட வேண்டும்.

* அடுத்தவரிடம் நிறைவு இருந்தால் அதை மனம் பாராட்ட வேண்டும், வாயால் எடுத்துக் கூறலாம். கூறுவதைவிட உண்மையாக நம் மனம் பாராட்டினால், அடுத்தவருக்கு அது தெரியும்.

* கணவன் வீட்டார் குறை வேறொருவரிடம் காணப்பட்டால், அதைக் கணவன் முன்னால் கண்டிக்கக்கூடாது. “அவரைத் தானே சொன்னேன்” என்பது சமாதானமாகாது. தன் வீட்டுப் பழக்கம் குறையானது என மனைவி நினைக்கிறாள் என்றால் கணவன் மனம் புண்படும். அதுபோல் புண்பட்டால், அதன் பிறகு ஆறாது. மனைவி வீட்டு நல்ல குணம் மற்றொருவரிடம் காணப்பட்டால் அதை ஏற்பது, பாராட்டுவது, மனைவியின் மனத்தை நமக்கு நிரந்தரமாகச் சேர்க்கும்.

* விவரம் தெரியாதவரிடம் எடுத்துச் சொல்வது நல்லது. நல்லதை எடுத்துச் சொல்வதுபோல் கெட்டதை சொல்லாமலிருந்தால் போதாது. மனத்திலிருந்து அதை எடுத்துவிட வேண்டும். மனத்திலிருந்தால் ஒரு நாள் வெளிவரும்.

* அடுத்தவரிடம் பொறுக்க முடியாததை என்ன செய்வது என்று கேட்கக் கூடாது. கணவனோ, மனைவியோ அடுத்தவரில்லை. பொறுக்க முடியாதது என்பது இல்லை. பொறுமையைக் கற்றுக்கொள்ள ஏற்பட்டது என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். இதை நாம் அதிகாரம் உள்ள இடத்தில் செய்கிறோம். தாம்பத்திய உறவில் அவசியம் செய்யவேண்டும். அதிகாரத்திற்குப் பணிவதுபோல் அன்பிற்குப் பணிந்தால், இல்லாத அன்பும் சுரக்கும்.

* மாற்ற முயலக்கூடாது. மாற்ற முயன்றால் பழக்கத்தை மாற்றலாம். சுபாவத்தை மாற்ற முயலக் கூடாது. அது நிரந்தரப் பிளவுக்கு வழி செய்யும். நிர்ப்பந்தத்தால் இன்று ஏற்றாலும், சந்தர்ப்பம் மாறி, தம்பதிகள் பிரிய அது வழி செய்யும். எந்தச் சுபாவம் மாறப் பிரியப்படவில்லையோ அது விலகும் வழியை வாழ்வில் உற்பத்தி செய்யும்.

* படித்த குடும்பத்தில் படிக்காத மாப்பிள்ளை வருவதுண்டு. அவன் தன்னை அதிபுத்திசாலியாகக் கருதுவதும் உண்டு. மாமனார் வீட்டில் அவன் படிப்பின்மையைக் கண்டு கொள்ளாமலிருப்பது கடினம். ஆயிரம் வழியாக அது வெளிப்படும். அந்தச் சூழ்நிலையில் மாமனார் குடும்பம் தன்னைக் குறைவாக நினைக்கவில்லை என்ற கருத்துப்பட அவனே நினைக்கும்படி நடக்க அதிகபட்சப் பண்பு வேண்டும். ஒரு சொல் சொன்னாலும் இது போன்ற விஷயத்தில் அதுவே காலத்துக்கும் நிலைக்கும். சொல்லாமலிருக்க முடியாது. அது சண்டை என்று ஏற்பட்டுவிட்டால் முதலில் அதுதான் வெளிவரும். நம் மனதிலுள்ள அப்பெரிய குறை மருமகன் கண்ணில்படாமல் மற்ற விஷயங்களை வாக்குவாதம் செய்யவோ, சண்டை போடவோ பெரிய பண்பு போதாது. பக்குவமே தேவை.

* எந்தக் குறையையும் முயன்று ஓரளவு நிறைவு செய்யலாம். அதைச் செய்ய வேண்டும். மனக் குறையை மாற்ற முடியாது. அதனால் ஆரம்பத்திலிருந்தே கூடியவரை மனத்தில் குறை எழ அனுமதிக்கக்கூடாது.

* மனைவி, கணவனை ஏற்பதை, கணவன் மனைவியை ஏற்பதை மனதால் ஏற்க வேண்டும். மனம் அடுத்தவரை ஏற்காவிட்டால் மணம் இருக்காது. இதுவரை இல்லை என்றாலும், முயன்று மனத்தை ஏற்றுக்கொள்ளச் சொல்வது அவசியம்.

* என்னுடைய 36 வருஷ சர்வீசில் எனக்கு memoவந்ததில்லை, black mark வந்ததில்லை என்பவர் பலர். திருமணத்தில் Red entry இருக்கவேண்டும். Memo பெறக்கூடாது. பெற்றால் அதை ஈடு செய்ய red entry பெறவேண்டும்.

* Decision-making என்ற கட்டுரையில் எப்படி காரியம் நிறைவேறும்படி முடிவுகள் எடுப்பது என்பது விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. புறம் நிறைவாக இருந்து, அகம் குறையாக இல்லாவிட்டால் காரியம் நிறைவேறும் என்று அம்முடிவு கூறுகிறது. குடும்பத்தில் கணவன் முக்கியமான விஷயங்களில் மனைவியிடம் இந்தச் சட்டத்தைப் பின்பற்றினால், அதே சட்டத்தை மனைவியும் பின்பற்றினால் இரண்டு பலன் இருக்கும்.

1. செய்யும் காரியங்கள் அனைத்தும் கூடிவரும்.

2. கணவன் மனைவியிடையே சுமுகம் நிலவும்.

       ஒருவர் பின்பற்றினாலும் பெரும்பலன் வரும். முழுப் பலன் வர இருவரும் பின்பற்ற வேண்டும். உதாரணம் : வீடு கட்டுவது, பெரிய courseஇல் பிள்ளையைச் சேர்ப்பது, முக்கியத் திருமணத்தில் பெரிய வரிசை வைப்பது, வடநாட்டு tour போவது போன்ற எந்த முக்கிய வேலையானாலும், அது நம் சக்திக்குட்பட்டதா, அதற்குரியவை, சாதனங்களிருக்கின்றனவா என்பவை எளிதில் விளங்கும். புறம் என்பது rational factual situation அறிவுக்குரிய விவரங்கள். அகம் என்பது அபிப்பிராயம். புறமும், அகமும் நிறைவான காரியங்களை மட்டும் செய்ய இருவரும் முடிவு செய்தால், எல்லாக் காரியமும் கூடிவரும். அதைவிட முக்கியமாகக் காரியம் கெட்டுப்போனால் பிறரை -கணவனை, மனைவியை - குறை கூறும் சந்தர்ப்பம் எழும். அது இம்முறையால் தவிர்க்கப்படும்.

       சமர்ப்பணம் பயின்றவர் கணவன் மனைவி உறவை சமர்ப்பணத்திற்குட்படுத்தினால் இத்தனை விவரங்களும் நம் முயற்சியின்றி சமர்ப்பணத்துள் அடக்கம் எனக் காணலாம். இவ்வளவு முயற்சிகளையும் விவரமாக எடுத்துவிட்டு, எடுத்த முயற்சிகளைச் சமர்ப்பணம் செய்வது மேல்.

       ஒரு புத்தகமாக எழுத வேண்டியவற்றை 5, 6 பக்கங்களில் சுருக்கமாக எழுதினாலும், கருவான இடங்களிருப்பதால் இக்கட்டுரை தம்பதிக்கு முழுப் பலன் தரும். எங்களுக்குத் திருமணமாகி 10 ஆண்டாகிறது - 5 அல்லது 35 ஆண்டாகிறது - இப்படியெல்லாம் நாங்கள் இதுவரை நினைக்கவில்லை. ஏதோ நடந்தது. ஊரிலுள்ள குடும்பங்கள்போல் பல நேரம் சந்தோஷமாகவும், சில நேரம் கசப்பாகவும், எங்கள் சுபாவப்படி இதுவரை இருந்துவிட்டதால் எங்கள் சுபாவங்கள் வெளிப்பட்டு அவற்றிற்கேயுரிய உருவங்கள் பெற்றுவிட்டன. அன்றே நாங்கள் அன்னையை அறியவில்லை, என்று நினைப்பவர் உண்டு.

காலம் கடந்துவிட்டதால், கண்கண்ட தெய்வம் கைவிடாது

என்பது அன்னைக்குரிய மந்திரம்.

       இதுவரை நடந்தது, போனது போகட்டும் என்று நினைத்து, இனி திருப்தியை நாடுவோம் என்றால் இம்முறை பொறுமையாகத் தன் பலனைத் தரும். பொறுமை பெரியது, அன்னை அதனினும் பெரியது. திருப்திக்குக் குறைவில்லை, குறைவேயில்லை என்று இனி பலன் உண்டு. அதைக் கடந்த நிலையும் உண்டு :-

இதுவரை கசந்தது என்பதால் இனி அதிக

இனிமையுண்டு என்பது அந்த மந்திரம்.

அப்பலன் வேண்டுவோர் திருவுருமாற்றத்தை நாட வேண்டும்.

இதன் தத்துவத்தை மட்டும் குறிப்பிடுகிறேன்.
* தாழ்ந்தது, தாழ்ந்ததில்லை.

* தாழ்ந்தது திருவுருமாறினால் உயர்ந்ததினும் உயர்ந்ததாகும்.

* திருவுருமாற்றம் ஏற்பட, இன்று நம் மனநிலையின் உண்மையை மனம் ஏற்க வேண்டும்.

* ஏற்றபின் அம்மனநிலையைச் சரணம் செய்யவேண்டும்.

* யோகத்தில் சரணாகதி மிகச் சிரமமானது, முடிவான கட்டம்.

* குடும்பம் என்பதால் அவ்வளவு சிரமமிருக்காது.

* மனம் மாறிய அதே நேரம் ஆச்சரியமாக வாழ்வு மாறும்.

* இதைவிடக் கடினமானது ஒன்றுண்டு. இவ்வளவு சிரமப்பட்டு ஆயிரத்திலொருவர் பெறக் கூடியதைப் பெறுவதும் முடியும். பெற்ற பின் நமக்கே பொறுக்காது. நம் பழைய குணம் தலைதூக்கி கேலி, குத்தல், உறுத்தலுக்குரியவற்றைச் செய்யத் துடிக்கும். இதைச் செய்யாமலிருப்பது மனிதனுக்கு முடியாது. முடிந்தால் அவர் திருமண வாழ்வின் திருப்தி வளர்ந்தபடியிருக்கும்.
 

திருமண வாழ்வில் பூரண திருப்தி எழ உதவும் பரிபூரண ஞானம்

       மேற்சொன்ன ஞானம் இன்று உலகில் இல்லை. இருப்பதாகச் சொன்னால் நம்புவதை விட கேலியாக நினைப்பார்கள். The Life Divineனுடைய  சிருஷ்டியின் இரகஸ்யத்தை வாழ்வில் பொருத்திப் பார்க்கும்பொழுது எழும் ஞானம் இது. இது உண்மையா என்றறிவது சுலபம். ஏனெனில் இந்த ஞானத்தின் சட்டம் வாழ்வின் சட்டம். பெரும்பாலும் தலைகீழாகவும், சில சமயங்களில் நேராகவும் செயல்படும் உதாரணங்கள் ஏராளம். எவரும் சொந்த வாழ்விலும், அனுபவத்திலும் பல இடங்களிலும் பார்க்கலாம். அந்த அனுபவத்தின் மூலம் இந்த சட்டத்தை திட்டவட்டமாக விளக்கலாம். புரிந்து கொள்வது எளிதல்ல. சிரமப்பட்டுப் புரிந்து கொள்ளலாம். ஏற்பது சிரமம். புரிந்து கொண்டதை ஏற்க முன் வருபவர்க்கு பூரண திருப்தி வாழ்வில் எழும். அது முக்கியமல்ல. மிக முக்கியம் என அனைவரும் கருதுவர். “என் திருமண வாழ்வு எனக்குப் பூரண திருப்தி தரும் என்றால் எனக்கு அதற்கு மேல் எதுவும் தேவையில்லை” என்பவர் பலர். அதைவிட முக்கியமானது ஒன்றுண்டு. அது பலித்தால், வாழ்வு உயர்ந்து, உயர்ந்த நிலையில் பூரண திருப்தி ஏற்படும். முதல் திருப்தி பிரச்சினைகள் மறைவதால் ஏற்படுவது. அடுத்தது வாய்ப்புகள் பூர்த்தியானபின் எழும் திருப்தி. வாய்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வாய்ப்பு இது எனவும் கூறலாம்.

       பொதுவாக நம் அனுபவத்தில் கீழ்க்கண்டவற்றைக் காண்கிறோம். நான் கூறுவது இந்நிகழ்ச்சிகளை விளக்கும் சட்டம். இந்நிகழ்ச்சிகள் நல்லெண்ணத்தாலும், கெட்ட எண்ணத்தாலும், உதவி மனப்பான்மையாலும், போட்டி மனப்பான்மையாலும், துரோகத்தாலும் நடப்பவை. நமக்கு நல்லெண்ணம் நல்லது, கெட்ட எண்ணம் கெட்டது. சட்டம் இரண்டிற்கும் ஒன்றே. இங்கு முக்கியமாகச் சட்டத்தைக் கருதுவோம். ஒருவர் எண்ணம் அடுத்தவர் வாழ்வில் பலிக்கும், அடுத்தவர் வாழ்விலும் என்பதே அந்த சட்டம். சில உதாரணங்கள்,

1. எனக்கு நல்ல மாப்பிள்ளை அமையவில்லை, என் தங்கைக்கும் படித்த மாப்பிள்ளையை எதிர்பார்க்கும் நிலை நமக்கில்லை. என் தங்கைக்காவது படித்த மாப்பிள்ளை வேண்டும் என்ற எண்ணம் தங்கையின் வாழ்வில் இருமுறை பலித்தது.

2. ஏராளமாகப் படிக்க எல்லா சந்தர்ப்பங்களும், எல்லா வசதியும் உள்ளவர்க்குப் படிப்பில் நாட்டமே இல்லை. அதுபோன்ற சந்தர்ப்பம் எதுவும் இல்லாத உடன் பிறந்தவர் வாழ்வில் அது பெரிய பட்டம் பெற்றுக் கொடுத்தது.

3. குரு ஸ்தானத்திலுள்ளவர்க்கு பொருத்தமில்லாத அல்ப ஆசைகள். பிரபலம் எனில் உயிர். பணத்தில் மிகவும் நேர்மையானவர். ஆனாலும் ஆசை அதிகம். ஆயிரம் பேர் தன்னை நாடி வர வேண்டும் என்ற ஆவல் கட்டுக்கடங்காமல் வாயிலிருந்து வெளிவரும். அவைகள் தேவையில்லாத சிஷ்யன் வாழ்வில் அவை அபரிமிதமாக பலித்தன.

4. கணவன் சம்பாதித்த நாட்களில் ரூபாய் நோட்டை கையால் தொடும் பாக்கியமில்லாத பெண்மணிக்கு அவர் ஓய்வு பெற்றபின் வருமானம் முழுவதும் அவர் கையிலேயே வந்துவிட்டது. அது பெரிய வருமானம். மனைவியிடம் பணமே கொடுக்கக் கூடாது என்ற எண்ணம், இவர் கையில் பணமே வரக்கூடாது என்று பலித்தது இவருடைய எண்ணம் என இவருக்குத் தெரியுமா?

5. கணவன் அனைவருக்கும் உதவக் கூடியவர். அதனால் அவருக்குத் திருப்தி. நாள் கடந்து வாழ்வு மாறியபொழுது மனைவி அனைவருக்கும் ஆத்மீக உதவி செய்யக் கூடிய நிலை ஏற்பட்டது. அதனால் அனைவருக்கும் ஆத்ம திருப்தி. கணவனின் அம்சம் மனைவிக்கு அதிகமாகப் பலித்தது.

6. தான் கல்லூரி ஆசிரியராக வேண்டும் என்ற முயற்சி பலிக்காத நேரம், உடனிருந்த ஆசிரியர்களாவது அதைப் பெற வேண்டும் என முனைந்ததில் நெருங்கிய நண்பர் ஒருவரும், நேர் எதிரி ஒருவரும் அதைப் பெற்றனர்.

7. Pride and Prejudice கதையில் எலிசபெத்திற்கு விக்காம் மீது மனம் நிறைந்த ஆசை. அவள் ஆசை லிடியாவின் வாழ்வில் பலித்தது. அது எலிசபெத் தன்னையறியாமல் லிடியாவிற்களித்த பரிசு.

8. லஞ்சம் வாங்கும் ஆபீசர்கள் லஞ்சம் வாங்கும்பொழுதே இது தவறு என்னால் வாங்காமலிருக்க முடியவில்லை. என் மகனாவது சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அது பிள்ளைகள் வாழ்வில் பலிக்கும்.

* கணவன் மனைவிக்கு தங்கையின் உரிமையைக் கொடுக்கப் படாதபாடுபட்டால் அது மனைவிக்குப் போவதில்லை. அவ்வெண்ணம் தங்கையின் வாழ்வில் அபரிமிதமாகப் பலிக்கிறது.

* எது கணவனுக்கு இம்மியளவும் வர மனைவிக்குச் சம்மதமில்லையோ அது அவனுக்கு ஏராளமாக வருகிறது.

* உரிமையில்லாத இடத்தில் கொடுக்க முடியவில்லை.

* உரிமையுள்ள இடத்தில் கொடுக்காமலிருக்க முடியவில்லை.

* திட்டு அதிர்ஷ்டத்திற்கு டிரான்ஸ்பர் ஆர்டர்.

       மேற்சொன்னவை விளங்கினால் அவை நம் வாழ்வில் எந்த அளவு உண்மை என யோசனை செய்ய வேண்டும். பெரும்பாலும் உண்மை என்று தெரிந்தால் அது சரியாகப் புரிவதில்லை என்பது பொருள். நூற்றுக்கு நூறு உண்மை எனப் புரிந்தால் புரிவதாக அர்த்தம். அதற்குக் குறைந்து புரிவது சரியில்லை. புரியும் வரை நம் வாழ்வையும் மாமியார், மாமனார், கணவன், மனைவி, மைத்துனர்கள், குழந்தைகள், நண்பர்கள், உறவினர்கள் வாழ்வு தெரிந்த அளவுக்கு ஆராய்ச்சி செய்ய வேண்டும். பெரும்பாலும் புரிபவர்களைக் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டாம். முழுவதும் புரிகிறது என்பவர்களை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

* அவர்கள் புரிந்த சட்டத்தை முழுவதும் மனதால் ஏற்று, அதற்கேற்ப மனம் மாறி செயல்பட முன்வருவார்களா? வருவார்கள் எனில் அவர்கள் செய்யக் கூடியது என்ன? அது ஒரு தீர்மானம்.

* இதுவரை போனது போகட்டும். இனி என் மனைவிக்கு அல்லது கணவனுக்கு எது உரிமையோ - பொருள், உரிமை, அதிகாரம், புகழ், பாராட்டு, சந்தோஷம், உடல் நலம் - அதை நான் மனதால் கிடைக்க விரும்புவேன் என்று தீர்மானம் செய்ய வேண்டும்.

உரியதை உரியவர்க்கு உளமாரத் தரும் முடிவு.

       ஒருவருக்கு ஏற்படும் மனமாற்றம் நல்ல கணிசமானப் பலன் தரும். பெரும் பலன் வேண்டுமானால் இருவரும் அம்முடிவுக்கு வரவேண்டும். முதற்பலன் flat secretary ஆனது போலும், அடுத்த பலன் மத்திய மந்திரி ஆனதுபோல் பெரும் வித்தியாசமுடையன.

* நாம் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும், அடுத்தவருக்குச் சேர வேண்டியது எப்படியோ, தடம் மாறி, எப்பொழுதாவது கசங்கி, நசுங்கி வரப்போகிறது. என் மனம் மாறி அதை நான் கொடுக்க முன் வந்தால் அழகாக, அபரிமிதமாக உடனே வரும்,

என்பது தெரிந்த பின்னும் மனம் இசையாது. நம்பிக்கையில்லை என்று மனம் கூறும். அப்படியொன்றும் எதுவும் வாராது, வரும் என்றாலும் வேண்டாம் என்ற சொல் ஜபம்போல மனதிலிருந்து எழும். மனம் இந்த இடத்தில் மாறுவது பெரிய புரட்சி. இது ஒரு குடும்பத்தில் நடந்தால் அக்குடும்பம்,

* அளவுகடந்த சந்தோஷத்தை,

* எட்ட முடியாத உயரத்தில்,

* அனுபவிப்பார்கள்.

 

****

 



book | by Dr. Radut