Skip to Content

08.லைப் டிவைன் - கருத்து

 “லைப் டிவைன் - கருத்து” 

P.13. Forth now and fresh forward also in other fields

         ஆராய்ச்சி என ஆரம்பித்தால், அது தொடரும்

       ஒரு குற்றம் நடந்துவிட்டால், நாம் கூப்பிடாவிட்டாலும் போலீஸ் வரும். நாமே போலீஸில் புகார் செய்து போலீஸ் வந்துவிட்டால், பாதிக்கப்பட்டவர் விலக நினைத்தாலும், போலீஸ் விடாது. கிராமத்திலுள்ளவர்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்த பின், அவர்கள் நகரத்தில் வேலை செய்து, அங்கே குடியிருக்கும்பொழுது மகனைப் பார்க்கப் போனால், மகன் அவன் நண்பர்கள் எதிரில் தாய் தந்தையரைக் கண்டு வெட்கப்படுவதைக் காண்பதுண்டு. இதைக் கண்ட வேறு சில கிராமத்தார்கள், “படிப்பு வந்துவிட்டால், பிள்ளை என்னை மதிக்கமாட்டான். நான் அந்தத் தப்பைச் செய்யமாட்டேன்” என, படிக்கப் போவதை அனுமதிப்பதில்லை. படிப்பு என்றால் அறிவு, நாகரீகம், நகர வாழ்வு, பண்பு, சுத்தம். ஒரு முறை அது உள்ளே வந்துவிட்டால், அதன் பிறகு மகனால் மீண்டும் அநாகரீகமான கிராம வாழ்வைப் போற்ற முடியாது. ஆராய்ச்சி என ஆரம்பித்தால், அதை எந்த நிலையிலும் தடுத்து நிறுத்த முடியாது.

       நாகரீகம் வளரும்பொழுது இதைக் காணலாம். புதியது என்பது அறிவுக்குரியது. ஆராய்ச்சி அதன் கருவி. மனித வாழ்வு உடலுக்குரியது. மனம் இரண்டு படி உயர்ந்தது. உயர்ந்ததன் கருவியான ஆராய்ச்சியை உள்ளே விடலாம், வெளியே போகச் சொல்லும் உரிமை நமக்கில்லை

பெண் சம்பாதிக்கப் போனால், புருஷனை மதிக்கமாட்டாள்.

பையனிடம் பெட்டிச் சாவியைக் கொடுத்துவிட்டால், கட்டுப்பட மாட்டான்.

தொழிலாளிக்கு உரிமை வந்துவிட்டால், கம்பெனியை நிர்வாகம் செய்யமுடியாது.

வியாதியஸ்தனுக்கு வியாதியின் விபரம் தெரிந்தால், குணப்படுத்துவது கஷ்டம்.

பிள்ளைகட்குப் பெரியவர்களது இரகஸ்யம் தெரிந்தால், பிள்ளைகள் நிம்மதி போய்விடும்.

       இவைபோன்ற கருத்துகளை நாம் எங்கும் கேட்கிறோம். இவற்றில் பெரும்பாலும் உண்மையுண்டு. முழுவதும் உண்மை என எடுத்துக் கொள்ள முடியாது. இங்கெல்லாம் உள்ளது,

ஆன்மீக உண்மை, அது பெரியது.

நாகரீகம் வளர்ந்ததே அது போலத்தான்.

       இதைச் சார்ந்த வேறு ஒரு விஷயம் கவனிக்கத்தக்கது. சுமார் 130 வருஷத்திற்கு முன் மின்சார பல்ப் வந்தது. பல்புக்காக என்றாலும் வந்தது மின்சாரம். இன்று மின்சாரம் ஆயிரம் இடங்களில் பயன்படுகிறது. மின்சாரம் கெடிகாரத்திற்கும், சமையலுக்கும் வந்துவிட்டது. மின்சாரம் பயன்படாத இடமேயில்லை. பிளாஸ்டிக்கும் அது போலவே. புதியதாக வந்த எதுவும் முடிந்த அளவு வாழ்க்கையில் எல்லா அம்சங்களிலும் பரவும். அது தவிர்க்க முடியாதது.

ஆராய்ச்சி அறிவின் கருவி.

மனிதன் உடலாலும், உணர்வாலும் வாழ்பவன்.

ஆராய்ச்சி மனத்திற்கும், அறிவிற்கும் உரியது.

அறிவை உடலிலும், உணர்விலும் செயல்பட அனுமதிக்கும் நாகரீகம் அது பரவுவதைத் தடுக்கப் பிரியப்படாது, பிரியப்பட்டாலும் முடியாது என்ற அடிப்படையான உண்மையை மேற்சொன்ன கருத்து சுட்டிக் காட்டி வலியுறுத்துகிறது. Life Divineக்குரிய சிறப்பு அம்சங்களில் இதுவும் ஒன்றாகும்.

****

 



book | by Dr. Radut