Skip to Content

06.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

       எங்கள் வாழ்க்கையில் அன்னை அவர்களின் துணையால் நடந்த சில அனுபவங்களை இங்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன்.

       என்னுடைய மனைவியின் பெயர் திருமதி M. தனலட்சுமி. அவருக்கு வயது 34. அவர் அரசுத் துறையின் பள்ளியில் உதவி ஆசிரியராகப் பணிபுரிகிறார். என் மனைவிக்கு 1997ஆம் வருடம் கடுமையான வயிற்றுவலிவந்தது. நான் அவரை வேலூரில் உள்ள CMC மருத்துவமனையில் சேர்த்தேன். அவருக்கு வயிற்றில் கல் இருப்பதால் தாமதிக்காமல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார்கள். நாங்கள் அன்று வீட்டிற்கு வந்த மறுநாள் மருத்துவமனையில் சேர்வதாக இருந்தோம். அன்று இரவு நான் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தபோது விடியற்காலை என்னுடைய கனவில் கருமை நிறத்தில் இருக்கும் மனிதர் ஒருவர் வந்து ‘நீ இப்பொழுது உன் மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டாம் பிறகு பார்த்து கொள்ளலாம்’ என்று கூறினார். நான் முதன் முதலில் அன்னையின் தியான மையத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் சென்று இருந்தேன். தியான மையத்திற்கு வரும் என் நண்பரிடம் இதுபற்றிக் கேட்டதற்கு உன் கனவில் வந்தவர் மகான் ஸ்ரீ அரவிந்தர்தான் என்று கூறி அவர் சொல்லியபடி இப்பொழுது அறுவை சிகிச்சை வேண்டாம் என்று கூறினார். அதன்படி ஒரு வருடம் கழித்து அந்த அறுவை சிகிச்சையை என் மனைவிக்கு செய்தார்கள். அதுவரை என் மனைவிக்கு ஒரு நாள் கூட வயிற்று வலிவரவில்லை. அறுவை சிகிச்சை முடிந்த உடன் பாண்டிச்சேரி சென்று அன்னையை வழிபட்டு வந்தோம். என் மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் பெயர் Dr.அரவிந்தன் நாயர் அவர்கள்.

       என்னுடைய மனைவி பணி செய்த இடத்தில் இருந்து வேறு இடத்திற்குப் பணி மாற்றம் செய்வதற்கு மிகவும் கடினமாக இருந்தது. அப்பொழுது ஒரு நாள் நானும் என் மனைவியும் அவர்களுக்குப் பணி மாறுதல் கிடைத்த பள்ளிக்குச் சென்று பார்த்தோம். அப்பள்ளி மிகவும் சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் என் மனைவிக்கு அப்பள்ளியில் சேர்வதற்கு மிகவும் தயக்கமாக இருந்தது. அன்றே நாங்கள் வேறு ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியரைப் பார்ப்பதற்காகச் சென்றோம். என் மனைவிக்கு அந்த பள்ளியைப் பார்த்தவுடன் மிகவும் பிடித்து இருந்தது. நான் வேலை செய்வதாக இருந்தால் இந்தப் பள்ளியில் வேலை செய்ய வேண்டும், அதற்கு அன்னைதான் அருள் புரிய வேண்டும் என்று கூறினார். ஆனால் அந்தப் பள்ளியில் போதுமான ஆசிரியர்கள் இருப்பதால் இங்கு நமக்குக் கிடைக்காது என்று இருந்தோம். ஆனால் ஒரு வாரத்திற்குள் என் மனைவிக்கு அப்பள்ளியில் வேலையில் சேர்வதற்கான உத்தரவு வந்து உடனே அந்த உத்தரவை எடுத்துக் கொண்டு அன்னையின் தியான மையத்திற்குச் சென்று அன்னையை வணங்கி வேலையில் சேர்ந்தோம்.

       ஒரு முறை நாங்கள் வீட்டு மனை வாங்குவதற்காக ஓர் இடம் பிடித்து இருந்தது. ஆனால் அதன் உரிமையாளர் நாங்கள் கேட்ட விலைக்குத் தர இயலாது என்று கூறிவிட்டார். நானும் என் மனைவியும் எதுவாக இருந்தாலும் அது அன்னையின் விருப்பம், அன்னைக்கு விருப்பம் இருந்தால் நமக்குக் கிடைக்கும் என்று இருந்தோம். ஒரு மாதம் கழித்து வீட்டு மனையின் உரிமையாளர் எங்களைத் தேடி வந்து நாங்கள் முதல் கேட்ட விலைக்கே எங்களுக்கு விற்றுவிட்டார். நிறைய பேர் அந்த வீட்டு மனையை அதிக விலைக்குக் கேட்டும் தராமல் எங்களுக்கு தந்ததற்கு அன்னையின் அருள்தான் காரணம்.

       என்னுடைய மனைவிக்கு 2001 வருடம் மார்ச் மாதம் மிகவும் கடுமையான வயிற்றுவலி, வாந்தியால் பாதிக்கப்பட்டு CMC மருத்துவமனையில் சேர்த்து இருந்தோம். ஒரு நாள் இரவு என் மனைவி வலியால் துடித்துக் கொண்டே அன்னையை நினைத்துக் கொண்டு தூங்கிவிட்டார். திடீர் என்று அம்மா என்ற பெரும் சத்தம் கேட்டது. திடுக்கிட்டு எழுந்த என் மனைவி பார்த்தபொழுது அறையின் வாயிலில் ஒரு நர்ஸ் நின்று கொண்டு இருப்பதுபோல தோன்றியது. எழுந்து அருகில் சென்று பார்த்தபொழுது யாரும் இல்லை. அந்தத் தோற்றம் உடைய நர்ஸ் அதுவரை அந்த மருத்துவமனையில் பார்த்ததும் இல்லை. அதன்பிறகும் என் மனைவி பார்க்கவில்லை. அவர் வந்து சென்றதில் இருந்து மிக விரைவில் குணம் அடைந்து வீடு திரும்பினார். நாங்கள் இருவரும் வந்தது அன்னைதான் என்று தெரிந்து கொண்டோம்.

       நான், என் மனைவி, மகள், மகன் அனைவரும் எந்த வேலை தொடங்குவதாக இருந்தாலும் முதலில் அன்னையை வணங்கிவிட்டுத் தான் செய்வோம். வேலை முடிந்த உடன் தியான மையத்திற்குச் சென்று அன்னையை வணங்கிவிட்டு வருவோம்.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

உனது அதிகபட்சக் கவர்ச்சியை விட, அன்னை ஈர்த்ததில் பக்தி ஜனிக்கிறது.

கவர்ச்சியைக் கடந்த பக்தி.

 

 



book | by Dr. Radut