Skip to Content

05.அஜெண்டா

Agenda

ஆயிரம் ஆண்டுகட்குப் பின் ஸ்ரீ அரவிந்தர்

       ஸ்ரீ அரவிந்தரை உலகுக்கு எடுத்துக் கூற அன்னை பிரியப்பட்டார். சுமார் 1000 நூல்கள் ஸ்ரீ அரவிந்தர், அன்னை, சாதகர்கள், பக்தர்களால் எழுதப்பட்டு ஆசிரம அச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளன. நேரடியாக ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் எழுதிய நூல்களைப் பொதுமக்கள் படித்துப் பயன்படுதல் குறைவு.

       அவற்றை எளிய முறையில் எழுதுவது கடினம். எழுதினால் எழுத்து வரலாறாகவோ, தத்துவமாகவோ அமையும். படிப்பவர் உள்ளத்தையும், அதைக் கடந்து ஆன்மாவையும் தொடும்படியாக எழுத்து அமைய வேண்டும் என்பது அன்னையின் விருப்பம். தந்திர யோகம் பயில இந்தியா வந்த பிரெஞ்சுக்காரர் அன்னையையும் வந்து சந்தித்தார். இவரைப் பார்த்தபின் அன்னை தம் யோக சக்தியால் இவருடைய முற்பிறப்புகளை அறிய முற்பட்டார். அன்னையுடன் முற்பிறப்புகளில் இவர் இருந்திருக்கிறார். அவர் பிரெஞ்சு மொழியில் பிரபல எழுத்தாளர். அவரிடம் தாம் விரும்பும்படி ஒரு நூல் எழுதக் கேட்டுக் கொண்டார். அவர் ஏராளமான நூல்கள் எழுதியவர். அன்னை விரும்பும் பாணியில் எழுத அவர் எளிதில் சம்மதிக்கவில்லை. தந்திர யோகத்தைத் தொடர்ந்து ஓரளவு பின்பற்றுபவர். அன்னை இவருக்கு சத்பிரேம் எனப் பெயரிட்டார். அஜெண்டாவை இவர் மூலம் எழுதினார். அஜெண்டாவை விட அன்னைக்கு ஸ்ரீ அரவிந்தரைப் பற்றிய நூலே முக்கியம்.

       இது பற்றி சூட்சும உலகில் அன்னை ஸ்ரீ அரவிந்தரிடம் பேசுவார். நெடுநாள் தாமதத்திற்குப் பின் நூல் தயாராயிற்று. அன்னை நூலுக்கு Adventure of Consciousness எனப் பெயரிட்டார். அதில் பிரசுரிக்க ஸ்ரீ அரவிந்தர் படம் ஒன்றை அன்னை தேர்ந்தெடுத்தார். அப்படத்தைப் பார்த்துவிட்டு, “நான் முதன் முறை ஸ்ரீ அரவிந்தரை மாடிப்படி உச்சியில் கண்டபொழுது இதே தோற்றத்தில் கண்டேன்” என்றார்.

       சத்பிரேமுடன் பேசிக்கொண்டிருந்தபொழுது அன்னை தியானத்திலாழ்ந்தார். கண்விழித்துப் பேசினார்.

       “ஸ்ரீ அரவிந்தரை உலகம் ஏற்கும் என நான் அறிவேன், அடுத்த நூற்றாண்டில் உலகம் முழுவதும் ஸ்ரீ அரவிந்தரை ஏற்கும். இன்று புத்தரும், ஏசுவும் legend ஆக இருப்பதைப்போல் ஆயிரமாண்டு கழித்து ஸ்ரீ அரவிந்தர் legend ஆக இருப்பார் என நான் அறிவேன். இப்பொழுது தியானத்தில் அந்த ஆயிரமாண்டு கடந்த நிலைக்குப் போய் உலகம் எப்படி ஸ்ரீ அரவிந்தரை ஏற்றுக் கொண்டுள்ளது எனக் கண்டேன்” என்றார்.

       நூறாண்டில் private property சொந்தச் சொத்து இருக்காது, திருமணமிருக்காது, வாரிசு உரிமையிருக்காது என்பது அன்னையின் தீர்க்க தரிசனம். திரிகாலத் திருஷ்டியால் அவர் கூறியவை இவை.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

பக்தி எனும் மனித உணர்வுக்காக மழை பெய்கிறது. வானை நோக்கிப் போகும் உணர்வு வானை நோக்கி வளரும் மரங்களால் சித்தரிக்கப்படுகிறது.

 



book | by Dr. Radut