Skip to Content

13.லாண்டரி ரூம்

 லாண்டரி ரூம்

       அன்னை பக்தர் பெரு நகரத்தில் அபார்ட்மெண்ட்டில் குடியிருப்பவர். பல நாள் அன்னை நினைவு சாதாரணமாக இருக்கும். நெகிழ்ந்த நேரம் வந்து நெடுநாளாயிற்று. நான் அன்னையை விட்டு விலகிவிட்டேனா என்று நினைத்தபொழுது 30 ஆண்டுக்கு முன் அன்னையிடம் வந்தவர் அன்னையை முதலில் அறிந்து அற்புதமாகப் பேசியபொழுது "எல்லாம் முதலில் இப்படித்தான் எனக்கும் இருந்தது. போகப்போக நீயும் என்போல் மாறிவிடுவாய், என்று கூறியது நினைவு வந்தது.

       அன்னை மீது மனம் முன்போல் உருக வேண்டும் என்றால் அதற்கும் அருள் வேண்டாமா என நினைத்து நிமிர்ந்து பார்த்தபொழுது படத்தில் அன்னையின் கண்கள் உயிரோடிருப்பதைக் கண்டு உடல் சிலிர்த்தது. பழைய உணர்வுகள் வந்தன. மனம் நெகிழ்ந்தது. அன்னை மறந்துவிட்டதோ எனப் பயப்பட்டவருக்கு, “இல்லை, இதோ இருக்கிறேன்”, என்று சொல்வதுபோல் சிறு சிறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்தபொழுது மனம் இளகி இப்படியிருக்கும்பொழுது அன்னை தவிர வேறெது வேண்டும் என்று நினைத்து பக்தர் நிறைவடைந்தார்.

       லாண்டரி ரூமுக்குப் போக வேண்டும். அபார்ட்மெண்ட்களில் உள்ள ஏற்பாடு இது. சென்ற முறை அங்குப் போனபொழுது அன்னையை அனுப்பிவிட்டுப் போனதும், போனவுடன் லாண்டரி ரூம் வழக்கத்திற்கு மாறாக சுத்தமாகத் துடைக்கப்பட்டு இருந்தது நினைவுக்கு வந்தது. இம்முறை அன்னையை முன்போல் அனுப்பிவிட்டு, அவர் நினைவாக லாண்டரி ரூமுக்குப் போனால்,

       பழைய மெஷின்கள் மாற்றப்பட்டு புது மெஷின்கள் வைக்கப்பட்டிருந்தன. சந்தோஷமாக வேலையை முடித்துக் கொண்டு வந்தார். மறு நாள் நண்பரிடம் தம் அனுபவத்தைக் கூறினார். எங்கள் அபார்ட்மெண்ட்டில் அது போலில்லையே.மூன்று வருஷமாக ஒரே மெஷின் தானே இருக்கிறது என்றார்.

****

 

 



book | by Dr. Radut