Skip to Content

10.எது நியாயம்

அன்னை இலக்கியம்” 

              எது நியாயம்   

             (அக்டோபர் இதழ் தொடர்ச்சி...) 

             இல. சுந்தரி

       அன்று கம்பெனிக்குச் சரக்கு வாங்கிப் பார்சல் ஏற்றி அனுப்பும் வாய்ப்பு வந்து பாண்டிக்கு வந்தான். பிரபல பிரெஞ்சுக் கம்பெனியொன்றில் சரக்குகளைத் தரம் பார்த்து தேர்வு செய்தான்.

       நீங்கள் தேர்வு செய்ய அவசியமே இருக்காது என்றார் நிர்வாகி.

       ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் என்றான் குமரன். இது ஸ்ரீ அன்னையின் ஆதரவில் நடைபெறுவது, இங்கு குறிக்கோளே பொருட்களின் தரம்தான் என்றார் நிர்வாகி.

       “அது யார், ஸ்ரீ அன்னை” என்றான் குமரன். நேர்மையின், சத்தியத்தின் மனித வடிவம் என்று மட்டுமே சொல்லலாம். அவரவர்களே அனுபவித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்றார். திடீரென ஆர்வம் ஊற்றெடுக்கிறது உள்ளே. நேர்மையின், சத்தியத்தின் மனித வடிவம் என்ற சொல் காதிலும், மனதிலும் சுழல்கிறது. இதுவரை தான் தேடியது கிடைத்துவிட்டது
 

        இங்கு வேலை நிறுத்தங்கள் நடைபெறுவதுண்டா? பிரபலமான இடம் என்றால் வேலை நிறுத்தங்கள் வரும் என்பார்களே. அதனால் கேட்டேன் என்றான்.

       பிரபலமான இடம்தான். தரமான பொருட்கள்தாம் ஆனால் இங்கு வேலை நிறுத்தங்களுக்கு அவசியமில்லை என்றார் சிரித்துக் கொண்டே.

       வியப்பாக அல்லவா இருக்கிறது? என்றான். இதில் வியப்படைய ஒன்றுமில்லை. இங்கு வேலையில் சேர்பவர்கள் யாருடைய சிபாரிசின் பேரிலோ, படிப்பு, பட்டம் என்பவற்றின் பேரிலோ வருவதில்லை. அன்னையிடம் பக்தியுள்ளவர்கள், அவர் கொள்கைகளில் ஈடுபாடுள்ளவர்கள், இங்கு வேலை செய்வதைத் தம் பெரும் பேறு என உணருபவர்கள் மட்டுமே வருகிறார்கள். இங்கு வேலை செய்ய நேரத்தையும் கூலியையும் கணக்கிடாமல் அன்னைக்குத் தாம் செய்யும் சேவையாகக் கருதுவதால் உழைப்பு உண்மையானதாயும், தரம் சிறந்தும் காணப்படுகிறது.

       அவர்களுடைய கோட்பாடுகள் என்றீர்களே, அவை பற்றிச் சொல்லமுடியுமா?

       நேர்மைதான் அன்னைக்குரிய முதல் கோட்பாடு அதாவது தான் எப்படிப்பட்டவன் என்று தன்னை உள்ளவாறு உணர்தல். உழைப்பதாகப் பாவனை செய்யாதிருத்தல், கடவுளுக்குப் பூரணமாகத் தன்னை அர்ப்பணித்தல், ஒவ்வொரு செயலிலும் இறைவனைக் காணுதல், அடுத்தவர் உடைமையில் ஆசை கொள்ளாதிருத்தல், பொய்மையை மறுத்தல் இவையெல்லாம் ஏன் இன்னுங்கூட சொல்லலாம். சுயநலத்திற்கென எதையும் செய்யாதிருப்பது, எந்தச் செயலையும் திருத்தமாகச் செய்வது இவையெல்லாம் அன்னைக்குப் பிடித்தவை. உணர்ச்சியை நன்றியாக, அன்பாக மாற்றினால் அன்னை செயலைப் பலனாக மாற்றுவார். வாழ்வு எனில் உழைப்பு, அன்னை வாழ்வு எனில் ஆனந்த அனுபவம்.

       அவர் சொல்லச் சொல்ல இவனுக்கு உற்சாகம் மிகுந்தது. நேற்றுவரை இருந்த சோர்வு, வெறுமை ஓடிவிட்டது. ஆகா இந்த உலகத்தையல்லவோ அவன் தேடியலைந்தான். நீங்கள் சொல்லும் அவரை (ஸ்ரீ அன்னையை) நான் பார்க்க முடியுமா? என்று மிகுந்த ஆர்வத்துடன் கேட்டான்.

       பார்க்க முடியும். அது உங்கள் உள்ளத்தின் சத்தியப்பற்றைப் பொறுத்தது என்றார்.

       எனக்குத் தேவை சத்தியம்தான். கண்ணால் காணாத கடவுளை எண்ணி என்னால் சமாதானப்பட முடியாது என்று படபடத்தான்.

       ஒருவாறு சிரித்தார் அவர். “ஏன் சிரிக்கிறீர்கள்?” என்றான்

        “சத்யம் என்று நீங்கள் கூறுவதுதான் நீங்கள் கண்ணால் காணாத கடவுள் என்பதை நினைத்தேன், சிரிப்பு வந்தது” என்றார்.

       கூலி குறைத்துக் கொடுத்தாரென்று எத்தனைப் பேருக்குத் தான் பரிந்து பேசியதுண்டு. எத்தனைப் பேர்க்கு நியாயம் கேட்டு உதை வாங்கியதுண்டு. இனி அதற்கெல்லாம் அவசியமில்லை. தாமாகவே முன்வந்து உழைக்க ஆசைப்பட்டால் கூலி குறைவு என்ற எண்ணத்திற்கு அவசியமில்லை. அதெல்லாம் சரி. இந்த அழகான சட்டத்தை உருவாக்கிய அந்த ஸ்ரீ அன்னையை எப்படியாவது காண வேண்டும் என்ற மனத்துடிப்பு அடங்கவில்லை.

      “நீங்கள் கூறிய ஸ்ரீ அன்னை எங்கிருக்கிறார்?” இங்கு அரவிந்தாஸ்ரம் என்று ஒன்றுள்ளது. அதில் அவர் உருவத்தோடிருக்கிறார். சத்தியப் பற்றுள்ளவர் இதயங்களில் சந்தோஷமாக இருக்கிறார் என்றார்.

       அங்கு போனால் அவரைப் பார்க்க முடியுமா? என்றான் குமரன்.

       எல்லோரும் எல்லா நேரங்களிலும் அவரைக் காண முடியாது. பொதுவாகத் தரிசன நாட்களில் காண முடியும். தூயவுள்ளத்தோடு அவரைத் தேடுபவரை அவரே தேடி வந்து தரிசனம் தருவார். உங்கள் நிலையை நீங்கள்தான் அறிவீர்கள் என்றார்.

       தரிசன நாள் என்றீரே? அது எந்த நாள்? இது மார்ச்சு மாதமல்லவா? ஏப்ரல் 24ஆம் தேதிதான் இனி தரிசன நாள்.

       அன்றென்ன சிறப்பு?

       ஸ்ரீ அன்னை பாண்டிச்சேரிக்கு நிரந்தரமாகத் தங்க வந்த நன்னாள். அதை தரிசன நாளாய் அனுசரிக்கிறது என்றார்.

       ஸ்ரீ அன்னையைப் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டான். ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஓரனுபவம். அதைப் பாடமாய்க் கொண்டு மேலே செல்ல கற்க வேண்டும் என நேற்றுத்தான் கண்ணம்மா கூறியது நினைவிற்கு வந்தது. சத்தியப் பற்றுள்ளவரை அன்னை தேடி வந்து ஆட்கொள்வார். அது அவருடைய அவதாரத்தின் பயன் என்பதை இவன் அறியான்.

       பொய்யும் புரட்டும் கண்டு வெறுமையடைந்த உள்ளம் ஒரு சத்தியச் சுரங்கம் இருப்பதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தது. அந்தச் சத்திய சொரூபத்தைத் தரிசிக்க அடங்கா ஆவல் எழுந்தது.

தொடரும்...

****

 book | by Dr. Radut