Skip to Content

01.யோக வாழ்க்கை விளக்கம் IV

யோக வாழ்க்கை விளக்கம் IV

கர்மயோகி

666) அறிவுடை விளக்கத்தை வகுக்க பகுத்தறிவு பயன்படும். அறிவு ஒரு பிரகாசம். அதன் ஒளி தெளிவைக் கொடுக்கக் கூடியது. தெளிவை மட்டுமே கொடுக்கக் கூடியது. அடுத்தவரை ஏற்றுக் கொள்ள வைக்கும் சக்தி அதற்கில்லை. அதிகபட்சம், அதன் உண்மையை மற்றவர்க்கு தெளிவுபடுத்த முடியும். அடுத்தவர் மனம் ஏற்றுக் கொள்ளாவிட்டால், அவர் தமக்குப் புரியவில்லை என்பார்.

அறிவு தெளிவு தரும். உணர்வு ஏற்காததை மனம் புரியவில்லை என்று கூறும்.

       அறிவுக்குப் பெருமையுண்டு, உயர்வுண்டு, தெளிவுண்டு, ஆனால் திறன் கிடையாது, ஒரு காரியத்தைச் சாதிக்கும் திறன் அறிவுக்கில்லை. அறிவால் செயல் பூர்த்தியாகாது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அறிவால், அறிவுடை காரியங்களையும் பூர்த்தி செய்ய முடியாது என்பதை ஏற்றுக் கொள்வது சிரமம்.

        உதாரணமாக ஒரு விஷயத்தை அடுத்தவர் ஏற்றுக் கொள்ள வேண்டுமானால் நாம் தெளிவாக அவருக்குப் புரியும் வகையில் எடுத்துரைத்தால், அவர் ஏற்றுக் கொள்வார் என நாம் நினைக்கின்றோம். அது உண்மையன்று. இந்த உதாரணத்தில்அறிவுக்குள்ள (limitation) வரையறையை நாம் காணலாம். கேட்பவர் உணர்ச்சி வசப்பட்டவரானால், அறிவின் விளக்கம் அவருக்குப் பயன்படாது. அவருடைய அறிவு தெளிவாக நாம் சொல்வதைப் புரிந்து கொண்டாலும், அவர் உணர்வு ஏற்றுக் கொள்ளவில்லை எனில் அறிவு அவரை ஏற்கவிடாது. தனக்கு விளங்கவில்லை என்பார். தம் உணர்ச்சிக்குப் பிடிக்காததை, அறிவுக்குப் புரியவில்லை என்பார். உணர்வை ஏற்க வைக்கும் திறன் அறிவுக்குக் கிடையாது.

       பையன் B.A. முடித்து B.T. படித்துக் கொண்டிருக்கிறான் என்று குடும்பத்திற்கு வேண்டிய தலைமை ஆசிரியர் பையன் வீட்டுக்கு வந்து, அவன் தகப்பனாரைப் பார்த்தார். தலைமை ஆசிரியர் மதகுரு. பையனுடைய தகப்பனாருக்கு மதகுரு ஸ்தானம் இல்லாவிட்டாலும், அவர்கள் மதத்தில் நல்ல மரியாதை. மதகுருவான தலைமை ஆசிரியர் தகப்பனார் முன் உட்காரமாட்டார், தயங்குவார், வற்புறுத்தினால் உட்காருவார். அவர் பள்ளியில் அவர் மதத்தைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் ஒருவரே இருந்தார். சுமார் 20 பட்டதாரி ஆசிரியர்களில், அவர்களைச் சேர்ந்தவர் ஒருவரேயாவர். பையன் படித்த பாடத்திற்கு அன்றைய நிலையில் வேலை எளிதில் கிடைக்காது. தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். தன் மதத்தைச் சார்ந்தவன் என்பதாலும், குடும்ப நண்பர் என்பதாலும், பையனுடைய தகப்பனார் மீது மரியாதையுள்ளவர் என்பதாலும், தலைமை ஆசிரியர் பையன் பட்டம் முடிக்கும் முன் வீடு தேடி வந்து பையனைத் தம் பள்ளிக்கு வேலைக்கு வரும்படிக் கேட்டார். பையன் வேலையில் சேர்ந்தான். சிறந்த ஆசிரியரெனப் பெயரெடுத்தான். ஹாஸ்டலில் வார்டனாக இருந்தான். இரண்டு மூன்று ஆண்டுகள் கழிந்த பின் பையனுக்குத் திகில் எடுத்துவிட்டது. தன் உத்தியோகம் நிலைக்காது என்ற பயம் அவனைப் பிடித்துக் கொண்டது. அதை அவன் வெளியிட்டால் பிறர் நம்ப முடிவதில்லை. வந்த சந்தர்ப்பங்களும், இன்றுள்ள நிலையும் பையனுக்குப் பூரணச் சாதகமாக இருந்தும், அறிவின் விளக்கத்தை அவன் உணர்வு ஏற்கவில்லை. அவனுடைய அறிவு மற்றவர்கள் சொல்வதைப் “புரியவில்லை” என்று சொல்கிறது.

       பணத்தை வட்டிக்காக ஒரு கம்பெனியில் போட விரும்புபவரை பாங்க் ஏஜெண்ட் சந்தித்து, கம்பனி, பாங்கியைவிட அதிக வட்டித் தருவது உண்மை. ஆனால் நீங்கள் மாதாமாதம் வட்டியை எதிர்பார்க்காததால், இந்த குறிப்பிட்ட திட்டத்தில் முதலீடு செய்தால் கம்பனி கொடுக்கும் வட்டிக்குச் சமமான வட்டி 3 ஆண்டு முடிவில் வருகிறது என்றும், அதற்குரிய சர்ட்டிபிகேட்டை இன்றே முடிவான தொகையைக் குறிப்பிட்டுக் கொடுக்கிறேன் என்றும் சொன்ன பிறகு, தான் பணம் போடும் கம்பனி பெரிய கம்பனி என்று பிரியப்பட்டுவிட்டவர் “நீங்கள் சொல்வது புரியவில்லை” என்றார். ஏஜெண்ட் புரியும்படிச் சொல்லலாம், ஏற்கும்படிச் சொல்லமுடியாது. அறிவுக்குப் பிறரை ஏற்க வைக்கும் திறன் இல்லை.

****

667) அகங்காரம் ஆழ்ந்த மனித மையம். இறைவனை நோக்கி மனிதன் வரும்பொழுது மையம் வலுப்பெற்று சிக்கல் பலமாகிறது. சூழ்நிலை அதனால் பாதிக்கப்படாமலிருக்காது. பாதிக்கப்படுவது சட்டம். அதன் மூலம் பயன்பெற ஒரே வழி முடிச்சை அவிழ்ப்பதாகும்.

நெருங்கினால் முடிச்சு வலுப்படும். முடிச்சை அவிழ்ப்பதைத் தவிர வழியில்லை.

       சாங்கியம் சிருஷ்டியை விளக்க முற்பட்டபொழுது இரண்டு தத்துவங்கள் உள்ளன என்றனர். ஒன்று மகத், இரண்டாவது அகங்காரம். மகத் என்பது சிருஷ்டிக்கும் சக்தி; பகவான் அதை ஜீவியத்திலிருந்து எழும் force சக்தி என்கிறார்.

       மாயா என்பது சிருஷ்டிக்கு அடிப்படையான சக்தி என்பதை இந்து பரம்பரையினர் ஏற்றுக் கொண்டனர். எந்தக் கட்டத்தில் மாயை செயல்படுகிறது என்பதில் வேறு வேறு அபிப்பிராயங்கள் தெரிவிக்கப்படுகின்றன. ஸ்ரீ அரவிந்தர் மாயையை விளக்குகிறார். அனந்தமான சக்தி சிருஷ்டித்தால் அனந்தமான பொருள்களை சிருஷ்டிக்கும். அதனால் குழப்பம் விளையும். எனவே சிருஷ்டி ஒரு வரையறைக்குள் அறுதியிடப்பட வேண்டும். அப்படி வரையறையை ஏற்படுத்துவது மாயா என்கிறார் ONE ஒன்று Many பலவானது சிருஷ்டி. ஒன்றைப் பலவாகச் செய்தால் சிருஷ்டி ஏற்படும். இது சிருஷ்டியில் முக்கியமான கட்டம். ஒன்றான இறைவன் பலவான ஆன்மாக்களாக மாறினான். பலவாக மாறிய பின்னும் ஒன்றோடு ஒன்று கலந்திருப்பதால் செயலைத் திட்டவட்டமாகச் செய்து தெளிவான பலன் பெற முடியவில்லை என்பதால், ஒன்றிலிருந்தும், பலவான மற்ற ஆன்மாக்களிலிருந்தும் பிரிந்து நின்றால், ஓர் ஆன்மா தனித்து, வரையறைக்குள் செயல்பட்டு பலனைப் பார்க்கலாம் என அகங்காரம் ஏற்பட்டது. அகங்காரம் ஒரு மனிதனின் ஆன்மாவை, பிற ஆன்மாக்களிலிருந்தும், இறைவனிடமிருந்தும் பிரித்து, தனித்துச் செயல்பட உதவுகிறது. இதையே ஆன்மா ஆணவ மலத்தால் கவ்வப்பட்டுள்ளது என்கிறோம்.

       அகங்காரம் என்பதை coordinating intelligence செயல்களை மையப்படுத்தும் ஞானமென்கிறார். ஒரு ஸ்தாபனத்தில் 50 அல்லது 100 காரியம் நடந்தால் அதற்குரிய பலன்கள் வந்தால் அத்தனையும் ஸ்தாபனத்தைச் சார்ந்தது. தனித்து ஒருவர் செய்ததென்ன, அதன் பலன் என்ன என்று நிர்ணயிக்க முடியாது. நிர்ணயிக்க நாம் அவரவர்கட்குத் தனிப் பொறுப்பை அளிக்கிறோம். அதன் பலன் அவரைச் சார்ந்தது. அதற்கு எந்த செயலை எவரோடு சேர்ப்பது (coordinate) என்று ஒருவர் - அதிகாரி - நிர்ணயம் செய்ய வேண்டும். அகங்காரம், அந்த அதிகாரிபோல் செயல்படுகிறது.

       அகங்காரம், மனிதனின் ஆழத்தில் அமைந்துள்ளது. இறைவனை நோக்கி ஆன்மா நகர்ந்தால், ஆணவம் தன் பிடியிலிருந்து அதை விடாது. இறைவனை ஆன்மா நெருங்கினால், ஆணவத்தின் பிடியை வலுப்படுத்தும். வலுப்படுத்தினால் அகங்காரத்தின் சிக்கல் வலுப்படும்.

       நாமும் நம் சூழ்நிலையும் மிகவும் நெருங்கியிருக்கிறோம். கண்ணாடி முன்னால் நின்று அசைந்தால், ஒவ்வொரு அசைவும் கண்ணாடியில் தெரியும். கண்ணாடியில் தெரியாமலிருக்க முடியாது. சூழ்நிலை என்பது என்ன? நாம் என்பது சூழ்நிலையின் மையம். சூழ்நிலை என்பது நம்முடைய விளக்கம். சூழ்நிலையும் நாமும் ஒரே முழுமையின் இரு பகுதிகள். ஒன்று மற்றதை நம்பியுள்ளது. அதனால் ஒன்றில் ஏற்படும் மாற்றங்கள், மற்றதில் தெரியும், தவறாமலும் தெரியும். சூழ்நிலைக்கும் நமக்கும் உள்ள தொடர்புக்கு ஓர் அளவு, நிதானம் (balance) உண்டு. அகங்காரம் வலுப்பட்டால் தொடர்பின் அளவு மாறும். மாறினால் சூழ்நிலை பாதிக்கப்படும். பாதிக்கப்பட்ட சூழ்நிலை நம்மைப் பழைய நிலைக்கு வரும்வரை பாதிக்க முடியும். தொட்டியில் ஒரு செம்பால் தண்ணீர் முகந்தால், அந்த இடத்தின் நீர் குறைந்து, சுற்றியுள்ள நீர் உடனே குறைவை நிறைவுபடுத்த விரைந்து வருகின்றது. நீர் மட்டம் மீண்டும் மட்டமாகும்வரை நீர் அசைகிறது. இது தவிர்க்க முடியாத சட்டம். (Water finds its level is a law of physics). அதேபோல் சூழ்நிலைக்கும் நமக்கும் (நம் அகங்காரத்திற்கும்) உள்ள அளவு நிதானம் (balance) குறைவின்றிருக்க வேண்டும் என்பது சட்டம். அகங்காரம் வலுவானால் சூழ்நிலையில் நிதானம் பாதிக்கப்படுகிறது. எனவே சூழ்நிலை நம்மைப் பாதிக்கிறது. மீண்டும் பழைய அளவை எட்டும் வரை பாதிப்பிருக்கும்.

****

668) தாழ்ந்த மனிதரிடையே உயர்ந்த (மனநிலை) முறை பலன் தருவதில்லை. நம்மவரை உயர்ந்தவராகக் கொள்வதாலேயே, நம் பிரச்சினைகள் உருவாகின்றன.

தாழ்ந்ததை உயர்ந்ததாக்குவதே பிரச்சினை.

       திருட்டுப் பழக்கம் உள்ள வீட்டில் நாம் போய் தங்கினால், பெட்டியைப் பூட்டாவிட்டால், அத்தனையும் திருடு போகும். அதனால் அவர்கள் நம்மை உயர்ந்தவராகக் கருதுவதில்லை. ஏமாந்தவராகக் கருதுவர். ஒரு ஸ்தாபனத்தில் பிரமோஷன் முறைப்படி கொடுப்பதில்லை, சாமர்த்தியசாலி தந்திர யுக்திகளால் பெறுகிறான் எனில், கேட்டுப் பழக்கமில்லாதவனுக்கு அங்குப் பிரமோஷன் வாராது. ஓய்வு பெறும்வரையும் வாராது. இங்கெல்லாம் இந்த இடத்திற்குத் தக்கபடி நடக்காவிட்டால், வாழ்வில் முன்னேற முடியாது. இருப்பதையும் காப்பாற்ற முடியாது. ஒரு ஸ்தாபனத்தில் பிரமோஷன் வந்த நேரம் தலைவர் பிரமோஷனுக்குரியவரைக் கூப்பிட்டு, அவருக்குப்பின் வந்தவருக்குக் கொடுக்கட்டுமா எனக் கேட்டார். இது முறையன்று. கேட்டால், இல்லை என்று சொல்லிப் பழக்கம் இல்லாதவர் என்பதால் அவர் ஒத்துக் கொண்டார். அடுத்த இரு ஆண்டுக்குப்பின் பிரமோஷன் வந்தது. இந்த முறை ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர் (அவர்கள் மதத்ததைச் சேர்ந்தவர்) இவருக்குப் பின்னாலிருந்தார். இவரை விட அவர்கள் மதத்தைச் சேர்ந்தவர் 4 வருஷம் சர்வீஸ் குறைந்தவர். இந்த முறையும் பிரமோஷன் இவருக்குக் கொடுக்கவில்லை. ஸ்தாபனம், அதன் நிர்வாகம், அந்த ஊர், அங்கு வேலை செய்பவர்கள், அங்குள்ள சூழ்நிலை பண்பற்ற முறையில் உள்ளது. அங்கு, பண்போடு நடப்பவரை உலகம் கண்டு கொள்ளாது. இவர் ஒதுக்கப்படுவார்.

       வீடு, நட்பு ஆகிய இடங்களில் நாம் கண்ணால் காண்பதைக் கவனிக்காமல், அறிவு புலப்படுத்துவதை ஒதுக்கி, உறவையும், நட்பையும் பாராட்டுவதுண்டு. அது பலன் தாராது. நம் மனநிலைக்குரிய பலன் வாராது. நம் செயலுக்குரிய பலன் வரும். நாம் தவறு செய்கிறோம் என அறிவதும் இல்லை. இதைச் சிலர் உயர்ந்த பண்பாகவும் கருதுவதுண்டு. இதனால் ஏற்படும் பிரச்சினைகள், இந்தத் தவற்றை நீக்காதவரை தீராது.

       உதாரணமாக, கல்லூரிக்குப் போனபின், பள்ளி ஆசிரியர் மீதுள்ள மரியாதை, பாசம் காரணமாக மாணவர்கள் அவர்களிடம் பாடம் படிப்பதுண்டு. அது பலன் தருவதில்லை. எத்தனை தரம் பெயிலானாலும், எத்தனை பேர் சொன்னாலும், ஆசிரியரை மாற்ற மாணவன் முன் வருவதில்லை. நெல் பயிரிடும் நிலத்தில் தென்னை பயிரிட்டால் 10 மடங்கு அதிக இலாபம் வரும் எனத் தெரிந்தாலும் விவசாயி பயிரை மாற்ற முன்வர மாட்டான். MLA ஆக நிற்க நம் வீட்டிற்குச் சந்தர்ப்பம் வந்தால், தம்பி ஜெயிப்பான், அண்ணன் நின்றால் தோற்பான் எனில், நிற்காமலிருந்தாலும் இருப்பார்களே தவிர, தம்பியை நிறுத்தமாட்டார்கள். புதிய கம்பனி ஆரம்பிக்க செல்வர் முதல் கொடுக்கிறார். பார்ட்னராகிறார் என மாமனிடமும், நண்பனிடமும் சொன்னால், அவர்களில் ஒருவர் செல்வரிடம் சென்று தடை செய்தபின், அடுத்த சந்தர்ப்பம் வரும்பொழுதும் அவர்களிடம் சொல்வார்கள். மீண்டும் தடை செய்வார்கள். பலமுறை நடந்த பின்னும், மாமனும், நண்பனும் பொறாமையால் நாம் முன்னுக்கு வருவதைத் தடுக்கிறார்கள் என ஏற்க மனம் வருவதில்லை. அவர்கள் செய்த விஷமத்தை அறிந்தாலும் சிலர் நம்புவார்கள், சிலர் நம்ப மாட்டார்கள். வாயால் இனிமையாகப் பேசி, மனதால் பொறாமைப்பட்டால், நாம் செய்யும் காரியம் கெடும். அந்நிலையில், என் மாமன் நல்லவன், என் நண்பன் பொறாமைப்பட மாட்டான் என நாம் வைத்துக் கொள்கிறோம். இதனால் வரும் பிரச்சினைகள், பிரார்த்தனையால் தீராது. தீரவேண்டுமானால், நாம் மனதையும், செயலையும் மாற்றிக் கொள்ள வேண்டும்.

       இதன் உண்மை புரிய வேண்டுமானால் நம் மனத்தைச் சோதனை செய்தால் தெரியும். ஒரு செய்தி வரும்பொழுது, நாம் என்ன நினைக்கிறோம் எனக் கவனித்து, அது எப்படி முடிகிறது என்று கவனித்தால், உணர்வுக்கும், செயலுக்கும் உள்ள தொடர்பு தெரியும்.

       “என்னிடம் ஒரு நண்பனுக்கு, சாகித்திய அகாடமி பரிசு முடிவாகிவிட்டது என்ற செய்தி வந்தது. மற்றொருவருக்குப் பெரிய ஆர்டர் கிடைத்தது பற்றிச் சொன்னார். வேறொருவர் என் நல்லெண்ணத்தை நம்பி ஆபத்தில் உதவ அழைத்தார், பரிசு ரத்தாயிற்று. ஆர்டர் கிடைக்கவில்லை. ஆபத்து பேராபத்தாயிற்று” என்று ஒருவர் கண்டால், அவர் தம் மனம் பொறாமையானது என ஏற்றுக் கொள்ள வேண்டும். இதுபோன்ற சோதனையை நாம் நம் வாழ்வில் மட்டும் செய்வது முறை.

****

669) தன் திறமையால் ஒருவன் பெறுவது பொறுக்கவில்லை என்பது பொறாமை. ஒருவருடைய அதிகபட்ச திறமையால் அவர் பெற முடியாததை அவருக்களிக்க முன்வருவது உதாரகுணம். பொறாமை திருவுருமாற்றமடைந்து உதாரகுணமாகிறது.

  • முடியாதவனுக்கு முடியாததை அளிப்பது நல்லெண்ணம்.
  • பொறாமை திருவுரு மாறி பெருந்தன்மையாகிறது

       ஒருவன் எதைப் பெற வேண்டுமானாலும், தானே முயன்று பெறுகிறான். ஆதரவான சூழ்நிலையில் ஒருவன் பெற முயலும் பொழுது, உடனிருப்பவர் அனைவரும் உதவிக்கு வருவார்கள். அது நல்லவர் உள்ள சூழ்நிலை. அதுபோன்ற உதவியைச் செய்ய மனம் வாராத இடங்களுண்டு. அங்கு ஒருவர் தாமே, பிறர் உதவியின்றி, தம் முயற்சியால் பெறுகிறார். பிறர் உதவ வாராததால் ஒருவர் பெற்றதை மற்றவர் கவனிக்க மாட்டார்கள். அதில் அக்கறை காட்டமாட்டார்கள். உதவ வாராதவர்கள், அவன் முயற்சியைக் கவனித்துக் கொண்டிருப்பதும் உண்டு. அவன் எவர் உதவியுமின்றி தானே முயன்று வெற்றி பெற்றதைப் பொறுக்க முடியாமல் பதைப்பவர் உண்டு. அவர்கள் பொறாமைக்காரர்கள். இதற்கடுத்த தாழ்ந்த நிலைகள் உண்டு. அவர் பொறாமைப்படுவதுடன் நிறுத்திக் கொள்ளாமல், தொந்தரவு செய்ய முன்வருவார். வாழ்வின் பல நிலைகளில் இவை சில.

       Generosity உதார குணம் என்பதும் பல வகையின. அத்துடன் பெருந்தன்மை கலப்பதும் உண்டு. உதவிகளைப் பல்வேறு நிலைகளில், பல்வேறு வழிகளில், பொருளாலும், அந்தஸ்தாலும், ஆதரவாலும், அறிவாலும் செய்ய முடியும். தாழ்ந்த பொறாமை திருவுருமாற்றமடைந்தால் உயர்ந்த பெருந்தன்மையான உதார குணமாக மாறும். ஒருவர் தம் அதிகபட்ச முயற்சியால் பெற முடியாததை, அவருக்கு அளிக்க முன்வருவது அக்குணம். அன்னையின் அருள் விஷயத்திலும் சில சமயங்களில் அதுபோல் செயல்படும். பொதுவாக இதற்குத் தடையாக இருப்பது பக்தருடைய குறுகிய மனப்பான்மையேயாகும்.

  • சர்க்காரில் NGO பதவியை அவசரமாக ராஜினாமா செய்து பெரிய பட்டம் பெற்று 5 வருஷமான பின், அதே பதவி கிடைக்க வழியில்லை என்று கண்டு திகைத்தவருக்கு அன்னை அதே இலாக்காவில் கெஸட் பதவியைப் பெற்றுத் தந்தார். ஒரு பத்திரிகையில் ஆரம்பத்திலிருந்து நெடுநாள் வேலை செய்தும் அதில் ஒரு கட்டுரை எழுத அனுமதி பெறாதவருக்கு, பத்திரிகை ஆசிரியர் பதவி கிடைத்தது.
  • ஆசிரம வாயில் நுழைய ஆயிரம் தடைகள் உள்ளவரை Dec. 5ஆம் தேதி தியானத்திற்கு அவரையறியாமல் அன்னையிடம் அனுமதி பெற்று அழைத்துப் போய் பகவான் கட்டில் முன் அவர் காலத்தில் அவருக்கு உடனிருந்து பணிவிடை செய்த சிலரோடு உட்கார வைத்தார்.
  • துணைவேந்தர் பட்டியல் கவர்னருக்குப் போகும்பொழுது எனக்குப் பதவி வேண்டாம், பட்டியலில் பெயர் சேர்ந்தது என்று இருந்தால் போதும் என்று கேட்டுக் கிடைக்காதவர் அன்னையால் துணை வேந்தர் பதவியை இருமுறை ஏற்றார்.

  • M.P. சீட் கிடைக்கவில்லை என்றபின் அருள் மந்திரி பதவியைப் பெற்றுக் கொடுத்தது.

       அருள் இதுபோல் செயல்பட்டால், அருளை நாம் பெற வேண்டுமானால், நாம் இதுபோல் செயல்படும்பொழுது அருள் நம்மை நாடிவரும். அருளைப் பெறும் வழிகள் அநேகம். அதில் இது ஒன்று. சிறந்த முறையுமாகும். இதுபோன்ற மனித முயற்சிக்கும் உதாரணங்கள் உண்டு.

  • ஏக்கருக்கு 175ரூபாய் பயிர் லோன் என்ற காலத்தில் அது கிடைக்குமா என்றிருந்தவர்க்கு ஏக்கர் 175ரூபாய் பயிர் லோனுடன் ஏக்கர் 6000ரூபாய் கிணறு லோன் பெற்றுத் தர முடிந்தது.

  • தினசரி ரூ.200 பீஸ் பெற்றவர்க்கு தினசரி ரூ.2000 பீஸ் பெறமுடியும் என்று அவருக்கு அந்த வாய்ப்பைப் பெற்றது.

  • வேலை கிடைக்காதவனுக்கு வெளிநாட்டுப் பயிற்சியும் சொந்த தொழிலும் தன் முழு முயற்சியால் பெற்றுத் தந்தது.

  • தியானம் வாராதவர்க்கு மௌனம் பெற உதவியது.

       ஒரு கம்பெனியில் எல்லா வேலைகளையும் கொடுத்து எதற்கும் சரியில்லை என்றவருக்குச் சொந்தத் தொழில் வைத்துக் கொடுத்து அதை இருமடங்காகப் பெருக்கியதும் மனித முயற்சியால் அருளின் சூழலில் நடந்தது. இதுபோன்ற முயற்சியை எடுத்தால், அருள் நம்மைத் தேடிவரும். வந்தால் அகலாது. நம் செயலின் மூலம் வெளிப்பட அருள் விழையும். அருளின் செயலுக்குப் பாத்திரமாவோம்.

****

670) நெருங்கிய நண்பனுக்கும், விரோதிக்கும் ஒரே குணம் இருப்பதுண்டு. நம்மைப் பொறுத்தவரை அவர்கள் போக்கு எதிரானது.

விருப்பு நட்பையும், வெறுப்பு விரோதத்தையும் ஒரே க்ஷணத்தில் உற்பத்தி செய்யும்.

      ஒவ்வொருவருக்கும் ஒரு சில குணங்களுண்டு. அவர்களுடைய நண்பர்கள் அவருடைய குணத்திற்கேற்ப அமைவார்கள். தமக்குள்ள அதே குணம் உள்ளவரையும், அதற்கு எதிரான குணமுள்ளவரையும் ஒருவர் நண்பராகத் தேடுவார் என்று மனோதத்துவம் சொல்கிறது. பொறுமைசாலி பொறுமையுடைய நண்பரைப் பெறுவார். அது பொருத்தம். பொறுமைசாலி பொறுமை அற்றவரை நண்பராக நாடுவார். ஆசிரியர், டாக்டர், விவசாயி, வக்கீல், அரசியல்வாதி நண்பர்களாக ஆசிரியர், டாக்டர், விவசாயி, வக்கீல் அரசியல்வாதியைத் தேடுவதை நாம் புரிந்துகொள்கிறோம். மேலும் மாணவன், பேஷண்ட், கூலிக்காரன், கட்சிக்காரன், வோட்டர் இவர்களோடு மேற்சொன்னவர்கட்குத் தொடர்பு இருப்பதால் அங்கும் நட்பு எழுவதுண்டு. அது இயல்பு. வக்கீலுக்கும், கட்சிக்காரனுக்கும் உள்ள தொடர்பு டாக்டருக்கும் வியாதியஸ்தனுக்கும் உண்டு. வியாதியால் வாடும் பேஷண்ட் வியாதியைக் குணப்படுத்தும் டாக்டரை நாடுவது இயல்பு என்பதுபோல் பொறுமையற்றவன், பொறுமைசாலியை நாடுவது மனோத்தத்துவப்படி இயல்பு. ஒருவன் நட்பு, வேலை எனும்பொழுது ஆண்களையும், திருமணத்திற்குப் பெண்ணையும் நாடுவது முறை என ஏற்றுக் கொள்கிறோம். ஒரே குணமுள்ளவர் சேர்வதும், எதிரான தன்மையுள்ளவர் ஒருவரையொருவர் நாடுவதும் இயற்கையிலிருப்பதைப்போல் நட்பிலும், உறவிலும் உண்டு.

       எனவே நெருங்கிய நண்பர்களாக ஒரே குணம் உடையவர் சேர்ந்திருந்தால் மனக்கசப்பு ஏற்பட்டால் விரோதியாகிறார்கள். இன்றைய விரோதி நேற்றைய நண்பன் என்பதால் நண்பனும், விரோதியும் ஒரே இயல்புடையவர் என்பது தெளிவு. ஒரே குணமுடையவர் நம்மை விரும்பினால் நண்பர், வெறுத்தால் விரோதி.

       ஷேக்ஸ்பியர் திருமணம் சொர்க்கத்தால் நிர்ணயிக்கப்படுகிறது என்றார். ஒருவன் மனைவியைத் தேடும்பொழுது தன் தாயின் குணமுள்ளவளையே விரும்பித் தேர்ந்தெடுக்கிறான் என்று ஒரு சட்டம். தாயை வெறுப்பவரில்லை. தாயின் குணம், உடல் அமைப்பு, மகனுக்கு அமைகிறது. அதனால் மனைவியாக அமைபவள் தாயைப் போலிருக்க வேண்டும் என மனிதன் விரும்புகிறான். இவையெல்லாம் அவன் அறிந்து செய்வதில்லை. தானே உள்ளுணர்வு நிர்ணயிக்கிறது. நம் நாட்டில் மனைவியை மணமகன் தேர்ந்தெடுப்பதை விட, பெற்றோரும் மற்றவரும் நிர்ணயிப்பதே அதிகம் என்பதால் நாம் எப்படி இந்த ஆராய்ச்சியை நம் நாட்டில் ஏற்றுக் கொள்ள முடியும் எனலாம்.

       ஒருவனுடைய விருப்பத்திற்கு மாறாக பிறரோ, சட்டமோ, சூழ்நிலையோ ஓரளவுதான் செயல்பட முடியும். அடிப்படையான விஷயங்களில் யார் எவ்வளவு முயன்றாலும் (விதிப்படி நடக்கிறது என்று சொல்வதைப்போல்) அவனுடைய ஆழ்ந்த அபிலாஷையே விஷயங்களை நிர்ணயிக்கும். சமயத்தில் அவனே தன் ஆழ்ந்த அபிலாஷையை அறியாமல் அதற்கு எதிராக செயல்படுவதுண்டு. பட்டம் பெற்று உத்தியோகத்திற்கு வந்தவருக்கு, அந்த ஸ்தாபனத்தில் நல்ல வரவேற்பு. அங்குப் பல பெண்களிருந்தார்கள். அனைவரும் அவரைப் போற்றினார்கள். அவரும் அதை விரும்பினார். ஸ்தாபனத்திலுள்ள வரவேற்பையும் அங்குள்ளவர், குறிப்பாக பெண்களை, தாம் விரும்புவதையும் அவர் பெரிதாக நினைக்கவில்லை. இவையெல்லாம் சாதாரணமானவை என அவர் பொருட்படுத்தவில்லை. அதேபோன்ற ஸ்தாபன தலைமைப் பதவிக்கு விளம்பரம் வந்தபொழுது தமக்குத் தகுதியிருப்பதால் விண்ணப்பித்தார். மூன்றாம் நாள் அவர் விண்ணப்பம் திரும்பி வந்துவிட்டது. விண்ணப்பத்தில் அவர் கையெழுத்திடவில்லை. கையெழுத்து ஒரு சாஸ்திரமாகப் பயன்படுகிறது. அதன்படி ஒருவர் தான் எழுதியதில் கையெழுத்திடவில்லை என்றால் தாம் எழுதியது தம் ஆழ்ந்த மனத்திற்குச் சம்மதமில்லை என்று பொருள். விண்ணப்பிக்க அபிப்பிராயமிருந்தாலும், அந்த ஸ்தாபனத்தைவிட்டு அகல மனமில்லை. ஆழ்மனத்திலுள்ளது விஷயத்தின் தேவையை நிர்ணயிக்கும்.

       ஒருவன் தன் ஆழ்மனத்தில் தன்னைப் போன்றவர்களையும், தனக்கு எதிரானவர்களையும் - எதிரானவர், மனோதத்துவப்படி, நம் போன்றவரே - நண்பர்களாக, மனைவியாக, கணவனாக விரும்புவதால், நம் நண்பர்களும், விரோதிகளும் ஒரே குணமுடையவராக இருக்கின்றனர்.

தொடரும்...

 

 

 

ஜீவிய மணி

 

ஞானத்தின் கரு ஜோதி.

 

 



book | by Dr. Radut