Skip to Content

09.நிலையான சமர்ப்பணம் – நெடு நாளைய யோகம்

நிலையான சமர்ப்பணம் – நெடு நாளைய யோகம்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கர்மயோகி

அதை Pre-occupation என்கிறோம். அது தீர்ந்தால் Preoccupation போய் விடும். Occupation அங்கு வந்து விடும். Preoccupation தெரியும். Occupation நமக்குத் தெரியாது. நாம் அதை நம் சுபாவம், பழக்கம் எனக் கொள்கிறோம். Occupation என்ற ஆயிரம் சொந்த நம்பிக்கைகள், ஊர் உலக நம்பிக்கைகளிருப்பதை நாம் அறிவதில்லை. அவற்றை விலக்கினால் அதன் அடியில் சுபாவமிருக்கும். உதாரணமாக சைவம் ஆன்மிகம், அசைவம் அதற்கெதிரி என்பது பரவலான அபிப்பிராயம். அடிக்கடி அன்னை இதைச் சுட்டிக் காட்டுவார். சைவம், அசைவம் உணவுப்பழக்கங்கள். அதற்கும் ஆன்மிகத்திற்கும் தொடர்பில்லை. ஏசு மகான். மாமிசம் சாப்பிட்டார். வேத ரிஷிகள் மாமிசத்தை வேள்வியில் பயன்படுத்தினர். வங்காளத்தில் பிராம்மணர்கள் மீன் சாப்பிடுவார்கள். மச்ச பிராம்மணன் எனப்பெயர். குடுமி, பூணூல், உடை, உணவுப் பழக்கம் இவற்றுள் மூட நம்பிக்கை கலந்து வரும். பவுன் இராமகிருஷ்ண பரமஹம்சர் உடலை அவரையறியாமல் தொட்டால் உடல் கூசும். பவுன் தவறானதில்லை, அவசியமானதும் கூட. அவருடைய பழக்கம் காசைத் தொட மாட்டார். இக்கருத்துகள் எளிதில் புரியாது. கவனமாக இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாகப் புரியும். (Occupation, Pre-occupation, Deconditioning என்பவற்றை தற்சமயம் “நானுள்ள மனநிலை’’, “என் மனத்தை அரிப்பது’’, “மனம் தூய்மைப்படுவது’’ என எழுதிக் கொண்டிருக்கிறேன்.)

மனம் தூய்மையாக இருப்பது எனில் களங்கமற்ற சிறு குழந்தை மனமாக இருப்பது. வளரும் பொழுது மனிதன் வாழ்வின் சுபாவத்தைத் தன் சுபாவமாகப் பெறுவதை விடுவது சிரமம். அப்படி விடுவதை deconditioning எனக் கூறுகிறார்கள். நாம் அதை களங்கமற்ற மனம் எனலாம். பதற்றப்படும் மனம் Pre-occupation-க்குட்பட்டது. பதற்றமின்றி நிதானமாக இருப்பது Pre-occupation இல்லாமலிருப்பது. Occupation என்பது உலகம் வழங்கியதை உள்ளம் ஏற்பது. அது இல்லாமலிருக்க மனம் நிதானமாக இருப்பதுடன் களங்கமற்றும் இருக்க வேண்டும். Occupation இல்லாமல் தூய்மையாக இருக்க ஆசையற்றிருப்பது அவசியம். களங்கமற்ற மனம், ஆசையற்ற மனம், பதற்றமற்ற நிதானமான மனம் இப்படி வழக்கில் உள்ளது. இந்நிலைகளைத் தெளிவாக அறிவது யோக நூல்களைத் தெளிவாக அறிய உதவும்.

சமர்ப்பணம் ஆரம்பம் என்றாலும் சமர்ப்பணத்தை அன்பர்கள் அறிவார்களே தவிர பின்பற்றுவதில்லை. பின்பற்றுபவர்கள் பிரச்சனை வந்தபொழுது பின்பற்றுவார்கள். நிலையாக சமர்ப்பணம் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இல்லை. அப்படி நினைத்தால் அதை ஆர்வமான தீர்மானமாக மாற்றுவதே இக்கட்டுரை. அம்முடிவை எடுப்பது முடிவை நிறைவேற்றுவதாகாது. அம்முடிவை எடுப்பதும் மனிதனை அன்பனாக்கி, அன்பனை சாதகனாக்கும். அது யோகப் புனர்ஜென்மம். அதனால் அதற்குத் துணையானவை எவை, தடையானவை எவை, எப்படித் தடையைக் குறைத்து விலக்குவது, துணையை வளப்படுத்திப் பயன் பெறுவது என்பதை விளக்கும் கட்டுரையிது. அதில் மனம் தூய்மையாக களங்கமற்றிருப்பது ஒன்று. நிலையான சமர்ப்பணம் உருவான சரணாகதியாகும். சரணாகதி பூர்த்தியானபின் யோகம் ஆரம்பமாகும். சமர்ப்பணம் நிலைத்தபின் சரணாகதி எழும். சரணாகதி மனதில் எண்ணமாகும். இதய உணர்ச்சியாகவும், உடலின் உணர்வாகவும், படிப்படியாக உருவாகும். சரணாகதி அபிப்பிராயமாகி, பிறகு உணர்வின் நோக்கமாகி, ஜீவனின் நோக்கமாவது (attitude of being) முடிவான கட்டம்.

Opinion அபிப்பிராயம், attitude நோக்கம், motive ஆழ்ந்த நோக்கம். குடும்பம் வசதியாக வாழ வேண்டும் என்ற அபிப்பிராயம் எல்லார்க்கும் உண்டு. அது அந்த அபிப்பிராயத்தின் தீவிரத்தால் நிறைவேறும். நமது பல குடும்பங்களில் (பங்காளி, சம்பந்தி) முதன்மையாக வர வேண்டும் என்பது அபிப்பிராயத்தால் நிறைவேறாது. அது நோக்கம் (attitude) என்றால் நிறைவேறும். ஓர் அபிப்பிராயத்தை ஆசை ஏற்றுக் கொண்டு நிறைவேற்றுவது நோக்கம் (attitude). எப்படியும் MLA ஆக வேண்டும் என்பது அபிப்பிராயம். அது நோக்கத்தால் மட்டும் பூர்த்தியாகாது. அதுவே குறியாக இருந்தால், அதாவது அது ஜீவனுடைய நோக்கமானால் அதை ட்ணிtடிதிஞு என்பார்கள். Motive என்பது மனம், உயிர், உடல், ஜீவன் அனைத்துக்கும் உள்ள நோக்கம். வாழ்வில் ஒரு பெரிய காரியம் பூர்த்தியாக அது motive ஆக வேண்டும். அது குறைந்தபட்சம்.

சமர்ப்பணம் பலிக்க, நிலைக்க, நிலைத்து சரணாகதியாக, அந்த நோக்கம் அதிகபட்சமாகி தொடர்ந்து வளர வேண்டும். அதுவே வள்ளலார் மறந்தறியேன் எனக் குறிப்பிடுவது. பெருந்தலைவர்கள் அவர்கட்குள் வாக்குவாதம் செய்து சண்டையிடுவார்கள் என்பது உண்மையானாலும், நாம் அதை ஏற்க விரும்புவதில்லை. அன்னை piano வாசிக்கும்பொழுது சிவனும், கிருஷ்ணனும் வந்து அன்னை வாசிப்பதை அவர்கள் இஷ்டப்படி வாசிக்கச் சொன்னார்கள். அவர்களிருவரும் வாக்குவாதம் செய்தார்கள், சண்டையிட்டார்கள் என அன்னை கூறுகிறார்கள். அதாவது அன்னைக்குரிய சுமுகத்தில் சிவனுக்கும் கிருஷ்ணனுக்கும் செயல்பட முடியவில்லை. அன்னையின் சுமுகம் உயர்ந்தது. இதுபோன்ற ஏராளமான செய்திகள் Agenda-வில் உள்ளன. அன்பர்கள் சமர்ப்பணம் நிலையானபின் அன்னைக்குரிய சுமுகத்தை மனத்தின் ஆழத்தில் காணலாம்.

சமர்ப்பணத்தின் சுமுகம் உயர்ந்தது. Opinion அபிப்பிராயம் சுமுகத்தைத் தடுக்கும். நோக்கம் attitude காரியத்தை அதிகமாகப் பூர்த்தி செய்யும். பிறருடனுள்ள சுமுகத்தை அதிகப்படுத்துவதால் காரியம் அதிகமாகக் கூடி வரும். Motive ஜீவனின் நோக்கம் அனைவருடனும் சுமுகமாக காரியத்தை அதிஅற்புதமாகப் பூர்த்தி செய்யும். சமர்ப்பணம் நிலையானால் சுமுகம் மட்டுமேயிருக்கும். உள்ளும் புறமும் சுமுகம் ஜனித்து வளர்ந்து பரவுவதால் காரியம் காலத்தைக் கடந்து பூர்த்தி பெறும். யோகம் காரியங்களைக் கடந்தது. காரிய சித்தி மனிதனுக்குரியது. சாதகன் அதைக் கடந்தவன். சாதகன் ஒருவனிருப்பதால் அவன் சூழலில் காரியம் தன்னைத்தானே பூர்த்தி செய்து கொள்ளும். அதனால் நிலையான சமர்ப்பணம் நிரந்தரமான யோகமாகும்.

“ஆண்டி மடம் கட்டியது போல்” என்ற வழக்கு எதுவுமேயில்லாதவன் எல்லாவற்றையும் சாதிக்க விரும்பும் மனநிலையைச் சித்திரிக்கிறது. உலகம் இதைக் கேலி செய்யலாம். ஆன்மிக ரீதியாக இது பெரும் நோக்கம். நிலையான சமர்ப்பணம் ஆண்டிக்கு மடம் போல. சமர்ப்பணம் முதல் நிலை யோகம் என்றாலும் அதற்கும் முந்தைய நிலை மௌனம். விஷ்ணு லீலி பகவானுக்கு மௌனம் பெறும் வழியைக் கூற “கண்ணை மூடினால் எண்ணம் உள்ளே வரும். அதைத் தூர எறி’’ என்றார். அது நடக்க மனத்தில் ஓரளவு மௌனம் தேவை. நமக்கு அதுவே இருக்காது. வரும் எண்ணத்தை ஏற்பது மனம். மறுப்பது, மறுத்து விலக்குவது, மௌனப் பயிற்சி. எரிச்சல்படாமலிருப்பது எழும் எரிச்சலை ஏற்காத மனநிலை. இது பெரிய ஆன்மிக வலிமை. ஏற்காதது முதல் நிலை. மறுப்பது பெரு நிலை. இது மௌனத்தில் முதல் நிலை. லீலிக்கு எண்ணம் மறுக்கப்பட வேண்டும். பூரண யோகத்திற்குரியது, எண்ணம் சமர்ப்பணம் செய்யப்பட வேண்டும். எண்ணம் ஒருமுறை சமர்ப்பணமானால் அகண்ட மௌனம் தென்படும். அகண்ட மௌனம் பூண்பது ஆன்மிக சித்தி. சித்தி பெரியது, கிடைத்தற்கரியது என்றாலும் முயற்சி தொடர வேண்டும். இடைவெளியின்று மனம் மௌனத்தை, சமர்ப்பணத்தை நாட வேண்டும்.

Pygmalion என்பது பெர்னாட்ஷா எழுதிய நாடகம். எலிசா என்ற படிக்காத ஏழைப்பெண்ணை புரொபசர் ஹிக்கின்ஸ் (Pronunciation training) பேச்சுப் பயிற்சி ஆறு மாதம் கொடுத்து படித்த சீமாட்டி போல் பேச வைக்கிறார். இது ஒரு அற்புதம். உலகில் பல இடங்களில் எவர் கண்ணிலும் அதிகமாகப்படாமல் நடக்கிறது. பயிற்சியின் சிறப்பை வெளிப்படுத்தும் கதையிது. ஹிக்கின்ஸ் மழைக்கு ஒதுங்கிய கட்டடத்தில் வந்தவர், அனைவர் பேசுவதையும் எழுதுகிறார். அவர்கள் பேச்சிலிருந்து அவர்கள் பிறந்த இடத்தைக் கூறுகிறார். இந்தியாவிலிருந்து திரும்பிய கர்னல் பிக்கரிங் இதைக் கண்டு வியக்கிறார். ஆங்கிலத்தில் vowels உயிரெழுத்து ஐந்து. இதை ஐம்பதுவிதமாக உச்சரிக்கின்றனர். பிக்கரிங் அவற்றுள் 53 வகையை அறிவார். ஹிக்கின்ஸ் 156 முறைகளை அறிவார். வாழைப்பழம் என்பதை வாளைப்பளம் என்று ஒருவர் கூறினால் அவர் திருநெல்வேலியில் பிறந்தவர் என நாம் அறிவது போல் ஹிக்கின்ஸ் உலகில் எங்கு எத்தனைவிதமாக ஆங்கிலம் பேசப்படுகிறது என ஆராய்ச்சி செய்தவர். சூட்சும மனம் இவற்றையறியும். கால் கட்டைவிரலைக் கண்டு அவர் முழு உருவத்தைச் சித்திரித்ததாகக் கூறுகின்றனர். வெண்ணொளியை வானவில் ஏழாகப் பிரிக்கிறது. கம்ப்யூட்டர் 60 இலட்சம் கலராகப் பிரிக்கிறது. பிரிப்பது கலை. பிரித்ததை அறிவது ஞானம். இந்திய ஆன்மிகம் இது போல் பெற்ற பேறுகள் ஏராளம். பகவான் கூறும் integration இணைவது பிரிந்தவை கூடும் வகை. அனந்தமாகப் பிரிந்த செயல்கள், குணங்கள், சொற்களை யோகம் அறிய உதவும். அத்துடன் யோகம் அவை இணைவதையும் அறியும். உலகில் அனைத்துச் செயல்களும் அதுபோல் இணைந்துள்ளன, integrate ஆகியுள்ளன. அதாவது ஒரு சிறிய விஷயத்தை அசைப்பதால் ஒரு பெரிய காரியத்தைச் சாதிக்கலாம். சிறு அசைவு முழு உலகையும் அசைப்பது இணைந்த ஒருமை integration.

யோகம் முழுவதும் சித்தித்தால் உலகை நகர்த்த முடியும். சமர்ப்பணம் சிறியது. சமர்ப்பணம் நமக்குத் தெரியவில்லையெனினும் எவ்வளவு பெரிய காரியத்தையும் பூர்த்தி செய்யும். சமர்ப்பணம் பூர்த்தி செய்ய வேண்டியது யோகம். சமர்ப்பணம் நிலைக்க அது சொல்லைக் கடக்க வேண்டும். சொல் கடந்த நிலை மௌனம். நாமறிவது மனம் பெற்ற மௌனம். அதைக் கடந்தது ஆத்மா ஏற்கும் மௌனம். மனிதன் மண்ணாங்கட்டி என்பது உண்மை. மனிதன் ஆத்ம விழிப்புடையவன் என்பதும் உண்மை. நமக்கு இருப்பதே நமக்குத் தெரியும், இல்லாததற்கு நாம் என்ன செய்ய முடியும். The Life Divine முதல் அத்தியாயம் விடாமுயற்சியைக் கூறுகிறது. நாம் எந்த நிலையிலிருந்தாலும் அந்த நிலைக்குரிய அதிகபட்சம் குறைந்தபட்சம் உண்டு. மேலும் நாம் குறைந்தபட்சத்தைத் தேர்ந்தெடுத்தாலும் அந்நிலைக்குரிய அதிகபட்ச முயற்சி தேவை. ஏனெனில் அதிகபட்சம் அனந்தம். இதை Sincerity உண்மையென அறிய வேண்டும். மீண்டும் கூறினால் உலகம் ஏற்பட்ட உடனே ஆத்மா விழிப்புற்றது. அது அனந்தம். ஆத்மாவின் அனந்தத்தை மனிதனுடைய அனந்தம் அடையும். எனவே Sincerity முக்கியம். விழிப்பு என ஏற்பட்டபின் அது ஆத்ம விழிப்பானால், அவன் மரபில் அறிந்ததை விட்டு விலகி பகவான் ஸ்ரீ அரவிந்தரை ஏற்றபின் எந்தப் பாதையும் இலக்கில் முடியும். அதுபோன்ற பாதைகளைப் பலவகையாகக் கூறலாம். The Life Divine கூறுவது ஒரு பாதை, சாவித்ரி கூறுவது ஒன்று, Synthesis கூறுவதும் ஒன்று. நமக்குப் புலப்படுவதும் ஒன்று. எதைப் பின்பற்றினால் எவ்வளவு தாழ்வாக ஆரம்பித்தாலும் அந்நிலையிலும் அதிகபட்ச முயற்சியுண்டு. அதை ஏற்பது Sincerity உண்மை. Sincerity-யை செயல்பட வைப்பது சமர்ப்பணம். சமர்ப்பணம் நிலையாவது அடுத்த கட்டம். தாய் குழந்தைக்கு ஒரு முத்தம் பல முத்தம் தருவதில்லை, முடிந்தவரை கொடுப்பாள். சமர்ப்பணம் அன்பன் அன்னையின் திருவடிகளை முத்தமிடும் கோலாகல நேரம். நேரம் பெரியதானால், பெரியது வளர்ந்தபடியிருக்கும். வளர்ச்சி தடைபடாதது அனந்தம். அனந்தம் அனந்தமாக வளர்வது யோகம்.

பகவான் ஞானம், பக்தி, கர்மம் என்ற தலைப்புகளில் 500 ஆன்மிக சிந்தனைகள் எழுதினார். மேலும் ஒரு 47-ம் பிற்பாடு எழுதினார். அன்னை தம் அனுபவங்களை - கல் விழுந்தது போன்றவற்றை - நூற்றுக்கணக்காக எழுதியுள்ளார். பக்தர் அன்னையை அறிந்தது முதல் ஏராளமான அதுபோன்ற நிகழ்ச்சிகளை அறிவர். தம் சொந்த அனுபவத்தில் பகவானும் அன்னையும் கூறும் தத்துவங்களை அறிய முயன்றால் முதலிலேயே தெளிவு ஏற்படும். ஏற்பட்ட தெளிவில் பலன் உண்டு. தத்துவம் உண்டு, பின்னணியில் அன்னையுண்டு. அன்னையை ஏற்றால், ஏற்றதை நிலையாகப் பெற்றால், அதை நிலையாகப் பெற சமர்ப்பணத்தை நிலையாகப் பெற முயன்றால், நிலை நிறையாகும். நிறைக்கும் நிலைகள் உண்டு. நிறைவையும் நாடாத மனநிலை பரவசம். பரவசம் நம்மை மறப்பது. நம்மை மறந்த நிலை பரவசம் ஆத்ம விழிப்பின் முழுமையாவதை பகவான் விழிப்பில் சமாதியென்கிறார். இவை முயலும் அனைவருக்கும் கிட்டுவது. ஆரம்ப நாளில் அதிகபட்ச வசதியாகவும் போகப்போக அதிகபட்ச மனநிம்மதியாகவும் தொடர்ந்த வளர்ச்சியுண்டு. அறிவு அனுபவம் தரும். அனுபவம் தரும் அறிவு பேரறிவு. இதைத் தெளிவு எனலாம். எந்த விஷயத்திலும் அடுத்த கட்டம் உண்டு. அப்படி ஏற்படும் தெளிவைக் கொண்டு பழைய அனுபவத்தைப் புரிந்துகொள்ள முயன்றால், ஏற்பது அந்த அளவில் சித்தி. எந்த ஒரு கருத்தும் தத்துவத்தெளிவைத் தருமானால் - உ.ம். மணிக்கொரு சமர்ப்பணம் தருவது இடையறாத நினைவு - அதன்பின் அக்கருத்து முடிவான பலனைத் தரவல்லது. ஞானமே ஞானி நாடுவது. பக்தன் தேடுவது மனத்தின் ஞானமல்ல நெஞ்சின் ஞானம். நெஞ்சு பெற்ற ஞானம் நிலையான முழுமையுடையது. மனம் போல் ஊசலாடாது. உடல் பெற்ற ஞானம் உடனே பலன் தருவது. ஜீவன் தேடும் ஞானம் க்ஷணசித்தி. இன்று டெல்லிக்கு நடந்தும், பஸ்ஸிலும், ரயிலிலும், விமானத்திலும் போகலாம். முறைக்குரிய முயற்சியுண்டு. எப்படிப் போனாலும் இலக்கையடையலாம். நடந்து ஓரிரு மாதங்களில் டெல்லி போயடையலாம். ஓரிரு வருஷங்களில் அது போல் யோக சித்தி பெறலாம். 10 அல்லது 15 ஆண்டில் பெற்றாலும் அதன் பேறு குறைவதில்லை.இல்லாமலில்லை. பெறாதவர் உண்டு. நாம் எதையும் நினைக்கலாம். ஆனால் எதையும் செய்வதில்லை. செய்தால் தொடர்வதில்லை. மனிதன் அவன் குறையால் செயல்படலாம், நிறையாலும் செயல்படலாம். நிறையால் செயல்படும் மனிதனுக்கு எதுவும் நிலையாக அமையும்.

பகவான் உள்ளே வரும் எண்ணத்தை மறுத்து மௌனம் பெற்றார் என்றேன். கோபம் வரும்பொழுது கோபத்தைக் கட்டுப்படுத்தினால் கோபம் வெளிப்படாது, உள்ளேயிருக்கும். வெளியில் கட்டுப்படுத்தியது போல் உள்ளேயும் கட்டுப்படுத்த வேண்டும். உள்ளே கோபம் எழாமலிருக்க கோபம் எழும் இடத்தில் நமக்குக் கட்டுப்பாடு வேண்டும். ஏன் கோபம் வருகிறது? இயலாமை கோபம். கோபம் இயலாமையால் எழுந்தால் இயலாமை எழுவது எங்கு? மனஉறுதி செயல்படுவது திறமை. செயல்பட முடியாதது இயலாமை. மன உறுதி உற்பத்தியாகும் இடம் அறிவுடன் உறுதி உடன் உறையுமிடம். அறிவும் உறுதியும் மனத்தில் பிரிந்தும் சத்திய ஜீவியத்தில் இணைந்தும் உள்ளன. கோபத்தைக் கட்டுப்படுத்துவது என்பதன் மூலம் சத்திய ஜீவியம். லீலி பகவானுக்கு மௌனம் பயிற்றுவிக்கக் கொடுத்தது பலித்தால் பகவானுக்கு பக்தி, நம்பிக்கை அதற்குரிய மௌனம் ஏற்பட்டிருக்கும். அது ஏற்படுவது அப்பயிற்சியின் வெற்றி. பகவான் அவதார புருஷர். அதனால் இந்த எளிய பயிற்சியே அவருக்கு முடிவான ஆன்மிகப்பலனான பிரம்ம ஜீவியத்தை அளித்தது. இப்பயிற்சி பலன் தருவது இம்முறை செயலை தலைகீழே மாற்றுவது. தலைகீழே மாற்ற அதிகத் திறமை வேண்டும். கட்டுப்பாடு என்பதனுள் reversal தலைகீழ் மாற்றம் புதைந்துள்ளது. இராணுவத்தில் முன்னேறும் கட்டம் பெரிய நேரம். தோற்றபின் இராணுவம் சிதையும். சிதையாமல் காப்பாற்ற தளபதிக்கு வலிமை வேண்டும். குடும்பம் வளமான நேரம் அனைவரும் தரும் ஆதரவு வறுமையால் வாடும் நேரம் இருக்காது. அது இருக்க பண்புள்ள குடும்பமாக இருக்க வேண்டும். இராணுவத்தில் அதை ஒழுங்கு குலையாமல் பின் வாங்குவது (orderly retreat) என்பார்கள். தோற்காதபொழுது பின் வாங்குவது தலைகீழ் மாற்றம் (reversal). இது பகவானுக்குரிய முக்கியமான முறை.

உள்ளே போ: மனம், காலம், ஆழம், பிரச்சனை என எந்த வகையாகக் கூறினாலும் சமர்ப்பணம் பூர்த்தியாகும் நிலையை சரிவரக் கூற முடியாது. அன்பர் தனக்குரிய ஆழத்தை எப்படி அதிகப்படுத்துவது என்பதை அறிய அவர் ஆழத்தைத் தொட்ட பிறகே அறியலாம். முழுச் சமர்ப்பணம் நான் பல முறை எழுதியது. இதைச் செயலாலும், உந்துதலாலும், உணர்வாலும், காலத்தாலும் விளக்குவதுண்டு. சமர்ப்பணம் 4 நிலைகளில் உண்டு. ஜீவன், ஜீவியம், பவர், ஆனந்தம். ஒரு செயலை இந்த 4 நிலைகளிலும் சமர்ப்பணம் செய்தால் அது முழுச் சமர்ப்பணமாகும். ஜீவியம் இரண்டாகப் பிரியும். அறிவு, உறுதி என்பவை அவை. சமர்ப்பணத்தில் முதலில் எட்டுவது உறுதி. பவர் என்பது Force. அது ஜீவியத்திற்கு அடுத்த நிலை. உறுதி ஜீவியத்தின் பகுதி. சமர்ப்பணம் அதை எட்டினால் அது சக்தி வாய்ந்த வேகத்துடன் எழும். அதைத் தடுக்க முடியாது. சமர்ப்பணம் செய்வது அதிக சிரமம். அது தட்டுப்பட்டால், அது நம்மை மீறிச் செல்லும். நாம் அதைக் கண்டு கொள்ளும்முன் காத தூரம் போய் விடும். முதலிடமானாலும் அதைக் காண்பது பெரிய நேரம். அது கட்டுப்பட்டு சமர்ப்பணமானால், உலகமே அமைதியுற்றது போலும் மலையைக் கையால் தூக்க முடிவது போலும் தெரியும். இது நம்மையறியாமல் செயல்படும் நேரம் அதிசயம், ஆச்சரியம், அற்புதம் நிகழ்கிறது. நாமறிவது சிரமம். நாம் அதை அறிய முயன்று தோற்பது “யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது” என்பதற்கொப்பாகும். சிறுநீரகக் கல் வெள்ளிக்கிழமையிருந்தது திங்கட்கிழமை மறைந்தது இதனால். மனம் இதை நாடினால், தோல்வியும் பெரு வெற்றி. மனம் நெகிழ்ந்த நேரம், ஆழ்ந்து சொல்லிழந்த நேரம் இதைக் கருத உகந்த நேரம். பழைய விஷயம் மனதை உறுத்துவது இந்த நேரம் எழுந்தால் அது அப்படியே மறைவதைக் காணலாம். திருவுருமாறுவது அடுத்த கட்டம். “ஏன் அந்தப் புலி என்னைத் தின்னவில்லை?’’ எனக் கேட்டவர் உணரும் நிலை. அந்த நிலை எந்த அளவில் எழுந்தாலும் நெடுநாள் முன் நடந்தவை மேலெழுந்து நாம் ஆழத்தைத் தொட்டதைக் காட்டும். 20 வருஷம் முன் வந்த கனவு நினைவுக்கு வரும். காலத்தாலும், இடத்தாலும், உணர்வாலும், நிகழ்ச்சியாலும் நாம் ஆழ்ந்ததை அறியலாம். அந்நேரம் உள்ளே எழும் அமைதி 1000 மைலுக்கு அப்பாலுள்ள நிகழ்ச்சியைக் காட்டும். 40 ஆண்டிற்கு முன் வாங்கிய கைமாற்று ரூபாய் 100/-ஐ இன்று 150/-ரூபாய் செலவு செய்து கொண்டு வந்து ஒருவர் கொடுத்தார். சீசனே இல்லாதபொழுது Grace மலர் தோட்டத்துச் செடியில் பூக்கும். இவை புறம். அகம் சூட்சுமம். ஜீவன் அமைதியானதால் மனமும் எண்ணமும் அசைவற்று, உடல் சமாதியிலிருந்ததைப் போல் உறைந்து விடும். அந்த நேரம் படிக்கவும் முடியாது. படித்தால் இதுவரை விளங்காதது விளங்கும். சமர்ப்பணம், சரணாகதி, Sincerity பெரும் யோக நிலைகள். ஓரளவு சொல்லால் விளக்கலாம். அனுபவம் தரும் அறிவு அளவு கடந்த பெரியது. Experience cannot be explained.

நல்லதை ஏற்று கெட்டதை மறுப்பது மனிதனின் கடமை. இதைச் செய்யாமல் சௌகரியமானதை ஏற்பவன் மனிதனாக மாட்டான். தெய்வீக வாழ்வை எட்ட அன்பரும், சாதகரும் மனித நிலையைக் கடக்க வேண்டும். அதாவது நல்லது, கெட்டது என்ற பாகுபாட்டைக் கடக்க வேண்டும். மேலும் சொன்னால் தவறு என்பதற்காக மறுக்கக் கூடாது, நல்லது என்பதால் மட்டும் ஏற்கக் கூடாது. ஆண்டவனுக்குச் சம்மதம் எனில் ஏற்க வேண்டும், சம்மதமில்லாவிட்டால் ஏற்கக் கூடாது. ஏற்பது என்பதற்கு சமர்ப்பணமே அளவுகோல், நல்லதல்ல. எதிரியைக் கொலை செய்யப்போய் படுகாயமுற்றவனை டாக்டர் குற்றவாளி என மறுக்கக் கூடாது. டாக்டருக்குத் தொழில், காயம்பட்டவருக்குக் கட்டுப்போட வேண்டும். சகாதேவன் துரியோதனனுக்குப் போர் வெல்ல நல்ல நாள் குறித்துத் தர வேண்டும். எதிரி வீடு எரிந்தாலும் அவிப்பது முறை. சூட்சுமமாக மனித நிலையைக் கடக்க ஒளி, இருள்; உயர்ந்தது, தாழ்ந்ததைப் போற்றக் கூடாது. இது மனித நிலையைக் கடந்து உயர்ந்து வர மனநிலையைக் கடப்பது. மனத்தைக் கடப்பது போல் உணர்வையும் கடந்தால் மனித நிலையை முழுவதும் கடக்கலாம். ரமணாஸ்ரமத்தில் திருடு போனதால் வெள்ளிச் சாமான்களை அலுமினிய சாமான்களாக மாற்றினர். திருட வந்தவர்கள் ஏமாந்தனர். ரமணரைக் கண்டு பிடித்து அடித்தனர். சிஷ்யர்கள் ஓடி வந்து தடுத்தனர். “எனக்குப் பூசை நடக்கிறது. தடுக்க வேண்டாம்’’ என்றார் ரமணர். திருடு போவதைத் தடுக்க முயன்றது தவறு என ரமணர் உணர்ந்தார். திருட்டைத் தடுக்க தனக்கு உரிமையில்லையென நம்பினார். ரொட்டி சப்ளை செய்யும் பையன் 1911-இல் பகவான் வீட்டில் திருடினான். சாதகர்கள் அவனைப் பிடித்து அடித்தனர். சத்தம் கேட்டு பகவான் அடுத்த அறையினின்று வந்தார். விபரமறிந்தார். எவ்வளவு திருடினான் எனக் கேட்டார். 5 ரூபாய் என்றதும் அதை அவனிடமே கொடுக்கச் சொன்னார். அடிப்பதை நிறுத்தச் சொன்னார். இதன் அர்த்தம் என்ன? சாதகர்கள் திருடு போகாமல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமா? சாதகர் மனத்தில் திருட்டு எண்ணம் இருப்பதால் திருடு போகிறது. சாதகர்கள் மனம் சுத்தமாக இருக்க வேண்டும். திருடனை அடிக்கக் கூடாது. இது போல் குடும்பம் நடத்துவது வாழ்வனைத்தும் யோகம் என்றாகும். உதவி பெற்றவர் அதே க்ஷணம் திட்டுகிறார் என்பதை எத்தனை முறை கண்டாலும் நம்புவது சிரமம். உதவுவது சமர்ப்பணமான செயலல்ல எனக் காட்டுகிறது. அகந்தையின் ஆர்ப்பாட்டமான செயல் என்பதால் திட்டு, பரிசாக வருகிறது. பெறுபவனுக்கு உதவி தேவையில்லை. எவராவது அகப்பட்டால் அவனை அழித்து மகிழ்வது மனித சுபாவம். அழிக்க முடியாவிட்டால் அவனைத் திட்டுகிறான். இது புரியாது. சமர்ப்பணம் தவறாது புரிய வைக்கும். அது சமர்ப்பண உயர்வு.

சமர்ப்பணமான செயலால் தவறு எழாது. எச்செயல் தவறுகிறதோ அது சமர்ப்பணமாகாத செயல். அன்பன் செயலை இறைவனுக்குச் சமர்ப்பணம் செய்கிறான். ஊரில் வாழ்பவன் தன் செயலை ஊருக்குச் சமர்ப்பணம் செய்கிறான். அவனுக்கு ஊரால் தவறு வராது. சர்வதேச ரீதியாக AID உதவி கோடிக்கணக்கான கோடி பணம் 60, 70 ஆண்டுகளாக வழங்கப்பட்டது. உதவி பெற்ற நாடுகளில் மக்கள் அனைவரும் உதவி கொடுத்த நாட்டை வெறுக்கின்றனர். இது அடிப்படையான மனித சட்டம். “ஒரு மனிதன் எவர் சொல்வதாலும் கேட்டுத் திருந்த மாட்டான்’’ என்கிறார் அன்னை. உதவியைப் பொருளாகப் பெற மனிதன் விரும்பினாலும், பெறும் நிலையில் தானிருப்பதை மனிதன் வெறுக்கிறான் என்பது மனித சுபாவத்தின் உண்மை. இந்த இடங்களிலும் சமர்ப்பணம் தவறாது. சமர்ப்பணமான உதவியால் கெட்ட பெயரோ, எதிர்ப்போ, வெறுப்போ எழாது என்பது உண்மை. சமர்ப்பணம் மனித சுபாவத்தைவிடப் பெரியது. தொடர்ந்த சமர்ப்பணம் சுபாவத்தை மாற்றும். சுபாவம் குணம். குணம் வியாதி. குணத்தை மாற்றினால் வியாதி போகும். நெடுநாளாக ஒரு கை வீங்கியிருந்த பெண்ணுக்கு எந்த வைத்தியமும் குணம் தராத நேரம், “என் குணத்தை மாற்றிக் கொள்கிறேன்’’ என அவர் பிரார்த்தனை செய்த 7-ஆம் நாள் வீக்கம் வாடியது. நல்லது செய்ய நல்ல மனிதன் ஆசைப்படுவான். அவனே அன்பனானால் நல்லது அவனுக்கு நல்லது செய்யாது. சமர்ப்பணமான செயல் நல்லதானாலும் கெட்டதானாலும் உதவும்.

(தொடரும்)

***********



book | by Dr. Radut