Skip to Content

08. தனித்தன்மையும் அதற்குரிய அடையாளங்களும்

தனித்தன்மையும் அதற்குரிய அடையாளங்களும்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

மூலம்: ஸ்ரீ கர்மயோகி

விரிவாக்கம் - சொற்பொழிவு ஆற்றியவர்: திரு. N. அசோகன்

சொற்பொழிவு ஆற்றிய தேதி: 24.04.2015

1. தன்னம்பிக்கையும், தன்னைச் சார்ந்திருத்தலும் (Self-confidence and Self-Reliance): தனித்தன்மையின் முக்கியமான அம்சங்களாக நாம் இவ்விரண்டையும் சொல்லலாம். இந்த இரண்டு அம்சங்களும் இல்லாமல் தனித்தன்மையைக் கொண்டுள்ள எவரையும் நாம் பார்க்க முடியாது. மேலை நாடுகளின் அபார சுபிட்சத்திற்கு முக்கிய காரணமே அவர்கள் தம்மேல் கொண்டுள்ள அபார தன்னம்பிக்கைதான். இந்தியா போன்ற நாடுகளில் அந்தளவிற்கு சுபிட்சமில்லாமல் போனதற்கு முக்கியக் காரணம் அதே தன்னம்பிக்கை இங்குக் குறைவாக இருப்பதுதான். முப்பது மில்லியன் ஆங்கிலேயர்கள் முந்நூறு மில்லியன் இந்தியர்களை நூறு ஆண்டுகட்கு மேலாக அடிமையாக வைத்திருந்தார்கள் என்றால், அதிலிருந்தே நமக்குத் தன்னம்பிக்கை இல்லை என்பது தெரிகிறது. நாலுபேரால் முடியாத காரியம் என்று ஒன்றிருந்தால் அது நம்மாலும் முடியாது என்று நாம் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். ஆனால், மேலை நாட்டவர்கள் இவ்வாறு சிந்திப்பதே கிடையாது. நாலுபேரால் முடியாவிட்டால் என்ன? என்னால் முடியும் என்றுதான் அவர்கள் நினைக்கிறார்கள். இப்படி அவர்கள் நினைப்பதற்குக் காரணமே அவர்களுக்கு இருக்கின்ற தன்னம்பிக்கைதான். வானத்தில் பறக்கும் விமானத்தை எவரும் கண்டுபிடித்ததில்லை என்றபொழுது அது எவராலும் முடியாது என்று நமக்குத் தோன்றுகிறது. ஆனால் இதேநிலையிலுள்ள அமெரிக்கர்கள் வேறுவிதமாக நினைத்தார்கள். யாரும் இதுவரையிலும் கண்டுபிடிக்காவிட்டால் என்ன, நான் கண்டுபிடித்துக் காட்டுகிறேன் என்று அமெரிக்கர்களான ரைட் சகோதரர்கள் பத்து வருடங்களுக்கு மேலாக பரிசோதனைகள் பலவற்றைச் செய்து இறுதியில் 1903-ஆம் ஆண்டு மனிதனாலும் பறக்க முடியும் என்று நிரூபித்தார்கள். இத்தகைய தன்னம்பிக்கையை இந்தியர்களிடம் நாம் காண்பதே அரிது. யாரும் இதுவரையில் செய்யாத தொழிலில் நல்ல லாபம் இருக்கிறது. அதனால் நீங்கள் ஏன் செய்யக்கூடாது என்று ஒரு இந்தியரைக் கேட்டால், அது எப்படி யாரும் செய்யாத தொழிலை நான் செய்வது, யாரேனும் முதலில் செய்ய வேண்டும், பின்தான் நான் செய்வேன் என்றும், யாரும் முயற்சி செய்யாத தொழிலில் நான் எப்படி இறங்குவேன், அது சரி வராது என்றும் மறுப்பார்கள்.

கடலூருக்கு அருகில் உள்ள ராமாபுரத்தில் ஸ்ரீ கர்மயோகி அவர்கள் மதர் எஸ்டேட் என்ற பெயர் கொண்ட முந்திரி எஸ்டேட்டை வாங்கினார். அங்கே முந்திரி காடுகளை அகற்றி பெரிய அளவில் வாழை பயிரிட்டு தண்ணீர் பாய்ச்சுவதற்காக ஆழ்துளைக்கிணறு போட்டார். அதைப்பின்பற்றி அந்த ஊர் கிராமவாசிகளும் அதையே செய்வார்கள் என்று எதிர்பார்த்தார். ஆனால் யாரும் எதையும் செய்யவில்லை. அவருக்கு ஒன்றும் புரியவில்லை. கிராமவாசிகளை அணுகி “நான் இவ்வளவு ஏக்கரில் வாழை பயிரிட்டுள்ளேனே, என்னைப் பின்பற்றி ஏன் யாரும் வாழை பயிர் செய்யவில்லை” என்று இவர் வினவினார். அதற்கு அவர்கள் அளித்த பதில் என்னவென்றால், “நீங்கள் வெளியூர்க்காரர், பணபலம் மிகுந்தவர். அப்படி இருக்கும்பட்சத்தில் நீங்கள் செய்வதை எல்லாம் நாங்கள் செய்ய முடியுமா? எங்க ஊர்க்காரர் இதைச் செய்தால் அதன் பிறகுதான் இதை எங்களாலும் செய்ய முடியும் என்று நம்புவோம்” என்று பதிலளித்தார்கள். அதன்பின் ஸ்ரீ கர்மயோகி அவர்கள் அவ்வூர் விவசாயி ஒருவரைப் பார்த்து அவரை ஒரு bore well போடு மாறும் அது தவறினால் செலவைத் தாமே ஏற்றுக் கொள்வதாகவும் கூறி தைரியப்படுத்தியதில் அவர் துணிந்து போட்டார். அதில் தண்ணீர் கிடைத்து, அதை வைத்துகொண்டு அவர் வாழை பயிரிட்டதைப் பார்த்தபின் மற்ற விவசாயிகளும் bore well போட்டு வாழை பயிரிட முன்வந்தனர். இந்தளவிற்கு நம்முடைய தன்னம்பிக்கை அடுத்தவரைப் பொறுத்துள்ளது. வ.உ.சி. அவர்கள் கப்பல் கம்பெனி ஆரம்பித்தபொழுது அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் பல்கலைக்கழகம் ஆரம்பித்தார். தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் அவரை அதிசயமாகப் பார்த்தனர்.

Self-confidence மற்றும் Self-reliance-ல் அமெரிக்கர்களுக்கு நிகராக வேறுயாரும் இருக்க முடியாது. நாம் எல்லாவற்றிற்கும் குடும்பத்தின் ஆதரவையும், உற்றார் உறவினரின் ஆதரவையும், அரசாங்கத்தின் ஆதரவையும் எதிர்பார்த்திருக்கிறோம். ஒரு இந்திய இளைஞன் திருமணம் செய்தால், வரதட்சணையாக வரும் பணத்தை வைத்துக் கொண்டு ஏதேனும் தொழில் செய்யலாமா என்று பார்ப்பான். அப்படி வரதட்சணையை வைத்துத் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது அவனுக்கு மரியாதைக் குறைவாகத் தெரியவில்லை. பட்டப்படிப்பு முடித்து கல்லூரியை விட்டு வெளிவந்தவுடன் அரசாங்கம் தனக்கு வேலை ஏற்படுத்தித் தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறான். எத்தனையோ விதமான அரசுச் சலுகைகளை பொதுமக்கள் அனுபவித்துக் கொண்டுள்ளனர். விவசாயிகள் கடன் வாங்கிப் பயிர் செய்தால், கடனைத் திருப்பித்தராமல் அரசு கடனைத் தள்ளுபடி செய்யுமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், இதே விஷயங்களில் அமெரிக்கர்கள் நம்மைப்போல் நடந்து கொள்வதேயில்லை. அவர்கள் யாருடைய ஆதரவையும் நம்பி அவர்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில்லை. தன்னுடைய சொந்த உழைப்பு, திறமை இவைகளை மட்டுமே நம்புவார்கள். வரதட்சணை கோரிக்கை வைப்பது அமெரிக்க இளைஞர்கள் அறியாத ஒன்றாகும். நமக்கு நிதியுதவி தேவைப்பட்டால், நாம் தயங்காமல் உற்றார், உறவினர்களிடம் வாங்கிக் கொள்கிறோம். ஆனால் அமெரிக்கர்கள் இவ்வாறு செய்வதில்லை. நாம் லட்ச ரூபாய் ஒருவரிடம் கடன் வாங்கும்போது அவர்கள் உறவினர்களிடம் நூறு டாலர் கடன் வாங்க மிகவும் தயங்குவார்கள். தந்தையார் கோடீஸ்வரராக இருந்தாலும், பிள்ளை தனக்கு அவர் இலவசமாக ஒரு தொழில் அமைத்துத் தரவேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. கடனாக ஒரு தொகையை வாங்கி, சொந்தமாக ஒரு தொழிலை அமைத்து அதில் லாபம் பார்த்து, அந்தக் கடனை திருப்பித்தர வேண்டும் என்றுதான் எந்த அமெரிக்க இளைஞனும் விரும்புவான். நம் நாட்டில் தொழில் முனைவோருக்கு அரசாங்கம் வங்கிகளின் மூலம் பலவிதமான சலுகைகளை வழங்குகிறது. ஐந்து கோடி ரூபாய்க்கு ஒருவர் தொழில் திட்டம் தீட்டினால்கூட திட்டம் தீட்டியவர் 10% margin கொடுத்தால் போதும் மீதி தொகையை வங்கி கொடுக்கும் என்ற அளவிற்கு நம் நாட்டில் தொழில் முனைவோருக்கு வங்கிகளின் ஆதரவு உள்ளது. இது அமெரிக்கர்கள் கேட்டறியாத ஒன்று. இப்படி ஒரு ஐந்து கோடி ரூபாய்க்குத் திட்டம் தீட்டி எந்த ஒரு அமெரிக்க இளைஞனும் எந்த ஒரு அமெரிக்க வங்கியிலும் 10% margin கொடுத்து மீதித் தொகை கடனாக வாங்க முடியாது. அவர் தன்னுடைய சொந்தத் திறமையில் சிறிய அளவில் தொழில் ஆரம்பித்துக் கொள்ள வேண்டும். அந்தத் தொழிலை அவர் படிப்படியாக வளர்த்து, ஐந்து கோடி பெறுமான அளவிற்கு அதை விரிவுபடுத்த வேண்டுமே தவிர, நேரடியாக வங்கியின் ஆதரவை வைத்துக்கொண்டு பெரிதாக எதையும் தொடங்கிவிட முடியாது.

நம்மிடம் காணப்படாத self-reliance இந்தளவிற்கு ஏன் அமெரிக்கர்களிடம் காணப்படுகிறது என்பதையும் நாம் ஆராயவேண்டும். அடிப்படையில் இந்தியர்களின் வாழ்க்கை கூட்டு வாழ்க்கை. அதாவது collective life. அப்படிப்பட்ட நம் வாழ்க்கையில் சிரமமோ நெருக்கடியோ ஆபத்தோ வந்தால், ஆதரவு தர உற்றார் உறவினர்கள் இருக்கிறார்கள். ஜாதி சங்கங்கள் உள்ளன. பொதுவாக உள்ளூர் ஆதரவு உள்ளது என்று நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். வசதி குறைந்த ஒருவர் தம் மகளுக்கு எப்படித் திருமணம் செய்வது என்று கவலைப்படும் பொழுதெல்லாம் அவர் அண்ணன் வசதி மிகுந்தவராக இருந்தால், நான் இருக்கிறேன், பார்த்துக் கொள்கிறேன், கவலை வேண்டாம் என்று சொல்வதுண்டு. கிராமத்தில் ஒரு விவசாயி நிலத்தில் அத்துமீறி ஒருவர் நுழைந்தால், மாடு விட்டு மேய்த்தால், அவருடைய நிலத்தின் எல்லையை இரண்டடி இவருடைய நிலத்திற்குள் கொண்டுவர முயற்சி செய்தால், அதன் காரணமாக தகராறு எழும்போது இவருக்கு ஆதரவாக செயல்படுவதற்கு அதே கிராமத்திலுள்ள உற்றார் உறவினர்களைக் கூப்பிடுவதுண்டு. ஆபத்திற்கு உதவ உற்றார்கள் இருக்கிறார்கள் என்று தெரியும்போது, மற்றவர்களும் வீண் தகராற்றை எழுப்ப மாட்டார்கள். ஒருவர் உடம்பிற்கு வந்து படுத்துவிட்டால், மருத்துவமனையில் admit செய்து குணமாகும்வரை கூட இருந்து பார்த்துக் கொள்ள உற்றார் உறவினர்கள் உதவிக்கு வருவார்கள். இப்படிப்பட்ட உறவினர்கள் ஆதரவு என்பது அமெரிக்கர்கள் கேட்டறியாத ஒன்று. 16-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் அமெரிக்கா வந்து குடியேறியபோது அந்த நாடு வெறும் வனாந்திரமாக இருந்தது. அந்நிலையில் குடியேறியவர்கள் எல்லா வேலைகளையும் தாங்களேதான் செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தனர். பயிர் செய்தால் அதை அறுவடை செய்யும்வரை பயிரைப் பாதுகாக்க உதவிக்கு ஆட்கள் இல்லை. திருட்டோ, கொள்ளையோ நடந்தால் பாதுகாப்பு தர காவல்நிலையங்கள் இல்லை. தன்னையும், தன் உடமையையும் பாதுகாத்துக் கொள்ள அவரவர் துப்பாக்கியும் கத்தியும் வைத்திருக்க வேண்டியதாயிற்று. உடம்பிற்கு வந்து படுத்துவிட்டால் உதவுவதற்கும் ஆட்கள் இல்லை. இப்படிப்பட்ட நிலையில் வாழ்ந்து பழகிய அமெரிக்கர்களுக்கு இது நன்றாகப் பழகியபடியால், இதையே வழக்கமாக வளர்த்துக் கொண்டுவிட்டனர். இன்று அந்நாடு செல்வச் செழிப்புடன் இருந்தாலும், நாட்டின் ஆரம்பகால வாழ்க்கை இப்படி இருந்ததால், இதனால் ஏற்பட்ட பழக்கங்கள் நன்கு வேரூன்றி விட்டன. நம் நாட்டினருக்கு ஆரம்பத்திலிருந்தே கூட்டுக் குடும்ப வாழ்க்கை பழகிவிட்டதால், அப்போதே நாம் கற்றுக்கொள்ளாத self reliance இன்று நகர வாழ்க்கை ஏற்பட்டபின்னும் அவரவர் வருமானத்திற்கு அவரவரே பொறுப்பு என்ற நிலைமை உருவாகியபின்னரும், பழைய பழக்க வழக்கங்கள் இன்னும் விடாமல் தொடர்கின்றன. நம் நாட்டுப் பெண்கள் சிலருக்கு இன்னும் சொந்தமாக முடிவு எடுக்கத் தெரியாது. எல்லாவற்றிக்கும் கணவனையே முடிவு எடுக்கச் சொல்வதால், எதற்கு எடுத்தாலும் அவரையே ஒரு வார்த்தை கேட்க வேண்டும் என்பதை நாம் பார்க்கிறோம். இந்தியாவிலிருந்து சென்று அமெரிக்காவில் வசிக்கும் பல பெண்களுக்கு இப்பழக்கம் இருப்பதால் இது அமெரிக்கர்களுக்கு அதிருப்தியைத் தருகிறது. அங்கு வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர் ஒரு பல் மருத்துவமனைக்குப் போனார். இவருடைய பல்லைப் பரிசோதித்த மருத்துவர் இவருடைய ஒரு பல் வீணாகிவிட்டது, அதைப் பிடுங்கிவிட்டு வேறு பல் பொருத்துகிறேன், அதற்கு $2000 ஆகும், சம்மதமா என்று கேட்டார். அதற்கு அவரால் உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை. தன் கணவர் இதற்கு அனுமதிப்பாரா என்ற கேள்விதான் வந்தது. ஆகவே அவர் தயக்கத்துடன் தன் கணவரை ஒரு வார்த்தை கேட்டபின் சொல்கிறேன், இரண்டு நாட்கள் அவகாசம் கொடுங்கள் என்று கேட்டார். அந்த அமெரிக்க டாக்டருக்கு ஒன்றுமே புரியவில்லை. மிகவும் ஆச்சரியப்பட்டுவிட்டாராம். இதற்கு நேர் எதிர்மாறான அனுபவத்தை வெள்ளைக்காரப் பெண்ணின் கோணத்திலிருந்து பார்த்தால், இந்தியப் பெண்ணிற்கும், வெள்ளைக்கார பெண்ணிற்குமுள்ள வித்தியாசம் தெரியும். P&P-யில் எலிசபெத்தையும், டார்சியையும் எடுத்துக் கொள்வோம். அவள் ஆரம்பத்தில் அவனை நிராகரிக்கிறாள். அது அவளாக எடுத்த சொந்த முடிவு. அவனுடைய திருமண வாய்ப்பை ஏற்க வேண்டுமா அல்லது நிராகரிக்க வேண்டுமா என்று யாரையும் அவள் கேட்கவில்லை. அப்படி மறுத்தபின்னும் யாரிடமும் அவள் சொல்லவுமில்லை. இது அவள் சொந்த விஷயம் என்று மௌனமாக இருந்தாள். அதே டார்சி இரண்டாம்முறை மீண்டும் திருமண வாய்ப்பு தரும்போது சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறாள். அந்த நேரத்திலும் தாய், தந்தையைக் கேட்க கால அவகாசம் எதுவும் அவள் அவனிடம் கேட்கவில்லை. முன்பு வேண்டாம் என்பது அவள் சொந்த முடிவு. இப்போது வேண்டும் என்பதும் அவள் சொந்த முடிவு. இப்படித் தன் விஷயத்தில் தன்னைச் சார்ந்திருப்பதே தனித்தன்மைக்கு ஒரு முக்கியமான அடையாளமாகும்.

(தொடரும்)

*********



book | by Dr. Radut