Skip to Content

07. வாழ்க்கையை நம் வழிக்குக் கொண்டு வரும் இரகசியங்கள்

வாழ்க்கையை நம் வழிக்குக் கொண்டு வரும் இரகசியங்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கர்மயோகி

12. இரகசியமான விஷயங்களை இரகசியமாகவே வைத்திருக்க வேண்டும். நம்பிக்கைக்குத் தகுதியில்லாதவரைநம்புவதும் தவறு. அதே சமயத்தில் நம்ப வேண்டியவர்களை நம்பாமலிருப்பதும் தவறு.

இதமாகக் காரியம் முடிவதற்கு இன்றியமையாத சாதனம் இரகஸ்யம். இன்றுவரை சிருஷ்டியின் இரகஸ்யம் இரகஸ்யமாகவே உள்ளது. ரிஷிகள் உட்பட எவரும் சிருஷ்டியை அறிந்ததில்லை. வாழ்வு செயல்களாலானது. செயல் என்பது காரியம். எந்தக் காரியம் கூடி வரவும் இரகஸ்யம் முக்கியம். உயர்ந்தவை மறை எனப்படும். மறைந்த பொருளுடையது மறை, வேதம் எனப்படும். தாழ்ந்தவரிடையே செயல்படும் பொழுது மறைக்கத் தெரியாதவனுக்கு ஒரு காரியமும் கூடி வாராது. சொத்து, திருமணம் வாழ்வில் முக்கியம். நல்ல சம்பந்தம் வந்தபொழுது ஒரு வார்த்தை பெண் பார்க்க வருபவரிடம் கூறிவிட்டால் சம்பந்தம் முறிந்துவிடும். பணம், சொத்து, வரவு, செலவு ஆகும் பொழுது ஆகாதவர் அடுத்தவரிடம் ஒரு தவறான செய்தியைக் கூறிவிட்டால் காரியம் கெட்டுவிடும். ஊரில் நல்லெண்ணமுள்ளவர் குறைவு. கெட்ட எண்ணமுள்ளவர் உண்டு. அவர்கள் செயல்படுவதைத் தடுக்க முடியாது. விவரம் தெரிந்தவர் அனைவரும் முக்கிய காரியம் முடியும்வரை, கூடியவரை வெளியில் சொல்லமாட்டார்கள். நமக்கு ஆகாதவருண்டு. நல்ல காரியத்திற்கு ஆகாதவர் பலர் உண்டு. காற்று எங்கும் பரவியுள்ளதுபோல் வதந்தி நிரம்பியுள்ளது. அதிலிருந்து தப்பாமல் பெரிய காரியங்களைச் செய்ய முடியாது. எவரை விலக்க நாம் முயல்கிறோமோ அவருக்கு நம் செய்தி “தெரியும்” சரியான நேரத்தில் எதிர்ப்படுவார். விலக்குவது அரிது. அதனால் இரகஸ்யம் அவசியம். முழு இரகஸ்யமும் முழுமையாகத் தோற்கடிக்கப்படும் திறமை நிலவியுள்ள இடத்தில் இரகஸ்யமில்லாதவரால் எதையுமே செய்ய முடியாது. இரகஸ்யம் அவசியம், அத்தியாவஸ்யம்.

  • இரகஸ்யம் இறைவனின் புனித உருவம்.
  • காரியம் இரகஸ்யத்தைப் போற்றும்.
  • நேரமும், காலமும் இரகஸ்யத்தின் அவசியத்தை அறிந்தவை.

வாழ்வு இரகஸ்யத்திற்குரியது. எனவே மனிதன் இரகஸ்யத்தைப் புறக்கணிக்க முடியாது. அளவு கடந்து திருடும் கணக்குப்பிள்ளை இளைஞனான முதலாளியைப் பக்குவமாகத் திருப்தி செய்ய முடிகிறது. திருமணமானால், மனைவி வந்தபின் தன் சாதூர்யம் செல்லாது எனத் தெரியும். பெண்வீட்டார் ஏறிய பஸ்ஸில் அவனும் ஏறி “நீங்கள் பெரிய சொத்தை நம்பி பெண் கொடுக்க முன் வருகிறீர்கள், சொத்தே அவருடையதல்ல” என்றான். சம்பந்தம் தவறிவிட்டது. பாங்க் பெரும் தொகை வழங்கும் பொழுது ஊர் முழுவதும் கவனமாக இருப்பார்கள். “ஆபத்தான” செய்தியை ஏஜெண்ட்டிற்கு வழங்குவர். கடன் ரத்தாகிவிடும். காரியத்திற்கு ஜீவன் உண்டு. தன் விஷயத்தை அது வெளியில் கூறப் பிரியப்படாத நேரமுண்டு. அதுபோன்றவற்றை வெளியிட்டால் காரியம் வாடிவதங்கும், கெட்டுப் போகும். நாம் வணங்கும் அன்னையைப்பற்றி அனைவரிடமும் பேச முடியாது. எவராவது அர்த்தமற்ற சொல்லைச் சொல்லிவிட்டால், அந்தராத்மாவில் உறையும் அத்தெய்வம் பாதிக்கப்படும். அதனால் அன்பரல்லாதவரிடம் அன்னையைப்பற்றிக் கூற முடியாது. ஆழ்ந்த அன்புள்ள இளைஞன் தான் விரும்பும் பெண்ணை எவரிடமும் குறிப்பிட விரும்ப மாட்டான். அது புனிதமானது. புறத்தில் செயல்படுவதில்லை. அர்த்தமற்றவரே அதைப்பற்றிப் பேசுவர்.

அதே நேரம் நம்பிக்கைக்குரியவரிடம் இரகஸ்யத்தைச் சொல்வது அவசியம். அப்படிச் சொல்லாவிட்டால், அவர் மனம் புண்படும். காரியமும் அதை விரும்பும். சொல்லாத நேரம் காரியம் மனம் வருந்தும்.

  • இரகஸ்யம் புனிதமான ஆன்மிகச் செயல்.
  • அது ஆத்மாவுக்குரியது.
  • மௌனம் ஆன்மிக இரகஸ்யம்.

சொல்ல வேண்டியவரிடம் சொல்லாததும், சொல்ல வேண்டாதவரிடம் சொல்வதும் முறையல்ல. முறை மனிதனுக்கும், காரியத்திற்கும், அது சம்பந்தப்பட்ட நேரம், காலம், இடத்திற்கும், அதற்கேயுரிய பாங்கிற்கும் உண்டு. முறை முக்கியம். ஏனெனில் முறை மூலத்திற்குரியது. மூலம் பிரம்மம். அது தெய்வீகமானது. அதற்குரிய மரியாதை தரப்பட வேண்டும். இரகஸ்யத்தைக் காப்பாற்றுவதும், காப்பாற்றாததும் மனிதனுடைய செயல். மனிதனே மையம். மையம் செய்யும் முடிவே முடிவு. இரகஸ்யம் ஆன்மிகப் புனிதமுடையதானாலும் மனிதன் அதைவிட முக்கியம். அதனால் மனிதன் எப்படி இரகஸ்யத்தைக் கையாள்கிறான் என்பது முக்கியம். சிதம்ப இரகஸ்யம் என்ற சொல் சிதம்பரத்தில் வழங்குவது. முக்கியமானது, மூலத்திற்குரியது இரகஸ்யம் என்றாகும்.

வாய் ஓயாமல் பேசும் நண்பனும் முக்கியமான விஷயங்களைக் குறிப்பாலும் உணர்த்தமாட்டான். இப்பண்பை ஒருவனுக்குத் தருவது குடும்பமே. குடும்பம், ஜாதி, பெண், மனைவி, ஊர், பணம் ஆகியவை நுட்பமானவை. நுட்பமானவற்றை நுணுக்கமாகக் கையாள வேண்டும். போரை வெல்வது, நாட்டை ஆள்வது, தவம் பலிப்பது, உலகத்திற்குரிய சேவையை இறைவன் கருவியாக வழங்குவது, ஊருக்கு வரும் ஆபத்தை விலக்குவது, சிற்றூர் தலைநகராகும் ஆன்மிக வாய்ப்பை தம் தபோவலிமையால் பெற்றுத் தருவது, காவல்காரன் பெண்ணை முதலாளி மகன் மணப்பது, நேற்றுவரை தொண்டனானவன் இன்று ஊருக்குத் தலைமை வகிப்பது போன்ற பெரிய நுட்பமான செயல்களில் இரகஸ்யம் இன்றியமையாதது. நாளை பிரதமர் நம்மூர் குடியானவன் வீட்டில் சாப்பிடப் போவதை ஏற்பாடு செய்யும் மந்திரிக்கும், கலெக்டருக்கும் இந்த இரகஸ்யத்தின் சிறப்பு தெரியும்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அன்னை நெஞ்சில் உதிக்கும் நேர இரகஸ்யத்திற்குரிய நேரம்

(தொடரும்)

**********



book | by Dr. Radut