Skip to Content

10. அன்னை இலக்கியம்

அன்னை இலக்கியம்

பொறுப்பை என்னிடம் விட்டுவிடு

இல. சுந்தரி

விதவிதமான மணி வகைகளைக் கொண்டு பெண்கள் அணியும் நவீன அணிகளைத் தயாரித்து மொத்த வியாபாரக் கடையில் கொடுத்து பணம் பெற்று வந்தாள் கல்யாணி.

இவளும், இவள் கணவனும் மற்றும் இரண்டு குழந்தைகளுமாகிய இவள் குடும்பத்திற்கு இவள் கணவனின் வருவாய் போதுமானதாக இல்லை.

எனவே, இவள் கணவன் இவளிடம், “உனக்குத்தான் கைவினைப் பொருட்கள் செய்வதில் திறமையும் ஆர்வமும் உள்ளதே, அதற்கான மூலப் பொருட்களை கடனில் வாங்கி வருகிறேன். நீ பொருட்களைத் தயாரித்தபின் அவற்றை எனக்குத் தெரிந்த மொத்த வியாபாரக் கடையில் கொடுத்துப் பணம் வாங்கி வருகிறேன். சிறிது சிறிதாகக் கடனையும் அடைத்து, பணம் கொடுத்தே மூலப் பொருட்கள் வாங்குவோம். தொழில் சூடு பிடித்தால் வருவாய் பெருகும்” என்றான்.

கல்யாணிக்கும் அது சரி என்றே தோன்றியது. தன் குடும்ப நலனுக்குத் தானும் உதவ முடியும் என்று ஆர்வப்பட்டாள்.

அதன்பிறகு வீட்டின் ஓர் அறையை அதற்கென்று ஒதுக்கி அதில் தேவையான பொருட்களைச் சேகரித்து வைத்து, வீட்டு வேலை நேரம் போக மற்ற நேரங்களில் அணி வகைகளை நவீனமாய்த் தயாரித்தாள். அவற்றை அவள் கணவன் தனக்குத் தெரிந்த கடையொன்றிற்குச் சென்று காண்பிக்க, கடைக்காரருக்குப் பிடித்து விட்டது. முன்பணம் கொடுத்து மேலும் தயாரிக்கச் சொல்லிவிட்டார்.

கல்யாணியும் கிடைத்த நேரத்திலெல்லாம் விதவிதமான பெண்கள் அணியும் காதணி, கழுத்தில் அணியும் அணி, கால் கொலுசு என்று தயாரித்தாள்.

கடை முதலாளி பொருட்களைப் பார்வையிட்டு வாங்கிவர ஒரு சூப்பர்வைஸரைஅனுப்பிவைத்தார். அவரும் அவ்வப்போது வந்து பொருட்களை வாங்கிக் கொண்டு ஏதேனும் குறை சொல்லிப்போவார்.

தான் அதிகப்பணம் கேட்டு விடக்கூடாது என்று அவர் ஏதேனும் குறை கண்டுபிடிப்பது அவளுக்குத் தெரிந்தது. இருந்தாலும் தொழிலை நிலைநாட்டாதவரை அவரை எதிர்த்துப் பேசக்கூடாது என்று பொறுமையாயிருந்தாள்.

மேலும், மேலும் நிறைய செய்ய வாய்ப்பு வந்ததால் அதிக நேரம் ஒதுக்கிச் செய்ய ஆரம்பித்தாள். அன்றிரவு ஒரே கைவலி. இவள் வலக்கையை அதிகம் பயன்படுத்துவதால் வலது தோள்பட்டை முதல் வலது உள்ளங்கை வரை ஒரே வலி. மேலும் அணிகள் செய்ய முடியாத நிலை.

வலி நிவாரணி மருந்துகள் தேய்த்தும் வலி குறையவில்லை. தொழில் சூடுபிடிக்கும் நேரத்தில் கைவலி தடையாக வந்தது கண்டு வருந்தினாள்.

அப்போது அவள் தோழி கமலா வந்தாள். அவளிடம் தன் புதிய முயற்சியைக் கூறித் தான் தயாரித்துள்ள அணி வகைகளை அவளுக்குக் காண்பித்தாள். அவளும் பார்த்துவிட்டு எல்லாம் மிக நன்றாகவுள்ளதாகக் கூறிப் பாராட்டியதுடன், தனக்கும் சில அணிகளைப் பணம் கொடுத்து வாங்கிக் கொண்டாள். அவள் மேலும் இத்தொழில் மூலம் வளம் பெற வேண்டும் என அன்புடன் கூறினாள்.

அப்போது கல்யாணி தன் கை வலியைப் பற்றிக் கூறி, தொழிலைத் தொடர முடியுமா என்ற தன் கவலையைக் கூறி வருந்தினாள்.

பொறுப்புணர்வும், திறமையும் கொண்ட தன் தோழிக்கு உதவ வேண்டிய அவசியத்தைக் கமலா உணர்ந்தாள். மேலும் உதவ இதுவே தக்க தருணம் என்றும் கருதினாள்.

‘கவலைப்படாதே கல்யாணி, என்னால் உனக்குப் பொருளுதவியோ, உடல் உழைப்பால் உதவியோ செய்ய முடியாது.

ஆனால் ஆன்மீக ரீதியாக உதவ முடியும். ஆனால் அதில் உனக்கு நம்பிக்கை வேண்டும்’ என்றாள்.

‘ஆன்மீகரீதியாகவா? என்ன சொல்கிறாய்’ என்று புரியாமல் கேட்டாள் கல்யாணி.

‘ஆம் என்னிடம் ஒரு மருந்து இருக்கிறது. அது உன் கைவலியைப் போக்கிவிடும்’ என்றாள்.

‘அப்படியா? அதைக் கொடு. கைவலி போய்விட்டால் இந்த வாரம் முடித்துத் தர வேண்டிய ஆர்டரை முடித்துவிடுவேன்’ என்றாள்.

‘நான் மருந்து என்றது மேலே தடவிக் கொள்ளும் களிம்போ, உள்ளுக்குச் சாப்பிடும் மாத்திரையோ அன்று. அதுவொரு சக்தி. உழைப்பாளிகள், அறிவாளிகள், பக்தர்கள் மனம் ஒன்றி அழைத்தால் வந்து உதவும் சக்தி’ என்றாள்.

‘சக்தியா?’

‘ஆம். அதுவொரு சக்தி. அதன் பெயர் சத்திய ஜீவிய சக்தி. அது நேர்மைக்கு, உண்மைக்கு மிகவும் பலிக்கும் சக்தி. ஆர்வத்துடனும், நம்பிக்கையுடனும் அழைத்தால் அது வந்து உதவும்’ என்றாள்.

‘புதுமையாகவுள்ளது. இதுவரை யாரும் சொல்லிக் கேள்விப்படாதது. குழப்பமாயுள்ளது. இருந்தாலும் இப்போது என் வலி பிரச்சனை தீர்ந்து வேலையை முடித்துத் தரவேண்டும். அது சரி கமலா, அந்தச் சக்திக்கு ஏதேனும் வடிவம் உண்டா? ஏனென்றால் அதன் முன் நின்று பிரார்த்திக்க, அழைக்க எளிதாயிருக்கும் என்றுதான் கேட்கிறேன்’ என்றாள்.

‘ஆம் கல்யாணி. அந்தச் சக்திக்கு ஒரு வடிவம் உண்டு. அதாவது நீ கூறியது போல் நினைத்துப் பிரார்த்திக்க எளிதாயிருப்பதற்குத்தான் அந்த வடிவம். இந்தா இதுதான் அந்த வடிவம்’ என்று தன் கைப்பையைத் திறந்து ஒரு திருவுருவப்படத்தை எடுத்து இவளிடம் கொடுத்தாள். அதைப் பெற்றுக் கொண்டதுமே ஒருவித நம்பிக்கையுணர்வு வருவதைக் கண்டாள்.

‘எப்படிக் கேட்டவுடன் கொடுத்தாய்?’ என்று வியந்தாள் கல்யாணி.

‘நான் கடும் காய்ச்சலால் மருத்துவமனையில் இருந்த போது சக்தியிழந்து தவித்தேன். அப்போது ஒரு பெரியவர் இதைச் சக்தி எனக் கூறி எனக்குத் தந்தார். அதைப் பிரார்த்தித்துத்தான் சக்தி பெற்று பிழைத்தெழுந்தேன். அதிலிருந்து இந்தச் சக்தியின் உருவத்தை நான் என்னுடன் வைத்திருக்கிறேன்.’

‘எனக்கு இதைத் தந்துவிட்டாயே, உனக்கு? பரவாயில்லை கல்யாணி. இந்த வடிவம் இனி என் மனத்தைவிட்டு ஒருபோதும் அகலாது. நான் இந்த உருவத்தை என் நெஞ்சில் பதித்துக் கொண்டேன். இது சத்தியத்தின் சக்தி என்றும், உண்மைக்கு இது உதவும் என்றும் இதைக் கொடுத்தவர் கூறினார். அது உண்மை என்பதை என் சொந்த அனுபவத்தில் கண்டேன். உனக்கு இப்போது நேர்மையாய் உழைத்துப் பொருளீட்டும் வாய்ப்பு வந்திருக்கிறது. இப்படிப் பெறும் பொருள் அருளால் வரும் பொருள் என்றும் இதற்கு இந்தச் சத்திய சக்தி உதவும் என்பதும் எனக்குத் தெரியும். அடுத்தவர் வளர்ச்சியைக் கண்டு மகிழ்வதும் இந்தச் சக்திக்கு நாம் செலுத்தும் நன்றிதான் என்று அந்தப் பெரியவர் கூறியிருக்கிறார். இப்போது உனக்குச் சக்தி தேவை. உன் நேர்மைக்கும், உழைப்பிற்கும் இச்சக்தி உனக்கு உதவும். இப்போது நான் செல்கிறேன். பிறகு உன் வளர்ச்சியைக் கண் குளிரக் காணவருவேன்’ என்று அன்புடன் கூறி விடைபெற்றாள் கமலா.

கல்யாணி உற்சாகமானாள். அந்தச் சக்தியின் உருவத்தை கண்ணில் காணுமாறு ஓரிடத்தில் வைத்தாள். பிறகு கண்மூடி தனக்கு உதவ வரவேண்டும் எனப் பிரார்த்தனை செய்தாள். அன்றிரவு உறங்கி எழுந்ததும் வலியே இல்லை என்றுணர்ந்தாள். சக்தியே, என் வலக்கை உன் சக்தியால் நிறைந்து குணமாகிவிட்டது என்று நன்றி கூறிப் பணியைத் தொடர்ந்தாள்.

என்ன வியப்பு! விரைவாக அவளால் பல அணிகள் வகைவகையாய்த் தயாரிக்க முடிந்தது. மறுநாள் பார்வையிட வந்த கடை சூப்பர்வைஸர் என்றும்போல் எந்தக் குறையும் கூறாததுடன் சுவாரஸ்யமாய் பார்வையிட்டார். (நம் திறமை எவ்வளவு உயர்ந்ததாயினும் இறையருளோடு இணையும்போதுதான் சிறப்படைகிறது.) ‘மேடம், இம்முறை மிக வித்தியாசமாய் ரொம்ப நல்லாத் தயாரிச்சிருக்கீங்க. என்னால் குறை காண முடியல. இதற்கேற்ப அதிகப் பணம் கிடைக்க சிபாரிசு செய்வேன்’ என்று கூறி எடுத்துப் போனார்.

கல்யாணிக்கு மிகவும் மகிழ்ச்சி. அந்தச் சக்தியைத் தாங்கி வந்த திருவுருவத்தின் முன் நின்று நன்றி கூறி வணங்கினாள்.

ஆனால் அன்றிரவு இடக்கையில் வலி ஏற்பட்டது. இது என்ன வேதனை? குணமாகி விட்டோம் என்றல்லவா மகிழ்ந்தேன். இரண்டு கையும் வலியில்லாமல் தெம்பாக இருந்தால்தானே அணிகள் தயாரிக்க முடியும். அடுத்த வாரம் முடித்துத் தர வேண்டியவற்றை எப்படி முடிப்பேன் என்று நினைத்தவள் அந்தச் சக்தியை நினைத்து தன் இடக்கையும் வலி நீங்கி குணமாக வேண்டும் என்று பிரார்த்தித்த வண்ணம் தூங்கி விட்டாள்.

காலை எழுந்திருக்கும் போது சுத்தமாக வலியே இல்லை. இரண்டு கைகளுமே நலமாகவே இருந்தன. பெரு மகிழ்வோடு புதிது புதிதாய் அணி வகைகள் செய்து குவித்தாள். ஒரே மகிழ்ச்சி.

ஆனால் திடீரென காலில் வலி ஏற்பட்டது. சில நேரங்களில் குறிப்பிட்ட மாடல் தயாரிக்க சுவரில் பொருத்தப்பட்ட பிளேட்டில் அணிகளை அமைக்க நீண்ட நேரம் நின்ற நிலையில் மணிகளைப் பொருத்த வேண்டியிருக்கும். தயாரித்தவைகளையும் அதற்கென அமைந்த போர்டில் பொருத்த வேண்டும். இந்நிலையில் கடும் கால் வலியால் செய்து முடித்தவற்றை போர்டில் பொருத்த முடியவில்லை. அடுத்தவாரம் சூப்பர்வைஸர் வருமுன் முடிக்க வேண்டும். கவலை எழுந்தது. உடனே மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு, அந்தச் சத்திய சக்தியின் வடிவத்தின் முன்னின்று பிரார்த்தித்தாள். சக்தியே, உன்னை வேண்டிய பிறகு வலக்கை வலி, இடக்கை வலி யாவும் போயிற்று. முன்பு இருந்ததைவிட அதிக உற்சாகத்துடன் நிறைய அணிகள் தயாரிக்க முடிந்தது. பாராட்டும் கிடைத்தது. நிறைய பணமும் கிடைத்து கடன் அடைக்க முடிந்தது. ஆனால் இப்போது கால்வலியால் மேலும் பணிகள் பாதிப்படைந்தால் தொடர்ந்து எப்படித் தொழில் செய்வேன். ஏன் இப்படி ஒன்று மாற்றி ஒன்று வருகிறது. தயவு செய்து இந்தக் கால் வலியைப் போக்கிவிடு. அக்ஷய பாத்திரம் போல் உன்னை வைத்துக் கொண்டு நான் ஏன் கவலைப்படுகிறேன். உன்னிடம் சொன்னவுடன்தான் வலி போய்விடுமே.

எனக்கு எவ்வளவு வேலையிருக்கிறது. இந்த நேரம் இந்த வலி என் வேலையை எப்படிப் பாதிக்கிறது என்பது நீ அறியாததா? தயவு செய்து காப்பாற்று என்று மனம் விட்டு நெருங்கியவரிடம் பேசும் தோரணையில் வாய்விட்டுப் பிரார்த்தித்தாள். வலி மறைந்தது. ஒரே மகிழ்ச்சி. உற்சாகத்துடன் மீதமுள்ள வேலைகளைச் செய்து முடித்துவிட்டு அடுத்துவரும் ஆர்டர் களை ஏற்றுக் கொள்ளத் தயாராகிவிட்டாள்.

அன்றிரவு தூங்கப் போகும் போது நடந்தவற்றையெல்லாம் நினைவுபடுத்திப் பார்த்தாள்.

தொழில் ஆரம்பித்துச் சிறப்படையும் போது வலி பிரச்சனை எழுந்தது. மனம் மிகவும் இடிந்து போனாள். தக்க சமயத்தில் தோழி வந்தாள். ஒரு அருமருந்தினைத் தந்தாள். மருந்து தேய்த்தும், மாத்திரை தின்றும் தீராத வலி பிரார்த்தனைக்குக் கட்டுப்பட்டது. ஆனால் வலக்கை வலிபோய் இடக்கைவலி வந்தது. அது போய் கால்வலி வந்தது என்று நினைக்கும் போது ஏனிப்படி மாற்றி மாற்றி வந்தது என்று நினைத்தாள். தான் செய்த பிரார்த்தனையை நினைவு கூர்ந்தாள். வலக்கை வலி போக வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் போது, அது போனால் தன்னால் எல்லாம் முடியும் என்ற எண்ணம் இருந்தது. இடக்கை வலி வந்ததும் இடக்கை வலி போக வேண்டும் என்று வேண்டினாள். இரண்டு கைகளும் நன்றாக இருந்தால் தன்னால் எல்லாம் முடியும் என்ற எண்ணம் இருந்தது. பிறகு கால்வலி வந்த போது அது போனால்தான் வேலை செய்ய முடியும் என்ற நிலை வந்தது. பிரார்த்தனையில் அதுவும் நீங்கியது என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது அடுத்தது என்ன வருமோ என்ற பயம் வந்தது. உடனே அவள் பிரார்த்தித்த அந்தச் சக்தி அவளிடம் ஏதோ சொல்வது போல் தோன்றியது. “ஏதோ ஒன்று கேட்டாய். அதைக் கொடுத்தால் போதும். பிறகு உன் தயவு தேவையில்லை. எல்லாம் நான் பார்த்துக் கொள்வேன் என்பது போல் பிரார்த்தித்தாய். எனவே, நீ கேட்கக் கேட்கக் கொடுக்கலாம் என்றிருந்தேன். நீயே எல்லாவற்றிற்கும் பொறுப்பு என்று முழுவதுமாய் என்னிடம் ஒப்படைத்திருந்தால் ஒவ்வொன்றாய் வரவிட்டிருக்கமாட்டேனல்லவா?” என்று அந்தச் சக்தி தன்னிடம் கூறுவது போல் தோன்றியது. ஐயய்யோ! அடுத்தது என்ன வருமோ தெரியவில்லை. நான் மீண்டும் அந்தத் தவற்றினைச் செய்ய மாட்டேன். சக்தியே யாவும் உன் பொறுப்பு என்று வாய் விட்டுக் கூறி பெரிதாய்ச் சிரித்து விட்டாள். அங்கு வந்த அவள் கணவன், ‘இந்த இரவில் இப்படி சிரித்துக் கொண்டிருக்கிறாயே. உனக்கு என்ன ஆயிற்று? ஏதாவது மூளைக் குழப்பமா?’ என்று கேலியாகக் கேட்டான். இவள் நடந்தவற்றை ஒவ்வொன்றாய்க் கூறினாள். ‘சரிதான் நீ ஒவ்வொன்றாய்க் கேட்டு, இறுதியில் உன்னை முழுமையாய் அந்தச் சக்தியின் பொறுப்பில் கொடுத்துவிட்டாய். என்னையும் குழந்தைகளையும் அந்த வலி பிடித்துக் கொண்டால் என்ன செய்வது. நான் இப்போதே முழுமையாய் நம் குடும்பத்தை ஒப்படைத்து விடுகிறேன். இல்லையென்றால் உன்னை விட்டு நீங்கிய வலி எங்களைப் பிடித்துக் கொள்ளும்’ என்று உண்மையாகவும், நகைச்சுவையாகவும் கூற இருவரும் சிரித்தனர். குழந்தைகள் விழித்துக் கொண்டனர். ‘எதற்கு இப்படிச் சிரிக்கிறீர்கள் என்று கேட்டனர். உன் அம்மா கைவலி, கால்வலி என்று ஒவ்வொன்றாய்ப் பிரார்த்தித்தாள். நான் புத்திசாலித்தனமாக நம் குடும்பம் முழுவதையும் காப்பாற்ற வேண்டும் என சுவாமியை வேண்டினேன்’ என்றான் கணவன். உன் அம்மாவின் அறியாமையை நினைத்துச் சிரித்தோம் என்றான் கணவன்.

‘ஐயய்யே, நீயும் அசடுதான் அப்பா. நாம் மட்டும் நன்றாக இருந்தால் போதுமா? பால்காரர், பேப்பர்காரர், வேலைக்காரர் கடைக்காரர் எல்லாரும் நன்றாக இருந்தால்தானே எல்லாம் கிடைக்கும். நாங்கள் எல்லோருக்காகவும் வேண்டிக் கொள்ளப் போகிறோம்’ என்று குழந்தைகள் கூற, யாவரும் வாய்விட்டுச் சிரித்தனர்.

நாமும் பொறுப்பை அன்னையிடம் விட்டுவிடுவோம்.

*********



book | by Dr. Radut