Skip to Content

09. அன்பர் அனுபவம்

அன்பர் அனுபவம்

S. செல்வரசி, திண்டுக்கல்

என் பெயர் செல்வரசி. நான் திண்டுக்கல் தியான மையத்தின் பொறுப்பாளர் வீட்டில் வேலை செய்து வருகிறேன். எனக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். நான் எனது கணவருக்கும், மாமனாருக்கும் தெரியாமல் ரூ.100-க்கு ரூ.10 என்ற முறையில் கடன் ரூபாய் இரண்டு லட்சத்திற்கு வாங்கியிருந்தேன். இதனைத் திருப்பித் தர முடியாமல், என் குழந்தைகளையும், குடும்பத்தையும் விட்டுப் பிரிந்து மிகவும் கஷ்டப்பட்டு, அநாதை விடுதியில் சில காலம் தங்கியிருந்தேன். இவ்வாறு ஒரு ஐந்தரை ஆண்டுகள் ஓடின. அப்பொழுது என் குழந்தைகளையும், குடும்பத்தையும் நினைத்துக் கண்ணீர் விட்டுக் கதறிக் கொண்டிருப்பேன். அவர்களை மூன்றாம் மனுஷி மாதிரி தூரத்தில் மறைந்து நின்று பார்ப்பேன். எந்த ஒரு தாய்க்கும் என் மாதிரியான நிலை வரவேக் கூடாது. நான் வேண்டாத தெய்வமே இல்லை. திண்டுக்கல் தியான மையப் பொறுப்பாளர் ஜீவா அம்மா வீட்டில் வேலைக்குச் சேர்ந்தேன். ஜீவா அம்மாவிடம் ஒருநாள் என் பிரச்சனையைக் கூறினேன். அவர்கள், அன்னையைப் பிரார்த்தனை செய்யும்படியும், அன்னையைத் தவிர வேறு யாரிடமும் கூறாமல், நினைவு வரும் பொழுதெல்லாம் அன்னையிடம் மட்டும் கூறு என்றும் கூறினார்கள். அவர்களால்தான் இதைத் தீர்க்க முடியும் என்றும் கூறினார்கள். அப்பொழுது நான் அவர்கள் வீட்டில் வேலைக்குச் சேர்ந்து நான்கு மாதங்களே ஆகியிருந்தன. அன்னை மீது முதலில் எனக்கு நம்பிக்கை எழவில்லை. பிறகு அங்கே உள்ள சூழ்நிலை அனைத்தையும் பார்த்து சற்று நம்பிக்கையுடன் நாள்தோறும் அன்னைமுன் என் பிரச்சனையான கடனைப்பற்றி மனம் உருகிக் கூறி அழுவேன். என்ன ஒரு அதிசயம்! அன்னை என் கடனைக் கட்ட வழி காட்டினார்கள். அன்னை என் மாமனார் மனதை மாற்றி அவர் மூலமாக என் கடன்கள் எல்லாம் கட்ட வழி காட்டினார்கள்.

முதலில் என் மாமனார் கடனைத் தான் அடைக்க மாட்டேன் என்று கூறினார். யாரைக் கேட்டு இவ்வளவு கடன் வாங்கினாய்? இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிவிட்டார். ஆனால் அவரே முன்வந்து என் கடன்களை எல்லாம் கட்டியது அன்னையால்தான் என்று நினைக்கும் பொழுது என்னால் அழாமல் இருக்க முடியவில்லை. யாராலும் செய்ய முடியாத இந்த அதிசயத்தை அன்னைதான் நிகழ்த்தினார் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமுமில்லை. மேலும் ஐந்தரை ஆண்டுகளாக நான் பட்ட பிரச்சனை, அன்னையைப் பிரார்த்திக்க ஆரம்பித்ததும் இப்படியொரு அதிசயமான வழியில், இவ்வளவு விரைவில் தீரும் என்று நான் நினைக்கவே இல்லை. நம்பிக்கையோடு அன்னையிடம் கேட்டேன். அன்னையும் நான் கேட்டதைக் கொடுத்து, என்னை என் குடும்பத்துடன் சேர்ந்து வாழ வழியும் செய்தார்கள். அன்னையிடம் நமக்கு வேறெதுவும் தேவையில்லை, நம்பிக்கை மட்டுமே போதும் என்பது எனக்கு நன்கு விளங்கியது. அன்னைக்கும், திருமதி. ஜீவா இன்பராஜன் அவர்களுக்கும் என் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றிகள் ஆயிரம்!

*******

 

ஜீவிய மணி

அன்னை சத்திய ஜீவியத்தைக் கொடுத்தால் சற்றே உயர்ந்த மனித ஜீவியமாக நாம் பெறுகிறோம். அமரத்துவத்தைக் கொடுத்தால் நீண்ட ஆயுளாகப் பெறுகிறோம். கர்மமில்லாத வாழ்வானது நமக்கு என்றால், முக்கிய காரியங்களில் கர்மத்தை விலக்கிக் கொள்கிறோம். தோல்வியே இல்லாத வெற்றியை வழங்கினால், செய்யும் காரியத்தில் அதை ஒரு முறை வெற்றியாகப் பெறுகிறோம். சோகமே இல்லாத வாழ்வைச் சோகம் குறைந்த வாழ்வாக நாம் அடைகிறோம்.

 

********



book | by Dr. Radut