Skip to Content

07. அமெரிக்க வாழ்வின் நிறைவுகளும் குறைபாடுகளும்

அமெரிக்க வாழ்வின் நிறைவுகளும் குறைபாடுகளும்

மூலம்: ஸ்ரீ கர்மயோகி

விரிவாக்கம் மற்றும் சொற்பொழிவு: திரு. அசோகன்

சொற்பொழிவாற்றிய தேதி: 15. 08. 2014

இன்று உலகளவில் அமெரிக்க மோகம் பரவியுள்ளது. அதுவும் குறிப்பாக இந்தியாவில் அதிகமாகவே உள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு முன்னால் இந்தியர்கள் ஆங்கிலேயர்களை முன்மாதிரியாக வைத்துக் கொண்டு வாழ்ந்தார்கள். அதாவது மேடைப்பேச்சு என்று வந்தால், ஆங்கிலத்தில்தான் பேசுவார்கள். பேண்ட்டோடு கோட் போட்டுக்கொண்டு இருப்பதைக் கௌரவமாகக் கருதினார்கள். காலை வணக்கம் சொல்வதைக்கூட good morning என்றுதான் சொல்வார்கள். பெரியவர்களை Sir என்றும், பெண்களை Madam என்றும் அழைத்துக் கொண்டிருந்தார்கள். இரண்டாம் உலகப்போருக்குப்பின் சில ஆங்கிலப் பழக்கவழக்கங்கள் குறைந்து, அமெரிக்கப் பழக்கவழக்கங்களுக்கு மாறிவிட்டார்கள். Hello-விற்குப் பதிலாக, Hi வந்து விட்டது. கோட், சூட் போய் ஜீன்ஸ் மற்றும் T Shirt வந்து விட்டது. அமெரிக்கப் பாணியில் I.T. கம்பெனிகளில் இன்று Bossயே பெயர் சொல்லி அழைக்கின்றனர். இப்படிப் பேச்சில், பழக்கவழக்கங்களில் அமெரிக்கப் பாணி வெளிப்படுவதோடு மட்டுமல்லாமல், வாழ்க்கையில் மற்ற பல இடங்களில் அமெரிக்கத் தாக்கம் நன்றாகவே தெரிகிறது. கல்யாண மார்க்கெட்டில் அமெரிக்க I.T. கம்பெனிகளில் வேலை செய்யும் வரன்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. அவர்களுக்குமுன், மற்ற வரன்கள் எடுபடாமல் போகிறது. 1990-க்கு முன்னால், ஊரில் ஏதோ ஒன்றிரண்டு குடும்பங்களில் இருந்துதான் பிள்ளைகள் அமெரிக்காவிற்குப் போயிருப்பார்கள். ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ஏகப்பட்ட நடுத்தர குடும்பத்துப் பிள்ளைகள் அமெரிக்காவில் படிக்கிறார்கள், அமெரிக்காவில் வேலை செய்கிறார்கள். அல்லது அமெரிக்காவிலேயே settle-ஆகி விட்டார்கள் என்ற பேச்சு அடிபடுகிறது. விசா கட்டுப்பாடு என்ற ஒன்று மட்டும் இல்லை என்றால், அதாவது யார் வேண்டுமானாலும் அமெரிக்காவில் settle-ஆகி விடலாம் என்று இருந்தால், இன்று குக்கிராமங்களில் இருப்பவர்கள்கூட வீடு, நிலத்தை எல்லாம் விற்று, flight ticket வாங்கிக் கொண்டு அமெரிக்கா சென்று settle-ஆகி விடுவார்கள் போலிருக்கிறது.

இந்த அளவிற்கு அமெரிக்க மோகம் பரவி இருப்பதற்குக் காரணம் என்ன என்பதை நாம் ஆராய வேண்டும். மேற்பார்வையாகப் பார்த்தால், அமெரிக்கா பணக்கார நாடு. அதனால் அங்கு சென்று குடியேற எல்லோரும் பிரியப்படுகிறார்கள் என்று புரிந்து கொள்ளலாம். நாம் அதோடு நிறுத்திக் கொள்ள முடியாது. இந்த சுபீட்சத்திற்குப் பின்னாலுள்ள காரணங்களை நாம் ஆராய்ந்து அறிய வேண்டும். அது தெரிய வரும்போது, நம் நாட்டு மக்கள் ஏன் அதுபோலில்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். தூரத்திலிருந்து பார்க்கும்போது அமெரிக்கா குறையே இல்லாத நாடாக நமக்குத் தெரிகிறது. அப்படியே அங்கு நடக்கும் கெட்ட விஷயங்களைப்பற்றி நாம் செய்தித்தாளில் படித்தாலும், நாம் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. பெரிய மனிதனின் குறைகள் நம் கண்ணில் படாததுபோல, பணக்கார நாடுகளின் குறைகளெல்லாம் நம் மனதில் படுவதில்லை என்றும் சொல்லலாம். இப்படி மோகத்தால் பீடிக்கப்படாமல், நடுநிலைமையில் இருந்து கொண்டு ஆராய்ச்சி செய்பவருக்கு அமெரிக்காவின் நிறைகளும், குறைகளும் கண்ணில்படும். அப்படி நம் கண்களில்படுகின்ற ஒரு சில விஷயங்களை நாம் இப்போது பட்டியலிட்டுப் பார்க்கலாம்.

1. அமெரிக்கா பணக்கார, சுதந்திரமான நாடு:

முதலில் நம் கண்ணில்படுவது இந்நாடு பணக்கார நாடு என்பதாகும். பொதுவாக எந்த நாட்டிலும் பணக்காரர்கள் குறைவாகவும், ஏழைகள் அதிகமாகவும்தான் இருப்பார்கள். ஆனால் இவ்விஷயத்தில் இந்த நாடு வித்தியாசமாக உள்ளது. அதாவது இந்நாட்டிலொரு 10% பெரும் பணக்காரர்களாகவும், மற்றும் 10% வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களாகவும் மீதமுள்ள 80% இந்த இரண்டு வகுப்பிலும் சேராத நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். இப்படி ஓர் பெரிய நடுத்தர வர்க்கத்தை உருவாக்கியதுதான் இது ஒரு பணக்கார நாடாகக் காட்சி அளிப்பதற்கே காரணமாக அமைந்துள்ளது. 10% பெரும் பணக்காரர்கள் என்று நான் குறிப்பிட்டிருக்கிறேன். அவர்களுடைய வாழ்க்கை, வசதிகள் என்பது நாம் கற்பனையே செய்ய முடியாத அளவிற்கு அமைந்துள்ளது. ஒரு கோடி டாலர்கள் சொத்து மதிப்புள்ளவர்கள் இந்தப் பணக்காரப் பட்டியலில் அடங்குவார்கள். ஒரு கோடி டாலர் என்றால் இந்திய ரூபாயில் 60 கோடி ரூபாய் என்று கணக்கு வருகிறது. தொழிலதிபர்கள், கம்பெனி CEO-க்கள், மற்றும் பிரபலமான Lawyers, Doctors, Auditors, திரைப்படக் கலைஞர்கள் போன்றவர்கள் இதில் வருவார்கள். இவர்களுடைய வீடுகள் பிரம்மாண்டமான அளவில் இருக்கும். நம் நாட்டில் வீட்டில் அனைவரும் இருசக்கர வாகனம் வைத்துள்ளதுபோல் அவர்கள் அனைவரும் வீட்டில் எத்தனை பேர்கள் உள்ளனரோ அத்தனை கார்கள் வைத்திருப்பார்கள். குட்டி விமானங்களை வைத்துக் கொண்டு இங்குமங்கும் போவதெல்லாம் இவர்களுக்கு சகஜம். இவர்களுடைய பிள்ளைகளை எடுத்துக் கொண்டால், நம்முடைய பெற்றோர்கள்தான் பெரும் பணக்காரர்கள் ஆயிற்றே நாம் ஏன் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்று இவர்கள் வாழ்க்கையைச் சுலபமாக எடுத்துக் கொள்வதில்லை. பெரும் பணக்காரர்கள் வீட்டுப் பிள்ளைகள்கூட 14, 15 வயது ஆகிவிட்டது என்றால் பாக்கெட் செலவிற்காக நியூஸ் பேப்பர் போடுவது, ஹோட்டலில் சர்வர் வேலை செய்வது, பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவது போன்ற வேலைகளைச் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். நம் நாட்டில் ஒரு பணக்கார வீட்டுப்பிள்ளை இம்மாதிரியான வேலைகளையெல்லாம் செய்தால், பெற்றோர்கள் அதை மிகவும் கௌரவக் குறைவாக நினைப்பார்கள். ஆனால் அங்கேயோ இத்தகைய வேலைகளை பெற்றோர்களே வரவேற்கிறார்கள். நம் நாட்டில் பெரும் பணக்காரர் இருந்தால், அவர் சொத்து முழுவதையும் தனக்கு எழுதி வைப்பார் என்று பிள்ளைகள் எதிர்பார்ப்பார்கள். இந்த எதிர்பார்ப்பு இளைய தலைமுறைக்கு இருக்கும். அப்படி எழுதி வைக்காவிட்டால் பெரிய தகராறு, சண்டைகள் எல்லாம் வரும். ஆனால் அங்கு இப்படியெல்லாம் இல்லை. பெற்றோர்கள் அவர்கள் சொந்த முயற்சியில் சம்பாதித்த சொத்து என்று தெரிந்தால், அவர்கள் என்ன கொடுக்கிறார்களோ அதை வாங்கிக் கொள்ளும் பக்குவத்தைப் பிள்ளைகள் வளர்த்துக் கொள்கிறார்கள். உதாரணமாக பில்கேட்ஸ் அவர்களை எடுத்துக் கொண்டால் அவருக்கு ஐம்பது பில்லியன் டாலர் சொத்து இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்திய ரூபாயில் அவருடைய சொத்து மதிப்பு மூன்று லட்சம் கோடி. அவரைப் பத்திரிகை நிருபர்கள் பேட்டி கண்டபோது அவர் தன்னுடைய மூன்று பிள்ளைகளுக்கும் ஆளுக்கு 200 மில்லியன் டாலர்தான் தருவதாக இருக்கிறேன். அதற்குமேல் கொடுத்தால் அவர்கள் கெட்டுவிடுவார்கள் என்று சொன்னாராம். ஐம்பது பில்லியன் என்றால் ஐம்பதாயிரம் மில்லியனாகிறது. இந்த ஐம்பதாயிரம் மில்லியனில் அவர் பிள்ளைகளுக்குக் கொடுக்க விரும்புவது வெறும் அறுநூறு மில்லியன்தான். அதாவது 1¼%-க்கும் குறைவாகத்தான் வருகிறது. ஆனால் அவருடைய பிள்ளைகள் இதை ஏற்றுக் கொள்கிறார்கள். நம் நாட்டு கோடீஸ்வர பிள்ளைகள் இதை ஏற்பார்களா என்பது சந்தேகம்.

அமெரிக்காவில் வறுமைக் கோட்டிற்குக்கீழ் 10% பேர்கள் இருக்கிறார்கள். இவர்களையும் நம் நாட்டில் வறுமைக் கோட்டிற்குக்கீழ் இருப்பவர்களையும் சமமாக நாம் கருத முடியாது. அங்கே வறுமைக் கோட்டிற்குக்கீழ் இருப்பவர்கள்கூட கார், டி.வி., பிரிட்ஜ் என்ற எல்லா வசதிகளுடன் இருப்பார்கள். இங்கே அரசாங்கம் இப்படிப்பட்டவர்களுக்கு எல்லாவற்றையும் இலவசமாகக் கொடுப்பதுபோல் அங்கேயும் அரசிடமிருந்து welfare assistance என்று மாதாமாதம் கிடைக்கும். இந்திய ஏழைக்கும், அமெரிக்க ஏழைக்கும் வித்தியாசம் என்னவென்றால், நம் நாட்டு ஏழைகள் அரசாங்க உதவியே போதும் என்று திருப்தி அடைந்துவிடுகிறார்கள். அதற்குமேல் தான் வாழ்க்கையில் உயரவேண்டும் என்று சொந்த முயற்சி எதுவும் எடுப்பதில்லை. ஆனால் அமெரிக்க நாட்டு ஏழைகள் அப்படி அரசாங்க தயவிலிருப்பதை மிகவும் அகௌரவமாகக் கருதுகிறார்கள். அப்படிக் கருதுவது அதிர்ஷ்டத்திற்கு ஒரு வகையில் ஆதரவாக அமைகிறது. அடுத்ததாக அமெரிக்க முன்னேற்றத்திற்கு அங்கு நிலவும் சுதந்திரமான சூழ்நிலை ஒரு முக்கிய காரணமாகும். மேல்ஜாதி, கீழ்ஜாதி என்ற வித்தியாசங்கள் அங்கு இல்லை. ஏனென்றால் ஜாதி அமைப்பே அங்கு இல்லை. 1960-வரை கறுப்பின மக்கள் குறைவாக நடத்தப்பட்டார்கள். ஆனால் அதன்பின் அந்தப் பாகுபாடும் போய்விட்டது. இப்போது வெள்ளையர்களுக்குச் சமமாக நீக்ரோ மக்களும் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். பெண்களுக்கு இந்திய சமுதாயம் பலவிதமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. உதாரணமாக கணவனுக்கு அடங்கியிருக்க வேண்டும், அடுத்ததாக மாமியாருக்கு அடங்கியிருக்க வேண்டும், பெரியதாகச் சாதிக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படக் கூடாது. இத்தகைய கட்டுப்பாடுகளெல்லாம் பெண்களுக்கு அங்கே இல்லை. கூட்டுக் குடும்ப வாழ்க்கையே மிகவும் அரிதான ஒரு விஷயமாக இருப்பதால், அங்கு மாமியாருடன் மருமகள் சேர்ந்து ஒரே வீட்டில் இருக்க வேண்டிய அவசியமே ஏற்படுவதில்லை.

அடுத்ததாக அமெரிக்கக் கல்விமுறை சுதந்திரத்தை வளர்க்கும் வகையில் அமைந்துள்ளது. நம் நாட்டில் மாணவன் ஆசிரியரைக் கேள்விக் கேட்டாலே அவர் கோபப்படுவார். அதுவும் அவர் சொல்வதற்கு மாற்றுக் கருத்தை மாணவன் வெளியிட்டால் ஆசிரியருக்கு இன்னும் கோபம் அதிகமாகும். ஆனால் அங்கே ஆசிரியரே மாணவனை ஏதேனும் கேள்விகள் உண்டா என்று கேட்கத் தூண்டுவார். மாற்றுக் கருத்து யாரேனும் வைத்திருந்தால் அதை வெளியிடலாம் என்று வெளிப்படையாகவேக் கேட்பார். இப்படிப்பட்ட சுதந்திரமான சூழ்நிலையில் படிக்கும் மாணவர்கள் creative-வாக சிந்தனை செய்யக் கற்றுக் கொள்கிறார்கள். அது அவர்களுடைய முன்னேற்றத்திற்கு ஒரு முக்கியக் காரணமாக அமைகிறது. பெரிய American Corporation-களில் கீழ்மட்டத்தில் வேலையில் சேர்பவர்கள்கூட மேல்மட்டத்திற்குயர கம்பெனி பாலிசியே ஆதரவு தருகிறது. இந்தியாவில் ஒரு கம்பெனியில் கீழ்மட்டத்தில் ஒருவர் வேலையில் சேர்ந்து மேலே முன்னுக்குவர முயன்றால், போட்டி, பொறாமை என்று எத்தனையோ தடைகள் எழும்பி வரும். அதையெல்லாம் முறியடித்து அவர் மேலே வருவதற்குள் அவர் ரிடையராகும் வயதே வந்துவிடும். அமெரிக்காவில் நிறைய பேர்கள் சுலபமாகப் பணம் சம்பாதிப்பதற்குக் காரணமே அங்கு நிலவும் சுதந்திரமான சூழ்நிலைதான். இங்கே புதியதாக ஒரு கம்பெனி ஆரம்பிக்க வேண்டும் என்றால், ஏகப்பட்ட அரசாங்க விதிமுறைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். அதையெல்லாம் பூர்த்தி செய்து கம்பெனி ஆரம்பிப்பதற்குமுன் தொழிலதிபர் துவண்டேபோய்விடுகிறார். அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் சிலிக்கான் valley என்றொரு கம்ப்யூட்டர் சிட்டியுள்ளது. புதிய கம்பெனியை ஆரம்பிப்பவர்களெல்லாம் அங்கேதான் ஆரம்பிக்கிறார்கள். நம் நாட்டில் நிலவும் கெடுபிடிகளெல்லாம் அங்கேயும் இருந்தால் இவ்வளவு அசுர வேகத்தில் அங்கு சிலிக்கான் valley வளர்ந்திருக்க முடியாது. சிலிக்கான் valley செயல்பட்டுக் கொண்டிருப்பதால்தான் ஆப்பிள் கம்பெனி உலகிலேயே முதன்மையான கம்பெனியாக தலையெடுத்துள்ளது. இவ்வாறு படிப்பில் சுதந்திரம், வேலையில் சுதந்திரம் என்று இரண்டு சுதந்திரமும் சேர்ந்து அமெரிக்காவை மிகவும் முன்னேறிய நாடாக மாற்றிவிட்டது.

2. அமெரிக்கர்கள் புது idea-க்களுக்கு மிகவும் receptive -ஆக இருப்பார்கள்:

அமெரிக்க மக்கள் புது idea-க்களை மறுக்கவோ, உதாசீனப்படுத்தவோ மாட்டார்கள். நம் நாட்டில் புது ஐடியாக்களுக்கு வரவேற்பே இருப்பதில்லை. யாரேனும் புதிய கருத்து ஒன்றைத் தெரிவித்தால், அவர்கள்மேல் நமக்கு எரிச்சல் தான் வருகிறது. உதாரணமாக 1970-ஆம் ஆண்டில் பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் தனியார் வங்கிகளைத் தேசியமயமாக்கலாம் என்று கருத்துத் தெரிவித்தபொழுது, நாடு முழுவதும் அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதெல்லாம் நடக்கிற காரியமில்லை. தேசியமயமாக்கினால் அவ்வங்கிகள் எல்லாம் படுத்துவிடும், deposits குறைந்துவிடும் என்று அவநம்பிக்கையை எழுப்பினார்கள். ஆனால் இந்திராகாந்தி அவர்கள் எல்லா எதிர்ப்புகளையும்மீறி எல்லா வங்கிகளையும் அரசுடமையாக்கினார். அப்படி அவர் செய்தது நாளடைவில் நாட்டிற்கு நல்லது என்று நிரூபணமாகியது, deposits குறைந்துவிடும் என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக deposits பல மடங்கு பெருகி லட்சகணக்கான கோடிகளில் குவிந்திருக்கிறது.

மக்களுடைய எதிர்ப்பிற்கு பயந்து இந்திரா அவர்கள் பின்வாங்கியிருந்தால், நாட்டின் முன்னேற்றம் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கும். நம் நாட்டில் பெரிய பட்டம் வாங்கியவர்கள் தம்மைவிடக் குறைந்த பட்டம் வாங்கியவர்களிடம் கற்றுக்கொள்ள விஷயம் இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் மதர்ஸ் சர்வீஸ் சொசைட்டியைச் சேர்ந்த ஓர் அன்பரிடம் American Management Association உடைய Vice President-ஆக செயல்பட்டவர் Society Management-இல் மேனேஜ்மெண்ட் துறையில் ஆன்மீக அணுகுமுறைகள் என்றொரு புதிய விஷயம் இருக்கிறது என்று கேள்விப்பட்டு, அதைப்பற்றி தெரிந்துகொள்ள இந்தியாவிற்கே கிளம்பி வந்துவிட்டார். இத்தனைக்கும் சொசைட்டியில் இருந்த அன்பர் Management நிபுணருடைய படிப்பைவிட குறைந்த படிப்புத்தான் படித்தவர். அது தெரிந்தும்கூட இந்த அமெரிக்க நிபுணர் அதைப் பெரிதுபடுத்தாமல், இவருடைய கல்வித்தகுதி எனக்கொரு பொருட்டில்லை. இவரிடம் விஷயம் இருக்கிறது என்று எனக்குப் புரிகிறது. அதை நாடியே நான் இங்கு வந்துள்ளேன் என்று பெருந்தன்மையாக பதிலளித்தார். 1970-ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே இந்திய ஆன்மீகத்தில் தாங்கள் தேடிக் கொண்டிருக்கிற உண்மைகளும் விடைகளும் இருக்கின்றன என்று புரிந்துகொண்ட ஏராளமான அமெரிக்க இளைஞர்கள் இந்திய குருமார்களின் ஆசிரமங்களை நோக்கி வருகிறார்கள். இது நிச்சயம் அவர்களின் பரந்த மனப்பான்மையைக் காட்டுகிறது. ஆப்பிள் computer நிறுவனத்தின் ஸ்தாபகர் Steve Jobs இப்படி ஆன்மீகத்தைத் தேடி இந்தியாவிற்கு வந்தவர்தாம். புத்த மதத்தின் அணுகுமுறைகளால் ஈர்க்கப்பட்டு, பௌத்த முறைகளைப் பின்பற்றி, எப்படி intuition உள் எழுச்சி (inspiration) அடைவது என்று கண்டறிந்தார். இந்த intuition காரணமாகத்தான் வாடிக்கையாளர்களின் மனதைக்கவரும் வகையில் புதுப்புது IPad டிசைன்கள் உருவாக்குவது எப்படி என்பதைக் கண்டுபிடித்தார். இந்திய கம்பெனிகளில் மேல்நிலையில் இருப்பவர்கள் எவருமே தனக்குக் கீழ்நிலையில் இருப்பவர்கள் கம்பெனி வளர்ச்சிக்கு ஒரு நல்ல யோசனை கூறினாலும், உன்னிடம் கேட்டுக் கொள்வது எனக்கு கௌரவமாக இல்லை என்று சொல்லி தட்டிக் கழித்து விடுவார்கள். இதனாலேயே கீழ்நிலையில் உள்ளவர் எவரும் மேலே உள்ளவர்களுக்கு எந்தப் புதிய யோசனையையும் வழங்குவதில்லை. ஸ்ரீ கர்மயோகி அவர்கள் ஆரம்ப காலத்தில் ஆசிரியர் பணியிலிருந்தார். அப்போது அவர் தன்னுடைய தலைமை ஆசிரியரை அணுகி நீங்கள் நிறைய நெல் வயல் வைத்திருக்கிறீர்கள். வயலைச் சுற்றி நான்கு பக்கங்களிலும் தென்னங்கன்றுகளை நட்டு வைத்தீர்களென்றால், அவை வளர்ந்து, நன்றாகக் காய்த்து, அதன் மூலம் உங்களுக்கு உபரி வருமானம் கிடைக்கும் என்று சொன்னார். தலைமை ஆசிரியரோ ‘இது நல்ல யோசனையாக இருந்தாலும், என்னிடம் வேலை பார்க்கும் ஆசிரியர் நீங்கள், அதனால் இந்தக் கருத்தை ஏற்று செயல்படுவதற்கில்லை’ என்று பதிலளித்தார். ஸ்ரீ கர்மயோகி அவர்கள் அதிர்ச்சியடைந்து, அதிர்ஷ்டத்திற்கு ஒருவர் வழிகாட்டினாலும், இப்படி கௌரவப் பிரச்சனையால் இந்த வருமானம் வேண்டாம் என்கிறாரே, இது என்ன விந்தையாகயிருக்கிறது என்று வியந்தார்.

நமக்குத் தெரிந்ததைத் தவிர வேறு உண்மை இருக்கலாம் என்பதைப் புரிந்துக் கொள்வதே நமக்குக் கடினம். ஆனால் அமெரிக்கர்கள் இப்படிப்பட்ட நம்பிக்கையை வளர்த்துக் கொண்டுள்ளனர். அவர்களிடம் ஒரு தீராத பிரச்சனையைக் கொண்டு வந்தால், இதற்குத் தீர்வே இல்லை என்ற இந்தியர்களின் முடிவை அவர்கள் ஏற்க மாட்டார்கள். இப்போதைக்கு நம் கண்களுக்குத் தீர்வு இல்லை என்று தெரிகிறது. ஆனால், தொடர்ந்து முயற்சி செய்தோமென்றால், இதுவரை நம் கண்களுக்குப் புலப்படாத தீர்வு ஒன்று நம்மறிவிற்குப் புலப்படும். ஆகவே அதுவரையில் நம் முயற்சியைத் தளரவிடக் கூடாது என்பார்கள். நம் நாட்டவர்களுக்கு கர்மத்தின்மேல் நம்பிக்கை இருப்பதால், ஒரு பிரச்சனையை நம்மால் தீர்க்க முடியவில்லை என்றால், அதெல்லாம் கர்மபலன் நாம் ஒன்றும் செய்வதற்கில்லை என்று கையை விரித்து விடுகிறோம். செவிடாகப் பிறக்கும் குழந்தைகள் சரியாகப் படிப்பதில்லை என்றால், அதைக் கர்மபலன் என்று இந்தியப் பெற்றோர்கள் கைவிட்டுவிடுகிறார்கள். ஆனால், சென்ற நூற்றாண்டில் அமெரிக்காவில் செவிடான பிள்ளைகளுக்கு உதவும் வகையில், அவர்கள் புரிந்துகொள்ளக் கூடிய சைகை பாஷை ஒன்றை உருவாக்கி அதன்மூலம் அப்படிப்பட்ட குழந்தைகளுக்கும் கல்வியறிவை வழங்க ஏற்பாடு செய்தார்கள். இப்படி எந்தவிதமான பிரச்சனைக்கும் தீர்வுண்டு என்ற நம்பிக்கை, infinity-யை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்று காட்டுகிறது. ஒரு விஷயம் Finite-ஆக இருக்கும்போது அதற்கொரு எல்லையுண்டு. முடிவுண்டு. அதற்குமேல் நாம் ஒன்றும் செய்ய முடியாதென்று ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் ஒரு விஷயம் infinite-ஆக இருக்கும்போது, அதற்கு வரம்போ, முடிவோ இல்லை என்றாகிறது. அப்பட்சத்தில் நாம் இதுவரை பார்த்திராத அம்சங்கள் திடீரென வெளிப்பட்டு, அது ஒரு நல்ல தீர்வாகவும் அமையும். உதாரணமாக சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் பெரியம்மைக்குத் தீர்வே கிடையாது. அது வந்தால், அனுபவிக்க வேண்டியதுதான். மாரியம்மன் கோபத்திலிருந்து மனிதன் தப்பிக்க முடியாது என்றெல்லாம் பேசினார்கள். மேற்கத்திய நாட்டவர்கள் இதை ஏற்றுக்கொள்ளவே இல்லை. மற்ற வியாதிகளைபோல் இதுவும் ஒரு வியாதிதான். முயற்சி செய்தால் குணப்படுத்தலாம் என்று முடிவு செய்தார்கள். அவர்கள் முயற்சிக்கு நல்ல பலனும் கிடைத்து, தடுப்பூசியையும் கண்டுபிடித்தார்கள். இதன் விளைவாக இன்று உலகம் முழுவதுமே பெரியம்மை ஒழிக்கப்பட்டுவிட்டது.

வாழ்க்கை அறிவிற்குக் கட்டுப்பட்டுள்ளது. அறிவு என்ன முடிவு செய்கிறதோ அதைத்தான் வாழ்க்கை சாதிக்கும். நம்முடைய அறிவு சோம்பல், இயலாமை, கர்மபலன் போன்றவற்றால் நிறைந்துள்ளது. ஆனால் அமெரிக்கர்களுடைய அறிவோ முயற்சி, முன்னேற்றம், dynamism ஆகியவற்றால் நிறைந்துள்ளது. எங்கு ஒரு எல்லையை அவர்கள் சந்தித்தாலும், அதைத் தாண்டலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதுவே நாமாக இருந்தால், அந்த எல்லைக்குள் அடங்கியிருக்க விரும்புகிறோம். இதுவே அவர்களுக்கும் நமக்குமுள்ள பெரிய வித்தியாசம்.

3. புரட்சியும், Self-reliance-உம் அமெரிக்க ரத்தத்தில் ஊறியுள்ளன. எந்த வேலையாக இருந்தாலும் அவர்களுக்குத் தானே செய்கின்ற பழக்கமுண்டு:

நம் நாட்டில் வீட்டில் ஏதேனும் ரிப்பேர் வேலை என்று வந்து விட்டால், electrician-ஐக் கூப்பிடுவோம், plumber-ஐக் கூப்பிடுவோம். அவர்கள் வந்து சரி செய்யும்வரை அந்த வேலைகள் அப்படியே இருக்கும். ஆனால் அமெரிக்கர்கள் இம்மாதிரி நடந்து கொள்வதில்லை. எல்லா வீட்டு ரிப்பேர் வேலைகளையும் அவர்களே செய்யப் பழகிக் கொள்கிறார்கள். Fan மாட்டுவது, புதிய பல்பு கனெக்க்ஷன் தருவது, புதிய பைப் லைன் இழுப்பது, மீட்டர் சரி செய்வது என்று இம்மாதிரி வேலைகளை அவர்களே செய்யப் பழகிக் கொள்கிறார்கள். இம்மாதிரி வேலைகளை எப்படிச் செய்ய வேண்டும் என்பதற்கே “Do it yourself ” என்ற guideline புத்தகங்கள் இருக்கின்றன. இப்படிப்பட்ட புத்தகங்கள் இல்லாத அமெரிக்க வீடுகளே இல்லை என்று நாம் சொல்லலாம். அமெரிக்கர்களுக்கு 1960-ஆம் ஆண்டில் அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்த வாழ்க்கை சலித்து விட்டது. அக்காலக் கட்டத்தில் பணம் சம்பாதிப்பது ஒன்றுதான் அமெரிக்கக் குடிமகன்களின் லட்சியமாக இருந்தது. பெரிய வீடு கட்டிக் கொள்ள வேண்டும், பெரிய கார்களை வைத்துக் கொள்ள வேண்டும், தாராளமாகச் செலவு செய்து வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்றுதான் இருந்தார்கள். ஆனால், அந்தக் காலத்திலிருந்த அமெரிக்க இளைஞர்களுக்கு இதில் எந்தச் சிறப்பும் இருப்பதாகத் தோன்றவில்லை. வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தம் வேண்டும். பணத்தைவிட சிறந்ததாக ஏதேனுமொன்று இருக்க வேண்டும். அதை மையமாக வைத்து நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து வழக்கமான வாழ்க்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வித்தியாசமான புது வாழ்க்கையைத் தேடினார்கள். அப்படித் தேடிய பொழுதுதான் இந்திய ஆன்மீகத்தில் அவர்கள் தேடியதற்கு விடை இருக்கிறதென்று அறிந்து அந்த ஆன்மீகத்தைத் தேடி இந்தியாவிற்கு ஏராளமாக வந்தனர்.

அப்படி இந்திய ஆன்மீகத்தில் தன்னுடைய தேடுதலுக்கு விடை கிடைக்கும் என்று நம்பி இந்தியாவிற்கு வந்தவர்தான் ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனரான Steve Jobs. பௌத்த மத தியானத்தில் அவருக்கு ஈடுபாடுண்டு. அவர் தியானத்தின் மூலம் intuition-ஐ வளர்த்துக் கொண்டார். மக்களுக்குப் பிடித்த வகையில் Ipad மற்றும் Ipod கண்டுபிடிப்பதற்கு இந்த intuition அவருக்குப் பெரிதும் உதவியது. இரண்டாம் உலகப்போருக்கு முன்னால் உலகப் பொருளாதாரமே வீழ்ச்சி கண்டிருந்தது. எப்படி பொருளாதாரத்தை மீண்டும் சுறுசுறுப்பாக்குவது என்று வழியே தெரியாமல் உலகத் தலைவர்கள் திணறிக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில்தான் ஆங்கிலப் பொருளாதார நிபுணர் J. M. Keynes என்பவர் பொருளாதார வீழ்ச்சி காலங்களில் அரசாங்கம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது சரியில்லை என்றும் பொருளாதாரத்தில் தலையிட்டு மக்களுக்கு வேலைவாய்ப்புகளை அரசாங்கமே உருவாக்கித்தர வேண்டும் என்றும் வாதிட்டார். இந்தக் கருத்து மிகவும் புரட்சிகரமான கருத்தாக இருந்தது. பொருளாதாரத்தில் தலையிடுவதையே அறியாத அமெரிக்க அரசாங்கத்திற்கு இது பெரிய அதிர்ச்சியாக இருந்தது. Keynes அவர்கள் சொல்வது மிகவும் original-ஆன யோசனையாகும். ஒருவருடைய originality-யை அதேமாதிரியான originality கொண்ட மற்ற ஒருவரால்தான் பாராட்ட முடியும். அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த F. D. Roosevelt அவர்கள் Keynes-ஐப் போலவே originality உள்ளவர். ஆகவே இந்தக் கருத்தை அவர் வரவேற்று, ரோடு போடுதல், பாலம் கட்டுதல், காடுகளை அழித்தல், வாய்க்கால் வெட்டுதல் போன்ற பொதுப்பணி வேலைகளைத் தொடங்கி மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கினார். 1970-இல் பதவி வகித்த ஜனாதிபதி Carter அவர்கள் FDR-ஐப் போலவே originality உள்ளவர். உலக நாடுகளின் பொருளாதார அமைப்புகள் Gold standard என்பதோடு இணைக்கப்பட்டிருந்தன. இந்த முறையின்படி ஒரு நாட்டின் கரன்சியின் மதிப்பு அந்த தேசத்திலுள்ள Gold reserve-வை ஒத்ததாகும். அதிகமாக reserve வைத்திருந்தால் அதிக மதிப்பும், குறைவாக reserve வைத்திருந்தால் குறைந்த மதிப்பும் கிடைக்கும் என்றாகிவிட்டது. இந்த முறையின்படி பார்க்கும்போது ஒரு நாடு மிகுந்த உற்பத்தித் திறனுள்ள நாடாக இருந்தாலும், Gold reserve குறைவாக இருந்தால், அந்நாட்டின் கரன்சியின் மதிப்பு குறைவாகத்தானிருக்கும். உலகப் பொருளாதார முறையை Gold standard system சரியாகப் பிரதிபலிக்கவில்லை. ஆகவே இந்த Gold standard-ஐ எடுத்துவிடலாம் என்று ஒரு புரட்சிகரமான முடிவை எடுத்து அமல் படுத்தியவரே ஜனாதிபதி Carter அவர்கள்தான். இப்படிச் செய்ததால் உலக நாடுகளின் கரன்சிகள் அந்தந்த நாட்டின் உற்பத்தித் திறனை மட்டும் பிரதிபலிக்கின்றனவே தவிர, அந்தந்த நாட்டின் Gold reserve-களை இல்லை. இப்படிப் பலவகைகளில் அமெரிக்கர்கள் தங்கள் originality-யை வெளிப்படுத்துகிறார்கள் என்றால் அவர்களை நாம் பாராட்டித்தான் ஆகவேண்டும்.

4. அமெரிக்கர்கள் செய்வதைப் பெரிதாகச் செய்வார்கள்:

இந்தியா சுதந்திரம் அடைந்தபொழுது நாட்டின் ஜனத்தொகை 30 கோடியாகும். ஆனால் பல்கலைக்கழகங்கள் வெறும் 27-தான் இருந்தன. அதேசமயத்தில் அமெரிக்க ஜனத்தொகை வெறும் 20 கோடியாகவும், ஆனால் பல்கலைக்கழகங்கள் மட்டும் 800-ஆகவும் இருந்தன. ஒரு பல்கலைக்கழகத்தில் 8000 முதல் 10000 மாணவர்கள் இருந்தார்கள். ஆனால் ஒரு சராசரி இந்தியப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் எண்ணிக்கை 2000 அளவில்தான் இருந்தது. இரண்டாம் உலகப்போர் தொடங்கிய பொழுது அமெரிக்க ராணுவத்தில் 16000 வீரர்கள்தான் இருந்தார்கள். ஆனால் போர் சூடுபிடிக்க ஆரம்பித்தவுடன் இந்த 16000 வீரர்கள் எண்ணிக்கையில் 40 லட்சமாக உயர்ந்தார்கள். அதாவது வெறும் ஆறு மாத காலக்கட்டத்திலேயே இராணுவத்தின் வளர்ச்சி 250 மடங்காக அதிகரித்தது. மேலும் மூன்று மாதத்திற்கு ஒரு கப்பல் என்று தயார் செய்து கொண்டிருந்தவர்கள் தங்களுடைய உற்பத்தியின் வேகத்தை அதிகரித்து, ஒரு நாளைக்கு ஒரு கப்பல் என்று delivery செய்ய ஆரம்பித்து விட்டனர். எப்படி அவர்கள் சாதித்தார்கள் என்பது புதிராகவே உள்ளது.

1980-90 போன்ற வருடங்களில் சென்னையிலுள்ள 12 அடுக்குள்ள L.I.C Building-ஐக் காணும்போது நமக்கு மலைப்பாக இருந்தது. ஆனால் அமெரிக்கர்களோ 1940-லேயே 70, 80 அடுக்குகளைக் கொண்ட மாடிக் கட்டிடங்களைக் கட்ட ஆரம்பித்து விட்டனர். நம் நாட்டில் பில்லியன் டாலர் கம்பெனிகள் இப்போதுதான் அறிமுகமாகியுள்ளன. ஆனால் அங்கோ 20, 30 வருடங்களுக்கு முன்னாலேயே Ford Company, General Motors, Microsoft, IBM போன்ற பில்லியன் டாலர் கம்பெனிகள் வந்து விட்டன. General Motors Company-யின் வருடாந்திர பட்ஜெட் செலவுகள் ஸ்ரீலங்கா, நேப்பால் போன்ற சிறிய நாடுகளுடைய பட்ஜெட்டைவிடப் பெரியது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அதாவது அந்த கம்பெனிகள் அந்த நாடுகளை விலைக்கு வாங்கிவிடும் அளவிற்கு வல்லமை படைத்துள்ளது. நம் நாட்டில்தான் 300, 400 ஏக்கர் அளவிலான எஸ்டேட் என்றாலே பிரமிப்பாகப் பார்க்கிறோம். இம்மாதிரி பண்ணைகளில் வேலை செய்வதற்கே நமக்கு 40, 50 ஆட்கள் தேவைப்படுகிறது. எஸ்டேட் முழுவதும் நீர் பாய்ச்ச வேண்டும் என்றால், அதற்கு நாள் முழுவதும் தேவைப்படுகிறது. ஆனால் அமெரிக்காவில் 10000, 20000 ஏக்கர் அளவிலுள்ள எஸ்டேட்களை சுமார் 10, 20 பேர்கள்தான் நிர்வாகம் செய்கிறார்கள். எஸ்டேட் முழுவதும் drip irrigation முறை சொட்டுநீர் பாசனத்திற்கான பைப்புகளையும் பிளாஸ்டிக் குழாய்களையும் பொருத்திவிடுகிறார்கள். பம்ப் செட்டை ணிண செய்தவுடன் இந்த குழாய்களின் மூலமாகவே எஸ்டேட் முழுவதும் நீர் பாய்ச்சப்படுகிறது. 300 ஏக்கர் எஸ்டேட்டை நிர்வாகம் செய்யவே நமக்கு 50 பேர்கள் தேவைப்படும்போது, நியாயமாகப் பார்த்தால், 10000 ஏக்கர் எஸ்டேட்டை நிர்வாகம் செய்ய குறைந்தபட்சம் 1000 பேர்களாவது தேவைப்படும். ஆனால் அமெரிக்கப் பண்ணைகளில் அப்படிச் செய்வதில்லை. அன்றாட நிர்வாகத்தை 10, 20 பேர்கள்தான் செய்கிறார்கள். அறுவடை நாட்களாக இருந்தால், பெரிய harvester machine வந்துவிடுகிறது. அறுவடையை அவைகள் செய்கின்றன. அதாவது 50 machine-கள் களத்தில் இறங்கினால், அதனை ஓட்டுவதற்கு 50 drivers இருக்கிறார்கள்.

நம் நாட்டில் சென்னை, பெங்களூர் போன்ற மாநகரங்களில் ஒரு நாளைக்கு 100, 200 விமானங்கள் வந்து இறங்கினாலே பெரிய விஷயமாக இருக்கிறது. ஆனால், Newyork, Chicago போன்ற பெரிய நகரங்களில் நிமிடத்திற்கு ஆறு அல்லது ஏழு விமானங்கள் வந்து இறங்குவதாகச் சொல்கிறார்கள். இந்தியாவில் இன்றைய காலகட்டத்தில், ஆயிரம் பேர்களுக்கு 40 கார்கள்தான் உள்ளன. இதுவே நமக்குக் கார்களின் எண்ணிக்கை மிகவும் பெருகி விட்டதாகத் தெரிகிறது. ஆனால் அமெரிக்காவிலோ 1000 பேர்களுக்கு 700 கார்கள் உள்ளன. Traffic Jam என்றால், இரண்டு அல்லது மூன்று மைல்கள் தூரத்திற்கு கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக சாலைகளில் நிற்பதைப் பார்க்கலாம். நம்மால் கற்பனை செய்ய முடியாத காரியங்களையும் அவர்கள் சுலபமாகச் சாதிக்கிறார்கள். 1870-ஆம் ஆண்டளவில் தாழ்வான பகுதியில் கட்டப்பட்ட ஒரு ஹோட்டலையே நாம் காருக்கு jack வைத்துத் தூக்குவதைப்போல் அந்த கட்டிடத்திற்குக்கீழ் jack வைத்து கட்டிடத்தையே தூக்கினார்கள். இத்தனைக்கும் ஹோட்டல் வழக்கம்போல் இயங்கலாம் என்றும் சொல்லிவிட்டார்கள். இப்படிப்பட்ட ஒரு டெக்னாலஜியே நம் நாட்டிற்குக் கடந்த ஓரிரு வருடங்களாகத்தான் அறிமுகமாகி உள்ளது. அதாவது 1870-இல் அவர்கள் சாதித்ததை 2014-இல்தான் நம்மால் நினைக்கவே முடிகிறது.

தொடரும்...

**********

ஜீவிய மணி

நம் சுயநலம் 100% என்பது நமக்குத் தெரியும். இல்லை என நினைப்பது தவறு. பேசுவது பாவம். 100% தன்னலமற்ற முறையில் நடக்கத் தாமே முன் வராதவர் மாற்றத்தைத் தேடுதல் பலன் தராது.

*********



book | by Dr. Radut