Skip to Content

12. சாதனைக்கு உதவும் விஷயங்கள்

சாதனைக்கு உதவும் விஷயங்கள்

என். அசோகன்

வாழ்க்கையில் எல்லோருமே சாதிக்க விரும்புகின்றனர். ஆண்களாக இருந்தால் வருமான உயர்வு, பதவி உயர்வு, அந்தஸ்து உயர்வு என்று பல்வேறு வழிகளில் அந்தச் சாதனையை அனுபவிக்க விரும்புகின்றனர். ஒரு காலகட்டம் வரையிலும் பெண்களுடைய சாதனை என்பது நல்ல வரனைத் திருமணம் செய்து கொள்வது, வீடு கட்டிக் கொள்வது, பிள்ளைகளுக்கு நல்ல கல்வி வழங்குவது என்று இருந்தது. ஆனால் இப்போது பெண்களே கெரியரில் பெரியதாகச் சாதிக்க விரும்புகின்றனர். பேங்க் ஆபீசர், ஐ. ஏ. ஸ். ஆபீசர், கார்ப்பரேட் ஆபீசர் என்று எல்லாத் துறைகளிலும் பெண்களைப் பார்ப்பது இப்போது சகஜமாகி விட்டது. ஆகவே ஆணுக்குப் பெண், சரி நிகர் சமானம் என்று பேச்சளவில் இருந்தது, இன்று நடைமுறைக்கு வந்து விட்டது.

சாதிப்பவர்கள், சாதிக்க முடியாதவர்கள் என்று எடுத்துக் கொண்டால், முன்னவர்கள் குறைவாகவும், பின்னவர்கள் அதிகமாகவும்தான் இருப்பார்கள். சாதிக்கின்றவர்களைப் பார்க்கும் பொழுது, சாதிக்க முடியாதவர்களுக்கு அது ஒரு புரியாத புதிராகவும், விந்தையாகவும் இருந்தது. ஆனால் சாதிக்கிறவர்கள் எப்படிச் சாதிக்கிறார்கள் என்று நாம் ஆழ்ந்து கவனித்தோம் என்றால், அது ஒரு பெரிய புதிராக இருக்காது. எல்லோருக்கும் எளிதில் விளங்கக் கூடியதாக இருக்கும். ஸ்ரீ கர்மயோகி அவர்கள் சிறப்பான சாதனைக்குத் தேவையானவை மூன்று என்று கூறுகிறார். அந்த மூன்றும் பின்வருமாறு:

  1. எடுக்கின்ற முடிவு விவரம் தெரிந்த முடிவாக இருக்க வேண்டும்.
  2. செய்கின்ற வேலையில் முழு உற்சாகம் இருக்க வேண்டும்.
  3. அறிவிற்குத் தெரிந்ததைச் செயலில் கொண்டுவரும் செயலாற்றல் வேண்டும். இதை capacity for practical execution என்று சொல்வார்கள்.

பெரிய அளவில் சாதிப்பவர்களைக் கவனித்தால் மேற்கூறிய மூன்று விஷயங்களும் அவர்களிடம் சிறப்பாகவே இருக்கும். இவர்கள் ஒரு வேலையில் இறங்கினார்கள் என்றால், அந்த வேலையைத் தொடங்குவதற்கு முன்னால் அதுபற்றி எல்லா விவரங்களையும் சேகரம் செய்து கொண்டு அது தனக்கு உகந்த வேலைதான் என்று முடிவு செய்து கொண்டுதான் இறங்கி இருப்பார்கள். உதாரணமாக ஒரு டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர் ஆரம்பிக்க சாதனையாளர் விரும்புகிறார் என்றால், அதுபற்றிய எல்லா விவரங்களையும் அவர் சேகரித்து வைத்திருப்பார். அதாவது எங்கே, என்ன அளவு கடை ஆரம்பிக்க வேண்டும், எதையெல்லாம் ஸ்டாக் செய்ய வேண்டும், எதற்கு டிமாண்ட் இருக்கிறது, எதற்கு டிமாண்ட் இல்லை, என்ன முதலீடு தேவைப்படுகிறது, அதற்குக் கடன் வாங்க வேண்டுமா, கடையில் யாரைப் பணியில் அமர்த்த வேண்டும், என்ன சம்பளம் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் தீர விசாரித்து விட்டுத்தான் இந்த வேலையிலேயே இறங்குவார். அதாவது, அவர் தொழில் சம்பந்தப்பட்ட எந்த ஒரு முக்கியமான விவரமும் அவருக்குத் தெரியாமல் போய்விட்டது என்ற நிலையிலேயே அவர் இருக்கமாட்டார். கடை என்று ஆரம்பித்து அது வெற்றி- கரமாக நிலைபெறும்வரை நேரம், காலம் என்று பார்க்காமல் உழைக்கத் தயாராக இருப்பார். மூன்றாவதாக, குறிப்பிட்ட செயலாற்றல் என்பதும் அவரிடம் நிறையவே இருக்கும். அதாவது டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர் என்று வைத்தால், அதில் பத்து பேரை வைத்து வேலை வாங்க வேண்டும். அதற்கான லீடர்ஷிப் அவரிடம் இருக்கும். எந்த ஒரு ஸ்தாபனமும் வெற்றி- கரமாகச் செயல்பட வேண்டும் என்றால் அந்த ஸ்தாபனத்தை நடத்துபவருக்கு முதலீடு, பொருட்கள், லேபர், மற்றும் மார்க்கெட், டெக்னாலஜி என்றிவ்வைந்தையும் வெற்றிகரமாக ஒருங்கிணைத்துச் செயல்படுத்தத் தெரிய வேண்டும். கஸ்டமர் வந்து ஒரு பொருள் வேண்டும் என்றால், அது அந்த நேரம் தன்னிடம் இல்லை என்று அவர் சொல்லும்படி தன்னை வைத்துக் கொள்ளக் கூடாது. டிப்பார்ட்மெண்ட் ஸ்டோரை நிர்வகிக்க ஒரு திறமைசாலியான மேனேஜர் இல்லை என்றால் அவருக்கு லேபர் மேனேஜ்மெண்ட் வீக் என்றாகிறது. அதாவது, அவர் கொடுக்க விரும்பும் சம்பளத்திற்கு இசைந்து வேலை செய்யத் திறமைசாலியான மேனேஜர் முன்வரும் அளவிற்கு அவருக்கு லீடர்ஷிப் இருக்க வேண்டும்.

இதற்கு மாறாக, அவசரமாக, சரியாக விசாரிக்காமல் ஏதோ ஆர்வத்தில் உந்தப்பட்டு வேலையை ஆரம்பிப்பவர்கள் பல பேர் உண்டு. இவர்களுக்கு வேலை கெட்டுப் போகிறது என்றால் அதில் எந்த ஆச்சரியமும் இல்லை. உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட நிதி நிறுவனம் 36% வட்டி தருகிறோம், அதனால் எங்களிடம் டெப்பாசிட் செய்யுங்கள் என்று கவர்ச்சியாக டி.வி.யில் விளம்பரம் தருவார்கள். இம்மாதிரி விளம்பரத்தைப் பார்த்தவுடன் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு வேறு எந்த சிந்தனையும் இல்லாமல், உடனே அந்த நிறுவனத்தில் டெபாசிட் செய்வார்கள். ஒரு சில மாதங்களுக்கு வட்டி வரும். பின் வட்டி வராமல் நிற்கும்போது, என்னாயிற்று? ஏதாயிற்று? என் பணம் போய் விட்டது என்று புலம்புவார்கள். அவர்கள் செய்கின்ற தவறு, கேள்விப்பட்ட விஷயத்தை மறுபரிசீலனை செய்வதில்லை என்பதாகும். 36% வட்டி இவர்களால் எப்படிக் கொடுக்க முடியும்? வெளியில் இவர்கள் 60% வட்டிக்குக் கடன் கொடுத்தால்தானே இவர்கள் 36% வட்டி கொடுக்க முடியும். இப்படி 60% வட்டிக்கு யார் இவர்களிடம் கடன் வாங்குவார்கள். அப்படி யாரும் கடன் வாங்குவதாகத் தெரியவில்லை என்றால், இவர்கள் சொன்ன வட்டியைக் கொடுக்க முடியாது என்று தெளிவாகிறது. அப்படி என்றால் இந்த விளம்பரமே போலி என்றிவர்கள் ஒதுங்கியிருக்க வேண்டும். அதிக வட்டியைப்பற்றி கேள்விப்பட்டவுடனேயே பேராசை கண்ணை மறைப்பதால் வேறு எதைப்பற்றியும் சிந்திக்காமல் பணத்தைக் கொடுத்து விட்டுப் பிரச்சனைக்கு ஆளாகிறார்கள். இம்மாதிரியே சரியாகச் சிந்திக்காமல், விஷயத்தை நான்கு கோணத்திலிருந்து ஆராயாமல் வேலையை ஆரம்பித்துச் சிக்கலில் மாட்டிக் கொள்பவர்கள் பல பேர்.

பள்ளமான இடத்திலுள்ள பிளாட் விலை மலிவாகக் கிடைக்கிறது என்று ஆசைப்பட்டு வாங்கி வீட்டைக் கட்டிக் கொள்வார்கள். பின் மழைக் காலத்தில் பள்ளத்தை நோக்கி வெள்ளம் வருவதால் அங்கே இருக்க முடியாமல் அவஸ்தைப் படுவார்கள். பெரிய சம்பந்தம் தேடி வரும்போது பெருமையாக இருக்கிறது என்று ஒத்துக் கொள்வார்கள். பின்னர் ஒத்துக் கொண்டபடி சீர் செய்ய முடியாமல் கல்யாண செலவிற்கு பணம் புரட்ட முடியாமல், அவமானத்திற்கு ஆளாவார்கள். பெரிய இடத்துச் சம்பந்தத்தைச் சந்திப்பவர்கள் விரலுக்குத் தகுந்த வீக்கம் என்ற அணுகு முறையைக் கையாண்டாலே இவர்களுக்கு எந்தச் சிரமும் வராது. இப்படியாக பெருமை, வறட்டு கௌரவம், சீக்கிரம் சமூகத்தில் முன்னேற வேண்டும் என்ற அளவு கடந்த ஆர்வம் என்றிவை எல்லாம் ஒன்று சேர்ந்து நிதானத்தை இழக்கச் செய்கிறது.

காரிய பூர்த்திக்குச் சிறந்த தகுதி உள்ளவர்கள் உள் விஷயங்களிலும் சரி, வெளி விஷயங்களிலும் சரி இரண்டுமே நிரம்பி இருப்பவர்கள்தாம். ஒரு வேலையைச் சிறப்பாகச் செய்வதற்குப் பணம், டெக்னாலஜி, லேபர், மார்க்கெட் என்றிந்த வெளி விஷயங்கள் மட்டும் இருந்தால் போதாது. உள் விஷயங்களான உழைப்பு, முன்னேறும் ஆர்வம், சவால்களை எதிர்கொள்ளும் தைரியம், விடாமுயற்சி, நாலு பேரை நிர்வகிக்கும் லீடர்ஷிப் என்றிவை எல்லாம் உள்ளேயும் இருக்க வேண்டும்.

தொடரும்...

*******book | by Dr. Radut