Skip to Content

10. அன்னை இலக்கியம் - மனதில் உறுதி வேண்டும்

அன்னை இலக்கியம்

மனதில் உறுதி வேண்டும்

இல. சுந்தரி

"பெரியப்பா! எப்பொழுது வந்தீர்கள்?" என்று அன்பு பொங்க விசாரித்த வண்ணம் ஓடிவந்தாள் வந்தனா.

"நன்றாக இருக்கிறாயா குழந்தை? நான் நேற்று இரவே வந்து விட்டேன். அப்படியே வாசற்புறத்தில் படுத்துத் தூங்கிவிட்டேன்" என்றார் ராமகிருஷ்ணன் என்ற ராமு பெரியப்பா.

"ஏன் பெரியப்பா என்னை எழுப்பவில்லை?" என்றாள்.

நடு இரவில் வந்து எழுப்பினால் அவரவர் தூக்கம் கெடாதா என்ன?

பாவம் பெரியப்பா நீங்கள். எப்பொழுதோ ஒரு முறை வருகிறீர்கள். வரும்போதும் பசியும், பட்டினியுமாகத் தூங்க வேண்டுமா?

என்னைப் பெற்றத் தாய்கூட இப்படிக் கேட்டதில்லையம்மா. உனக்குப் பெரிய மனசு.

தாய்க்குப்பின் தாரம் என்பார்களே. நீங்களும் திருமணம் செய்து கொண்டிருந்தால் உங்கள் வரவிற்காக என் பெரியம்மா காத்துக் கொண்டிருந்திருப்பார்களல்லவா?

உண்மைதானம்மா. ஆனால் தன் நலத்தைப் பேண ஒரு பெண் காத்திருப்பது என்பதற்கல்ல திருமணம். சமூகத்திலுள்ள மனிதனுக்குத் திருமணம் பூரணம் தரலாம். மனத்தின் வளர்ச்சி சமூகத்திற்குட்பட்ட மனிதனுக்கு நட்பு பூரணம் தரலாம். உள்ளமும், மனமும் தெளிவுபெற்று வளர ஆரம்பித்தால் சிறந்த திருமண வாழ்வும், உயர்ந்த நட்பும் அவ்வுள்ளத்திற்கும், மனத்திற்கும் பயன்படா. சென்ற நூற்றாண்டின் நாகரீகம் இந்நூற்றாண்டிற்குப் பயன்படாதது போலத்தான் இதுவும்.

பிறகு, நிறைந்த மணவாழ்வு என்று ஏன் சொல்கிறார்கள்?

இறைவனைத் தவிர வேறொன்றில் முடிவைக் காண்பது அறியாமை. பணம், பதவி அதுபோன்று முடிவாகத் தோன்றுவது உணர்ச்சியின் மாயை. திருமணத்தையே முடிவாகக் காண்பது சமூக மாயையை ஏற்றுக்கொள்ளும் மனிதச்செயல். நட்பில் முடிவைக் காண முயல்வது உணர்ச்சியின் மாயையாகும். “பெரியப்பா, உங்கள் பேச்சு அற்புதமானது. நீங்கள் இங்கேயே இருந்தால் நான் எத்தனை நல்ல விஷயங்கள் தெரிந்து கொள்வேன். அதிருக்கட்டும், நீங்கள் குளித்துவிட்டு வாருங்கள் பெரியப்பா. சூடாக இட்லி வார்த்துத் தருகிறேன். சாப்பிட்டு விட்டு ரெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள். பொறுமையாகப் பேசுவோம்” என்றாள் வந்தனா.

காபி, பலகாரம், ரெஸ்ட் என்று எந்தப் பழக்கமும் எனக்கில்லையம்மா.

தெரியும் பெரியப்பா. ஆனால் எல்லோரும் அப்படித்தானே வாழ்கிறார்கள்?

அதெல்லாம் வெறும் பழக்கங்கள். நான் சாப்பிடுவதற்கு உயிர்வாழவில்லை. உயிர்வாழத்தான் சாப்பிடுகிறேன். அது எப்போது கிடைத்தாலும் பரவாயில்லை. பேசிக்கொண்டிருக்கும் போதே, சற்று இருங்கள் பெரியப்பா, இதோ வந்து விடுகிறேன் என்று கூறி அடுக்களைக்குச் சென்று சூடான இட்லி, சுவையான சட்னியுடன் வந்தாள்.

அவர் சாப்பிட்ட வண்ணம் நலம் விசாரித்தார்.

உனக்கு வரன் பார்க்கிறார்களா குழந்தை?

ஆமாம் பெரியப்பா, எனக்கு ஓரோர் நேரம் நானும் உங்களைப் போல் ஆணாகப் பிறந்திருக்கக் கூடாதா என்று தோன்றுகிறது.

ஏனம்மா அப்படிச் சொல்கிறாய்?

ஆமாம் பெரியப்பா, பெண்ணாய்ப் பிறந்தால் நம் நாட்டில் கல்யாணத்திற்குக் கட்டாயப்படுத்துவார்கள். உங்களைப் போல் ஆணாக இருந்தால் கட்டாயப்படுத்த முடியாதல்லவா? அது ஆண்பெண் என்பதைப் பொறுத்ததல்ல. அவரவர் தேவையை, மனவுறுதியைப் பொறுத்ததம்மா.

எப்படிப் பெரியப்பா சொல்கிறீர்கள்?

ஆமாம்மா. தனித்திருக்கத் தைரியம் வேண்டும். அந்தத் தைரியமில்லாமல்தான் பல நேரங்களில் சமூகத்தை (அது தவறு செய்யும்போதும்) ஆதரிக்கிறோம். இது பகுத்தறிவோ,

தர்க்கரீதியான எண்ணமோ, நியாய மனப்பான்மையோ அன்று.

இருந்தாலும் பெண்ணுக்குச் சுதந்திரம் இல்லை பெரியப்பா.

இதற்கு அதியற்புதமான வழியொன்றை ஒரு தெய்வத்தாய் கூறியிருக்கிறார். பெண்கள் தங்களைத் தாங்களே விடுவித்துக் கொண்டாலன்றி அவர்களை வேறு எந்தச் சட்டமும் விடுவிக்க இயலாது என்பதுதானது.

எப்படித் தங்களைத் தாங்களே விடுவித்துக் கொள்வது? அவர்களை அடிமைப்படுத்துவன மூன்று. ஓர் ஆண்மகனிடத்து, அவன் வலிமையின்பால் ஏற்படும் கவர்ச்சி, இல்வாழ்க்கையிலும் அதன் பாதுகாப்பிலும் ஏற்படும் விருப்பம், தாய்மையில் பற்றுதல். இம்மூன்று தளைகளிலிருந்தும் விடுபட்டால் அவர்கள் உண்மையாகவே ஆண்களுக்கு நிகராக ஆவார்கள். ஆனால் ஆண்களும் மூன்று அடிமைத்தனங்களிலிருந்து விடுபட்டால் ‘சரிநிகர் சமானமாக வாழ்வம்’ என்பது நிகழ்ந்துவிடும்.

என்ன பெரியப்பா சொல்கிறீர்கள். ஆண்களுக்கும் மூன்று அடிமைத்தனங்களா?

ஆமாம் அம்மா. தன்னுடைமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற மனப்பான்மை, இனக்கவர்ச்சி, குடும்ப வாழ்வளிக்கும் சிறிய செளகரியங்களில் நாட்டம்.

இப்படியவர்கள் உரையாடிக் கொண்டிருக்கும்போது, என்னடா அங்குக் குழந்தையிடம் பேச்சு? உன்னைப்போல் பொறுப்பில்லாத வாழ்க்கைக்குக் குழந்தையைத் தயார் செய்யாதே என்று அதிகார தோரணையில் கூறிக் கொண்டு வந்தாள் அவர் தாய் மீனாட்சி.

“அவள் என்னிடம் கேட்ட கேள்விக்கு நான் பதில் சொன்னேன்” என்றார் ராமு.

பாட்டிக்குப் பெரிய ஆதங்கம் தன் பெரிய பிள்ளை சாமியார்போல் பற்றற்றுத் திரிகிறானே என்று.

‘உன் தம்பி இல்லையா குடும்பப் பொறுப்புடன்? தாயை, தாரத்தை, மகளைப் பொறுப்பாகக் கவனிக்கவில்லையா?’ என்றாள் மேலும்.

‘இதென்னம்மா அதிசயம்? விலங்குகளும், பறவைகளும் கூடத் தன் குட்டிகளுக்கும், குஞ்சுகளுக்கும் உணவளிக்கின்றன. ஆனால் அங்கே எதிர்பார்ப்புகள் இல்லையே’ என்றார் ராமு.

‘ஏன்? எதிர்பார்ப்பதில் என்ன தவறு?’ என்றாள் சுரீரென.

‘தவறு என்று சொல்லவில்லையம்மா. எதிர்பார்ப்புகள்தாம் ஏமாற்றத்திற்கும், ஏக்கத்திற்கும் வழிவகுக்கும். கடமையைச் செய்து விட்டு நிம்மதியாக இருக்கத் தெரியவேண்டும். ஒரு வீடு கட்டுவதென்றால் எல்லோரும் கொத்தனார்களாய் இருந்தால் போதுமா? தச்சரும், பெயிண்ட்டரும், எலக்ட்ரீஷியனும் எல்லோரும்தான் வேண்டும். இல்லறமும், துறவறமும் இணைந்ததுதான் வாழ்வு என்று எத்தனை பேருக்குத் தெரியும்?’என்றார்.

இது என்னடா புதுக்கதை? இல்லறம், துறவறம் இரண்டும் எதிரெதிரானவை. இரண்டும் எப்படி இணைய முடியும்?

இல்லறத்தைத் துறவறத்தின் தூய்மையோடு நடத்துவது. நம் உறவுகள் பாசத்தின் அடிப்படையிலும், பற்றுகளின் அடிப்படையிலும் அமைந்தவை. அவை தெய்வீகத்தின் அடிப்படையில் அமைய வேண்டும். அப்போது அகந்தையின் வடிவான குடும்பம் கரைந்து தெய்வீக வாழ்வு அங்கேயே மலரும். மனத்தால் வாழும் உடல் ஆன்மாவால் வாழும் ஜீவனாகும், என்று சொல்லச் சொல்ல அவர் முகம் பிரகாசமானது.

‘என்னவோ போ. நீ பேசுவதொன்றும் எனக்குப் புரியவில்லை. பாசம், பற்று, கடமை எல்லாம் மனிததர்மம் தானே’ என்றாள் மீனாட்சி.

‘அம்மா, தர்மம் என்பதெல்லாம் மனிதன் தன் தேவைக்கு ஏற்படுத்திக் கொண்டதுதான். கடவுளால் படைக்கப்பட்டதன்று.

விதிகள் வகுக்காமல் வாழ மனிதனுக்குச் சுயக்கட்டுப்பாடு வேண்டும். அதுமுடியாமல்தான் விதிகளை வகுத்துக் கொள்கிறோம். வகுத்த பிறகும் உண்மையாக எத்தனை பேர் விதிகளை மனப்பூர்வமாய் ஏற்று நடக்கிறோம்’ என்றார்.

‘உன்னோடு பேச என்னால் முடியாது’ என்று விருட்டென்று உள்ளே போய்விட்டாள் மீனாட்சி.

அவர் பேசியவை அவருடைய தாய்க்கு விளங்கவில்லை. தாயினும் மேலாய் அவரை கவனித்த வந்தனாவுக்குப் புரிந்தது. பள்ளியிறுதி வகுப்பு முடித்துவிட்டு, குடும்பத்தார் பார்வையில் கல்யாணத்திற்குக் காத்திருக்கும் பெண் அவள். அவள் தன் சுயநோக்கில் பெரியதொரு வாழ்விற்குக் காத்திருப்பவள்.

“அதுசரி பெரியப்பா இம்முறை நீங்கள் எங்குச் சென்று வருகிறீர்கள், யாரைத் தரிசித்தீர்கள்? அதைக் கேட்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன் பெரியப்பா” என்றாள் வந்தனா.

ஒவ்வொரு முறையும் இவர் யாரேனும் ஒரு மகானையோ, ஞானியையோ தரிசித்து அவருக்கு சேவை செய்த பாக்யத்துடன் வருவார். வீட்டில் இவர் தம்பியும், தம்பியின் மனைவியும், தாயும் ஆவலாக இவரை ஏதும் விசாரிக்கமாட்டார்கள். அவர் ஏதோ உதவாக்கரை போன்றும், தாங்களே பொறுப்புள்ளவர்கள் போலும் நடந்து கொள்வர். ஆனால் வந்தனா மட்டும் இவர் கொண்டுவரும் ஆன்மீக ஆஸ்த்தியை அவரிடம் பகிர்ந்து கொள்ளக் காத்திருப்பாள்.

அடடா! அந்த ஆனந்தத்தை உன்னிடம் கூறத்தான் வந்தேனம்மா. இம்முறை நான் அந்தப் பரமனையும், அவன் சக்தியையும் கண்டு பரவசமடைந்தேனம்மா. அன்று நான் புதுவை கடற்கரையில் அமர்ந்து நீலவானையும், நீலக் கடலையும் கண்டு அமைதியாய் இருந்தேன். அப்போது சற்றருகே இரண்டுபேர் அமர்ந்து பக்திப்பரவசத்துடன் உரையாடிக் கொண்டிருந்தனர்.

ஏன் பெரியப்பா புதுவை என்றாலே மது அருந்தச் செல்வதாக மட்டமாய் பேசுகின்றார்கள். நீங்கள் ஏன் அங்குப் போனீர்கள்.

நீ கேட்டதும் சரிதான். பொதுவாக மக்கள் சராசரி வாழ்வைத்தான் அறிந்திருக்கிறார்கள். அரிதானவர்களே ஆன்மாவை நாடுகின்றார்கள். அதனால்தான் புதுவையில் மதி மயக்கும் மதுவைத் தவிர, மதியைத் தெளிவிக்கும் அருமருந்தும் உண்டென்பது அநேகர் அறியவில்லை. வேடிக்கை என்னவென்றால் வரும் வழியில் சிறிதுநேரம் கடற்கரையில் அமர்ந்தேன். அது இறைவனின் விருப்பம் என்பது பிறகுதான் புரிந்தது.

ஏதோ பக்தியாய் பேசிக்கொண்டார்கள் என்றீர்களே? அப்படி என்னதான் பேசினார்கள்.

ஓ அதுவா. ஒருவர் மற்றவரிடம், ‘அன்றைய தினத்தை எத்தனை பிறவிகள் எடுத்தாலும் மறவேன். அதிகாலையில் இருந்தே ஆசிரமம் சுறுசுறுப்பாய் இயங்கியது. குருதேவரின் தரிசனத்திற்குப் போகத் தயாராகிக் கொண்டிருந்தோம். ஒரு மனிதரைக் காண்பதற்கன்று. ஒரு பரமபுருஷரைத் தரிசிப்பதற்கும் அன்று. இறைவனையே காணப் போகும் களிப்பு.

அதோ அவர் வராந்தாவிலுள்ள சிம்மாதனத்தில் ராஜ கம்பீரத்துடன் வீற்றிருக்கிறார். இளஞ்சிவப்புத் தாமரை மலர்களும், வெண்டாமரை மலர்களும் அணிந்து அமர்ந்திருக்கிறார். அம்மலர்கள் சீடர்களின் எளிய காணிக்கை. அவர் பார்வை பரவசமூட்டுகிறது. அன்பையும், அருளையும் தெய்வத்துவத்தையும் இடைவிடாது பொழியும் அப்பார்வையை எப்படி மறக்கக்கூடும்?

பிறந்தநாள் பயனே இதுவல்லவா?’ என்று உருகியவண்ணம் விழிநீர் பெருகக் கூறிக் கொண்டிருந்தார்.

நான் மெல்ல நகர்ந்து அவர்களிடம் சென்றேன். அவர்கள் பேசிக்கொண்டிருந்ததை நான் கவனித்தேன் என்பதையும் அது பற்றி அறிய ஆவலாகவுள்ளேன் என்பதையும் கூறினேன்.

நான் யார் என அவர்கள் விசாரித்தனர். நான் மகான்களைத் தேடி வழிபடுகிறேன் என்பதைக் கூறினேன். என்னைப்பற்றித் தெரிந்து கொண்டதும் அவர்கள் தங்கள் குருநாதர்

ஸ்ரீ அரவிந்தரின் பிறந்தநாளில் அவரைத் தரிசித்த அனுபவத்தைப் பேசிக் கொண்டதாகக் கூறினர்.

எனக்கும் அவரைத் தரிசிக்க ஆவலாயுள்ளதைக் கூறினேன். மறுநாள் அரவிந்த ஆசிரமத்திற்குக் காலையிலேயே வருமாறும் பாக்கியமிருந்தால் தரிசனம் கிடைக்கலாம் எனவும் கூறினர். அவர்கள் ஆசிரமத்துச் சாதகர்கள் எனத் தெரியவந்தது. மறுநாள் காலை தவறாது போய் ஆசிரம வாயிலில் காத்திருந்தேன். அந்தச் சாதகரில் ஒருவர் வெளியே வந்து யாரையோ தேடுவதுபோல் பார்க்க, நான் அவர் கண்ணில் பட்டவுடன் ‘உங்களைத்தான் தேடினேன். உள்ளே வாருங்கள் உங்களுக்கு இன்று தரிசனம் உண்டு. ஆனால் அது உங்கள் பொருட்டன்று என பகவான் கூறினார்’. எனக்கு எதுவும் விளங்கவில்லை. ‘ஏன் அப்படிக் கூறினார் என்பது போகப்போகதான் தெரியும்’ என்றார்.

அவருடன் சென்றேன். வரிசையில் நின்றேன். ஸ்ரீ அரவிந்தரும், அவருக்கு வலப்பக்கத்தில் ஸ்ரீ அன்னை என்பவரும் அமர்ந்திருந்தனர். மக்கள் பக்தியுடனும் பரவசத்துடனும் அவரிடம் ஆசி பெற்று வரிசையாகச் சென்ற வண்ணமிருந்தனர். என் முறை வந்தது. என்னவென்று விவரிக்கவியலாத ஒரு பேருணர்வு என்னைச் சூழ்வதை உணர்ந்தேன். ஒரு ஒளிவெள்ளம் என்மீது பாய்வது போலிருந்தது. கண்ணைக் கூசும் ஒளி அது. நகர்ந்து வந்தபின் ஓரிடமாக அமர்ந்துவிட்டேன். அவர்கள்முன் லேசாகிக் காற்றில் பறப்பதைப்போல் உணர்ந்தேன். அகன்றபின்போ ஒரே பாரமாய் உணர்ந்தேன். அங்கு தெய்வீகச் சூழல் அலை மோதிக் கொண்டிருந்தது.

‘அவர்களிடம் பெற்ற பிரசாதம் இது. ஏனோ இதை உன்னிடம் தரவேண்டும் எனத் தோன்றிய வண்ணமுள்ளதால் இதைக் கொடுத்து விட்டுப்போகவே வந்தேனம்மா’ என்று உலர்ந்த ரோஜாப்பூ ஒன்று வைக்கப்பட்ட கவரைஅவளிடம் கொடுத்தார்.

‘பெரியப்பா நீங்கள் கூறியவற்றையெல்லாம் கேட்டபோது நானே அவற்றைக் காண்பதுபோல் உணர்ந்தேன். நீங்கள் தந்த இந்தப் பிரசாதம் எனக்கென்றே அந்தத் தெய்வங்களால் அனுப்பப்பட்டதோ என்று தோன்றுகிறது பெரியப்பா’ என்றாள்.

‘இருக்கலாம் குழந்தை. இந்தத் தரிசனம் உங்கள் பொருட்டன்று என ஸ்ரீ அரவிந்தர் கூறினாராமே. ஒரு வேளை அதன் பொருள் இதுவோ’ என்று நெகிழ்ந்தார்.

‘அவர்கள் யார் பெரியப்பா? முன்பு நீங்கள் எத்தனையோ மகான்களைத் தரிசித்து வந்து சொல்வீர்களே அவர்களைப் போன்றவர்களா?’ என்றாள்.

இல்லையம்மா. இவர்களை யாருடனும் ஒப்பிட முடியாது. இவர்கள் நம் பொருட்டுச் செய்யும் யோகத்திற்குப் பூரண யோகம் என்று பெயர். புதுமையானது. இவர்களைப் பின்பற்ற, நாட்டைத் துறந்து காட்டிற்குப் போகவேண்டாம். புலன்களை அவிக்க வேண்டாம். நமது செயல்களையெல்லாம் இறைவனுக்கு வேள்வியாக ஆக்குதல், மனிதனிலுள்ள உண்மையான ஆத்மாவை வெளிப்படுத்துதல், வாழ்வு முழுவதையும் யோகமாக்குதல் என்பதே இவர்கள் யோகம். புதுமையாக இருக்கிறதே. ஸ்ரீ அன்னை ஸ்ரீ அரவிந்தர் என்றீர்களே. அவர்கள் இருவரா? ‘ஆமாம் அம்மா. அதையெல்லாம் கேட்டால் அசந்து போவாய்’ என்றார் உற்சாகமாக.

சொல்லுங்கள் பெரியப்பா, அவர்கள் யார்?

ஒருவர் நம் சுதந்தரப் போராட்ட வீரராய் உலகம் கண்ட ஸ்ரீ அரவிந்தர். மற்றவர் பாரிஸ் மாநகரில் செல்வக் குடும்பத்தின் செல்வமாய் அவதரித்து குழந்தைப் பருவத்திலேயே ஆன்ம நாட்டத்துடன் உருவானார்.

அப்படியென்றால் இருவரும் மனிதர்களாகத் தோன்றிய மகான்களா? என்றாள்.

இல்லையில்லை. நம் சாதாரண மனநிலையில்தான் அவர்கள் மனிதர்கள். ஆன்ம விழிப்போடு, பக்திப்பரவசத்தோடு உணரும் போது அவர்கள் மானுடர்களேயல்லர் என்ற உண்மை புரியும்.

அது எப்படிப் பெரியப்பா? ஆன்ம விழிப்பு என்பது பெரிய விஷயமல்லவா? நமக்கு ஆன்மாவையே தெரியாது. பின் அது விழிப்பது எப்படி?

இதோ, இப்படி அறிந்து கொள்ளும் ஆர்வமும், வாய்ப்பும் வருகிறது எனில், அவர்களுக்கு இறைவன் அதை உணர்த்தப் போகிறான் என்று அர்த்தம்.

அது சரி பெரியப்பா சாமான்யர்கள் அவர்களைப் புரிந்து கொள்வது எப்படி?

‘அவனருளாலே அவன் தாள் வணங்கி’ என்று பெரியவர்கள் சொல்வார்கள் அல்லவா? அது உண்மைதான். ஒருகால கட்டத்தில், அன்னை யார்? என்ற கேள்வி சாதகர்களுக்கு எழுந்தது. அப்போது ஸ்ரீ அரவிந்தர் யோகத்தில் தீவிரமாய் ஈடுபட்டிருந்தார். யோகத்தின் முதிர்ச்சியான திருஷ்டிக்குத்தான் அன்னையின் தெய்வத்வம் புலப்படும். அவர்தாம், ஸ்ரீ அன்னை பராசக்தியின் அவதாரம் என எடுத்துரைத்தார்.

அதுபோல் ஒருமுறை ஸ்ரீ அரவிந்தர் யார்? என்ற கேள்வி எழுந்தபோது, ‘அவர் இறைவனின் பகுதி’ என்று ஸ்ரீ அன்னை தாம் கூறினாராம், என்றார்.

ஆக அவர்களை அவர்களே அறிவார்கள் என்பதுதான் உண்மை என்றாள் வந்தனா.

பரிசுத்தமான உள்ளத்துடன் அவர்களை அணுகுபவர்கள் அந்த உண்மையை உணர முடியும்.

‘பெரியப்பா நானும் அவர்களைத் தரிசிக்கக்கூடுமா? இதற்குத்தான் ஆணாய்ப் பிறக்க வேண்டும் என்பது’ என்றாள் வந்தனா.

இல்லை வந்தனா. அதற்கு ஆணாகப் பிறக்க வேண்டியது இல்லையம்மா. ஸ்ரீ அன்னை பெண்களைப்பற்றி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? ‘ஆண்களைவிட இளம் பெண்கள் திறமைசாலிகள். ஆன்மீக வளர்ச்சியில் பெண்களுக்கு ஒரு சாதகமான அம்சம் இருக்கிறது. ஏனெனில் அவர்களுடைய இதயமையம் அதிகமாகத் திறந்திருக்கிறது’ என்கிறார். உன் ஆர்வம் தீவிரமானால் அவர்களே உனக்குத் தரிசனத்திற்கு வழிவகுப்பார்கள் என்றார்.

அவ்வளவுதான் வந்த வேலை முடிந்தது என்பதுபோல் அன்றிரவே சொல்லாமல் கொள்ளாமல் (எதையும் எடுத்துக் கொள்ளாமல்) காணாமற் போனார்.

அவர் கொடுத்த அருட்பிரசாதமும், கூறிய கருத்துகளும் ஆழப்பதிந்தன. வந்தனாவிற்கு எல்லாம் உள்ளே நிகழ்வன. அவளுக்கு வெளியே (புறத்தில்) எந்த மாறுதலும் இல்லை. ஸ்ரீ அரவிந்தரும், ஸ்ரீ அன்னையும் வீற்றிருப்பது போலவும், அவர்கள்முன் சென்று இவள் வணங்குவது போலவும், சதா கற்பனை செய்ய ஆரம்பித்தாள். மகிழ்ச்சியாக இருந்தது. பெண்கள் மூன்று அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டால் ஆண்களுக்கு நிகராகலாம் என்று ஸ்ரீ அன்னை கூறியிருக்கிறாராமே என்று எண்ணிப் பார்த்தாள். என் ஆர்வம் தீவிரம் அடைந்தால் நான் அவர்களைத் தரிசிக்க அவர்களே வழி வகுப்பார்கள் என்று பெரியப்பா சொன்னாரே. எனக்கு நாளுக்குநாள் அவர்களைத் தரிசிக்க ஆவலாக இருக்கிறதே. பெரியப்பா ஏன் என்னிடம் சொல்லாமல் போனார். சொல்லியிருந்தால் நானும் அவருடனேயே சென்றிருப்பேனல்லவா என்று தனக்குத்தானே பேசிக் கொண்டாள்.

‘வந்தனா, தனியே உட்கார்ந்து அங்கே என்ன பேசிக் கொள்கிறாய்?’ என்றாள் மீனாட்சிப் பாட்டி.

‘ஒன்றுமில்லை பாட்டி, பெரியப்பா வந்தாரே திடீரென்று சொல்லாமலே போய்விட்டாரே என்று நினைத்தேன்’ என்றாள் வந்தனா.

‘ஆமாம். இது என்ன புதுசா? இப்படித்தான் திடீர் திடீரென வருகிறான், போகிறான். அவனை யார் கேட்பது’ என்றாள். அத்துடன் நில்லாமல் ‘நல்ல வேளை நீ பெண்ணாய்ப் பிறந்தாய் இல்லையென்றால் நீயும் அவனுடன் போனாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை’ என்று கூறிக் கொண்டாள்.

ஓ, பாட்டி உங்களுக்கு இப்படி ஒரு நினைப்பா. ஆண்களுக்கு நிகராகும் வழியை ஸ்ரீ அன்னை பெரியப்பா மூலம் எனக்குச் சொல்லியனுப்பியிருக்கிறார் என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டாள் வந்தனா.

உறவினர் வீட்டுத் திருமணம் ஒன்று புதுவையில் நடப்பதாக இவள் பெற்றோர்க்கு அழைப்பு வந்தது. அங்கு போவதுபற்றி இவள் பெற்றோரும், பாட்டியும் பேசிக் கொண்டார்கள். புதுவை என்ற சொல் கேட்டாலே இவளுக்கு ஆர்வம் எழுகிறது. பெரும்பாலும் இவளைப் பாட்டியுடன் வீட்டில் விட்டுச் செல்வதுதான் வழக்கம். இம்முறை இவள் தானும் வருவதாகச் சொன்னாள். பாட்டியும் பரிந்துரை செய்தார். கேட்க வேண்டுமா மகிழ்ச்சியை, இதற்குமுன் இவள் இவ்வளவு ஆர்வமாய் எங்கும் கிளம்பியதில்லை.

புதுவை மண்ணில் காலடி வைத்ததுமே தன் வாழ்வின் லட்சியத்திற்கு அடிக்கல் நாட்டிவிட்டதாகத் தோன்றியது. திருமண வீட்டில் இவளுக்கு உள்ளுர்ப் பெண்ணின் சிநேகிதம் கிடைத்தது. தன்னுள்ளம் கொண்ட ஆவலை அதாவது ஸ்ரீ அன்னை ஸ்ரீ அரவிந்தரைத் தரிசிக்கும் ஆர்வத்தைச் சிறிதும் வெளியிடாமல் பொக்கிஷமாய்ப் பாதுகாத்தாள். உள்ளூர் சுற்றிப் பார்க்க இவளை இவள் சிநேகிதி பெற்றோர் அனுமதியுடன் அழைத்துச் சென்றாள்.

மாலை நேரம் அவர்கள் ஒரு மைதானத்தின் வழியே சென்ற போது ஒரு கார் வந்து மைதானத்திற்குள் செல்லும் வாயிலில் நின்றது. வந்தனாவின் மனம் ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தரைக் காண்பதில் உள்ளூர எழும் ஆவலால் போவார் வருவோரி- லெல்லாம் அவர்களைத் தேடவாரம்பித்தாள். பிறகு தெய்வீகர்களான அவர்களைத் தெருவிலெல்லாம் தேடும் தன் அறியாமைக்கு வெட்கப்பட்டாள். உன் ஆர்வம் தீவிரமானால் அவர்களே தரிசனத்திற்கு வழிவகுப்பர் என்று பெரியப்பா கூறியதையும் நினைவுபடுத்திக் கொண்டாள்.

மைதான வாயிலில் நின்ற காரிலிருந்து, மேலை நாகரீகத்தில் உடையணிந்த ஒரு பெண்மணி டென்னிஸ் ராக்கெட்டுடன் இறங்கினார். மலைத்துப்போய் அவரை வேடிக்கைப் பார்த்த வண்ணம் நின்றாள் வந்தனா. ஆனால் மின்னலைவிட விரைவாக உள்ளே சென்ற அவர் போகும் போக்கில் ஒரு புன்னகையால் அவளை வசீகரித்துச் சென்றார்.

‘என்ன வந்தனா இப்படி மலைத்துப் போய் நிற்கிறாய்?’ என்றாள் உடன் வந்த தோழி.

‘இப்பொழுது ரம்யமாய் ஒருவர் மைதானத்திற்குள் சென்றாரே அவரைப் பார்த்துத்தான் மலைத்துப்போய் நிற்கிறேன்’ என்றாள் வந்தனா.

‘இதில் மலைப்பதற்கு என்ன இருக்கிறது? இது புதுவை மாநிலம். பிரெஞ்சுக்காரர்கள் வாழும் ஊர். அவர்கள் இப்படி நாகரிக உடையணிந்து விளையாடச் செல்வது சகஜம்’ என்றாள்.

‘நான் அதைக் கண்டு மலைக்கவில்லை. அவர் வசீகரமான கடைக்கண் பார்வையைக் கண்டு மலைத்து விட்டேன்’ என்றாள் வந்தனா.

‘இதில் வேடிக்கை என்னவென்றால் இவர்தாம் அரவிந்தாசிரமத்து ஸ்ரீ அன்னை. இவரைப்போய் பராசக்தி என்பார்கள் அங்குள்ளவர்கள்’ என்று தன் பேதமையை மேதைமையாய் வெளியிட்டாள் தோழி.

ஓ! அதுதான் தன்னை அப்படிக் கவர்ந்திழுத்ததா என்று இன்னும் சற்றுத் தெளிவாகப் பார்க்கவில்லையே என்ற ஏக்கம் எழுந்தது வந்தனாவிற்கு. இதை ஏன் நீ முன்பே சொல்லவில்லை? என்றாள் வந்தனா.

ஏன் சொல்லியிருந்தால் அவர் காலில் விழுந்து வணங்கியிருப்பாயோ? என்று கேலி செய்தாள் தோழி.

மனிதர்கள் மூடமாய் இருப்பது என்பது இதுதானோ? இந்தவூரிலேயே இருக்கிறாள். கண் மூடியாய் பேசுகிறாளே என்று தோன்றியது. அத்துடன் தன் ஆன்மா விழிப்பாக இருப்பதும் புரிந்தது.

‘தெய்வத்தை நிந்திப்பது தவறு மாலா’ என்றாள் வந்தனா.

‘இப்படித்தான் தெய்வம் கால்சட்டை அணிந்து டென்னிஸ் விளையாடுமா?’ என்றாள் தோழி.

‘தெய்வம் எல்லாம் வல்லது என்பது உண்மையானால் இதுவும் உண்மைதான்’ என்றாள் வந்தனா.

‘சரி, அப்படியென்றால் இன்று உனக்குத் தெய்வதரிசனம் கிடைத்தது என்று வைத்துக் கொள்வோம்’ என்றாள் தோழி வேடிக்கையாக.

சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நான் தேடியதை இன்று கண்டுகொண்டேன் என்பது இவளுக்கு எப்படித் தெரியும் என்று நினைத்துக் கொண்டாள் வந்தனா.

சரி, சரி வா. என்று மேலும் நடையைத் தொடர்ந்தனர். அடுத்தது மணக்குள விநாயகர் கோயிலுக்கு அழைத்துப் போனாள் தோழி.

வந்தனாவுக்கு என்னாயிற்று? சுயநினைவு போய்விட்டதா? விநாயகரை வணங்கவும் தோன்றவில்லையா?

வா வந்தனா. சுவாமியைப் பார் என்ன வேண்டுமோ வேண்டிக்கொள். சக்தி வாய்ந்த பிள்ளையார் என்றாள் தோழி. ஸ்ரீ அன்னையைக் காணும்முன் இங்கு வந்திருந்தால் அவரைக் காண அருள் செய்யுங்கள் என்று வேண்டியிருப்பாள். இப்போது அவளுக்கு எவரிடமும் வேண்டுதல் இல்லை.

வெளியே வந்து இடப்புறம் உள்ள தெருவில் திரும்பினார்கள். அங்கே அந்தப் பெரியக் கட்டிடம் தெரிந்தது. அதுதான் அரவிந்தாசிரமம். சற்றுமுன் மைதானத்தில் பார்த்த கார் வந்து நின்றது. அதே கார். அங்குத் தன்னை பிரமிப்பில் ஆழ்த்திச் சென்ற அந்த ஸ்ரீ அன்னை அதில் இருப்பாரோ. கோவிலுக்கு வெளியே யாரோ தெரிந்தவருடன் தோழி பேசிக்கொண்டிருந்தாள்.

வந்தனா ஓடிச்சென்று அந்தக் காருக்குச் சற்று தூரத்தில் அதிலிருந்து இறங்குபவரைப் பார்க்கக்கூடிய இடத்தில் நின்று விட்டாள். புன்னகையுடன் இறங்கி உள்ளே சென்று விட்டார். இம்முறை அவள் அவரை நன்றாகவே பார்த்தாள். அவர் பார்வையின் ஆழம் அவள் இதயத்தை எட்டியிருக்க வேண்டும். இதயம் நிறைந்தது.

‘என்னாயிற்று வந்தனா? என்னைப் பாதியில் விட்டுவிட்டு வந்துவிட்டாய்’ என்றாள் தோழி.

‘நமக்குரியது கிடைத்துவிட்டால் எல்லாவற்றையும் பாதியில் விட்டுவிடுவோம்’ என்றாள் வந்தனா.

‘என்ன சொல்கிறாய் வந்தனா? நீ சொல்வது ஒன்றும் எனக்கு விளங்கவில்லை’ என்றாள் தோழி.

‘அது சொல்லி விளக்குவதல்ல சொல்லாமல் விளங்கிக் கொள்வது’ என்றாள் வந்தனா.

‘எனக்கொன்றும் விளங்க வேண்டாம். நேரமாகி விட்டது வா போகலாம்’ என்றாள்.

அன்றிரவே புதுவையை விட்டுப் புறப்பட்டனர்.

உள்ளூரில் இருந்தால் எப்படியும் ஒரு முறையேனும் ஸ்ரீ அன்னையைக் காண வாய்ப்பிருக்கும். இனி அது கிடையாது என்பது அவளுக்கு ஏக்கமாக இருந்தது. ‘இந்தவூர் எனக்கு மிகவும் பிடித்துவிட்டதம்மா’ என்று அம்மாவிடம் கூறினாள்.

அதற்கென்ன இந்தவூரிலேயே மாப்பிள்ளை பார்த்தால் ஆயிற்று என்று சிரித்துக்கொண்டே கூறினாள் அம்மா. ஒரு ஆணின்பால், அவன் வலிமையின்பால் ஈடுபாடு கொள்ளும் அடிமைத்தளையல்லவா அது என்று அவள் உள்ளம் எண்ணலாயிற்று. ஆனாலும் எடுத்துச் சொல்லுமளவு துணிவு இல்லை.

அன்னையைத் தரிசித்த பிறகு உடலிலும் உணர்விலும் பரிசுத்த பரவசம் நிறைந்திருக்கிறது. பெரியப்பாவின் தரிசன அனுபவம் நினைவுக்கு வந்தது. தரிசனம் உம்பொருட்டு அன்று என ஸ்ரீ அரவிந்தர் கூறினாராமே. வேறு யார் பொருட்டு அது. ஒரு வேளை அது என் பொருட்டோ. இவ்விதமான சிந்தனைகளில் அடிக்கடி ஆழ்ந்து விடுவாள்.

இவள் பெற்றோர் இவள் திருமணம்பற்றி தீவிர முயற்சி மேற்கொண்டவண்ணமிருந்தனர். ஒரு நாள் திடீரென பெண் பார்க்கும் படலமும் ஏற்பாடாயிற்று. சலனமின்றி எப்படி அவளால் இருக்க முடிந்தது? விந்தைதான்.

பொம்மைபோல பெரியவர்கள் இயக்கியபடியெல்லாம் இயங்கினாள். சுந்தரர் திருமணத்தின் போது இறைவன் அடிமையோலை காட்டித் தடுத்தாட்கொண்டதுபோல் தன்னையும் ஸ்ரீ அன்னை ஆட்கொள்வாரோ என்று கூட ஒரு எண்ணம் உதித்தது. மாப்பிள்ளையாக வரப்போகும் வரனை அவள் நமஸ்கரிக்கும் கட்டம் வந்தது. அன்று அவள் புதுவை மைதானத்தில் கையில் டென்னிஸ் ராக்கெட்டுடன் தரிசித்த அந்தத் திருவுருவை உள்ளத்தே எண்ணிக் கொண்டு அவருக்கே தன் நமஸ்காரத்தைச் சமர்ப்பணம் செய்தாள். தன் முன்னின்ற ஓராடவர் அவள் கண்ணிலும், நெஞ்சிலும் இடம் பெறவில்லை.

பிள்ளை வீட்டாருக்கோ வந்தனாவை மிகவும் பிடித்து விட்டது. வந்தனாவின் பெற்றோர்க்கும் பிள்ளையைப் பிடித்து விட்டது. அக்காலங்களில் பெண்ணின் விருப்பம் என்பது பெரிதாகக் கருதப்படுவதில்லை. பெற்றோர் பெண்ணுக்கு நல்லதையே செய்வர் என்ற அடிப்படையில் திருமணங்கள் நிச்சயிக்கப்பட்டன.

பெற்றோர் ஓயாது திருமண ஏற்பாடுகளில் ஆழ்ந்திருக்க, வந்தனாவோ, தான்தான் மணப்பெண் என்ற எண்ணமேயில்லாதிருந்தாள்.

மணநாளும் வந்தது. பிள்ளை வீட்டினரும், உற்றார் உறவினரும், ஊராரும் கூடி சடங்குகளை நிகழ்த்திய வண்ணம் இருந்தனர். வந்தனாவிற்குப் பெரியப்பாவின் நினைவு வந்தது. மூன்று அடிமைத் தளைகளிலிருந்து விடுபட்டால் பெண்கள் ஆண்களுக்கு நிகராகலாம் என்றும், பெண்கள் தாங்களே தங்களை விடுவித்துக் கொண்டாலன்றி வேறு எந்தச் சட்டமும் அவர்களை விடுவிக்க இயலாது என்றும் ஸ்ரீ அன்னை கூறியிருக்கிறாராமே.

திடீரென மணவீட்டின் மகிழ்ச்சியை விழுங்கிக் கொண்டு பிணவீட்டின் ஓலம் எழுந்தது. இவள் பெரியப்பா இறைவனடி அடைந்த செய்தி யார் வாயிலாகவோ வந்திருக்கிறது. அவர் உயிருடன் இருந்த போதெல்லாம் அவரைக் கரித்துக் கொட்டிய மீனாட்சி அவர் இல்லாமல் போனவுடன் கசிந்தழுதாள். பெயர்த்தியின் திருமண மகிழ்வைவிட, அவள் மன ஆழத்தில் இருந்த மகன்மீது கொண்ட பற்று இப்போது வெளிப்பட்டது.

இவள் தந்தைக்கு மகளின் திருமணம் தடைபடுவது வருத்தம் ஒருபுறம். உடன் பிறந்தவரின் மரணம் ஏற்படுத்தும் வேதனை ஒருபுறம். நிலை தடுமாறினார். பெரியப்பாவின் பையிலிருந்து கிடைத்த நாட்குறிப்புப் புத்தகத்திலிருந்து இவர்கள் வீட்டை அடையாளம் கண்டு அவர் உடல் இங்கு கொண்டு வரப்பட்டது.

இதுவரை மணவறையில் அமர்ந்து வெளியில் நடப்பது இன்னதென்று அறியாதிருந்த வந்தனாவுக்கு இப்பொழுது விஷயம் தெரிந்துவிட்டது.

‘ஆசிகூற எப்படியும் வருவீர்கள் என்று எண்ணியிருந்தேனே பெரியப்பா. ஈஸ்வர சம்பத்தை இடையறாது கொண்டு தருவீர்களே பெரியப்பா. இனி யார் எனக்கு அதைக் கொடுப்பார்?’ என்று தேம்பியழுதாள் குழந்தை.

இதற்கு மற்றொருபுறம் மணமகன் கோலத்தில் அமர்ந்திருந்த மாப்பிள்ளை பையன் வலிப்பு வந்து விழுந்து துடித்தான். மாப்பிளை வீட்டார் முகம் விழுந்தது.

பேரிடியின் பின் பேரதிர்ஷ்டம் என்பாரே பகவான், அது வந்தனாவிற்குக் கிடைக்க அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டது என்பதையறிய சூட்சுமம் உள்ளவர் ஒருவருமிலர்.

திருமணம் நின்றுவிட்டதே என்று வருந்திய இவள் தந்தை வலிப்பு நோயுள்ள வரனை ஏமாற்றி இவளுடன் மணமுடிக்க வந்த வஞ்சனையிலிருந்து விடுபட்டோம் என்ற நிம்மதியும் உணர்ந்தார். இந்நிலையில் ஒன்றும் கூறமுடியாதிருந்தார்.

கருமகாரியங்கள் முடிந்ததும் யாவரும் பெரியப்பாவை மறந்து இயல்பான வாழ்விற்குத் திரும்பிவிட்டனர். வந்தனா மட்டும் அவரைப்பற்றிய நினைவுகளிலிருந்து மீளவில்லை. அவர் பையிலிருந்து எடுக்கப்பட்ட டைரி, பேனா, ‘தி மதர்’ என்ற புத்தகம் மூன்றும் வந்தனா பத்திரமாக எடுத்து வைத்துக் கொண்டாள். ‘தி மதர்’ என்ற புத்தகத்தின் உள் அட்டையில் வந்தனாவுக்குப் பெரியப்பாவின் அன்பளிப்பு என்று அழகாக எழுதப்பட்டிருந்தது. தன்னை அன்னையிடம் ஒப்படைத்து விட்டாரோ என்று எண்ணத் தோன்றியது.

அந்தப் புத்தகத்தைத் தன் உற்ற தோழியாய்க் கருதி அதனுடன் ஒன்றிப் போனாள்.

திருமணம் நின்று போனதால் ராசியில்லாத பெண் என்று மறுபரிசீலனையின்றி முத்திரை இடப்பட்டாள். இது அந்தக் காலச்சட்டம். அந்த இளம் பெண்ணின் வாழ்க்கையின்பம் பறிபோனதாகப் பெற்றோர் நைந்தனர். ஆனால் மிகப்பெரும் தளையிலிருந்து தன்னை மீட்ட பெரியப்பா என்றுமே தன் உதவியாளர்தாம் என்றெண்ணினாள் வந்தனா.

இவர் தந்தை அவரைத் திட்டினார். ‘ஏனப்பா எப்பொழுதும் பெரியப்பாவை திட்டுகீறீர்கள்? அவர் நல்லவர்’ என்றாள் வந்தனா.

‘என்ன பெரிய நல்லவர்? செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்பார்கள் செத்தும் கெடுத்தான் பெரியப்பா என்ற பேரைப் பெற்றான்’ என்று சலித்துக் கொண்டார்.

‘அப்படிச் சொல்லாதே. நாம்தான் வலிப்பு வந்த பிள்ளையிடம் நம் குழந்தையைப் பலியிடாமல் தப்பித்தோம்’ என்றாள் பாட்டி. வந்தனா எவ்வித இழப்புமின்றி ஸ்ரீ அன்னையை அடிக்கடி தழுவிக் கொள்கிறாள். சின்னஞ்சிறு குழந்தையாய் மாறி அன்னையின் மடியில் தவழ்கிறாள்.

ஆசிரமத்தில் அன்னை தம் அன்புக் குழந்தைகள் நடுவே வீற்றிருக்கும் போது உடல் சிலிர்க்கிறார். தாமே புன்னகைத்துக் கொள்கிறார். என்ன அன்னையே? புன்னகைக்கிறீர்கள் என்று அவர்கள் கேட்கும் கேள்விக்கு அன்னை பொறுமையுடன் பதிலளிக்கிறார். என் பக்தை ஒருத்தி குழந்தை உள்ளத்துடன் அடிக்கடி என்னைத் தழுவிக் கொள்கிறாள், அதை ரசிக்கிறேன் என்கிறார்.

இவள் அப்பாவைப் பார்த்து ஆறுதல் கூற நண்பர் ஒருவர் வந்தார்.

என்னப்பா சோர்வாயிருக்கிறாய்? சோர்வுக்கு இடமளிக்கக் கூடாது. அது நம்மை வீழ்த்த இடம் தரக் கூடாது. உனக்கு மறுப்பில்லை என்றால் நான் ஒன்று சொல்வேன் என்றார்.

‘சரி சொல் மனம் நிம்மதியிழந்து விட்டது. ஏதேனும் மாறுதல் வேண்டும்’ என்றார் அப்பா.

‘பாண்டிச்சேரியில் பகவான் ஸ்ரீ அரவிந்தர் உலக நன்மைக்குத்தான், மனிதகுல உயர்வுக்குத்தான் யோகம் செய்கிறார். பாராசக்தியே அவருக்கு உறுதுணையாய் அங்கு இருக்கிறார். அவர்களை ஒருமுறை குழந்தையுடன் சென்று தரிசித்து வந்தால் எல்லாம் சரியாகிவிடும்’ என்றார்.

ஆகா! வந்தனாவின் செவியில் இது இன்பத்தேனாய் வந்து பாய்கிறது. உன் ஆர்வம் தீவிரமானால் அவர்களே தரிசனம் தர ஏற்பாடு செய்வார்கள் என்ற பெரியப்பாவின் பேச்சும் காதில் ஒலித்தவண்ணமிருந்தது.

‘ஆகட்டுமப்பா, ஒரு முறை போய் வருகிறேன்’ என்றார். இது சற்றும் எதிர்பார்க்காதது. அப்பாவிற்கு ஆசிரமம் என்பதெல்லாம் பிடிக்காது. தன் தாயாரிடமும், மனைவியிடமும் கலந்து பேசி தாமும் வந்தனாவும் ஒரு முறை அரவிந்தாசிரமம் சென்று பகவானைத் தரிசித்து வருவதாக முடிவு செய்தார்.

ஆக வந்தனாவை வீட்டாரே விரும்பி அனுப்பி வைக்கும் சூழல் உருவாயிற்று. இனி அவள் பங்கு என்ன என்பதை நினைவுப்படுத்திக் கொண்டாள். ‘கல்யாணம் என்பது கட்டாயமில்லை. அது ஆண், பெண் என்பதாலன்று. அது அவரவர் தேவையையும், மனவுறுதியையும் பொறுத்தது என்று பெரியப்பா சொன்னாரே. இப்போது எனக்கு மனவுறுதிதான் தேவை’ என்று கூறிக் கொண்டாள்.

வந்தனாவும் அவள் அப்பாவும் சென்றனர். நண்பர் உதவியால் தரிசனத்திற்கு அனுமதியும் கிடைத்தது. வரிசையில் இருவரும் நின்றனர். அவள் அப்பா அவளுக்கு நல்ல வாழ்வினைத் தருமாறு உள்ளுரப் பிரார்த்தித்த வண்ணம் நின்றார். இவளோ, ‘அன்னையே என்னை எடுத்துக் கொண்டுவிடுங்கள். திருப்பி அனுப்பி விடாதீர்’ என்று வேண்டியவண்ணமிருந்தாள். வரிசை நகர்ந்தது. இவள் தந்தையின் முறை வந்தது ஆசி பெற்றார். பகவான் விழிகளின் ஆழ்ந்த பார்வையும், ஸ்ரீ அன்னையின் குழந்தைச் சிரிப்பும் அவருக்கு வந்த நோக்கமே மறந்துவிட்டது. தரிசனம் பெற்று நகர்ந்து விட்டார். வந்தனாவின் முறை வந்தது. ஸ்ரீ அன்னையை இவ்வளவு நெருக்கமாகத் தரிசிப்போம் என்று எண்ண முடியாத சூழலில் இருந்தாள். இப்பொழுதோ அந்தத் திருவடிகள் அவளுக்குக் கிடைத்து விட்டது. தேம்பியழுதாள். ஸ்ரீ அன்னையும், பகவானும் மெல்ல அவள் தலையில் கைவைத்து ஆசிர்வதிக்க உள்ளே பேரலை ஒன்றெழுந்து ஆர்ப்பரித்து அடங்கி அமைதியானது. மெல்ல எழுந்தவள் ஸ்ரீ அன்னையை என்னைக் கைவிட வேண்டாம் என்பதுபோல் ஏக்கத்துடன் பார்த்தாள்.

அன்னை உடனேயே, ‘இவள் இங்கேயே இருக்கட்டும்’ என்று அழுத்தம் திருத்தமாகக் கூறிவிட்டார். ஆனந்தம் வந்து அவளை அணைத்துக்கொண்டது. அவருக்குப் பக்கத்தில் அப்படியே நின்றுவிட்டாள். தரிசனம் முடிந்து யாவரும் வெளியேறிவிட்டனர். மிகத்தொலைவில் நின்று கொண்டு இவளுக்காக இவள் அப்பா காத்துக் கொண்டிருந்தார்.

ஸ்ரீ அன்னை, பகவானிடம் இவளை இங்கே அனுமதிக்க வேண்டும் என்றார். அவள் மஞ்சள் ரோஜா வைத்திருக்கிறாளா என்றார் கனிவாக. அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்தனர்.

பெரியப்பா தன்னிடம் கொடுத்த உலர்ந்த மஞ்சள் ரோஜா சட்டென்று நினைவுக்கு வர மெய் சிலிர்த்தாள்.

‘ஒரு சாதகரை அழைத்து இவள் இங்கேயே தங்கிவிட ஏற்பாடு செய்து கொடு’ என்று கூறினார். பகவானும், அன்னையும் உள்ளே சென்றபின்னும் இது கனவா, நனவா என்று திகைத்து நின்றாள் .

ஐயோ! இதென்ன? ஏதோ தரிசனம் என்று வந்தால் குழந்தையைப் பிடித்து வைத்துக் கொண்டார்களே என்று ஓலமிட்டது வந்தனாவின் அப்பா உள்ளம். அந்தச் சாதகரை நோக்கி ‘என் மகள் எங்கே’ என்றார் வந்தனாவின் அப்பா.

சாதகர் இவரிடம் வந்து, ‘உங்கள் குழந்தையை அன்னை இங்கேயே வைத்துக் கொள்ளச் சம்மதித்து விட்டார்’ என்று மகிழ்வுடன் கூறினார்.

ஆனால் இவள் தந்தையோ அதை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் சம்மதித்தால் போதுமா? என் குழந்தையை இங்கு விட்டுச் செல்ல நான் சம்மதிக்க வேண்டாமா? என்றார் கோபமாக.

அன்னை சொல்வது சரிதான். இந்தக் குழந்தைகளின் உள்ளங்களில் ஓர் ஆன்மீக நாட்டத்தை ஏற்படுத்துவது சிரமம் என்று நினைத்தேன். ஆனால் அது அவ்வளவு சிரமம் இல்லையென்பது தெரிகிறது. இவர்களுடைய பெற்றோர்களைச் சமாளிப்பதுதான் பெரிய பிரச்சனையாக இருக்கிறது என்று அன்னை சொல்வாராம். அன்னை வழங்கும் அர்த்தமுள்ள வாழ்க்கையை ஏற்றுக்கொண்டவர்கள் அன்னையைப் பொறுத்தவரை சரியாகத்தான் நடந்து கொள்கிறார்கள்.

அவள், தான் வீட்டிற்குத் திரும்பிவரப் பிரியப்படவில்லை எனச் சொல்லியனுப்பிவிட்டாள்.

அவர் சாதாரண மானுடத் தந்தை. பாசப் பிணைப்பும், லோகாயதமான வாழ்வில் நம்பிக்கையும் கொண்ட அவரால் அதை ஏற்க முடியவில்லை. பெற்றவர் பேச்சை மறுக்கத் தெரியாத வந்தனாவா இப்படிச் சொல்கிறாள். அவரால் நம்ப முடியவில்லை. அவளைத் தான் பார்க்க வேண்டும் என்றார். அவள் வந்தாள்.

வந்தனா, உனக்கு என்னம்மா ஆயிற்று? என்று பரிவுடன் கேட்டார்.

‘அப்பா, இது மனப்பூர்வமாய் நான் தேர்வு செய்த வாழ்வுதானப்பா. அன்னையே என் பூரண பாதுகாவலர். என்னை யாரும் எதுவும் செய்துவிடவில்லையப்பா. என் திருமணம் நின்று போனதை நீங்கள் சோதனையாகக் காண்கிறீர்கள். நான் அது என் வாழ்வின் நல்ல திருப்பு முனையாக எண்ணுகிறேன். சொல்லிப் புரியவைக்கக் கூடியதில்லையிது. உங்கள் மகளைச் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து விட்டதாக நிறைவுடன் செல்லுங்கள்’ என்று இதமாகக் கூறிவிட்டு உள்ளே சென்று மறைந்துவிட்டாள்.

வேறு வழியின்றி அவர் திரும்பினார். இராணுவத்தில் சேரும் வீரர்களைக் கூட சில பெற்றோர் வழியனுப்பத் துணிவதில்லை. இராணுவத்தைப் போலவே வீரசாதனைதான் யோகமும். எத்தனைபேர் வாழ்வின் சிறு ஆசைகளுக்கு இடம் கொடாமல் பேரின்பத்தை நாடக்கூடும்? வாழ்வை வெறுத்தோடுவதில்லை பூரணயோகம். மகிழ்வுடன் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் புனிதச் செயல் இது. இதை ஏற்றுக்கொள்ள ஆத்ம ஞானம் வேண்டும். ஆசாபாசம் இதை அனுமதியாது.

ஆசிரமத்திலுள்ளோர் அவளை வியப்புடன் பார்த்தனர். ஆசார குடும்பத்திலிருந்து வந்த பெண். இளம் பெண் வேறு. இவள் எப்படி இங்கிருக்கப் போகிறாள் என்று பேசிக் கொண்டனர். சாரத்தை உள்ளம் புரிந்து கொண்டால் புறத்தில் வாழும் வாழ்விற்கு என்ன பொருள் இருக்கப் போகிறது!

இவளுடைய மெல்லிய சாயல் இவளை உறுதியற்றவள் என மற்றவர்களை நினைக்க வைத்தது. இவள் நீடிக்க மாட்டாள் என அனைவரும் பரிகசிப்பதும் உண்டு. இளம் வயது. தனியே, வெளியே வந்தறியாதவள். ஆயினும் இவள் அன்னைமீது கொண்ட அன்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்தது.

ஒரு மூத்த சாதகர், அன்னை தம்முடைய ஐரோப்பிய சீடரான பெண்ணைப்பற்றி, அவள் கார் டிரைவராகப் பணியாற்றுவது பற்றி உயர்வாகப் பேசியதைக் கூறிக் கொண்டிருந்ததை இவள் கேட்க நேர்ந்தது. அதுமட்டுமின்றி ஆண்கள் மட்டுமே செய்யும் பணிகளைப் பெண்கள் செய்வதுபற்றி ஸ்ரீ அன்னை பெருமைப்படுவதுபற்றியும் கேள்விப்பட்டாள். ஒரு பெண் தன் குழந்தையைப் பிரிந்து, சென்னை செல்ல அனுமதி கேட்டபோது ‘குழந்தையுடன் இரு’ என்று கூறிய அன்னை, அதே பெண் தான் விமானம் ஓட்டப் பயிற்சி பெற விரும்பிய போது அன்னை உற்சாகப்படுத்தியதும் அறிந்தாள்.

தானும் அன்னை விரும்பும் வண்ணம் ஏதேனும் செய்ய விரும்பினாள் வந்தனா. அன்னையைத் தரிசிக்கப் போகும் போதெல்லாம் அதை வெளியிட நினைப்பாள். ஆனால் ஒன்றும் பேசாது திரும்பிவிடுவாள்.

அப்போதுதான் பேண்ட் அணியும் கிறித்துவ அன்பர் ஒருவர் பஞ்சகச்சம் அணிந்து அன்னையைத் தரிசிக்க வர, அந்த ஆடை பெண்கள் அணியும் மடிசார் புடவை போல் காட்சியளிக்க ‘யார் இந்தப் பெண்மணி’ என்று வேடிக்கையாகக் கேட்டார் ஸ்ரீ அன்னை. அவர் கேட்ட பாவனையும், அவர் அழகிய சிரிப்பும் வந்தனாவைப் பெரிதும் கவர்ந்தது.

‘தானும் ஏன் ஒருநாள் பேண்ட் அணிந்து அன்னை முன் செல்லக்கூடாது’ என்று தோன்றியது.

அன்றைய இரவு தரிசனத்தின் போது அவள்தான் கடைசியாகச் சென்றவள். அன்று இவள் உள்ளே ஆசிர்வாதம் பெறச் சென்றதும் அன்னை குறும்பாகச் சிரித்தார். இவள் மலர்த்தட்டைச் சமர்ப்பித்து வணங்கி எழுந்தாள். டேபிளிலிருந்து ஒரு அட்டைப்பெட்டி அழகாக ஒட்டி டேப் சுற்றப் பட்டிருந்ததை எடுத்து இவளிடம் கொடுத்தார். இரண்டு கைகளாலும் பெற்றுக் கொண்டாள். ‘இதைப் பத்திரமாக வைத்துக் கொள். எப்போது பிரிக்கலாம் என்று சொல்லும் போது பிரித்துப் பார்க்கலாம்’ என்றார். நாளை முதல் நீ கார் டிரைவிங் கற்றுக்கொள்ளப் போகிறாய். காலையில் தயாராய் இரு என்றார்.

அன்னையிடம் ஒன்றை பெற்றுக் கொண்ட மகிழ்ச்சி ஒருபுறம், டிரைவிங் கற்றுக் கொள்ளச் சொல்லி அவரே ஏற்பாடு செய்த மகிழ்ச்சி ஒரு புறம்.

சில நாட்கள் கடந்தன. காலை பதினோரு மணியளவில் ஆசிரம வாயிலில் ஒரு அழகிய கார் வந்து நின்றது. உயரமான மெல்லிய தோற்றம் கொண்ட ஓரன்பர் டிரைவருக்குரிய காக்கி பேண்ட் ஷர்ட்டுடன் ‘கேப்’ (cap) அணிந்து கம்பீரமாய் அதிலிருந்து இறங்கினார்.

அன்னை வெளியே செல்லும்போது தரிசிக்க அனுமதிக்கப் பெற்ற அன்பர் குழாம் அணிவகுத்து நிற்க மகாராணிபோல் கம்பீரமாய் வந்த அன்னை, காரின் அருகே செல்ல, டிரைவர் உடையில் நின்ற அன்பர் தலை கேப்பை கழற்றியவண்ணம் மரியாதையுடன் காரின் கதவைத் திறந்து பணிவாய் நிற்க அன்னை காரில் ஏறி அமர்ந்தார். கதவை மென்மையாகச் சார்த்திய வண்ணம் குனிந்து வணக்கம் செலுத்தியபின், முன்புற டிரைவர் ‘சீட்டில்’ அமர்ந்து காரை மெல்லச் செலுத்தத் தொடங்கினார்.

யாரிந்த புதிய டிரைவர் என்று சிலர் எண்ணினர். அன்னையின் வெளிப்புற வேலைகள் முடிந்து கார் ஆசிரமம் திரும்பியது. மீண்டும் சாதகர் குழாம் தரிசனத்திற்கு அணிவகுத்து நின்றது. இம்முறை அன்னையின் தரிசனத்துடன் புதிய டிரைவரைக் காணும் ஆவலும் சேர்ந்து கொண்டது.

கார் சீராக வந்து நின்றது. டிரைவர் சீட்டிலிருந்தவர் விரைவாக இறங்கி வந்து அன்னை இறங்குவதற்கு ஏதுவாகக் கார் கதவைத் திறந்துப் பணிவாக நின்றார். காரிலிருந்து இறங்கிய அன்னை காரை ஓட்டி வந்த அன்பரின் முதுகில் அன்புடன் மெல்லத் தட்டித் தம் பாராட்டை விழிகளால் தெரிவித்து விரைந்து உள்ளே சென்றார்.

அன்பர் காரை ஷெட்டில் வைத்துப் பூட்டிவிட்டு கம்பீரமாய் திரும்பி வந்தார்.

அன்பர்கள் சூழ்ந்து கொண்டனர். ‘வந்தனா நீயா? இந்தவுடையில் நீ எவ்வளவு கம்பீரமாக இருக்கிறாய் தெரியுமா? ஆரம்பத்தில் உன் மெல்லிய தன்மை கண்டு நீ இங்கு நிலைத்திருக்க மாட்டாய் எனக் கேலி செய்தோம். நீ எப்படி இவ்வாறு மாறினாய்?’ என்று வியப்புடன் கேட்டனர்.

உண்மையில் நான் உங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். நான் உறுதியுடன் அன்னையிடம் நிலைக்க மாட்டேன் என நீங்கள் கேலி செய்ததால், நான் அன்னையுடன் உறுதியாய் இருக்க வேண்டும் எனப் பிரார்த்தித்தேன். ஒரு முறை பேண்ட் அணியும் அன்பர் ஒருவர் பஞ்சகச்சம் அணிந்து அன்னையிடம் ஆசி பெற வந்தார். அப்போது அன்னை புடவை போன்ற அந்த ஆடையின் தோற்றத்தைக் கண்டு, யாரிந்தப் பெண்மணி, என வேடிக்கை செய்ததைப் பார்த்தேன். நானும் ஒரு முறை பேண்ட் அணிந்து சென்றால் யாரிந்த இளைஞர் என்று கேட்பார் என்று எண்ணி நின்றேன். அந்தக் கற்பனையில் என் வெட்கவுணர்வு வெளிப்பட்டது. அப்போது அன்னையிடம் மானசீகமாய் எனக்குக் கம்பீரமான தோற்றமும், மனவுறுதியும் வேண்டுமென பிரார்த்தித்தேன். அப்போது அன்னை என் தோள்மீது தம் கைகளை வைத்து என் விழிகளை உற்று நோக்கினார். அவர் எனக்குள் உறுதியையும், கம்பீரத்தையும் விதைத்தார் என்பது இப்போது புரிகிறது.

அன்று அவர் என்னிடம் ஒரு அட்டைப்பெட்டியை அளித்து அதைத் தாம் கூறும்போது பிரித்துப் பார்க்கலாம் என்றார். நேற்றுவரை அவர் ஏற்பாட்டின்படி காரோட்டும் பயிற்சிக்குத்- தான் வெளியே சென்றிருந்தேன். இன்று காலைதான் அந்தப் பெட்டியைப் பிரித்துப் பயன்படுத்தலாம் என்றார். அதில் இருந்தது இந்த டிரைவர் அணியும் காக்கி உடைதான் என்று தன் உடையைக் கம்பீரமாய்த் தொட்டுக் காட்டினாள்.

எத்தனை பேருக்கு வாய்க்கும் இந்த வாய்ப்பு? வந்தனா பெரியப்பாவை நன்றியுடன் நினைத்தாள்.

முற்றும்.

********

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
சிந்தனை மனதின் ஆசை.
பிறருக்குச் சொல்லப் பிரியப்படுவது மனத்தின் செயல்.
செயலழியாமல் சிந்தனை மௌனமாகாது.
சிந்தனையற்ற மௌனத்தின் அஸ்திவாரம் உபதேசமழிவது.
கரையும் செயல் அழியும் சொல்.
 

*********book | by Dr. Radut