Skip to Content

08. அன்னை இலக்கியம் - தாமரைத் தடாக முதலை

அன்னை இலக்கியம்

தாமரைத் தடாக முதலை

சமர்ப்பணன்

இந்த ஆண்டின் ஆகச் சிறந்த ஆடிட்டராக நாட்டிலேயே மிகப் பெரிய வங்கி என்னைத் தேர்ந்தெடுத்து, விருதைப் பெற்றுக் கொள்ள டெல்லிக்கு வரச் சொல்லியிருந்தது. மற்றவர்கள் என்ன நினைத்தார்களோ எனக்குத் தெரியாது, இச்செய்தி எனக்கு மிகுந்த அதிர்ச்சியைத் தந்து, விருதுகள் மீது எனக்கிருந்த மரியாதையைக் குறைத்தது.

******

வீட்டிலிருந்து முக்கால் மணி நேரம் பஸ் நெரிசலில் நசுங்கி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குச் சென்று, அங்கிருந்து ஒரு மணி நேரம் மின்ரயிலில் நின்று கொண்டே பிரயாணம் செய்து, பின் அரை மணி நேரம் வயல் வரப்புகளிடையே தடுக்கி விழாமல் நடந்து சென்றால் அடையக்கூடிய கிராமத்திலிருந்த கிளைக்கு எதிர்பாரா தணிக்கை செய்யும் வேலையை வங்கித் தலைமையகம் போன வருடம் எனக்குத் தந்தது.

தினமும் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் பிரயாணம் செய்து, பத்து நாட்கள் தணிக்கை செய்தால் சில ஆயிரங்கள் மட்டுமே கிடைக்கும் வேலையை ஏற்க மனமில்லைதான் என்றாலும் புதிதாகத் தொழிலை ஆரம்பித்திருந்த எனக்கு அதை ஏற்க, மறுக்கவும் மனமில்லை.

நான் வங்கிக் கிளைக்கு சென்ற முதல் நாள் குடும்பப் பொறுப்புகளின் சுமையால் களைத்துப் போயிருந்த வயதான மேலாளர், தம் வயதில் பாதி கூட ஆகியிராத என்னை அன்போடு வரவேற்று அருமையாக உபசரித்தார். அவர் பிறவி எடுத்ததே என்னை உபசரிக்கத்தானோ என்ற பிரமை எனக்கு உண்டாயிற்று. இவரைப் போன்ற நல்லவர்கள்தான் நிறுவனங்களின் உண்மையான பலம்.

திறமையான மேலாளர், சரியான இயங்கு முறைகள், கடுமையான சட்டதிட்டங்கள் இருக்குமிடத்தில் தவறு நடக்காது. நான் செய்யக்கூடியது எதுவுமில்லை என்று தோன்றியது. அதனால் கறாரானவனாகக் காட்டிக்கொண்டு, சில சிறிய கோப்புகளை மட்டும் மேலோட்டமாக பார்த்துவிட்டு, வேலையை சீக்கிரமாக முடித்துவிடலாம் என்று எண்ணமிட்டேன்.

பூரணயோகி ஸ்ரீ அரபிந்தோவின் முன் அமர்ந்து, சாந்தி பொலியும் முகத்தோடு ஒரு சீடர் தினமும் தீவிரமாக தியானம் செய்வதுண்டு. மற்ற சீடர்கள் அவரைப் பற்றி பாராட்டி பேசியபோது, ஸ்ரீ அரபிந்தோ புன்னகையோடு, "அவர் தீவிரமாக தியானம் செய்வதென்னவோ உண்மைதான். ஆனால் அவர் தியானிப்பது ஒரு பெண்ணைப் பற்றி! இறைவனைப் பற்றியல்ல!'' என்று கூறினார்.

வங்கி மேலாளரோ, உயரதிகாரிகளோ என் மனதில் உள்ளதை உள்ளபடி அறியக்கூடிய பூரணயோகிகள் அல்லர் என்றாலும், தொழிலை சமீபத்தில்தான் ஆரம்பித்திருந்ததால் இன்னமும் நல்ல பண்புகளை நான் இழக்கவில்லை. இழக்க வைக்கும் சந்தர்ப்பங்களும் அமையவில்லை. எனவே, முதலில் தோன்றிய எண்ணத்தை மாற்றிக் கொண்டு முடிந்தவரை ஒழுங்காக வேலை செய்யத் தீர்மானித்தேன். முதலில் சிறிய கோப்புகளை படித்துவிட்டு, அதன்பின் பெரிய கோப்புகளை எடுத்துக் கொள்ள முடிவு செய்தேன்.

மேலாளர் மரத்தாலான மேஜையின் மேற்பரப்பில் வைத்திருந்த செவ்வக கண்ணாடித் துண்டிற்குக் கீழே பல தெய்வங்களின் படங்களையும், சாமியார்களின் படங்களையும் செருகி வைத்திருந்தார். அவருடைய குடும்ப புகைப்படம் ஒன்றும் இருந்தது. மேஜை மீது அடுக்கி வைத்திருந்த கோப்பு மலையின் அடிவாரத்தில் இருந்த நடமாடும் சிறுசேமிப்பு திட்டக் கோப்பை சுட்டிக்காட்டி, அதை எடுத்துத் தரச் சொன்னேன். அதுதான் மிகவும் மெலிவாக இருந்தது.

எழுந்து நின்றுவிட்ட மேலாளர் கையெடுத்து கும்பிட்டார். "தம்பி, விஷயம் தெரிந்து வந்திருக்கும் உங்களை விவரமறியாதவர் என்று நினைத்துவிட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள். என் மானம், குடும்ப மரியாதை, வாழ்க்கை எல்லாம் உங்கள் அறிக்கையில்தான் இருக்கின்றன. உண்மைகளை ஒன்றுவிடாமல் உங்களிடம் சொல்லிவிடுகிறேன்'' என்று கண்ணீர் வழியக் கூறினார்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் தன் பணப் பிரச்சினைகளையும், அவற்றை சமாளிக்க நடமாடும் சிறுசேமிப்பு திட்டத்தில் தான் செய்த முறைகேடுகளையும் விவரமாகச் சொன்னார். அதன் பின்புதான் அது போன்ற திட்டங்களில் இருந்த குறைபாடுகளும், அதிகாரிகள் எப்படி முறைகேடுகள் செய்கிறார்கள் என்பதும் எனக்கு விளங்கின. மேலாளர் உள்ளதை சொல்லியிருக்காவிட்டால் முறைகேடு நடந்தது என்பதை நான் கண்டுபிடித்திருக்க மாட்டேன். முறைகேடு நடக்க முடியும் என்பதை நம்பியிருக்கவும் மாட்டேன்.

"தப்பு பண்ணிவிட்டேன், சூழ்நிலை அப்படி. தயவு காட்ட வேண்டும். பெரிய மனசு பண்ணி நல்லவிதமாக அறிக்கை எழுத வேண்டும்'' என்று மேலாளர் என்னைப் பல முறை கேட்டுக் கொண்டார். எதை விற்றாரோ, எத்தனை வட்டிக்கு கடன் வாங்கினாரோ தெரியவில்லை, அன்று மாலைக்குள் எடுத்த பணத்தை திருப்பிக் கட்டிவிட்டார்.

அன்றே அவசர ஆய்வறிக்கை ஒன்றை எழுதி வங்கியின் மண்டல அலுவலகத்திற்கும், தலைமை அலுவலகத்திற்கும் அனுப்பிவிட்டு, அடுத்த ஒரு வாரத்திற்குள் விரிவான ஆய்வறிக்கையும் அனுப்பினேன்.

வங்கி ஆய்வறிக்கையில் காளிதாசன், ஜெயதேவர், கம்பர், இளங்கோ முதலானோர் உலா வந்தது உலகிலேயே அதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன். அந்த அறிக்கையில் தாமரை பூத்த தடாகத்தின் மேற்பரப்பு சலனமற்று அழகாக இருந்தாலும், ஆழத்தில் ஆபத்தான முதலை இருக்கும். எனவே திட்டங்களும் சட்டங்களும் ஏற்படுத்தும்போது முதலைக்கு இடமில்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம் என்று எழுதி இருந்தேன். ஆய்வுக் குறிப்புகளுக்கு சமானமாக இலக்கியக் குறிப்புகளும் தந்திருந்தேன். மேலாளர் என்ன ஆனார் என்று எனக்குத் தெரியவில்லை.

சில மாதங்கள் கழித்து இந்த விருது செய்தி வந்தது. கூடவே நிர்வாக இயக்குனர், "உங்கள் ஆய்வறிக்கை கவிதைத் தொகுப்பு போலிருந்தது'' என்று பாராட்டி எழுதி கையெழுத்திட்டிருந்தார்.

விருது வாங்க டெல்லிக்கு வரச் சொன்ன வங்கி, போக, வர விமானப் பயணச் சீட்டும், தங்க விடுதி அறையும் ஏற்பாடு செய்திருந்தது. கிளம்புவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் கோட், சூட்டும், சப்பாத்துக்களும் அணிய வேண்டியதிருக்கும் என்று தெரிந்தது. இது போன்ற நெருக்கடியான சூழ்நிலையில் எனக்கு உதவக்கூடிய உயிர் நண்பர் வெளிநாடு சென்றிருந்தார். என் கையில் நான்காயிரம் ரூபாய்தான் இருந்தது.

தன் கல்யாணத்தின்போது தைத்திருந்த கருநீல நிற கோட்டையும், சூட்டையும் அண்ணன் பெரிய மனது பண்ணி விருது நிகழ்ச்சியின்போது மட்டும் அணிய இரவல் தந்தார். அகலம் சிறிது அதிகமாகவும், உயரம் சிறிது குறைவாகவும் இருந்தபோதிலும் பொருத்தமாக இருப்பதாகத்தான் எல்லோரும் சொன்னார்கள். பாத அளவு வேறாக இருந்ததால் அண்ணனின் சப்பாத்துக்கள் எனக்குப் பொருந்தவில்லை.

எனவே புதிய ஜதை வாங்க முடிவு செய்தேன்.

நடைமுறை நிபுணத்துவமிக்க, சிக்கனச் சிகரமான என் தம்பி, "இரண்டு ஜோடி சப்பாத்துக்களை வாங்கிக் கொள்'' என்று நான் கேட்காமலே தொலைநோக்குப் பார்வையோடு யோசனை சொன்னான். "காதில் விழும் சொல், கடவுள் கூறும் சொல்' என்ற விவேகம் அந்த நேரத்தில் என்னிடம் இல்லாமல் போய்விட்டது.

"வாழ்ந்தால் குபேரன், இல்லையேல் குசேலன்'' என்று என் தம்பியிடம் கூறிவிட்டு, ஆயிரம் ரூபாயை மட்டும் டெல்லி செலவிற்கு

வைத்துக் கொண்டு, மீதி மூவாயிரம் ரூபாய்க்கு இருப்பதிலேயே விலை உயர்ந்த சப்பாத்து ஜதையை வாங்கினேன். கனவான்களும், உயர்குடிமக்களும் ஆயிரம் ரூபாய்க்கு சப்பாத்து வாங்குவது ஆடம்பரம் என்று நினைத்த காலமது.

******

இப்படியாக டெல்லி வந்து சேர்ந்த நான், அந்த நகரின் குளிரைப் பற்றி ஏற்கனவே தெரிந்திருந்தும் தவறு செய்தேன். காலை விமானத்தில் கிளம்பி, மதியம் டெல்லி சேர்ந்த சிறிது நேரத்தில் "நாளை காலையில் எட்டு மணிக்கு கார் வந்து விடும், தயாராக இருங்கள்'' என்று தொலைபேசியில் தகவல் வந்தது. மதியம் தூங்கி எழுந்தேன். மாலை முழுவதும் என்ன செய்வது? மாலையில் உலாவிவிட்டு வரலாம் என்று செருப்பு போட்டுக் கொண்டு விடுதி அறையை விட்டு கிளம்பி நடந்தேன்.

மிகவும் குளிராக இருந்தாலும் உற்சாகமாக நீண்ட தூரம் நடந்தேன். அறைக்கு திரும்பிய போது உடலெல்லாம் ஜில்லிட்டு போய், விரல்கள் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தன. சூடான சப்பாத்திகள் இரண்டை சாப்பிட்டுவிட்டு நன்றாக தூங்கிவிட்டேன்.

மறுநாள் காலை ஆறு மணிக்கு நான் எழுந்தபோது என் பாதங்கள் இரண்டும் வீங்கியிருந்தன. அதைப் பொருட்படுத்தாமல் பரபரப்புடன் குளித்து தயாராகி, சாப்பிட்டுவிட்டு, கோட்டும், சூட்டும் அணிந்துகொண்டேன். சப்பாத்துக்களை அணிய முயன்றபோது அவற்றுள் என் பாதங்கள் நுழைய மறுத்தன. அந்த அளவிற்கு பாதங்கள் வீங்கியிருந்தன.

மனம் பதற ஆரம்பித்தது.

நவீன மோஸ்தரில் உடையணிந்த தொழிலதிபர்களும், அமைச்சர்களும், அதிகாரிகளும், பத்திரிக்கையாளர்களும் நிறைந்த சபையில் கோட்டும், சூட்டும் போட்டு வெறுங்காலோடு விருது வாங்கப் போகும் எண்ணம் பீதியைக் கிளப்பியது.

அந்த காலை நேரத்தில் எந்த சப்பாத்துக் கடையும் திறந்திருக்காது. திறந்திருந்தாலும் புதிய சப்பாத்து வாங்கக் கையில் பணமில்லை. மருத்துவரிடம் போனாலும் அவசரமாக வீக்கத்தைக் குறைக்க முடியுமா? நேரமிருக்குமா? பத்திரிக்கையில் என்னைப் பற்றிய கேலிப் படங்கள் வருவது போலவும், நண்பர்கள் எனக்கு கேலிப் பெயர் இடுவது போலவும் என் கற்பனை விரிய பதற்றம் அதிகமாக ஆரம்பித்தது.

ஏதாவது காரணம் சொல்லி, விழாவுக்குப் போவதைத் தவிர்த்தால் என்ன? யோசித்துக் கொண்டே இடது கையில் வைத்திருந்த சப்பாத்தை மெல்ல வருடிக் கொடுத்தேன். புதிதாகப் பூத்த மென்மையான மலரைத் தொடுவதைப் போலிருந்தது. மென்மையான மலரை நினைத்ததும், தாமரைப் பூவின் நினைவு எழுந்தது.

ஞானத்தின் குறியீடான அப்பூவிற்கு கமலா என்ற இன்னொரு பெயரும் உண்டு. தாமரையை விடவும் அழகிய மலர் கமலா. என் இதயத் தடாகத்தில் பல வருடங்களுக்கு முன்பு மலர்ந்து இன்று வரை புதுமையும், மணமும், மென்மையும், ஜீவனும் மாறாதிருக்கும் புஷ்பம்.

******

சில வருடங்களுக்கு முன் நான் படித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் பக்கத்து வீட்டிற்கு குடி வந்த முதல் நாளே கமலா என் அந்தரங்கத் தோழியாகிவிட்டாள். தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் அவளோடு பேசுவேன். விடுமுறை நாட்களில் அவள் வீட்டில்தான் இருப்பேன். அவளுக்கும் எனக்கும் இடையே இருந்த உறவை, அது தந்த உணர்வெழுச்சியை, திகட்டாத இனிமையை, நாங்கள் இருவர் மட்டுமே அறிந்த அகமொழியால்தான் விவரிக்க முடியும். அவள் அழகை, அன்பை வருணிப்பதற்கு எனக்குத் தெரிந்த மொழிகளில் வார்த்தைகள் இல்லை.

எங்கள் இருவருக்கும் பொதுவான கலை, இலக்கிய ரசனைகள் இருந்தன. நேரெதிரான குணாதிசயங்கள் இருந்தன. அதனால் எங்கள் உறவு நெருக்கமாக இருந்தது. அதுவரையிலும் தமிழ் இலக்கியத்தை மட்டுமே வாசித்து வந்த எனக்கு, பிற இந்திய மொழி இலக்கியங்களையும், மேல்நாட்டு இலக்கியங்களையும் அவள்தான் அறிமுகப்படுத்தி வைத்தாள்.

இப்படி நாளொரு நாவலும், பொழுதொரு புத்தகமுமாக காலநதி ஆனந்த அலைகளோடு ஓடிக் கொண்டிருந்த போது, இரண்டு ஜதை விலை உயர்ந்த சப்பாத்துக்களை அணிந்து கொண்டு பரசுராம் - கமலாவின் அக்கா கணவர் - மூன்று நாட்கள் அலுவலக வேலையாக சென்னை வந்தவர் தன் மாமியார் வீட்டில் தங்கினார்.

இந்தி சினிமா கதாநாயகனைப் போல மிகவும் அழகாக இருந்தார். நான் இன்னும் கொஞ்சம் அழகாகப் பிறந்திருக்கலாம்.

கமலாவிற்கு பெட்டி நிறைய ஏதேதோ பரிசுப் பொருட்களைக் கொண்டு வந்திருந்தார். வெளிநாட்டு வங்கியில் கடன் தரும் பிரிவில் அதிகாரியாக இருப்பவர். சம்பளத்தோடு, மேல் வருமானமும் இருக்கும்.

அவர் வீட்டிலிருந்த நேரத்திலெல்லாம் கமலா அவரோடுதான் பேசிக் கொண்டே இருந்தாள். என்னோடு அதிகமாகப் பேசவில்லை. நான் அங்கேயே உட்கார்ந்திருந்ததால், கால் மணி நேரத்திற்கு ஒரு முறை என்னைப் பார்த்து புன்னகைத்ததோடு சரி.

இதில் கமலாவின் தவறு ஒன்றுமில்லை. இளம்பெண்ணோடு இப்படி நெருக்கமாக பேசிப் பழகுகிறோமே என்ற அறிவில்லாத பரசுராமின் தவறு அது. அவர் மனதில் நிச்சயமாக தகாத எண்ணம் இருந்ததாக நம்பினேன். பரசுராம் சென்னையிலிருந்த மூன்று நாட்களும் நான் சிறிதும் நிம்மதியின்றி இருந்தேன்.

வந்த முதல் நாள் மாலை, "கமலா, என்ன இது! சென்னை இவ்வளவு அழுக்காகவும், கசகசப்பாகவும் இருக்கிறது?'' என்றார் பரசுராம்.

"கல்கத்தாவை விடவா அழுக்காக இருக்கிறது?'' என்றேன்.

கண்ஜாடை மூலம் என்னை அதட்டிய கமலா, "சுற்றுப்புற சூழல் பற்றிய அக்கறை இங்கே கொஞ்சம் குறைவுதான்'' என்றாள்.

பரசுராம், "முன்னேறிய நாடுகளுக்குப் போய் பார்த்தால்தான் சுற்றுப்புற சூழலை எப்படியெல்லாம் பராமரிக்க வேண்டும் என்பது நமக்குப் புரியும்'' என்றார்.

"அவர்கள் நாட்டு மரங்களை வெட்டாமல் பின்தங்கிய நாடுகளின் காடுகளை அழித்து காகிதம் செய்து கொள்கிறார்கள். பழைய பிளாஸ்டிக் சாமான்களை கப்பல், கப்பலாக அனுப்பி, நம் வியாபாரிகளைக் கொண்டு நம் மண்ணில் புதைக்கிறார்கள். நல்ல சுற்றுப்புற சூழல் பராமரிப்பு!'' என்றேன்.

"சார் கம்யூனிஸ்டோ!'' என்று கேட்டார் பரசுராம்.

"நான் ஆன்மாயிஸ்டு. புறமும், அகமும் ஒன்று என்று நினைப்பவன்'' என்றேன்.

"ஓஹோ! அப்படியா?'' என்றார் பரசுராம்.

இப்போதைய பிரச்சினை தத்துவமில்லை. இருவரில் யார் கெட்டிக்காரர் என்பதை பெண்ணின் முன்னிலையில் நிரூபிப்பதே பிரச்சினை.

தன் வலது உள்ளங்கையால் வலது கன்னத்தைத் தாங்கிக் கொண்டு, எங்கள் அபத்தமான வாக்குவாதத்தை கமலா கவலையோடு கேட்டுக் கொண்டிருந்தாள்.

"எல்லோரையும் ஏழைகளாக்கிவிட்டு சமத்துவம் வந்து விட்டது என்று பேசினால் நான் ஏமாந்துவிடுவேனா? இல்லை, பத்து பேர் சொகுசாக வாழ பத்தாயிரம் பேர் பட்டினியோடு பாடுபடுவது நியாயமாகிவிடுமா? இரண்டு வழிகளும் சரியில்லை'' என்றேன்.

"என்ன செய்யலாம்? எல்லோரையும் பணக்காரர்களாக்கி விடலாமா?'' நக்கலாகக் கேட்டார் பரசுராம்.

"பல பெரிய பிரச்சினைகளைத் தீர்க்க அதுதான் உருப்படியான வழி'' என்றேன்.

"கெட்டவன், நல்லவன், படித்தவன், படிக்காதவன், உழைப்பாளி, சோம்பேறி, எல்லோரையும் பணக்காரர்களாக்கப் போகிறீர்களாக்கும்?'' மீண்டும் கேலியாகக் கேட்டார் பரசுராம்.

"அவற்றையெல்லாம் பார்த்துதான் சூரியன் ஒளி தருகிறதா? இல்லை காற்று வீசுகிறதா? பணம் பிரபஞ்ச சக்தி. மனிதன் அதற்கு உருவம் மட்டும்தான் தந்திருக்கிறான். அவரவருக்கு வேண்டிய அளவிற்கு காற்றைப் போல, ஒளியைப் போல கூடிய சீக்கிரம் பணம் தானாகவே கிடைக்கப்போகிறது'' என்றேன்.

"கமலா கண்ணே, சன்னல் கதவுகளை நன்றாகத் திறந்து வையேன். சார் சொல்வது போல காற்றோடு கட்டு, கட்டாக பணமும் வரட்டும்'' என்றார் பரசுராம்.

"இரண்டு பேரும் தர்க்கம் பண்ணுவதை நிறுத்திவிட்டு தோசை சாப்பிட வாருங்கள்'' என்று கமலா அதட்டலான குரலில் கூறி வாக்குவாதத்தை முடித்து வைத்தாள்.

"நான் வீட்டில் போய் சாப்பிட்டுக் கொள்கிறேன்'' என்று கமலாவிடம் விறைப்பாகக் கூறிவிட்டு வெளிநடப்பு செய்தேன்.

பரசுராம் என்னை கேலிசெய்ததை நான் பொருட்படுத்தவில்லை. அவர் கமலாவை கண்ணே என்று அழைத்ததுதான் என் ஆத்திரத்தை அதிகமாக்கியது. அன்று நடந்த வாக்குவாதத்தில் என்னைத் தோற்றவனாக உணர்ந்தேன். எனக்கு பரசுராமை பிடிக்காமல் போய்விட்டது.

அவர்கள் இருவரும் சிரித்துப் பேசுவது என்னுள் பரசுராம் மீது கோபத்தையும், வெறுப்பையும் உண்டாக்கிற்று. பரசுராம் இருக்கும் வரை கமலாவின் வீட்டிற்குப் போகக்கூடாது என்றுதான் நினைத்தேன். ஆனால், இருவரும் என்ன பேசிக் கொள்வார்களோ என்ற கவலை மனதை அரித்ததால் எப்போதும் போல போக வேண்டியதாகிவிட்டது.

இரண்டாம் நாள் இலக்கிய சர்ச்சை உருவாயிற்று.

கமலாவின் மேஜை மீதிருந்த ஒரு தடிமனான புத்தகத்தைப் புரட்டிய பரசுராம், "பைசாவுக்குப் பிரயோஜனமில்லாத குப்பையை எல்லாமா வாசிக்கிறாய்?'' என்று கேட்டார். அவர் குப்பை என்று குறிப்பிட்டது காளிதாசனின் ரகுவம்சத்தை.

பரசுராம் புத்தகத்தை மேஜையில் வைத்தபோது ஒரு பக்கம் கசங்கியதை கவனிக்கவில்லை. ரகுவம்சத்தை கையிலெடுத்த கமலா, அப்பக்கத்தை ஒரு கணம் பார்த்துவிட்டு, "தாமரைத் தடாக முதலை! என்ன அழகான உவமை!'' என்று சொல்லி புத்தகத்தை சரியாக மூடி வைத்தாள்.

"இது எந்த இடத்தில் வருகிறது?'' என்று கேட்டேன்.

"சுயம்வர மண்டபத்தில் இளவரசி இந்துமதி, அஜாவைத் தேர்ந்தெடுத்து அவனுக்கு மாலையிடுகிறாள். ஏமாற்றமடையும் பிற மன்னர்கள் தாமரை மலர்ந்த அமைதியான நீர்நிலை போன்ற முகத்தோடு மணமக்களை வாழ்த்தினாலும், அவர்கள் மனதின் ஆழத்தில் முதலை போல வன்மம் மறைந்திருக்கிறது. சந்தர்ப்பம் கிடைத்ததும் வெளிப்படுகிறது என்கிறார் காளிதாசர். பொதுவாக மனிதனின் ஆழ்மனத்தில் இருப்பதெல்லாம் ஆபத்தான முதலைதான். எத்தனை பொருத்தமான உவமை!'' என்றாள் கமலா.

"உவமையாவது, உப்புமாவாவது! முன்னேற வேண்டும் என்று உண்மையாகவே விரும்பினால் மேல்நாட்டு மேதைகள் எழுதுவதை வாசியுங்கள்'' என்றார் பரசுராம்.

அவரது இடக்குப் பேச்சை நான் சட்டை செய்யவில்லை. "என்னைப் பொருத்தவரை கதைகளுக்கு சந்தோஷமான முடிவைக் கொடுத்து, கதாபாத்திரங்களை முன்னேற வைத்த காளிதாசன் போன்றவர்கள்தான் மாமேதைகள்'' என்றேன்.

என் வேகத்தைப் பார்த்த பரசுராம் என்னை சமாதானப்படுத்தும் குரலில், "நமக்கெல்லாம் இந்திய மேதையின் பெருமை தெரிய வேண்டுமென்றால் அவரைப் பற்றி மேல்நாட்டு அறிஞர்கள் எழுத வேண்டும்'' என்றார்.

ஆனால் என் வேகம் அதிகமாயிற்று. "மேல்நாட்டு அறிஞர்களா? நம் பண்பாட்டை பற்றி ஆராய்ச்சி செய்ய பண உதவி

செய்யும் மேல்நாட்டு அறிஞர்களைக் கொண்ட நிறுவனங்கள் பெரும்பாலானவை தாமரைத் தடாக முதலைகள்தான்'' என்றேன்.

"புரியவில்லை'' என்றார் பரசுராம்.

"குண்டு போடுவது, நிலத்தைத் தாக்குவது, நம்மோடு அப்பாவிகள் போலிருக்கும் துரோகிகள் மூலம் கள்ளப்பணத்தை விநியோகிப்பது, பொருளாதாரத்தைத் தாக்குவது, நம் எழுத்தாளர்களைக் கொண்டே நம் தேசத்தைப் பற்றி பொய்யான கள்ளக் கருத்துக்களை உருவாக்குவது சிந்தனை மீதான தாக்குதல்'' என்றேன்.

"அப்படிகூடச் செய்வார்களா என்ன!'' என்று ஆச்சரியத்துடன் கேட்டார் பரசுராம்.

"ஏன் செய்யமாட்டார்கள்? இந்திய வரலாறு, பண்பாடு பற்றி ஆராய அமைதியான நிறுவனங்கள் மூலம் நாசகார சக்தி நிதியுதவி செய்கிறது. நம் ஆராய்ச்சியாளர்களை வைத்தே நம் நாட்டைப் பற்றிய தவறான கருத்துக்களை உருவாக்குவது இதன் நோக்கம்'' என்றேன்.

"நடுநிலையான ஆராய்ச்சியின் முடிவுகளை எப்படி தவறென்று சொல்ல முடியும்?'' என்று கேட்டார் பரசுராம்.

பரசுராம் விவரமில்லாதவர் என்பது எனக்குப் புரிந்துவிட்டது. என் குரல் ஓங்கி ஒலித்தது. "நடுநிலையா? பணத்தோடு கொடுக்கப்பட்ட முன்முடிவுகளைத்தானே அரைகுறையான ஆதாரங்கள் மூலம் நிறுவப் பார்க்கிறார்கள்? நம் அறிவுஜீவிகளில் எத்தனை பேர் நம் ஆன்மீக பெருமை பற்றி எழுதுகிறார்கள்? இந்திய ஆன்மீக ஆராய்ச்சிக்கு எந்த மேல்நாட்டு நிறுவனமாவது பணம் தருகிறதா? ஆன்மீகத்தினால் இந்திய விவசாயிகள் சிரமப்படுகிறார்கள் என்ற அபத்தமான ஆராய்ச்சியை யாராவது மேற்கொள்ள நினைத்தால் அதற்கு நிதியுதவி தருவார்கள்'' என்றேன்.

"இதைத் தடுக்க வழியில்லையா?'' என்று கேட்டார் பரசுராம்.

"இந்த அறிவுஜீவிகளின் பேச்சிற்கும், எழுத்திற்கும் கவனம் தராமலிருந்தால் போதும். எது எப்படியோ, ஆன்மீக நாட்டை அழித்துவிட முடியுமா?'' என்றேன்.

புன்னகைத்தாள் கமலா. அந்த அழகிய புன்னகை நாசகார சக்திகளைப் பற்றிய விவாதத்தை ஒரு முடிவிற்குக் கொண்டு வந்தது. அன்றைய வாக்குவாதத்தில் சந்தேகமில்லாமல் முழுவெற்றி எனக்குத்தான் கிடைத்திருந்தது.

பரசுராம் கல்கத்தா புறப்படும் தினத்தன்று, கமலா செய்த ரவா உப்புமாவை சாப்பிட்டுக் கொண்டே தன் சப்பாத்துக்களைப் பற்றி அவளிடம் மிகவும் பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தார்.

"நான் இப்போது உபயோகிப்பதைப் போன்ற சப்பாத்துக்களை கடைகளில் வாங்கவே முடியாது. அமெரிக்காவில் இருக்கும் எங்கள் வங்கியின் தலைமையகம் என்னைப் போன்ற உயரதிகாரிகளுக்காக மட்டும் இது போன்ற சப்பாத்துக்களை வருஷாவருஷம் விசேஷமாக தயாரிக்கிறது. நான் மிகவும் முக்கியமான பொறுப்பில் இருப்பதால் வங்கி எனக்கு இரண்டு ஜதை தந்தது'' என்றார் பரசுராம்.

"எல்லாமே குரோம்பேட்டையிலும், குடியாத்தத்திலும் தயாராகும் சப்பாத்துக்கள்தான். பொய்யாக அமெரிக்காவில் தயாரானது என்று வில்லையில் போடுவார்கள்'' பொறுக்க முடியாமல் என் கருத்தை வெளியிட்டேன்.

நான் பேசிய விதம் பரசுராமிற்கு பிடிக்கவில்லை. "நீங்கள் எந்த கம்பெனி சப்பாத்து அணிவீர்கள்?'' என்று கேட்டார். ஒரு விநாடி திகைத்துத் தடுமாறினேன். அப்பாவின் சம்பளத்தில் வருஷத்திற்கு ஒரு தடவை செருப்பு வாங்குவதே சிரமம். "நான் செருப்பு போடுவதுதான் வழக்கம்'' என்றேன்.

கமலாவைப் பார்த்து புன்னகைத்த பரசுராம், "சப்பாத்து எங்கெல்லாம் தயாரிக்கிறார்கள் என்று சொன்னீர்கள்!'' என்று என்னிடம் இடக்காகக் கேட்டார்.

கமலா என்னைப் பார்த்து, "சும்மா இருங்கள்' என்று கண்ஜாடை காட்டினாள். நான் ஓய்வதாக இல்லை. "தாஜ்மஹால் ஆக்ராவில் இருக்கிறது என்ற உண்மையை சாதாரண அறிவு இருப்பவன்கூடச் சொல்லலாம். அதைச் சொல்ல ஆக்ராவிற்கு போய் தாஜ்மஹாலைப் பார்த்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை'' என்றேன்.

"ஓஹோ, அப்படியா?'' என்று கேலி தொனிக்கும் குரலில் பரசுராம் கேட்டார்.

"நீங்கள் எத்தனை மணிக்கு கிளம்ப வேண்டும்?'' என்று கேட்டாள் கமலா.

பரசுராமின் கவனம் மாறியது. "கிளம்ப வேண்டியதுதான்'', தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டு பதில் சொன்னார். அது சுவிட்சர்லாந்து தேசத்தில் தயாரிக்கப்பட்ட ராடோ கடிகாரம். அதன் பெருமையைப் பற்றி முதல் நாளே பரசுராம் சொல்லிவிட்டார்.

கமலாவின் அம்மா என்னை வாடகைக் கார் அழைத்து வரச் சொன்னார். எனக்குப் போகப் பிடிக்கவில்லை என்றாலும், பரசுராம் போனால் சரி என்பதாலும், கமலாவின் அம்மா விடுத்த வேண்டுகோளைத் தட்ட முடியாது என்பதாலும் கிளம்பினேன்.

வாசல் கதவைத் தாண்டும்போது என் மேல் ஏதோ துளி விழுந்தது போலிருந்தது. நிமிர்ந்து பார்த்தேன். மேல்வீட்டிற்கு வெள்ளை அடித்து கொண்டிருந்தார்கள். மேல்வீட்டுக் கைப்பிடி சுவரில் வைத்திருந்த டப்பா கவிழ்ந்து, அதிலிருந்து பெயிண்ட் சொட்ட ஆரம்பித்திருந்தது. வாசல் கதவருகே பளபளப்பாக்கப்பட்டிருந்த பரசுராமின் இரண்டு ஜதை சப்பாத்துக்கள் மீதும் சொட்டு சொட்டாக நீல நிற பெயிண்ட் விழ ஆரம்பித்தது. உயர்தரமான பெயிண்ட், எவ்வளவு கழுவினாலும் லேசில் போகாது.

வெள்ளையடிப்பவரிடம் சொல்லலாமா அல்லது சப்பாத்துக்களை தள்ளி வைத்துவிடலாமா என்று யோசித்தேன். எனக்கென்ன தெரியும் சப்பாத்தைப் பற்றி? பரசுராம் எக்கேடு கெட்டால் எனக்கென்ன வந்தது? வெறுங்காலோடு கல்கத்தா போகட்டும், அப்போதுதான் புத்தி வரும்.

நான் வாடகைக் காரோடு திரும்பி வந்தபோது, வாசலில் பெயிண்ட் சிறுகுட்டை போல தேங்கி இருந்தது. சப்பாத்துக்களைக் காணோம். களை இழந்துவிட்ட பரசுராமின் முகத்தைப் பார்க்க எனக்கு சந்தோஷமாக இருந்தது. புன்னகைத்தேன், அதை கமலா கவனித்துவிட்டாள்.

ஒரு பிளாஸ்டிக் பையில் தன் இரண்டு ஜோடி சப்பாத்துக்களையும் போட்டு, பையை இடது கையில் வைத்திருந்த பரசுராம் கமலாவின் அப்பாவின் பழைய செருப்புகளை அணிந்து கொண்டு விமான நிலையத்திற்குக் கிளம்ப தயாராக இருந்தார். பரசுராம் என்னிடம் நன்றி கூறி, கைகுலுக்கி, விடைபெற்றுக் கொண்டார். குடும்பமே மாப்பிள்ளையை வழியனுப்ப கிளம்ப, கமலா "நான் வரவில்லை'' என்று கூறிவிட்டாள்.

எல்லோரும் சென்றபின் என் கைகளைப் பற்றி அறைக்குள் அழைத்துச் சென்ற கமலா, "உங்கள் மனதை மிகவும் நோகடித்துவிட்டேன் போலிருக்கிறது'' என்றாள்.

"அபத்தமாக பேச வேண்டாம்'' என்றேன்.

"நான் உங்களோடு எப்போதும் போல பேசிக் கொண்டே இருந்தால், ஊருக்குப் போய் தன் குடும்பத்தாரிடம் என்ன சொல்லுவாரோ? அக்காவின் மனம் புண்படும். அதனால்தான்

உங்களிடம் அதிகம் பேசவில்லை'' என்றாள் கமலா.

"சொல்லாமலே எனக்குப் புரியாதா என்ன?'' என்றேன்.

என் சட்டையின் தோள்பட்டையில் இருந்த பெயிண்ட் கறையை கவனித்த கமலா, "நீங்கள் வெளியே போகும்போதே பெயிண்ட் விழ ஆரம்பித்துவிட்டது போலிருக்கிறதே?'' என்று கேட்டாள். நான் பதில் சொல்லவில்லை.

சிறிது நேரம் மௌனமாக இருந்த கமலா, "உங்கள் மனம் எப்போதுமே தாமரை பூத்த தடாகமாக இருக்க வேண்டும்'' என்றாள்.

"அப்படியே ஆகட்டும். தாமரைக்கு கமலம் என்ற இன்னொரு பெயர் உண்டு'' என்றேன்.

புன்னகைத்த கமலா, "அதில் தாமரை மட்டுமே இருக்க வேண்டும். ஒரு நாளும் முதலை குடி வரக்கூடாது'' என்றாள்.

"முதலைதான் கல்கத்தாவுக்குப் புறப்பட்டு போய்விட்டதே'' என்றேன்.

"நான் தாமரைத் தடாக முதலை என்று குறிப்பிடுவதை நீங்கள் புரிந்து கொள்ள விரும்பவில்லை'' என்ற கமலா எப்போதும் போல கலகலப்பாக பேச ஆரம்பித்துவிட்டாள்.

நான் அந்த நிகழ்ச்சியை மறந்துவிட்டேன்.

******

தாமரை தடாக முதலை! அன்று கமலா குறிப்பிட்டது என் ஆழ்மனத்திலிருந்து மேலெழுந்த பொறாமை உணர்வையா? கமலா சொன்னது போல அவள் எதைக் குறிப்பிடுகிறாள் என்பதைப் புரிந்து கொள்ள அன்று நான் விரும்பவில்லை. நான் அன்று புரிந்து கொள்ள மறுத்தது பல வருடங்கள் கழிந்தபின் இன்று என் இடது கையில் அணிய முடியாத சப்பாத்தாக இருந்தது.

கமலாவின் தாமரை முகம் மனத்தடாகத்தில் மலர்ந்தது. தெளிவான நீர்ப்பரப்பில் பழுப்பு நிற முதலை தக்கை போல சாதுவாக மிதந்து கொண்டிருந்தது.

கமலா எனக்காக என்னவெல்லாம் செய்திருக்கிறாள்! அவளுக்காக நான் என்ன செய்திருக்கிறேன்? பொறாமையை விட்டுவிடு என்பது மட்டுமே அவள் என்னிடம் விடுத்த ஒரே வேண்டுகோள். அதையும்தான் எத்தனை நளினமாகச் சொன்னாள்! கமலா, உனக்காக இதைக்கூடவா செய்யமாட்டேன்? என் இதயத் தடாகத்தில் ஒரே சமயத்தில் அழகான தாமரையும் பூக்கிறது, ஆபத்தான முதலையும் மிதக்கிறது. கமலா இருக்குமிடத்தில் முதலைக்கு என்ன வேலை?

முதலை மெல்ல மெல்ல கரைந்தது. சிறிது நேரத்தில் கமலாவைத் தவிர வேறு எதுவும் அத்தடாகத்தில் இல்லை. மனம் அமைதி அடைந்தது.

அறைக் கதவை எவரோ ஓங்கித் தட்டும் ஒலி கேட்டு, கவனம் கலைந்து, கதவைத் திறந்தேன். வங்கி அதிகாரி உள்ளே வந்தார். "என்ன சார், நல்ல தூக்கமா? ரொம்ப நேரமாக கதவைத் தட்டுகிறேனே'' என்றார்.

"இதோ கிளம்பிவிட்டேன்'' தயக்கத்தோடு சொன்னேன்.

"ஒரு சின்ன மாற்றம். உளவுத் துறை அதிகாரிகள் நிகழ்ச்சியை வேறு எங்காவது மாற்றச் சொல்லிவிட்டார்கள். என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. அவசரத்திற்கு ஏதோ ஒரு கோவில் மண்டபம்தான் கிடைத்தது. கோவில் என்பதால் காலணிகள் அணிந்து கொண்டு வரக்கூடாது. கவனமாக இருங்கள், இல்லையென்றால் இதை மதப்பிரச்சினை ஆக்கிவிடுவார்கள்'' என்றார்.

அன்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னூறு பேரும் காலணிகள் இல்லாமல்தான் இருந்தோம். கோட், சூட் அணிந்து, சப்பாத்து அணியாமல் விருது பெற்றேன். மற்றவர்களும் அப்படித்தான் தங்களுக்குரிய விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.

நான் சந்தோஷமாக சென்னை திரும்பிய ஒரு வாரம் கழித்து இத்தாலிக்கு சப்பாத்து ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தின் தணிக்கையாளராக நியமிக்கப்பட்டேன்.

முற்றும்.

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
மறந்த நேரம் மகத்துவம் நிகழும்.
 

******



book | by Dr. Radut