Skip to Content

10. அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்

("அன்னையின் தரிசனம்" என்ற நூலிலிருந்து)

அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

4. முறையான செலவு

பொருள்களைத் தூய்மையாகவும், சீராகவும் வைக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் பொருள்களை விரயம் செய்யாமல் இருத்தலும் ஆகும்.

உண்ணும்பொழுது தேவையான அளவு உணவைப் பெற்று, மிச்சம் வைக்காமல் உண்ண வேண்டும். உண்டியைத் தயாரிக்கும்பொழுது தேவையான அளவைக் கணக்கிட்டு ஆக்க வேண்டும். எதிர்பாராதவிதமாக உணவு மீதியாகிவிட்டால், அதை வீணாக்காமல் பசித்து வரும் எளியவர்க்குப் படைத்துவிட வேண்டும். பால், தயிர், எண்ணெய் போன்றவற்றைக் கவனக் குறைவால் கீழே கொட்டிவிடக்கூடாது. அதன் காரணமாக அவை கெட்டுவிடுவதால் உபயோகப்படுத்த முடியாமல் போய்விடுகிறது. அதனைத் தவிர்க்க வேண்டும்.

அரிசி, பருப்பு, மாவு முதலான பொருள்களையும் கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும். வண்டு பிடித்தல், காளான் ஏறுதல் போன்றவற்றால் உணவுப் பொருள்கள் பாழாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எரிபொருள்கள் எதுவானாலும் அவற்றைத் தேவையானபோது, தேவையான அளவில் உபயோகிக்க வேண்டும். குழந்தைகளுக்கு உணவு பரிமாறும்போது அளவோடு உண்ணவும், உணவை வீணாக்காமல் இருக்கவும் அவர்களைப் பழக்கப்படுத்த வேண்டும்.

வயது வந்தவர்களுக்குக்கூட உண்ணும் அளவு முக்கியம். உயிர் வாழ்தலுக்குத் தேவையான ஆரோக்கியத்துக்கும், செய்கின்ற வேலைக்கும் போதுமான அளவுக்கு மேல், ருசி காரணமாக அதிகம் உண்பது தவறாகும். உடுக்கும் உடைகள் விஷயத்திலும் முறையான செலவு முக்கியம். ஓரிரு தடவை உடுத்தியபின் உடைகளைத் தூக்கி எறிந்துவிட்டு, புதுப் புது உடைகளை வாங்குவது தவறு. அது தவிர்க்கப்பட வேண்டும். எந்தப் பொருளை வாங்கினாலும், அது உண்மையான தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இருக்க வேண்டும். கௌரவத்தையும், "பிறர் பெருமையாக நினைக்க வேண்டும்' என்பதற்காகவும் பொருளை வாங்கவோ அல்லது வைத்திருக்கவோ கூடாது.

மின்சாரத்தை உபயோகிக்கும்போது மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். யாரும் இல்லாத இடத்தில் மின்விசிறியைச் சுற்றவிடுவதும், தேவையற்ற இடங்களில் மின்விளக்குகளை எரியவிடுவதும், மின்விளக்கைப் போட்டுச் செய்ய வேண்டிய காரியத்தைச் செய்த பிறகு அதை அணைக்க வேண்டிய நிலையில் அணைக்காமல் விட்டுவிடுவதும் பெருந்தவறுகளாகும்.

வீட்டைப் பூட்டிக்கொண்டு வெளியில் செல்லும்பொழுது மின்விளக்கையும், மின்விசிறியையும் நிறுத்த மறந்துவிடக்கூடாது. ரேடியோவில் ஒலிபரப்பும், தொலைக்காட்சிப்பெட்டியில் ஒளிபரப்பும் முடிந்ததும், அவற்றைக் கவனமாக அணைத்துவிட வேண்டும்.

எந்த ஒரு பொருளையாவது வாங்கும்பொழுது அல்லது விற்கும்பொழுது அதிகக் கவனம் தேவை. பெறுமானத்துக்கு அதிகமான பணத்தைக் கொடுத்து ஒரு பொருளை வாங்குவதும், பெறுமானத்திற்குக் குறைவான பணத்தை வாங்கிக்கொண்டு ஒரு பொருளை விற்பதும் தவறு.

அந்தக் காலத்தில் "தாராளம் தண்ணீர் பட்டபாடு' என்று ஊதாரித்தனத்துக்குத் தண்ணீரை உதாரணமாகச் சொல்வார்கள்.

நீருக்கு நெருக்கடியான இந்தக் காலத்தில், தண்ணீரை உதாரித்தனமாகச் செலவிடக் கூடாது. குளிக்கும்போதும், துணிகளைத் துவைக்கும்போதும், கழுவும்போதும் தண்ணீரை அளவோடு உபயோகப்படுத்த வேண்டும். தண்ணீர்க் குழாயைத் திறந்து விட்டுவிட்டு வேறு காரியங்களைக் கவனிக்கப்போவது பொறுப்பற்ற செயலாகும். "வீட்டைக் கழுவுகிறோம், வாசலைக் கழுவுகிறோம்' என்று குடம் குடமாய்க் கொட்டித் தண்ணீரை வீணாக்கக் கூடாது.

எந்தப் பொருளையும் ஆசைக்காக உபயோகிக்காமல், தேவைக்காக மட்டுமே உபயோகிக்க வேண்டும். அது போலவே எதையும் கவனக்குறைவால் விரயம் செய்யாமல், முறையாகச் செலவு செய்ய வேண்டும்.

கவனக்குறைவும், விரயமும் இருக்கின்ற இடத்தில் பொருள் செல்வம் வளராது; அதற்குத் தட்டுப்பாடு வந்துவிடும். மேற்கூறிய குறைகளை நீக்கிக் கொண்டால், எந்தப் பொருளாக இருந்தாலும் அது நமக்குத் தட்டுப்பாடு இல்லாமல் அபரிமிதமாகக் கிடைக்கும்.

இதை விளக்குகின்ற வகையில் இங்கு ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடலாம்.

கடலூருக்கு அருகில் இராமாபுரம் என்ற கிராமத்தில் உள்ள ஒரு பண்ணையில், அன்பர் ஒருவர் பயிர்த்தொழில் செய்துவருகின்றார். ஏறக்குறைய இருபது ஏக்கரில் விவசாயம் செய்கிறார் அவர். பயிருக்கு தேவையான தண்ணீர், துளைக்கிணறு மூலமாகக் கிடைக்கின்றது.

1984ஆம் ஆண்டு மின்சார வெட்டின் காரணமாக நாள் ஒன்றுக்கு 4 மணி நேரந்தான் தண்ணீர் இறைக்கலாம் என்ற நிலை ஏற்பட்டது. அவருடைய இருபது ஏக்கரில் உள்ள பயிருக்கு நாள்தோறும் பதினைந்திலிருந்து இருபது மணி நேரத்துக்குக் குறையாமல் தண்ணீர் பாய வேண்டும். நான்கு மணி நேரத்துக்கு மட்டுமே பாயும் தண்ணீரைக் கொண்டு இருபது ஏக்கரில் உள்ள பயிருக்குத் தண்ணீரைப் பாய்ச்ச முடியாது.

"என்ன செய்வது?" என்று புரியாமல் திண்டாடிக் கொண்டிருந்தார் அந்த அன்பர்.

"தண்ணீருக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதற்குக் காரணம் தண்ணீரை விரயப்படுத்துவதுதான். தடுக்கும் வழிமுறைகளைக் கையாண்டால், தண்ணீர்த் தட்டுப்பாடு எந்த விதத்திலாவது நீங்கிப்போகும்'' என்று மற்ற அன்பர்கள் அவருக்குச் சொன்னார்கள்.

"விரயத்தை தடுத்தால் எப்படி உடனே அதிகமான தண்ணீர் கிடைக்கும்?' என்பது அந்த அன்பருக்குப் புரியவில்லை. ஆனாலும், "விரயத்தைத் தடுப்பதில் தவறேதும் இல்லை. அது நல்லதுதான். ஆகவே தண்ணீர் விரயத்தைத் தடுத்துத்தான் பார்க்கலாமே!' என்று எண்ணிச் செயல்பட ஆரம்பித்தார்.

தண்ணீர் செல்லும் குழாயில் எப்போதும் தண்ணீர் கசிந்து, வீணாகிக் கொண்டிருக்கும். அந்தக் கசிவை அடைத்து, நிலத்தில் முழுமையாகத் தண்ணீர் பாயும்படிக் குழாயைச் சரி செய்தார். பயிருக்குத் தண்ணீர் கட்டும் ஆட்கள் தண்ணீரை அநாவசியமாகப் பாய விட்டுவிட்டு, மடையை உரிய நேரத்தில் அடைக்காமல் நின்றுகொண்டிருப்பார்கள். அவர் அதைக் கவனித்து, அந்தக் குறையையும் நீக்கினார். அதற்குப் பிறகு தண்ணீர் எந்தவித விரயமும் இல்லாமல் நிலத்தில் பாய்ந்தது.

அவர் மறுநாள் வழக்கம்போல மோட்டாரைப் போட்டுத் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தார். நான்கு மணி நேரமாகிவிட்டது. "மின்சாரம் நின்றுவிடும்' என்று நினைத்து மோட்டாரை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்தார். ஆனால் மின்சாரம் நிற்கவில்லை. ஐந்து மணி நேரம் முடிந்தது. மோட்டார் ஓடிக்கொண்டிருந்தது. ஆறு மணி நேரம் ஆயிற்று. அப்போதும் அது தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தது. பதினான்கு மணி நேரம் ஓடிய பிறகுதான் மோட்டார் நின்றது.

இதை அவரால் நம்பவே முடியவில்லை. நேற்று வரை நான்கு மணி நேரத்துக்குக் குறைக்கப்பட்ட மின்சாரம், இன்று எப்படித் திடீரெனப் பதினான்கு மணி நேரம் வரை நீடித்தது?

இதை அவராலும் புரிந்துகொள்ள முடியவில்லை; மற்றவர்களாலும் புரிந்துகொள்ள முடியவில்லை. அன்று மட்டுந்தானா அந்த அற்புதம்? இல்லை, அதற்குப் பிறகு ஒவ்வொரு நாளும் பதினான்கு மணி நேரத்துக்குக் குறையாமல் மின்சாரம் கிடைத்தது.

"விரயத்தைப் போக்கியவுடன் தண்ணீர்த் தட்டுப்பாடும் போய்விட்டது என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தார் அந்த நண்பர்.

இதன் மூலம், "விரயத்தைத் தடுத்து நிறுத்திவிட்டால், எந்தவிதத் தட்டுப்பாடும் இல்லாமல் நமக்குத் தேவையான பொருள்கள் அனைத்தும் கிடைக்கும்' என்பதை அறிந்து கொள்ளலாம்.

5. தணிவான பேச்சு

"பேச்சு” என்பது மனிதனுக்குக் கிடைத்தற்கரிய ஒரு சிறந்த கருவியாகும். சாதாரணமாக, "பேச்சு" என்பது, எண்ணங்கள் ஒவடி வமாக வெளிப்படுவதைக் குறிக்கின்றது.

கேட்டவை, பார்த்தவை, மற்ற புலன்களால் அறிந்தவை ஆகிய யாவும் எண்ணங்களாக உருவெடுத்து நம் மனத்தில் இடம் பெறுகின்றன. நாம் இந்த எண்ணங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும்பொழுது, அது ஒலி வடிவம் பெற்றுப் பேச்சாக வெளிப்படுகின்றது.

"பேச்சு என்றால் எண்ணங்களை வெளியிடும் ஓர் உபாயமேயன்றி வேறு இல்லை' என்று பாமர மக்கள் கருதுகின்றார்கள். அதனால் அவர்கள், "பேச்சு கவனத்துக்குரிய ஒரு செயல்” என்பதைப் புரிந்துகொள்வதில்லை.

பேச்சுக்கு மூன்று அம்சங்கள் உள்ளன. (1)பேசப்படும் கருத்து அல்லது விஷயம்; (2) பேசப்படுகின்ற விதம்; (3) பேச்சினால் ஏற்படும் விளைவு. கருத்துக்கு ஏற்பப் பேசப்படுகின்ற விதமும், பேசப்படுகின்ற விதத்தைப் பொருத்து அதன் விளைவும் அமைகின்றன. உதாரணமாக, கோபத்தை வெளிப்படுத்தும் பேச்சு சுடுசொற்களாக வெளிப்படுகின்றது. அது மற்றவர்களிடத்தில் பயத்தையோ அல்லது ஆத்திரத்தையோ உண்டாக்குகின்றது. கோபம் கோபத்தை எழுப்புகின்றது. அதற்குச் சுடுசொற்கள் கருவிகளாக அமைகின்றன.

எண்ணங்கள் பேச்சாக வெளிப்படுகின்றன என்று கூறினோம். உணர்ச்சிகளும் பேச்சாக வெளிப்படுகின்றன. எண்ணங்களும், உணர்ச்சிகளும் தாமாக மனத்தில் தோன்றி, தாமாகவே மறைகின்றன. அவற்றின் மீது நமக்கு எந்தவித ஆதிக்கமும் இருப்பதில்லை. அது மட்டுமன்று, எண்ணங்களும், உணர்ச்சிகளும் வெளிப்பட்ட பின்பு ஏற்படும் விளைவுகளின் மீதும் நமக்கு ஆதிக்கம் இல்லை. கோபம் பொங்கிவரும்போது கோபமான சொற்கள் வெளிப்படுகின்றன. இவற்றிற்கு இலக்கானவர்கள் கோபம் அடைகிறார்கள். சுடுசொற்களுக்கு இலக்கானவர்கள் கோபம் அடையும்பொழுது, அதை யாரால் தடுக்க முடியும்?

பிறிதோர் இடத்தில், "வீட்டில் விரும்பத்தகாத சூழ்நிலைக்கு இடம் கொடுக்கக்கூடாது' என்று குறிப்பிட்டிருந்தேன். விரும்பத்தகாத எண்ணங்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் அடிமையான ஒரு சாதாரண மனிதன், எப்படி விரும்பத்தக்க ஒரு சூழ்நிலையை ஏற்படுத்த முடியும்? தன் மனத்தின் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடிய திண்மை பெற்ற ஒருவனால் மட்டுமே தன்னைச் சுற்றி விரும்பத்தக்க சூழ்நிலையை ஏற்படுத்த முடியும். அலைபாயும் மனத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது? விரும்பத்தக்க எண்ணங்களும், உணர்ச்சிகளும் மட்டுமே மனத்தில் இடம் பெற வேண்டுமானால், அதற்கு என்ன செய்ய வேண்டும்? இந்தக் கேள்விகளுக்குப் பதில்: தணிவான பேச்சு.

"தணிவான பேச்சு” என்பது தாழ்ந்த குரலில் பேசுவது மட்டுமன்று; அமைதியாகவும், அடக்கமாகவும் பேசுவதையும் குறிக்கும். எதைப் பேசினாலும் அதை எந்த அளவுக்குத் தணிவாகப் பேச முடியுமோ அந்த அளவுக்கு அமைதியாகவும், அடக்கமாகவும் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். "அந்தக் கட்டுப்பாட்டை எக்காரணம் கொண்டும் தளர்த்துவது இல்லை” என உறுதி எடுத்துக்கொண்டு, அதன்படி நடக்க வேண்டும். "விரும்பத்தகாத உணர்ச்சிகளும், எண்ணங்களும் தோன்றும்போதுகூடத் தணிவான பேச்சையே உபயோகிப்பது' என்ற முடிவிலிருந்து விலகாது நிற்க வேண்டும். தணிவான பேச்சின் மூலமாக அவை வெளிப்படும்பொழுது, வழக்கமாக அவற்றால் ஏற்படும் விளைவுகள் பெரும்பாலும் குறைந்துபோய்விடுகின்றன. கோபம் நம்மை ஆட்கொள்ளும்பொழுது அதைத் தணிவான பேச்சின் மூலமாக வெளிப்படுத்தினால், அதன் விளைவு அத்தனை மோசமாக இராது என்பதை நடைமுறையில் பார்க்கலாம்.

எடுத்த எடுப்பில் கோபதாபங்களை முற்றும் களைவது என்பது இயலாத காரியம். ஆரம்பத்தில் வேண்டாத எண்ணங்களோ, உணர்ச்சிகளோ தோன்றிக் கொண்டிருந்தால், அதற்காக வருந்த வேண்டாம். தடுக்க முடியாவிட்டாலும், அவற்றைத் தணிவான பேச்சின் மூலமாகக் கட்டுப்படுத்தி வெளிப்படுத்தலாம். முடிவில் அவை நம்மை அணுகா. பேச்சில் உள்ள அமைதியும், தூய்மையும் மெல்ல மெல்ல மனத்தில் புகுந்து அங்கே நீங்காத இடத்தைப் பெற்றுவிடும் என்பதில் சந்தேகம் இல்லை. அமைதியும், தூய்மையும் இடம் பெற்ற பிறகு மனத்தில் வேண்டாத எண்ணங்களும், உணர்ச்சிகளும் தோன்றமாட்டா.

சொல் அடங்க, மனம் அடங்கும்; மனம் அடங்க உள்ளும், புறமும் அமைதி குடிகொள்ளும்; அமைதியுள்ள இடத்தில் செல்வமும், சுபிட்சமும் பெருகும்.

தொடரும்....

*******

 

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
"கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்''. நாம் அன்னையை ஏற்றதன் முழுமை நம் சூழலில் அன்னை கொப்பளித்து எழுதல் காண்பிக்கும்.
ரோஜா தோட்டத்தை மணம் அறிமுகப்படுத்த வேண்டாமா?

 
 
*******
 
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
யோக வாழ்க்கை: "யோக வாழ்க்கை' எனும் நூல் The Life Divine தத்துவங்களை வாழ்க்கைக்கு ஏற்றவாறு மாற்றி வழங்குகிறது. Rapid Book Opening இந்நூலைப் பிரித்துப் பார்த்தால் மனத்தைப் பிரதிபலிக்கும். என்ன செய்யலாம் என்பதைச் சுட்டிக்காட்டும்.
 
 
 
******

 

 



book | by Dr. Radut