Skip to Content

09. அன்னை இலக்கியம் - சரண்டர் சத்யன்

அன்னை இலக்கியம்

சரண்டர் சத்யன்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

இல. சுந்தரி

அவள் ஆர்வத்துடன் எதிர்பார்த்த லூயி வந்துவிட்டாள்.

தெரசா, லூயியின் கையைப் பிடித்துக் கொண்டு, தான் நேற்றிரவு கண்ட கனவை உணர்வுபூர்வமாய்ச் சொல்லச் சொல்ல லூயி கண்களை மூடியவண்ணம் மனத்திரையில் அவற்றைப் பார்க்கலானாள். தெரசாவிற்குத் தன்னைப் புரிந்துகொண்ட லூயியின் இயல்பு ஆறுதலளித்தது.

"லூயி, இதை வெறும் கனவு என்று என்னால் ஒதுக்க முடியவில்லை. ஆனால் என் கணவருக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை. இந்தக் கனவை எப்படிப் புரிந்துகொள்வது? அன்னைக்குத் தன்னைச் சரணம் செய்துள்ள அன்பரை எப்படிக் கண்டுபிடிப்பது? இங்கு அன்னையைத் தேடி வரும் அன்பர்கள் யாவருமே பக்திபூர்வமாய்த் தெரிகிறார்கள்'' என்றாள் தெரசா.

"அக்கா, உன் கனவு அர்த்தமற்றதன்று. இதில் ஏதோ சூட்சுமம் இருப்பதை என்னால் உணர முடிகிறது. அன்னை, அன்பர்களின் கனவில் வருவதும் உண்டு என்று படித்திருக்கிறேன். இதைப் புறக்கணிப்பதற்கில்லை என்றே நினைக்கிறேன். எனக்கொரு நம்பிக்கையிருக்கிறது. இங்கு ஒரு அன்பரைப் பற்றி காலையில் அறிய நேர்ந்தது. அவர் இருப்பிடத்தைச் சரியாக தெரிந்து வருகிறேன். புறப்படத் தயாராயிரு'' என்று கூறி சரண்டர் என்பவரின் இருப்பிடம் கேட்டாள்.

பாண்டிச்சேரிக்கு சற்று அருகில் உள்ள பிரசித்தமில்லாத ஒரு கிராமத்தின் பெயரைக் கூறி, அவர் ஊர்ப் பெயர் மட்டுமே தங்களுக்குத் தெரியும் என்றும், அவர் இருப்பிடம் சரியாகத் தெரியாது என்றனர்.

பரவாயில்லை. கிராமத்தின் பெயர் தெரிந்துவிட்டது. சிற்றூர்தானே, அவர் பெயரை வைத்துக் கண்டுபிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையிருந்தது.

தெரசாவின் கணவர் திரும்பியிருந்தார். டாக்ஸி வைத்துக் கொண்டு போகலாம் என்று முடிவாயிற்று.

தெரசாவின் கணவருக்குத் தன் மனைவியுடன், லூயியும் சேர்ந்து இதையெல்லாம் நம்புவது வேடிக்கையாயிருந்தது.

"லூயி, நீகூடவா இதையெல்லாம் நம்புகிறாய்? ஏதோ பாண்டி வர விரும்பினீர்கள், வந்தோம். இப்பொழுது என்ன ஆகிவிட்டது? பிரபல மருத்துவர்கள் குணப்படுத்த முடியவில்லை என்றதை இந்த மனிதர் குணப்படுத்துவது எப்படிச் சாத்தியம்?'' என்றார்.

"நீங்கள் ஸ்ரீ அரவிந்தரின் மகத்தான இரண்டு நூல்களைப் படிக்க வேண்டும். அவர் எத்தனை அற்புதமாகப் பெரிய விஷயங்களை நயமாகக் கூறியுள்ளார் என்று எனக்கு இன்னும் வியப்புத் தீரவில்லை. அந்த மகாயோகியார் இவரை மகாசக்தி என அடையாளங் காட்டியுள்ளார். நம் பாரிசில் அவதரித்தவர் அன்னை என்பதே என்னை மெய்ம்மறக்கச் செய்கிறது. மூடநம்பிக்கைகளையும், போலித்தனத்தையும் புறக்கணித்தவர் அன்னை என்பதைப் படித்திருக்கிறேன். ஆன்மாவினுடன் தொடர்பு கொள்ள முடிந்தால் எதுவும் சாத்தியம் என்றும் படித்திருக்கிறேன். அன்னை கூறும் சைத்தியக் கல்வியின் சட்டங்களில் "அறிவை நம்பாதே, ஆன்மாவை நம்பு' என்பதும் ஒன்று'' என்று கூறினாள் லூயி.

"தெரசாவின் நம்பிக்கையை மூடநம்பிக்கை இல்லை என்கிறாயா?'' என்று மேலும் கேலியாகக் கேட்டார்.

"நீங்கள் சொல்வதுதான் எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. பரமஹம்சர் சொல்லுவாராம், குருட்டு நம்பிக்கை என்றால் கண்ணுள்ள நம்பிக்கை என்று ஒன்றிருக்கிறதா என்ன என்று. அது போலவே நீங்கள் மூடநம்பிக்கை என்கிறீர்கள். அறிவுக்குப் புலப்படாததை ஆன்மா அறிவில் பிரதிபலிப்பதுதான் நம்பிக்கை என்று ஸ்ரீஅரவிந்தர் கூறியிருக்கிறார். இறைசக்தியைப் பற்றி எழும் நம்பிக்கையை விலைமதிப்பற்றதாக உணர்ந்து இறுகப் பற்றிக் கொள்ள வேண்டும் என்று ஸ்ரீ அன்னை கூறியுள்ளதைப் படித்திருக்கிறேன்'' என்று மேலும் லூயி தன் நம்பிக்கையை, ஆன்மாவைப் பற்றிய நம்பிக்கையை வலியுறுத்தினாள்.

"என் நம்பிக்கையை விடு. தெரசாவின் நம்பிக்கை பலித்தால் சரிதான்'' என்று ஒரு படி இறங்கிவந்தார் தெரசாவின் கணவர்.

மூவரும் காரில் புறப்பட்டு மேற்படி கிராமத்தை எட்டினர். மொழிப் பிரச்சனை காரணமாய் அவர்கள் தேடி வந்தவர் வீட்டை எளிதில் கண்டுபிடிக்க இயலவில்லை. கிராமமானதால் எதிர்ப்பட்டவர் பெரும்பாலும் அதிக படிப்பில்லாதவராய் இருந்தனர். ஆங்கிலத்தில் பேசி அவர்களைப் புரிய வைக்க இயலவில்லை.

இறுதியில் லூயிதான் ஒரு வழியைக் கண்டுபிடித்தாள். ஸ்ரீஅன்னையின் திருவுருவப் படம் ஒன்றை ஒருவரிடம் காண்பித்து இவர் இருக்குமிடம் எது என்று ஜாடையில் கேட்டாள்.

அவரோ அவர்கள் அன்னையைப் பற்றிக் கேட்பதாக எண்ணி பாண்டிச்சேரியில் இருக்கிறது என்றார். மேலும் அவருக்கு எப்படிப் புரிய வைப்பது என்று சிந்தித்து நின்றபோது அங்கு வந்த மற்றொருவர் அவ்வூரிலுள்ள சத்யன் என்ற அன்னை அன்பரைச் சந்தித்தால் அன்னையைப் பற்றி அறியலாம் எனவும், அவர் வீட்டைத் தான் அடையாளம் காட்டுவதாகவும் அவர்களுக்கு எப்படியோ வார்த்தையாலும், செய்கையிலும் கூறி, உடன் அழைத்துப் போனார்.

இவர்கள் சத்யன் வீட்டிற்கு வருவதற்கு முன் சத்யனைப் பற்றிச் சில செய்திகள் நாம் தெரிந்து கொள்வது நல்லது. சத்யனின் தந்தை அன்னையின் தோட்டத்தில் வேலை செய்தவர். ஒரு நாள் சத்யன் தன் தந்தையுடன் அன்னையைப் பார்க்கச் சென்றார். சிறுவர்களிடம் அதிக உரிமையுடன் பழகும் அன்னையின் இயல்பால் இவனை அருகே அழைத்து அன்புடன் ஒரு சாக்லேட் கொடுத்தார். மிகுந்த மகிழ்ச்சியுடன் அதைப் பெற்றுக்கொண்ட இவன், "எனக்கு மிகவும் பிடித்ததை நீங்கள் கொடுத்தீர்கள். உங்களுக்கு எது பிடிக்கும் என்று சொன்னால் நானும் அதை உங்களுக்குத் தருவேன்'' என்று கள்ளமில்லாமல் கூறினான்.

"எனக்கு ரோஜாப்பூ மிகவும் பிடிக்கும்'' என்றார் அன்னை.

"ஏன் அம்மலரைப் பிடிக்கும்?'' என்றான் மேலும்.

"அதுதான் தன்னை இறைவனுக்குப் பூரணமாய் தந்துவிடத் தயங்குவதில்லை. அதற்கு நான் சரணாகதி எனப் பெயரிட்டுள்ளேன்'' என்றார்.

"சரணாகதி என்றால் என்ன?'' என்றான் சிறுவன்.

"தயக்கமில்லாமல் இறைவனுக்குத் தன்னைத் தந்துவிடுவது'' என்றார் அன்னை.

"எனக்கு இறைவனைத் தெரியாது. உங்களை எனக்கு மிகவும் பிடிக்கிறது. நான் என்னை உங்களுக்கே சரணாகதி செய்து கொள்ளவா?'' என்றான் சிறுவன்.

சலனமில்லாத இளம்பருவமானதால் சந்தேகமின்றி அவர் கூறியதை அவனால் ஏற்க முடிந்தது.

"எனக்கு உன்னைச் சரணாகதி செய்து கொள்வதென்றால் எனக்குப் பிடித்ததைச் செய்வாயா?'' என்றார்.

"சொல்லுங்கள். நிச்சயம் செய்வேன்'' என்றான் உறுதியாக.

"எனக்குப் பொய் பிடிக்காது. கோபம் பிடிக்காது. போட்டியிடுவது பிடிக்காது. சோம்பேறித்தனம் பிடிக்காது. ஆர்ப்பாட்டம் பிடிக்காது. அன்பும், பொறுமையும், நேர்மையும்தான் எனக்குப் பிடிக்கும்'' என்றார்.

அந்தச் சிறு பருவத்தில் அன்னையின் அருள்வாக்கு அவன் இதயத்தில் நன்றாகப் பதிந்துவிட்டது.

அவர்மீது கொண்ட அன்பின் அடையாளமாக ரோஜாத் தோட்டங்களுக்கு நேரே சென்று தன்னால் இயன்ற பூக்களைச் சேகரித்து வருவான். அன்னை அவற்றை அன்புடன் பெற்று அவனை ஆசீர்வதிப்பார்.

நாளடைவில் சிறுகச் சிறுக உழைத்து சம்பாதித்து சொந்தத் தோட்டம் வைத்து மலர் பயிராக்கினான். அன்னையின் அறிவுரைப்படியே மலர் வியாபாரம் செய்தான். வியாபாரத்தில் கொள்ளை லாபம் பெற ஆசைப்படமாட்டான். அன்னை தமக்குப் பிடிக்காது என்பவற்றையெல்லாம் தன் வாழ்விலிருந்து விரட்டினான். அவர் தம்முடன் சாந்நித்யமாய் இருப்பதாகப் பூரணமாய் நம்பினான். தன் தந்தையார் இறந்தபோது ஊரையே புறக்கணித்து அவர் சடலத்தை எரிக்காமல் புதைத்தான். யாருக்கும் அஞ்சாமல் உண்மை பேசுவான். சோம்பியிருக்கமாட்டான். தன் சிறு பருவத்தில் ஒரு முறை, "அன்னையே, நீர் எப்பொழுது என் வீட்டிற்கு வரப்போகிறீர்?'' என்று ஆர்வமாய்க் கேட்டதற்கு, அன்னை அவனிடம், "உன் பக்தியும் நம்பிக்கையும் நாளுக்கு நாள் வளரும். என் வரவிற்காக நீ உன் வீட்டை நாள்தோறும் சுத்தமாக வைத்துக் கொள்வாய். திடீரென ஒரு நாள் நான் உன் வீட்டில் வெளிப்பட வேண்டியதிருக்கிறது. அப்போது வருவேன்'' என்று கூறினார்.

அதைச் சத்தியவாக்காய் ஏற்று தன் சிறிய வீட்டைச் செம்மைபடுத்தினான். வீட்டைச் சுற்றி அழகிய தோட்டம் அமைத்தான். ஆடம்பரம், ஆரவாரம் ஏதுமின்றி குறைந்த பொருட்களைக் கொண்டு வாழப் பழகினான். தன் வீட்டைப் பளிங்கு போல் பாதுகாப்பான். பொருட்களை ஜீவனுள்ளதாய் மதித்து நடப்பான். அவனைச் சிலர் பரிகசித்தனர். சிலர் வியந்தனர். சிலர் பாராட்டினர். அவன் எதனாலும் பாதிக்கப்படாதிருந்தான். அன்னை சமாதியாகுமுன் கொடுத்த திருவுருவப் படம் ஒன்று வைத்திருந்தான். அதுவே அவன் சொத்து. அதை அவன் சிரத்தையுடன் வைத்திருந்தான். வளர வளர அன்னையின் கோட்பாடுகளை தெரிந்து கொண்டான். சடங்கு, சம்பிரதாயங்கள் அன்னைக்கு விலக்கு என்பதால் ஊர்க் கட்டுப்பாட்டிற்கு அஞ்சாது, அவற்றைப் புறக்கணித்தான். இதனால் ஊர்ப் பெரியவர்களுடன் அவனுக்கு மாறுபட வேண்டிய நிலை வந்தது. அதற்கு அவன் கவலைப்படவில்லை. அன்னையிடம் தான் கொண்டுள்ள அன்பு உண்மையானது. அவருக்குத் தன்னால் துரோகம் செய்ய முடியாது என்று கூறிவிட்டான். ஊர்ப் பெரியவர் இவனைச் சபித்தார். பரம்பரையாய் செய்துவரும் சடங்குகளை மறுப்பதால் அவன் கேடுறுவான் என்றார். அவன் அவரை அலட்சியம் ஏதும் செய்யவில்லை. அதேநேரம் அவர் சாபங்களைப் பொருட்படுத்தவுமில்லை.

அதற்கு மறுநாள் அவர் தன் தென்னந்தோப்பிற்குச் சென்றபோது கனத்த தேங்காய் ஒன்று அவர் தலை மீது விழுந்து அவர் உயிர் பிழைப்பது பெரும்பாடாயிற்று. அதிலிருந்து சத்யனின் செயலில் யாரும் குறுக்கிடுவதில்லை. எவரும் குறை கூறும்வண்ணம் அவன் தவறாக நடப்பதும் இல்லை.

இப்படிப்பட்ட அன்னை அன்பனான சத்யனின் வீட்டிற்கு முன் அவ்வூரார் ஒருவரால் வழிகாட்டப்பட்டு தெரசா, அவள் கணவர், அவர்கள் மகள் மோனா, லூயி நால்வரும் காரில் வந்திறங்கினர்.

நந்தவனம் போன்ற அழகிய மலர்த்தோட்டத்தின் நடுவே, சிறிய, அழகிய அந்த வீடு தெய்வீகமாய்த் தோன்றியது. மலர்களின் மணம் மனத்திற்கு இதமளித்தது. அமைதியோ சொல்லற்கரியது.

வழிகாட்ட உடன் வந்தவர் படல் போன்ற கதவை மெல்லத் திறந்து ஒற்றையடிப் பாதையாய் அமைந்த சிமெண்ட் பாதையில் நடந்து சென்று வீட்டின் முன் நின்று உள்ளே பார்த்தார். கிராமத்தார் சப்தமிட்டுப் பேசும் வழக்கத்திற்கு மாறாக மெல்லிய குரலில் "ஐயா'' என்றழைத்தார்.

எளிய, தூய உடையணிந்த மலர்ச்சியான முகமுடைய ஒருவர் வெளிப்பட்டார். ஐம்பதைக் கடந்தவர்தாம். வயோதிகம் தெரியாத அளவு புத்துணர்ச்சியுடனிருந்தார்.

வழிகாட்ட வந்தவர், தணிந்த குரலில் வெளியே காரில் வந்திருப்பவர்கள் அன்னையை பற்றி ஏதோ கேட்பதாய்க் கூறி, அவர்களைக் காண்பித்தார்.

வெளியே நிற்பவர்கள் வெளிநாட்டினர் என்பது அவர்கள் தோற்றத்திலும் ஆடையிலும் தெரிந்தது.

அன்னையைப் பற்றிக் கேட்க வந்தவர்கள் என்றவுடன், ஆர்வத்துடன் வெளியே வந்து அன்பு பொங்க கைகூப்பி வரவேற்றார். உள்ளே அழைத்து உட்கார நாற்காலி போட்டார். உள்ளூர் போஸ்ட் ஆபீஸில் தனக்கு நட்பான இளைஞர் ஒருவர் படித்தவர் இருப்பதால் அவரை அழைத்து வரச் செய்தார்.

வீட்டிற்குள் வருமுன் பெண்கள் காரிலிருந்து மடக்கிய வீல்சேர் ஒன்றைப் பிரித்து, அதில் 6, 7 வயது மதிக்கத்தக்கக் குழந்தை ஒன்றை உட்கார வைத்து வீட்டு முகப்பு வரை தள்ளிக் கொண்டு வந்து, வீட்டிற்குள் நுழையும்போது குழந்தையை தூக்கிக் கொண்டு வந்ததைச் சத்யன் கவனித்தார். அதை மெல்ல கீழே துணியைப் பரப்பி அதில் படுக்க வைத்தனர். அக்குழந்தையின் முகத்தில் சலனம், உணர்ச்சி ஏதுமில்லை. நடக்க முடியாத குழந்தை போலும் என்றெண்ணி அதன் காலைக் கவனித்தபோது காலில் குறையொன்றும் தெரியவில்லை. குழந்தைக்கு நலமில்லைபோலும் என்று மட்டும் புரிந்துகொண்டார்.

அதற்குள் போஸ்ட் ஆபீஸ் நண்பர் பாலன் வந்துவிடவே, அவரிடம் இவர்களைப் பற்றி விசாரிக்கும்படி சத்யன் கேட்டுக் கொண்டார்.

இனிய ஆங்கிலத்தில் பாலன் அவர்களுடன் உரையாடத் தொடங்கியதும் அவர்கள் தாங்கள் பாரிஸைச் சேர்ந்தவர்கள் என்று கூறினார்கள்.

பாரிஸ் என்ற சொல்லைக் கேட்டவுடன் சத்யன் பரவசமானார்.

"எங்கள் அம்மாவின் ஊரிலிருந்தா வந்திருக்கிறார்கள்?'' என்று சொல்லும்போது அவர் நா இனித்தது.

அவரின் ஒரே சொந்தம், ஒரே சொத்து ஸ்ரீ அன்னை. அன்னை தொடர்பான யாவுமே அவரைப் பரவசப்படுத்தும்.

அவர்களுக்குப் பருக இளநீர் கொண்டு வரச் சொன்னார். அவர்கள் மறுக்கவே, தாமே அவர்களுக்கு டீ தயாரித்துக் கொடுத்தார்.

அவர்கள் தங்கள் மகள் பிறந்ததிலிருந்து மனவளர்ச்சி இல்லாதிருப்பதையும், உணர்வற்ற நிலையில் இருப்பதையும், பல மருத்துவர்களும் தோற்றுப்போனபின் அன்னையின் அருளை நாடி இந்தியா வந்திருப்பதையும் தெரிந்துகொண்டார்.

அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்தக் குழந்தையை மெல்ல எடுத்துத் தோள் மீது போட்டுக்கொண்டார். முதுகை மெல்ல வருடிக் கொடுத்தார். தாம் முதன்முதலில் சிறுவனாய் இருந்தபோது அன்னையைத் தரிசித்த காட்சியை நினைவுகூர்ந்தார். முகமெல்லாம் சிரிப்பாக குனிந்து அவர் தமக்களித்த சாக்லேட்டை தான் ஆவலோடு வாங்கிக் கொண்டபோது தன் முதுகில் தட்டிக் கொடுத்ததை இப்போது நடப்பது போல் உணர்ந்தார். அவர் கண்கள் ஆனந்தக்கண்ணீர் வடித்த காட்சியைச் சுற்றியிருந்தவர் கண்டனர்.

அருகிலிருந்த உள்ளூர் நண்பரிடம், நாட்டுவைத்தியர் ஒருவரை அழைத்து வரச்செய்தார். அக்குழந்தையின் உடல்நிலை பற்றிக் கூறி, "ஏதேனும் மருந்து உண்டா?'' என்றார்.

நாட்டுவைத்தியர் தம்மிடம் ஒரு மூலிகைத் தைலம் இருப்பதாயும், அது மிகுந்த சக்தியுள்ளது என்றாலும் அது எல்லோர்க்கும் பலிப்பதில்லை என்றும், ஒருவேளை சத்யனின் அன்னை பக்திக்கு அது பலித்தால் உண்டு என்றும் கூறினார்.

அருளை ஏற்பதில் இரண்டு நிலைகள் உண்டு. ஒன்று ஆதாயத்திற்காக ஏற்பது. இது அவ்வளவு சிறந்ததில்லை. மற்றொன்று ஆன்மீக வரமாக அதனை ஏற்பது. இது உயர்ந்தது. சத்யன் அன்னையின் அருளை ஆன்மீக வரமாகப் பெற்றிருந்ததால் அவர் அத்தைலத்தைக் குழந்தைக்குத் தம் கையால் தடவினார். "அம்மா இத்தைலத்தின் மூலம் நான் உம் அருளையே தடவுகிறேன்'' என்று எண்ணிக்கொண்டார்.

குழந்தையின் முகத்தில் உணர்ச்சி ரேகைகள் கோடிட்டன. கை, கால்களை மெல்ல அசைத்தது. அப்போது தெரசாவின் மனநிலையை வருணிக்க எந்த மொழியிலும் சொற்கள் இல்லை.

அவள் சத்யனின் காலில் விழுந்து வணங்கி, தன் மகளைப் பெற்றுக்கொண்டாள். தெரசாவின் கணவர் வாழ்க்கையில் முதல்முறையாக ஆன்மீக சக்தி என லூயி கூறியதைப் பற்றி எண்ணலானார்.

அதன் பிறகு தெரசா தான் கண்ட கனவைச் சத்யனுக்குக் கூறும்படி பாலனிடம் விவரித்தாள். அதைக் கேட்ட சத்யன் மிகுந்த பரவசத்துடன் உள்ளே சென்று, முதன்முதலில் அன்னை தமக்களித்த அவர் திருவுருவப் படத்தை எடுத்துக் கண்ணீர் பெருக தரிசித்தார். "அம்மா நீர் வருவதாகச் சொன்ன நாள் இன்றுதான் என்று கண்டுகொண்டேனம்மா. உம் சாந்நித்யம் வெளிப்பட்ட நாள் இன்று. என் தவம் பலித்த நாள் இது'' என்று பரவசப்பட்டார்.

இனி பத்திரிகையாளர்களும், TV நிகழ்ச்சி தயாரிப்பாளரும் அங்குக் கூடியதையும், மறுநாள் வெளிவந்த செய்திகளையும் வாசகர்களின் கற்பனைக்கே விட்டுவிட்டேன்.

முற்றும்.

********



book | by Dr. Radut