Skip to Content

12. லைப் டிவைன் - கருத்து

லைப் டிவைன் - கருத்து

யதார்த்தம், நடைமுறை என நாம் அறிவதை அளவு கடந்து வற்புறுத்துவது, நம்மை இலட்சியத்தை அடைவதினின்று தடை செய்யும்

  • 1947இல் சுதந்திரம் வந்தது. நாடு ஏழை நாடாக இருந்தது. அன்று தினக்கூலி 25 பைசா. சர்க்கார் குமாஸ்தாவுக்கு மாத சம்பளம் 30 ரூபாய். கடைப்பையனுக்கு ரூ.5/- மாத சம்பளம். இருப்பதைக் காப்பாற்றப் பிரம்மப்பிரயத்தனம் செய்ய வேண்டும். வீடுள்ளவர் குறைவு. நிலமுள்ளவர் மிகக் குறைவு. ஓர் ஊரில் சர்க்கார் வேலை செய்பவர் 100 பேரிருக்கமாட்டார்கள். ஏட்டு வேலையைப் பெரிய வேலையாக நினைத்த காலம். ஆலையில் 15 ரூபாய் சம்பளம். ஒரு நாள் போவது ஒரு யுகமான நேரம். சுதந்திரம் வந்தது. அதைத் தொடர்ந்து சுபிட்சம் சற்று தலையெடுக்க 40 ஆண்டுகளாயின. 1987 முதல் நிலைமை வேறு. சம்பளம் ஏறியபடியிருக்கிறது. 150 ரூபாய் பெற்ற கல்லூரி ஆசிரியர் 4,000 ரூபாய் பெறுகிறார். வேலை கிடைக்கவில்லை என்பது போய் வேலைக்கு ஆள் கிடைக்கவில்லையென்பது நிலைமை. தமிழ்நாட்டில் 250 பள்ளிகளும் 20 கல்லூரிகளும் இருந்த நிலை மாறி 250 கல்லூரிகள் எழுந்தன. 2 சர்வ கலாசாலை 12ஆக மாறியது. 25 பைசா தினக்கூலி 25 ரூபாயாயிற்று. நிலைமை மாறினாலும் மனநிலை மாறவில்லை.

    நாட்டில் கடை வியாபாரம் பெருகி 40 கடையிருந்த தெருவில் 400 கடைகள் வந்தன. எந்தக் கடையிலும் வியாபாரமில்லை என்ற நிலை மாறி எல்லாக் கடைகளிலும் வியாபாரம் அபரிமிதமாகப் பெருகியது. வியாபாரம் எனில் முதல் அழியும் என்ற நிலை 10ஆக இருந்தது 1ஆக மாறியது.

    2007இல் கூலி 200 ரூபாய் ஆயிற்று. கல்லூரி ஆசிரியர் சம்பளம் 50,000 ஆயிற்று. 400 கடைகள் 4000 கடைகளாயின. கடையில் நிற்க இடமில்லாமல் கூட்டம் பொங்கி வழிகிறது. 250 கல்லூரிகள் 1200 கல்லூரிகளாயின. பஞ்சம், பசி, பட்டினி மறந்து வளம் தென்பட ஆரம்பித்தது. ஏழ்மை போக வேண்டும் என்பது மாறி வளம் வர வேண்டும் என்ற நோக்கம் எழுந்தது.

    வருமானம் என வரும்பொழுது நிலையான சர்க்கார் வேலையை மனம் நாடுகிறதே தவிர, அபரிமிதமாக சம்பாதிக்கும் வியாபாரம், தொழிலை மக்கள் கருதவில்லை. ஏனெனில் நடைமுறையில் தொழிலில் ரிஸ்க் அதிகம். திறமையான இளைஞன் சம்பளமாக 15,000 ரூபாய் பெறும்பொழுது, அவனைப் போன்றவர் தொழில் செய்பவர்கள் மாதம் 10 இலட்சம் சம்பாதிப்பதை நாம் காண்கிறோம்.

    • நடைமுறை, யதார்த்தம், எளியதை நாடி 15,000 சம்பாதிக்கும் பொழுது
    • மார்க்கட் வாய்ப்பைப் பயன்படுத்துவோர் 10 இலட்சம் சம்பாதிப்பது நடைமுறை.

    வேதாந்தம் அப்படியொரு கருத்தை வெளியிடுகிறது.

    • எண்ணம் என எழுவது சத்தியம்.
    • உணர்ச்சியென உணர்வது ஆனந்தம்.
    • செயல் என நடப்பவை நல்லன.

    ஆனால் நாம் காண்பவை பொய், வலி, தவறு. இது ஏன்? நாம் உலகில் எழும் வாய்ப்பையறியாது, அறிந்து போற்றாமல், நடைமுறையை வற்புறுத்தி, சுலபமான முறையைக் கைக்கொள்கிறோம்.

    • சுலபமான முறைக்குக் கிடைக்கும் பலன் எளியது, சிறியது.
    • வாய்ப்பை ஏற்கும் முறைக்குக் கிடைக்கும் பலன் அளவு கடந்து பெரியது.

    இது "அகந்தை - இரட்டைகள் " என்ற அத்தியாயம். அகந்தை நிதர்சனமானது.

    • உலகில் எழும் துன்பம் அனைத்தும் அதனால் எழுபவை.
    • அகந்தையினின்று விலகினால் துன்பம், தோல்வியில்லையெனக் கூறுகிறார்.

    அகந்தையை விட்டு அகல எழும் தடைகளை விளக்கமாக எழுதுகிறார்.

    • அகந்தை பகுதியானது.
      முழுமையை நாடினால் அகந்தை கரையும்.
    • அகந்தை கூறுபவை கற்பனைக்கு உதவும், கருத்தில் கொள்ள முடியாது எனத் தோன்றுகிறது.
      கற்பனையில் பலித்தால் வாழ்வில் அது பலனாக எழும்.
    • அகந்தை இடைப்பட்டது. அதை முடிவாகக் கருதினால் வாழ்வு கர்மத்திற்கு உட்படும்.
      அகந்தை இடைப்பட்டது, ஆத்மா முடிவானது எனக் கொண்டால் துன்பம் ஆனந்தமாக, தோல்வி வெற்றியாக மாறும் என பகவான் கூறுகிறார்.

******



book | by Dr. Radut