Skip to Content

10. யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  1. சாதனைக்குரிய வேலை தயாரானபின், முன்னிலையின் அனுபவத்தால், அது நிர்ணயிக்கப்படும்.
    சாதனைக்குத் தயாராகுமுன், அனுபவம் வேலையைக் கெடுக்கும்.
    தயாரானபின் அனுபவிக்க மறுத்தால், சாதனையைத் தடை செய்யும்.

    அவசரமாக அனுபவிப்பதும், அனுபவிக்க மறுப்பதும் சாதனைக்குத் தடை.

    தலையில் கண்ணாடி சாமான்களைச் சுமந்து விற்கும் வியாபாரி, தன் இலாபத்தைக் கணக்குப் போட்டு, பெரிய தொகை சம்பாதித்து, ராஜகுமாரியைத் திருமணம் செய்து, அவளை எட்டி உதைப்பதாகக் கற்பனை செய்து, காலை உதறி, தலைச் சுமை விழுந்து, அனைத்தும் போனது, கதை.

    • இந்தக் கதை எல்லா நாடுகளிலும் உண்டு.
      நமக்குத் தெரிந்தவரில் இதற்கு விலக்குண்டாஎன ஆராய்ந்தால் உலகம் புரியும்.
      நம் சொந்த அனுபவத்தில் நாம் இதற்கு விலக்காக எத்தனை முறை இருந்திருக்கிறோம் என நினைத்துப் பார்த்தால், நமக்கு நம்மைப் புரியும்.
      இது விதி. இதற்கு விலக்காக இருப்பது கடமை.
    • அமெரிக்காவிற்குப் பயிற்சிக்காகப் போக ஏற்பாடு செய்தபொழுது, விசா பெறுமுன் அனைவரிடமும், போய் வந்தபின் நடப்பதுபோல் நடந்தவர்க்கு விசா கிடைக்கவில்லை. மேலும் இரு ஆண்டுகளுக்கு விசாவுக்கு விண்ணப்பிக்கக் கூடாதுஎன உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
    • எதிர்பார்ப்பது சுபாவம். காரியத்தைப் பூர்த்தி செய்ய தெம்பிருந்தால், காரியம் பூர்த்தியாகும். தெம்பில்லாவிட்டால், மனம் எதிர்பார்க்கும். எதிர்பார்க்கும்வரை காரியம் பூர்த்தியாகாது. எப்படி எதிர்பார்ப்பதைத் தடுப்பது?
      • வேறு வேலையில் கவனம் எதிர்பார்ப்பதைக் குறைக்கும், தடுக்காது.
      • எதிர்பார்ப்பு வேண்டாம்எனப் பிரார்த்தனை செய்தால், பலிக்கும்.
      • அந்த பிரார்த்தனை செய்ய அனைவராலும் முடியாது.
      • பிரார்த்திக்க முடியாதவர், அன்னையை அழைக்க முயன்றால், அதுவும் கடினம்.
        அழைத்தால் எதிர்பார்ப்பு குறைந்து, மறையும்.
        மறைந்த நேரம் காரியம் முடியும்.
        அழைப்பு இல்லாத தெம்பைத் தருகிறது.
    • நமது மரபு சிறுகக் கட்டிப் பெருக வாழ வேண்டும் என்பது.
      அளவு கடந்து அனுபவிக்க முயல்வது தவறான எண்ணம் என்பது பரம்பரை.
      விரதம் நல்லது, ஆசை தவறு என்பது கொள்கை.
      • அன்னை சட்டம் இதற்கு எதிரானது.
        அனுபவிக்க அனுபவிக்க வசதியதிகமாகும் என்பது அன்னை.
        பரம்பரை சரி, அன்னையும் சரிஎன்றால் எப்படிப் புரியும்?
        மனம் குறுகியதானால், பரம்பரை சரி.
        மனம் விசாலமானால், அன்னைக்குப் பொருந்தும்.

      என்ன செய்கிறோம் என்பதைவிட, என்ன மனநிலையில் செய்கிறோம் என்பதே முக்கியம்.

      அனுபவிப்பது சரி, நல்லது, நல்ல மனநிலையில் பெருந்தன்மையாக, சொல்பமாக இல்லாமல் பொருள்களை அனுபவிப்பதே முறை என்பது அன்னை சட்டம்.

    • இதே கருத்தை இராமலிங்க சுவாமிகள் "சிவபெருமான் திருவுள்ளம்" என ஒரு பாடல் எழுதியுள்ளார்.
    • செலவு செய்தால் பணம் வரும்என்பதும், அனுபவித்தால் பெருகும் என்பதும் ஒன்றே.

      ஆசையுள்ளவரை அனுபவிக்கக் கூடாது. ஆசையின்றி அவசியத்திற்காக அனுபவிக்க மறுக்கக் கூடாது.

      • சத்தியம் என்றும் அழியாது.
      • மரபை மாற்றி, அன்னை மரபைக் கடக்க நமக்கு அளிக்கும் மனநிலை, முறை இது.
  2. நகைச்சுவை வாழ்வின் வளமான நயம்.
    அறியாமை தன் மடைமையை இனிமையாக உணர்ந்து, மகிழ்ந்து, பெருகுதல் நகைச்சுவையாகும்.

    மடைமையின் இனிமையை மகிமையாகக் கருதுவது நகைச்சுவை.

    ஒரு நிகழ்ச்சியை விபரமாக எவரும் கூறலாம். பலரால் அரைகுறையாகக் கூற முடியுமே தவிர, முழுமையாகக் கூற முடியாது. அனுபவசாலிகள் நிகழ்ச்சியின் பகுதிகளை அறிவர். அவர்கள் அப்பகுதிகள் சிறக்கும் வகையில் அதே நிகழ்ச்சியைக் கூறுவது கேட்பவர் பரவசப்படுவர். நடந்ததை இனிமையாகக் கூறுபவரும் உண்டு. அனைவரும் சிரித்து மகிழும்படியும் கூறலாம். பலர் சிரிக்க வேண்டுமானால், அது ஒருவரைக் கேலி செய்வதாக அமையும். எவரையும் கேலி செய்யாமல், அனைவரும் மகிழும்படிக் கூறும் திறமை புலமையின் இனிமை. மடையன் தன்னை வியந்து கொள்வான். உலகம் அறியாமையென அறிவதை, அறிவில் அறிவின் சிறப்புஎனக் கொள்வான். அதை நினைந்து மகிழ்ந்து, நினைவு சிறந்து, நெகிழ்ந்து பூரிப்பான். அது நகைச்சுவையின் சிறந்த அம்சம். அது போன்றவை,

    • முரண்பாட்டை உடன்பாடாகக் கூறுவது.
    • சிறியதைப் பெரியதாகப் புனைவது.
    • துரோகம் செய்ததை விஸ்வாசம் என்பது.
    • நஷ்டத்தை இலாபம்என வர்ணிப்பது.
    • மனைவிக்கு அடங்கிய புருஷனை, தம்பதிகள் கருத்து வேற்றுமையற்றவர் என்பது.
    • வகுப்பிற்கு இரண்டு வருஷம் படிப்பவனை, பள்ளி மீது விஸ்வாசமானவன்என விவரிப்பது.
    • உட்கார்ந்த இடத்தை விட்டு எழுந்து வாராத சோம்பேறியை, தவம் செய்பவர் எனக் கூறுவது.
    • திருட்டுத் தொழிலை முதலில்லாத தொழில் என்பது.
    • கடைத் தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு உடைப்பவனை, வள்ளற்பெருமான் என்பது.
    • இராமாயணப் பிரசங்கம் பாரமாக இருப்பது.
    • சொந்த வீடில்லாதவரை, எந்த வீட்டிற்கும் உரிமையுள்ளவர் என்பது.
    • ஊரில் உள்ள அனைவரையும் ஏமாற்றியவரை, ஊரறிந்தவர் என்பது.
    • பெற்ற நஷ்டத்தைப் புத்திக் கொள்முதலாக்குவது.

    ஆண்டி மடம் கட்டியது கதை. மடையன் தன் அறியாமையை அறிவு எனக் கொண்டு, பெருங்காரியங்களைச் செய்வதாகக் கற்பனை செய்வதுண்டு. அது வெளியில் வாராது. மடைமை மகிமை நிறைந்ததானால், மடையன் தன் கற்பனையை உண்மை என நம்பி, வெளியில் சொல்லப் பிரியப்படுவான். அதனடிப்படையில் பிறருக்கு உதவி செய்ய, சேவை செய்ய முன்வருவான். கேட்பவர்கட்கு அது நகைச்சுவையின் உச்சக்கட்டமாகும். தான் நம்புவதைப் பிறரும் நம்புவதாக நினைப்பான். தன்னைக் கேலி செய்வதை அறியான். பலரும் கேலி செய்ய அவனை அழைத்துப் பேசச் சொல்வார்கள். ஆர்வமாக முழுநம்பிக்கையுடன் அவன் பேசுவது அனைவருக்கும் உச்சக்கட்ட நகைச்சுவை நிகழ்ச்சியாக அமையும்.

  3. சாதனைக்குரியவை முறையாக
    (1) வலிமை, (2) அமைப்பான முறை, (3) செயல்திறன் (skill).

    வலிமையும், திறமையும் சாதிக்கும்.

    இரும்பு வலிமையானது. ஒரு குச்சிக்கு இரும்பின் வலிமையில்லை. அடிமரம் கிளையைவிட வலிமையானது. காற்றில் கிளைகள் சேதமாகும், அடிமரம் சேதமாகாது. கல் சுவருக்கு மண் சுவரைவிட வலிமை அதிகம். இவை பொருள்களின் வலிமை. கிராமத்தில் உள்ளூர்க்காரனுக்குள்ள வலிமை வெளியூர்க்காரனுக்கு இருக்காது. மதர் தெரிசா நோபல் பரிசு பெற்றாலும், உள்ளூரில் அவரை வெளியேற்ற பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டன. ஓரூரில் 1500 ஏக்கர் நிலமிருந்தால், நிலத்திற்கு வேலி போடுவதில்லை. பயிரிட ஆரம்பித்தால், ஆடு, மாடு வெளி வாரா. இது உள்ளூர் நிலை. வெளியூர்க்காரனுக்கு இந்நிலையில்லை. ஆடு வரும், மாடும் வரும். அவன் நிலம் 100 ஏக்கரானால் 100 ஏக்கருக்கு வேலிபோட நிலத்தின் விலையாகும். அந்த வேலியைப் பிய்த்துக் கொண்டு 10 மாடு வந்தால், அவற்றைப் பட்டியில் அடைக்கலாம். ஏராளமாகப் பயிரைச் சிதைத்தபின் பட்டியில் அடைத்து என்ன பயன்? பட்டியில் அடைத்தால், ஊரார் திரண்டு வந்து மாடுகளை விட்டுவிட வேண்டும் எனக் கேட்பார்கள். ஊராரைப் பகைத்துக்கொண்டு பயிரிட முடியாது. கோர்ட்டிற்கும், போலீசுக்கும் போய் பயிரிடுதல் நடக்காது. நடைமுறையில் 100 ஏக்கர் நிலம் உள்ளவர் நிலத்தில் மாடு வந்தால், மாட்டின் சொந்தக்காரனை அறையில் அடைத்து, நையப் புடைப்பார். எதிர்க்க முடியாது. அதன்பின் எந்த மாடும் வாராது. 100 ஏக்கர் நிலம் வெளியூரில் பயிரிடும் அன்பருக்கு உள்ளூரில் உள்ளவர் பெறும் பாதுகாப்பை வன்முறையின்றி சமர்ப்பணம் பெற்றுத் தரும்.

    அதுவே வலிமை எனப்படும்.

    கொஞ்ச நாளானபின் அவருக்கு ஊரார் பயப்படுவார்கள். அவர் பெயரைக் கேட்டால் நடுங்குவார்கள். அந்த வலிமையின்றி அரசியலிலோ, ஊரிலோ பெருங்காரியம் செய்ய முடியாது. அடி உதவுவதுபோல் அண்ணன், தம்பி உதவமாட்டார்கள். அந்த வலிமை இல்லாதவனால் பணம் சம்பாதிக்க முடியாது, எலக்ஷனில் ஜெயிக்க முடியாது, திருமணம் நடத்த முடியாது, மரியாதையுடன் குடும்பம் நடத்த முடியாது.

    • சாதிப்பவர் அனைவருக்கும் வலிமையுண்டு.
    • வலிமையுள்ளவர் அனைவரும் திறமையால் சாதிப்பார்.

    திறமை என்பது பல கட்டங்களுக்குரியது. தெம்பைத் திறமை என்பார்கள். சொல்லுக்குக் கட்டுப்படுவது திறமை. பலரைச் சேர்த்துப் பெரிய காரியங்களைச் செய்வதும் திறமை. நேரம் வரும்பொழுது சாதுரியமாகக் காரியத்தை நிறைவேற்றுவதும் திறமை. இவற்றை energy தெம்பு எனவும், force சக்தியெனவும், power பவர் எனவும், அமைப்பு முறை organisation எனவும், செயல் திறன் skill எனவும் குறிப்பிடுகிறோம்.

    நான்கு மில் உள்ளவர் மகனுக்கு கோடீஸ்வரன் வீட்டில் சம்பந்தம் செய்தார். கோடீஸ்வரனுடைய ஏராளமான உறவினர் ஸ்பெஷல் இரயில் எடுத்துக் கொண்டு வந்தனர். ஏராளமான செலவு. பெரிய ஆயிரக்கணக்கான உறவினர்கள். அலங்காரம், ஆர்ப்பாட்டம் பெரியது. விருந்திற்குச் சாப்பாடு தயாராக இல்லை. இருந்த சாப்பாட்டை பரிமாறும் ஏற்பாடில்லை. அனைவரும் ஹோட்டலில் சாப்பிட்டனர். Organisation அமைப்பு முறை வேண்டும். பெரிய விசேஷங்களில் queue வரிசை, சாப்பாடு, மற்ற ஏற்பாடுகளை அனைவரும் பாராட்டுவர்.

    எந்த இடத்திலும் எதுவும் தவறும். அந்த நேரம் அதைக் கவனமாக, பக்குவமாக, சாதுரியமாகக் கவனித்து, சமாளிக்க வேண்டும். அதற்குரிய ஏற்பாடுகள் அவசியம். அதை skill செயல் திறன் என்பார்கள்.

    யோகச் சாதனை செய்ய வலிமை, திறமை அவசியம். உடல் உறுதி, மன உறுதி, நிலையான இலட்சியம், அசைக்க முடியாத, ஆட்டங்காணாத மனப்பான்மை, பட்டினி கிடந்தாலும் பாதிக்கப்படாத உடல் அஸ்திவாரம். அது இல்லாதவரால் யோகத்தை ஆரம்பிக்க முடியாது.

    பயிரிட்டால் ஆடு, மாடு சேதம், எலக்ஷனில் அடாவடிக்காரன் அட்டூழியம், யோகத்தில் ஆசை, அவசரம் உள்ளிருந்தும், hostile forces எதிரான சக்திகள் வெளியிலிருந்தும் வரும். விஸ்வாமித்திரர் தவம் செய்ய இராமனைப் பாதுகாப்புக்கு அழைத்துச் சென்றார்.

    காட்டில் தவசி தம் இடத்தைச் சுற்றி ஒரு வட்டம் போடுவார். மந்திரம் சொல்வார். அந்தக் கோட்டைத் தாண்டி விஷ ஜந்துக்கள் வாரா. ஒரு வேர் 4 அங்குலம் எடுத்து சாப்பிட்டால் ஒரு வாரம் பசிக்காது. இதுபோன்ற யுக்திகள் தவம் பலிக்கத் தேவை.

    பூரண யோகத்திற்கு வம்புப் பேச்சு, shopping, television பார்ப்பது, மரியாதைபோன்ற ஆயிரம் எண்ணங்களும், ஆசைகளும் உள்ளிருந்தும், வெளியேயிருந்தும் எழும்.

    அவற்றால் பாதிக்கப்படாத மனநிலை யோகத்திற்கு அவசியம்.

தொடரும்....

*******

ஜீவிய மணி
 
ஆனந்தத்தின் உற்பத்தி ஸ்தானம் அனந்தம்.
 
******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
ஒரு நிலை (level) முறையால் (organisation) செறிவாக நிறையும்பொழுது, அதை மேலும் உயர்த்த ஒரு நல்ல காரியம் செய்தாலும் (தவறு இழைத்தாலும்) வாழ்வு எதிரொலிக்கும்.
 
செறிவான நிலை நல்லதாலும் கெட்டதாலும் உயரும்.  
 
*******



book | by Dr. Radut