Skip to Content

08. இரகஸ்யத்தின் ஜீவன்

இரகஸ்யத்தின் ஜீவன்

கர்மயோகி

  • வாழ்வின் இரகஸ்யம் உழைப்பு.
  • உழைப்பால் உயர்ந்த உத்தமர் என்பது சொல்.
  • உடலால் வேலை செய்பவன் உழைப்பாளி.
  • உழைப்பு தவறாது, தவறியதில்லை.
  • உழைக்காமல் உயர்ந்தாரில்லை.
  • உழைப்பின் இரகஸ்யம் உயிர்.
  • உயிர் என்பது உணர்வு.
  • உணர்வு உழைப்பைவிட உயர்ந்தது.
  • உழைப்பால் பெறும் பலனை உணர்வால் பல மடங்கு அதிகம் பெறலாம்.
  • உணர்வால் உழைப்பது ஊரைக் கூட்டிச் செயல்படுவது.
  • ஊரைக் கூட்டுபவன் தலைவன்.
  • ஒரு தலைவனுக்கு ஓராயிரம்பேர் வேலை செய்வார்கள்.
  • நூறு உழைப்பாளிகள் சாதிப்பதைவிட உணர்வால் உழைக்கும் தலைவன் சாதிப்பான்.
  • உணர்ச்சி தலைவனாக்கும்.
  • உணர்ச்சி உயர்ந்தால், தலைவன் அரசனாவான்.
  • அதுவும் உயர்ந்த நிலையில், அரசன் சக்ரவர்த்தியாவான்.
  • உணர்வின் இரகஸ்யம் உயர்ந்தது, அது அறிவு.
  • அறிவுள்ளவன் அறிஞன், விவேகி, மேதை.
  • அறிஞனுக்கு அரசனும் கட்டுப்படுவான்.
  • அரசன் செய்யும் வேலையை அறிவு வெளிப்படும்படிச் செய்ய அறிஞன் உதவுவான்.
  • அறிவு அரசியலில் சிறந்தால் அர்த்தசாஸ்திரம் எழுதுவான்.
  • அர்த்தசாஸ்திரம் அவன் பெயர் ஆயிரமாண்டு விளங்கச் செய்யும்.
  • அறிவு உழைப்பில் வெளிப்படுவது உழைப்பு உயர்ந்த பலன் தருவது.
  • அவனை இன்ஜினியர் என்கிறோம்.
  • வெறும் உழைப்பாளி, என்றும் இன்ஜினியரை எட்ட முடியாது.
  • அறிவின் மூலம் உண்டு. அது அறிவின் சாரமாகும்.
  • அறிவின் சாரம் ஆன்மா.
  • ஆன்மா அறிவில் வெளிப்பட்டால், அவன் மேதையாகிறான்.
  • ஆன்மா உணர்வில் வெளிப்பட்டால், அவன் கவியாக மாறுவான்.
  • ஆன்மா உழைப்பில் வெளிப்பட்டால், அவன் சிறந்த கலைஞன் ஆவான்.
  • ஆன்மா மௌனத்தால் செயல்படும்.
  • மௌனம் தவம்.
  • தவம் நிறைந்த நெஞ்சம் உழைக்க முயன்றால் வில்வபத்ரம் தங்கமாகும்.

    இரகஸ்யத்திற்கு ஜீவன் உண்டு.
    அந்த ஜீவனுக்கும் இரகஸ்யம் உண்டு.
    அது இரகஸ்யத்தின் ஜீவனின் இரகஸ்யம்.

  • அதன் வீச்சு அதிகம்.
  • அதன் செயல் தலைகீழாகத் தோன்றும்.
  • தலைகீழாகத் தோன்றுவதை நேராகப் புரிந்து கொண்டால், பேசிச் சாதிப்பதைப் பேசாமல் அதிகமாகச் சாதிக்கலாம்.
  • செய்து முடிப்பதைச் செய்யாமல் அதிகமாக முடிக்கலாம்.
  • பேசிச் சாதிப்பவன் மேடையில் பேசி எலக்ஷனில் ஜெயிப்பான்.
  • பேசாமல் சாதிப்பவர் இமய மலையில் தவம் செய்து பிரான்சில் புரட்சியை உற்பத்தி செய்வார்.
  • இராமன் ஆயுதமேந்தி வென்ற போரை, கிருஷ்ணன் ஆயுதம் ஏந்தாமல் போர்க்களம் சென்று வென்ற போரை, புதுவையிலிருந்து உலகப் போரை வெல்லலாம்.
  • உலகில் அணு ஆயுதம் அழிக்கப்பட வேண்டும்என்று பேச அமைத்த ஸ்தாபனம் கூடிப்பேசுமுன் வல்லரசுகள் அவற்றை அழிக்க முன்வரும்.
  • உலகில் உணவுப் பற்றாக்குறை அழிய எழுதிய திட்டம் தானே தன்னை நிறைவேற்றிக் கொள்கிறது.
  • வேலை பெறும் உரிமையை அடிப்படை உரிமையாக்க நினைத்து, ஆராய்ந்து, நூல் எழுதி வெளியிட்டால், நாட்டில் கட்டாய வேலை வாய்ப்பு அரசியல் உரிமையாகிறது.
  • ஏழ்மை அழிய உள்ளம் ஏங்கினால் கூலி 100 மடங்கு உயருகிறது.
  • மழை பெய்ய மனம் விழைந்தால் 40 அங்குல மழை 82 அங்குலமாகிறது.
  • பட்டதாரிகள் உயர்ந்த பட்டம்பெற விழைந்தால், எந்தப் பட்டமும் தபாலில் பெறும் நிலை ஏற்படுகிறது.
  • தவணை முறை விற்பனை மற்ற நாடுகள்போல் நம் நாட்டிலும் வர வேண்டும்எனப் பத்திரிகையில் கட்டுரை எழுதினால், நாட்டில் தவணை முறை அமுலாகிறது.
  • தமிழ் மக்கள் அன்னை, பகவான் அருளைப்பெற அவா எழுந்தால் பெருவாரியான மக்கள் அன்பராகிறார்கள்.
  • 1988இல் மாதம் 10,000 ரூபாய் வருமானம் ஏற்பட விரும்பினால், 2000த்தில் மாத வருமானம் ஓர் இலட்சமாக வேண்டும்என மனம் கொண்டால், 2008இல் சம்பளம் 50,000 ரூபாயாக உயர்கிறது.

    இது ஆன்மீகம் வளர்ந்த நாடு. பகவான் ஸ்ரீ அரவிந்தர் அவதரித்த நாடு. நாட்டை அடிமைத் தளையினின்று அவர் விடுதலை செய்தார். சுதந்திரம் பெற்ற அன்று தினக்கூலி 50 பைசா. குமாஸ்தா சம்பளம் 65 ரூபாய். கலெக்டர் சம்பளம் 400 ரூபாய். ஜனாதிபதிக்கு 10,000 ரூபாய் சம்பளம். இன்று கூலி 200 ரூபாய், குமாஸ்தா சம்பளம் 10,000 ரூபாய், கலெக்டர் சம்பளம் இலட்ச ரூபாய், ஜனாதிபதிக்கு 1½ இலட்சம் சம்பளம். இன்று அமெரிக்காவில் $ 25 மில்லியன் சம்பாதித்தவரை super rich பெரும்பணக்காரராகக் கணக்கிடுகிறார்கள். நம் நாட்டில் அது கனவிலும், கற்பனைக்கும் எட்டாதது. எனினும்,

    • ஜீவனின் இரகஸ்யம் அறிந்தவர்க்கு அது பலிக்கும்.
    • இரகஸ்யத்தின் ஜீவன் பெற்ற இரகஸ்யத்தை அறிந்தவர், அறிந்து பயிலுபவர் அன்னையிடமிருந்து பெறும் அருள் பரிசு அது.
    • அது சமர்ப்பணம் முதிர்ந்தெழும் சரணாகதி.

      ஒரு பொய் சொல்ல முடியாதவர் சரணாகதியை
      முதன்மையாகக் கொண்டு எந்தத் தொழிலைச்
      செய்தாலும், அவருக்கு அது பலிக்கும்.

********

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
வயதானதாலோ, ஓய்வு பெற்றதாலோ அகந்தை அழிந்தாலும் பணத்தின் கவர்ச்சியும், ‘அதிகாரமும்’ இருக்கும்.
 
அதிகாரம் போனபின்னும் அகந்தையின் குணம் இருக்கும்.
அதிகாரம் போவதால் அகங்காரம் அழியாது.
 
*******
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
உதவி செய்ய பெரும்பாடு பட்டாலும், பெறுபவர் சிறு குழந்தையாகச் சொல்லிய ஒரு சொல் அதிர்ஷ்டத்தையும் அன்னை அதிர்ஷ்டத்தையும் தடை செய்ய வல்லது.
 
அன்றைய சிறுசொல் இன்றைய பெரிய அதிர்ஷ்டத்திற்குத் தடை.
 
*******



book | by Dr. Radut