Skip to Content

08.பிரார்த்தனை பலிக்க வேண்டும்

பிரார்த்தனை பலிக்க வேண்டும்

                                                                        (சென்ற இதழின் தொடர்ச்சி....)

தம்பி - இந்தக் கதை - Pride & Prejudiceஇல் - நாம் தெரிந்துகொள்ளக் கூடியவை மேலும் இருந்தால் சொல்லுங்கள்.

அண்ணன் - நாம் எப்படி அருளை விலக்குகிறோம். அருள் வரும்பொழுது பராமுகமாக இருக்கிறோம் என்று அறிய இரண்டாம் பெண் எலிசபெத்தை நோக்கி, கர்வி டார்சி அருளாக வருவதாகப் பார்த்தால் தெரியும்.

தம்பி - நான் சொல்கிறேன். எனக்குத் தெரியும்.முதன்முதலாக

1) டார்சி எலிசபெத்தை நோக்கி வந்தது, "அவள் அழகியில்லை'' என்று டான்ஸில் சொல்யது, எலிசபெத் காதில் அது விழுந்தது. அவளுக்கு அது அருளாகத் தெரியவில்லை. தெரிய முடியாது. அனைவரிடமும் அதைக் கூறிச் சிரிக்கிறாள்.

அண்ணன் - வரும் அருள் எலிசபெத்தைக் கேலி செய்ய வைக்கிறது.

தம்பி - 2) டார்சி மனம் மாறி, நேரடியாக அவளிடம் வந்து டான்ஸ் ஆடும்படிக் கேட்கிறான். இது நேரடியாக அருள் அவளை நாடி வருவதாகும்.

அண்ணன் - அருள் வந்தாலும், ஏற்கனவே அழகியில்லை என்று கேட்டதே நினைவிருப்பதால் டான்ஸ் ஆட மறுக்கிறாள்.

தம்பி - அருளை நேரடியாக எலிசபெத் மறுக்கிறாள்.

3)சார்லேட் என்பவள் எலிசபெத்திடம் வந்து டார்சி உன்னையே பார்க்கிறான். அவனுக்கு உன் மேல் ஆசை. அழகன் விக்காம் நினைவில் டார்சியை அலட்சியம் செய்யாதே. இது பெரியது என்கிறாள். அருளை வாழ்வு எலிசபெத்திற்கு எடுத்துக் கூறுகிறது. காதில் ஏறவில்லை.

அண்ணன் - டார்சியாக அருள் எலிசபெத்தை நோக்கி வரும் பொழுது எலிசபெத் தறுதலை அழகனை மனத்தால் நாடுகிறாள். மனம் அருளிலிருந்து விலகி மருளை விரும்புகிறது.

தம்பி -4) எலிசபெத் டார்சியான அருளை விட்டு கண்மூடித்தனமாக விலகுவதால் என்ன வருகிறது? அருவருப்பான காலின்ஸ் வருகிறது. அதையும் மறுக்கிறாள். டார்சியை அருளாகக் காண முடியாதவள், காலின்ஸை எப்படி அருளாகக் காண முடியும்?

அண்ணன் - காலின்ஸ் எலிசபெத்திற்கு அருள், தத்துவரீதியாக எல்லாமே அருள்தானே. காலின்ஸ் எலிசபெத்தை மறுத்ததால், சார்லேட்டைத் திருமணம் செய்துகொண்டு,ஹன்ஸ் போர்ட் - சார்லேட் வீட்டிற்கு எலிசபெத்தை அழைத்துப் போகிறார்கள். டார்சியும், எலிசபெத்தும் அங்கே சந்திக்கிறார்கள்.

தம்பி - 5) எலிசபெத் - proposal- அருளைத் திட்டுகிறாள். அருள் அவள் கண்ணுக்குத் தெரியவில்லை. ஜேன் திருமணம் கெட்டுப் போனது தெரிகிறது. விக்காம் சொன்ன பொய்க் கதைகள் தெரிகின்றன. Proposal அருளாகத் தெரியவில்லை. அருளான proposal எரிச்சலாகத் தெரிகிறது.

6) டார்சிக் கடிதத்தைப் பார்த்து தன் குடும்ப நிலையை அறிந்து வெட்கப்பட்டு மனம் புழுங்கி மாறுகிறாள்.

அண்ணன் - இந்த மனமாற்றமே முதலில் டார்சியைத் திருமணம் செய்துகொள்ளச் செய்கிறது. மனமாற்றமில்லாமல், கதை வேறுவகையாக முடிந்திருக்கும். மனம் மாறிய பின் பெம்பர்லி யை எலி சபெத் பார்த்துச் சந்தோஷப்பட்டு,"இந்த இடத்து எஜமானியாகியிருக்கலாம்'' என்று தோன்றுகிறது.

தம்பி - டார்சி தனக்கு இல்லை என்பதால் எலிசபெத் கோபமாகவும், பராமுகமாகவுமிருந்தாள் என்பதும் உண்மை.

அண்ணன் - கிடைக்காது, எட்டாது என்பதால் வேண்டாம் என்ற மனநிலை அது. Proposal வந்த பின் பெம்பர்லியைப் பார்த்த பின் எலிசபெத் மனம் மாறுகிறாள்.

தம்பி - அவள் மனம் மாறிய அதே நேரம் டார்சியைப் பெம்பர்லிக்கு வெளியே சந்திக்கின்றாள்.

அண்ணன் - Life responseக்கு நேரம் தேவையில்லை. உடனே நடைபெறும் என்கிறோம்.

தம்பி -எலி சபெத் மனம் மாறுகிறாள். டார்சியைச் சந்திக்கின்றாள். தங்கை ஜார்ஜியானாவை அறிமுகம் செய்கிறான். "நமக்கு டார்சி உண்டு'' என்று அவளுக்குத் தோன்றும்பொழுது லிடியா ஓடிப்போன செய்தி ஏன் வருகிறது?

அண்ணன் - டார்சி, எலிசபெத் உறவு சுமுகமானதானால், இந்தக் குறை வந்திருக்காது. அவள் மனம் மாறிவிட்டாள். இதுவரை அவளை வெறுத்தது, கோபமாகத் திட்டியது,டார்சிக்கு எதிரான விக்காம் நல்லவன் எனப் பாராட்டியவை வெடித்து ஓடிப்போன செய்தி வருகிறது.

தம்பி - லிடியா ஓடிவிட்டாள் என்றவுடன் எலிசபெத் டார்சியை மறந்துவிடுகிறாள். ஏற்கனவே டார்சி எலி சபெத் குடும்பத்தை மட்டமாக நினைக்கிறான். இந்தச் செய்தி வந்தபின் டார்சியை மறப்பது அவசியமல்லவா?

அண்ணன் - அது உண்மைதான். மேலும் ஒரு விஷயம் உள்ளது. டார்சி நமக்கில்லை என்று அவள் தீர்மானமாக நினைத்தால், லிடியா விஷயத்தை டார்சியிடம் சொல்லி யிருக்கமாட்டாள். உள்ளூர எலிசபெத் உணர்வு வேறு. அது "டார்சிக்கும் எனக்கும் உள்ள உறவு ஆழ்ந்தது. அது லிடியாவால் அறுந்து போகக்கூடியதன்று, உள்ளதை டார்சியிடம் கூறுவது உறவை வலுப்படுத்தும்'' என்ற தன்னையறியாத ஆழ்ந்த அறிவு (subconscious understanding) இருப்பதால் உண்மையை அவனிடம் கூறுகிறாள்.

தம்பி - பின்னால் நடந்தவற்றைக் கவனிக்கும்பொழுது நீங்கள் கூறியது சரியெனப்படுகிறதே.

அண்ணன் - வலிய வந்த அருளைத் திட்டி அனுப்பிவிட்டு, இப்பொழுது மறைமுகமாக அதைத் திரும்பப் பெறும் முயற்சியிது.

தம்பி -இப்பொழுது எலிசபெத்திற்கு நன்றியறிதல் தோன்றுகிறது. அருள் முடிவில் பலன் தர இந்த நன்றியறிதல் வித்து.

அண்ணன் - ஏதாவது ஒரு ரூபத்தில் அந்த நன்றியறிதல் இல்லாமல் அருள் செயல்படாதா?

தம்பி - நாம் அருளைப் பெற இந்த நன்றியறிதல் அவசியம். அருளே நம்மை வந்தடைய முயலும்பொழுது இந்த நன்றியறிதலுமின்றிச் செயல்படும்.

அண்ணன் - பெற்றவர் நன்றி தெரிவிக்காவிட்டால், பெற்றவர் சூழ்நிலை அந்த நன்றியைத் தெரிவிக்கும்.

தம்பி - கடைசிப் பெண் லிடியா திருமணமாகி நியூகேசல் போனபின் டார்சி வந்தபொழுது எலிசபெத்திடம் பேசவில்லை என்பதால், "ஏன் இங்கே வரவேண்டும், இனி வரவேண்டாம்'' என எலிசபெத் நினைக்கிறாள்.

தம்பி - அதுவே அருளுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவின் முத்திரை.

அண்ணன் - கடைசிவரை அருள் செயல்படுவதை மனிதன் முயன்று தடை செய்வதற்கு இது நல்ல உதாரணம். அருள் எலிசபெத்தை வந்தடைய பட்டபாடு பெரியது. கேலி , மறுப்பு, எதிரியை நாடுவது, கோபம், வெட்கம், விருப்பம், ஆபத்து, கிராக்கி மூலம் அருள் வந்து சேர்கிறது.

தம்பி - நம் அனுபவம் போலவேயிருக்கிறது எலிசபெத்தின் அனுபவம். முதலில் முயன்று விலகிப் போகிறாள். பிறகு கோபப்படுகிறாள். அறிவு வந்து வெட்கப்பட்டு விரும்பிய பிறகு ஆபத்துதான் வருகிறது. அதன் பிறகும் பெற்றுக்கொள்ள கிராக்கி போகவில்லை. நாம் பொதுவாகச் செய்வனவெல்லாம் கதையில் வருகின்றன.

அண்ணன் - எதைக் கூறுகிறாய்?

தம்பி - 1) உள்ளதை மறைத்து, திருப்பி, அதன் மேலே கட்டடம் எழுப்பி நம் மரியாதையைக் காப்பாற்ற முயல்கிறோம்.

2) முக்கியமானவரிடம் முக்கியமான விஷயத்தை மறைத்து, நம் காரியத்தைச் சாதிக்க நினைக்கிறோம்.

3) தானே நடக்கட்டும் என்ற பொறுமையில்லாமல் நாமே அவசரப்பட்டு ஆரம்பிக்கின்றோம்.

4) மனத்தை மாற்றாமல், பிரார்த்தனையைத் தீவிரமாக்கினால் பலிக்கும் என நினைக்கிறோம்.

5) நல்லதை மறுத்தால், கெட்டது வரும்.

6) டார்சியைச் சீண்டினால், காலின்ஸ் வந்து "உன்னை யாரும் மணக்க முன்வரமாட்டார்கள்''என்பான்.

7) கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுக்க மறுத்தால், பிறகு லிடியாவுக்கும் விக்காமுக்கும் கொடுக்க வேண்டி வரும்.

அண்ணன்-ஜேன் இனிமையானவள் என்பது மட்டும் உண்மையன்று. தாயாரும், மாமாவும் தாழ்ந்தவர்கள், கடைசிப் பெண்கள் ஆபீசர்களைத் தேடி ஓடுகிறார்கள் என்பதை எலிசபெத் அறியவில்லை. அதை மறந்து ஜேனுக்குப் பிங்லி அமையவேண்டும் என உருகினாள். ஜேன் விஷயம் முடியவில்லை. லிடியாவின் சாயம் வெளுக்கிறது.

தம்பி - நம் வாழ்வில் ஆதி நாட்களை நினைத்துப் பார்த்தால் குறைகளை மறைப்பது மட்டுமன்று, குறைகளை நிறைவாக மாற்றப் பெருமுயற்சி செய்கிறோம். இன்றுள்ள கட்டடம் அப்படி எழுப்பப்பட்டதே என அறிவோம்.

அண்ணன் - அந்த உண்மை வெளிவாராமல் அதிர்ஷ்டம் வாராது.

தம்பி - நாமாக அதைக் கடந்த காலச் சமர்ப்பணத்தில் கரைக்காவிட்டால் ஒன்று அதிர்ஷ்டம் வாராது அல்லது விபரீதமாக வெடித்து விஷயம் வெளிவரும். அதுதானே ஜேன் குடும்பத்தில் நடக்கிறது.

அண்ணன் - பிங்லி, ஜேனை மணக்க வேண்டும் எனில் தங்கள் தாழ்ந்த நிலையை மனதால் முதலிலேயே உணர்ந்து அடங்கியிருக்கவேண்டும். அப்படிச் செய்யாததால், தானே வெளியாயிற்று.

தம்பி - லிடியாவைக் காப்பாற்ற பென்னட் குடும்பத்தால் முடியாது. அவளைக் கண்டுபிடிக்கும் வசதியில்லை. கார்டினருக்கு விக்காம் கட்டுப்படமாட்டான். பெரும் பணம் கொடுக்கும் வசதியுமில்லை. டார்சிக்கு விக்காம் உள்ள இடங்கள் தெரியும். டார்சியை அவனால் மீற முடியாது. கடன், கல்யாணம், கமிஷன் ஆகியவற்றிற்குப் பெரும்பணம் கொடுத்தது டார்சி. லிடியாவுக்கு கல்யாணமாயிற்று என அறிந்தவுடன், டார்சியால் நடந்தது எனத் தெரியாமல், "அடடா, டார்சியிடம் ஓடிப்போனதை மறைத்திருக்கலாமல்லவா?'' என்று எலிசபெத் நினைக்கிறாள்.

அண்ணன் - யாருக்கு முக்கியமாகச் சொல்ல வேண்டுமோ, அவர்களிடமே மறைப்பது, மறைக்க முயல்வதே நம் பழக்கம்.

இது நம் சாதாரண மனநிலை. இன்று நமக்குத் தீராத பிரச்சினைகளை நினைத்துப் பார்த்தால், இப்படி மறைத்ததால் எழுந்த பிரச்சினையுமிருக்கும். சொல்லவேண்டியவர்கட்குச் சொல்ல வேண்டியதைச் சொல்லாமலிருப்பது நம் பழக்கம்.

கணவன் மனைவியிடம் மறைப்பான்.

குழந்தை பெற்றோரிடம் மறைக்கும்.

தம்பி - இந்தப் பழக்கமில்லாத குடும்பங்கள் குறைவு.

உள்ளதை மறைப்பது பொய். அதைச் செய்தபின் பிரார்த்தனை பலிக்காது.

பிங்லி முதலில் தங்கள் ஊருக்கு வந்தவுடன் எலிசபெத்தின் தாயார் கணவனைப் பிங்லியிடம் அனுப்புகிறாள். இது அவள் initiative, வரட்டும் என்றில்லாமல், அவசரப்படுகிறாள். கணவனைப் பிடித்துத் தள்ளி பிங்லி வீட்டுக்கு அனுப்புகிறாள்.

அண்ணன் - என்ன நடந்தது? இனிமேல் இருக்கக்கூடாது என பிங்லி முடிவு செய்து இடத்தைக் காலி செய்துவிட்டான்.

தம்பி - இரண்டாம் முறை பிங்லி வந்தபொழுது பென்னட் போக மறுத்துவிடுகிறார். டார்சியும், பிங்லியும் தாமே வருகிறார்கள்.

அண்ணன் - இரண்டொரு நாளில் இரண்டு கல்யாணங்களும் முடிகின்றன. நாமெல்லாம் Mrs. பென்னட்போல் நடக்கிறோம். ஏன் காரியம் கூடி வரவில்லை என அடித்துக்கொள்கிறோம்.

தம்பி - எதை நாம் ஆரம்பிக்க வேண்டுமோ, அதைத் தவறாது ஆரம்பிக்க வேண்டும். எதை ஆரம்பிக்கக்கூடாதோ, அதை ஆரம்பிக்கவே கூடாது.

அண்ணன் - இப்படிச் செய்தால் பாக்கியான பிரச்சினைகள் தாமே தீருமே.

தம்பி - இது நாம் பிரச்சினை உற்பத்தி செய்யும் வழியாயிற்றே!

அண்ணன் - பிரார்த்தனை பலிக்கிறதைப் பார்த்தபொழுது, எல்லாப் பிரார்த்தனைகளும் பலிக்கும். நாமெப்படியிருந்தாலும், பிரார்த்தனையால் மட்டுமே பலிக்கும் என நினைக்கிறோம், தீவிரமாகப் பிரார்த்திக்கிறோம்.

தம்பி - மனம் மாற வேண்டிய இடத்தில், மனத்தை மாற்றாமல் தீவிரமாகப் பிரார்த்திக்கவே முடியாது. கடனை வருமானமாகக் கருதி அளவுகடந்து வாங்கிவிட்டு, தவற்றை உணராமல், பிரார்த்தனை பலிக்கவில்லை என்று பலர் கூறுகிறார்கள்.

அண்ணன் - எலிசபெத் தன் குடும்பம் மட்டம், தான் செய்தது தவறு என்று உணர்ந்த பிறகுதான் விஷயம் மாற ஆரம்பித்தது. அப்படி நினைத்தபிறகுதான் பெம்பர்லிக்கு அழைப்பு வந்தது.

தம்பி - கதை இந்த விஷயத்தை நன்றாகச் சொல்லாமல் எடுத்துக்காட்டுகிறது. பிங்லி யின் தங்கை எலிசபெத்தைப் பற்றி குறை சொல்வதால் டார்சி மனம் மாறும் என நினைக்கிறாள்.

அண்ணன் - ஒவ்வொரு முறை அவள் குத்தலாகக் கேலியாகப் பேசுவதால் விஷயம் தலைகீழே போய், முடிவாக அவள் டார்சியை இழக்கிறாள்.

தம்பி - பல சமயங்களில் நாமென்ன நினைக்கிறோம், "சொன்னால்தானே தெரியும். சொல்வது அவசியமல்லவா?'' என்று நினைக்கிறோம்.

அண்ணன் - அப்படிச் செய்தவற்றின் பலன் என்ன என்று நினைத்துப் பார்த்தால் தெரியும். ஒரு விஷயம்கூட நிறைவேறியிருக்காது.

தம்பி - நிறைவேறியிருக்காது என்பதுடன் எதிரான பலன் வந்திருக்கும்.

அண்ணன் - கதையில் அப்படித்தானே நடக்கிறது.

தம்பி - பிங்லியின் தங்கை, மனதை மாற்றிக்கொண்டு எலிசபெத்திடம், டார்சி திருமணத்திற்குப்பின், இரட்டிப்பு மரியாதையுடன் நடந்தாள்.

அண்ணன் - டார்சி அத்தனை டான்ஸ்களில் யாருடனும் ஆடவில்லை. எலிசபெத்தைக் கேட்கிறான். ஒருமுறை பதில் சொல்லத் தெரியாமல் ஏற்றுக்கொள்கிறாள். அடுத்த முறை மறுத்துவிடுகிறாள். டார்சி உண்மையானவன், நல்லவன், உயர்ந்தவன். அவனுடன் டான்ஸ் ஆட மறுத்ததன் பலன் என்ன?

தம்பி - காலின்ஸ் proposal தருகிறான். அருவருப்பான மனிதன். நல்லதை மறுத்தால், அசிங்கம் வருகிறது. அத்துடன், "யாரும் உன்னைக் கட்டிக்கொள்ள மாட்டார்கள்''என்றும் கூறுகிறான்.

அண்ணன் - கடமையை ஏற்று, அதை நிறைவேற்றுபவர்கள் இல்லை. பிரியத்திற்காகச் செய்வார்கள். டார்சி எஸ்டேட் நிர்வாகத்தில் உயர்ந்த முறையில் நடந்திருந்தால்,விக்காமுக்கும்,லிடியாவுக்கும் கொடுக்க வேண்டியிருந்திருக்காது. லிடியா மட்டம் என்று எலிசபெத்திடம் சொல்லியிருக்க வேண்டியதில்லை. டார்சிக்குப் பிடிக்காவிட்டால் proposal தரவேண்டாம். "நீ மட்டம், உன் தங்கை மட்டம்'' என்று கூறி, "இருந்தாலும் நான் உன்னை மணக்க விரும்புகிறேன்'' என்று கூற வேண்டிய அவசியமில்லை.

தம்பி - யாரை அவசியமில்லாமல் மட்டம் என்று டார்சி கூறினாரோ, அவள் செலவை டார்சி செய்ய வேண்டியதாயிற்று.

அண்ணன் - சொன்னது அவசியமில்லை, அதேபோல் லிடியாவுக்கு நிர்பந்தமில்லாமல் தானே செய்ய வேண்டியதாயிற்று.

தம்பி - இதையே truism of life வாழ்வின் சட்டம் என்று கூறுகிறோம். நல்லெண்ணத்தின் சக்தியைக் கதை நன்றாக வெளிப்படுத்துகிறது.

நல்லெண்ணம்

அண்ணன் - அன்னை நல்லெண்ணத்தின் மூலம் அபரிமிதமாகச் செயல்படுவதை நாம் அறிவோம். இந்தக் கதையில் சார்லேட்டிற்குள்ள நல்லெண்ணம் பெரியது.

தம்பி - எலிசபெத்திற்கும் பொதுவாக நல்லெண்ணமுண்டு. சார்லேட்டிடம் குறிப்பாக நல்லெண்ணம் உண்டு.

அண்ணன் - அதுதான் சார்லேட்டிற்கு £2000 எஸ்டேட் கிடைத்தது.

தம்பி - சார்லேட்டின் நல்லெண்ணம் £10000 எலிசபெத்திற்கு வந்தது. சார்லேட்டின் நல்லெண்ணம் உயர்ந்தது. தனக்குத் திருமணமாகாதபொழுது எலிசபெத்திற்கு டார்சி வேண்டும் என நினைப்பது நல்லெண்ணம் மட்டுமன்று,உயர்ந்த நல்லெண்ணம்.

அண்ணன் - இது பிறர் வாழப் பொறுக்காத உலகம். எனக்கு 50 கோடியிருந்தாலும் உனக்கு ரூ. 20,000 வர என் மனம் தாங்காது. என்னால் முடிந்தால் தடுப்பேன் என்பதே இவ்வுலகம். இந்த உலகில்,

எனக்கு எதுவுமில்லாதபொழுது உனக்கு

எல்லாம் வரவேண்டும் என்று விரும்பும்

சார்லேட் மனம் உயர்ந்தது, உன்னதமானது.

தொடரும்.....

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

சரணாகதியை, பகவான் கண்டுபிடித்ததை அன்னை பிரமாதமானது என்கிறார். எம்முறைக்கும் மனிதத் திறமையுண்டு. ஆன்மாவும், பிரகிருதியும் அர்ப்பணத்தின் மூலம் சரணடைந்தால், மனிதத் திறமை வெளிப்பட வழியில்லை. மனிதத் திறமை மறைந்த நேரம் இறைசக்தி வெளிப்படுகிறது. எனவே, அதுவே மிகக் குறுகிய வழி.

சரணாகதியில் வெளிப்படுவது இறைவன்.


 


 

 



book | by Dr. Radut