Skip to Content

04.அன்பரும் - நண்பரும்

அன்பரும் - நண்பரும்

அன்பர் - விசேஷம், சம்பிரதாயம் அன்னைக்கு ஒத்து வாராது என்பதில் என்ன தத்துவம் உள்ளது?

நண்பர் - உலகில் எவரும் சூது, குடி நல்லது என்று கூறமாட்டார்கள். பெண்களை நாடுவது தவறு என உலகம் ஏற்கும். மனிதன் திருமணம் செய்து பெண்ணுடன் வாழ்க்கை நடத்தும்பொழுது மற்ற பெண்களுடன் தொடர்புகொள்வதில் என்ன தவறு என்பது ஒரு கேள்வி. குடி மனத்திற்குப் போதை தருகிறது. போதை இன்பம் தருகிறது. இன்பம் இன்பமாக இருக்கிறதே, இதில் தவறு எப்படி வருகிறது என்று ஒரு கேள்வி எழுகிறது. பயிரிட்டாலும், முதலீடு செய்து தொழில் செய்தாலும், பலன் வந்தால்தான் உண்டு. சூது அதுபோல்தானே, அதில் தவறு என்ன என்ற கேள்விக்குப் பதில் தேவை.

அன்பர் - உலகம் மறுப்பதும், ஏற்பதும் சில இடங்களில் ஒன்றாக இருக்கிறது. கவிகளில் அநேகர் மது, கஞ்சா அருந்தியுள்ளனர். சோமபானம் உயர்ந்ததாக வேதம் கருதியது.

நண்பர் - இவற்றுள் பொதிந்துள்ள கருத்துகளின் உண்மைகளைப் பல தலைப்புகளில் கருதலாம்.

1) என்ன செய்கிறோம் என்பதைவிட ஏன் செய்கிறோம் என்பது முக்கியம்.

2) ஊர் முன்னேற சில கட்டுப்பாடுகள் தேவை. அவற்றை ஏற்றால்தான் உலகம் முன்னேறும். திருமணம் அவற்றுள் ஒன்று.

3) தனி மனிதன் சமூகத்தின் தலைவன். சமூகம் அவனைப் பின்பற்றவேண்டும். மனிதன் சமூகத்தைப் பின்பற்றக்கூடாது.

4) யோகமும், வாழ்வும் பொய்யிலிருந்து, மெய்க்குப் போகின்றன. மெய்யை நாடுவது முன்னேற்றம். பொய்யை நாடினால் முன்னேற்றமில்லை. சூது பொய்யை நாடுகிறது.

5) உடலுக்கு ஆரோக்கியம் தேவை. மனத்திற்கு மெய் ஆரோக்கியம். குடி உடல்நலத்தைக் கெடுக்கும். சூது மனநலத்தைக் கெடுக்கும்.

6) சம்பிரதாயம் தோற்றம், தோற்றத்தை நம்புவது மூடநம்பிக்கை.

அன்பர் - இவை எல்லாம் புரிகிறது. விளக்கினால் திருப்தியாக இருக்கும். Social consciousness என்பது அன்னைக்கு ஒத்து வாராது என்பதை மனதில் படும்படிச் சொன்னால் நல்லது. மனச்சாட்சி பொன் விலங்கு என்பதும் அதுபோன்றது.

அன்பர் - இவற்றிற்கு நீங்கள் விரும்புவதுபோல் விளக்கம் தர வீட்டில் நடக்கும் விஷயம் மூலம் கூறுவது விளங்கும். தத்துவமாகப் பேசினால் மனதில் படாது.

நண்பர் - Silent will மௌனமாக இருந்தால் எண்ணம் வலுவாக செயல்படும் என்ற விளக்கம் மனத்தைத் தொட்டது. அதுபோன்ற விளக்கம் எதிர்பார்க்கிறேன்.

நண்பர் - Social consciousness, psychological consciousness என்ற இரண்டும் அன்னை ஜீவியத்தைவிடக் குறைந்தவை என்பதால் அருள் செயல்படுவதைத் தடுக்கும்.

10 காணி நிலம் புன்செய். வீட்டில் அதை விற்றுவிட்டு நன்செய் நிலம் வாங்கப் பிரியப்பட்டால், மார்க்கட் விலை காணி ரூ.40,000. அதற்குக் குறையாமல் விற்க முனைகிறோம். இன்னும் 3 மாதத்தில் அந்த ஊருக்குத் தொழிற்பேட்டை வருகிறது. தொழிலுக்கு நிலம், காணி இலட்ச ரூபாய் என்று வாங்குவார் என்ற செய்தி எதிரி மூலம் வருகிறது. காவல்காரன் மூலம் வருகிறது என்றால், "எதிரி மூலம் வரும் செய்தி எனக்கு வேண்டாம்'', "காவல்காரன் பேச்சால் இலாபம் பெறும் அளவுக்கு நான் மட்டமாகிவிட்டேனா?'' என அந்தச் சந்தர்ப்பத்தை இன்றும் மறுப்பவர் உண்டு. நேரடியாக இந்த அனுபவம் பெற்றவராலேயே இதை எளிதாக நம்ப முடிவதில்லை. இங்குக் கருவான விஷயமென்ன? "விலை பெரிதன்று, நாலு பேர் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதே எனக்கு முக்கியம்'' என்ற மனப்பான்மை சமூகத்தை முக்கியமாகக் கருதுவது. இது ஆயிரம் ரூபங்களில் அன்றாடம் வருகிறது. நாம்,

. விஷயத்தைப் புறக்கணித்து, சமூகத்தின் அபிப்பிராயத்தைப் போற்றினால் நமக்குள்ளது social consciousness சமூக ஜீவியம்.

. வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தபொழுது விருந்து நடக்கிறது. வயிற்றுவலி யால் நாம் விருந்தில் கலந்துகொள்ள முடியாதபொழுது, விருந்தினருடன் கலந்து சாப்பிட முடியவில்லை என நாம் கசங்குவது சமூகம் முக்கியம் என்றாகும்.

. நாம் பிறர் நினைப்பதை முக்கியமாகக் கருதினால், நாம் கலந்துகொள்ளவில்லை என விருந்தினர் வருத்தப்படுவார்கள்.

. வயிறு வலிக்கிறது. சாப்பிடாமலிருப்பது அவசியம் என நாம் கருதினால், வந்த விருந்தினர் வயிற்றுவலிக்காக வருத்தப்படுவர்.

. நம் எண்ணத்தைப் பொருத்து, அவர்கள் மனம் வேலை செய்யும்.

. எது முக்கியம் என்பதைவிட நாம் எதை முக்கியமாகக் கருதுகிறோம் என்பது முக்கியம்.

. சமூகத்தைவிட எது சரி என்ற நம் அபிப்பிராயம் முக்கியம், அதைவிட அன்னைச் சட்டம் முக்கியம்.

. எது சரி என்பதைவிட பிறர் நம்மை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பது நம்மை பலஹீனனாக்கும்.

٭நாம் உண்மையாக இருக்கும்பொழுது, நம் உண்மையைப் பிறர் ஏற்பது அவசியம் என்றால், உண்மையைவிட பிறர் - சமூகம் - முக்கியமாகும்.

٭நான் சொல்வது உண்மை. ஏற்பது உன் பங்கு. நீ ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் உண்மை, உண்மையே என்பது உண்மை முக்கியம் - psychological consciousness - என்றாகும்.

٭சமர்ப்பணத்தில் அன்னை என் உண்மையை ஏற்றார். அதுவே எனக்கு முக்கியம். உண்மை என்பதைவிட அன்னை ஏற்றார் என்பது முக்கியம். யார் ஏற்கிறார், யார் ஏற்கவில்லை என்பது முக்கியமில்லை என்றால், உண்மை ஜெயிக்கும், அனைவரும் ஏற்பார். அது அன்னைக்குரிய வெற்றி. அதையும் நாம் அடக்கமாக உணர்ந்து, அடக்கமாகப் பேசுவது அன்னையைச் செயலில் நாம் ஏற்பதாகும்.

٭ அன்னையை நாம் ஏற்றால், உலகம் நம்மை ஏற்கும். உலகை நாம் ஏற்றால், உலகம் நமக்கு

அந்தஸ்திருந்தால்தான் ஏற்கும், இல்லாவிட்டால் நாம் உலகை ஏற்பதால், உலகம் நம் உயிரை எடுக்கும்.

٭ நாம் நம் மனத்தின் உண்மையை உலகத்தைவிட முக்கியமாகக் கருதி ஏற்றால், உலகம் அதற்குப் பணியும். நம் மனத்தின் உண்மையை உலகம் ஏற்றால்தான் பயன்படும் என்றால், உலகம் நம்மை உயிரோடு சித்ரவதை செய்யும்.

٭. எவரும் சொந்த அனுபவத்தில் இந்த உண்மைகளைக் காணலாம். இவை விலக்கில்லாத விதிகள்.

٭ இதை அனைவருக்கும் புரியும் மொழியில் கூறுவதானால், "அன்பர் என்பவர் அனைவரையும் விட உயர்ந்தவர். அந்த உயர்வு புரிந்து மனிதன் பெருமைப்படாவிட்டால், உயர்வுக்கு வலிமை வரும். எதற்கு முக்கியமில்லை. எல்லாவற்றிற்கும் முக்கியம் உண்டு. படிப்பு, பதவி, பணம், உடல் வலிமை, ஜாதி, செல்வாக்கு, அந்தஸ்து, ஆகிய அனைத்திற்கும் முக்கியத்துவம் உண்டு. அதேபோல் அன்னையை ஏற்றவர் என்பது முக்கியமாகும், மற்ற அனைத்தையும்விட அதிக முக்கியமாகும்''.

٭அந்த முக்கியத்துவத்தைக் கருதாவிட்டால், அதற்கு அதிகத் திறன் உண்டு.

அன்பர் - நான் எந்த வேலையையும் perfect சிறப்பாகச் செய்வேன். அதனால் என்னால் அதிக வேலை செய்ய முடியவில்லை. அது பிறர் - முதலாளி - குறை சொல்ல இடம் தருகிறது.

நண்பர் - இது ஒரு புதிரான இடம். இதனுள் பல விஷயங்கள் உள்ளன.

1) சிறப்பாகச் செய்தால், அதிக வேலை செய்ய முடியாது.

2) சிறப்பாகச் செய்பவர், அதிக வேலை செய்வார்.

3) சிறப்பான வேலைக்கு அதிக நேரமாகும்.

4) சிறப்பான வேலை என்பதால், கொஞ்சம் செய்தாலும் மனம் திருப்தியடையும், அதுவே சாக்காகும்.

5) சிறியவனின் சிறப்புக்கு நேரம் அதிகமாகும்.

6) பெரியவனின் சிறப்புக்கு நேரமாகாது.

ஒரு நாள் முழுவதும் 20 பக்கம் படித்தவர், 50 பக்கம் படித்தவரைவிடத் தெளிவாகப் புரிந்துகொண்டிருப்பார். 50 பக்கம் படித்தவர் அனைத்தையும் நினைவு வைத்திருப்பார். 20 பக்கம் படித்தவர்க்குப் பாதி மறந்துபோகும். என்ன செய்கிறோம் என்பதைவிட எப்படிச் செய்கிறோம் என்பது முக்கியம்.

٭சிறப்பாகச் செய்யவேண்டும் என முயன்று சிறப்பாகச் செய்தால், வேலை அதிகமாக நடக்கவில்லை என்றாலும், குறை வாராது.

٭சிறப்பாகச் செய்வதைச் சாக்காக்கி, கொஞ்சமாகச் செய்தால், ஏராளமான குறை வரும்.

٭ மனப்பான்மை முக்கியம்.

அன்பர் - சரணாகதி உயர்ந்தது என்று புரிந்தால் நல்லது. அது புரிவதற்கும் சரணாகதி பயன்படும் என்ற கருத்தை மீண்டும் ஒரு முறை கூறுவீர்களா?

நண்பர் - ஹெர்மன் ஹெஸ்ஸா என்ற ஜெர்மானியர் எழுதிய "சித்தார்த்தா'' என்ற கதையில் 2000 ஆண்டுகட்கு முன் சித்தார்த்தன் என்ற பிராமண இளைஞன் வீட்டைவிட்டு வெளியேறி சமணர்களுடன் சேர்ந்து, புத்தரைச் சந்தித்து திருப்தியடையாமல், கமலா என்ற தாசியுடனும், காமசாமி என்ற வியாபாரியுடனுமிருந்து சம்பாதித்து, கமலாவுக்கு ஆண் மகன் பிறந்து, அனைத்தையும் துறந்து ஓடக்கார வாசுதேவனைக் கண்டு, அவன் ரிஷியென அறிந்து ஜீவநதியின் ஞானோபதேசத்தை அறிகிறான்.ஹெர்மன் 1946இல் நோபல் பரிசு பெற்றவர். புத்தரின் நிர்வாணம் அவரைக் கவர்ந்தது. அத்துடன் சம்சாரமும் சேர்ந்து பூர்த்தி பெறவேண்டும் என்று ஸ்ரீ அரவிந்தர் கொள்கையை, அது ஸ்ரீ அரவிந்தர் தத்துவம் என்றறியாமலேயே ஏற்றுக்கொண்டார். சித்தார்த்தனைக் கதாநாயகனாக்கி அவன் மூலம் தாம் கற்றதை எழுதுகிறார். கதையில் இங்கு நமக்கு முக்கியமான கருத்து ஒன்று, இரு இடங்களில் எழுகிறது.
 

٭சொல் அனுபவம் தாராது. அனுபவம், அனுபவத்தால் வரவேண்டும்.

٭அனுபவத்தை அவரவர் அனுபவத்தில் பெறவேண்டும். ஒருவர் அடுத்தவருக்குக் கொடுப்பதில்லை.

சித்தார்த்தன் சாஸ்திர விற்பன்னரான தகப்பனாரை மீறி வீட்டைவிட்டு வெளியேறி சமணர்களுடன் சேருகிறான். புத்தரையும் அதே கேள்வி கேட்கிறான். சாமர்த்தியம் பலன் தாராது என புத்தர் எச்சரிக்கிறார். முடிவாக புத்தர் வாயால் கேட்டுக்கொள்வதற்குப் பதிலாக கமலாவிடம் அனுபவத்தால் ஞானம் பெறுகிறான். பெறும்பொழுது நிர்வாணத்துடன் சம்சாரமும் சேரவேண்டும் என்ற ஞானம் உதயமாகிறது.

சரணாகதி பெரிய தத்துவம் :

புத்தரைச் சரணடைந்திருந்தால் அச்சரணாகதி அவன் அனுபவத்தால் 20 ஆண்டுகளில் பெற்ற ஞானத்தைப் பெற்றுத் தந்திருக்கும்.

ஒரு வேலையை நெடுநாள் செய்து பெறும் அனுபவம், ஞானம், அந்த வேலையை அன்னைக்குச் சரணடைவதால் வரும் என்பது சரணாகதியின் பெருமை.

அன்பர் - அது என்ன தத்துவம் என்பதே என் கேள்வி.

நண்பர் - குரு கீதையைப் போதிக்கிறார். இலக்கணம் பயிற்றுவிக்கின்றார். தகப்பனார் பெருஞ்செல்வம் பெற்று மகனுக்குத் தாம் கற்றதை போதிக்கிறார். சிஷ்யன் குரு கூறுவதை சிரத்தையாகக் கேட்டால் கொஞ்ச நாளில் கீதை விளங்கும். யோகம் பயின்றால் அதற்குரிய நேரத்தில் அது பலிக்கும். தகப்பனார் 30 ஆண்டுகளில் பெற்றதை மகன் ஓரிரு ஆண்டுகளில் கேட்டு அறிகிறான். 10, 20 ஆண்டுகளில் பயின்று அறிகிறான். இது அனைவரும் செய்வது. சரணாகதியின் சாரம் பின்வருமாறு:

٭குரு 30, 40 அல்லது 50 ஆண்டுகளில் பெற்ற ஞானம் அவர் அடிமனத்திலுள்ளது. அவர் பயிற்றுவிப்பது மேல் மனத்திலி ருப்பது. சிஷ்யன் தன் மேல் மனத்தால் கற்று, அனுபவத்தால்நெடுநாளில் அவர் அடி மனத்திலுள்ளதைப் பெறுகிறான்.

٭சரணாகதி சிஷ்யன் அடிமனத்தைத் திறந்து, குருவின் அடிமனத்துடன் தொடர்புகொண்டு, அவர் பெற்றதை சிஷ்யனுக்குத் தருகிறது.

அன்பர் - சரணாகதியின் தத்துவத்தைப் புரிந்துகொள்ளவே சரணாகதியைப் பயன்படுத்தலாம் என்றீர்களே.

நண்பர் - கீதை சரணாகதியை முக்கியமாகக் கூறுகிறது. கீதை கூறும் சரணாகதி மோட்சம் பெற, திருவுருமாற அன்று. சகல தர்மத்தையும் சரணடைந்தால் புருஷோத்தமனை அடைந்து மோட்சம் பெறுவது கீதையின் சரணாகதி. ஸ்ரீ அரவிந்தர் கூறும் சரணாகதி நாம் யாருக்குச் சரணடைகிறோமோ அவராகவே நாமாவது - திருவுரு மாறுவது. சரணாகதியைப் பற்றி பகவானும், அன்னையும் ஏராளமாக எழுதியுள்ளனர். அவற்றைப் படித்து, பயின்று,முழுவதும் புரிந்துகொள்ள நெடுநாளாகும். அதற்குப் பதிலாக அவர்கள் சரணாகதியைப் பற்றி எழுதியவற்றை எல்லாம் படித்தபின், புரிந்துகொள்ள முயலாமல், நாம் படித்த விஷயங்கட்கு மனதால் சரணடைந்தால் - அவ்வளவும் அப்பட்டமான உண்மையென வாதம் செய்யாமல் மனம் ஏற்றுக்கொண்டால் - அதே நேரம் சரணாகதியை அடிமனம் ஏற்றுக்கொள்ளும்.

அன்பர் - புரியும் திறனை நம்பாமல், சரணடையும் திறனை நம்பவேண்டுமா?

நண்பர் - சர். ஐஸக் நியூட்டன் 400 ஆண்டுகட்கு முன் எழுதிய

கணித நூல் - Principia Mathematica - கடினமானது எனப் பெயர் பெற்றது. . சந்திரசேகர் நோபல் பரிசு பெற்றவர். அந்நூலைப் பயில ஆரம்பித்தார். 1 வருஷமாயிற்று அவருக்குப் புரிய. புரிவது எளிதன்று. Life Divine எழுதி 80 ஆண்டுகளாகின்றன. புரியவில்லை என்பதே நாம் கேள்விப்படுவது. எழுத்திற்கு அடிமனம் சரணடைந்தால் புரியாதது புரியும். சரணாகதி என்பது தத்துவம். தத்துவம் மட்டுமன்று, பலன் தரும் தத்துவம் (It is a knowledge that is power). சக்தியுடைய ஞானம்.

அன்பர் - சக்தியுடைய ஞானம் என்றால்?

நண்பர் - புரிந்தபின், புரிந்ததைப் பயின்று பலன்பெற வேண்டும்.

அன்பர் - உதாரணம்.

நண்பர் - வீட்டிற்கு எப்படி பெயிண்ட் அடிப்பது என்று கற்றால், கற்றதைப் பயன்படுத்தி பெயிண்ட் அடிக்கவேண்டும்.கற்பது மனம் - கல்வி ஞானம் பயில்வது உடல் - பெயிண்ட் அடிப்பது செயல்.அடிமனத்தால் கற்பது என்பது, உடலால் கற்பது, சரணடைந்த மனத்தால் கற்பது.

அன்பர் - புரியவில்லை.

நண்பர் - னமும், உணர்வும் பவ்யமாக அடங்கி அமைதியாகக் கற்பது அடிமனத்தால் கற்பது எனலாம். அப்படிக் கற்றால், நாமே பெயிண்ட் அடிப்பதற்குப் பதிலாக வீடு தானே பெயிண்ட் அடித்துக்கொள்ளும். வாடகை வீடானால் வீட்டுக்காரர் இதுவரை முடியாது என்றவர் தாமே வந்து பெயிண்ட் அடித்துத் தருவார்.

அன்பர் - மனத்தைத் தொடும்படியான உதாரணமாக இருந்தால் நல்லது.

நண்பர் - ஒரு சிக்கலான கேஸ். அனுபவமான வக்கீல், "என் 31 வருஷ அனுபவத்தில் இதுபோன்ற கேஸைப் பார்த்தது இல்லை. இது சட்டத்திற்கு உட்பட்ட சிக்கலாக இல்லை'' என்று ஒன்றும் செய்ய முடியாது என கை விரித்துவிட்டார். கட்சிக்காரர் அன்பர். வக்கீல் கை விரித்தாலும், வக்கீல் சொல்வதை அப்படியே ஏற்பது, அடுத்த வக்கீலை நாடுவதில்லை எனக் கட்சிக்காரர் முடிவு செய்தார். இந்த விவாதத்தைக் கேட்டுக்கொண்டிருந்த அனுபவமற்ற வக்கீல் சட்டத்தின் வேறு அம்சத்தைச் சுட்டிக்காட்டி வழி சொன்னார்.

அன்பர் - இந்தக் கேஸை விவரமாகக் கேட்டுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

நண்பர் - கேஸ் நடக்கவில்லை.

அன்பர் - ஆச்சரியமாக இருக்கிறதே.

நண்பர் - இளம் வக்கீல் கூறியதை எதிர்கட்சிக்காரர் கேட்டவுடன் ராஜினாமா எழுதிக் கொடுத்துவிட்டார்!

அன்பர் - இது அன்னையா? சரணாகதியா?

நண்பர் - சரணாகதி நம் மனநிலையை அன்னையாக்கவல்லது.

****


 


 


 


 


 


 book | by Dr. Radut