Skip to Content

01. யோக வாழ்க்கை விளக்கம் IV

யோக வாழ்க்கை விளக்கம் IV                                                                    கர்மயோகி

761) இது ஒரு முயற்சி, முடிவில் சிருஷ்டியின் ஆனந்தமாகும். இடையில் ஆனந்தம் ஏற்படும்.

ஆனந்தத்தில் முடியும் முயற்சி.

மனிதனுக்குப் பெரிய அதிர்ஷ்டம் வந்துவிட்டால், பெரிய பதவி கிடைத்துவிட்டால், இலட்சியமான அன்பு கிடைத்துவிட்டது என்று நினைத்துவிட்டால், மனம் வாழ்வின் அன்றாட வழக்கங்களை விட்டுப் புதியதை மனம் மீண்டும் மீண்டும் நினைக்கும். உடன் உள்ளவர்கள், "அவர் மனதில் இப்பொழுதெல்லாம் நாம் இல்லை. வாழ்வு வந்துவிட்டது. மனம் அதிலேயே இருக்கிறது'' என்று நினைப்பார்கள். அதற்கடுத்த கட்டத்தில் மனம் அதையும் நினைக்கும் நிலையில்லை என்றிருக்கும். தன்னை மறந்து, பரவசப்பட்ட நிலையில் செயலிழந்து, காற்றில் மிதப்பார்கள். வாழ்வில் பலருக்குக் கிடைக்கும் ஆனந்த அனுபவம் இது. அன்னையின் ஸ்பரிசத்தை முதலி ல் ஆன்மாவில் கண்டவர்கள் இதுபோன்று உணர்வதுண்டு. சிலருக்கு சிறு அளவில் பிறகு நீடிக்கும். பலருக்கு நினைவாக நீடிக்கும்.

மனத்தை வாழ்வின் செயல்களிலிருந்து வலிய விலக்கி அன்னையை நாடினால், எண்ணம் நம் முயற்சியை மீறி ஆட்கொள்வது தெரியும். அதை மீறி அன்னையை நாடினால், முயற்சியே முதல் ஓரளவு ஆனந்தமாக இருக்கும். நாம் விலக்கும் எண்ண அலைகள் விலகாதவரை முயற்சி சிரமமாக இருக்கும். விலகினால் இதமாக இருக்கும். விலக்கும்பொழுது அவை கட்டுப்பட்டு விலகினால், இன்பமாக அன்னை நினைவு உள்ளிருந்து எழுவதைக் காணலாம். அதைச் சில நிமிஷங்களுக்கு மேல் தொடர்வது சிரமம்.தொடர்ந்தால் முயற்சி இன்ப நிலைக்கு அழைத்துச் செல்லும். நெடுநாளில் இம்முயற்சி நிச்சயப் பலனை அளித்து நெடுநேரம் நீடிக்கும் நிலை ஏற்பட்டால், நினைவிலிருந்து அன்னைக்கு நாம் செல்ல முயலலாம்.

நினைவிலும் பல நிலைகள் உண்டு. நாமே முயன்று சொல்லால் நினைவுபடுத்துவது, சொல் தானே எழுவது, சொல் பின்னணிக்குப் போய் நினைவு எழுவது, நினைவு உணர்வாக மாறுவது, உணர்வு உருவமாகவே மாறுவது, அவற்றை எல்லாம் நாம் அழைப்பது, அவை தாமே எழுவது எனப் பல்வேறு நிலைகள் உள்ளன. ஒவ்வொரு கட்டமாக முன்னேறுதல், தவமுயற்சி; இது முழு யோகமாகும்.

நினைவுக்கு அடுத்தது உணர்வு. அதற்கடுத்தது செயல். ஒவ்வொன்றிலும் அத்தனை கட்டங்கள் உள்ளன. நினைவையும், உணர்வையும், செயலையும் கடந்தபொழுது, அன்னை நிதர்சனமாக உள்ளே எழுவார். அது ஒளிமயமாக இருக்கும். அறிவுக்குரிய ஒளி பிரகாசமாகவும், ஆன்மாவுக்குரிய ஒளி ஜோதியாகவும் இருக்கும். வெண்ணிற ஒளி அன்னைக்குரியது. சிவந்த நிறம் உடலைக் குறிப்பது. வயலெட் உணர்வையும், மஞ்சள் மனத்தையும் காட்டும். வைர ஒளி அன்னைக்கேயுரிய தனிச் சிறப்பான ஒளி. நீலம் கிருஷ்ணனுக்கும், வெண்மை கலந்த நீலம் ஸ்ரீ அரவிந்தருக்கும் உரியன. பொன்னிறம்

கடைசியொளி. அது சத்தியஜீவிய ஒளி. நம் மனநிலைக்கும், ஆர்வநிலைக்கும், சூழலுக்கும், முயற்சியின் தரத்திற்கும் ஏற்ப அன்னையுருவம் வெவ்வேறு உருவம் தாங்கி உள்ளே எழும். அன்னையை நாடினால், அவர் நம்மை நாடுவார். அரை க்ஷணமும் நாடுவார், அகலாமலுமிருப்பார். இம்முயற்சி முடிவில் ஆனந்தப் பெருக்கை அளிக்கும்.

அன்னையை அகத்தில் தேடுவது ஒரு முயற்சி. முடிவில் சிருஷ்டியே ஆனந்தமாகும். மனிதன் புறத்தில் வாழ்கிறான், புறத்தால் வாழ்கிறான். அதில் வெற்றி, தோல்வியுண்டு. ஒன்று மற்றதாக மாறும் நிலையும் உண்டு. அகம் துறவிக்குரியது. துறவறத்தில், வாழ்வின் வெற்றியோ தோல்வியோ எழுவதில்லை. சுத்த பிரம்மமும் உள்ளே இருப்பதால், அகவாழ்வில் அதைக் காணமுடியும். அதனுள் சென்று வாழ முடியும்.

ஸ்ரீ அரவிந்தர் கூறுவதும் பிரம்மம். அது பிரகிருதியுள் உள்ள பிரம்மம். அதுவும் அகத்தில் உண்டு.

. மனிதனுக்குரியது புறம், அகமில்லை.

. புறத்தில் வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வரும்.

. அகம் துறவிக்குரியது.

. ஆழ்ந்த சமாதியைத் தரும் பிரம்ம நிஷ்டைக்குரியது அகம்.

. மனிதனுக்குரிய அகம், சந்தோஷம், கவலையாகும்.

. மனிதனுக்கு அகத்துள் ஆன்மீகத்தை மரபு தரவில்லை.

. ஸ்ரீ அரவிந்தர் அகத்தை மனிதனுக்குத் தருகிறார்.

. துறவியின் அகத்தை, பூரணப்படுத்தி மனிதனுக்கு ஸ்ரீ அரவிந்தம் தருகிறது.

. வாழ்விலுள்ள பிரம்மம் - Being of the Becoming - அகத்திலும் உள்ளது. அதுவே ஸ்ரீ அரவிந்தத்திற்குரியது, இல்லறத்திற்குத் துறவறத்தின் தூய்மையைத் தருவது. தூய்மையுடன் வலிமையையும் தருவது.

****

762) இன்று நாம் பிரகிருதியால் சூழப்பட்ட அகந்தை. அகந்தை கரைந்தபின் நாம் பரிணாம வளர்ச்சிக்குரிய சைத்தியப்புருஷனாவோம். பிரபஞ்சத்தில் ஆன்மாவின் பரிணாம வளர்ச்சிக்குரிய மையம் சைத்தியப்புருஷன். அதனால் பிரகிருதியிலுள்ள அன்னை, நம் சைத்தியப்புருஷனை நோக்கி வருவார்கள். மனமும், ஜீவனும் தன்னிறைவால் நிரம்புவது அன்னை நம்மை நோக்கி வருவதன் அறிகுறி.

அன்னையின் வருகை.

அறியாமை, இருள், மேல்மனம், கண்டம் (finite), அகந்தை, காலம், இடம், துன்பம், மரணம், பிரகிருதி (இயற்கை), கொடுமை, அழிவு, "நான்' போன்றவை மனித வாழ்வின் அம்சங்கள். அன்னை இவற்றை விட்டு விலகிப் போவார்.

அறிவு, ஜோதி, உள்மனம், அகண்டம் (infinity), ஆத்மா, காலம் கடந்த நிலை, இன்பம், அமரவாழ்வு, புருஷன், கருணை, படைப்பு, தன்னலமற்ற நிலை ஆகியவை தெய்வத்திற்குரியவை. அன்னை இவற்றை நோக்கி வருவார்.

இவற்றுள் அகந்தை மாறி சைத்தியப்புருஷனாவதைப் பற்றியது மேற்சொன்ன கருத்து.

பிரம்மம் ஆதி.

சச்சிதானந்தம் உச்சகட்ட உயர்வு.

சிருஷ்டி (cosmos) மேலுலகம்.

சத்தியஜீவியம், சிருஷ்டி மையம்.

தெய்வலோகம், பிரபஞ்சம் பூவுலகத்தைத் தன்னுட்கொண்டது பூலோகம்.

பூலோகம் மனிதன் வாழ்வது. பிரபஞ்சத்தில் ஆத்மாக்கள் ஏற்பட்டு பூவுலகத்திற்கு வந்து வாசம் செய்கின்றன. தெய்வலோகம் பிரபஞ்சத்திற்குட்பட்டது. சத்தியஜீவியமும், சிருஷ்டியும் சச்சிதானந்தத்திற்கு அடுத்து கீழுள்ள உலகங்கள். ஈஸ்வர-சக்தி செயல்படும் உலகம் அது. சச்சிதானந்தம் பரப்பிரம்மமாகும். அத்தனை நிலைகளையும் கடந்தது ஆதி.

பிரபஞ்சம் தான் பரந்து விரிந்திருப்பதால் தன் இலட்சியம் இப்பரந்த பரப்பில் பூர்த்தியாகாது என்பதால், செறிந்த புள்ளிகளை தன்னுள் உற்பத்தி செய்தது. அவை ஜீவாத்மாக்கள். ஜீவாத்மா, பிரகிருதியில் செயல்படுவது உலகம். இதற்குப் பரிணாம வளர்ச்சியில்லை. நாம் என்று நாமறிவது அகந்தை. அகந்தை பிரகிருதியில் உற்பத்தியானது. அது ஜீவாத்மாவைச் சூழ்ந்துள்ளது. அதனால் ஜீவாத்மா பிரகிருதியின் இலட்சியத்தைப் பூர்த்தி செய்ய முடிவதில்லை. அகந்தை கரைந்தால் ஜீவாத்மாவுக்கு விடுதலையுண்டு. விடுதலையடைந்த ஜீவாத்மா சைத்தியப்புருஷனாவான். அவன் பிரபஞ்சம் முழுவதும் பரவுவான். சைத்தியப்புருஷன் பிரபஞ்சத்தின் இலக்கை எட்டக் கூடியது. இயல்பாக இறைவனையும், அன்னையையும் நாடக் கூடியது சைத்தியப்புருஷன். அன்னை சைத்தியப்புருஷனை அனுதினமும் நாடுவார். அகந்தை அழிந்து சைத்தியப்புருஷன் வெளிப்பட்டால், மனமும் ஜீவனும் நிறையும். அது அன்னையை நம்மை நோக்கி அழைக்கும்.

****

763) சாட்சிப்புருஷனான மனோமயப்புருஷன் சாட்சி நிலையை விட்டு ஈஸ்வரனாக மாற ஆரம்பித்து, பிரபஞ்சமெங்கும் பரவி, தன்னை பிரபஞ்சத்தின் ஆத்மாவாக்குவது முடிவான கட்டம்.

ஈஸ்வரனாக மாறும் சாட்சி.

புருஷனும், பிரகிருதியும் லோகம். நாம் பிரகிருதியாக இருக்கிறோம். அதை மட்டும் அறிவோம். பிரகிருதி எதைச் செய்தாலும், புருஷன் பார்த்துக் கொண்டிருப்பான். அதனால் புருஷனை சாட்சி என்கிறோம். சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தாலும், பிரகிருதி செயல்பட தேவையான சக்தியை அளிப்பது புருஷனேயாகும். சாட்சிப்புருஷனுக்கு மனோமயப்புருஷன் எனப் பெயர். இதற்கு அடுத்த கட்டம் விஞ்ஞானமயப்புருஷன் என உபநிஷதம் கூறுகிறது. அவனை பகவான் சத்தியஜீவன் என்கிறார். வேதம் சத்தியஜீவனையும், (அவன் வாழும் லோகத்தையும் - சத்தியஜீவியம், Supermind) Truth-conscious soul சத்தியத்தை அறியும் ஜீவன் என்கிறது. சத்தியம், ரிதம், பிருகட் என்பது வேதத்தின் விளக்கம். சத்தியஜீவனில் அகந்தையில்லை, அறியாமையில்லை.

அறியாமைக்குரிய மேல்மனத்தில் சத்தியஜீவனில்லை. அது அனந்தனுடையது (infinity). எனவே சத்தியஜீவன் சத்தியத்தை அறிவான். புருஷன் என நாம் கூறுவது மனோமயப்புருஷன். இவன் மனத்திற்குரியவன், ஜீவாத்மாவின் பகுதி. இவனும் அறியாமைக்குரிய மேல் மனத்திலில்லை. அடிமனம் (subliminal), உள் மனம் (inner mind), ஆழ்ந்த ஜீவன் (inner being) எனப்படுவது நாம் அறியாதது. நாம் வசிப்பது மேல்மனம். இதைக் கடந்து உள்ளே போனால் அடிமனம். அது ஆழ்ந்த ஜீவனின் பகுதியாக, உள் மனத்துள் உறைகிறது. ஆணவ மலம் எனும் அகந்தை மனோமயப்புருஷனைச் சூழ்ந்துள்ளது. இவனுக்குச் சத்தியம் தெரியாது. அறியாமையாலும், அகந்தையாலும் சூழப்பட்டதால் மனோமயப்புருஷனுக்குச் சத்தியம் தெரிவதில்லை. எனவே இவன் ஆத்மா (soul) என்றாலும் தன்னையறியாத (unconscious) ஆத்மாவாகும். அகந்தை கரைந்தால், அறியாமையின் பிடி தளரும். பிடி தளர்ந்து, அகந்தையிலிருந்து விடுபட்டால், மனோமயப்புருஷனுக்கு விடுதலை கிடைக்கிறது. விடுதலை பெற்றபின் சலனமற்ற மனோமயப்புருஷனுக்கு சலனம் ஏற்படுகிறது. அதனால் பரிணாம வளர்ச்சி ஆரம்பிக்கிறது.

அதன் மூலம் மனோமயப்புருஷன், சைத்தியப்புருஷனாகிறான்.

மனோமயப்புருஷன் சாட்சி நிலையை விட்டு அதிகாரம் பெற்று

பிரகிருதியை ஆளும் பொழுது ஈஸ்வரனாகிறான். புருஷப்-பிரகிருதி

மாறி ஈஸ்வர-சக்தியாகிறது. அதாவது பிரகிருதி சக்தியாகிறது.

அந்நிலை முடிவான நிலையானால் அதன் ஆரம்பம் சைத்தியப்புருஷன் வெளிவருதலாகும்.

வெளிவந்த சைத்தியப்புருஷன் தான் பிரபஞ்சத்தின் ஆத்மாவுக்குரியவன், பரமாத்மாவின் பகுதி என்றறிவதால், வளர்ச்சியை நாடுகிறான். ஆன்மாவுக்கு அழிவில்லை, சலனமில்லை, அசைவில்லை, பிறப்பில்லை, இறப்பில்லை என்பது நம் மரபு. பகவான் ஆன்மாவுக்கு வளர்ச்சியுண்டு. அது வெறும் வளர்ச்சியில்லை, பரிணாம வளர்ச்சி என்கிறார். இது பகவான் யோகத்தில் செய்த புரட்சி.

வளரும் சைத்தியப்புருஷன் முதல் நிலையில் பிரபஞ்சத்தின் ஆத்மாவாகிறான். முடிவான நிலையில் பரமாத்மாவுடன் ஐக்கியமாகிறான். இதை spiritual evolution ஆன்மீகப் பரிணாமம் என்கிறார் பகவான் ஸ்ரீ அரவிந்தர்.

மனம் மனிதனின் தலையாய கருவி. அங்குள்ள புருஷன் மனோமயப்புருஷன். இவன் சாட்சியாக இருக்கிறான். ஞான யோகத்தில் மோட்சம் பெற்றுத் தருபவன் சாட்சிப்புருஷன். மனம் எப்படிச் செயல்படுகிறது என ஸ்ரீ அரவிந்தர் விளக்குகிறார். சாட்சிப்புருஷனின் நிலை என்ன என்பதையும் விளக்குகிறார்.

ஒரு நிகழ்ச்சியை மனதில் விளக்கும்பொழுது, அகந்தைக்கும் சாட்சிக்கும் உள்ள இடம் தெளிவுபடுகிறது. கோபம், பசி, எண்ணம், ஆசை என்பன மனத்தில் உதிப்பது முதற்காரியம். பகவான் கோபத்தை உதாரணமாக எடுத்துக் கொள்கிறார். கோபம் எழுகிறது. நாமே கோபமாகிறோம். கோபம் என்ற உணர்வோடு ஒன்றிவிடுகிறோம். மனித வளர்ச்சியில் முதல் நிலை இது. கோபம் தணியும்வரை நாம் கோபமாக இருக்கிறோம். மனம் வளரும்பொழுது மனிதன், கோபத்தினின்று அகன்று சிந்திக்கிறான். சிந்தனை மனத்தின் செயல்.சிந்தனை மனிதனை கோபத்திலிருந்து பிரிக்கிறது. பிரிந்து நின்று சிந்திப்பது வளர்ச்சியின் முதல் நிலை. கோபத்திலிருந்து அதிகமாக விலகினால் தான் யாரென்று உணரும் அறிவு எழும். முழுவதும் விலகி நின்று பார்த்தால், "எனக்குக் கோபம் வந்தது'' என்று தெரியும். "நான்' வேறு, கோபம் வேறு எனப் பிரிந்த நிலையில் "நான்' என்பது அகந்தை என விளங்கும். கோபத்தினின்று விலகியதுபோல், அகந்தையிலிருந்து விலகினால் நான் என்ற அகந்தை, நான் எனும் சாட்சிப்புருஷனாகக் காட்சியளிக்கும்.

இதுவே மனோமயப்புருஷன் எனும் சாட்சி.

மேற்சொன்னதை சாதிப்பது தியானம். தியானம் அமைதியைக் கொடுத்து சிந்திக்கச் செய்து, அகந்தையை அறிவுறுத்தி, சாட்சியில் முடிகிறது. நிஷ்டையைத் தொடர்ந்தால் சாட்சிப்புருஷன் க்ஷரப்பிரம்மத்தை அறிவான். மோட்சம் பெறுவான்.

பூரணயோகம் கையாள்வது தியானமில்லை, சமர்ப்பணம். சமர்ப்பணம் கோபம் எழுந்தவுடன் அதைச் சரணம் செய்ய முயல்வதால், அகந்தை தானே விலகுகிறது. சமர்ப்பணம் எழுந்த பின் அகந்தைக்கு வேலையில்லை. கோபம் சமர்ப்பணமானால் கோபப்பட்ட அகந்தை கரைகிறது. அகந்தை கரைந்த பின் வெளிப்படும் ஆத்மா சாட்சிப்புருஷனில்லை, சைத்தியப்புருஷனாகும். இதுவே பூரண யோகத்தில் முதற்படி.
 . மனிதனில் உள்ளது ஆத்மா.

. அது ஜீவாத்மாவாகவும், அதன் பகுதிகளான 3 புருஷன்களாகவும் உள்ளன.

. ஜீவாத்மாவின் பிரதிநிதியான சைத்தியப்புருஷன் என்பதும் ஆத்மா.

உடலிலிருந்து, வாழ்வு, மனம், சத்தியஜீவியம் ஆகிய எல்லா இடங்களிலும் ஆத்மாவுண்டு. அவற்றைப் புருஷன் என்கிறோம். அதன் பிரகிருதியை சைத்தியப்புருஷன் என்கிறோம்.

கரணம்

ஆத்மா

சைத்தியப்புருஷன்

உடல் -

அன்னமயப்புருஷன் -

உடலுக்குரிய சைத்தியப்புருஷன்

உயிர்-

பிராணமயப்புருஷன் -

பிராணனுக்குரிய சைத்தியப்புருஷன்

மனம் -

மனோமயப்புருஷன் -

மனத்திற்குரிய சைத்தியப்புருஷன்

மனத்திற்கும் சத்தியஜீவியத்திற்கும் இடைப்பட்ட நிலைகள் 4. சைத்தியப்புருஷன் வளரும்பொழுது இந்நிலைகட்கு உயர்கிறான். சத்தியஜீவியத்தை சைத்தியப்புருஷன் அடையும்பொழுது ஈஸ்வரனாகிறான். இது பூரணயோகப் பாதையாகும்.

****

764) மனம் அனந்தனை நினைக்கின்றது. உணர்வு அனந்தனை சக்தியாக உணர்ந்தாலும், உடல் அனந்தனை உலகெங்கும் வியாபிக்கும் பொருளாக (substance) அறிந்தாலும், பரம்பொருளைச் சிருஷ்டியாகவும், சிருஷ்டியைப் பரம் பொருளாகவும் அறிய உதவும்.

பரம்பொருளே சிருஷ்டி.

பரம்பொருள் தன்னையே உலகமாக சிருஷ்டித்தான், உலகைத் தன்னிலி ருந்து சிருஷ்டித்தான் என்ற ஆன்மீக உண்மையை சர்வம் பிரம்மம் என்றது உபநிஷதம். இதன் முடிவு,

மனம் என்பது பரம்பொருள்.

உணர்வு என்பது பரம்பொருள்.

உடலும் பரம்பொருளே,

என நாம் ஆன்மீக அனுபவமாகப் பெறுவது பூரணயோகப் பாதையில் உள்ள மைல் கற்கள். மனம் அகந்தையை இழந்தால் பிரபஞ்சத்தின் மனமாகும். அனைவருடைய மனத்துடனும் கலக்கும். உணர்வின் அகந்தை கரைந்தால், நம் உணர்வு, உலகத்து மனிதர்களுடைய உணர்வோடு ஒன்றும். உடலும் அதேபோல் ஐக்கியமாகும். அன்னை தம் சூட்சும உடல் பிரபஞ்சமெங்கும் பரவியதைக் கண்டார்கள்.

****

765. அக்ஷயப் பாத்திரத்தில் அனந்தன் ஜடமாக வெளிப்படுகிறான். எதிரியின் பலத்தில் பாதி தனக்கு வேண்டும் என்று கேட்டவனுக்குக் கொடுக்கும் வரம், உணர்வில் அனந்தமாகும். எல்லையற்ற பலம்.

வாலி வரம் பெற்றவன். எதிரியின் பலத்தில் தனக்குப் பாதி வேண்டும் என்ற வரம் பெற்றவன். அவனை யார் தோற்கடிக்க முடியும்? அக்ஷயப் பாத்திரம் எடுக்க எடுக்க குறையாது. காமதேனு கேட்டனவெல்லாம் தரும். அன்னை வாழ்வை அக்ஷயப் பாத்திரமாகவும், காமதேனுவாகவும் மாற்றி அமைக்கிறார். நாம் எதைச் செய்தாலும் இன்று அக்காரியம் முடிவது நம் திறமை, அந்தஸ்தைப் பொருத்தது. நாம் அகந்தையிலிருந்து விலகி அன்னை மையத்திற்குப் போனால், வாழ்வு வாலிக்குத் தந்த வரத்தைத் தரும். எதிரியின் பலத்தில் பாதி வாலிக்கு வந்தது. வாழ்வின் முழுப் பலமும் நமக்கு வருகிறது. எப்படி? நாம் என்ன செய்யவேண்டும்?

. இன்று நாம் நம் பெற்றோர் பெற்ற பிள்ளைகளாக இருக்கிறோம்.

. நம் வலிமை நம் அந்தஸ்தைப் பொருத்தது.

. அன்னை மையத்திற்குப் போனால் நாம் அன்னையின் குழந்தைகளாவோம்.

. அன்னைக் குழந்தையின் வலிமை, அன்னையின் வலிமை.

. எந்தக் காரியத்திற்குப் போனாலும், காரியம் நம்மை ஏற்று, நம் காரியத்தைத் தம் காரியமாக முடிக்க முயல்கிறது.

தொடரும்...


 

****

ஜீவிய மணி

ஆசைக்கு மனிதன் ஆன்மா எனப் பெயரிட்டுள்ளான்.


 

 


 


 


 


 


 


 


 



book | by Dr. Radut