Skip to Content

08.அன்னை எழுதிய 18 வால்யூம்களின் ஆன்மீகப் பெருமையுடைய சிறப்பு.

அன்பர் உரை”

அன்னை எழுதிய 18 வால்யூம்களின் ஆன்மீகப் பெருமையுடைய சிறப்பு.

(கும்பகோணம் தியான மையத்தில், பிப்ரவரி 9 & 10 அன்று திரு.லக்ஷ்மி நாராயணன் நிகழ்த்திய உரை)

       அன்னையை தெய்வமாக வழிபடுதல் பிரார்த்தனை பலிக்க உதவும். அன்னையைச் சக்தியாக அறிவது, அவர்தம் கோட்பாடுகளை ஏற்பது, அன்னை வாழ்வை ஏற்பது என்பவற்றை அன்னை life of higher consciousnessஆன்மீக வாழ்வு, உயர்ந்த வாழ்வு, தெய்வீக வாழ்வு என்கிறார். நாம் மனித வாழ்வின் சிறுமையின் பிடியில் வாழும் பொழுது, மனித வாழ்வின் பெருமைகளை நாடுகிறோம். அது ஏற்றமும், தாழ்வும் நிறைந்த நிலை. தாழ்வு நீங்கிய ஏற்றம், நிரந்தரமான ஏற்றம். அது அன்னை விழைவது. சில வாழ்க்கை சந்தர்ப்பங்களைக் கருதுவோம்.

1. பாங்கில் காஷியர் வேலைக்குப் போக விரும்புகிறவன், நான் இதுவரை திருடியதேயில்லை என்றால், அந்த நல்ல பழக்கத்திற்கு காஷியர் வேலை கிடைக்காது. திருட்டுக் குணமில்லாத நல்லவனுக்கு, திருடமுடியாதவனுக்கு அந்த வேலை கிடைக்கும்.

2. மனப்பாடம் செய்து முதல் மார்க் வாங்குபவனுக்கு ஆராய்ச்சித் துறையில் பட்டம் கிடைக்காது. புத்திசாலிக்குக் கிடைக்கும்.

3. இயல்பான தைரியசாலிக்குத் தலைமைப் பதவியுண்டு. பயந்து, நடுங்கி பல சிக்கலைச் சமாளிக்கும் சாமர்த்தியசாலிக்குத் தலைமைப் பதவியில்லை.

       நல்லதும், கெட்டதும் கலந்த நம் வாழ்வில் கெட்டதை விலக்கி, நல்லதை மேற்கொள்கிறோம். அது மனித வாழ்வு. கெட்டதேயில்லாத நல்ல வாழ்வு (self-existent good) அன்னை வாழ்வு. அதுவே உயர்ந்த வாழ்வு. பிரச்சினை வரும் பொழுது அன்னைக்குப் பிரார்த்தனை செய்து சமாளிப்பது மனித வாழ்வு. பிரச்சினை எழாத வாழ்வு, பிரார்த்தனை செய்யாமல் தேவையானவை தானே கிடைப்பது அன்னை வாழ்வு. அவ்வாழ்வின் அடிப்படைகளை அன்னை கூறியவை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு 18 வால்யூம்களாக வெளிவந்துள்ளன. நமக்குப் பிரச்சினை எனவரும் பொழுது - உதாரணமாகத் தலைவலி, தொலைந்த பொருள், அனாவசியமான சண்டை - இந்த வால்யூம்களை எடுத்துப் பார்த்தால் அவை 50 அல்லது 100 விதமாக அங்கு பேசப்படுவதைக் காணலாம். அவற்றை நாம் சாதாரணமாகப் பயன் படுத்துவதைவிட அன்னை வாழ்வை எட்டமுயலும் அன்பராகப் பயன்படுத்தவேண்டும்.

1. சாதாரண மனிதன் பிரச்சினையை இப்பொழுது தீர்க்கத் துடிப்பான்.

2. அன்பர் பிரச்சினைக்குரிய காரணத்தை நிரந்தரமாக விலக்க முயல்வார்.

       அன்னைக்கு முக்கியமானது மனிதன சுபாவம் மாறுவது. அன்பு, ஆதரவு, பாசம், பற்று, கோபம், எரிச்சல், பொறாமை, பரந்த மனப்பான்மை, சாத்வீகம், வீரம், பயம் என எல்லா சுபாவங்களையும் அன்னை ஆராய்ந்து எழுதியுள்ளார். இவற்றுள் சுமார் 5 அல்லது 10 சுபாவங்களைப் பற்றி அன்னை கூறுவதை விளக்கமாக எழுதி அன்னை எழுதியவற்றுள் உள்ள முக்கியமான 100 கருத்துகளையும் கூறுவது இக்கட்டுரை. நல்லவை நிரந்தரமாகத் தங்குவதையும், கெட்டவை நிரந்தரமாக விலகுவதையும் நாட வேண்டும். புறத்தில் தீரும் பிரச்சினை தற்காலிகமானது. அகத்தில் ஏற்படும் மாறுதல் நிரந்தரமானது. Instantaneous miraculousness க்ஷணத்தில் நடக்கும் அற்புதம், புறம் அகமாக மாறுவதால் ஏற்படுவது.

அன்னை வாழ்வு அகவாழ்வு

என்பதை மனதில் கொண்டு இந்நூல்களைப் பயில்வது பெரும் ஆன்மீகப் பலன் தரும். அதிர்ஷ்டம் என்பதைப் பயில அது சம்பந்தமான சிறிய, பெரிய கருத்துகளையும், எதிரானவற்றையும் கருதவும் சரி. வாய்ப்பு, வாய்ப்புக்குரிய சூழல், நல்லெண்ணம், நல்ல சகுனம் என நல்லவையான 10 அல்லது 20 கருத்துகளையும் எதிரான பிரச்சினை, ஆபத்து, படபடப்பு, அவசரம், எதிர்பார்ப்பு போன்ற கருத்துகளையும், நூன்

பின்னாலுள்ள index குறிப்பில் கண்டு

பயில்வது எதிர்பார்க்கும் பலனைத்தரும்.

அதிர்ஷ்டம்

       வாழ்வில் அதிர்ஷ்டம் ஆயிரத்திலொருவருக்குண்டு. அதிர்ஷ்டத்தின் இரகசியம் செய்வது கூடிவருவது. சாதாரண மனிதனுக்கு அது இல்லை. அன்னையிடம் வந்தால் ஆரம்பத்தில் கூடிவருகிறது. பிறகு அப்படியிருப்பதில்லை. எப்படி அதிர்ஷ்டம் உண்டாகும், உண்டானது நிலைக்கும் என்பதன் முக்கிய கருத்துகளை இங்கு கூறுவதை மனதில் ஏற்று, இது சம்பந்தமான எல்லா கருத்துகளையும், அவற்றிற்கு எதிரானவற்றையும் இந்த 18 வால்யூம்களின் ஆராய்ந்து பார்த்தால், மனம் ஏற்றது தெளிவு பெறும். அதன் சுருக்கம் ‘அதிர்ஷ்டம்’ என்ற நூல். மனம், உணர்வு, சொல் மூன்றும் ஒத்துழைக்க வேண்டுமெனில் இக்கருத்துகளை

1. மனம் ஐயம் திரிபு அற தெளிவாகப் புரிந்து கொண்டு

2. உணர்வு விரும்பி, மலர்ந்து, மகிழ்ந்து ஏற்க வேண்டும்

3. செயல் இவற்றை வெளிப்படுத்த வேண்டும்.

       அதிர்ஷ்டத்திற்கு எதிரான கருத்துகளை மனம் தெளிவாக மறுக்க வேண்டும், எதிரான உணர்வுகளை தீவிரமாக விலக்க வேண்டும். அவை,

ஆன்மா வெளிப்படுவது அதிர்ஷ்டம். அன்னையை நினைத்தால் ஆன்மா மேலே வரும். மேலே வந்தால் மனம் பிரகாசமாக இருக்கும். அன்னையை நினைப்பது ஆன்மாவை சுறு சுறுப்பாக்குவது. ஆன்மாவுக்கு அதிர்ஷ்டம் மட்டும் உண்டு. இயற்கைக்கு - பிரகிருதிக்கு - வெற்றி தோல்வி கலந்துண்டு. மனம் ஆன்மாவை ஏற்று, ஆன்மா மேல்மனத்தில் செயல்படும் பொழுது தோல்வி என்பது அருகில் வாராது என்பதை மனம் தெளிவாக அறிய வேண்டும். நாமே எதிரான கருத்தை அழைத்தாலன்றி அன்னை தரும் அதிர்ஷ்டம் அகலாது. நம் சுபாவம், சுபாவத்தின் குறைகளான சுயநலம், கெட்ட எண்ணம், அவசரம் போன்றவை நாமே அழைத்தாலன்றி ஆன்மீக மலர்ச்சியும் வாரா. மனம் இதை அறியவேண்டும், புரிந்துகொள்ள வேண்டும். அது மனத்தைப் பொருத்தவரையில் கடமை.

உணர்வில் அன்னை வந்தால் உள்ளம் விரியும், குதூகலமாக இருக்கும், மனம் நிறைவாக இருக்கும். மனக்குறை என்பதிருக்காது. மனம் ஏற்றவற்றை உள்ளம் ஒவ்வொன்றாய் சோதனை செய்தால், உள்ளம் ஏற்க மறுப்பதைக் காணலாம். நம்மை மீறி அவசரம் எழும். அவசரம் போல் அத்தனை குறைகளும் எழும். மனம் பிறர் சொல்வதை ஏற்காமல், சொந்தமாகப் புரிந்து கொண்டால், உணர்வு வழிவிடும். மனம் விளக்கத்தை ஏற்கும். உணர்வுக்கு விளக்கும் பலிக்காது. உதாரணம் தேவை. அன்னை பொதுவாக விளக்கம் மட்டும் எழுதுவார்கள். உதாரணம் கொடுப்பது குறைவு. நம் சொந்த அனுபவத்தின் உதாரணங்களை அன்னை கூறும் விளக்கங்களைக் கொண்டு பார்த்தால் உணர்வுக்குப் புரிய ஆரம்பிக்கும். உணர்வுக்குப் புரிவது சிரமம். புரிந்தால் ஏற்பது கடினமில்லை. உணர்வை ஏற்க வைப்பது பெரிய காரியம்.

அறிவுக்குப் புரிந்து, உணர்வு ஏற்றபின் காரியம் செய்ய ஆரம்பித்தால் இவையிரண்டையும் புறக்கணித்து செய்வோம். இவற்றை ஏற்று காரியம் செய்ய முயற்சியும், பயிற்சியும் தேவை. இவற்றை மேற்கொள்ளும் அன்பர்கள் அதிர்ஷ்டத்தின் வாயிலுக்கு வருவார்கள். என் அனுபவத்தில் இது ஏராளமான பேருக்கு தானே நடந்துள்ளது. வந்த அதிர்ஷ்டத்தை தங்கள் சொந்த முயற்சியால் விரட்டி அடித்தவர்களை அறிவேன். பெற்றவர் மிகமிகச் குறைவு. எப்படி விரட்டி அடிக்கிறார்கள் என்பதை விபரமாக இதுவரை எழுதிய நூல்களில் எழுதியுள்ளேன். விரட்டி அடிப்பவர்களை நாம் மறந்து விரும்பி அழைப்பவர்களை இனிக் கருதுவோம்.

18 வால்யூம்களை பொறுமையாகப் படிப்பவர்கள், வேண்டிய கருத்துகளை பொறுக்கி எடுப்பவர்கள், மனத்தால் அறிய முன்வருபவர்கள், உணர்வை தம் பக்கம் சேர்ப்பவர்கள், சேர்த்ததை செயலில் வெளிப்படுத்துபவர்கள் அதிர்ஷ்டம் பெறுவார்கள்.

கல்வி

       யோகம் என்பதை நாம் தவம் எனக் கொள்கிறோம். பகவான் ஸ்ரீ அரவிந்தர் யோகம் என்ற சொல்லுக்கு ஓர் பரந்த நோக்கம் அளிக்கிறார். குழந்தைக்கு நாம் கல்வி கற்பிக்கின்றோம், நல்ல பழக்கவழக்கங்களைக் கற்றுக் கொடுக்கிறோம். நற்பண்புகளை போதிக்கின்றோம். அதை வளர்ப்பு (rearing) என்று கூறுகிறோம்.. சமூகம் தனிமனிதனையும், நாட்டையும் அதன் பண்பு (culture) மூலம் வளர்க்கின்றது. ஒரு நாடு உயர்ந்திருந்தால், அதன் பண்பால் அது உயர்ந்துள்ளது என்று கூறுகிறோம். அப்பண்பிற்கு முதுகெலும்பாக அமைவது அந்த நாட்டின் கல்வித் திட்டம். மனிதகுலம் வாழ்வின் முக்கிய பகுதி, முழுவதுமில்லாவிட்டாலும், முக்கியமாக உள்ளது. வாழ்வு குடும்பம் குழந்தையை வளர்ப்பதைப் போல், நாடு மக்களை நாகரீகமாக்குவது போல் வாழ்வு ஆன்மீக வளர்ச்சியை நாடுகிறது. வாழ்வு அதன் குறிக் கோளையடைய மேற்கொள்ளும் (discipline) கட்டுப்பாடு யோகம் என்று பகவான் கூறுகிறார். அதையே

வாழ்வனைத்தும் யோகம்

என்றழைக்கின்றனர். நாடும் அதைப் போன்றது யோகம் செய்கிறது. அந்த யோகத்திற்கு கல்வியைக் கருவியாக்குகின்றது. அதனால்,

கல்வியை சமூகத்தின் யோகம் எனலாம்.

       அன்னை கல்வியை உடற்கல்வி, உணர்வின் கல்வி, மனத்தின் கல்வி, சைத்திய புருஷனுக்குரிய கல்வி, ஆன்மீகக் கல்வி எனப் பிரித்து நீண்ட கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். நம் நாட்டில் கல்வி எனில் மனப்பாடம். மேல் நாடுகளில் கல்வியில் மனப்பாடம் விலக்கப்பட்டு, அறிவு வளர சிந்தனையை மையமாகக் கொள்கிறார்கள். அன்னை இவ்விரண்டையும் கடந்து உணர்வால் கல்வியைப் போதிக்க வேண்டும் என்று ஓர் பள்ளியை ஆரம்பித்தார். இன்று கம்ப்யூட்டர் மூலம் கல்வி போதிக்கும் முறைகளில் மனப்பாடம் வரவழியில்லை. சிந்தித்து குழந்தை புரிந்து கொள்ளும் முறை அது. ஒன்றாம் வகுப்பு குழந்தை இம்முறையில் கணிதம் பயின்றான் மூன்றாம் மாதம் மூன்றாம் வகுப்பு கணிதத்தை எட்டினான். தினமும் பள்ளியில் 1 மணி கம்ப்யூட்டரில் படிக்கிறான். சொந்தமாக அவனுக்குக் கம்ப்யூட்டர் குழந்தைக்கு கணிதத்தை நேரடியாக மனப்பாடமின்றி, சிந்தனையைக் கடந்து படம், சொல், விளையாட்டு மூலம் கற்றுக் கொடுக்கிறது. ஒரு வகையில் இது அன்னை கூறிய முறையாகும். அன்னையின் கல்வி முறையைப் பின்பற்ற விரும்புபவர் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தலாம்.

       பாட புத்தகம் அச்சடிக்கு முன் புத்தகத்தை மாணவன் மனப்பாடம் செய்து மனப்பாடத்தைப் புத்தகமாகக் கொண்டு ஆசிரியரிடம் பயில வேண்டும். திருக்குறளை மனப்பாடம் செய்ய, சிலப்பதிகாரத்தை மனப்பாடம் செய்ய எவ்வளவு நாளாகும்? அச்சு வந்தபிறகு நேரம் வீணாவதைத் தவிர்த்தனர். கம்ப்யூட்டர் வந்த பின் கால விரயமில்லை. 10 வயதுப் பையன் SSLC முடிக்க முடியும் என்பது அனுபவம். அன்னையின் முறைகளில் இது ஓர் அம்சம். குழந்தைக்கு கவனிக்கும் திறமையை வளர்த்தால், தானே குழந்தை வாழ்வைக் கவனித்துக் கற்கும் என்பது அன்னை முறை. அதற்குரிய ஆசிரியர் ரிஷி அல்லது முனிவராக இருப்பது அவசியம் என்கிறார்.

சோகம்

சோகமானவருக்கு மருந்தில்லை. நாம் ஜாதகப்படி பரிகாரம் செய்வதுண்டு. சிலருக்கு அது விடுதலை தரும். மந்திரம் செய்வதும் வழக்கம். அதுவும் சிலருக்குப் பலன் தரும். டாக்டர் anti-depressantசோகத்திலிருந்து விடுதலைபெற மருந்து தருவார். மருந்து முதலில் பலன் தரும், முடிவில் சோகம் அதிகமாகும். பரிகாரம் பலிப்பது குறைவு. குறைந்தால் பிறகு திரும்பவரும்பொழுது சோகம் அதிகமாகும். மந்திரப் பலனும் அது போன்றது. கடைசி வரை பலன் தருவதும் உண்டு. அது அரிபொருள். சோகத்தை விரும்பி அழைத்து ரசிப்பவரை சோகம் நாடுகிறது என்கிறார். மந்திரம், மருந்து, பரிகாரம் தருவது போன்ற அளவுக்கு குணம் அன்னையை அறிந்தவுடன் வரும். ஒரே வித்தியாசம். எதுவுமே செய்யாமல் எல்லாச் சோகமும் முழுவதும் போய்விடும். போனபின் திரும்பிவரும். கொஞ்ச நாள் கழித்துவரும், நீண்டநாள் கழித்தும் வரும். வராமலே போய்விடுவதும் உண்டு. ஆனால் அரிது.

போன சோகத்தை அழைப்பதால் அது வருகிறது என்கிறார் அன்னை.

       இதை ஏற்றுக் கொள்வது சிரமம். கவனித்தால் உண்மை தெரியும். தெரிந்தபின் அழைக்காமலிருந்தால் வாராது, வரவே வராது. அன்னை கூறும் பரிகாரம் திருவுருமாற்றம். சோகம் திருவுருமாற்றத்தால் குதூகலமாகிவிட்டால் பிறகு வரவே வாராது. அதற்கு நாம் செய்ய வேண்டியது.

- அன்னை கூறுவதின் உண்மையை ஏற்க வேண்டும்.

- ஏற்பதின் உண்மை அறிவுக்குப் புரியவேண்டும்.

- புரிந்ததை உணர்வும் ஏற்க வேண்டும்.

- மீண்டும் அழைக்க மறுக்க வேண்டும்.

- திருவுருமாறப் பிரார்த்திக்க வேண்டும்.

       இவ்வளவும் சில நாட்களில், சில மணி நேரத்தில் நடப்பதை அனுபவமாக எவரும் காணலாம். இது சோகத்திற்கு மட்டுமல்ல, எல்லா பிரச்சினைகட்கும் உள்ளபொதுவிதி. முக்கியமாக பயந்த சுபாவமுள்ளவர், தம் பயம் போகும் என்று நினைக்கவும்

தயங்குவார்கள். நினைப்பது, அறிவு ஏற்பது. மேலும் அன்னை,

மிக பயந்தவர் திருவுருமாற்றத்தால் பெரிய தைரியசாலி ஆவர்.

எனவும் கூறுகிறார்.

கலகலப்பான சுபாவம் Ever fresh temperament

       கலகலப்பான சுபாவமுடையவர் குறைவு. அப்படி ஒருவரிருந்தால் அவரைச் சுற்றி ஒரு சிறு கூட்டம் எப்பொழுதுமிருக்கும். ஆன்மா விழித்து அதன் சாயல் சுபாவத்தில் பட்டால் கலகலப்பு எழும். அது இயல்பானது. அன்பர்கள் பிறரை சந்தோஷப்படுத்துவதை முக்கியமாகக் கொண்டால் கலகலப்பு தானே எழும். அன்னை நினைவு தானே உள்ளிருந்து எழும்படி அன்னையை ஏற்றுக் கொண்டால் கலகலப்பு இயல்பாக நிரந்தரமாகும். மனத்தின் வக்கிரங்களை அனுமதிக்கக் கூடாது என்ற முடிவுக்கும் இப்பலன் ஓரளவுண்டு. நல்லெண்ணம் கலகலப்பை வரவழைக்கும்.

 தியானமும், பிரார்த்தனையும் என்பது முதல் வால்யூம். அன்னை ஜப்பானில் இருந்தபொழுது எழுதியவை. அவற்றுள் பலவற்றை பிரெஞ்சிலிருந்து பகவான் மொழி பெயர்த்துள்ளார்.

       ஒரு பிரார்த்தனையில் அன்னை தம் ஸ்தூல உடலை விட்டு வெளிவந்ததைக் குறிக்கிறார். மீண்டும் அவ்வுடலினின்றும் வந்து, 12 முறை அதுபோல் வெளிவந்த பின் தலைக்கு மேல் சூரியனும், அதன் மீது சந்திரனையும் கண்டதாகக் கூறுகிறார். 1914ஆம் ஆண்டு மார்ச் 29ம் தேதி அன்னை பகவானை மாடிப்படியடியிலிருந்து கண்டபொழுது இதுவே நான் தியானத்தில் கண்ட கிருஷ்ணா என அறிந்தார். மறுநாள் தம் டைரியில்,

ஆயிரக்கணக்கான ஆத்மாக்கள் இருளில் மூழ்கி

இருப்பினும், நேற்று நான் கண்டவர் உலகில்

உள்ளவரை உலகில் சத்தியம் வெல்லும்

என எழுதினார். டிசம்பர் 28ல் ஒரு பிரார்த்தனையில், எந்த அரசனுக்கும் இல்லாத அதிகாரம், எந்த வெற்றியாலும் பெற முடியாத சந்தோஷம், எந்த ஞானமும் தரமுடியாத தெளிவு, மரணத்திலும் இல்லாத அமைதி ஆன்மாவிலிருந்து மனிதன் பெற முடியும் என எழுதினார்.

       அன்னையை அறிந்த அன்பர்கள் முக்கிய நேரங்களில் அன்னையை மறந்து விடுகிறார்கள். ஏற்கனவே தொடர்பு இருப்பதால், நாம் மறந்தாலும் நெருக்கடியான நேரம் அன்னையே வந்து காப்பாற்றுவது அன்றாட அனுபவம். ஒரு குற்றம் நடந்துவிட்டால், நாம் அழைக்காமல் சர்க்கார் போலீஸ் ரூபத்தில் வந்து விடும். அதே சர்க்கார் நம் நிலத்தில் தகறாரு ஏற்பட்டால், நாமே கோர்ட்டுக்குப் போனால் தான் நியாயம் வழங்கும். அன்னை சாதாரண நிகழ்ச்சிகளில் அழைத்தால் தான் வருவார். அழைக்காவிட்டால் அவரால் வரமுடியாது. அழைக்காமலே எப்பொழுது வரும் நேரம் இன்னும் வரவில்லை.

       நாம் அன்னையை மறந்துவிடுகிறோம் என்பதே நமக்குத் தெரிவதில்லை. பிரச்சினை வந்தால் தான் பெரும்பாலோர் அன்னையை நினைப்பார்கள். அதனால், நினைவே வழிபாடு என்பதை நெஞ்சில் கொள்ள வேண்டிய நிலைகளை இந்த 18 வால்யூம்களில் 180 இடங்களில் அன்னை விளக்குகிறார். சோதனையாக நாம் ஒரு நாளில் எப்பொழுது அன்னையை நினைக்கிறோம் என்று கவனித்தால், எனக்கு அன்னை தவிர வேறு பேச்சே இல்லை என்பவரும் பிரச்சினை என்று வந்தால், முதல் எண்ணம் எப்படித் தீர்ப்பது என்று வருவதைக் காண்பார். முதல் எண்ணம் அன்னையானால் அவருக்கு நீங்காத நினைவிருக்கிறது எனப் பொருள். இதுபோன்ற சிக்கலான கருத்துகள் 100க்கு மேல் நூல் எடுத்துக் கூறுகின்றது. நூலை நன்கு பயன்படுத்துவது ஒரு பாக்கியம்.

சரணாகதி :எதிரிக்கு அடங்குவதை சரணாகதி என நாம் அறிவோம். நாம் எதிரிக்குப் பணிந்தால், எதிரியின் பலம் அதிகரிக்கும். சரணாகதியின் தத்துவம் நேர் எதிரானது. எவரை நாம் சரணடைகிறோமோ அவர் முழுபலமும் நமக்கு வரும் என்பது சரணாகதியின் இரகஸ்யம். வாழ்வின் கொள்கை ஆன்மீகத்தில் தலைகீழாக இருக்கும்.

இதுவே சிருஷ்டியின் இரகஸ்யம்.

       பிரம்மம் தன்னை இழந்து சத் என மாறி ஆன்மாவாகி சத்தியமாகி, சத்திய ஜீவியமுமாகி, பிரிந்து மனமாகி, மனம் புலன் வழி ஆன்மாவை ஜடமாக்கினால் பிரம்மத்தின் நிலை சிதைந்து, உருக் குலைந்து ஒன்றுமில்லாமல் போகிறது. ஜடமான பிரம்மம், அதுவரை தான் அனுபவிக்காத ஆனந்தத்தை அனுபவிக்கிறது என்பது சிருஷ்டியின் தத்துவம்.

- தன்னைக் கடலில் இழக்கும் நதி கடல் எனப் பரந்து விரிகிறது.

- ஈஸ்வரன் சக்திக்குச் சரணடைவதால் தன்னைப் பூர்த்தி செய்து கொள்கிறான்.

- மனிதன் மடையனின் மனம் எப்படி வேலை செய்கிறது என அறிய முயன்று வெற்றி பெற்றால் மேதையாகிறான்.

- கணவனுக்கு தன்னை அர்ப்பணம் செய்யும் பெண் காலத்தை வெல்கிறாள்.

- அப்படி சிறந்த கற்பை கடந்து கணவனுக்கு செய்த சேவையை அனைவருக்கும் செய்பவள் சக்தியாகிறாள்.

- மனிதன் நெறியை இழந்து திருடனாகியபொழுது தெய்வமாகிறான்.

- ஒளி இருளாக மாறினால் அடர்ந்த ஒளியாகிறது.

- அன்பு கொடுமையானால் ஆண்டவனின் அன்பாகிறது.

- நியாயத்தை அழித்து பயங்கரவாதியானவன் ஆண்டவனின் கருவியாகிறான்.

- பரோபகாரம் படு அபசாரமென முடிவு செய்து கஷ்டப்படுபவனுக்கு உதவி செய்ய மறுப்பவன் துன்பத்தைஇன்பமாக்கும் இறைவனாகிறான்.

- போர் தொடுக்கும் போக்கிரி உலகை உய்விக்கும் உத்தமனாகிறான்.

        இவை போன்ற முரண்பாடுகளை உடன்பாடாக்கும் முறை சரணாகதி என்பது அறிவுக்குப் புலப்படாத ஒன்று. சிக்கலையே அடிப்படையாகக் கொண்டது. அன்னை எழுதியவற்றின் அற்புதத்தை உணர விரும்புபவர் பிரெஞ்சு பயின்று, மூலத்தைப் பயில வேண்டும் என்கிறார் அன்னை. அது செய்பவர் சிறந்தவர். ஆங்கில மொழி பெயர்ப்பு ஜீவனற்றது என்றும் கூறுகிறார். அவர் சொல் ஆங்கிலத்திலும், எந்த மொழி பெயர்ப்பிலும் ஜீவனை இழக்காதது என்பதும உண்மை. அன்னையின் சொல்லை நேரே பயிலும் பொழுது புரியுமுன், கடைப்பிடிக்கு முன், உணர்வையும் கடந்து உள்ளொளியைத் தொட்டு உலகை உள்ளே விரியச் செய்யும் பாங்குடையது. உள்ளம் உண்மையுடையதானால், உலகம் உள்ளே எழுந்து விரிந்து, உத்தமனைக் காட்டி உன்னையே பிரம்மமாக்க வல்லது.

****

 

 

 book | by Dr. Radut