Skip to Content

11.பிரார்த்தனை பலிக்க வேண்டும்

பிரார்த்தனை பலிக்க வேண்டும்

அண்ணன் - சத்திய ஜீவனுக்கு அடுத்தபடியான இலட்சியம் கேட்பாயல்லவா?

நாம் மனிதர், அறிவோடு நடக்கலாமல்லவா?

மனிதனை மையமாக வைத்துப் பேசுவது சரியல்லவா?

அவனை மையமாக்கினால் முதல் அவனுக்கு

வேலையை உத்தரவாதம் செய்ய வேண்டும்.

தம்பி - சாப்பாட்டிற்கும், வேலைக்கும் பிரச்சினையில்லை என்றால் பெரிய நிம்மதி.

அண்ணன் - உலகம் ஓர் இலட்சியத்தை ஏற்க வேண்டும், நாம் விலங்குபோல் வாழக்கூடாது, மனிதனைவிடப் பணத்தையும், டெக்னாலஜியும்  முக்கியம் என்று நினைக்கக் கூடாது. பணமும், டெக்னாலஜியும் மனிதன் உற்பத்தி செய்தவை. எனவே மனிதனே முக்கியம். என்பது இலட்சியமானால், இன்றுள்ள அத்தனைப் பிரச்சினைகளும் உடனே தீர்க்கக் கூடியவை.

தம்பி - சத்திய ஜீவன் பெரிய விஷயம். மனிதத் தன்மையுள்ள மனிதன் வேண்டும் என்பதே இன்றைய இலட்சியமானால், உலகில் பிரச்சினைக்கு வழியில்லையா? ரஷ்யாவில் அராஜகம் எப்படித் தீரும்?

அண்ணன் - ரஷ்யா பெரும் படிப்புள்ள நாடு, மக்கள் பெரு உழைப்பாளிகள் கம்யூனிசத்தை விலக்கி விட்டு வழி தெரியாமல் குறுக்கு வழியில் போய் தவிக்கின்றார்கள். இருவகையாக அப்பிரச்சினையைத் தீர்க்கலாம்.

1) உலகம் ரஷ்யாவை முன்னேற்ற முயன்றால், ரஷ்யா உடனே எழும் அது உலகத்திற்கு பெரும் பலன் தரும்.

தம்பி - மார்ஷல் பிகான் மூலம் ஏற்கனவே செய்தது தானே. புதிதல்லவே, ஐரோப்பாவை சீர்திருத்தியது போல் ரஷ்யாவை நிமிர்த்துவது முடியும்.

அண்ணன் - (2) மற்ற நாடுகள் போன வழியை விட்டு குறுக்கு வழியில் ரஷ்யா போவது தவறு என்று தெரிந்தால், உடனே நிலைமை மாறும். மனித இலட்சியம நிறைவேறினால் ஸ்ரீ அரவிந்தரின் இலட்சியத்திற்கு வழி பிறக்கும். ஸ்ரீ அரவிந்தர் human evolutionமனிதப் பரிணாமத்திற்கு சொல்லியிருப்பதை social evolution சமூக வளர்ச்சிக்குப் பொருத்திப் பார்த்தால் மனித இலட்சியம் நிறைவேறும். அடுத்தது தெய்வ இலட்சியம்.

தம்பி - உலகம் ஸ்ரீ அரவிந்தரை மனித முன்னேற்றத்திற்கு ஏற்க வேண்டும் என்றால் Life Divineயை மாற்றி சமூகக் கண்ணோட்டத்தில் எழுத வேண்டும்.

அண்ணன் - Theory of Development சமூக முன்னேற்றத் தத்துவம் என்பது அது தான்.

தம்பி - அதன் சுருக்கம் என்ன?

அண்ணன் - வரும் நூற்றாண்டை மனிதனுக்குரியதாக்கி, வேலைக்கு உத்தரவாதமளித்து, கல்வித் தரத்தை உயர்த்தி, உற்பத்தியை உபரியாகப் பெருக்கினால், உள்நாட்டு கலவரம், வன்முறை அழிந்து மனித இலட்சியமும் பூர்த்தியாகும்.

தம்பி - இதெல்லாம் சுலபமாக எல்லா நாடுகளும் செய்யக் கூடியது தான்.

அண்ணன் - பிரச்சினை தாங்க முடியாத தொந்தரவு ஆகும் வரை மனிதன் அசையமாட்டான் தாங்க முடியாத பிரச்சினை வரும்பொழுது எப்படியாவது அதைத் தீர்க்க முனைவான். பிரச்சினையை சரணாகதி செய்யத் தோன்றாது.

தம்பி - 10 லட்சம் கடன் வாங்கி 15 லட்சம் வட்டியாகி 25 லட்சத்திற்கு நோட்டீஸ் வந்தால் 20 லட்சம் சொத்துள்ளவன் என்ன நினைக்கிறான். 5 லட்சம் வட்டி தள்ளிக் கொடுத்தால் சொத்தை விற்று கடனை அடைக்கலாம், ஜெயிலுக்குப் போக வேண்டாம். அதுவே அருள் எனக் கருதி பிரார்த்திக்கின்றான். அவன் வேறு என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறீர்கள்?

அண்ணன் - அவனுக்குத் தெரிந்த தீர்வை மனதில் முடிவாகக் கொண்டு அது பூர்த்தியாகப் பிரார்த்திக்கின்றான்.

தம்பி - ஆமாம். அப்படி விடுபட்டால் போதும் என்று தானே மனிதன் கருதுவான்.

அண்ணன் - அன்னையிடம் வந்தபின், அன்பருக்கு இந்நிலை வராது. அப்படி வந்திருந்தால், தம்பி, மகன், நண்பன், கூட்டாளிகள் விஷயத்தில் தலையிட்டதால் வந்திருக்கும். அல்லது இப்பிரச்சினையால் அன்னையிடம் இப்பொழுது தான் வந்திருப்பார். தான் முடிவு செய்து அது பூர்த்தியாக ப் பிரார்த்திப்பது சரணாகதியாகாது.

தம்பி - என்ன செய்யவேண்டும்?

அண்ணன் - இந்தத் தீர்வு போதும் என்பவர் அதைச் செய்யலாம். ஆனால் அதுமுறையல்ல. எப்படி 10 லட்சம் கடன் வந்தது? ஏன் 15 லட்சம் வட்டியாயிற்று என்ற விவரங்கள், குறிப்பாக கடன் வாங்கிய மனநிலைகளை கண்முன் கொண்டு வந்து, இப்பொழுது மனம் மாறி, பிறகு சமர்ப்பணம் செய்வது சரணாகதியாகும்.

தம்பி - நமக்கு தெரிந்த சில விஷயங்களேயிருக்கிறதே. . கடமையை பூரணமாக நிறைவேற்ற முடிவு செய்த பக்தர் தமக்கு பாதி உரிமையுள்ள சொத்தில், எதிரி கோர்ட்டுக்குப் போனபின் மேற்சொன்னது போல் சரணம் செய்தார். அவருக்கு முழுச் சொத்தும் வந்ததே. அவராக அதை நினைத்திருக்க முடியாதே.

அண்ணன் - அத்துடன் 3 பெரிய விஷயங்கள் நடந்தனவே. பாங்க் லட்ச ரூபாய் வட்டியை எதிரிக்குத் தள்ளிக் கொடுத்தது. அது அன்பருக்கு ஆதாயமாயிற்று. சட்டம் போட்ட வழியில் 2 லட்சம் stamp fees இல்லாமல் சொத்து வந்தது. இந்த இருபெரும் சௌகரியங்களுடன், இவரே நிலத்தை வாங்க வழக்கத்திற்கு மாறாக பாங்க் பணம் கொடுத்தது. அன்பராக ஒரு முடிவுக்கு வந்திருந்தால் இவற்றுள் எதையும் நினைத்திருக்க முடியாது.

தம்பி - 10 லட்ச முதலுக்கும் 15 லட்ச வட்டிக்கும் என்ன வரும்?

அண்ணன் - என்ன வரும் என்று சொல்ல நடந்த விவரம் தெரியவேண்டும். அன்னை சட்டம் சொல்லலாம். வாங்கியவர் தன் தவற்றை முழுவதும் மனதால் ஏற்று, வாங்கியது தவறு என அவர் மனம் ஏற்றுக்கொண்டால் 15 லட்சம் வட்டி பாங்க் வட்டி யாகும் செய்த செலவு, முடிவு, வாங்கிய கடன், கடனை ஏற்றவர் தம் பங்கை சரணம் செய்தால், முதலாகிய 10 லட்சம் கொடுக்க வேண்டியிருக்காது. சரணாகதிக்கு உரிய பலன் இதற்கடுத்த கட்டம். இந்த 25 லட்சமும் கடனுக்கு பதிலாக அவருக்கு இருப்பாக மாறும் நிலையுண்டு. முடிவான கட்டம் இதே 25 லட்சம் அவருக்கு வருஷ வருமானமா மாறும்.

தம்பி - சொல்லும் பொழுது புரிகிறது. எனக்கே சொந்தமாகத் தோன்றியிருக்காது. 18,000 ரூபாய்க்கு ஜப்தி வந்தவருக்கு 4 மாதம் கழித்து அதே 18,000 மாத வருமானமாயிற்றே, எனக்கு நினைவிருக்கிறதே. ஜப்தி வந்த அன்று அதை நினைக்க முடியுமா? யாராவது சொல்ல முடியுமா? நாம் அன்னையை சரியாக அறியவில்லை, சரணகதியின் சக்தியை தெரிந்து கொள்ளவில்லை என்பது சரிதான்.

அண்ணன் - பிரச்சினை எதுவானாலும் முறை கடந்த கால சமர்ப்பணம், சரணாகதி. நம் முடிவு குறுக்கே வரக்கூடாது. அது அருளுக்குத் தடை. எவ்வளவு பெரிய பிரச்சினையானாலும், அது தீரவேண்டும் என முயல்வதைவிட அதை திருவுருமாற்ற வேண்டும் என்று முயல்வதே சரி. சரணாகதி அதைச் செய்யும்.

தம்பி - மேலே சொல்லிய கடனில் திருவுருமாற்றம் எது?

அண்ணன்-இன்றைய கடன் நாளைய இருப்பு என்பது திருவுருமாற்றம். அடுத்த கட்டத்தில் அதுவே வருஷ வருமானம், மாத வருமானமாவது, மேலும், இந்த திருவுருமாற்ற வாய்ப்பு இல்லாவிட்டால், அன்பருக்கு அந்த கடன் பிரச்சினை வந்திருக்காது. கடன் வந்ததே, திருவுருமாற்றம் உண்டு எனச் செய்கிறது.

தம்பி -இதெல்லாம் நீங்க சொல்றது சரி. ஆனா நடைமுறையில் சில முக்கியமான விஷயங்கள் நமக்குத் தெரிவதில்லை. அதனால் இதெல்லாம் முடியாமற் போகிறது.

அண்ணன் - நீ சொல்வது சரி. ஒரு வகையில் அவை ரொம்ப முக்கியம். மற்றொரு வகையில் எல்லாருக்கும் தெரிந்திருக்க வேண்டியதாயிற்றே. நான் சொல்லும் திருவுருமாற்றம் நடக்க சரணாகதி வேண்டும்.. பகவான் சரணாகதி சிரமம் என்கிறார். பெரும் பலன் உண்டு எனில் அதற்குரிய பெருமை முயற்சியில் இருக்கவேண்டும் அல்லவா? ஒரு முறையை புத்தகத்தில் படித்தால், பலன் வரும் என எதிர்பார்ப்பது சரியல்ல.

தம்பி - அப்படி இங்கு ஏதாவது இருக்கிறதா?

அண்ணன் - சரணாகதிக்கு முன், சமர்ப்பணம் செய்ய concentration வேண்டும். மனம் லயிக்க வேண்டும். வேறு எந்த எண்ணமும் குறுக்கிடாத அளவு மனம் லயிக்க வேண்டும். அது அவசியம என யாருக்குத் தெரியாது. அலைபாயும் மனம் அற்புதத்தை சாதிக்கும் என நினைப்பது சரியாகுமா?

தம்பி - அது பெரிய விஷயம். பின் எப்படி சில சமயம் பலிக்கிறது?

அண்ணன் - ஆபத்து என்றால், மனம் அடங்கும். அந்த நேரம் பலிக்கும்.

தம்பி - விஷயம் எவ்வளவு பெரியதானாலும், நம்மால் மனதை விலக்கி செயல்பட முடிவதில்லை.

அண்ணன் - அது நம்பிக்கை.

தம்பி - நாம் நம்பிக்கையில்லாமல் காரியம் நடக்க வேண்டும் என நினைக்கிறோம்.

அண்ணன் - அதற்குக் காரணம், பல சமயம் நம்பிக்கையற்றவர்க்கும் அருள் பலிக்கிறது.

தம்பி - அதனால் மனம் அதையே நினைக்கிறது.

அண்ணன் - சொத்து மதிப்புக்கு மேல் கடன் வந்த பிறகு மனம் மலை போல அன்னையை நம்பினால் ஆச்சரியமாக நிலைமை மாறும்.

தம்பி - மனம் இதர குறுக்கு வழிகளை நாடுகிறது.

அண்ணன் - இவ்வளவு பெரிய ஆபத்து வந்த பின், வழியேயில்லை என்று தெரிந்தும், அன்னையிடம் வழியுள்ளது எனத் தெரிந்தும், நம்பிக்கை வரவில்லை என்றால், யார் என்ன செய்ய முடியும்?

தம்பி - அதையே அன்னை sincerity உண்மை என்கிறார். அதிசயிக்கும்பொழுது எண்ணம் எழாது, மனம் அடங்கும், நெஞ்சு அன்னையை தானே கூப்பிடும். அது நடந்தால் பலிக்கும் எனப் பொருள். தெரியும். ஆனால் மனம் எதையெதையோ நாடுகிறது.

அண்ணன் - உலகமே இருண்ட பின், இல்லை உலகம் உன்னை அழிக்கக் கங்கணம் கட்டிக் கொண்டுள்ளபொழுது, முக்கியமாக உடன் பிறந்தவர் கைதட்டி சிரிக்கக் காத்திருக்கும் பொழுது, நிச்சயமாக வழியுண்டு என அன்னை அழைக்கிறார். அழைப்பை ஏற்பது நம் கடமையல்லவா?

தம்பி - அதுதான் அருள், பேரருள். நமக்கு பேரருள் வேண்டாம். கைதட்டி சிரிக்க தயாராகும் உறவினரிடம் நல்ல பெயரை மனம் நாடும்.

அண்ணன் - அப்படிப்பட்டவர்க்கு வழியேயில்லை.

தம்பி - ஒரு தரத்திற்கு மேல் சோதனை செய்யக்கூடாது எனக் கூறுவார்கள் நமக்கு ஒவ்வொரு முறையும் அன்னைக்கு சக்தியுண்டா என சோதிக்கத் தோன்றுகிறது.

அண்ணன் - அது தவறல்லவா?

தம்பி - ஆமாம். துரோகமும் கூட. எனக்கு அப்படித்தான் தோன்றும். சொல்லவே கூச்சமாக இருக்கிறது. நாமெல்லாம் அன்பர் என எப்படிப் பேசுவது. நாம்

அன்பராகும் தகுதி பெறவில்லை.

அண்ணன் - 40 லட்ச ரூபாய் சரக்கை 3 வருஷமாக விற்க முடியாமல், இனி விலை போகாது என ஒருவர் வைத்திருந்தார். முதல் 4 மாதத்தில் 28 லட்சம் விற்றது. அதன்பின் அவருக்கு நம்பிக்கை வரவில்லை என்றால், அது இனி வராது.

தம்பி - நாம் அப்படிப்பட்டவர்களுக்கு உதவ நினைப்பது தவறு. நாம் அப்படித்தானிருக்கிறோம். இந்த 25 லட்சம் கடனை திருவுருமாற்றி 25 லட்ச வருமானமாக மாற்ற கடன்காரர் முன் வருகிறாரோ இல்லையா, நான் ஆத்மீக முன்னேற்றத்திற்காக அதை செய்வது சரி. அப்படி நினைக்கும் பொழுதே, மனம் குவிந்து அடங்குகிறது. அப்பொழுது நடக்கும் எனத் தெரிகிறது.

அண்ணன் - நமக்கெல்லாம் அன்னை ஆயிரம் முறை பலித்துவிட்டார்கள். நாம் விளையாட்டு பிள்ளைகள் போல் பள்ளிக்கூடம் போகாமல் வேண்டாம், அன்னை தரவேண்டாம் என நினைக்கிறோம். நாமெல்லாம் இதை செய்வது தவறு.

தம்பி -ஆமாம். பிரச்சினை வந்தால் பிரார்த்திக்கத் தோன்றவில்லை. ஏன் அன்னை என்னை கைவிட்டு விட்டார் என நினைக்கிறோம்.

அண்ணன் - கைவிடுதல் என்பதை தவறாது செய்பவன் அன்பன். அது அன்னை அறியாதது. நெஞ்சு தானே அழைக்க ஆரம்பித்து அது நிலையாகி விட்டால் நாம் அன்பர் என்ற தகுதி பெறுகிறோம்.

தம்பி - அதுவே சட்டமானால், அன்பரைத் தேட வேண்டியிருக்கும்.

அண்ணன் - அதற்குக் குறைந்து அன்பராக முடியாது. இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. தூங்க வேண்டும் என்ற பிரார்த்தனை பலிக்கவில்லை. காலை மணி 5. சரி, நம் பிரார்த்தனை அவ்வளவுதான், விடு என்று ஒரு நாள் நினைத்தேன். மனதைத் திடப்படுத்திக் கொண்டு, அப்படி முடிவு செய்தால் நம்பிக்கையில்லை என்று அறிவிப்பதாகிறது என நினைத்தேன். அதன் பிறகும் தூக்கம் வரவில்லை. பொழுது விடிந்து தூங்கவில்லை என்பது போலில்லை மனம் அன்னையை நாடினால், அருள் அதே க்ஷணம் செயல்படுகிறது என்று அன்று கண்டேன்.

தம்பி - இதெல்லாம் பிறரிடம் சொல்லக்கூடியதில்லை. நாமே உணர வேண்டியவை. தவறமாட்டார் அன்னை என்பது எக்காலத்திலும் உண்மை. ஒவ்வொரு கட்டத்திலும் நாம் அதிக விழிப்போடிருக்க வேண்டும்.

சந்தேகம் கடைசிவரை வந்தபடியிருக்கிறது.

அண்ணன் - சந்தேகம் வந்தால், சந்தோஷமில்லை. அங்கு அன்னைக்கு வேலையில்லை.

தம்பி - மீண்டும், புதிதாக நாம் அன்பராக வேண்டும். நிமிஷத்திற்கு நிமிஷம் நம்பிக்கையைப் புதுப்பிக்க வேண்டும் என்கிறார் அன்னை. நாமுள்ள நிலைக்கும், அன்னை எதிர்பார்ப்பதற்கும் காத தூரம்.

அண்ணன் - நீ சொல்லும் கட்டத்தைத் தாண்டும் வரை ஒரே கேள்வி மயம். அதைத் தாண்டிவிட்டால், கேள்வி என்பதே எழாது. அதுவே எல்லைக்கல்.

 

தொடரும்...

****

 book | by Dr. Radut