Skip to Content

01.யோக வாழ்க்கை விளக்கம் IV

யோக வாழ்க்கை விளக்கம் IV                                                             கர்மயோகி

696) இருள் நிறைந்த கடுமையான வாழ்வின் உண்மைகளை திருவுருமாற்றம் செய்தால் சச்சிதானந்தத்தின் ஆனந்தத்தைவிட தெளிவான ஆனந்தத்தைத் தாங்கும் கனமான பொருளாக மாறும்.

சிருஷ்டியில் ஆனந்தம் பேரின்பத்தை விடப் பெரியது.

       பணத்தைப் பெட்டியில் வைத்திருப்பது ஒரு சந்தோஷம். அதை செலவு செய்வது அதைவிடப் பெரிய சந்தோஷம். சச்சிதானந்தம் என்பதில் ஆனந்தத்தை (bliss) எனும் ஆங்கிலச் சொல்லால் பகவான் குறிக்கின்றார். இதையே தபஸ்விகளின் உலகம் ஆனந்தம் என அறியும் அதன் வகைகள் பல. எனினும் உயர்வு ஒன்றே. இது செறிவுள்ள தீவிர ஆனந்தம். இது சத்திய ஜீவிய லோகத்திற்கும் மேல் உள்ளது. ஆனந்தமே சிருஷ்டி செய்வது என, ஆனந்த இரகஸ்யம் எழுதினார்கள். பூவுலகில் ஆனந்தமில்லை. அதிகபட்சம் (joys) சந்தோஷமுண்டு. நரம்பு உணரும் சந்தோஷத்தை pleasure எனவும் இதயத்தில் பொங்கும் சந்தோஷத்தை joy  எனவும் ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள். தமிழில் இரண்டையும் மகிழ்ச்சி, சந்தோஷம் என்கிறோம். பிரித்து சொல்வது இலக்கியத்திலிருக்கலாம், வழக்கில் இருப்பதாகத் தெரியவில்லை.

       சச்சிதானந்த ஆனந்தம் நம் நரம்பிலும், இதயத்திலும் ஆன்மீகப் பக்குவம் பெற்றவர்க்கு வெளிப்படும். இது பூரண யோகத்திற்குரிய உணர்வு. இதை பகவான் bliss என்பதிலிருந்து வேறுபடுத்தி delight என்கிறார். இது சிருஷ்டியிலுள்ள ஆனந்தம். ஆனந்தம், சிருஷ்டியிலுள்ள ஆனந்தமாக மாறுவது பூரண யோகத்தின் திருவுருமாற்றத்தால் தான். அப்படி மாற வாழ்வின் இருளான அடிப்படைகள் ஒளியாக மாற வேண்டும். கொடுமையை அனுபவிப்பவன் இருள் நிறைந்தவன். பிறரைக் கொடுமை செய்து அதில் இன்பம் காண்பவன் மனதால் திருவுருமாறி பிறருக்கு அன்பு செலுத்தி ஆனந்தம் பெற முயன்றால், அவ்வானந்தம் கனத்த பொருளாகும். அது அடர்த்தியும், செறிவும் உள்ளதாகும். அதன் ஆனந்தம் (delight) அளவிடற்கரியது என்பது போல் அடர்த்தியானது மாறும். உடல் திருவுருமாறினால் கனக்கும். பகவான் கைகால்களை பிறர் அசைக்க நேர்ந்தபொழுது அவை மிக கனமாக இருந்ததாகக் கூறுகிறார்கள்.

****

697) பணிவு உடலின் பரிணாமம்.

       கரணங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனி இயல்புண்டு. மனம் அறிவால் செயல்படுகிறது. உணர்வு சக்தியால் செயல்படுகிறது. உடல் பழக்கத்தால் செயல்படுகிறது. ஆன்மா அகந்தையால் சூழப்பட்டு, சாட்சியாய் இயங்குகிறது. பரிணாமம் என்பது கரணம் தானுள்ள நிலையிலிருந்து உயர்ந்து அடுத்த நிலையில் செயல்படுவதாகும்.

       குடும்பத்தில் தலைவர் பொறுப்புடையவர், சிறுவர்கள் அனுபவமோ, அறிவோ, பொறுப்போ இல்லாதவர்கள். தலைவர் உத்தரவிட்டால் மற்றவர்கள் பணிந்து செயல்பட்டால் அது நல்ல குடும்பம். பணிய மறுத்தால் அது நல்ல குடும்பமில்லை. சீக்கிரம் சீரழியும். உயர்ந்த குடும்பம் என்பதென்ன? தலைவருக்குள்ள அனுபவம் மற்றவர்க்கிருந்தால், அதே அறிவை தலைவர் தவிர பிறர் பெற்றிருப்பதால், சிறுவர்கள் தானே பொறுப்புடையவரானால், அதை உயர்ந்த குடும்பம் என்கிறோம். இக்குடும்பம் வளர்ச்சியால் கீழுள்ளவர்க்கு மேலிருப்பவர்களுடைய அனுபவத்தையும், தீட்சண்யத்தால் பெரியவர்களுடைய அறிவை சிறியவர்க்கும், பண்பால் அடிமட்டத்திலுள்ளவர்க்கு உச்சியில் உள்ளவர் பொறுப்பையும் கொடுத்துள்ளது. ஒரு கம்பனியில் உள்ளே நுழைய வாட்ச்மேனைக் கேட்டால், அவன் உள்ளே சென்று ஆபீசரைக் கேட்பான். அவர் உத்தரவு கொடுத்தால் உள்ளே விடுவான். உத்தரவு கொடுக்காவிட்டால், உள்ளே விடமாட்டான். பெரிய கம்பனிகளில் வாட்ச்மேனுக்கே அந்த அதிகாரத்தைக் கொடுத்திருப்பார்கள். அங்கு வாட்ச்மேனுக்கே, ஆபீசருடைய திறமை இருக்கும். இது வளர்ந்த உயர்ந்த கம்பனி. இதை evolution பரிணாமம் என்கிறோம்.

       கீழேயுள்ள கரணம் - உடல் - தன் வேலையை தான் செய்வதில் திறமையாக இருப்பது பெரியது, வளர்ச்சி, போற்றுதற்குரியது. வாட்ச்மேன் திறமையாக காவல் காப்பது அவனுடைய உயர்வு. அதற்கு மேல் அவனிடம் எதிர்பார்ப்பதில்லை. அதிகாரியின் திறமையும் பொறுப்பும் வாட்ச்மேனிடம் நாம் எதிர்பார்ப்பதில்லை. அப்படியிருந்தால் அது வெறும் வளர்ச்சியில்லை. பரிணாம வளர்ச்சி (evolutionary growth). உடல் காரியங்களை செய்யக் கற்றுக் கொள்ளும். கற்றுக் கொண்டால் அது பெறுவது (skill) திறமை. அனுபவத்தால் உடல் திறமையைப் பெறுவது போற்றற்குரியது. சக்தி உடலைவிட உயர்ந்த பிராணனுக்குரியது (vital, உயிர்) உயிருக்குரிய சக்தியை பெற உடல் சக்திக்குப் பணிய வேண்டும். இது பரிணாம வளர்ச்சி, உடலுக்குப் பணியத் தெரியாது. பணிவுள்ள உடல் பரிணாம வளர்ச்சி பெற்றதாகும்.

****

698) வழிபாடு பிராணனின் பரிணாமம்.

699) நம்பிக்கை மனத்தின் பரிணாமம்.

700) பிரம்ம ஞானம் ஆன்மீகப் பரிணாமம்.

       ஆன்மாவாகிய புருஷன் சாட்சியாக இருப்பது அதன் பரம்பரைப் பழக்கம். அதனால் அதற்கு சாட்சி புருஷன் எனப் பெயர். இயற்கையில் ஆன்மா அகந்தை எனும் கூட்டுக்குள் அடைபட்டு தன்னையறியாமல் (unconscious)ருக்கிறது. தான் பிரம்மம் என்பதை உணர முடியாத நிலையிலிருப்பதால் தான் ஆன்மா பிறவிச் சூழலிலிருக்கிறது. தானே பிரம்மம் என உணர்ந்த ஆன்மா தன்னையறியும் ஆன்மா (conscious soul). தன்னையறியும் ஆன்மா சாட்சியாக இருப்பதில்லை. பிரகிருதி செய்வதை சாட்சியாக மட்டும் பார்த்துக் கொண்டிருப்பதில்லை. பிரகிருதியின் செயலை நிர்ணயிக்கும் ஈஸ்வரனாக, பிரகிருதிக்கு உத்தரவிடும் தெளிவோடு இருக்கும். சாட்சி புருஷன் நிலைமாறி ஈஸ்வர நிலையை எட்டுவது ஆன்மாவுக்கு பரிணாம வளர்ச்சி. பிரம்ம ஞானத்தால் வருவது அது. மனம் அறிவால் செயல்படுகிறது. அறிவு அனுபவத்தால் வருகிறது. இத்தனை நாள் நான் செய்த காரியம். அதனால் இதை நம்புகிறேன் என்பது மனத்திற்குரிய தெளிவு. பிறந்ததிலிருந்து சாப்பிடுகிறோம். சாப்பிட்டால் பசியடங்குகிறது. அது அனுபவம். அனுபவித்தால் வந்த அறிவு. அவ்வறிவால் செயல்படுவது மனம். அந்த அனுபவமோ, ன் அடிப்படையில் ஏற்பட்ட அறிவோ இல்லாமல் செயல்படச் சொன்னால் மனத்தால் முடியாது. அதற்கு குழப்பம் வரும். பாங்கில் பணம் போட்டால் பத்திரமாக இருக்கும் என கிராமத்திலுள்ளவர்க்குச் சொன்னால் அந்த நாளில் நம்பிக்கைப்படாது. பணத்தை பெட்டியில் வைத்தால் பத்திரமாக இருக்கும். பிறரிடம் கொடுத்தால் போய்விடும் என்பதே கிராமத்தார் அனுபவம். பாங்கில் பணத்தை போடகிராமத்தாருக்கு அப்பொழுது நம்பிக்கை வருவதில்லை. நம்பிக்கை என பகவான் விளக்கம் கூறுகிறார்.

       பிராணன் என்பது உயிர். இது ஆசையின் இருப்பிடம். Vital என ஆங்கிலத்தில் பகவான் எழுதும் கரணம். இதற்குரியது சக்தி. ஆசையுள்ள மனிதனிடம் பணம் கிடைத்தால், பதவி கிடைத்தால், ஆசையைப் பூர்த்தி செய்து கொள்வான். ஆசை நிறைந்தவனுக்கு பணம் கிடைத்தபின் அந்த ஆசையைப் பூர்த்தி செய்யாமலிருக்கும் பாங்கில்லை. இருந்தால் அது கட்டுப்பாடு (discipline) கட்டுப்பட ஆசையால் முடியாது. எவரும் தனக்கே கட்டுப்படுவது (self discipline) சிரமம். மேலேயுள்ளவர்கட்டுப்படுத்தினால் கட்டுப்படலாம். தானே கட்டுப்படுவது இயல்பல்ல. பிராணனுக்கு ஆசையைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும். சந்தர்ப்பமில்லை எனில் சும்மா இருக்கும். சந்தர்ப்பம் இருந்து, ஆசையைப் பூர்த்தி செய்யக்கூடாது என்ற கட்டுப்பாட்டைப் பெற, மனம் அதை அடக்க வேண்டும். மனத்திற்குப் பிராணன் அடங்க வேண்டும். அடங்க மனத்தை பிராணன் உயர்வாகக் கருத வேண்டும். பிராணன் மனத்தின் அறிவை உயர்வாகக் கருதி, போற்றி வழிபட முன்வந்தால், மனத்திற்குக் கட்டுப்பட்டு, தன்னால் முடியாததைச் செய்கிறது. இது பிராணனுக்குரிய பரிணாம வளர்ச்சி. எந்தக் கரணமும், தன்னைவிட உயர்ந்த கரணத்திற்கு அடங்குவதோ, அல்லது அதன் திறமையைப் பெறுவதோ, பரிணாம வளர்ச்சியாகும்.

****

 

 

 

 book | by Dr. Radut