Skip to Content

தமிழாசிரியர்

"அன்னை இலக்கியம்'' 

இல. சுந்தரி

 

திருக்கோவிலூருக்கு அருகில் ஒரு கிராமம். ஒரு தொடக்கப் பள்ளி, குறைந்த வசதிகளுடைய மருத்துவமனை ஒன்று, பஞ்சாயத்துப் போர்டு கட்டடம் ஒன்று, நீள நீளமான மூன்று தெருக்கள், சுற்றுக் குப்பம் ஒன்று.

இவ்வூரில் ராதாகிருஷ்ண செட்டியார் செல்வந்தர், நியாயச் சிந்தையுடையவர், ஓரளவு படித்தவர், ஊரில் மிகுந்த செல்வாக்குடை யவர். பசுக்களும் எருமைகளுமாய் கொட்டிலில் மாடுகள். அக்கம்பக்கத்துச் சிற்றூர்களுக்கு நினைத்த நேரத்தில் சென்று வர வில்வண்டி ஒன்று. பெரிய அளவு நிலப்பரப்பு வயல் இவருடையது. பரம்பரை பரம்பரையாய் வீட்டில் வேலை செய்யும் வண்டிக்காரன், வேலைக்காரி, வேலைக்காரன் என்று ஆட்கள்.பட்டணத்தில் படித்து உயர் பதவியில் வசதிகளோடு வாழும் இவர் மகன் எப்போதேனும் கிராமத்திற்கு வருவான்.மற்றபடி ஊர்மக்களே இவர் மக்கள். பெற்ற செல்வத்தை ஊரார் நலனுக்குச் செலவிடுவார். உற்றார் உறவினர்க்கும் செய்வார். எல்லோரிடமும் இவர்க்கு மதிப்பும் மரியாதையுமிருந்தது. ஊர்மக்கள் வேண்டுகோளுக்கிணங்கி ஆரம்பப் பள்ளியை உயர் பள்ளியாக்க எல்லா முயற்சிகளும் செய்தார். அதன் விளைவாய் உருவான பள்ளிக்கு மேலும் சில ஆசிரியர்கள் வெளியூரிலிருந்து வந்தனர். அக்கம்பக்கத்து ஊரிலிருந்து வரும் ஆசிரியர்கள் காலையில் வந்து மாலையில் ஊர் திரும்ப பஸ் வசதியிருந்தது. ஒரே ஒரு புது ஆசிரியர் வெகு தொலைவிலிருந்து வரவேண்டியிருந்தது. இவர் தமிழாசிரியர். இவருக்கு உள்ளூரிலேயே தங்கும் வசதியை ஏற்படுத்தும் பொறுப்பை செட்டியார் ஏற்றார்.

"வேலு" என அழைத்தார் செட்டியார். இவர்கள் வீட்டுப் பரம்பரை வேலையாள் முனியனுடைய பையன் வேலு. 12 வயதுச் சிறுவன். 5 ஆம் வகுப்புவரை உள்ளூர்ப் பள்ளியில் படித்திருந்தான். முழுநேர வேலையாளாய், தன் தகப்பனால் இந்த வீட்டில் கொண்டுவிடப்பட்டவன். சிறு வயதில் தாயை இழந்து தகப்பனால் வளர்ந்தான். தகப்பனும் மறைந்தபின் இந்த வீடே அவன் வாழ்வாகிவிட்டது படிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் மிகுதியும் உண்டு. ஆனால் என்ன செய்ய முடியும்? இவனைப் போன்ற வேலைக்காரர்கள் கிராமங்களில் பரம்பரை பரம்பரையாகப் பணியைத் தொடர்வதையே பழக்கமாய்க் கொண்டுள்ளார்கள். வேலு நல்ல சுறுசுறுப்பும் நன்றியுணர்வும் கொண்டவன். படிக்க வைத்தால் படிப்பு வரும். ஆனால் இவன் தந்தை தனக்குப்பிறகு தன் மகன் நல்ல இடத்தில் வேலைக்குச் சேரவேண்டும் என்று செட்டியார் வீட்டில் வேலை பழக்கிவிட்டான். செட்டியாரும் அவர் மனைவியும் நல்லவர்கள். பொழுதுக்கும் ஏதேனும் வேலையிருக்கும். பெரிய செல்வாக்குக் குடும்பம். ஏனென்று கேள்வி கேட்காமல் இட்டதைச் செய்யும் ஆட்கள் அவர்களுக்குத் தேவை. வயிற்றுப்பாட்டிற்கு வஞ்சமில்லாது சோறு போடுவார்கள். நல்ல நாள், பெருநாட்களில் உடுக்க துணி எடுத்துத் தருவார்கள் ஏழைகளுக்கு. அதுவே போதுமானதாயிருந்தது. அதனால் அவர்கள் பட்டம் பதவிக்கு ஆசைப்படுவதில்லை. ஆனாலும் வேலுவுக்குப் படிப்பில் ஆர்வமுண்டு. உள்ளூரில் இருந்து ஐந்து வகுப்புப் படித்துவிட்டான். வெளியூர் அனுப்பிப் படிக்கவைக்கவில்லை. வேலையிலும் சேர்ந்துவிட்டான். இந்நிலையில்தான் உள்ளூரிலேயே உயர்பள்ளியும் தொடங்கப்போகிறது. செட்டியாருடன் அவனும் போவான். அந்த வகுப்பறைகளில் அமர்ந்து படிக்க எத்தனையோ ஆசை. ஆனால் சொல்லத் துணிவில்லை.

செட்டியார் வீடு பங்களா வீடு. பக்கத்து ஓட்டு வீட்டைச் சுத்தம் செய்து வரப்போகும் ஆசிரியர் தங்குவதற்கு ஏற்பாடு செய்ய இவனுக்குச் செட்டியார் உத்தரவிட்டிருந்தார். வேலைக்காரப் பொன்னம்மா வீடு கழுவ கொல்லைப்புறத்துக் கேணியிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். தட்டு முட்டுச் சாமான்களைத் தோட்டப்பக்கத்து அறைக்கு மாற்றினான். வீட்டை ஒழுங்கு செய்தான். இந்த வீட்டில் ஓர் ஆசிரியர் குடிவரப் போகிறார் என்பதே மிகுந்த மகிழ்ச்சி தந்தது. படுத்துக்கொள்ள கட்டிலைத் தட்டிப் போட்டு, துணி உலர்த்த கொடி கட்டி, புத்தகங்கள் வைக்க அலமாரிகளைச் சுத்தம் செய்து, பொறுப்பாகப் பார்த்துப் பார்த்துச் செய்தான். செட்டியார் வந்து பார்த்து "எலே பயலே வேலு, நீ பெரிய ஆள்தான் போ, சும்மாக் கிடந்த வீட்டை இத்தனை அழகா மாத்திட்டியே'' என்றார். வேலுவுக்குப் பெரிய விருது பெற்றாற்போலிருந்தது. இயற்கையிலேயே அவன் உழைப்பாளி. அதிலும் வரப் போவது ஆசிரியர். அவனுக்கோ படிப்பு என்றால் கொள்ளை விருப்பம். பள்ளிக்கூடம் சென்று படிக்க முடியாவிட்டாலும் ஓர் ஆசிரியருக்குத் தொண்டு செய்ய அவனுக்கு ஆசை.வரப்போகும் ஆசிரியரை மானசீகமாய் வணங்கினான். வீடு தயாராகிவிட்டது. "வாத்தியாரய்யா தனியா வருவாரா, பெஞ்சாதியோட வருவாரா? வீட்டு அம்மா வந்தால் எனக்கு சந்தோசம்தான். வாத்தியார் பள்ளிக்கூடம் போகும் நேரம் அம்மாவுக்கு ஒதவியா கறிகாயெல்லாம் வாங்கியாந்து சின்ன சின்ன ஒதவியெல்லாந் செய்து தருவேன்" என்று தனக்குள் பேசிக் கொள்கிறான்.

'ஏலே வேலு' என்றார் செட்டியார். ஓடிவந்து இரண்டு கைகளையும் குறுக்கே கட்டிக்கொண்டு,  'வந்தேன் எசமான்' என்கிறான். வள்ளுவர் அழைத்தவுடன் கிணற்றுக் கயிற்றை அப்படியே விட்டு விட்டு அவர் மனைவி வாசுகி வந்தது மெய்யோ பொய்யோ செட்டியார் அழைத்தவுடன் அப்படியே ஓடிவரும் வாசுகித்தனம் இவனுக்குண்டு. இந்த அவனுடைய பணிவும் விரைவும் செட்டியார்க்கு மிகவும் இதம் தருவது.

"நான் பக்கத்து ஊர் நாயக்கர் வீட்டு விசேஷத்துக்குப் போகிறேன். வர பொழுதுசாஞ்சுடும். நீ மறக்காம பஸ்ஸுக்கு போயி வாத்தியாரய்யாவை வீட்டுக்குக் கூட்டி வந்திடு. ஏதாச்சும் வேணுமினா வீட்ல அம்மணியிடம் (இவர் மனைவி) வாங்கிவந்து கொடு. நான் இராவுக்கு வந்து பாக்கறேன்'' என்றார். 'சரிங்க எசமான்' என்று பணிவுடன் கூறினான் புன்முறுவலுடன். செட்டியார் புறப்பட்டார். அவர் வண்டியில் ஏறுவதற்கு முன்னால் ஓடிப்போய் வண்டியின் குறுக்குக் கம்பியைப் பூட்டி அவர் வெள்ளி வெற்றிலைப் பெட்டியைப் பணிவாக நீட்டினான். புறப்பட்டதும் உள்ளே திரும்பினான். இவனும் அவருடன் போகும் போதெல்லாம் வெற்றிலைச் செல்வத்தை (பெட்டியை) இவனே வைத்துக் கொண்டு தேவைப்படும்போது கொடுப்பான். இவன் உடன் செல்லாத போது பெட்டியில் நல்ல வெற்றிலை சீவல் சுண்ணாம்பு இவற்றைச் சரிபார்த்து வைத்துக் கொடுப்பான். 

உள்ளே வந்து கடிகாரம் பார்த்தான். மாட்டிற்கு வைக்கோல் உதறிப்போட்டான். வேலைக்காரப் பொன்னம்மாவிடம் எள்ளு காயப் போட்டு கவனமாய்ப் பார்க்கும்படிச் சொல்லிவிட்டு அம்மாவிடம் சொல்லிக் கொண்டு பஸ் பார்க்கப் புறப்பட்டான். அதாவது இவர்களின் நீண்ட தெருவைக் கடந்து திரும்பும் சின்னத் தெரு ஒரு புறம் குடிசையும், ஒரு புறம் வயலுமாய் இருக்கும். அதையும் கடந்தால் பஸ் போகும் பெரியசாலை வரும். இந்தச் சின்னத் தெருவை அந்தச் சாலையுடன் இணைக்கும் இடத்திற்கு வலப்பக்கம் ராவுத்தர் டீக்கடை.அதையடுத்து வெற்றிலைப்பாக்குக் கடை, விறகுக்கடை என்று சில கடைகள். இடப்பக்கம் ஐயர் கடை என்ற சிற்றுண்டிச்சாலை. அதையடுத்து சின்ன சின்னக் கடைகள். ராவுத்தர் கடைக்குச் சற்றுத் தள்ளி பரந்த நிழலாகும் ஓர் ஆலமரம். இதனடியில் திண்ணைபோலக் கருங்கல் பதிப்பு. இதுதான் இந்தக் கிராமத்தின் பஸ் ஸ்டாண்டு. இங்குதான் வரும் போகும் பஸ்கள் நின்று மக்களை இறக்கியும் ஏற்றியும் செல்லும்.

8.30 வண்டியில் பார் என்று செட்டியார் சொன்னதால் 8.15க்கே வந்து விட்டான் வேலு. ராவுத்தர் தம் டீ வியாபாரத்தினிடையே வேலுவைச் சீண்டினார். "என்ன வேலு? காலங்காட்டியும் பஸ்ஸுக்கு வந்திருக்கே யார் வர்ராங்க?'' என்றார்.

"நம்மவூர் பெரிய பள்ளிக்கூடத்துக்குப் புது வாத்தியாரய்யா வரப்போறாரில்ல அவரை இட்டுப் போகத்தான் வந்தேன்'' என்றான்.

"என்னமோ நீ படிக்கற பள்ளிக்கூட வாத்தியார் மாதிரியல்ல பேசுற?'' என்றார் ராவுத்தர்.

"ஏன் ராவுத்தரே இப்படிச் சொல்றீங்க, நம்மவூர் பள்ளிக் கூடத்துக்கு வர்ர வாத்தியார்னா நமக்கெல்லாம் பொறுப்பில்லையா?'' என்றான் பெரிய மனுஷன்போல்.

"செட்டியார்வூட்டுச் சோறில்ல இப்படித்தான்பேசுவ" என்றார் ராவுத்தர்.

எதற்கு வீண்வம்பென்று, ரோட்டைப் பார்த்தவண்ணம் மரத்தடியில் போய் அமர்ந்து கொண்டான். சிறிது நேரத்தில் சிவப்பும், மஞ்சளும் கலந்த வண்ணத்தில் அரசுப்பேருந்து தொலைவில் வருவது தெரிந்தது. பஸ்ஸில் ஏறப்போகிறவர்கள் மூட்டை முடிச்சுகளைச் சரிபார்த்தனர். இவனும் எழுந்து கொண்டான் தலையில் சுற்றியிருந்த துண்டைக் அவிழ்த்து உதறித் தோளில் போட்டவண்ணம் வாத்தியா ரய்யாவைக் கண்டு பிடிக்க தயாரானான். தலையில் டர்பன் கட்டி பஞ்சகச்ச வேட்டியுடுத்து முழுக்கைச் சட்டைமேல் கோட்டுப்போட்டு நீள அங்கவஸ்த்திரம் பாம்புபோல் கழுத்தைச் சுற்றிக் கிடக்க கம்பீரமாய் ஓர் ஐம்பது வயது உருவத்தை எண்ணி, பஸ்ஸிலிருந்து இறங்குபவர்களை பஸ் நின்றதும் ஆர்வத்துடன் அருகில் சென்றான். உள்ளூர்வாசிகள் ஒவ்வொருவராய் இறங்க இறுதியாக ஊருக்குப் புதியவர் ஒருவர் பொறுமையாய் இறங்கினார். இளைஞர் தோளில் மாட்டிய நீளப்பையுடன் கையில் பெரிய சூட்கேசுடன் இறங்கினார். மிக மென்மையான சாயல் உடையவராயிருந்தார். பெண்ணின் கண்போல நீண்ட கருணை மிகுந்த விழிகள். மென்மையான உணர்வுடையவர் என்பது போல் சிறிய உதடு. அறிவுக் கூர்மையைக் காட்டும் கூரிய நாசி. சுருள்சுருளான முடிக்கற்றைகளை அலையலையாய் சீவியிருந்தார். கறுப்பு நிற வாரில் பொருந்திய பெரிய கைக்கெடியாரம். தூயவெண்ணிற வேட்டியும் வெண்ணிற முழுக்கைச் சட்டையும் பார்த்தவுடன் இவர் பண்பாளர் என்ற தோற்றப் பொலிவு. அருகே சென்ற வேலு இரண்டு கைகளையும் கூப்பி "கும்பிடறேன் சார்'' என்றான் பணிவுடன். "வணக்கம் தம்பி" என்று சூட்கேசைக் கீழே வைத்துவிட்டுப் பதிலுக்குக் கும்பிட்டார். ஒரு கணம் மெய்மறந்து போனான் வேலு. செட்டியார் வீட்டு வேலைக்காரப் பையன் என்று தெரிந்திருந்தால் வணக்கம் சொல்லியிருக்க மாட்டாரோ "நீங்கதான் பெரிய பள்ளிக்கூடத்துக்குப் புதிசா வந்திருக்கும் தமிழ் வாத்தியாரய்யாவா" என்று மிகப் பணிவுடன் கேட்டான்.

"ஆமாம் தம்பி நீ யார்" என்று கேட்டார்.

"இந்த வூர்ல எங்க எசமான் செட்டியார் ஐயாதான் ஊர்ப் பெரியவருங்க, அவுங்க வீட்டு வேலைக்காரப் பையன் நான். எங்க ஐயா அடுத்தவூர்ல ஒரு விசேஷத்துக்குப் போயிருக்கார். அதனால ஒங்கள வீட்டுக்கு அழைச்சிட்டு வர என்னெ அனுப்பினாருங்க' என்றான். 

"அப்படியா மகிழ்ச்சி" என்றார்.

"பொட்டிய இப்பிடி எந்தலைல வச்சுருங்க நாந் தூக்கியாருவேன்" என்றான். "வேண்டாம், வேண்டாம். பெட்டி கனமாயிருக்கு. நீ சிறுபையன். நானே எடுத்து வருவேன் வா போகலாம்" என்றார்.

இப்படித் தனக்குக் கருணை காட்டும் இந்த சாரை இவனுக்கு மிகவும் பிடித்திருந்தது

"எனக்குப் பளுதூக்கிப் பழக்கந்தான் சார் நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க" என்று பெட்டியை வலிய தலையில் வாங்கிக் கொண்டான்.

"உன் பெயரென்ன?" என்றார் ஆசிரியர்

"வேலுசாமிங்கறது என் பேருங்க எல்லாரும் என்னை வேலுன்னுதான் கூப்பிடுவாங்க"

"நீ படிக்கிறாயா?'

"அஞ்சாங்கிலாஸ் வரை படிச்சிருக்கேன் சார்". "அதற்குமேல் ஏன் படிக்கவில்லை?'

"எங்க அப்பாதான் ஐயா வூட்ல தனக்குப் பதிலா வேலை செய்யச்சொல்லி கொண்டு உட்டுடுத்து".

"வேலை செய்து கொண்டே படிக்கலாமே?"  "எனக்கும் ரொம்ப ஆசை தான் சார், ஆனா காலைல வெக்கல் போடனும், 10மணிக்குமேல மாட்டுக்குத் தண்ணி காட்டணும், 11மணிக்குத் தீவனம் வைக்கணும், மாட்டுக்கார கோனார் வரச்சே கூட நின்னு பால் வாங்கி வரணும். திடீர் திடீர்ன்னு அம்மாவும் ஐயாவும் என்னெத்தான் நம்பிக்கையா கூப்பிடுவாங்க. நான் பள்ளிக்கூடம் வந்தா இதையெல்லாம் யார் கவனிப்பாங்க".

"உன்னைத் தவிர வேறு ஆட்கள் இல்லையா?"  "நெறைய இருக்காங்க. சின்ன வயசுலெ ஆத்தா இல்லாம ஐயா வூட்லதான் வளந்தேன். ஐயா கூட இருந்து பழகிடுச்சு. நா இல்லாம எங்க ஐயாவுக்கு சரிப்படாது. எங்க எசமானி அம்மாகூட பேசாம நீங்க இவனையே கட்டிக்கிட்டிருக்கலாம்", என்று கேலிபேசுவாங்க.

"உங்க ஐயா அதுக்கு என்ன சொல்வாங்க?'' "இப்பிடி ஒரு பய கெடைப்பான்னு முன்னாலயே தெரியாதே என்பாரு" என்று சிரித்தான். ஆசிரியரும் சிரித்தார்.

"இப்பகூடப் பாருங்க ஒங்கள அழைச்சிட்டு வர்றத்துக்கு என்னை அனுப்பிருக்காரு" என்று தன் இன்றியமையாமையைத் தெரிவித்தான்.

கள்ளமில்லாத அவன் பேச்சு அவருக்கு மிகவும் பிடித்தது. பேசிக்கொண்டே இவர்கள் வயல்பக்கத் தெருவைக் கடந்து இவர்கள் வீடுள்ள தெருவில் திரும்பினார்கள். "அதோ அந்தப் பெரிய மச்சு வீடுதான் எங்க ஐயா வீடு. மத்ததெல்லாம் ஓட்டு வீடுதான் வூர்ல" என்றான்.

"எங்க ஐயா வீட்டுக்குப் பக்கத்துல இருக்கற வீடுதான் ஒங்களுக்காக ஏற்பாடு செஞ்சிருக்கு. நேத்து நானும் பொன்னம்மாவும் அந்த வீட்டைக் கழுவி சுத்தமா வெச்சுருக்கோம்" என்றான்.

"இவ்வளவு உதவி செய்யறாரே உங்க முதலாளி.மிகவும் நல்லவரா இருப்பார்போல் இருக்கு" என்றார் ஆசிரியர்.

"ஆமாங்க அது என்னவோ உண்மைதான் எங்க எசமான் நல்ல மனசுக்காரரு'' என்றான்.

"நீ ஏன்அவரிடம் பள்ளிக்கூடம் சேர்க்கும்படிக்கேட்கவில்லை" என்றார்.

"கேட்கலாமுங்க, கோவிக்க மாட்டாரு. என்ன இருந்தாலும் நான் வேலைக்காரப் பையன். அவரு போட்ட சோறு துணிதான் எங்களுக்கு. நன்றிக்குத்தான் நாயா இருக்கேன்' என்றான்.

"நன்றியறிதல் மிக நல்ல குணம்தான். உங்க ஐயா வீட்ல இன்னும் யாரிருக்காங்க".

"எங்க ஐயாவும், அம்மாவும்தான். சின்ன எஜமான் படிச்சிட்டு பட்ணத்திலே பதவில இருக்காரு. எப்பவாச்சும் வருவாரு. வந்தா அவருக்கும் நாந்தான் எல்லாம் என்றான்". வீடு வந்து விட்டது. 

"இதான் சார் ஒங்களுக்கு உள்ள வீடு'' என்று வீட்டைக் காட்டி அவர் முன்னே செல்ல பெட்டியுடன் பின்னால் வந்தான். உள்ளே நுழைந்ததும் சிறிய அளவான அந்த வீடு சுத்தமாயிருந்தது. தரையெல்லாம் கழுவிவிடப்பட்டு ஒட்டடை, குப்பை ஏதும் இல்லாது பளிச்சென்றிருந்தது. நடுவில் திறந்த வெளி, முற்றம், சுற்றி தாழ்வாரம், முன்பக்கச் சிறிய அறை, சமையற்கட்டு, சிறிய மேடை, தொட்டி, முற்றம், தோட்டம், கிணற்றங்கரை, துணி, துவைக்கக் கருங்கல், துணிவுலர்த்த கொடி என்று அமைப்பாயிருந்தது. வீடு "நல்லாயிருக்கா சார்" என்று ஆவல் பொங்கக் கேட்டான் வேலு.

"வீடும் நல்லாயிருக்கு, உன் கைவண்ணம் மேலும் நல்லாயிருக்கு" என்றார் மகிழ்வாக.

"முதலில் குளித்து வருகிறேன்" என்று முன்பக்க அறையில் பெட்டியை வைத்துவிட்டு கிணற்றங்கரையில் சுகமாய்க் குளித்துவிட்டு, வேறு உடுத்தி, உள்ளே வந்தார். முன்பக்க அறையில் சுத்தம் செய்யப்பட்ட மாடத்தில் பெட்டியைத் திறந்து முதன் முதலாக ஒரு படத்தை எடுத்து மிகப் பணிவாக வைத்தார். பெட்டியிலிருந்து சில தட்டுகளை எடுத்து, கையோடு தோட்டத்தில் பறித்து வந்த வண்ண மலர்களை அழகாய் தட்டுகளில் அடுக்கி அப்படத்தின் முன் வைத்து கண்மூடித் தியானித்தார். கூடவே நின்ற வேலு கண்மூடித் தியானித்தவரை கண்கொட்டாது பார்த்தான். அவர் தியானித்த படத்தில் ஒரு பெண்மணி கறுப்பு நிறச் சேலையில் வெண்ணிறப் பூப் போட்டது, தழையவுடுத்தி தலையில் முக்காடிட்டு கம்பீரமாய் மகாராணிபோல் அமர்ந்திருந்தார். அவர் கண்கள் வாத்தியார் சார் கண்கள்போலவே கருணை நிறைந்திருந்தது. சிரிப்பில் முகம் மலர்ந்திருந்தது. பார்க்கப் பார்க்கப் பரவசம் ஊட்டும் தெய்வீகச் சிரிப்பு. இது யாராக இருக்கும்? பூவைப் படத்தில் சார்த்தாமல் தட்டில் வைக்கிறாரே. ஒரு வேளை இவருடைய அம்மாவாக இருக்குமோ? ஆமாம் இவருடைய சிரிப்பும் இந்த அம்மாவுடைய சிரிப்புப்போல் மலர்ச்சியாய் அழகாயிருக்கிறது. ஒரே ஜாடை, இவர் அம்மாவாகத் தானிருக்க வேண்டும். அம்மாவிடம் இவ்வளவு பக்தியா?" தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை" என்று படித்திருக்கிறான். என் ஆத்தா முகங்கூட எனக்கு நெனவில்லை. இப்படி போட்டோ படமெல்லாம் ஏது என்று ஏக்கமாய் எண்ணினான்.

திரும்பிய ஆசிரியர், "அட வேலு நீ இங்கதான் இருக்கியா?" என்றார்.

"ஆமாங்க ஒங்க பலகாரத்துக்கு என்ன வேணும்? எங்க ஐயா எங்க எஜமானி அம்மாகிட்ட சொல்லி வாங்கித் தரச் சொல்லியிருக்காரு" என்றான் கையைக் கட்டிய வண்ணம். "ஒன்றும் வேண்டாம் வேலு நான் இட்லி கொண்டு வந்திருக்கிறேன். மதியம் நீ சொன்ன ஐயர் கடையில் சாப்பிடுவேன். இப்பொழுது நீயும் என்னுடன் பலகாரம் சாப்பிட வா"  என்றழைத்தார்.

வேலைக்காரப்பையன் என்று இவனைக் கொடுமை படுத்தமாட்டார்கள் என்றாலும் தன்னைச் சமமமாகப் பக்கத்திலமர்த்தி உணவு கொள்ளச் செய்யமாட்டார்கள். அவன் தட்டு தனி. சாப்பிடும் இடமும் தனி. அதெல்லாம் அவனுக்குப் பழகிப் போனது. ஆனால் இங்குத் தன்னுடன் சாப்பிட அழைக்கும் இந்தச் சமதை அவனுக்கு நெஞ்சை நெகிழவைத்தது.

"இல்ல சார் நா வூட்ல போய் சாப்பிடுவேன்" என்றான், "இருக்கட்டும் வா இப்போது எனக்காக என்னுடன் சாப்பிடு எனக்கு மகிழ்ச்சியாயிருக்கும்",  என்று ஓரிலையில் அவனுக்கு இட்லியும் பொடியும் வைத்துத் தானும் ஓரிலையில் வைத்துக் கொண்டு அவனைப் பக்கத்தில் அமர்த்திக் கொண்டார். "சாப்பிடு" என்று பரிவாகக் கூறித் தாமும் உண்ணத் தொடங்கினார். பயந்த வண்ணம் இட்லி உண்டான் வேலு. "சார் எங்க எஐமானுக்குத் தெரிந்தால் ஏசுவார்" என்றான்.

"சரி, சரி யாருக்கும் தெரியாது நீ கவலைப்படாதே" என்றார் உண்ட இலையைத் தோட்டத்துக் குப்பைமேட்டில் எறிந்து உண்ட இடத்தைச் சுத்தம் செய்தான். 

"சார் இந்த அம்மாதான் ஒங்க அம்மாவாசார்? ஒங்க மாதிரியே சிரிக்கிறாங்க சார், இவங்கள எனக்கு ரொம்பப் புடிக்குது சார்" என்றான்.

"அப்படியா, நீயும் இவங்களை அம்மானே சொல்லலாம்", என்றார்

"இவங்க படத்தை வெச்சுப் பூ வெக்கறீங்களே, இவங்க இப்ப இல்லியா?".

"ஆமாம். இவங்க நம்மக் கண்ணுக்குத் தெரியறமாதிரி இல்ல. ஆனா மனசல நெனச்சா தெரிவாங்க, எல்லா உதவியும் செய்வாங்க". "தெய்வமாயிட்டாங்களா" என்று வாத்தியார் மனம் வருந்தா வகையில் தன் கருத்தைக் கூறினான்.

"ஆமாம். தெய்வம் ஆகிவிடவில்லை, தெய்வமாகவேதான் எப்போதும் இருக்காங்க'' என்றார்.

அவனுக்கு ஒன்றும் புரியவில்லை ஆனால் பிடித்தது.

"அப்போ நீங்க ஒங்க அம்மாவைத்தான் வேண்டிப்பீங்களா?'' என்றான்.

"ஆமாம் வேண்டிக்கிறது மட்டுமில்ல, எதைச் செய்தாலும் அவங்களை நெனச்சுத்தான் செய்வேன். அவங்க எப்பவும் எனக்குத் துணையாயிருக்காங்க'' என்றார்.

"ஒங்க அம்மாவிக்கு நானும் பூ வெக்கலாமா" என்றான் ஆர்வமாக.

"இவங்க எனக்கு மட்டும் அம்மாவில்ல, இவங்களை நேசிக்கிறவங்க எல்லாருக்கும், நேசிக்கத் தெரியாதவர்களுக்கும் இவர்தான் அம்மா. நீயும் பூ வைக்கலாம். ஏதாவது வேண்டிக்கொண்டால் நடக்கும். உனக்கு என்ன வேண்டிக்கொள்ள ஆவல்?" என்றார்.

"எனக்கு ஒங்களமாதிரி நல்லவங்களா எல்லாரும் கிடைக்கணும்" என்றான்.

என்ன உயர்ந்த உள்ளம் இவனுக்கு.

"அது சரி பள்ளிக்கூடம் சேர்ந்து படிக்க ஆவலில்லையா?" 

"இருக்கு சார், ஆனா எசமான் வீட்டு வேலையை விடறது நன்றி கெட்ட வேலையாயிடுமே." "சரி உன் நல்ல மனதிற்கு யாவும் நல்லதாகவே நடக்கும். இன்னும் ஒரு செய்தி வேலு, நம்ப அம்மாவுக்கு எல்லாப் பூவும் வைக்கலாம். ஒவ்வொரு பூவின் வாயிலாகவும் ஒவ்வொரு சக்தியை வெளிப்படுத்துவார். ரோஜாப்பூ அம்மாவுக்கு ரொம்பப் பிடிக்கும். "அப்டீன்னா எங்க ஐயா பங்களாவில் முன்பக்கத்துல கலர் கலரா காகிதப் பூக்களெல்லாம் இருக்கே அது கூட இந்த அம்மாவுக்கு வைக்கலாமா? எங்க வீட்டு அம்மா வாசனை உள்ள பூக்களெல்லாம்தான் சாமிக்கு வைப்பாங்க?" என்றான்.

"நமக்கு மிகத் தேவையான பாதுகாப்பை அந்தப் பூவின் வாயிலாக எங்க அம்மா தருவாங்க".

"அப்டீன்னா காகிதப்பூ கொண்டுவரட்டுமா?" என்றான். "தாராளமாகக் கொண்டு வா அதை அன்னையின் முன் வைத்து வணங்கிவிட்டு எடுத்து நம் கையிலோ சட்டைபையிலோ எடுத்து வைத்துக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் போகலாம்" என்றார்.

"அட! என்ன ஆச்சரியமாயிருக்கு? நானும் எங்க எசமானும் இராவேளைல வண்டி கட்டிக்கிட்டுப் போகும்போது காளியாத்தாவுக்குப் பணம் முடிச்சுவைப்பாங்க. அது தவறினா எதுனா கொறை வந்திடும்" என்றான்.

"அம்மாவைக் கும்பிடற வழிபாட்ல எந்தக் குறையும் வராது" என்றார் ஆசிரியர்.

"எதுனா ஊர்ல நோய் நொடி வந்தாக்கூட காளிக்குப் பலி  கொடுப்பாங்க" என்றான்.

"அதெல்லாம் மூடநம்பிக்கை வேலு. தெய்வம் நமக்கு நல்லது செய்யுமே தவிர எந்த உயிரையும் பலி கேட்காது, எங்க அம்மாவுக்கு அதெல்லாம் பிடிக்காது நல்லது மட்டுமே செய்வார்கள்", என்றார்.

"ஆகா தண்டிக்காத இந்த அம்மாவை யாருக்குத்தான் பிடிக்காது? கிராமத்தில் தாமரை, அல்லி, எல்லாப் பூவும் கெடைக்கும்.  இனி தினமும் கெடைக்கற பூவையெல்லாம் கொண்டுவரேன் சார்", என்றான் உற்சாகமாய்.

"சரி நீ வீட்டிற்குப் போ தேடப் போகிறார்கள்" என்றார்.

"சரி சார் வேலையெல்லாம் முடிச்சிட்டு சும்மாயிருக்கிறப்ப வந்திடறேன்" என்றான்.

"சரி, வா, வா" என்று முதுகில் பரிவாகத் தட்டினார். ஒரே மகிழ்ச்சி வேலுவுக்கு. இவன் எஜமானரும் இவனை முதுகில் தட்டிக் கொடுப்பார். ஆனால் அது இவன் வேலையை உற்சாகப்படுத்தத் தட்டும் தட்டல். இவருடைய பரிவு அவனுக்குப் புரிந்தது.

இரவில் செட்டியார் ஊர் திரும்பியது அறிந்து அவரைப் போய்ப் பார்த்தார் ஆசிரியர்.

செட்டியார் மரியாதைக்காகவும் தன் மதிப்பைத் தெரிவித்தாற் போலவும் பழகினார்.

"வாங்க, உட்காருங்க, எலே! வேலு, வாத்தியார் ஐயாவுக்குக் குடிக்கப் பால் கொண்டு வா" என்றார் உள்ளே திரும்பி.

"அதெல்லாம் வேண்டாம் ஐயா" என்று பணிவாக மறுத்தார் ஆசிரியர்.

"இருக்கட்டும் முதன் முதலா வந்திருக்கீங்க எதுனா கொடுத்தாதான் மரியாதை" என்று உபசரித்தார். கதவுக்குப் பின்னால் நின்று எஜமானியம்மாள், "இந்தா இதை வாத்தியாரய்யாவுக்குக் கொடு" என்று கூற, வேலு வட்டா செட்டில் பால் கொண்டு வைத்துவிட்டு தன் எசமான் பின்னால் இறுகக் கை கட்டி நின்றான். காலையில் தன்னிடம் அவ்வளவு பேசிய சிறுவனா இவன் என்று வியப்பாக இருந்தது.

"வீடெல்லாம் வசதியாயிருக்கா?" என்றார் செட்டியார். "நல்லா வசதியாயிருக்குங்க உங்க உதவிக்கு நன்றி சொல்லிப் போகத்தான் வந்தேன்", என்றார் ஆசிரியர்.

"வேலு, சாருக்கு எது வேண்டுமானாலும் கேட்டு செய்து கொடு" என்றார் திரும்பிப் பார்த்து. 

"சரிங்க எசமான்" என்றான் வேலு. புன்முறுவலுடன் விடைபெற்றார்.

மறுநாள் பள்ளிகூடம் புறப்படத் தயாரானார் ஆசிரியர். வேலு காலை பலகாரம் கொண்டுவந்தான்.

"எதுக்கு வேலு இதெல்லாம். நான்தான் ஐயர் கடையில சாப்பிட்டுக்கிறேன்னு சொன்னேனே" என்றார்.

இன்று முதன் முதலா வேலைக்குப் போறீங்க, எங்க அம்மா கையாலே சுட்ட பலகாரம் கொடுத்திருக்காங்க; மதியம் சாப்பாடும் காரியரிலே கொண்டு வந்திடுவேன், நாளையிலேந்து கடையிலே சாப்பிடலாம்" என்றான். "நீயும் சாப்பிடுகிறாயா?" என்றார் பரிவுடன். "வேண்டாம் சார், நீங்க சாப்பிடுங்க" என்று கூறி முன்னறையில் அம்மாவைப் பார்க்கப் புறப்பட்டுவிட்டான். மலர்ந்த சிரிப்புடன் நாற்காலியில் கம்பீரமாய் தெய்வீகமாய் அமர்ந்திருந்த அம்மாவுக்கு முன் கை கூப்பித் தொழுதான். தட்டிலிருந்து நேற்றுக் கொண்டு வைத்த காகிதப்பூவில் ஒன்றை எடுத்துக் கண்ணில் ஒற்றிய வண்ணம் சட்டைப் பையில் வைத்துக் கொண்டான்.

"இன்னக்கி மாலையில் உங்களுக்குத் தாமரைப்பூ கொண்டு வரேன் அம்மா" என்று வெளியே வந்தான். "என்ன வேலு அம்மாவிடம் பேசவே ஆரம்பிச்சுட்டியா?" என்றார் ஆசிரியர். வெட்கமாய்ச் சிரித்தான். "அந்த அம்மாவைப் பார்த்தா போட்டோ படத்திலே பாக்குற மாதிரியில்லாம நிஜமாவே பாக்குறமாதிரியிருக்கு சார்", என்றான் நிறைவாக.

"உன்னைப்போல சுத்தமான மனசு உள்ளவங்க, திறமையா உழைக்கிறவங்க, நேர்மையா இருக்கிறவங்க கண்ணுக்கெல்லாம் நல்லாவே தெரிவாங்க!" என்றார்.

தொடரும்

***********

Comments

Para No.9, Line No.1 -

Para No.9, Line No.1 - பள்ளிக் கூடத்துக்கு - பள்ளிக் கூடத்துக்கு

Para No.71, Line No.1 - எலே!வேலு, - எலே! வேலு,

"அன்னை இலக்கியம்'' -

"அன்னை இலக்கியம்'' - தமிழாசிரியர்

There is no space after the full stops of the sentences. The quotation marks are beginning with double quotation marks and ending with a single quotation mark.

Para No.2, Line No.3 - அக்கம்பக் கத்துச் - அக்கம்பக்கத்துச்

Para No.2, Line No.12 -பள்üயை -பள்ளியை, பள்üயாக்க - பள்ளியாக்க

 

 Para No.2 - Line No.13 - பள்üக்கு - பள்ளிக்கு

Para No.3  - Between 4th and 5th lines extra space is there.

Para No.3, Line No.8 - கிராமங்கüல் -  கிராமங்களில்

Para No.3, Line No.23 - உயர்பள்üயும் - உயர்பள்ளியும்

Para No.4, Line No.2 - இவனுக் குச் - இவனுக்குச்

Para No.4, Line No.9 - பொறுப் பாகப் - பொறுப்பாகப்

 



book | by Dr. Radut