Skip to Content

09. நிதானம்

நிதானம்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கர்மயோகி

கிருஷ்ணனை - கண்ணனை - சிஷ்யனாகப் பெற்றவர் அவன் சிஷ்யனில்லை குரு எனக் கண்டார் என்பது “தோற்றேன் என்றபொழுதே வென்றாய்” என்ற பாரதி பாடல் விளக்குகிறது. ஆன்மிக ஞானத்தின் முக்கிய அம்சங்களில் இது ஒன்று. திரௌபதியின் மானத்தைப் பாண்டவர்களால் காக்க முடியவில்லை என்றால் பெண்ணின் கற்பைச் சமூக நியதி காப்பாற்றாது எனப் பொருள். சமூகம் பெண்ணை ஆன்மிகத்தில் விலக்கியது. சொத்துரிமையை மறுத்தது. அவளை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் அவளிடம் சொல்லும் பொய் பொய்யாகாது என்றது. நீதி, நியாயத்திற்கு அவள் அருகதை யில்லை. பணி செய்து கிடப்பதே அவள் கடன், எந்தவித உரிமையையும் நினைக்கும் இடம் அவளுக்கு சமூகம் தரவில்லை. அவள் மானத்தைக் காப்பாற்றியவர் கிருஷ்ண பரமாத்மா. அதுவே பாரத யுத்தம் சூட்சுமமாக வெல்லப்பட்ட நேரம். கணவர்களும், பிதாமகனும், அரசனும், ஆச்சாரியர்களும் கைவிட்ட நேரம் திரௌபதி நிதானத்தைக் கைவிடவில்லை. அது தெய்வீக மனத்திற்குரிய நிதானம். அவள் கற்பைக் காப்பாற்றியது, போரை வென்றது. இன்று இந்தியாவில் ராமன், கிருஷ்ணன், சிவன், விஷ்ணுவைவிட எல்லாக் கிராமங்களிலும் தவறாது வழிபடும் தெய்வம் திரௌபதி, தீமிதி விழா அவளுக்குரியது.

மௌனம் முடிவானதல்ல என்பதைப் போல் நிதானமும் முடிவானதல்ல. முடிவு மூலம், சிருஷ்டியில் முடிவு மூலமல்ல, மூலம் முழுவதும் வெளிப்படும் அம்சம் - Sincerity உண்மை. நன்றி அப்படிப்பட்டவை. இதுவரை நாம் பெற்றவற்றிற்கு முழு நன்றி செலுத்தினால் நமக்குப் பிரார்த்தனை செய்யும் அவசியம் எழாது. நல்லது நடந்தால் சந்தோஷம் எழும். பாரமான விஷயம் நல்லதால் விலகினால் நிம்மதி வரும். நன்றி இயல்பாக எழாது. நல்லதைச் செய்தவர் மீது நன்றி எழாது. அன்னை செய்வதை அறிவது சிரமம். எனவே நன்றிக்கு இடமிருக்காது. Sincerity என்பது (attitude) நோக்கம். நன்றி, உணர்ச்சி. ஆணை நாடும் பெண் அவள் விருப்பம் பூர்த்தியானால் கருத்தரிப்பாள். அவன் நினைவு வாராது. விருப்பம் பூர்த்தியானால் ஆண் அவளைத் தள்ளிப்படு என்பான். உலகில் மனிதன் பெற்ற ஒரே இன்பம் என அன்னை கூறும் ஆணும் பெண்ணும் அடுத்தவரை விலக்கினால், கண்ணுக்குத் தெரியாமல் செயல்படும் அன்னையை அவனால் நினைக்க முடியுமா? நினைத்தால் உண்மையாக உணர்ந்து நன்றி எழுமா? நன்றியெழுவது யோகம் சித்திப்பது. பகவானைக் காணும் முன்னரே வீட்டைக் காட்டியவருக்கு மாதம்தோறும் நன்றி கூறி அன்னை எழுதி காணிக்கை அனுப்பினார். நன்றி கூறுவதில் உலகில் தலைசிறந்த எடுத்துக்காட்டு அது.

சாவித்ரி சத்தியவான் மரணத்தில் நிதானமிழக்கவில்லை. மரணம் தோற்றது. Morris Goodman விமானத்திலிருந்து விழுந்து இருபத்தி நான்கு மணியில் உயிர் போகும் என டாக்டர்கள் சொல்லியபின் அவர் நம்பிக்கையையோ, நிதானத்-தை÷ யா இழக்கவில்லை. ஆறாவது மாதம் உயிர் பிழைத்து எழுந்து இருபது ஆண்டாக சொற்பொழிவுகள் ஆற்றுகிறார். பென்சிலீன் ஷாக்கால் உடல் உயிரை இழப்பதைக் கண்டும் நிதானத்தை இழக்காதவர் உயிர் பிழைத்தார். 1956-க்குமுன் இதுபோன்ற நிகழ்ச்சிகளில்லை. நிதானம் ஆத்மா பெறும் தெளிவு. ஆத்ம ஞானம் மனதில் நம்பிக்கையாக எழுகிறது. நம்பிக்கை தெளிவற்ற அறிவு. தெளிவற்ற அறிவு தெளிவு பெறுவதை இருவகையாகக் கூறலாம். 1) ஆத்ம ஞானம் மனத்தில் அறிவாவது, 2) ஆழ்மன ஞானம் (Subconscious) மனத்தில் ஞானமாவது. இரண்டும் வெவ்வேறு வகையானவை. ஒன்று மேலிருந்து வருவது. அடுத்தது கீழிருந்து வருவது. மரணம் வரும்பொழுதும், சொத்து அழியும் பொழுதும், நல்ல பெயர் போகும் பொழுதும், செய்த வேலையை இழக்கும் பொழுதும், உள்ள நண்பனின்மீது நம்பிக்கை இழக்கும் பொழுதும் இதுபோன்ற பத்து அல்லது இருபது நிலைகளில் நிதானம் நிலைகுலையும். நிதானத்தை இழக்காதவர் வெற்றி பெறுவார். தோல்வியடைந்தாலும் உரிய காலத்தில் உள்ளதைவிட உயர்ந்ததைப் பெறுவார். குருக்கள் மகளுடைய நல்லெண்ணம் செயல்பட நிதானம் தேவை. ஷார்லெட்டின் நல்ல எண்ணம் ஜேனுக்கும் எலிசபெத்திற்கும் பலிக்க அவளுக்கே பெரும் நிதானம் தேவை. சூரிய மண்டலம் வேகமாக சுழன்றாலும், நமக்கு அசைவற்றிருப்பது போல் தெரிவது வேகம் பெற்ற நிதானம். நிதானம் என்ற அடிப்படையின்றி வேகமும் எழ முடியாது. தமஸ் என்பது சோம்பேறித்தனம். இது உள்ளவர்க்கு வழியில்லை. சோம்பேறி சோம்பேறியாயிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து இறப்பதைத் தவிர வழியில்லை. அதுவும் அன்னை சூழலில் சற்று மாறுபடும். பதினெட்டு ஆண்டுகள் ஒருவர் முழுச் -சே õம்பேறியாக இருந்தார். அவர் தன் சோம்பேறித்தனத்தை ஆன்மிகச் சாந்தம் என்று கொண்டார். ஆயிரக்கணக்கான பேர்கள் முக்கிய நாட்களில் வரும் இடமாதலால் காண்பவரெல்லாம் என்ன செய்கிறீர்கள் எனக் கேட்பார்கள். நான் இங்கே இருக்கிறேன் என்பார். அனைவரும் கேலியாகச் சிரிப்பார்கள். அவருக்குச் சொரணையிருப்பதில்லை. அவரே போக முடிவு செய்தார். அன்னை அவருக்கு எல்லா வசதிகளும் உள்ள இடத்தை ஆயுள் முழுவதும் அனுபவிக்கக் கொடுத்தார். ஆனால் அவரே அவருடைய எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும். தரை பெருக்குவது, பாத்திரம் துலக்குவது, துணி துவைப்பது, சமையல் செய்வது ஆகியவை அவர் செய்ய வேண்டிய வேலைகள். தனக்கும் சிலசமயம் பிறர்க்கும் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உள்ள இடம். இதைக் கண்டு எரிச்சல் படவோ, அவருக்கு வந்த தண்டனையை “வேண்டும்” என நினைக்கும் உரிமையோ அன்பனுக்கில்லை. நினைத்தால் கரண்ட் நிற்கும். நம்மிடம் வந்து அடுத்தவரைப்பற்றிக் குறை சொன்னால் அவருக்கு நிதானமில்லை, இருந்தால் குறை சொல்ல மாட்டார் என நினைத்து “குறை சொல்லாதே” என நாம் கூறும்பொழுது, ‘நாம் அதைக் கூறக் கூடாது, கூறுவது நமக்கு நிதானமில்லை என்று காட்டுகிறது’ எனப் புரிவதில்லை. I.C.S.-இல் எட்டு பேர்கள் எடுக்கும் காலத்தில் எட்டாவதாக வந்தவர் செய்தி கேட்டுப் பரவசமானார். கைக்கு எட்டிற்று. ஒன்பதாம் மாணவன் சிபாரிசால் ஒன்பதை எட்டாக்கி எட்டாவதாக வந்தவர்க்கு இல்லையெனச் செய்தான். வாழ்நாள் முழுவதும் மன வேதனைப்பட்டு மகனைத் தயாரித்து எழுதச் சொன்னபொழுது நூற்று நாற்பது பேரை எடுத்தார்கள். மகன் மூன்றாவதாக வந்தான். இவருக்கு இழைக்கப்பட்டது அநியாயம். வாழ்வின் கோணத்திலிருந்து பார்த்தால் இவருக்கு திறமையால் வந்த வெற்றி அந்தஸ்தில்லாததால் போய்விட்டது. அந்த அந்தஸ்து பெற ஒரு தலைமுறையாயிற்று. அன்பர்கட்கு இதுபோன்ற சந்தர்ப்பம் ஏராளமாக வருகிறது. பெரும்பாலோர் சும்மாயிருந்து விடுகிறார்கள். அவர்களில் பலருக்குச் சூழல் பலன் தரும். சமர்ப்பணத்தை நாடும் அன்பர்கட்குச் சமர்ப்பணம் அந்தஸ்தைக் கொடுக்கும். சமர்ப்பணத்தை நினைவு கூர நிதானம் தேவை. அது அன்னை நிதானம். எந்த நேரமும் அன்னையை மறக்காத மனநிலை அன்னை நிதானமாகும்.

இந்த ஊருக்கு என்னையறியாமல் எது வரும், எது வருவதானாலும் அது நான் கொண்டு வந்ததாக இருக்கும். எது வந்தாலும் அது எனக்கு மட்டும். எது வருவதானாலும் அது முதலில் எனக்கு. நான் பார்த்து அதை ஒருவருக்குக் கொடுத்தாலன்றி அவருக்கு அது இல்லை. எது வந்தாலும் அது என் வரை வராது. எனக்கும் வரும் என்பது நம்ப முடியாத ஆச்சரியம். எனக்கு அதுபோன்ற விஷயம் வந்தால் ஒருவர் தவறாமல் அனைவருக்கும் வந்து விட்டது எனப் பொருள். எனக்கே அது கொடுக்கப்பட்டால் அது எல்லோருக்கும் இல்லையெனவாகும் என ஊரில் பல நிலைகள் உண்டு. ஒவ்வொரு நிலையிலும் பெற வேண்டிய நிதானம் ஒன்றுண்டு. இழக்கும் நிதானமும் ஒன்றுண்டு. நிதானத்தின் பல்வேறு அம்சங்களை ஆராய்வோம். காண வேண்டியவை இவை. நல்ல பெயர் எடுக்கத் துடிப்பதும், நல்ல பெயரை இழக்கத் துடிப்பதும் மனித சுபாவம். பிறருக்கு நல்ல பெயர் வர பாடுபடுவதும், பிறர் நல்ல பெயரை அழிக்கப் பாடுபடுவதும் சுபாவம். நாம் பெரு முயற்சியால் பெருந்தியாகம் செய்து வளரும்பொழுது எதிரி எதுவும் செய்யாமல் நமக்குச் சமமாக அவன் விஷயத்தில் அதிகமாக வளர்வதும் வாழ்க்கையின் அம்சமாகும். முயற்சியால் நிதானம் பெறலாம். உடலுழைப்பு முதல் நிலை முயற்சி. ஆர்வமாக செயல்படுவது அடுத்த நிலை முயற்சி. மனம் புரிந்துகொண்டு விரும்பி ஏங்குவது மனத்தின் முயற்சி. ஆத்மாவின் முயற்சி அமைதியானது. ஆத்மாவின் அமைதியான முயற்சிக்கு நிதானம் எனப் பெயர். குழந்தைகட்கு அப்பம் தினமும் வழங்கும்பொழுது போட்டி போட்டு முந்துவது வழக்கம். ஒரு குழந்தை தினமும் பொறுமையாக இருந்து கடைசியில் பெற்றுக் கொள்ளும். ஒரு நாள் கடைசி அப்பத்தில் பொற்காசு வைத்தார்கள். அது அவசரப்பட்ட குழந்தைகட்கில்லை. நிதானமான குழந்தை பெற்றது. இராணுவத்தில் ஆள் எடுக்க வந்தவர்கள் வரிசையாக நின்றார்கள். சார்ஜெண்ட் அனைவரையும் பார்த்துக் கொண்டு வந்தபொழுது ஒரு இளைஞனை புறங்கையால் மார்பில் அறைந்தார். இளைஞன் நிலையிழந்து திரும்பி அடிக்காத குறையாகத் திணறினான். அவனை மட்டும் தேர்ந்தெடுத்தனர். தாயாதி அநியாயமாகப் பறித்துக் கொண்டு போனது நாற்பது வருஷத்திற்குமுன் என்றாலும், இன்றும் ஒரு நாளைக்கு பத்து தரம் அதை எதிர்-பõர்ப்பது மனம். அவருக்கு நிதானம் வேண்டும் என அவரிடம் கூற முடியாது. எக்காரணத்தாலோ - மறதி, விரக்தி, அறிவு, அனுபவம், காலம் - நிதானம் வந்தால் சொத்து திரும்பி வரும். வாழ்க்கையின் சட்டங்களை ஒரு விஷயத்தில் பூரணமாக அறிய முயன்றால் வரும் நிதானம் பூரண யோக நிதானமாகும். பெரிய குடும்பங்களில் யாரோ ஒரு பெண்ணுக்கு இது அவரறிந்தோ அறியாமலோ அமையும். அது மூன்று, நான்கு தலைமுறைகளுக்கு தொடர்ந்து வரும். வரும்பொழுது வளர்வதும் உண்டு தேய்வதும் உண்டு. அப்படிப்பட்டவருடைய பழக்கம்: எதையும் எவரையும் கேட்காதது. இருக்குமிடம் தேடி வருவதை அன்புடன் ஏற்பது. முயற்சி முழுப்பலன் தரும். அது நம் நிலையில் பலிக்கும். ஊருக்கு அயராது சேவை செய்பவன் அப்படி MLA ஆவான். முயற்சியை மனதில் மட்டும் செய்பவனை மத்திய மந்திரியாக அழைப்பார்கள். தானே வரும் நிதானம் நிதானத்தில் சிறந்தது. நான் விரும்பியவளானாலும் நீ பிறன் மனைவி என்பதால் ஆயிரம் மைல்கள் பின்தொடர்ந்த பின்னும் உன்னைத் தீண்ட மாட்டேன் என்ற நிதானம் அவன் இலட்சியத்தை, துரையைக் கொல்லும் இலட்சியத்தைப் பூர்த்தி செய்தது. ஏகபத்தினி விரதமிருந்த இராமன் மனைவியைப் பறிகொடுத்தான். பிறர் மனைவியைத் தீண்டாத விரதம் மேற்கொண்டவனுக்குத் தன் இலட்சியம் பூர்த்தியாயிற்று. இலட்சியம், கொள்கை, அபிப்பிராயம், நோக்கம், எண்ணம், உறுதி ஆகியவை பலதரத்தவை, பல நிலைகளில் உள்ளவை. வாழ்வை அறிய மனிதன் தன்னை அறிய வேண்டும். தன்னையறிய வாழ்வையறிய வேண்டும். வாழ்வையும் தன்னையும் அறிபவனுக்கு நிதானம் உண்டு.

பல தலைமுறைகளாக கூலி வேலை செய்பவருண்டு. அந்த வேலை கிடைத்து உயிர் பிழைத்தால் போதும் என்பது உண்டு. பல தலைமுறைகளாக அரச வாழ்வு வாழ்பவருண்டு. இந்த நிலைகளை எய்த அவர் நெடுநாள் முயல்வர். எவரும் மேலிருந்து கீழிறங்க விரும்புவதில்லை. மேலே உயர இரு லிமிட்டேஷன் உண்டு. 1) சமூகத்தின் அனுமதி, 2) உள்ளுணர்வு. சமூகம் தாழ்ந்தவனை உயர அனுமதிக்காது. தனக்கு உபயோகமானால் அனுமதிக்கும். மேடையில் நிற்க பயப்படுவது போல் பெரும் உயர்வை ஏற்க சிறு மனம் நடுங்கும். இவை பலிக்க பல ஜென்மங்களாகும். இவர்கள் அனைவரும் பல ஜென்மப் பலன் பெற்றவர் என அன்னை தன்னிடம் வருபவர்களைப்பற்றிக் கூறுவது. சமூக முன்னேற்றம் எவ்வளவு கடினம் என அறியவேண்டுமானால் 1560 முதல் 1660 வரை அமெரிக்கர் பட்ட பாட்டைப் பார்த்தால் தெரியும். மனிதன் மிருகமாகி உழைத்தான், அலைந்தான், தன்னை இழந்தான், உயிரை இழந்தான். பின்வரும் தலைமுறைகள் செழிக்க வேண்டி அவன் செய்தது. சிக்காகோ எனில் கொள்ளைக் கூட்டத்தார் என 1900 வரை பிரபலமாயிற்று. 20-ஆம் நூற்றாண்டில் சாதிப்பதை நான்கு நூற்றாண்டில் சாதிக்க மனிதன் பட்டபாடு அது. பிரான்ஸில் பிரபுக்களை அழித்து 10 ஆண்டுகள் வரை நிர்வாகம் உருவாகவில்லை. நெப்போலியன் பிரான்ஸைச் சேர்ந்தவனில்லை. நெப்போலியன் விபூதி. பெருங்காரியங்களைக் குறுகிய காலத்தில் முடித்து serfdom அடிமை வாழ்வை ஐரோப்பா முழுவதும் அழித்து மீண்டும் சக்ரவர்த்தியாக விரும்பினான். அவன் சகாப்தம் அத்துடன் முடிந்தது. 1977-இல் ரஷ்யாவில் பெரும் புரட்சி எழுந்தது. அங்கு தொழிலோ, தொழிலாளர்களோ இல்லை. பண்ணை அடிமைகட்கு புரட்சி கொண்டு வந்த சுதந்திரம் (mass killing) பெருவாரியாக மக்களை சுட்டு வீழ்த்துவதாக அமைந்தது. நாடு கட்டுப்பாட்டால் தொழிலில் முன்னேறியது. மனிதன் பறிபோனான். மனிதன் தானே முன்னேற வேண்டும். பிறர் அவனை முன்னேற்ற முடியாது. ஆயுதப் போராட்டமின்றி இந்தியா சுதந்திரம் பெற்றது. போர்ச் சேதம் இங்கு வரவில்லை. சுதந்திரம் மாணவர், தொழிலாளர் ஆர்ப்பாட்டமாகி, கொடுமையாகி 20 ஆண்டுகள் தொழிலையும், கல்வியையும் நசுக்கியது! இலட்சியவாதிகள் மனிதனை முன்னேற வற்புறுத்த முடியாது. அவன் தானே முன்னேற விரும்பினால் முன்னேறுவான். பசுமைப் புரட்சியில் தான் வளர விவசாயி உழைத்தான். அதன் பலன் அவன் அகத்திலும் புறத்திலும் வளர்ந்தான். மார்க்கெட்டுக்குச் சுதந்திரம் வந்தபின் மார்க்கெட் வளர்ந்து மனை விலை ஆகாயத்தை எட்டியது. நிதானம் இலட்சியவாதிக்கும், சமூகத்திற்கும், சர்க்காருக்கும் தேவை. அந்த நிதானம் மனிதனை வளர அனுமதிக்கும். இக்கட்டுரையில் பல விஷயங்களை மீண்டும் மீண்டும் எழுதுகிறேன். ஒரு விஷயத்தில் பல அம்சங்கள் உண்டு. ஒரு தரம் எழுதினால் ஓர் அம்சமே வெளிவரும். அதனால் பலமுறை பல அம்சங்கள் வெளிவர வேண்டி அப்படி எழுத வேண்டி வருகிறது. ஒரே அம்சத்தின் மூலம் வாழ்வின் எல்லா முக்கியத்-துவமு ம் வெளி வர முடியும். காதலை அப்படிக் கருதி ஆயிரக்கணக்கான இலக்கியங்கள் வெளிவந்துள்ளன. காதல் தன்னை இன்னும் முழுமையாக வெளிப்படுத்தவில்லை. ரோமியோ ஜூலியட் சோக நாடகம். சீதை வாழ்வில் இராமன் குறை கண்டுவிட்டான். ஹெலன் சிறை எடுக்கப்பட்டாள். முழுவதும் காதல், வாழ்விலும் மனத்திலும் பலித்து romance-ஆன இலக்கியம் இதுவரை எழவில்லை. ஸ்ரீ அரவிந்தர் எழுதிய நாடகமே முதலில் அந்தத் தகுதி பெற்றது.

மனத்திற்குரியது, ஆத்மாவுக்குரியது, ஜீவனுக்குரியது, சரணடைந்த ஜீவனுக்குரியது என பல கட்டங்களில் நிதானம் உண்டு. பதம், பக்குவம், இதம், இங்கிதம், பவித்திரம் ஆகியவை நிதானத்தின் அம்சங்கள். அம்சம் எனில் பகுதி. அம்சத்திற்கும் முழுமைக்கும் உள்ள தொடர்பை அறிவு பெற்றால் நிதானம் அதிகமாக விளங்கும். இதை முயற்சியால் கீழிருந்தும், அருளால் மேலிருந்தும் பெறலாம். முயற்சி அறிவுக்குரியது, பொறாமைக்குரியது, அனுபவத்திற்குரியது, வயதால் பெறும் அனுபவம், சிந்தனையால் பெறும் அனுபவம், உலக அனுபவம், பிரபஞ்ச அனுபவம், அதைக் கடந்த அனுபவம், யோகானுபவம் என ஆயிரம் உண்டு. முயற்சியின் பல ரூபங்களில் அனுபவ மூலம் நிதானம் பெறும் மாற்றங்கள் மனம் அறிவதாலும் கற்பனையாலும், காலத்தாலும் பெறுவதை அறிவது முயற்சி. முயற்சி தருவது சம்பளம். அருள் தருவது கம்பெனி இலாபம். நிதானத்தை நிலையாகப் பெற மனம் விழைவது, முடிவு செய்வது யோக பாக்கியம். பாக்கியம் பாக்கியமாகவே இருப்பது வழக்கம். பலனாவது அரிபொருள். காய்க்காத மரம் போன்றது. பாக்கியம் மனிதனுக்குரியது. அருள் ஆண்டவன் தருவது. அவனன்றி அணுவும் அசையாது என்ற ஞானம் நிதானம் பெறும். கைக்கெட்டியது வாய்க்கெட்ட அருள் தேவை, நிதானம் போதாது. நிதானம் நித்ய மங்களம். நிதானம் வந்தால் சண்டிகேசியான மனைவி சகதர்மணியாவாள். மரணம் வாழ்வில் பெரியது. நிதானம் முழுவதும் அழியும் நேரம், அழிவது நிதானமில்லை. மரணத்தில் வளர்வது நிதானம். வளரும் நிதானம் மரணத்தைத் தீண்ட அனுமதிக்காது. நிதானம் முடிவானதல்ல. மௌனமே முடிவானதல்ல என்பது போல் நிதானமும் முடிவன்று. Sincerity, நன்றி நிதானம் பெற உதவும். நிதானம் எரிச்சலை இனிமையாக உணரும். நிதானமும் தானே வரும்வரை காத்திருப்பது நிதானத்திற்குரிய மனநிலை.

கட்டுரையின் கருத்துகளை மீண்டும் ஒரு முறை இங்கு எழுதுகிறேன். முடிவாக நிதானம் வரும்வரை பொறுத்திருக்கும் நிதானம் தேவை என்று முடிக்கிறேன். கட்டுரையில் வந்த சிலவற்றை மீண்டும் எழுதுகிறேன்.

  • நிதானம் தானத்தில் சிறந்தது.
  • இதம், இங்கிதம், பதம், பக்குவம், பவித்திரம் ஆகியவை நிதானத்தின் பகுதிகள்.
  • பகுதிகள் வளர்ந்து முழுமையாகி நிதானத்தை அறிய முயன்றால் அறியலாம்.
  • அகழ்வாரைத் தாங்கும் நிலம் நிதானமுடையது.
  • நஞ்சுண்டமைபவர் உயிர் நிதானமுடையவர்.
  • பிள்ளையைக் கறி சமைத்தவர் மனத்தில் நிதானம் பெற்றவர்.
  • கணவன் கொடுத்த விஷத்தை அருந்தியவள் ஆத்ம நிதானமுடையவள்.
  • கணவர்கள் கைவிட்டபின் கிருஷ்ணனை அழைத்தவள் நிதானம் Oதிஞுணூட்டிணஞீ-க்குரியது.
  • திருமூர்த்திகளை குழந்தையாக்கியவள் நிதானம் குதணீணூஞுட்ஞு-ஐ எட்டியது.

இவை அன்பர் வாழ்வில் எழுவதை இக்கட்டுரை சுட்டிக் காட்டுமானால் எழுதிய பலன் எழும்.

(முற்றும்)

************

ஸ்ரீ அரவிந்த சுடர்

எந்த ரூபத்தில் எழுந்தாலும் உயர்ந்தவையின் உயர்வை தோற்றத்தைக் கருதாது ஏற்பது நல்லது. இக்கருத்தின் மையமானது மனிதாபிமானம். அடிப்படையில் மனிதனைப் புறக்கணிப்பது மனித சுபாவம். ஞானம் வளர்ந்தால் உடன் வளர்வது அகந்தை. அது சங்கரருக்கும், இராமானுஜருக்கும் வந்ததால் இறைவன் சண்டாளனாக வந்து ஞானத்தைவிட மனிதன் முக்கியம், மனிதனின் முக்கியத்தை அறியும் ஞானம் இறைவனை சித்திப்பதைவிட முக்கியம் என இறைவன் இந்த இரு பெரியவர்கட்கு உணர்த்தினார். குள்ளச்சாமி பகவான் அறையுள் நுழைந்து டீ கப்பை கவிழ்த்துக் காட்டியது, பழையதைப் போற்றும்வரை, பழைய ஞானத்தின் புற உருவத்தைப் போற்றும்வரை புதிய ஞானம் வாராது என்பதாகும்.

**********



book | by Dr. Radut