Skip to Content

08. இந்தியர் வாழ்விலுள்ள முரண்பாடுகள்

இந்தியர் வாழ்விலுள்ள முரண்பாடுகள்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

மூலம்: ஸ்ரீ கர்மயோகி

விரிவாக்கம் மற்றும் சொற்பொழிவு: திரு. N. அசோகன்

சொற்பொழிவு ஆற்றிய தேதி: 15.08.2015

உலக அரசியல் அரங்கங்களில் காந்திஜியின் அஹிம்சையும், சத்தியாகிரகத்தையும் வலியுறுத்தும் நமது அரசு பயங்கர நாசம் விளைவிக்கும் அணுகுண்டுகளைத் தயாரித்து வைத்துள்ளது. காந்திஜியின் அஹிம்சையும் அணுகுண்டும் எப்படி ஒத்துப்போகும் என்ற கேள்வி அரசாங்கத்திற்கு எழவில்லை. நம் நாட்டு அரசாங்கத்திற்கு அந்தக் கேள்வி எழவில்லை என்பதால், வெளிநாட்டு அரசிற்கு அந்தக் கேள்வி எழாமல் இருக்குமா? அரசியல்வாதிகள் ஒருவர் விடாமல் ஊழலை ஒழிக்க வேண்டும் என்றுதான் பேசுகிறார்கள். ஆனால் அதே அரசியல்வாதிகள்தாம் தம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அரசாங்க ஊழியர்களைத் தவறு செய்யச் சொல்கிறார்கள். எந்தவொரு அரசியல்வாதியாவது பணம் வாங்காமல், தவறான முறையில் சொத்து சேர்க்காமல், நாட்டு மக்களுக்குச் சேவை செய்வதோடு தம்மை நிறுத்திக் கொண்டார்கள் என்றால், அவரை மற்ற அரசியல்வாதிகள் பிழைக்கத் தெரியாதவர் என்று கிண்டல் செய்கிறார்கள். கல்வி இந்நாட்டு மக்களின் பிறப்புரிமை என்று அரசாங்கம் முழங்குகிறது. இந்நாட்டு மக்களின் பிறப்புரிமை கல்வி என்று சொல்லும்போது நமக்கெல்லாம் என்ன தோன்றுகிறது? கல்வி குடிமக்களுக்கு இலவசமாகக் கிடைக்க வேண்டும் என்று அரசு விரும்புவதாகத் தோன்றுகிறது. ஆனால் அதேசமயத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் வாங்கும் capitation fees பற்றி அரசு எதுவும் செய்வதில்லை என்று பார்க்கும்போது இது மக்களுக்கு வியப்பாக உள்ளது. கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் அரசு பள்ளிகளில்தான் கல்வியின் தரம் மிகவும் குறைவாக உள்ளது என்று புகார் எழுகிறது. ஆசிரியரும் சரி, மாணவரும் சரி எவரும் பள்ளிக்கு ஒழுங்காக வருவதில்லை. சில வகுப்புகளில் 4, 5 மாணவர்கள்தான் இருப்பார்கள். பள்ளிகளில் அடிப்படை வசதிகளே குறைந்து காணப்படுகின்றன என்றெல்லாம் புகார்கள் எழுந்தவண்ணமுள்ளன. கல்வியின் அவசியத்தை அரசாங்கம் வலியுறுத்தும் பொழுது நமக்கு என்ன தோன்றுகிறது கல்வியின் தரம் உயர்வதை அரசு வரவேற்கிறது என்று தோன்றுகிறது. ஆனால் நடப்பது என்ன? எல்லாப் பள்ளிகளிலும் நூறு சதவிகிதம் பாஸ் வாங்க வேண்டும் என்ற பெரிய மோகம் எழுந்துள்ளது. இதன் விளைவாக புரிகிறதோ, இல்லையோ பாடங்களை மனப்பாடம் செய்து கொண்டு மாணவர்கள் பரிட்சை எழுதுகிறார்கள். 500-க்கு 480 மார்க் ஒரு மாணவன் வாங்குகிறான் என்றால் அவன் பெரிய அறிவாளி என்று நமக்குத் தோன்றுகிறது. ஆனால் அவனுக்குச் சரியாக ஆங்கிலம்கூடப் பேசத் தெரியவில்லை. சரியாகக் கணக்குப்போட வரவில்லை என்பதை எல்லாம் பார்க்கும்பொழுது வெறும் மனப்பாடம் செய்துதான் மாணவன் இந்த மார்க்கை வாங்கியுள்ளான் என்று நாம் புரிந்து கொள்கிறோம்.

இந்தியா ஆன்மிகம் நிறைந்த நாடு என்று நாம் சொல்லிக் கொள்வதில் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். இப்படி ஆன்மிகம் நிறைந்த நாடு என்று கேள்விப்படுகின்ற வெளிநõட்டினர் அப்படிப்பட்ட நாட்டைக் காண வேண்டும் என்று ஆர்வமாக வருகிறார்கள். ஆனால் அவர்கள் நம் நாட்டில் காணும் காட்சிகள் அவர்களை மிரண்டுபோகச் செய்கின்றன. அவர்கள் ஆன்மிகத்திற்கு நேரெதிரான அசுத்தம், ஏழ்மை, ஊழல், பொய் ஏமாற்று வேலை போன்றவற்றைத்தான் நம் நாட்டினரிடம் பார்க்கிறார்கள். இது அவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது. இந்த முரண்பாடு விஷயமாக வெளிநாட்டவர் எழுப்பும் கேள்விகளை நம் நாட்டவர் எழுப்புவதில்லை. ஏனென்றால், இவையெல்லாம் நமக்குப் பழகிப் போய்விட்டன. எப்படிச் சேற்றில் செந்தாமரை மலர்கிறதோ இப்படித்தான் இந்த ஏழ்மையிலும், அசுத்தத்திலும் ஆன்மிகம் மலர்ந்துள்ளது என்று நமக்கு நாமே சமாதானம் சொல்லிக் கொள்கிறோம்.

6. அரசாங்கம் ஏழ்மை போக வேண்டும் என்று அறிவித்துள்ளது. ஆனால் அதேசமயத்தில் அந்த ஏழ்மையை அகற்றுவதற்காக ஏழை மக்களுக்கு இலவசங்களை அள்ளி வழங்குகிறது. இப்படி இலவசங்களை வழங்குவதில் நெடுங்காலக் கண்ணோட்டத்தில் ஏழ்மையை வளர்க்கும் என்ற அபாயம் உள்ளது. ஏழ்மையை அகற்ற விரும்பும் அரசு ஏழ்மையை வளர்க்கும் அணுகுமுறைகளைக் கையாள்வது முரண்பாடாக உள்ளது.

நிலநடுக்கம், வெள்ளம், பஞ்சம் போன்ற பேரிடர்களை நாடு சந்திக்கும்பொழுது அந்த ஆபத்துகளிலிருந்து மக்களைக் காப்பாற்ற அரசாங்கம் தாராளமாக இலவசங்களை வழங்குவதுண்டு. அதாவது இலவச உணவு, மருத்துவ உதவி, ஆடைகள், தங்குமிடம் என்று இவற்றை எல்லாம் வழங்குவதுண்டு. ஆபத்துக் காலத்தில் இந்த உதவிகள் செய்வதை எவரும் தவறாக நினைப்பதில்லை. ஆனால் அந்த ஆபத்து விலகிய பின்னரும் இதையே தொடர்வது என்பது அறிவுக்கும் பொருத்தமான செயல்பாடு இல்லை. குழந்தை பருவத்தில் தாயார் குழந்தைக்கு ஊட்டி விடுவாள். குளிப்பாட்டி விடுவாள், ஆடை அணிவித்து விடுவாள். பள்ளிக்குத் தானே அழைத்துச் செல்வாள். இப்படி எல்லா உதவிகளையும் தானே முன்வந்து செய்வாள். ஒரு குறிப்பிட்ட வயதுவரை இவ்வாறு செய்வது குழந்தைக்கு நல்லது. ஆனால் ஐந்து வயதிற்குமேல் நல்லதில்லை. பார்க்கின்ற மற்றவர்களும் ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள். இந்திய அரசு இப்படித்தான் குடிமக்களிடம் நடந்து கொள்கிறது.

இந்தியா விடுதலையான காலத்தில் நாடு பொருளாதார நிலையில் உண்மையிலேயே மிகவும் பின்தங்கிதான் இருந்தது. அப்பொழுது வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களை உயர்த்துவதற்கு அரசு எடுத்துக் கொண்ட முயற்சிகள் பொருத்தமாகத்தான் இருந்தன. அத்தகைய சலுகைகளை எல்லாம் ஒரு இருபது வருடத்தோடு நிறுத்தியிருக்கலாம். ஆனால் அரசாங்கம் இந்த இருபது வருடங்களுக்குமேல் நிறுத்தாமல் சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகள் ஆகிய பின்னும் சலுகை ராஜ்ஜியத்தைத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஒருவர் நோயாளியாக இருக்கும் பொழுது கொடுக்கின்ற விசேஷ கவனத்தை அவர் குணம் அடைந்த பின்னும் எதிர்பார்த்தால், அதைத் தொடர்ந்து வழங்குவது அறிவுடைய செயல்பாடில்லை.

அமெரிக்கா அந்நாட்டிலுள்ள செவ்விந்தியர் மற்றும் நீக்ரோக்களை ஒரு காலத்தில் கொடுமைப்படுத்தியதற்குச் செய்யும் பரிகாரமாக அவர்களுக்கு எல்லாவிதமான இலவசங்களையும் வாரிவழங்கியது. அதன் விளைவு என்னவென்றால், Welfare allowance-ஆக மாதந்தோறும் கிடைக்கும் பணத்தை வைத்துக்கொண்டு அந்த செவ்விந்தியர்களும், நீக்ரோக்களும் ஜாலியாக குடித்துவிட்டு வேலைக்கே செல்லாமல் வீணே பொழுதைக் கழிக்கின்றனர். குற்றவாளிகளாக கைது செய்யப்படுபவர்கள் யார் அதிகம் என்று பார்த்தால், இப்படி வேலை செய்யாமல் கிடைக்கும் allowance -ஐ குடியில் செலவழிப்பவர்கள் தான் அதிகம் என்று தெரிகிறது. இவர்களுக்குக் கொடுக்கும் ச்டூடூணிதீச்ணஞிஞு-ஐ நிறுத்தினால், பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். தொடர்ந்து வழங்கிக் கொண்டிருந்தால், நாட்டில் இவர்கள் செய்யும் அராஜகம் அதிகமாகிறது. இப்படிக் கொடுக்கவும் முடியாமல், நிறுத்தவும் முடியாமல் ஏன் இந்தத் தலைவலியை வரவழைத்துக் கொண்டோம் என்று தெரியாமல், அமெரிக்க அரசு ஸ்தம்பித்து நிற்கிறது. இலவசங்களைக் கொடுப்பதை பொறுத்த மட்டில் அரசு தான் பெருந்தன்மையாக இருப்பதாக நினைக்கலாம். ஆனால் நடைமுறையில் இலவசமாகப் பெறுவது எல்லாம் விரயமாகித்தான் போகிறது. குடிசை மாற்று வாரியத்தை எடுத்துக் கொள்ளுங்கள். வீடில்லாதவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் நோக்கத்தோடு இந்த வீடுகள் கட்டப்பட்டன. ஆனால் ஒதுக்கப்பட்ட வீடுகளில் உள்ளவர்கள் பெரும்பாலோர் வாடகைக்கு விட்டுவிட்டு, அவர்கள் முன்பிருந்த இடத்திலேயே வாழ்கின்றனர். ஏழை மக்களுக்கு வருடம்தோறும் வேலை கிடைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் அரசாங்கம் மகாத்மாகாந்தி ஊரக வளர்ச்சித் திட்டம் என்று ஒன்றைத் தொடங்கியது. அதன் விளைவு விவசாயத்திற்கு ஆட்களே கிடைப்பதில்லை என்ற நிலை உருவாயிற்று. ஊரக வளர்ச்சி திட்டத்தில் வேலைக்குச் செல்பவர்கள் அந்த வேலையை ஒழுங்காக செய்வதுமில்லை. பெயரைக் கொடுத்துவிட்டு மரியாதைக்காக இரண்டு மூன்று மணி நேரம் வேலை செய்துவிட்டு வீட்டிற்கு வந்துவிடுகின்றனர். இவர்களுக்குக் கிடைக்கும் சம்பளத்தில் ரூ.15 முதல் 20 வரை இந்த வேலையை இவர்களுக்குக் கொடுப்பதற்காக உள்ள ஊராட்சி தலைவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். கூலித் தொழிலாளிகள் வேலைக்கு வர மறுப்பதால், அதிக கூலி கொடுத்து ஆட்களை அழைக்க வேண்டியதாயிற்று. இதன் நேரடி விளைவு விவசாயிகள் அவர்கள் பயிரிடும் காய்கறிகளின் விலையை உயர்த்திவிடுகிறார்கள். இதைவிட மோசம் என்ன வென்றால் விவசாயமே செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு விலை நிலங்களை எல்லாம் பிளாட் போட்டு மனைகளாக விற்றுக்கொண்டுள்ளனர். புதுவை, கடலூர் நெடுஞ்சாலை 15, 20 வருடங்களுக்குமுன் பச்சை-ப சேல் என்று நெல் வயல்களாகக் காட்சியளித்தது. இப்போது அதே நெல் வயல்கள் எல்லாம் பிளாட்டுகளாக மாறி விற்பனைக்குக் காத்திருக்கின்றன. இந்த நிலை எப்படி வந்தது என்று பார்த்தால், விவசாயிகள் பின்வருமாறுதான் கூறுகிறார்கள். ஊரக வளர்ச்சித் திட்டத்தால் நாங்கள் கொடுக்கும் வேலைக்கு ஆட்கள் வருவதில்லை. அப்படியே வந்தாலும் தினக்கூலியை அதிக அளவில் கேட்கின்றனர். மதியம் 12 மணிக்குமேல் எவரும் வேலை செய்ய மறுக்கிறார்கள. மதியம்வரை செய்யும் வேலைக்கே 350/-, 400/- ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது. இப்படி அதிக கூலி கொடுத்துச் செய்யும் விவசாயத்தில் லாபம் அதிகம் பார்க்க முடிவதில்லை. இந்த நிலையில் மனையாக மாற்றிவிட்டால் நல்ல லாபம் கிடைக்கும் என்று தெரியும்போது நாங்கள் பேசாமல் அதற்கு மாறிவிட்டோம் என்று கூறுகிறார்கள். அரசு செய்யும் அடுத்த பெரிய தவறு விவசாயத்திற்கு இலவசமாக மின்சாரம் தருவது. மின்சாரம் இலவசமாகக் கிடைக்கிறது என்று அறிந்தவுடன் ஆளாளுக்கு பம்ப் செட் போட்டு நீரை இறைக்க ஆரம்பித்து விட்டனர். இதன் விளைவு என்னவென்றால், நிலத்தடி நீர் கணிசமாக குறைந்து விட்டது. 30, 40, அடிகளில் கிடைத்த நீர் இப்போது 110, 120 அடி ஆழத்திற்குப் போய்விட்டது. கடலோர மாவட்டங்களில் நிலத்தடி நீர் குறையும்போது அதை ஈடு செய்யும் வகையில் கடல்நீர் நிலத்தடி நீர் உள்ள இடத்தில் எல்லாம் புக ஆரம்பித்துவிடுகிறது. இதனால், விவசாயத்திற்கு இறைக்கும் நீரெல்லாம் உப்புக் கரிக்கிறது. இது ஒருபுறமிருக்க மின் விநியோகம் இலவசமாகிவிட்டதால், மின் உற்பத்தியைப் பெருக்கவோ, மின் விநியோகத்தை அதிகரிக்கவோ தேவையான முதலீடே கிடைக்காமல், அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. இதன் நேரடி விளைவு மின் தேவை அதிகமாகி மின் உற்பத்தி குறைந்து ஒவ்வொரு வருடமும் தமிழகம் மின்பற்றாக்குறையால் மிகவும் அவதிப்பட்டு வருகிறது.

ஆனால் இதற்கு நேரெதிரான நிலைமை குஜராத் மாநிலத்தில் நிலவுகிறது. அங்கே எதுவுமே இலவசமில்லை. எதுவாக இருந்தாலும் விலை கொடுத்துதான் வாங்க வேண்டும். 15 வருடங்களுக்குமுன் தொழில் நிமித்தமாக குஜராத்திற்கு ஒரு அன்பர் சென்றிருந்தார். விவசாயிகள் எல்லாம் foreign model கார்கள் வைத்திருப்பதைக் கண்டு அசந்து போனார். 10, 15 ஏக்கர் வைத்துள்ள விவசாயிகள் எல்லாம். 40, 50 லட்சம் பெறுமானமுள்ள கார்களை வைத்துள்ளனரே இது எப்படி என்று ஆச்சரியப்பட்டார். தமிழத்தில் foreign model கார்கள் எல்லாம் அரிதாகத்தான் கண்ணில்படும். ஷோ ரூமிற்கே ஒரு நாளைக்கு ஏழு, எட்டு பேர்கள்தான் கஸ்டமர்கள் வருவார்கள். பெரும் பண்ணையார்கள் foreign model கார் வைத்திருந்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இடைநிலை விவசாயிகளே சர்வ சாதாரணமாக foreign model கார்களை வைத்துள்ளனர். இவையெல்லாம் கவனித்த அந்த அன்பர் அரசு எதையுமே இலவசமாகக் கொடுக்க மறுப்பதால், விவசாயிகள் சொந்த உழைப்பையே நம்பி செயல்படுவதால், இந்தளவிற்குச் சுபிட்சம் அடைந்துள்ளார்கள் என்று புரிந்து கொண்டார். இதையெல்லாம் வைத்துப்பார்க்கும்போது நெடுங்காலக் கண்ணோட்டத்தில் இலவசங்கள் நாட்டின் சுபிட்சத்தைக் கெடுக்கும் என்று புரிந்துகொண்டு அரசாங்கமும் சரி, மக்களும் சரி இலவசங்களிலிருந்து விடுதலை பெறுவது நல்லது என்று புரிந்து கொள்ள வேண்டும்.

(தொடரும்)

************



book | by Dr. Radut