Skip to Content

07. வாழ்க்கையை நம் வழிக்குக் கொண்டு வரும் இரகசியங்கள்

வாழ்க்கையை நம் வழிக்குக் கொண்டு வரும் இரகசியங்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கர்மயோகி

18. எப்பொழுதும் தேவைப்படும் அளவிற்குத்தான் நாம் மற்றவர்கட்கு விவரம் தர வேண்டும். தேவையில்லாமல் செய்தியை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது.

தேவைக்கு மேற்பட்டது பயன்படாது. சில சமயம் விரயமாகும். பல சமயம் விஷமமாகும். சாப்பாட்டை அளவுக்கு மீறிச் சாப்பிடுபவன் சாப்பாட்டு ராமனாவான். என் அப்பன் குதிருக்குள்ளில்லை என்ற கதை மனிதன் தன் வாயாலே கெட்டதை விளக்கும். “நுணலும் தன் வாயால் கெட்டது” என்பது சொல். அளவை மீறினால் அமிர்தமும் நஞ்சு. சொல்லோ செயலோ அளவைக் கடந்தால் அர்த்தமற்றுப் போகும். மேலும் தொடர்ந்தால் அர்த்தம் அனர்த்தமாகும். அதையும் கடந்தால் பெரிய மனிதனும் கேலிக்குரியவனாவான். திருமணமான புதிதில் அன்பு மேலீட்டால் மனம் விட்டுப் பேசும்பொழுது மனம் ஒன்ற வேண்டும் என்று அவசியமில்லாத அந்தரங்க விஷயங்களை, குடும்ப இரகஸ்யங்களைக் கூறுபவர் பின்னர் பிணக்கு எழும்பொழுது அதே சொற்களால் மனம் புண்படும்படி நடப்பதுண்டு. பெண்கட்கு தாயார் இவ்விஷயத்தில் எச்சரிக்கை செய்வார்கள். ‘தோழனோடும் ஏழமை பேசேல்’ என்பது அந்த சூட்சுமத்தை அறிவிக்கும். நம் நாட்டில் வயதிற்கு பெருமதிப்புண்டு. வாழ்க்கை ஆரம்பத்தில் வெற்றிகரமாக இருக்கும், பின்னர் தோல்வி எழும். தோற்றபொழுது வாழ்வின் சூட்சுமம், இரகஸ்யம், நுணுக்கம், உள் அர்த்தம், அந்தரங்கம் தெரியும். இது 40 அல்லது 50 வயதுக்குப் பின்னரே அறிய முடியும். அந்த அனுபவ அறிவு வயதால் வருவதால் வயதிற்கு மதிப்புண்டு. எளியவனுக்கு, அறிவில்லாதவனுக்கு, ஏமாந்தவனுக்குச் சட்டம் வேறு. அறிவில் சிறந்தவர்க்கும், அசகாயசூரனுக்கும், பெரும் திறமைசாலிக்கும் சட்டம் வேறு. அளவோடு பேச வேண்டும் என்பது அனைவருக்கும் உள்ள சட்டம். இன்றைய நண்பன் நாளைய எதிரி. இன்று அவனிடம் கூறிய இரகஸ்யங்கள் நாளை நமக்கெதிராகப் பயன்படும். மரணப் படுக்கையில் உள்ளபொழுது மட்டும் மக்களுக்குக் கூறும் புத்திமதிகள், உபதேசங்கள், இரகஸ்யங்கள் உண்டு.

அவை வாழ்வில் 40 வயது வரை புரிந்ததற்கு நேர் எதிரானவையாகவும் இருப்பதுண்டு.

அவற்றுள் சில இரகஸ்யமாக இருக்காது, ஓரிரு விஷயம் இரகஸ்யமாக இருக்கும். சில தெரிந்து பின்பற்றாததாக இருக்கும், சில தெரியாததாக இருக்கும். அவை அதிகமாகப் பேசக்கூடாது என்பதாகும்.

உதாரணம்:

  1. தொழிலில் உறவினரைச் சேர்க்கக் கூடாது.
  2. சம்பந்திகளிடம் கொடுக்கல் வாங்கல் ஆபத்தாகும்.
  3. பெண்ணுக்கும் புடவைக்கும், கூடப் போகக் கூடாது.
  4. ஏழை, எளியவர்க்குச் செய்யும் உதவியால் செய்பவருக்கு தீங்கு நிகழும்.
  5. மனிதனின் அந்தஸ்திற்கேற்ப அவனை நடத்த வேண்டும்.
  6. புருஷன் மனைவி தகராற்றில் தலையிடக் கூடாது.

அன்பர்கள் இதுபோன்ற தவறுகள் செய்திருந்தால், எது போன்ற தவறுகள் செய்திருந்தாலும் சமர்ப்பணத்தை ஏற்றவர்க்கு அது கடந்தகால சமர்ப்பணத்தால் தவறு விலகும். தொடர்ந்த சமர்ப்பணம் கடந்தகாலத் தவற்றை எதிர்கால நிறைவாக மாற்றும்.

குறிப்பறிதல் ராஜ்ய சபையில் முக்கியம். குறிப்பறியாதவன் நன் மரம் என்பது குறள். குறிப்பறிந்து செயல்படுபவன் 50 சொல்லில் கூற வேண்டியதை 5 சொல்லில் சொல்வான். Silent Will என்பது ஒரு சொல்லும் சொல்லக் கூடாது என்பதைக் குறிக்கும். நாம் விளக்கமாகப் பேசும்பொழுது, பிறருக்குப் புரியும்படி சொல்வதாக நினைக்கிறோம், அது சரி, அது அளவை மீறினால் வேறு சட்டங்கள் செயல்படும்.

  1. எதைக் கூறினாலும் எப்படி விளக்கினாலும் கேட்பவர் தன் மனதிலுள்ளதையே புரிந்து கொள்வார்.
  2. குதர்க்க புத்தியுள்ளவர் எதையும் திரித்துப் புரிந்து கொள்வார்கள்.

நாம் அளவுக்கு மீறி விபரம் தருவது தவறு. என்றாலும் வாழ்வில் விரயமில்லை என்ற சட்டப்படி அதற்கும் பலனில்லாமல் போகாது.

— அளவுக்கு மீறி விஷயம் கொடுத்ததால் அடுத்தவர் வாழ்வு மலரும்.

— நல்ல எண்ணத்துடன் செய்த எந்தக் காரியத்திற்கும் நல்ல பலனும் வராமலிருப்பதில்லை என்பதால் இன்றில்லாவிட்டாலும் என்றாவது அந்த நல்ல பலன் கட்டாயம் வரும்.

*********

ஜீவிய மணி

குடும்பம் செழிக்க வேண்டும், அதற்காக உழைக்க முன்வருபவர் உடல் உழைப்பை உணர்வால் உயர்த்துகிறார். அறிவால் அது மிளிரும்படி செய்கிறார். ஆன்மிக வாயிலினுள் நுழைந்தால் அதையே அமைதியாகச் செய்கிறார். பலன் கருதாமல் செய்கிறார். செய்யும் வேலை சிறப்பாக இருக்கும்படிச் செய்வது முறையென உணர்கிறார். உணர்வது பலிக்கும்.

செயலுக்கு ஆன்மிகப் பலன் உண்டு. நாடும் பலன்

நல்ல முறையில் பல மடங்கு உயரும்.

***********



book | by Dr. Radut