Skip to Content

11. அன்னை இலக்கியம் - உள்ளத் திருக்கோயில்

அன்னை இலக்கியம்

உள்ளத் திருக்கோயில்

இல. சுந்தரி

கோரமான துர்தேவதைகளுக்கு அடிபணியும் பேதைமையிலிருந்து விடுபட்டால் மேலே உயர்வதற்கு வாய்ப்பு உண்டு. சிந்திக்கத் தெரிந்த மனிதர்கள் விடுதலை பெறும்போது சத்திய சக்திகளுக்குக் கருவிகளாகவும் தெய்வப் பணிகளுக்கு ஒத்துழைப்பவர்களாகவும் ஆகலாம்.

ஸ்ரீ அன்னை

‘பாலா! என்னாயிற்று உனக்கு, ஏன் சோர்ந்து போயிருக்கிறாய்?’

‘வா கண்ணா. ஒரு செய்தி என்னைப் பெரிதும் பாதிக்கிறது. அதனால் மனம் சோர்வடைகிறது’.

‘என்ன செய்தி என்று சொல். உன் சோர்வைப் போக்க வழியுள்ளதா எனப் பார்ப்போம்’.

‘நீ இப்போதெல்லாம் ஆசிரமம் போவதில்லையே ஏன்?’

‘அதுவா? சமீபத்தில் ஒரு செய்தி கேள்விப்பட்டேன்.

ஸ்ரீ அன்னையவர்கள் தமக்குப் பிறகு அங்கு யோகம் செய்ய விரும்புபவர்களுக்குப் பாதுகாப்பிராது, எனவே, அவரவர் இருக்குமிடங்களிலிருந்தே செய்வது சரி என்று கூறியதாகவும், ஸ்ரீ அரவிந்தரும், ஆசிரமம் போன்ற ஸ்தாபனங்கள் ஸ்தாபித்தவர்களுக்குப் பிறகு மூடப்பட வேண்டும் என்று கூறியிருப்பதாகவும் ஒரு செய்தி கேள்விப்பட்டேன். அதனால் அங்குப் போவதை விட்டுவிட்டு வீட்டிலும் தியான மையங்களிலும் தியானம் செய்கிறேன்’.

‘என்னால் உன்னைப் போல் இருக்க முடியவில்லை. அங்குப் போகவில்லையென்றால் எனக்குப் புகலிடம் ஏது?’

‘ஒன்றை சிந்தித்துப் பார் பாலா. அன்னையும் பகவானும் அனந்தமானவர்கள். அவர்கள் தங்களை மானுட வரம்புக்குள் உட்படுத்திக் கொண்டு அங்கிருந்தார்கள். அவர்கள் சாந்நித்யம் அங்கு வலுவான சூழலை உருவாக்கியிருந்தது உண்மை. ஆனால் அவர்கள் தம் மானுட வரம்பைத் தகர்த்தெறிந்துவிட்டு பிரபஞ்சம் முழுதும் வியாபித்த பிறகு நாம் எங்கும் அவர்களை உணர முயற்சி செய்யலாமே’.

‘இல்லை கண்ணா. பசுவின் உடல் முழுதும் பரவியுள்ள உதிரம் அதன் மடியில்தானே பாலாய்ச் சுரக்கிறது? கோவில்கள் அதுபோன்ற இறை வெளிப்பாட்டின் இடங்களல்லவா?’

‘ஆம். அது சூழலின் புனிதத்தைப் பொறுத்துதான் அமையும். தீச்செயல்கள் மலிந்து விட்ட இடங்களில் அதாவது மனத் தூய்மையின்றி வக்ர குணங்களுக்கு வக்காலத்து வாங்குவோர் மலிந்த இடங்களில் இறை சக்தி விலகும் என்பதை நீ கேள்விப்பட்டதில்லையா? பக்தனின் பக்தியும், பவித்ரமும்தான் சூழலை உருவாக்கும். அன்னையவர்கள் தம் அனுபவமாக ஒன்றைக் கூறியுள்ளார்கள். அவர் பிரான்ஸில் ஒரு தேவாலயத்திற்குச் சென்றிருந்தபோது கலைக் கண்ணோட்டத்தில் உன்னதமான ஒரு படைப்பாக இருந்த அதன் கருவறையில் பிராணமய உலகைச் சார்ந்த கன்னங்கரிய பெரிய சிலந்தி ஒன்றிருந்ததாம். பக்தர்களின் விழிமிய உணர்வுகளையும், பிரார்த்தனைகளையும் அது உண்டு கொண்டிருந்ததாம்’.

‘யாருக்கு இறுமாப்பு இருக்குமோ அவர்களுக்குத்தான் தன்னைத் துதிப்பது பிடிக்குமாம். தன்னலமற்ற உண்மையான இறையார்வமும், ஆன்மீக உவகையும்தான் கடவுளர் மதிப்பது என்கிறார் அன்னை. இவ்வளவு எதற்கு? அன்னை மகாசமாதி அடைந்தபோது, ஓரன்பர் வானில் ஒரு பெரிய ஒளிப்பந்து பல நூறு சுக்கல்களாகச் சிதறி எல்லா இதயங்களுள்ளும் புகுந்ததைக் கண்டார் என நாம் படிக்கவில்லையா? எங்கும் நிறை பரம்பொருளல்லவா பகவானும் அன்னையும். அது மட்டுமல்ல. ஸ்ரீ அரவிந்தரே ஆரம்ப காலத்தில் கோவிலுக்குப் போவதைச் சம்பிரதாயமாகக் கொள்ளாமல், இறைவன் இருப்பது உண்மையானால் நான் அவனை நேருக்கு நேர் காண வேண்டும். அவன் நமக்குள்ளே இருப்பதாக இந்துமதம் கூறுகிறது. அவனை உள்ளே காணும் வழியையும் அது கூறியுள்ளது. எப்படியும் நான் அதைக் காண்பேன் என்றும் அது உண்மை என்பதற்கான ஆதாரங்களையும் நான் கண்டேன் என்கிறார். ஸ்ரீ அன்னையும் எனக்கு வயது 25 ஆகும்போது என்னுள் குடிகொண்டிருந்த அந்தரங்கக் கடவுளை நான் கண்டறிந்தேன் என்கிறார்’.

‘நீ இப்போது எனக்கு ஒரு சந்தேகத்தை ஏற்படுத்திவிட்டாய். அவர்கள்தாம் எங்கும் நிறை பரம்பொருள் என்றாய். தம்முள் கடவுளைக் கண்டனர் என்கிறாய். அவர்களே ஏன் அவர்களைக் காண வேண்டும்’.

‘உண்மையில் இறைவன் தன்னையே தன்னிலிருந்து புற நிலைப்படுத்திப் பார்த்ததுதான் சிருஷ்டி. இங்கு இவர்கள் நமக்கு வழிகாட்ட நம்மிடையே மானுடமாய் வந்தவர்கள்.

அவர்களைப் பற்றிய சூட்சுமம் அவர்களே அறிவார்கள்.

ஆதலால் நமக்குத் தம்மை உணர்த்தவே அவ்வாறு செய்தார்கள் என்று கொள்ள வேண்டும். குரங்கு குல்லாய் போட்ட கதைதான் நம் கதை’.

‘நீ என்ன சொல்ல வருகிறாய்? ஆசிரமம் போகாமலேயே அவர்களை வழிபடலாம் என்கிறாயா?’

‘அன்னையே என்ன சொல்லியிருக்கிறார்? “ஏன் என்னை வழிபட வேண்டும். நீங்களே நானாகலாமே” என்றல்லவா கூறியுள்ளார்’.

‘ஆம். அது சாமான்யனான எனக்குப் பொருந்தாது. நான் இப்போதுதான் நீரில் காலை நனைக்கிறேன். இறங்கி மூழ்கக் கற்றுக் கொண்ட பிறகல்லவா நீச்சலடிக்க வேண்டும். இப்போது எனக்கு ஆழ்ந்து அன்னையை நினைக்க சூழல் வேண்டும்’.

‘தியான மையங்கள் இருக்கின்றனவே. அவை ஆசிரமத்தின் சிறுவடிவம் என்று குருநாதர் கூறவில்லையா?’

‘அதுவும் சரிதான். ஆனால் இங்கு அருகில் தியான மையம் ஏதுமில்லை. என் வேலை நெருக்கடியில் வெளியூர் சென்று வரவும் இயலவில்லை’.

‘சரி, உனக்குச் சூழல்தானே வேண்டும். வீட்டிலேயே ஓரிடத்தைத் தேர்வு செய்து தவறாது ஒரு குறிப்பிட்ட நேரம்

அன்னையைத் தியானித்தால் அது அன்னை பகவான் சூழலைப் பெற்றுவிடும்’.

‘அதுவும் சரியான யோசனைதான். சந்தைக் கடை போன்ற இந்த வீட்டில் (கூட்டுக் குடும்பத்தில்) எந்த இடத்தைத் தேர்வு செய்வேன்?’

‘சமர்ப்பணம் செய். அன்னையே இடத்தைக் காட்டுவார்’.

இவ்வாறு நண்பன் கூறிக்கொண்டிருக்கும் போதே என் அண்ணன் மகள் சிறுமி புவனா ஓடி வந்தாள். நாங்கள் பேசியது எதுவும் அவளுக்குத் தெரியாது.

“சித்தப்பா! நீ அன்னையை நினைத்து கண்ணை மூடி உட்காருவாய் அல்லவா? அதற்கு நானொரு இடம் கண்டுபிடித்து விட்டேன்” என்றாள். எனக்கு உடம்பு சிலிர்த்தது.

நண்பனோ விழிகள் விரிய என்னைப் பார்த்தான்.

‘குழந்தை தெய்வமல்லவா? அவள் சொல்வதைக் கேள் என்றான். அவள் என் கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு போய் வீட்டின் நடு முற்றத்தில் ஒரு சிறிய பாயை விரித்து வைத்திருந்தாள் அதில் என்னை உட்கார வைத்துவிட்டு, கண்ணை மூடிக்கொள், இப்படி உட்கார் என்று சம்மணம் இட்டு அமர்ந்து கண்ணை மூடிக்கொண்டு ஓம் என்று தொடங்கிவிட்டாள். நான் பிரத்யட்சமாய் அவளில் அன்னையைத் தரிசித்தேன்’.

‘அதன்பிறகு, இது ஒருவேளை தற்செயல் நிகழ்வா? அன்னையின் ஏற்பாடேவா? இதை நான் எப்படிப் புரிந்து கொள்வது?’ என்றேன் நண்பனிடம்.

‘அன்னையின் முத்திரை நடக்காதது நடப்பது. அதில் தெரிந்து கொள் உண்மையை’ என்று கூறி அவன் பெறவந்த புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு போய்விட்டான்.

இருக்கட்டும் என்று குழந்தை குறிப்பிட்டுக் காட்டிய இடத்திலமர்ந்து கண்ணை மூடி அன்னையின் திருவடிகளை மனத்திரையில் கொண்டுவந்து ‘அம்மா! நீயே எனக்கு உன்னைக் காட்டியருள்’ என்று இறைஞ்சினேன்.

பாலா! என்று அறிமுகமான குரல், நட்பும் உரிமையும் கொண்டாடும் குரல் என் செவிகளைத் தீண்டியது. கண்ணைத் திறந்து பார்த்தேன். அருண் என் நண்பன் நின்று கொண்டிருந்தான். இவன் எப்படி வந்தான்? என்னால் நம்ப முடியவில்லை. காரணம், சில தினங்களுக்கு முன்பு இவனுடன் எனக்குக் கருத்து வேறுபாடு முற்றி சண்டையாகிவிட்டது. இனி உன்னைப் பார்க்க வரவும் மாட்டேன், பேசவும் மாட்டேன் என்று கடுமையாய்க் கூறிப் பிரிந்து விட்டான். முன்தினம் பார்த்தபோதுகூட வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டு உன்னோடு எவன் பேசுவான் என்ற தோரணையில் போனவன் இன்று வீடு தேடி வந்து அழைக்கிறான். திரைப்படங்கள், நாடகங்களில்கூட சுமுகத்தை மட்டும் விரும்பிச் சந்தோஷப்படும் குணம் எனக்கு. என் நண்பன் திரும்பி வந்தது உள்ளே மனம் மலர்ந்தது.

‘சாரி பாலா! என்னை மன்னித்துவிடு. நடந்தவற்றை மறந்து விடுவோம். வா. லைப்ரரி போவோம்’ என்றான். இந்தா இதை வாங்கிக்கொள் என்று எனக்குப் பிடித்த ‘காட்பரீஸ் சாக்லெட்டை’ வேறு நீட்டினான். சுமுகம் மலர்ந்தவுடன் எனக்குப் புதுத் தெம்பும் மகிழ்வும் வந்தது. இதுதான் அன்னையின் வரவோ என்று எண்ணும் போதே, இவன் என் நண்பன், நல்லவன், மனம் மாறி வந்து விட்டான், இது சகஜம்தானே என்று மனம் வக்கிரம் பேசியது.

நடக்க முடியாதது நடந்தால் அதுவல்லவா அன்னையின் வெளிப்பாடு என்று நான் எண்ணிக் கொண்டிருந்த போதே, அடாவடிக்காரன் என்று ஊரே கொண்டாடும் உத்தமன் (இது வஞ்சப்புகழ்ச்சி) ராசு பரபரப்பாய் வந்தான். இவன் எங்கு வந்தாலும் நல்லது நடக்காது. அடாவடி செய்வான். வம்பும் வழக்கும் வரும். இல்லாத அதிகாரத்தைப் பயன்படுத்தி என்போன்ற இளிச்சவாயர்களை நோக வைப்பான். ஒருமுறை இவன், பிரேக் இல்லாத வண்டியை விபத்தில்லாமல் ஓட்டுவேன் என்று அவன் நண்பனிடம் சவால்விட்டு எதிரே வந்த என் வண்டியில் மோதிவிட, இருவரும் விழுந்தோம். என் வண்டியின் முகப்பு விளக்கு, கண்ணாடியாவும் உடைந்துவிட்டது. மனம் நொந்தது! பார்த்து வரக் கூடாதா?’ என்றேன் சினத்தை அடக்கிக் கொண்டு. அவனோ, பிரேக் இல்லாத வண்டியில் வந்தேன். பார்த்து வந்தால் மட்டும் என்னாகும்? என் அதிர்ஷடம் யார் மீதாவது மோதாமல் உன்மீது மோதினேன் என்று சிறிதும் குற்றவுணர்வின்றி, மன்னிப்பும் கேட்காமல் பேசினான். நான் அவனோடு சண்டையிட விரும்பாமல் பொறுத்துக் கொண்டு வந்து விட்டேன். அந்தச் செயல் என் உள்ளிருந்து உறுத்திய உறுத்தலை மறக்கப் பெரும் பாடுபட்டேன். இந்நிலையில் இவன் எதற்கு வருகிறான்? வம்பனாயிற்றே என்று கலக்கம் எழ தியான இடத்தைவிட்டு அகலாமல் ‘அன்னையே இங்கு எழுந்தருள்’ என்று வேண்டிய வண்ணம் அவனைப் பார்த்தேன். நம்பவே முடியாதபடி கைகூப்பி “மன்னிச்சிடுங்க தம்பி. என் தப்பை மனசில வைக்காதீங்க. என் புள்ளைக்கு ஒடம்பு சரியில்ல. ஒங்க வண்டியைத் தந்து ஒதவுங்க. கண்ணாடியை உடைத்த நஷ்டத்தை நான் தந்துடறேன்” என்றான் பணிவாக. பெரும் அதிகார தோரணையுள்ள அடாவடிக்காரன். அவன் நினைத்திருந்தால் பணக்கார வையாபுரியை மிரட்டிக் கார் கேட்டிருப்பான். ஆனால் அவன் இப்படி என்னிடம் வந்து கெஞ்சுவது நம்ப முடியாததாயிருந்தது. ‘மதர்! இது நீதான், நீயேதான். சுமுகம் நீயல்லவா! திருவுருமாற்றம் உன் வழியல்லவா’ என்றது மனம்.

‘தாராளமா என் வண்டியை எடுத்துப் போ ராசு, இந்தா சாவி’ என்றேன்.

‘ரொம்ப நன்றி தம்பி’ என்று சென்றான்.

‘அவனிடம் போய் வண்டியைக் கொடுத்தாயே. ஏதாவது சொல்லி அனுப்பியிருக்கக் கூடாதா’ என்றனர் வீட்டார்.

அன்னையைப் பற்றியே அறியாத இவர்களுக்குத் திருவுருமாற்றம் எங்கே தெரியப் போகிறது. அவன் என் வண்டிக்குப் புதிய விளக்கும், கண்ணாடியும் பொருத்தி ஒர்க் ஷாப்பில் (Workshop) சரி செய்து புத்தம் புது வண்டியைப் போல் ஆக்கிக் கொண்டு விட்டுவிட்டு, “தம்பி ஒங்க ஒதவிய மறக்க மாட்டேன்’ என்று நன்றியும் கூறிப் போனான். யாவர்க்கும் ஒரே ஆச்சர்யம். ராசுவா இப்படி மாறி விட்டான்? என்றனர்.

என்னிடத்தில் அன்னை எழுந்தருளினார். எனக்குள் நான் கேட்ட வினாக்களுக்கு விடை கிடைத்துவிட்டது. அவர்களுக்கு அது தெரிய வாய்ப்பில்லை. பிறகென்ன? ஆசிரமம் போகவில்லையே என்ற குறை விலகி எனக்குள்ளேயே அன்னை தரிசனம் காண வழி கிடைத்துவிட்டது. நீங்களும் இதைப் பின்பற்றலாம் என்று சொல்லத் தோன்றுகிறது. அதிகப்பிரசங்கி என்று நீங்கள் கூறுவதும் எனக்குக் கேட்கிறது.

(முற்றும்)

********

ஜீவிய மணி

குறை கூறக்கூடாது என்பது நல்ல குணம். ஆனால் குறை கூறாமலிருப்பது ஒரு யோகப் பயிற்சியாகும். பிறர் மனம் புண்படக்கூடாது என்று குறை கூறாமலிருப்பது நல்ல மனித குணம். குறை சொல்லும் பொழுது என்ன நம் மனதில் நடக்கிறது. குறை சொல்லாமலிருந்தால் மனம் எப்படி மாறுகிறது என்று தெரிந்துகொண்டு, குறை சொல்லாமலிருப்பதன் ஆன்மிகப் பலன் கருதி குறை சொல்லாமலிருப்பது யோகப் பயிற்சி. யோகச் சட்டப்படி ஒருவர்மீது குறை சொன்னால், அவரைத் திருத்தும் வாய்ப்பை நாமிழந்து விடுகிறோம். குறை சொல்லாமலிருந்தால் அவர் திருந்தும் வாய்ப்பு அதிகம்.

நம்மைச் சுற்றியுள்ளவர் குறைகளை எல்லாம் கவனித்து, புரிந்து கொண்டு, அவற்றை நம் அகவுணர்வின் மாற்றத்தின் மூலம் விலக்க முற்பட்டு வெற்றி காண்பது யோகப் பயிற்சியில் உயர்ந்த நிலை.

*******book | by Dr. Radut