Skip to Content

08. மனிதன் கண்ட நீதியும் தெய்வம் வழங்கும் நீதியும்

மனிதன் கண்ட நீதியும் தெய்வம் வழங்கும் நீதியும்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

மூலம்: ஸ்ரீ கர்மயோகி

சொற்பொழிவு ஆற்றியவர்: திருமதி வசந்தா லக்ஷ்மி நாராயணன்

சொற்பொழிவு ஆற்றிய தேதி: நவம்பர் 24, 2014

இக்கருத்து ஓரளவு விளங்கினால், அதைப் பலமுறை பல இடங்களில் பல்வேறு வகையாகக் காண்பது தெளிவு வளர உதவும். சரித்திரம், பெரியோர் வரலாறு, நாமறிந்தோர் வாழ்வு முக்கியமாக

நம் சொந்த வாழ்வின் உள்ளுணர்வு

இக்கருத்தை விளக்கும். இதற்கும் விலக்குண்டு. விதியின் விலக்கு விதியின் மூலத்தை ஆழ்ந்து அகன்று பரந்து விரியுமாறு விளக்குவது மூலத்தின் விதி. ஒரு சட்டம் தெளிவு பெற அதை ஆழ்ந்து அறிய வேண்டும். சட்டம் மூலமாக மனத்தில் ஆன்ம விளக்கமாக மலர ஒரு சட்டம் மூலம் மற்ற சட்டங்களை, — எல்லா சட்டங்களையும் — அறிய முயல வேண்டும். ‘இருநீர் வியனுலகம் இனிய சொல்லாலன்றி மாறாது’ என்று புலவர் கூறியது வாழ்வின் அனுபவம் அடியோடு மறுப்பது. அடம் பிடிக்கும் குழந்தை, அழிச்சாட்டம் செய்யும் ஆண், சண்டிகேசியான பெண், ஊரை அழிக்க முயலும் நாட்டாண்மைக்காரன் எனப் பலருண்டு. அவர்களிடம் இன்சொல் பலன் தராது. வன்சொல் அவர்களை அவர்கள் போக்கில் வலுப்படுத்தும். மனித நீதியும், ஊர் நீதியும் தவறும் நிலையில் உலக நீதி செயல்படும். நாம் அதை மௌன சக்தி Silent Will என அறிவோம்.

சொல் மௌனமாகி, மௌனம் வலிமையானால், வலிமையான மௌனத்தின் சொல் இனிமையாக வந்தால் அழிச்சாட்டம், ஆர்ப்பாட்டம், சண்டி, அக்கிரமம், அநியாயம் அதேநிலையில் திருவுருமாறி

ஆண்டவன் நியாயம் மனிதனுக்கு அருளாகும்.

வாழ்க்கை வழங்கும் பரிசுகளை எதிராகவோ, மறைமுகமாகவோ, மாற்றமாகவோ தருவது வழக்கம். பார்ட்னர் திட்டத்தைக் கொடுத்தவர் இனி தேவையில்லை என்பதால் அவரை நீக்க முயன்றார். அவர் அன்பர். பணம் முதலீடு செய்தவர் கஷ்டக் கூட்டாளியை நீக்க முயன்றார். தன்னைத் திட்டத்திலிருந்து விலகிக் கொள்ளச் செய்யும் முயற்சி என அன்பருக்கு முதலில் அது தெரியவில்லை. முடிவிலேயே அது விளங்கியது. முடிவில் புரிந்தது முதலிலேயே புரிந்து அன்பர் சந்தோஷப்பட்டிருந்தால், 10 ஆண்டுகள் பட்ட சிரமம், கோர்ட், கேஸ், மனத்தாங்கல், மகசூல் நஷ்டம் இருந்திருக்காது. மனிதன் எதிர்பார்ப்பது வேறு. தெய்வநீதி வேறு. தெய்வம் நியாயத்தை மட்டும் வழங்கும். மனிதன் உள்ள மனநிலைக்கேற்ப அது வரும். மாமியார் மருமகளைப் பட்டினி போடுகிறாள். கொடுமைப்படுத்துகிறாள், சிறுமைப்படுத்துகிறாள். அதில் திருப்தியடைகிறாள். மருமகள் சொல்லொணாத் துன்பம் அனுபவிக்கிறார். மருமகள் அன்பரில்லை. கொடுமை கொடுமையாகிறது. பிறகு மருமகள் அன்பராகிறார். நிலைமை மாறுகிறது. மாமியார் மறுத்தவை அனைத்தும் மருமகளுக்குக் கிடைக்கிறது. அவை அளவில் அபரிமிதமாகவும், தரத்தில் உயர்ந்தும், உரிமையில் உன்னதமாகவும் வருகின்றன. கணவனுக்கு என்ன சம்பளம் எனவும் தெரியாத மனைவி, பணத்தைக் கையால் தொட்டுப் பார்த்ததில்லை. தேவைப்பட்ட பொருட்களை வாங்கும் பொருளாதார வசதியில்லை. மனைவி அடக்கமானவள். கேட்டறியாதவள். கணவனே நிலைமையை அறிந்து பொருட்களை வாங்கினாலொழிய எதற்கும் வழியில்லை. மனைவி அன்பரானாள். வசதி பெருகியது. பெருகிய வசதி அன்பருக்கு வந்தது. கணவனுக்கு என்ன வசதி எப்படி வருகிறது, எனவும் தெரியாது. மனைவிக்குரிய நியாயமான பங்கை கணவன் மறுக்கும் பொழுது, அன்னையின் அருள் வரும்முன் கணவன் தன்னைத்தானே விலக்கிக் கொள்வதை அறியவில்லை. மனைவிக்கும் அது தெரியவில்லை.

நியாயமும், நீதியும் ஏராளமாக உண்டு.
அவை நம் சிற்றறிவுக்கு எட்டுவதில்லை.

சர்வதேச ஸ்தாபனத் தலைவர், மெம்பர் ஒருவருக்கு வேலை கொடுத்தார். கொடுத்த வேலையைச் சிறப்பாக மெம்பர் செய்தார். அவருக்குத் திருப்தி. அனைவரும் பாராட்டினர். தலைவருக்குக் கோபம் வந்தது. ‘உன்னை யார் செய்யச் சொன்னது என்றார்.’ உங்கள் உத்தரவின் பேரில்தான் செய்தேன்’ என பதில் வந்தது. தலைவர் வசைமாறி பொழிந்தார். பிரச்சனையே இல்லாத பொழுது கோர்ட்டில் கேஸ் போட்டார். கேஸ் இருமுறை தோற்றது. இராஜினாமா செய்தார். அவர் வீண் செலவு செய்த அவ்வளவு பணமும் நன்கொடையாக வேறொருவர் கொடுத்தார். அவதூறுக்கு ஆளான மெம்பரை அனைவரும் பாராட்டினர். CEO-வாக நியமித்தனர். ஸ்தாபனம் 3 ஆண்டில் பிரபலமாயிற்று. தண்டனை அனுபவித்த மெம்பருக்கு முடிவில் புரிந்தது. “தலைவர் தன்னை முழுவதும் விலக்கிக் கொள்ளும்படி இதுவரை நடந்திருக்கிறார்” என்று விளங்கியது. தலைவர் ஆண்டவன் நியாயத்தை அவர் பாணியில் நிறைவேற்றியுள்ளார். எவரை நாம் உடனடியாக விலக்க வேண்டுமோ அவரை விலக்காவிட்டால், அவரே முன்வந்து விலக முடிவு செய்த பொழுது நம்மை விலக்க முயல்வார் என்பது வாழ்வு செயல்படும் வகை. அதிர்ஷ்டம் பலருக்குத் தேவையில்லை. சிலருக்குக் கசப்பு, வேப்பங்காய். அடுத்தவரோ, தகப்பனாரோ, நண்பரோ அதிர்ஷ்டத்தை அழைத்து வந்தால் அவர்மீது கோபப்பட்டு அவரை விட்டகல்வது, தரித்திரம் அதிர்ஷ்டத்தை விலக்குவது. கொடுப்பது அன்பராகவோ, அன்னையாகவோ இருக்கலாம். அன்பருக்கு வாழ்வு அன்னையை அருகில் அழைத்து வாழ்வின் இருளை விலக்கும் செயல் அது என்று ஆரம்பத்தில் புரியாது. முடிவில் பலருக்குப் புரியும். முடிவிலும் புரியாதவருண்டு.

உலகில் விரயமில்லை. வலி, துன்பம், நோய், மரணம் மனிதனுடைய குறுகிய பார்வைக்குரியன என்றால் அதே கோணத்தில் நாம் வாழ்வின் நிகழ்ச்சிகளைக் காண்பது அறிவுடைமை. கணவன் பெரிய வருமானமுள்ள வியாபாரத்தை திவாலாக்கியபின் இதர சொத்துக்களையும் அழித்தார். என் குடும்பம் ஆத்மாவில் மலர அவை தேவையென என்னால் இன்றும் ஏற்க முடியவில்லை. அன்று எப்படி அது விளங்க முடியும்? அவர் செய்தவற்றை குதூகலமாக நான் வரவேற்றிருக்க வேண்டும் என்பது ஆண்டவன் நியாயம். நன்றி கெட்ட செயலை நாள்தோறும் நண்பன் தவறாமல் செய்த பொழுது மனம் மகிழ வேண்டும் என்பது சட்டமானால், இன்றும் அந்தச் சட்டம் எனக்குத் தேவையில்லை என்றே மனம் அலறுகிறது. பெரும்பலன் — அவர் வாழ்வில் அறியாதது, அவர் உலகில் ஒரு முறையும் எழாத பலன் — பெற்றவர் “உன்னால்தான் எனக்குக் கஷ்டம்” என நேரடியாகக் கூறுவது வாழ்வு. நல்லது வந்தவுடன் கொடுத்தவருக்குத் தாமதமின்றி கெடுதல் செய்யத் துடிப்பவரைக் கண்டு மனம் குதூகலம் பெற வேண்டும் என்பது ஆண்டவன் நியாயமானாலும், அந்தப் பொறுமை எனக்கின்றில்லை என்பதுடன், இனியும் அது வேண்டாம் என்றே என் மனம் அடித்துக் கூறுகிறது. 1947-இல் ஒரு கோடி பேர் இடம் பெயர்ந்து, அல்லலுற்று, அவதிப்பட்டு நாடு அவமானம் அடைந்திராவிட்டால், வந்த சுதந்திரம் வந்த வழியே போயிருக்கும் என யாரிடம் கூற முடியும்? இறைவன் பெற்ற சுதந்திரத்தைக் காப்பாற்றிய முறையென இன்று ஏற்க முடியுமா? லஞ்சம், ஊழல், B.A, M.A பட்டம் பெற்று தமிழோ, ஆங்கிலமோ எழுத முடியாத படிப்பு, இளைஞர்கள் அமெரிக்கப் பாதையில் செல்லும் அலங்கோலம் இவையெல்லாம் நாடு முன்னேறும் பாதை என எப்படி ஏற்பது? வயிற்றைக் கீறி கட்டியை எடுக்கும் டாக்டருக்கு பீஸும், நன்றியும் கூறலாம். நம் கண் எதிரே 5 வயது மகனைப் பட்டினி போடும் நாத்தனாருக்கு நன்றி கூற முடியுமா? தன் வாழ்வின் அவல ருசிகளை அனுபவிக்கும் தகப்பனார் பெண்கள் திருமணத்தைக் கருதாமல், ‘அவர்கள் கதி என்னாவது?’ என யாராவது கேட்டால், ‘தலைவிதி’ என்றால் எப்படி மனம் பொறுக்கும்? அமெரிக்காவில் Ph.D. பட்டம் பெற்று வேலையிலிருக்கும் பெரும் செல்வந்தர் மகனுக்குப் பெண் தர மறுக்கும் தகப்பனார் கூறுவது “என் பெண்ணை வெளி நாட்டிற்கு அனுப்ப முடியாது.” அவர் தன் மகன் வெளிநாடு போவதற்குச் சம்மதப்பட்டார்.

இந்த நியாயம் யாருக்கு வேண்டும் என்பதே
எல்லோரும் எழுப்பும் குரல்.

யாருக்கு வேண்டுமோ, வேண்டாமோ, அதுதான் நடக்கும். தவிர்க்க முடியாது எனத் தெரிந்தாலும் ஏற்க முடியாது என்பதே மனநிலை.

ஆள்வது ஆனந்தம். ஆளப்படுவது பேரானந்தம்

என்பதை அறிந்தவர் அதன்படி செயல்பட்டால் பேரானந்தம் பெரும்பேறாகும். இவற்றை ஆதிநாள்தொட்டு உலகமறியும். உலகம் அறிந்ததை உள்ளம் அறியும் நேரம் உயர்ந்த நேரம். 1946-இல் தமிழ் நாட்டுக் காங்கிரஸில் 4 அணா உறுப்பினராக இராஜாஜியைச் சேர்க்க மறுத்தது, 1952-இல் அவருக்கு முதன் மந்திரி பதவிக்கு அழைப்பு என அழைத்தவரோ, அழைக்கப்பட்டவரோ அறிய முடியாது. பெரும் அறிஞர் மூதறிஞரானாலும், எட்டாத ஞானம் அது. நாளை அது சிறுவனும் அறிந்து ஏற்கும் மனப்பான்மையாகும். அம்மனப்பான்மை நாம் அதிர்ஷ்டம் என அறிவதை, அன்று வரம் பிரவாகமாகப் புரளும் பேரதிர்ஷ்டத்தின்முன் தரித்திரமாகத் தோற்றுவிக்கும். க்ஷணம் கூட இம்மனநிலையை மனமோ, அறிவோ இன்று ஏற்கும் நிலை நமக்கில்லை. அதிர்ஷ்டம் க்ஷணம் வரும். மணிக்கொருமுறை அந்த க்ஷணம் மாறிமாறி வரும். அதிர்ஷ்டம் என்பதை செல்வம் என அறிவோம். செல்வாக்கு செல்வத்தைக் கடந்தது. செல்வாக்கைக் கடந்ததுண்டா? வாக்கு உள்ளே போய் செல்வாக்கு ‘உள்வாக்கா’னால், அது உலகில் நாம் பெறும் செல்வாக்காகும்.

ஹிட்லர் போர் தொடுத்த பொழுது அமெரிக்க உதவியை ஐரோப்பியர் நாடினர். “இது ஐரோப்பியருடைய உள்நாட்டுப் பிரச்சனை. ஏன் அமெரிக்கா அங்கு வர வேண்டும்” என்று அமெரிக்கர் மறுத்தனர். ஜனாதிபதி ரூஸ்வெல்ட் மட்டும் உதவ ஆசைப்பட்டு பல வகைகளில் போரில் பங்கு கொண்டார். முடிவான ஒரு ஜெர்மன் போர்க் கப்பல் அமெரிக்க வியாபார கப்பலைத் தாக்கியதை ஒரு சாக்காகக் கொண்டு போரில் இறங்கினார். நாட்டு மக்களுக்கு அபிப்பிராயமில்லை. 1943-வரை ஐரோப்பாவில் நடக்கும் யுத்தங்களில் அமெரிக்கர் கலந்து கொள்வதை அந்நாட்டு மக்கள் வெறுத்தனர். அப்பொழுது USA இராணுவம் 16000 பேர்கள் கொண்டது. மிகச் சிறிய இராணுவம். இராணுவத்தில் சேனாதிபதிக்கு மட்டும் காரிருந்தது. சொந்த வியாபாரம், ஏற்றுமதி, உற்பத்தி, செல்வம், கல்வி, பல்கலைக்கழகம், ஆராய்ச்சி போன்றதே அமெரிக்கர் விரும்பியது. போர் அவர்கள் விரும்பியதில்லை. அதுவும் அவர்களுடன் சம்பந்தப்படாத போரில் அவர்கட்கு அக்கறையில்லை. இன்று கடந்த 60 ஆண்டாக அமெரிக்கா உலக வல்லரசாக, இராணுவ அதிகாரியாக, பொருளாதாரத் தலைமை பெற்று உலகை (commerical domination, cultural domination) வியாபாரத்திலும், கலாச்சாரத்திலும் ஆள்வது அன்று அமெரிக்கர் ஏற்காத ஒன்று.

ஒரு பிலிம் புரொடியூசர் கருணாநிதியுடன் சண்டை போட்டுக் கொண்டார். ஓராண்டிற்குப்பின் கருணாநிதி மந்திரியாகி விட்டார். “இவர் மந்திரியாவார் எனத் தெரிந்திருந்-தால் நான் சண்டை போட்டிருக்க மாட்டேன்” என்றார். வாழ்க்கை பின்னால் வருவதை மாற்றியும், தலைகீழேயும் காட்டும். நம் பள்ளியில் (Primrose) முதல் 5 வகுப்புக்கு, இடத்திற்குப் போட்டி. 5 முதல் 11 வகுப்பில் மாணவர் குறைவு. State Board, CBSE, ICSE என்று பல பாட திட்டங்களிருப்பதால் பெற்றோர் பிள்ளைகளை மெடிக்கல், என்ஜினீயரிங் சேர்க்க மார்க் வேண்டும். Primrose-இல் படிப்பு முக்கியம், மார்க்கில்லை. அதனால் சில மாணவர்களை, கடந்த 2 அல்லது 3 ஆண்டுகளாக வேறு பள்ளிகட்கு மாற்றினர். பிள்ளைகள் மனப்பாடம் செய்து மார்க் வாங்கினாலும் மெடிக்கல் சீட் கிடைக்காது. மனப்பாடம் செய்து மார்க் வாங்கி Anna University-இல் இடம் கிடைத்து படிக்க முடியாமல் மாணவர்கள் திணறுகிறார்கள். முடியாமல் வந்துவிடுகிறார்கள். இந்த ஆண்டு நம் பள்ளி மாணவன் மனப்பாடம் செய்யாமல் State-இல் முதலிடம் பெற்றவுடன் மேல் வகுப்புகளில் சேர போட்டி எழுகிறது.

கண்ணுக்குத் தெரிவது உண்மை, பெரியது என்பது மனித
நிலை. அதுவே நீதி, நியாயமாகும்.
நீதியும், நியாயமும் நமக்குத் தெரிந்த வழியாக மட்டும்
வருவதில்லை. தெரியாத வழியாக அதிகமாக வரும்.

மேலும் சிறியது தவறினால், பெரியது வரும் என்பது ஒரு சட்டம். உலகம் பெரியது, மிகப் பெரியது என அறிவதும் பெரிய ஆத்மாவுக்குப் பெரியதாகத் தெரியாது. அரசியலில் அதுபோன்ற நோக்கமுடைய தலைவர் உயர்ந்து, எழுந்ததைக் கண்டு உலகம் 1966-இல் வியந்தது.

இருப்பதை விட்டுப் பறப்பதை நாடாதே
என்பது மரபின் விவேகம்
இருப்பதை விட்டாலன்றி பறப்பது கிடைக்காது
என்பது ஸ்ரீ அரவிந்தம்

‘விடலறிய எம் போல்வார் இதயம் தொழும்’ ஆண்டவனே முன்வந்து உள்ளதை எடுத்தால் மனிதன் அநீதியைக் காண்கிறான். தேவனுடைய ‘வேதாந்தம்’ என்ற கதையில் வேதாந்தம் B.A படித்து முடிக்காமல் 1943-இல் 200/-ரூபாயுடன் சென்னை வந்து அப்பணத்தை இழந்து பெற்று ஒரு சிறிய மனப்பான்மையுள்ள பணக்காரர் வீட்டில் ரூ.30/- சம்பளத்திற்கு வேலை செய்யும் பொழுது 2 போக்கிரிகள் அளவு கடந்த சாமர்த்தியத்துடன் அந்த 200-இல் 180-ஐப் பிடுங்கிக் கொள்கிறார்கள். பணக்காரக் குடும்பம் மட்டமான குடும்பம். அதைவிட்டு வெளியே வராமல் வேதாந்தம் முன்னுக்கு வர முடியாது. ரூ.30/- சம்பாதிப்பவனுக்கு ரூ.25,000/- முதல் கொடுத்து பத்திரிக்கை ஆரம்பிக்கச் சொன்னவர் தம் டாக்டர் பெண்ணையும் கொடுக்க முன்வருகிறார். அவனுக்குப் பத்திரிக்கையில் விருது கிடைக்க இருக்கிறது. பத்திரிக்கை வேலை கொடுக்கவும் நினைக்கிறது. மத்திய மந்திரி தமிழ்நாடு சுற்றுப்பயணத்தில் அவனை உடன் அழைத்துப் போகிறார். பணக்காரக் குடும்பம் அநியாயமாக அவன்மீது திருட்டுப்பட்டம் கட்டியதால் அதைவிட்டு வெளியேறுகிறான். வந்த அத்தனை அதிர்ஷ்டங்களும் “தரித்திரத்தை” — பணக்கார குடும்ப வேலையை — விட்ட பிறகே வருகிறது. அவனே விடமறுக்கும் தரித்திரம் தானே முன்வந்து விலகியது ஆண்டவன் நீதி. அன்று அவனுக்கு அநீதியாகத் தோன்றியது.

நாட்டுக்கு நாடு பண்பு கலாச்சாரம் மாறுகிறது. நம்மூரில் கோவிலுள் செருப்புப் போட்டுக் கொண்டு போக எவரும் நினைக்க முடியாது. செருப்பில்லாமல் வருவது இங்கிலாந்தில் அநாகரிகம். ஒரு வீட்டினுள் ஆண்கள் நுழைந்தால், உட்கார்ந்துள்ள பெண்கள் எழுந்து நிற்பது மரியாதை. இங்கிலாந்தில் உள்ளே வரும் பெண்ணை மரியாதையாக வரவேற்க ஆண்கள் எழுந்து நிற்பார்கள். எச்சில், தீட்டு என்பதை அறியாத நாகரிகம் உண்டு. நமக்கு அவை முக்கியம். முதலாளியை வேலைக்காரர் அமெரிக்காவில் பேரிட்டு அழைப்பார்கள். நாகரிகம், நாட்டு வழக்கம், பண்பு, மாறுவதால் ஒரு நாட்டுப் பழக்கம் அடுத்த நாட்டில் வேறு உணர்ச்சிகளை எழுப்பும். பண்பு மாறினால், “நியாயம்” ‘அநியாயமாக’த் தோன்றும். அதில் விஷயமில்லை. நியாயம், நீதி, பழக்கம், வழக்கம் ஆகியவற்றைப் பாகுபாடு செய்தறிவது அவசியம்.

தோட்டத்தில் ஒரு கட்டடம் எழுப்பும்முன் அங்கொரு மரமிருந்தால் வெட்டி அப்புறப்படுத்துகிறோம். நம் மரபில் பச்சை மரமானால், அதுவும் சீசனில் பூத்துக் குலுங்கும் பொழுது வெட்டமாட்டார்கள். தென்னை மரத்தை எவரும் வெட்டத் தயங்குவார்கள். வெட்டுவது அவசியமானால், ஒரு தென்னம்-பி ள்ளையை வேறொரு இடத்தில் நட்டபின், மரத்தை வெட்டுவார்கள். அமெரிக்காவில் அப்படி ஒரு எண்ணம் தோன்றாது. பழக்கம் என்பதும் அதற்குரிய உண்மையும் வேறு. ஆரோவில் ஆலமரம் கோடரியைக் குத்தி வைத்ததால் வேதனைப்பட்டு, அன்னையிடம் முறையிட்டது. சாப்பாட்டு அறை மாமரம், பட்டுப்போனதால் வெட்ட முடிவு செய்த செய்தியை, மரம் அன்னையிடம் கூறிப் புது வாழ்வு பெற்றது. மரத்திற்கு உயிர் உண்டு. அதை அறியாமல் ஏராளமான மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினால் அந்த நிலம் கொடுக்கக் கூடிய பெரும் வருமானம் இல்லாமல் போகும் என்பதும் உண்மை. ஆனால் அறிவில்லாமல் செய்யும் காரியம் அறியாமைக்குரிய பலனைப் — தண்டனை — பெறும் என்பது உண்மை. மரம் அவசியம் வெட்ட வேண்டிய சந்தர்ப்பம் எழுந்தால் என்ன செய்வது? நல்லது, கெட்டது, பாவம், புண்ணியம் என்பது மனத்திற்குரியது. மனிதனுக்குரியதல்ல. தாழ்ந்தவன் தவறு செய்தால் தண்டனை பெறமாட்டான். அதே தவற்றை உயர்ந்தவன் செய்தால் தண்டனை வரும் என்பது உலகறிந்த உண்மை. ஜட்ஜ் கொலையாளியைத் தூக்கில் போடுவதால் சட்டப்படி குற்றமாகாது. அது அவருக்குப் பாவமுமில்லை. புண்ணியமாகவும் இருக்கும். நாம் வாங்கிய மனையில் பல மரங்கள் இருப்பதால் அவற்றை வெட்டி அகற்றி வீடு கட்ட வேண்டும் என்றால் அன்பர் செய்யக் கூடியதென்ன? மனை வாங்கும்முன் யோசிக்க வேண்டிய விஷயம் இது. சமர்ப்பணம் என்பதை அன்பர் பின்பற்றுபவரானால், சமர்ப்பணம் அவருக்குத் தவறாது வழி காட்டும். மரம் வெட்டுவது அவர் வாழ்வையோ, ஆத்மாவையோ பாதிக்காது என்றால் சமர்ப்பணம் வழிவிடும். சமர்ப்பணம் தடையானால் அவர் அம்மனையை வாங்கக் கூடாது. தர்மசங்கடமான நிலை வாழ்வில் அரிபொருளாக வரும். சமர்ப்பணத்தை ஏற்ற அன்பருக்குத் தர்மம் சங்கட- மாகாது. தர்மம் சங்கடமானால் சமர்ப்பணம் மேலெழுந்தவாரியாக உள்ளது எனப் பொருள்.

சமர்ப்பணம் தர்ம சங்கடமான நிலையை அழகாக அகற்றுவதைக் காண்பது அற்புதம். சமர்ப்பணம் ஆழ்ந்து ஆத்ம ஜீவனோடிருந்தால், தர்ம சங்கடம் தலைகீழே மாறி தலை காக்கும் தர்மமாகும். பார்ட்னர் தவறு செய்து தண்டனை பெறுவது நியாயமானாலும் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. செய்வது கொட்டம் அடித்தல், பாவம் என்பது தர்ம சங்கடமான சூழ்நிலை, ஏற்கவும் முடியாது மறுக்கவும் முடியாது என்ற சந்தர்ப்பம் உண்டு. சில பரீட்சைகள் 3 முறை மட்டும் எழுத அனுமதியுண்டு என்றால், மூன்றாம் முறை எழுதுபவன் எடுக்கக் கூடிய எச்சரிக்கையை எடுக்காமல் எதிரானதைச் செய்தால், அவன் செயலின் பொறுப்பு அன்பருடையது எனில் அது சங்கடமான நிலை. ஒரு சந்தர்ப்பத்தில் எந்த வழியாகவும் போக முடியாது எனில் இரண்டு எதிரெதிரான வழிகட்கும் உயர்ந்த வழியொன்றுண்டு. அதை மனம் அறியாது. சமர்ப்பணம் அறியும். அதைச் சத்திய ஜீவியம் செய்யும்.

எவ்வழியும் தவறான நேரம், நேர்வழி எழுவது

அன்னைக்குச் செய்யும் சமர்ப்பணம்

(முற்றும்)

**********

ஜீவிய மணி

நடப்பதற்கு முன்னால் புரிவது நம்பிக்கை.

*********



book | by Dr. Radut