Skip to Content

02. நல்லதோர் வீணை செய்து

நல்லதோர் வீணை செய்து

(சென்ற இதழின் தொடர்ச்சி)

இல. சுந்தரி

என்ன விந்தையிது? இன்று இவள் ஆர்வமாய் காத்திருந்த போது, அவள் திரும்பாமலே சென்றாள். நினைவு தெரிந்த நாளாய் இவள் அம்மா வசிக்கும் அந்தப் பகுதிக்குப் போனதில்லை. ஒருநாள் அம்மா மயங்கி விழுந்தபோது மடியில் தாங்கினாளே அதோடு சரி. அதையும் கடமையே என்றுதான் செய்தாள். ஆனால், இன்று அம்மா தன்னிடம் வந்து பேசமாட்டாளா என்கிறது மனம்.

சுமதியின் மனம் வழக்கம் போல், உள்ளே நுழைந்ததும், மகளிருக்கும் அடுத்த பகுதியை எண்ணியது. மகளின் இனிய முகம் காண ஏங்கியது. ஆனால் இன்று வழக்கத்திற்கு மாறாக அவள் தன் மனத்தை அடக்கிச் சுருட்டிக்கொண்டு அடுத்த பகுதியைத் திரும்பியும் பாராது போய்விட்டாள்.

என்ன விந்தையான மனமிது? ஆர்த்தி சோர்ந்து போய் உள்ளே திரும்பினாள். படுக்கை கொள்ளவில்லை. மனம் அமைதியிழந்து தவித்தது. படிக்கும் அறைக்குள் சென்று கதவைத் தாளிட்ட வண்ணம், நல்லதோர் வீணை செய்து இசைக்கத் தொடங்கி உணர்ச்சி வசப்பட்டாள். மெய்மறந்து பாடியவள் டேபிள்மீது கவிழ்ந்து அப்படியே உறங்கிப் போனாள். இரண்டு நாட்களாய் உள்ளெழுந்த போராட்டம் அவளை அலைக்கழித்ததால் உடம்பு சுட்டது.

திடீரென கண்விழித்த சுபா, அருகில் படுக்கைக் காலியாயிருந்தது உணர்ந்து, அதிர்ந்து எழுந்து தேடினாள். மணி மூன்று இருக்கும். இப்போது எழுந்து எங்கு போயிருப்பாள். இரண்டு நாட்களாகவே உள்ளூர அதிர்ந்து போயிருந்தாள். வேடிக்கை பாராமல், விஷயத்தை விளக்கியிருக்கலாமோ என்று கவலையுடன் படிக்கும் அறைக் கதவைத் திறந்தவள், ஆர்த்தி டேபிள்மீது கவிழ்ந்து கிடந்ததைப் பார்த்து திடுக்கிட்டாள். ஐயோ, விளையாட்டாக இருந்து விட்டேனே. குழந்தையைக் கலங்க விட்டு வேடிக்கை பார்த்து விட்டேனோ? நான்தான் குற்றவாளி. குழந்தை பாவம் சோர்ந்து போய் விட்டாள் என்று சுபாவின் மனம் தவித்தது.

மெல்ல அவள் தலையை நிமிர்த்தி ‘ஆர்த்தி!’ என்று மெல்லிய குரலால் அழைத்தாள்.

‘அம்மா!’ என்று தீனமாய் முனகினாள் ஆர்த்தி. உடம்போ அனலாய்ச் சுட்டது. அவளைத் தாங்கி படுக்கைக்கு அழைத்துச் சென்று படுக்க வைத்தாள். சுமதியிடம் ஓடிவந்து எழுப்பினாள். இப்போது சுமதி கல்லாகி விட்டிருந்தாள்.

‘என்ன சுபா இது? அவளுக்கு உடம்புக்கு வந்தால் நீயே டாக்டரை அழைத்துக் காட்டக் கூடாதா? நான் வந்தால் அவளுக்கு அதிகமாகிவிடும்’ என்றாள்.

வாய் பேசாது திரும்பிய சுபா, டாக்டருக்குப் போன் செய்து வரவழைத்தாள். வந்து பார்த்த டாக்டர் காய்ச்சலுக்கு மருந்து கொடுத்தார். ‘தேர்வுக்காக உடலையும், மனதையும் வருத்தியிருப்பாள். சின்னப்பெண் தாங்க முடியவில்லை’ என்று ஒரு காரணமும் கூறிச் சென்றார்.

தேர்வு முடிந்து வெளியூர் போய், கொள்ளையாய்ச் சிரித்து, கொண்டாடி மகிழ்ந்ததும், வேண்டாதவள் என ஒதுக்கிய தாயைத் தேடி அலைந்ததும் அவளுக்கல்லவா தெரியும்.

மருந்து, மாத்திரைகளை, ஹார்லிக்ஸை பார்த்துப்பார்த்து கொடுத்தாள் சுபா. ஆர்த்தி கொடி போல் துவண்டு கிடந்தாள் படுக்கையில். சுபா துன்பம் தாளாது தனிமையில் அழுதாள். கடவுளை வேண்டினாள்.

ஆர்த்தி மாத்திரையும், ஹார்லிக்ஸும் படுத்த நிலையில் பாதி உறக்கத்தில் சாப்பிட்டு அயர்ந்து தூங்கினாள்.

இவளை யார் பொறுப்பில் விட்டுவிட்டு கோயிலுக்குப் போவது? கடவுள் கருணையினால்தான் ஆர்த்தி நலமாக முடியும் என்று தீவிரமாய் நினைத்தாள். கடவுளை நம்பி தனியே விட்டுவிட்டு அரைமணியில் வந்துவிடலாம் என்று ஒரு எண்ணம். பாழும் மனம், மனிதர்களை நம்பும் அளவு கடவுளை நம்புவது இல்லையோ! மீண்டும் சுமதியிடம் சென்றாள்.

சுமதியோ இரண்டு நாட்களாய் அறையில் அடைபட்டுக் கிடந்தாள். வேலை செய்ய வரும் பணியாளர்களிடம் தனக்கு உடம்பு சரியில்லை என்றும் தன்னைத் தொந்திரவு செய்ய வேண்டாமென்றும் எச்சரித்திருக்கிறாள். அவள் கணவரும் ஊரிலில்லை.

குழந்தையைப் புறக்கணித்தேனோ என்ற மனவுளைச்சல் வேறு. இந்நிலையில் சுபா வந்தாள்.

சுமதி, குழந்தைக்கு இரண்டு நாட்களாய் உடம்பு சரியில்லை. மாத்திரை கொடுத்திருக்கிறேன். அயர்ந்து உறங்குகிறாள். கோயிலுக்குப் போய் கடவுளிடம் பிரார்த்தனை செய்து வரத் தோன்றுகிறது. ‘அரைமணி நேரத்தில் வந்து விடுவேன். தயவு செய்து கொஞ்சம் பார்த்துக்கொள் சுமதி’ என்று கெஞ்சினாள்.

‘சரி சுபா. உனக்காகத்தான் ஒப்புக் கொள்கிறேன். அவள் கண் விழிக்கும்முன் வந்து விடு’ என்று கூறி ஆர்த்தியிருக்கும் அந்தப் பகுதிக்குப் புறப்பட்டாள். ‘அவுட் ஹவுஸுக்குப் போன் செய்து யார் வந்தாலும் இப்போது பார்ப்பதற்கில்லை என்று சொல்லிவிடச் சொன்னாள்’.

படுக்கையில் கிழிந்த நாராய்க் கிடந்தாள் ஆர்த்தி. பெற்ற வயிறு கலங்கியது. பாசத்தால் மனம் துடித்தது. ‘ஐயோ மகளே! எத்தனை தவம் கிடந்து ஈன்றேன். இப்படி அந்நியமாய் விட்டுவிடவோ உன்னைப் பெற்றெடுத்தேன்’ என்று உள்ளம் புலம்பியது. பச்சைக் கொடியை யாரோ இரக்கமின்றி பறித்து எறிந்து விட்டது போல் கிடந்தாள் குழந்தை. மெல்ல அவளருகில் வந்தாள் சுமதி. அவள் பக்கத்தில் உட்காரக் கூடப் பயமாக இருந்தது. திடீரென விழித்துக்கொண்டு விடுவாளோ? தன்னைப் பார்த்தால் என்ன ஆவாளோ என்றெல்லாம் அஞ்சிக் கொண்டிருந்தாள். காய்ச்சல் வேகத்தில் முனகுகிறாள். மெல்ல பக்கத்தில் உட்கார்ந்தாள். புரண்டு படுத்த ஆர்த்தி மெல்ல தன் காலை அவள் மடிமீது போடுகிறாள். பாசத்தில் சுகமாயும், பயத்தில் கனமாயும் உணர்ந்தாள் சுமதி. மெல்ல தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவளை வருடிக் கொடுத்தாள். இதமாக இருந்திருக்கும் போலும். கண்விழிக்காமலேயே முனகுகிறாள். ‘அம்மா’ என்றல்லவா சொல்கிறாள்.

‘ஆர்த்தி!’ என்று பாசம் பொங்க அழைக்கிறாள் சுமதி. கண்ணைத் திறவாமலேயே தன்னைத் தடவிக் கொடுக்கும் கையைப் பற்றிக் கொள்கிறாள். கண்கலங்கி உட்கார்ந்திருந்தாள் சுமதி. ‘அம்மா’ என பலகீனமாய் அழைத்தாள் ஆர்த்தி.

‘ஆர்த்தி! நான் அம்மா வந்திருக்கேனடா’ என்று மெல்லக் கூறினாள். இலேசாய்க் கண் திறந்தவள் முகம் மலர்ந்தாள். கனவா? நனவா?என்று திணறினாள் சுமதி.

‘அம்மா நீயா?’ என்றாள் அதில் ஆர்வம், அன்பு யாவுமிருந்தது.

‘ஆமாண்டா, நான்தான். உன்னம்மாதான்’. ‘உங்கிட்ட ஒண்ணு கேக்கணும்மா’ என்றாள் ஆர்த்தி.

‘உடம்பு குணமாகட்டும். நிறைய கேள். எது கேட்டாலும் சொல்கிறேன்’ என்று அன்புடன் கூறினாள்.

‘இதைக் கேட்டாலே குணமாகிவிடுவேனம்மா’ என்றாள். அத்தனை பலவீனத்திலும் ஆர்வம் குறையாமல்.

‘நீ குணமாகி நன்றாக இருந்தால் அதுவே போதும் கேளடா. என்ன கேட்க வேண்டும்?’ என்று அவள் தலையைத் தன் மடியில் எடுத்து வைத்துக் கொண்டு அணைத்துப் பிடித்துக் கொண்டாள்.

‘நீ என்னைக் கருவில் சுமந்தபோது எப்படியம்மா இருந்தாய்?’ என்றாள்.

‘திரைப்படத்துறையை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு ஓராண்டுகாலம் ஒரு புனிதமான சூழலில் போயிருந்தேன்’.

‘ஏன் அப்படியிருந்தாய்?’

‘என் குழந்தை தூய தெய்வீகச் சூழலில் உருவாகி வளர வேண்டும். என் வாழ்வின் மாசுகள் என் குழந்தை மீது வீசக்கூடாது என்று ஆசைப்பட்டேன். அதனால்தான், இந்தத் தொழில் இது தொடர்பான மனிதர்கள், பேச்சுகள் யாவற்றையும் தவிர்த்துப் புராணப் படங்களில் முனிவர்களின் பர்ணகசாலையில் பாதுகாக்கப் படும் கர்ப்பிணிப்பெண் போல் ஒரு தூய சூழ்நிலையில் இருக்க ஆசைப்பட்டேன். கருவில் திருவைச் சுமக்க ஆசைப்படும் பெண் பேறுகாலத்தில் தூய சிந்தனை, தூய செயல் என்றிருந்தால் பிறக்கப்போகும் குழந்தைக்கு நல்லது என்று அறிந்து அப்படிச் செய்தேன்’ என்றாள் சுமதி.

‘எப்படியாவது என்னைப் பெற்றெடுக்க ஏனம்மா ஆசைப்பட்டாய்?’ என்றாள் ஆர்த்தி.

‘என்ன செய்வது ஆர்த்தி? மணமான பெண் ஒரு குழந்தைக்கு ஏங்குவது இயல்புதானே. தனக்கென தன் ரத்தம், தன் மூச்சு என ஒரு குழந்தைக்கு ஆசைப்படும் சமூதாயத்தில்தானே நான் உருவானேன். ஆனாலும் முதலில் கருவைக் கலைத்து விடத்தான் எண்ணினேன். குழந்தை வேண்டும் என்ற தணியாத ஆவல் ஒருபுறம். நாள்தோறும் தொழிலில் சந்திக்கும் அவலங்களால் ஏற்படும் பாதிப்புகளை எண்ணி குழந்தை எப்படியிருக்குமோ என்ற தடுமாற்றம் ஒருபுறம். முடிவாக கருவைக் கலைப்பது என்று தீர்மானித்து, என் நெருங்கிய சிநேகிதி டாக்டர் தேவிக்குப் போன் செய்தேன். அப்போது டாக்டர் தேவி, தனக்குத் தெரிந்த ஒரு தெய்வீகமானவர் அங்கு வந்திருப்பதாகவும், அவருடன் மனம் விட்டுப் பேசினால் தெளிவு ஏற்படும், பிறகு முடிவு செய்யலாம், அவசரப்பட்டுக் கருக்கலைப்புச் செய்ய வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொண்டார். அத்துடன் அந்தத் தெய்வீகமானவரைச் சந்திக்கவும் ஏற்பாடு செய்தாள்’.

‘ஏதோவொரு முதிய பெண்மணியைச் சந்திக்கப் போகிறோம். காவியுடுத்தி கமண்டலம் ஏந்தி, ஜபம் செய்து கொண்டிருப்பார். கமண்டல நீரை என் தலைமீது தெளித்து என் துன்பங்களைப் போக்குவார். மந்திரம் ஜபித்து என் மனத்தைப் படம் பிடிப்பார் என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டு போனேன்’.

‘ஆனால் ஓரிளம் பெண்ணாக இருந்தார் அந்தத் தெய்வீகர். கண்ணில் கருணையுடன், எதிரே நிற்பவரின் தீமையை எரித்துவிடும் ஒளியும் சுடர்விட்டது. தோற்றத்தில் எளிமை இருந்தாலும் தெய்வீக அழகிருந்தது. போலிச் சொற்கள் ஏதுமின்றி இதயம் ஒன்றி இருகரம் குவித்தேன். பதிலுக்கு வணக்கம் தெரிவித்தார்’.

‘என்ன பிரச்சனை என்று கேட்டாள்?’

‘என் தொழில், தவிர்க்க முடியாத சில அவலங்களால் என் மனம் கலங்கியிருப்பதையும் அதனால் கருவைச் சுமக்கத் தைரிய- மில்லாததையும் கூறினேன்’.

‘என்ன தொழில் செய்கிறேன் என்று கேட்டார். அப்போதுதான் நான் பிரபல திரையுலகத் தாரகை என்பதை அவர் அறிந்திருக்கவில்லை என்பதைத் தெரிந்து கொண்டேன்’.

‘நீங்கள் திரைப்படம் பார்த்ததில்லையா?’ என்று கேட்டேன்.

‘என் வாழ்வில் பொழுது போக்குகளுக்கு இடமில்லை’ என்றாள் புன்னகை மாறாமல்.

‘அந்தத் தகுதியே எனக்கு அவளிடம் மனம் விட்டுப் பேசப் போதுமானதாயிருந்தது. என் துன்பங்களைச் சொன்னேன். நல்ல உள்ளத்தோடு பரசுராம் என்னை மணந்ததைச் சொன்னேன். மண வாழ்வின் பரிசாக உன்னை உண்டானதைச் சொன்னேன். ஆனால் மனதில் அமைதியில்லாத போராட்டத்தைச் சொல்லி இச்சூழலில் உருவான குழந்தை எப்படியிருக்குமோ என்ற என் அச்சத்தைக் கூறிக் கருவைக் கலைக்கத் துணிந்ததைச் சொன்னேன்’.

‘இக்கரு நல்ல முறையில் வளர்ந்து ஆரோக்யமான உள்ளமும், உடலும் கொண்ட குழந்தை பிறந்தால் உனக்கு அதில் மறுப்பில்லையே’ என்றாள்.

‘மறுப்பில்லை, எனக்குக் குழந்தை வேண்டும். ஆரோக்யமான மனமும், உடலும் கொண்ட நல்ல குழந்தை வேண்டும் என்று ஆவேசமாய் அழுதேன்’.

உடனே அவள், ‘குழந்தைக்கு முக்கியத்துவம் தருவதானால் உன் தொழிலைத் தற்காலிகமாகவாவது ஒதுக்கிவிட்டு என்னுடன் கிளம்பு. தூய சூழலில் திடமான குழந்தையைப் பெற்றெடுப்பாய்’ என உறுதியாகச் சொன்னாள்.

‘அவள் கூறியபடி எல்லாவற்றையும் விட்டு விலகி உனக்காக அவளுடன் சென்று ஒரு தவவாழ்வு வாழ்ந்தேன். கடந்த காலத்தைத் துடைத்தெறிந்துவிட்டு, புத்தம்புது ஜீவனாய் என்னுள் கருக்கொண்ட உன்னைப்பற்றிய உயரிய சிந்தனையுடனேயிருந்தேன். வளையல்காப்பு, சீமந்தம், என்ற எவ்வித சடங்கு சம்பிரதாயங்கள் இன்றி ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு புதிய அனுபவங்களுடன் சந்தோஷமாயிருந்தேன். அடிவயிற்றில் உன் பிஞ்சுக் கால்கள் உதைப்பதை அனுபவித்தேன். வேறு சிந்தனையே இல்லை. கருவுற்ற பெண்ணுக்கு ஏற்படும் தலைசுற்றல், வாந்தி, கால்வலி, இடுப்புவலி, என்று எது வந்தாலும் அங்கு மருந்து மாத்திரை எதுவும் இல்லை. எல்லாவற்றிற்கும் ஒரே மருந்து ஒரு புத்தகம். அதை வைத்துப் படிப்பாள். உண்மையிலேயே அதைப் படித்தால் எந்த நோயும் விலகுவதை நான் அனுபவித்தேன். அது என்ன புத்தகம் என்றால் அது ஒரு மகானின் மந்திரமொழி என்று மட்டும் சொல்வாள். அதை ஒரு பூஜைப் பொருள் போல் பாதுகாப்பாள். அதனால் அதை நான் எடுத்துப் பார்த்ததில்லை’.

‘அவள் இருந்த வீட்டை அளவு கடந்த தெய்வ சாந்நித்யத்தால் நிரப்பியிருந்தாள். எனக்கு அங்கிருந்தவரை கவலை, பயம் எதுவும் ஏற்பட்டதில்லை. அமைதி, மகிழ்ச்சி, உன் வரவின் எதிர்பார்ப்பு இவற்றுடன் நிம்மதியாய் இருந்தேன். நீ பிறந்து ஒரு மாதம்வரை அங்கு தானிருந்தேன். அந்தப் பெண் உன்னைத் தூக்கிக் கொஞ்சு வாள். உன் சிரிப்பில், அழுகையில் தெய்வத்தைப் பார்க்கிறேன் என்பாள். நான் புறப்பட்டதும் அவள் அந்தப் பிரிவிற்கு வருந்த வில்லை. சாந்தமாக நம்மை அனுப்பி வைத்தாள்’.

‘இங்கு வந்தவுடன், என் தொழில் காற்றுக்கூட உன்மீது படாமல் வளர்க்க ஆசைப்பட்டுத்தான் சுபாவிடம் உன்னைக் கொடுத்தேன். மற்றபடி உனக்கு நான் எவ்விதக் கெடுதலும் செய்யவில்லை. அடுத்தடுத்து படப்பிடிப்பு. மனமும், உடலும் அலுத்துப் போய் வருவேன். நீ குழந்தை. நான் உன்னைப் புறக்கணித்து என் பெருமையில் கண்ணாயிருந்ததாய் நினைத்து என்னை வெறுத்தாய். விரைவில் இந்தத் தொழிலை விட்டுவிட்டு என் மகளுடன் வாழத்தான் ஆசைப்பட்டேன். ஆனால் விதி வேறு விதமாய் அமைந்துவிட்டது. நீ என்னைக் கண்டாலே வெறுத்து ஒதுக்கினாய்’ என்று கூறும் போதே அவள் கண்ணீர் ஆர்த்தியின் கையில் விழுந்தது.

‘அம்மா! உண்மையில் நீ என்னைப் பெரியம்மாவிடம் கொடுத்து வளர்த்ததில் எனக்கு வருத்தமில்லை. பள்ளிக்கூடத்தில் மற்றவர்கள் உன்னைப் பற்றி நீ நடிக்கும் விதத்தைப் பற்றி அசிங்கம் அசிங்கமாய் பேசினார்கள். அது விஷவித்தாய் என் மனதில் விழுந்து உன்மீது வெறுப்பாய் வளர்ந்து விட்டது. அவர்கள் பேச்சைக் கேட்டு வேதனைப்பட்டேனே தவிர உன்னிலையை ஒரு நாளும் பொருட்படுத்தவில்லை. அம்மா! நீ உண்மையிலேயே என்னை நேசிக்கிறாயா?’ என்றாள் ஆர்த்தி.

‘ஆர்த்தி! இதென்னடா கேள்வி? உன்னை வெளியூர் அனுப்புமுன் உன்னை இனி மறந்துவிட வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால் இன்று உன் அன்பின் ஒருதுளி என்னை இழுக்கிறது. என் மகளை இழக்க எனக்கு மனமில்லை’ என்று கதறினாள் சுமதி.

‘அப்படியானால் இன்றிலிருந்து நீ நடிப்புத் துறையை விட்டுவிடுவாயாம்மா?’ என்றாள்.

‘உனக்கு அதுதான் மகிழ்ச்சி என்றால் விட்டுவிடுகிறேன்’ ஆர்த்தி என்றாள்.

‘அம்மா! நான் கலையை நேசிப்பவள்தான். கலையென்ற பேரால் மனித சமூதாயத்தை அழிப்பது எனக்கு உடன்பாடில்லை. வளரும் பருவத்துக் குழந்தைகள் வக்கிரத்தில் விழுந்து மனம் அழுகினால் எதிர்காலம் எப்படியிருக்கும். வெளியே போனால் ஒரு சிலர் பேசும் பேச்சு தாங்கிக்கொள்ள முடியவில்லையம்மா. எதிர்கால பூகம்பம் போகிறது பார் என்று என்னை கேலி செய்யும் போது அவமானமாயிருக்கிறது அம்மா’, என்று உணர்வு பூர்வமாய்ப் பேசினாள் ஆர்த்தி.

ஒரு பதினைந்து வயதைக் கடக்கும் நிலையில் உள்ள பெண் சமூதாயத்தின் அழிவிற்குத் தன் தாய் காரணமாவதை எண்ணி வேதனைப்பட முடிகிறதென்றால் அவள் எவ்வளவு பொறுப்பு வாய்ந்த பெண். இவளைக் கருவில் சுமந்து ஆனந்தமாய் வசந்தியுடன் தங்கியிருந்தபோது வசந்தி ஓர் ஆன்மீகச் சான்றோரின் (ஸ்ரீ அன்னையின்) அருள்வாக்கு என்று கூறிய செய்தி நினைவுக்கு வருகிறது. அதாவது:-

“நாம் குழந்தையிடம் வளர்க்க வேண்டிய பண்பு ஒன்றுள்ளது. இளமையிலேயே அதை ஊட்டிவிட வேண்டும். அதாவது ஓர் அசெளகரிய உணர்ச்சி, ஒரு தார்மீக சஞ்சலம் அதன் உள்ளத்தில் ஏற்படுமாறு செய்ய வேண்டும். ஒரு வகையில் இதை ஒரு குற்றவுணர்ச்சி என்றே சொல்லலாம். நமது கண்டனத்திற்கோ, அல்லது தண்டனைக்கோ அஞ்சி ஏற்படுவதாக அது இருக்கக் கூடாது. இயல்பாகவே தோன்ற வேண்டிய ஓருணர்ச்சி அது. தனது தோழன் ஒருவனைக் காரணமின்றி அடித்துவிட்டால் பின்னர் அவனுக்குக் கழிவிரக்கம் ஏற்பட வேண்டும். தவறுகள் செய்தால், உண்மைக்குப் புறம்பாக எதைச் செய்தாலும் ஓர் உறுத்தல் ஏற்பட வேண்டும். யாரும் சுட்டிக் காட்டாமலேயே அவனாகவே உணர வேண்டும்.”

இந்த அருளுரையின் அடிப்படையிலேதான் ஆர்த்திக்குத் தார்மீக சஞ்சலம் ஏற்பட்டிருப்பதை சுமதியால் உணர முடிந்தது.

‘கண்ணே! இவ்வளவு பொறுப்புணர்வுள்ள உன்னைப் பெற்றதற்குக் கடவுளுக்கு நன்றி சொல்கிறேனம்மா!’ என்றாள் சுமதி.

சுவாமி பிரசாதத்துடன் உள்ளே வந்த சுபா தாயும் மகளும் இணைந்திருக்கும் இந்த அற்புதக் காட்சியைக் கண்டு ஆனந்தக்கண்ணீர் வடித்தாள்.

‘நாளையே என் திரையுலக விலகலை அறிவித்து விடுகிறேன் ஆர்த்தி. தார்மீக சிந்தனையுள்ள என் மகளுக்காக விலகுகிறேன் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு வெட்கமில்லை பெருமைதான்’ என்கிறாள் சுமதி.

மனதின் சுமை இறங்கியது. இலேசான உணர்வு எழுந்தது ஆர்த்திக்கு. மெல்ல எழுந்து விட்டாள்.

‘எழுந்திருக்க வேண்டாம் ஆர்த்தி. உன் உடம்பு குணமாகட்டும்’ என்று அவளைப் பிடித்துக் கொண்டாள் சுமதி.

‘இனி எனக்கு ஒன்றுமில்லையம்மா. அகத்தின் ஆழத்தில் நிகழும் இனிய இசைபாட்டின் (சுமுகத்தின்) விளக்கமே புறத்தில் நிகழும் ஆரோக்யம் என்று வசந்திம்மா சொன்னாங்க’ என்று சோர்வைப் புறக்கணித்து உற்சாகமானாள் ஆர்த்தி.

‘பெரியம்மா! உன் பிரார்த்தனை பலித்து விட்டது போதுமா?’ என்றாள் அம்மாவை அணைத்துக் கொண்டு.

‘கண்படப்போகிறது. என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கிறது’ என்று இருவரையும் தொட்டு திருஷ்டி கழித்தாள் சுபா.

‘பெரியம்மா! போனை எடுத்து வாருங்கள்’ என்றாள்.

போனைக் கொண்டுவந்து பக்கத்து டேபிள்மீது வைத்தாள்.

மெல்ல அம்மாவின்மீது சாய்ந்து கொண்டு டயல் செய்கிறாள்.

‘ஹலோ! அம்மாவா! நான் ஆர்த்தி பேசுகிறேன்’, என்கிறாள் உற்சாகத்துடன்.

எதிர்ப்பக்கத்தில் (மறுமுனையில்) பேசுபவர் என்ன செய்தி என்று கேட்டிருப்பாள் போலும்.

‘நீங்கள் கூறியது உண்மைதான் அம்மா. என்னைப் பெற்றவள், என்னால் வெறுக்கப்பட்டவள் மிகவும் நல்லவள் என்பதை உணர்ந்து விட்டேன். இந்த நல்ல வீணை இனி நலங்கெடாது.

அம்மாவுடன் நேரில் வருகிறேன் வசந்திம்மா’ என்றாள்.

வசந்தி ஆர்த்தியின் மனத்தெளிவைக் கேட்டு புன்னகைத்தாள்.

‘போனில் யாரிடம் பேசினாய்?’ என்றாள் சுமதி.

‘என் அம்மாவை எனக்குக் காட்டிய தெய்வத்தாயிடம் பேசினேன். அவர்களை நேரில் பார்த்து நன்றி சொல்ல வேண்டுமம்மா’ என்றாள் ஆர்த்தி.

‘ஆமாம் ஆர்த்தி! நானும் அதைத்தான் நினைத்தேன். அந்தத் தெய்வத்தாயை நான் சந்தித்திராவிட்டால் உன்னை ஈன்றெடுத்திருப்பேனா? நீ கருவிலேயே கலைந்திருப்பாய்’.

‘என்னம்மா சொல்கிறாய்?’ என்றாள் ஆர்த்தி.

‘ஆமாம் ஆர்த்தி. கருவைக் கலைக்க எண்ணியபோது டாக்டர் தேவி எனக்கு இந்த வசந்தியைத்தான் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தாள். அவள் என்னிடம் ஒரு தெய்வீகரின் அருளுரைகளை அடிக்கடி சொல்வாள். அப்படிச் சொன்ன ஓர் அருளுரையின்படிதான் அவளுடன் அந்தச் சூழலில் தங்கினேன்’ என்றாள் சுமதி.

‘என்ன அருளுரையம்மா அது?’ என்றாள் ஆர்த்தி.

‘கல்வி என்பது மனிதனுக்கு அவன் பிறந்தவுடனே ஆரம்பித்து வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும்’.

‘கல்வியினுடைய முழுப்பயனையும் பெற வேண்டுமானால் பிறப்பதற்கு முன்பிருந்தே அது தொடங்கிவிட வேண்டும். அப்படியெனில் அக்கல்வியின் பொறுப்பு குழந்தையைத் தாங்கும் தாயாரையே சாரும். அவருடைய பணி இரண்டு வகையாக உள்ளது. ஒன்று அவள் (தாய்) தன்னைத்தானே பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். தன் சுய முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும். இரண்டாவதாக தான் உருவாக்கும் சிசுவின்மேல் கவனம் வேண்டும். தனது ஆர்வம், விருப்பங்கள் தானிருக்கும் சூழ்நிலை ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். தனது எண்ணங்கள் தூய்மையாக, உன்னதமாக இருக்கும்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும். தனது உணர்ச்சிகள் மென்மையாக, மேன்மையாக இருக்கும்படி கவனமாக இருக்க வேண்டும். தனது சூழலில் எப்போதும் அன்பும், இசைவும் (சுமுகமும்) இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டும். சூழலில் அன்பும், எளிமையும், அழகும் மிளிர வேண்டும். ஒரு தாய் அளிக்கக்கூடிய உயர்ந்த கல்வி இதுதான். இது தவிர அவளுக்கு உன்னத இலட்சியங்கள் இருக்கக் கூடுமாயின், அந்த இலட்சியங்களுக்கேற்பத் தனது மகன் உருவாக வேண்டும் என்ற சங்கல்பம் அவளுக்கு இருக்குமாயின், அந்த மகன் உன்னதச் சிறப்பு களுடன் இவ்வுலகிற்கு வருவான் என்பதில் ஐயமில்லை’ என்பதுதான் அந்த அருளுரை. ‘அதன்படிதான் உன்னைக் கருவில் தாங்கிய நாட்களில் உன்னதமான சூழலில், உன்னதமான உணர்வுகளுடனிருந்தேன். அதன் விளைவாகத்தான் உன்னத மகளாய் உன்னைப் பெற்றேன்’ என்றாள் சுமதி.

அந்த வீட்டின் ஒவ்வொரு இடமும் தனக்குப் பரவசமூட்டியதன் காரணம் புரிந்தது ஆர்த்திக்கு. வசந்திம்மாவைப் பார்த்தவுடன் தனக்கு ஏற்பட்ட அன்புக்கு விடை தெரிந்தது. நல்லதோர் வீணை நலங்கெடக் கூடாது என்ற வசந்திம்மாவின் உணர்வு தனக்குள்ளிருப்பது தெரிந்தது. ‘வசந்திம்மா உங்களைப் பார்க்க வேண்டும். நானும் உங்களைப் போல் எனக்குள் உறையும் தெய்வீகத்துடன் தொடர்பு கொண்டு தெய்வீகச் சூழலை உருவாக்கும் வித்தையைக் கற்க வேண்டும்’ என்று தனக்குத்தானே பேசிக் கொண்டாள் ஆர்த்தி.

முற்றும்

********



book | by Dr. Radut