Skip to Content

09. பெண்ணின் பெருமை

பெண்ணின் பெருமை

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

நாடு சமூகத்தால் முன்னேறுகிறது. சமூகம் அமைதியால் வாழ்கிறது, செயல்படுகிறது. அமைதி வளர்ந்து நல்ல சமூகப் பண்புகள் உற்பத்தியாகின்றன. அவற்றைக் குடும்பங்கள் காத்து வளர்க்கின்றன. குடும்பத்தில் அவற்றைப் பேணுவது பெண்மையின் தாய்மை. குடும்பத் தலைவனான ஆண் பொருள் ஈட்டி, காத்து, தலைமை தாங்குகிறான். அவன் செயலைச் சிறப்படையச் செய்வது அவள். அவளுடைய உயர்வும், உள்ளத் திண்மையையும் அறிந்த பொழுது அவளை அவனே தலைவியாக ஏற்க முடிவு செய்கிறான். ஆன்மீக வளர்ச்சியுடைய ஆண் அவள் ஆத்மாவின் திண்மையை அறிகிறான். அதன் உயர்வு தெய்வீக உயர்வென உணர்ந்து தானே அவளுக்குச் சரணமடைய முடிவு செய்கிறான். தத்துவரீதியாக ஈஸ்வரன் சக்திக்குச் சரணடைந்து, வாழ்வை அற்புதமாக மாற்றுகிறான் எனக் கூறப்படுகிறது.

  • ஆன்மீகத்தை நாடுகிறவர்கள் அமரத்துவமுடையவர்கள்.
  • அதற்கடுத்தாற்போல் ஆன்மீகப் பண்பை வாழ்வில் பயில விரும்புவோர் ஆதர்ச புருஷர்களாவோர்.

அவர்கள் வாழ்வில் சமூகத்தின் முன்னோடிகள். இலட்சியத்தை வாழ்வாக வாழ்ந்தவர். அது போன்ற குடும்பங்கள் ஏற்பட்டால் ஆன்றவிந்த சான்றோர் வாழும் ஊர் நம்மூராகும். பிணக்கொழிந்த வாழ்வு, அமைதி பொலியும் வகை வளம் நிறைந்து செழிக்கும். இந்திய ஆன்மீகம், குறிப்பாக ஸ்ரீ அரவிந்தம் அத்தகைய குடும்பங்களை உற்பத்தி செய்யவல்லது. அந்த வாய்ப்பு மற்ற கலாச்சாரங்கட்கும், நாடுகட்கும் இல்லை. மேலைநாடுகளில் வசதி பெருகியுள்ளது. வசதி பண்பாகாது, மன வளமாகாது, மன வளத்தைக் கடந்த ஆன்மீக உயர்வாகாது. இந்திய மண் அப்பெருமையுடையது.

பிரிட்டன் உலகை ஆண்டது. அதற்கு அதன் வியாபாரம் காரணம், கடற்படையும் ஒரு காரணம். ஒரு நாடு உயர அல்லது தாழ எல்லாத் துறைகளிலிருந்தும் காரணம் உண்டு. பிரிட்டிஷார் உயர்ந்த நாணயமுடையவர். அது அவர் வெற்றிக்கு முக்கிய காரணம். அவர்கள் சிந்தனையில் சிறந்தவர்கள். நியூட்டனை உலகுக்கு அளித்தவர். அதுவும் ஒரு முக்கிய காரணம். சமூக ரீதியாக அவர்கள் பெண்களுக்கு அதிக மரியாதை செலுத்துவார்கள். பல பேர் உள்ள இடத்திற்கு ஒரு பெண் வந்தால் அத்தனை ஆண்களும் எழுந்து நின்று வரவேற்பார்கள். "என்னை மணக்க சம்மதிப்பாயா?" எனக் கேட்கும் ஆடவன் அவள் முன் மண்டியிட்டு, "என்னை மணந்து கௌரவிப்பாயா?" எனக் கேட்பான். பெண்கள் தவறு செய்வதை சுட்டிக்காட்டுவது, கேள்வி கேட்பது அநாகரீகம் என்பது அவர்கள் கொள்கை. நம் நாட்டில் நாம் பெரியவர்களை, அதிகாரிகளை, பதவியில் உள்ளவரை, குருமார்களை மரியாதையாக நடத்துவது போல் ஆங்கிலேயர்கள் பெண்களை மரியாதையாக நடத்துவார்கள். ஒரு நாடு பெண்ணுக்குத் தரும் மரியாதை அந்த நாட்டின் பண்பு நிலையை எடுத்துக்காட்டும். இவ்வகையில் இங்கிலாந்து சிறந்து விளங்கியது, அது உலகை ஆள ஒரு முக்கியக் காரணமாயிற்று என்பது என் கருத்து.

பெண்மையின் இரகசியம் என்ன? பெண்மைக்கு முக்கியத்துவம் எப்படி வருகிறது? ஏன் பெண்ணை நாம் அப்படி போற்ற வேண்டும்? என்ற கருத்துகளை நடைமுறையிலும், தத்துவரீதியாகவும், சூட்சுமமாகவும், சமூகத்தில் அவள் வகிக்கும் அங்கத்தின் மூலமும், பண்பிற்குரிய பாணியிலும் விவரமாக எழுதலாம். அது நீண்டு விரியும் கருத்து. அவற்றை முழுவதும் கூற ஒரு நூல் எழுத வேண்டும்.

  • அவள் பிறவி புனிதமானது.
  • தாய்மை அவளுக்களிக்கும் நிலை தனிச் சிறப்புடையது.
  • மனிதன் இனிமையை உணர, இன்பம் துய்க்க ஏற்பட்டவள் பெண்.
  • திருமணம் முக்கிய ஸ்தாபனம், அதன் முக்கிய அம்சம் பெண்.
  • கல்வி நாட்டின் நிலையை நிர்ணயிக்கும். அதைப் பெற்றுத் தருபவள் பெண்.
  • வருமானத்திற்குக் கல்வி போல், வாழ்வில் ஆழ்ந்த சிறப்புக்குரியதுப் பண்பு. அதை நாடு நல்ல வகையில் முழுவதும் பெற உதவுபவள் பெண்.
  • அவள் வாழ்வின் பகுதி, better half பெரும் பகுதி.
  • உலகம் திருமணத்தை மறக்கலாம், குடும்பத்தை அழிக்கலாம், தாய்மை நிலைக்கும்.
  • பெருமுயற்சி செய்து சிறுபலன் பெற வேண்டிய இடத்தில் சிறு முயற்சியால் பெரும்பலன் பெற்றுத் தருவது பெண்மை, தாய்மை, தூய்மை.

தொடரும்.....

*******

 

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
உலக அனுபவத்தை உள்ளே பெற முடியும்.
 

*******



book | by Dr. Radut