Skip to Content

07. அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்

அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

12. ஆதாரச் சுருதி

கேப்பர் மலையில் முந்திரித் தோப்புகள் ஏராளம். நான் அங்கே ஒரு தோப்பை விலைக்கு வாங்க முடிவு செய்தேன். அதைத் தொடர்ந்து முந்திரிப் பயிரைப் பற்றிய விவரங்களைச் சேகரிப்பதில் என் கவனம் தீவிரமாகத் திரும்பிற்று. என் நேரத்தில் பெரும்பகுதி அதிலேயே செலவாயிற்று. அதன் மூலம் எனக்கு அது பற்றிய புதிய புதிய செய்திகளும், புதிய புதிய எச்சரிக்கைகளும் கிடைத்துக்கொண்டே இருந்தன. எச்சரிக்கைகளில் ஒன்று: "தோப்பை வாங்கினால் மட்டும் போதாது. அதை நிர்வகிக்க நம்பிக்கையும், நாணயமும் மிகுந்த நபர் தேவை. இல்லாவிடில் மகசூல் முழுமையாக நம் கைக்குக் கிடைக்காது".

என்னுடைய முழு நேரத்தையும் தோப்பிலேயே செலவிட முடியாது. ஆகவே நம்பிக்கையும், நாணயமும் நிறைந்த அனுபவசாலி ஒருவர் தேவை. இதில் ஏனோதானோ என்று இருந்துவிட்டால், பிறகு பாலுக்குப் பூனையைக் காவல் வைத்த கதையாகிவிடும்.

நான் வாங்க நினைத்திருந்த தோப்பை ஒரு காடு என்றே கூற வேண்டும். அரசாங்க ஆவணங்களில் "அந்தத் தோப்பு ஒரு காடு" என்றே குறிப்பிடப்பட்டு உள்ளது. இன்றுகூட அந்தத் தோப்பில் நரி முதலான சிறு சிறு காட்டுப் பிராணிகள் அதிகமாக நடமாடிக்கொண்டிருக்கின்றன.

"காடு" என்று அழைப்பதே அதற்கு முற்றும் பொருந்தும். புதர்கள், கற்றாழைகள் என்று அங்கே இடைவெளியின்றி மண்டிக்கிடக்கும். வறட்சியை வரமாக வாங்கி வந்த மண். குடிக்க நீர் வேண்டும் என்றால் கையோடு கொண்டு போனால்தான் உண்டு. மிருகங்களால் மட்டுமல்லாது, மனிதர்களாலேயே உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிகழ்ச்சிகள் அந்தப் பக்கம் அதிகமாகவே நடந்து இருக்கின்றன.

"முந்திரித் தோப்பை விலைக்கு வாங்குவது ஆபத்தையே விலைக்கு வாங்குவது போன்றது. வேண்டாம், அந்த முயற்சியைக் கைவிட்டுவிடுங்கள்'' என்று என் நண்பர்கள் என்னை அதிகமாகப் பயமுறுத்தினார்கள்.

ஆபத்தை எண்ணிப் பயப்படுபவன் தெருவில் இறங்கி நடக்கக்கூட முடியாது. எங்கேதான் ஆபத்து இல்லை? ஆபத்தின் அருகேதான் சாதனைப் பூக்கள் பூக்கின்றன. "நெருப்பு' என்பது ஆபத்து. அந்த ஆபத்தான நெருப்பைக் கொண்டே சமையல் செய்கிறோமே, அது சாதனை. எனக்கு அஞ்சிப் பழக்கம் இல்லை. ஆனால் ஒரு செயலை வடிவமைப்பதற்கு முன், நான் அதைப் பற்றி அதிகமாகச் சிந்திப்பது பழக்கம்.

நான் அந்த முந்திரித் தோப்பைத் தேர்ந்தெடுத்ததற்கு ஒரு காரணம் உண்டு. "நவீன முறையில் செயல்படும் விவசாயப் பண்ணை ஒன்றை முன்மாதிரியாக உருவாக்க வேண்டும்" என்று நான் நினைத்தேன். அதற்கு மிக அதிகப் பரப்பளவுள்ள நிலம் தேவைப்பட்டது. அந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவில் அந்த முந்திரித் தோப்பு பல நூறு ஏக்கர்கள் கொண்ட பரப்பு உடையதாக இருந்தது. ஆகவே எதிர்ப்புகளையும், எச்சரிக்கைகளையும் உதறிவிட்டு அந்த முந்திரித் தோப்பை விலைக்கு வாங்கினேன்.

தோப்பை வாங்கியாயிற்று. இனி அதைப் பாதுகாக்க வேண்டுமே! அதுவோ வேற்றூர். உள்ளூர்க்காரர்கள் வெளியூர்க்காரர்களைக் கண்டால் வெறுப்பார்கள். மேலும் சிறந்த பலன்களை அடையவிடாமல் பாதகங்கள் பலவற்றைச் செய்வார்கள்.   ஆகவே அவர்களில் ஒருவரையே தோட்டத்திற்கு நிர்வாகியாகப் போட்டால் உள்ளூர்க்காரர்களின் தொல்லை இல்லாமல் போகும். அது சரி, அந்த உள்ளூர்க்காரரால் நமக்குத் தொல்லை இல்லாமல் இருக்க வேண்டுமே! அவர் நம்பகமானவராகவும், நாணயமிக்கவராகவும் இருக்க வேண்டுமே!

அத்தகைய தகுதி படைத்த தரமானவர் யார்?

அந்தப் பகுதியில் தோட்டங்களுக்குப் பொறுப்பாக இருந்து கவனிப்பவர்களை "ஆராய்ச்சி' என்பார்கள். நான் வாங்கிய தோட்டத்தில் 20 ஆண்டுகளாக ஆராய்ச்சிக்காரராக இருந்தவருக்கே அந்தப் பொறுப்பைக் கொடுக்கலாம் என்று நினைத்தேன். "அவரை நாம் தேடிப் போவதைவிட அவரே நம்மை நாடி வந்தால் நலமாக இருக்கும்" என்று நினைத்தேன். என்ன நலம்? நாமே கொடுத்துப் பெறுபவருக்கு உழைப்பு இல்லை. உழைப்பு இல்லாமல் பெறுவது உரிய பாதுகாப்பைப் பெறுவதில்லை. கேட்டுப் பெறுபவர் அதைக் காப்பாற்றிக் கொள்வதில் கவனமாக இருப்பார்.

அந்த ஆராய்ச்சி என்னைத் தேடி வரமாட்டாரா?

வந்தேவிட்டார். பொறுப்பைக் கேட்டார்; கொடுத்தேன்.

என் திட்டத்தில் இருந்த நவீன விவசாயப் பண்ணையைப் பற்றி அவரிடம் கூறினேன். அவர் சிரித்தார். "அதெல்லாம் அங்கே சாத்தியப்படாதுங்க. முழிச்சுக்கிட்டிருக்கிறபோதே முழியைத் தோண்டிக்கிட்டுப் போயிடக்கூடிய திருட்டுப்பசங்க இருக்கிற இடமுங்க அது. நீங்க அந்தப் பண்ணைக்குத் தேவையான விவசாயக் கருவிகளை வாங்கிப் போட்டா, ராவோடு ராவா அதை எல்லாம் ராவிக்கிட்டுப் போயிடுவானுங்க'' என்று அவர் பங்குக்கும் ஓர் எச்சரிக்கையைக் கொடுத்தார்.

எங்கே திரும்பினாலும் இருட்டு. எந்தப் பகுதியிலும் ஒரு நம்பிக்கைகூட முளைக்கவில்லை. அதற்காக நான் சோர்ந்து போகவில்லை. காலம் காலமாகக் காடாகக் கிடந்த அந்தப் பெரிய நிலப்பரப்பில் இருந்த புதர்களைக் களைந்தேன். மேடும் பள்ளமுமாகக் கிடந்த பகுதிகளைத் திருத்திச் சமன் செய்தேன்; வரப்பு செய்தேன்; அணைகள் எடுத்தேன்; சத்துமிக்க உரங்களைப் பரப்பினேன். "அசுரப் பிரயத்தனம்' என்பார்களே, அப்படிப்பட்ட காரியம் அது. ஆயிரக்கணக்கில் செலவு செய்த தொகையைவிடப் பன்மடங்கு லாபத்தை அந்தத் தோப்பு கொடுக்கும் என்று எதிர்பார்த்தேன். பொதுவாக முந்திரித் தோப்புக்காரர்கள் என்னைப் போலச் செலவு செய்வதில்லை. முந்திரிக் கொட்டையைப் பொறுக்க மட்டுந்தான் செலவு செய்வார்கள். எவ்விதப் பிரயாசையும் இல்லாமலே ஓர் ஏக்கரில் ரூ.50 வரை வருமானம் கிடைத்த காலம் அது. மணிலாப் பயிரை எடுத்துக்கொண்டால், அப்பொழுதெல்லாம் அதிகபட்சமாக ஏக்கருக்கு ரூ.250 செலவு செய்வார்கள். நானோ முந்திரிக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.400 வரை செலவு செய்திருந்தேன்.

நான் செய்த செலவு வீண் போகவில்லை. நான் எதிர்பார்த்தபடியே படிப்படியாகப் பெருகிவந்தது. இப்படியாக இரண்டு ஆண்டுகள் சென்றன. அதே ஆசாமிதான் இன்று வரை ஆராய்ச்சிக்காரராக இருந்து வந்தார். செலவுக்கு வேண்டிய பணத்தை நான் அவரிடம் மொத்தமாகக் கொடுப்பேன். செய்ய வேண்டிய வேலைகளை அவரே செய்து, அதற்காகும் செலவுகளையும் அவரே கவனித்துக்கொள்வார். எல்லாமே திட்டமிட்டபடிச் சரியாக நடந்து வந்தன. நான் நாள்தோறும் காலை நேரங்களில் தோப்புக்குச் சென்று ஒரு பார்வை பார்த்துவிட்டு வருவேன்.

"நீங்கள் உங்கள் ஆராய்ச்சியை அவ்வளவு தூரம் நம்பிப் பணப் பொறுப்பை ஒப்படைப்பது சரியில்லை; கவனமாக இருங்கள்'' என்று பலர் என்னை எச்சரித்தார்கள்.

நான் அவர்களிடமிருந்து இங்கேதான் வேறுபடுகிறேன். ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைப்பதற்கு முன்னால் அவருடைய குணநலன்களை அலசி ஆராய்ந்து பார்ப்பது மிக அவசியம். அவ்வாறு ஒருவரை சலித்து எடுத்து ஒரு பொறுப்பில் அமர்த்திய பிறகு, அவரை சந்தேகிப்பதும், நாம் ஒரு போலீஸ்காரராக அவரைக் கண்காணிப்பதும் நல்லதில்லை. அவை அவரைப் பாதிப்பதைவிட, நாம் அவரிடம் கொடுத்திருக்கும் வேலைகளைத்தான் அதிகம் பாதிக்கும். திருவள்ளுவர் இதைப்பற்றி "வினை செயல் வகை" என்ற அதிகாரத்தில் தெளிவாகப் பேசி இருக்கிறார்.

என்னுடைய ஆராய்ச்சி அதுவரை நாணயமாகவே நடந்துகொண்டார். தோப்பின் வளர்ச்சியில் மிகவும் அக்கறை கொண்டு, ஆர்வமாக உழைத்தார். இரவு பகலாகத் தோட்டத்திலேயே பொழுதைக் கழித்தார்.

பிறகு என்ன வேண்டும்?

அதைப் பற்றி ஆரம்பத்தில் குறை கூறிய நண்பர்கள், இப்பொழுது இவ்வாறு சொன்னார்கள்: "உங்களுக்கு அதிர்ஷ்டவசமாக ஒரு நல்ல ஆராய்ச்சி கிடைத்திருக்கிறார். இல்லாவிட்டால் தோப்பை நிர்வகிப்பது உங்களுக்கு ஒரு பெருந்தொல்லையாகி இருக்கும்''.

அவ்வப்பொழுது ஏற்படும் உணர்வுகளை இப்படித்தான் பலர் பேச்சில் கொட்டிவிடுகிறார்கள். ஒருவரைப் பற்றி அவர்களால் இரு வேறு கருத்துகளை எப்படிச் சொல்ல முடிகிறது? அவசரம், அதனால் எழுகின்ற மதிப்பீடு. உணர்வுகளை அடக்கினால் பேச்சு அடங்கும். பேச்சு அடங்கினால் சக்தி பிறக்கும். சூனியத்தில்தான் சக்தியின் வெளிப்பாடு வெளிச்சமாகப் பரவுகிறது.

மூன்றாவது வருடம். மூன்றாவது மகசூலுக்குத் தோட்டம் தயாராகிக் கொண்டிருந்தது. முந்திரி மரங்கள் பூக்கத் தொடங்கின. இலைகளே தெரியாமல் மரமெல்லாம் பூக்கள்! அந்த அளவுக்குப் பூக்கள் பூக்கும் என்று நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. பக்கத்துத் தோட்டங்களில் உள்ள முந்திரி மரங்கள் இந்த அளவு பூக்கவில்லை.

"நீங்கள் இரண்டு வருடங்களில் எதிர்பார்த்த பெரும்பலன் உங்களுக்கு இந்த வருடமே கிடைத்துவிடும்'' என்றார்கள் சிலர்.

"நீங்கள் தோப்பு வாங்கியதிலிருந்து இதுவரை செலவிட்ட பெருந்தொகை உங்களுக்கு இந்த ஒரு மகசூலிலேயே கிடைத்துவிடும்'' என்றார்கள் பலர்.

மரங்களில் நிறைந்திருந்த பூக்களைப் பார்க்கும்பொழுது எனக்கும் அவர்களைப் போலவே நினைக்கத் தோன்றியது. திட்டமிட்ட காலத்திற்குள்ளேயே ஒரு நல்ல பலன் கிடைப்பதாக இருந்தால், என்னுடைய திட்டத்தில் இருந்த நவீன ஆராய்ச்சிப் பண்ணையின் வேலையை ஒரு வலுவான நிர்வாக அமைப்பின் கீழ் கொண்டு வர இருந்ததைச் சிறிது காலத்திற்கு ஒத்திப்போடுவது என்றும், முந்திரித் தோப்பின் வளர்ச்சிப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வது என்றும் முடிவு செய்தேன்.

அந்தக் கட்டத்தில் நான் என்னுடைய ஆராய்ச்சிக்காரரையே முழுதும் நம்பி இருந்தேன். மனித வளர்ச்சியின் பரிணாமத்தில் ஒரு கட்டத்தைத் தாண்டி இன்னொரு கட்டத்திற்குப் போகும்பொழுது நிச்சயம் ஒரு மாற்றம் ஏற்பட்டே தீரும். அதைப் போல என்னுடைய முந்திரித் தோட்டம் "செலவு" என்ற கட்டத்தைத் தாண்டி "வரவு' என்ற கட்டத்தை நோக்கி முன்னேறும்பொழுது ஒரு பிரச்சனை வழிமறிக்கலாம் என்று என் உள்ளுணர்வு எச்சரித்தது.

எனக்குப் பிரச்சினை என்று வந்தால், அது ஆராய்ச்சியின் மூலமாக மட்டுமே வர முடியும். அவர் அப்படிப்பட்டவர் அல்லரே! என்னுடைய தோட்டத்தைத் தம்முடைய தோட்டமாக எண்ணி, அதன் வளர்ச்சியில் தன் சக்தியை எல்லாம் செலவிடுபவர் ஆயிற்றே! மழையைக் கொடையாகக் கொடுக்கும் வானம்தான் இடியையும் இரக்கமின்றித் தருகிறது. அதைப்போல இதுவரை மழையாகப் பெய்த ஆராய்ச்சியைப் பார்த்த நான், இனி இடியாகவும் சந்திக்க நேரலாமோ?

புதிதான ஒன்றைச் சந்திக்கப் புதிரோடு காத்திருந்தேன்.

இரண்டு நாள்களுக்குப் பிறகு என் காரோட்டி ஒரு செய்தியைக் கொண்டு வந்தார். அது: "நம் ஆராய்ச்சி முன்பு போல் இல்லை. அவருக்கு ஆசை வந்துவிட்டது. ஐயா எதற்காக ஆயிரம் வேலைகளுக்கு மத்தியில் இந்தத் தோப்புக்கும் தினசரி வந்து போய்க்கொண்டிருக்க வேண்டும்? தோப்பை என்னிடம் குத்தகைக்கு விட்டுவிட்டு நிம்மதியாக அவரை வீட்டிலேயே இருக்கச் சொல். அறுவடை முடிந்ததும் குத்தகைப் பணத்தை மொத்தமாகக் கொடுத்து விடுகிறேன் என்று உங்களிடம் சொல்லச் சொன்னார்''.

என்னுடைய காரோட்டியும், ஆராய்ச்சிக்காரரும் நெருங்கிய நண்பர்கள். நிச்சயம் அவர் சொல்லி இருப்பார். நான் எதிர்பார்த்தபடியே ஆராய்ச்சிக்காரரிடம் இருந்து ஒரு பூதம் கிளம்பிவிட்டது. அதாவது ஆசைப்பூதம்! மழை பெய்த வானம் இப்பொழுது இடியாய் இடிக்கிறது!

என்னுடைய தோப்பைச் சுற்றிப் பத்து முத்திரித் தோப்புகள் இருந்தன. அவற்றை எல்லாம் குத்தகைக்குத்தான் விடுகிறார்கள். அதைத் தவிர தோப்புக்காரர்களுக்கு வேறு வழி இல்லை. ஒரு நிர்ப்பந்தத்தை உண்டாக்கி, மகசூலை முழுவதும் பெற முடியாத சூழ்நிலையில் அவர்கள் தள்ளப்படும்பொழுது, "கிடைத்த வரையிலாவது கிடைக்கட்டும்' என்ற முடிவுக்கு வந்து, தோப்பைக் குத்தகைக்கு விட்டுவிடுவார்கள். அதற்குப் பிறகு குத்தகைப் பணத்தைச் சரியாகக் கொடுப்பதில்லை. பாக்கியை வசூலிப்பதற்கும் வேறு வழி இருப்பது இல்லை. அதற்காகத் தோப்புக்காரர்கள் புதுக் குத்தகைக்காரர்களைத் தேடிப் போகவும் முடியாது. வழிமறித்துக்கொண்டு நந்தியாக நிற்கும் ஆராய்ச்சிக்காரர்களாகச் செயல்படும் குத்தகைக்காரர்களைத் தாண்டி அவர்களால் ஓர் அடிகூட எடுத்து வைக்க முடியாது.

நான்தான் இதுவரை அவர்களைப் போல இல்லாமல் தனித்து இருந்தேன். இப்பொழுது என்னையும் அவர்களுள் ஒருவனாக்க முயல்கிறாரா என்னுடைய ஆராய்ச்சிக்காரர்?

தோப்பைக் குத்தகைக்கு விட்டால், பிறகு தோப்பு நமக்கு இல்லை. நமக்கு அதில் உறவு இருக்கலாம். ஆனால் பாத்திய உரிமை வேறு யாருக்கோ போய்விடும். என்னுடைய தோப்பு மற்ற தோப்புகளைப் போன்று சிறியதன்று; மிகப்பெரியது. அந்த ஆண்டு மகசூல் ஐந்திலிருந்து பத்து மடங்கு வரை அதிகமாகக் கிடைக்கலாம். அதே சமயத்தில் பூக்களை மட்டுமே பார்த்துவிட்டு மகசூலின் அளவை நிர்ணயிப்பது இயலாத காரியம். அந்தக் காலக் கிராமங்களில் முந்திரியை முறையாகப் பயிர் செய்வதும் இல்லை; எப்படியோ முளைக்கும்; எப்படியோ பயிராகும். அதனால் "ஏதாவது பணத்தைக் குத்தகையாகக் கொடுக்க ஒப்புக்கொண்டால் போதும்' என்ற எண்ணம் நிலவிய காலம் அது.

சரி, ஏதோ ஒரு தொகையை நிர்ணயம் செய்து என்னுடைய ஆராய்ச்சிக்காரரிடம் தோப்பைக் குத்தகைக்கு விட்டுவிட்டால், பிறகு அங்கே என் திட்டத்தில் இருந்த நவீன விவசாயப் பண்ணையை நான் தொடங்கவே முடியாதபடி போய்விடலாம். அதற்காக நான் ஆராய்ச்சிக்காரரை வேலையை விட்டு நிறுத்தவும் முடியாது. நெளிவுசுளிவுகள் நிறைந்த அவர்கள், மகசூலை எல்லாம் வேறு வழிகளில் கொண்டு செல்வார்கள். அதற்குத் தகுந்த ஆள் பலம் அவர்களுக்கு உண்டு.

என்னுடைய ஆராய்ச்சிக்காரரைப் பற்றி நான் எடுத்த முடிவு தவறானதோ? என் நண்பர்கள் அவரைப் பற்றிக் கூறிய கருத்துத்தான் சரியானதோ? உளவியலும், உலகியலும் இப்படித்தான் முரண்பட்டு நிற்குமோ? "விண் விண்" என்று தெறிக்கும் வினாக்குறிகள்.

ஆராய்ச்சிக்கு எப்படியோ ஆசை தலைதூக்கிவிட்டது. அதை நான் எப்படியாவது சமாளித்தாக வேண்டும். ஆனால் எப்படி? அறிவுரை கூறியா? அது எடுபடாது. அவரை விலக்கி வைத்தா? அது எனக்குப் பாதகம். பிறகு பிரச்சனை தீர வழிதான் என்ன?

இது போன்ற சந்தர்ப்பங்களில் என் பிரச்சனைகளை அன்னையிடம் ஒப்படைத்து வேண்டிக்கொள்ளும் பழக்கம் எனக்கு அப்போதில்லை. இந்தப் பரிவர்த்தனை இல்லாமல் நானே பிரச்சனைகளைச் சுமந்துகொண்டு, அன்னையை நெஞ்சில் இருத்தி நெடுநேரம் தியானத்தில் ஆழ்ந்துவிடுவேன். பிறகு நெஞ்சை விட்டுப் பாரம் இறங்கிவிடும். பிரச்சனைகளும் தாமாகவே விலகிப் போகும். அது மட்டுமில்லை, ஆசிரமத்திற்கு வந்த ஆரம்பக் காலங்களில் எனக்குப் பிரச்சனைகளே இருந்ததும் இல்லை.

ஆராய்ச்சிக்காரர் ஒரு பிரச்சனையாக உருவெடுத்த அன்றிரவு, நான் அன்னையை என் மனத்தில் ஆவாகனம் செய்து தியானத்தில் ஆழ்ந்தேன். நீண்ட நேரத்திற்குப் பிறகு என் நிஷ்டை கலைந்தது. ஆனால் என்னைச் சுமையாக அழுத்திய ஆராய்ச்சி பிரச்சனை மட்டும் நீங்கவில்லை. இது எனக்கு வித்தியாசமான அனுபவம்.

மறுநாள் காலையில் ஸ்ரீ அரவிந்தருடைய சமாதிக்குச் சென்று தியானித்தேன். ஓரளவு நிம்மதி கிடைத்தது என்றாலும் பாரம் முழுவதும் நீங்கியபாடாக இல்லை. அன்று நான் ஆராய்ச்சியைச் சந்திப்பதற்கு முன்னால் ஏதேனும் ஒரு வழியைக் கண்டுபிடித்தாக வேண்டும். இனி இதை ஒத்திப்போட முடியாத நெருக்கடியான நிலை.

ஆரம்பக் காலங்களில் ஸ்ரீ அரவிந்தர் தங்கியிருந்து யோகம் செய்த அறைக்குச் சென்று தரிசிப்பதற்குப் பக்தர்களுக்கு ஓர் ஏற்பாடு இருந்தது. தினசரி தரிசனம் உண்டு. அதற்கு சிலருக்கு மட்டுமே அனுமதி கிடைக்கும். அனுமதிச் சீட்டுகளை அன்னை அவர்களே நேரிடையாக வழங்குவார்கள். அன்று நானும் அன்னை அவர்களிடம் அனுமதிச் சீட்டைப் பெற்று, ஸ்ரீ அரவிந்தரின் அறைக்குச் சென்று சிறிது நேரம் தியானம் செய்தேன். பிறகு நான் அந்த அறையை விட்டு வெளியே வந்தபொழுது, அங்கு நின்றுகொண்டிருந்த ஒரு பெரியவர் என்னிடம் வந்தார்.

அவரின் பெயர் சம்பக்லால். இருபத்தைந்து ஆண்டுக் காலம் ஸ்ரீ அரவிந்தருடன் தங்கியிருந்து பல விதங்களிலும் அவருக்கு நேரடியான சேவைகளைச் செய்தவர். அவர் என்னை ஆழ்ந்து நோக்கி, "வீட்டில் ஏதேனும் முக்கிய நிகழ்ச்சி அலைமோதுகிறதா? அது சம்பந்தமாகத்தானே நீ இங்கு தியானம் செய்ய வந்தாய்?'' என்று கேட்டார்.

"அது அவருக்கு எப்படித் தெரிந்தது?' என்ற வியப்பு என்னுள் எழுந்தபோதுதான், அந்தப் பிரச்சனையும் என் நினைவுக்கு வந்தது. அதுவரை நான் அந்தப் பிரச்சனையை மறந்துவிட்டிருந்தேன். ஸ்ரீ அரவிந்தரின் அறைக்குள் நுழையும் வரை அதைப் பற்றிய நினைவு இருந்தது. தியானத்தில் உட்கார்ந்ததும் அது மறந்தும், பறந்தும் போய்விட்டது. மகத்தைப் பெறப் போய் இகத்தை யார் பெறுவார்?

மறுநாள் மாலையில் ஒரு தீர்மானத்திற்கும் வர முடியாமல் தோப்புக்குச் சென்றேன். எப்பொழுதும் குழைந்த சிரிப்பும், கூழைக்கும்பிடுமாக என்னை வரவேற்கும் ஆராய்ச்சியின் முகம் அப்பொழுது இறுகிப்போயிருந்தது. என்ன கவலையோ அவருக்கு? இல்லை, ஏதேனும் திட்டமோ? அவற்றில் எது?

தெரிந்துகொள்ள விரும்பினேன். ஆனாலும் பக்கத்தில் நிறைய ஆட்கள் இருந்தமையால் எதுவும் பேசாமல் தோட்டத்தைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினேன். அவரும் என் பின்னால் வந்தார். ஆள் நடமாட்டம் இல்லாத ஓர் ஒதுக்குப்புறத்தில் போய்க்கொண்டு இருந்தபோது, "என்ன சேதி?'' என்று வழக்கம்போல் கேட்டேன். ஆனால் அவர்தான் வழக்கம் இல்லாமல், "நீங்கள்தான் சேதி சொல்லணும்'' என்றார்.

"சேதி'யைச் சொல்லிவிட வேண்டியதுதான்! சொல்லத் தொடங்கினேன். தோப்பை வாங்கியதிலிருந்து இதுவரையில் நிகழ்ந்த காரியங்களையும், செய்த செலவுகளையும் விவரமாகத் தெரிவித்தேன். பிறகு "ஆராய்ச்சி, உனக்குச் சில எதிர்பார்ப்புகள் இருந்தால், அதில் ஒன்றும் தவறில்லை. அறுவடை முடிந்து வருகின்ற மகசூலை வைத்து நாம் இருவரும் சுமுகமாகப் பேசி உனக்கு என்ன கொடுக்கலாம் என்பதை முடிவு செய்வோம்.....'' என்று நான் சொல்லிக்கொண்டு இருக்கும்பொழுதே அவர் இடைமறித்தார்.

"நீங்கள் இந்த மண்ணிலே தொடை அளவு உரத்தையும், முழங்கால் அளவு பணத்தையும் போட்டு நிரப்பி இருக்கீங்க. அந்தப் பணத்தை எல்லாம் நான் என் கையாலே செலவிட்டிருக்கேன். தோப்பிலே எவ்வளவு கிடைச்சாலும் அது உங்களுக்குத்தான் சேரணும். நியாயமானதைத் தவிர, உங்களிடம் நான் வேறு எதையும் கேட்கமாட்டேன். அதனாலே உங்களைவிட அதிகமாகக் கொடுக்கிறவங்க யாரும் இல்லை'' என்றார் அவர்.

எனக்கு ஒரே வியப்பு. அவர் நான் நினைத்ததையே பேசுகிறார்! அது மட்டுமன்று, தோப்பு குத்தகையைப் பற்றிய பேச்சையே எடுக்கவில்லை. அவரைப் பற்றிய என் நண்பர்களின் கருத்து கடைசி முறையாகவும் பொய்த்துப் போனதோடு, அவரைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னால் நான் செய்த ஆய்வு இறுதியாகவும் வென்றுவிட்டது!

நான் எதிர்பார்த்ததற்கும் அதிகமாகவே தம்மை உணர்ந்து, என்னையும் உணர்ந்து, கண்கலங்கி நின்ற அவரைப் பார்த்தபொழுது எனக்கு நெஞ்சம் நெகிழ்ந்தது. "நீ ஒரேயடியாக விட்டுக்கொடுப்பதை நான் அப்படியே ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. நீ மகசூல் செய்து காட்டும் ஒவ்வொரு மூட்டை முந்திரிப்பருப்புக்கும் இவ்வளவு கொடுத்துவிடுகிறேன்'' என்று, ஒரு தொகையைச் சொன்னேன்.

அதை நின்று கேட்கக்கூட அவர் தயாராக இல்லை. "பணம் அப்புறங்க, முதலிலே வேலையைச் செய்யணும். எனக்குத் தலைக்கு மேல் வேலை கிடக்குதுங்க. நான் வரேங்க'' என்று கூறிவிட்டு வேகமாக நடந்தார்.

ஒரு மாற்றம் ஏமாற்றமாக இல்லாமல் ஏற்றமாக அமைந்தது. அது அன்று அத்தனை வெற்றிகரமாக அமைந்திருக்காவிட்டால், பிறகு நான் அங்கு திட்டமிட்டபடி ஒரு நவீனமான விவசாயப் பண்ணையை உருவாக்கி இருக்க முடியாது.

"இன்னார்" என்று தெளிந்து, அன்னாரிடம் பணியை ஒப்படைப்பது சிறந்த வினை செயல் வகையாகும். ஐம்பது அடுக்கு மாளிகையேயானாலும் அதற்கு அஸ்திவாரம்தான் ஆதாரம். அதே போல நம் வினை செயல் திறனுக்கும், நாம் தேர்ந்து எடுக்கும் பணியாளர்களே ஆதாரம்.

அந்த ஆதாரச் சுருதி சரியாக அமைந்திராதுபோனால், கட்டாந் தரையாகக் கிடந்த என்னுடைய காட்டில், இன்று கழனிகள் நிறைந்த ஒரு மிகப்பெரிய விவசாயப் பண்ணையை நான் கண்ணால் பார்த்திருக்கவே முடியாது.

தொடரும்....

*******

 

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
மனம் ஆனந்தமயமானால் ஜடமிருப்பதில்லை.
 

*******book | by Dr. Radut