Skip to Content

12. நம்முடைய Higher Selfஐ மதித்து நடத்தல்

நம்முடைய Higher Selfஐ மதித்து நடத்தல்

N. அசோகன்

உலகத்தில் உள்ள எண்ணற்ற சாதாரண மக்களிடைய ஒரு உயர்ந்த ஆன்மீக அம்சம் கொண்ட Higher Selfஇருக்கின்ற மனிதர்களே மிகவும் குறைவு. இங்கும் அங்குமாக விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் இருப்பார்கள். பகவான் மற்றும் அன்னையைத் தேடி இப்போது ஏராளமானவர்கள் வந்து விட்டார்கள். இப்படிப்பட்ட அன்பர் வட்டாரத்தில் ஒரு organised Higher Selfஉள்ளவர்கள் வெளியுலகத்தில் இருப்பதைவிட எண்ணிக்கையில் அதிகமாக இருக்கலாம். வெளியுலகத்தில் இலட்சம் சாதாரண மனிதர்களிடையே ஏதோ நூறு பேர்களிடம் தான் Higher Self இருக்கும் என்றால் இலட்சம் அன்னை அன்பர்களை எடுத்துக் கொண்டால் அவர்களிடையே ஆயிரம் அல்லது இரண்டாயிரம் பேருக்காவது இப்படி ஒரு உயர்ந்த அம்சம் இருக்கும். சிலரிடம் இப்படி ஒரு உயர்ந்த அம்சம் இருக்கிறது என்றாலும் அதை அவர்களே உணர்ந்து தெரிந்து வைத்துக் கொண்டு பாராட்டிக் கொள்வார்கள் என்று சொல்ல முடியாது. அது இருப்பதே தெரியாமல் மற்றவர்களைப் போல தன்னையும் ஒரு சாதாரண பர்சனாலிட்டி உள்ளவராக நினைத்துக் கொள்ளலாம். உதாரணமாக சுவாமி விவேகானந்தருக்கு ஒரு உயர்ந்த ஆன்மீக அம்சம் இருந்தது அவருக்கே தெரியாது. அவர் ஒரு சாதாரண கல்லூரி மாணவனாகத் தன்னை பாவித்துக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருந்தார். பரமஹம்சர் அவர்களுக்குத்தான் இவரிடம் உயர்ந்த ஆன்மீக அம்சம் இருக்கிறது என்று புரிந்தது. அப்போதெல்லாம் சுவாமி விவேகானந்தருக்கு நரேன் என்று தான் பெயர். "நரேன்! உன்னிடம் ஒரு உயர்ந்த ஆன்மீக அம்சம் உள்ளது. அது வீணாகக் கூடாது. அதனால் தினமும் என்னை வந்து பார்'' என்று அறிவுறுத்துவாராம். அவர் சொல்வது ஒன்றும் புரியாமல் பரமஹம்சரை விவேகானந்தர் பார்க்காமல் தவிர்த்த நாட்களும் உண்டு. ஆகவே சுவாமி விவேகானந்தருடைய விழிப்புணர்வே இந்த நிலையில்தான் இருந்தது என்றால் மற்றவர்களுடைய விழிப்புணர்வைப் பற்றி நாம் சொல்லத் தேவையில்லை. இப்படிப்பட்ட சம்பவத்தை வைத்துப் பார்க்கும்போது இப்படிப்பட்ட உயர்ந்த அம்சம் ஒருவருக்கு இருக்கிறது என்று பொதுவாக எப்படித் தெரிய வரும் என்றால் அநேகமாக இப்படி ஒரு குரு அவருக்கு அமைந்து அவர் இவரிடம், "உன்னுடைய பர்சனாலிட்டிக்கு ஒரு உயர்ந்த அம்சம் இருக்கிறது. அதைப் பாராட்டிக் கொள், விட்டு விடாதே'' என்று சொல்லும்போது தான் அவருக்கே தனக்கு Higher Self இருப்பதாகத் தெரிய வரும். உதாரணமாக என் தகப்பனார் ஸ்ரீ கர்மயோகி அவர்கள் எண்ணற்ற அன்னை பக்தர்களைச் சந்தித்துள்ளார். அப்படி வந்தவர்களில் ஒரு சில பேரிடம் இப்படி ஒரு Higher Self இருப்பதை அவர் பார்த்திருக்கிறார். அவர்களிடமெல்லாம், "உங்களிடம் இப்படி ஒரு Higher Self இருக்கிறது. அதைப் பாராட்டிக் கொள்வது நல்லது'' என்று அவர் சுட்டிக்காட்டி இருக்கலாம். அப்படி சுட்டிக்காட்டப்பட்டவர்களில் யார் அவர் சொன்னதை நம்பினார்கள், யார் நம்பவில்லை, யார் அதை வளர்த்துக் கொண்டார்கள், யார் அதை வளர்த்துக் கொள்ளாமல் "சாதாரணமாக இருந்தாலே போதும், பெரிய ஆன்மீக வளர்ச்சி எல்லாம் தேவையில்லை'' என்று விட்டு விட்டார்கள் என்று நமக்குத் தகவல் தெரியாது. ஏதோ ஒரு சிலராவது அவர் சொன்னதை நம்பிப் பாராட்டிக் கொண்டிருப்பார்கள் என்று நாம் யூகம் செய்து கொள்ளலாம். ஆகவே சொந்தமாகவோ அல்லது இப்படி ஒரு குருநாதர் மூலமாகவோ Higher Self பற்றி இப்படி ஒரு விழிப்பு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எந்த வழியாகத் தனக்கு விழிப்புணர்வு வந்தாலும் தன்னிடம் Higher Self இருக்கிறது என்று புரிந்த மாத்திரத்தில் கோடி ரூபாய் பெறுமானமுள்ள ஒரு வைரக் கல்லை அதன் உரிமையாளர் எப்படிப் பத்திரமாக பாதுகாக்கிறாரோ, அப்படித் தன்னுடைய Higher Selfஐ பாதுகாத்துக் கொள்ள அந்த அன்னை அன்பர் முன்வர வேண்டும்.

தன்னுடைய Higher Selfஐ பாதுகாத்துக் கொள்வதோ மற்றும் அதனுடைய விதிமுறைகள் மற்றும் நியதிகளின்படி வாழ்வதோ அவசியம் என்று ஒரு அன்பர் உணரலாம், மற்றும் முன்வரலாம். அவரைச் சுற்றி இருப்பவர்கள் மற்றும் அவரோடு உறவாடுகின்றவர்கள் எல்லோரிடமும் இப்படி ஒரு Higher Self இருந்து அவர்களும் அதை மதித்து நடப்பவர்களாக இருந்தால் தன்னுடைய Higher Selfஐ பாதுகாத்துக் கொள்ள விரும்புகின்ற அன்பருக்கு அது சிரமமாக இராது, சுலபமாகவே இருக்கும். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் அப்படி அமைவதில்லை. பொதுவாக இப்படிப்பட்ட Higher Self உள்ளவர்களைச் சுற்றி இருப்பவர்கள் பெரும்பாலும் தம்முடைய lower selfஐ மையமாக வைத்து செயல்படுபவர்களாகத்தான் அமைகிறார்கள். இப்படி lower selfஐ மையமாக வைத்து செயல்படுகின்றவர்கள் சுயநலமிகளாகவும், குறுகிய மனப்பான்மை உள்ளவர்களாகவும், பேராசை பிடித்தவர்களாகவும், சின்னபுத்தி உள்ளவர்களாகவும், மட்டமானவர்களாவும், பொய் பேசுகின்றவர்களாகவும், அடுத்தவர்களை ஏய்ப்பவர்களாவும்தான் இருப்பார்கள். இவை போக இன்னும் வேண்டாத குணவிசேஷங்கள் பல இருக்கலாம். இப்படிப்பட்ட மனிதர்களோடு Higher Self உள்ளவர்கள் பழக வேண்டி இருந்தால் அவர்களை இப்படிப்பட்ட உறவு பல வகைகளில் பாதிக்கலாம். தன்னுடைய சந்தோஷத்தையும், உரிமைகளையும், உடைமைகளையும் பாதுகாத்துக் கொள்வதற்காக இப்படிக் கீழ் நிலையில் உள்ளவர்களோடு சண்டை போட வேண்டி வரலாம். இத்தகைய சண்டை நாளடைவில் வெறும் ஈகோ கிளாஷ் ஆக மாறலாம். நிலைமை மோசமாகி அடிக்கடி ஈகோ கிளாஷ் அடுத்தவர்களுடன் நிகழ்ந்தால் நாளடைவில் Higher Self உள்ளவர்களும் lower selfஇல் உள்ளவர்களும் ஒன்றாக ஒரே ஸ்தாபனத்திலோ, குடும்பத்திலோ இருந்தாலும் எதிரிகளாக மாறி விடலாம். ஆகவே இப்படிப்பட்ட சூழ்நிலையைச் சந்திக்கின்ற Higher Selfஇல் உள்ளவர்கள் எப்படி நடந்து கொள்வது என்ற கேள்வி எழுகிறது. Lower selfஇல் உள்ளவர்களுடன் தகராறு செய்து தன்னுடைய சந்தோஷத்தையும், உரிமைகளையும், உடைமைகளையும் காப்பாற்றிக் கொள்வதா? அல்லது தன்னை விட தாழ்ந்த நிலையில் உள்ள மற்றவர்களால் வருகின்ற பாதிப்பு வந்தால் வரட்டும், அதற்காக தன்னுடைய Higher Self நிலையில் இருந்து இறங்கி வர வேண்டாம் என்று முடிவு செய்வதா என்ற கேள்வி எழுகிறது. மேலோட்டமாகப் பார்த்தால் சண்டை போட்டு, தகராறு செய்து தான் உரிமைகளையும், உடைமைகளையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால், அதற்கும் நாம் தயாராக இருப்போம். அதுதான் சரியான அணுகுமுறை என்று நினைக்கத் தோன்றும். ஆனால் இந்த அணுகுமுறை தவறு என்பது தான் உண்மை. நம்முடைய வருமானம் மற்றும் உரிமைகளையும், உடைமைகளையும் காப்பாற்றிக் கொள்ள நாம் நம்முடைய Higher Selfஐ புண்படுத்துவதோ மற்றும் அதை இம்சை செய்வதோ சரியில்லை. Lower selfஇல் உள்ளவர்களுடன் தகராறு செய்து Higher Selfஇல் உள்ளவர்கள் வெற்றி காணலாம். ஆனால் அதையே வாடிக்கையாக செய்வது என்று Higher Selfஇல் உள்ளவர்கள் ஆரம்பித்தால் அத்துடன் அவருடைய Higher selfஇன் உடைய வளர்ச்சி நின்றுவிடும். ஒவ்வொரு முறை நாம் ஈகோ கிளாஷில் வெற்றி பெறும்போதும் நம்முடைய Higher Self உடைய வளர்ச்சி தடைபடுகிறது. மற்றும் தாமதிக்கப்படுகிறது. இது நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. அதனால் நம்முடைய Higher Self நஷ்டம் அடைகிறது என்பது உண்மையில்லை என்றில்லை. அதற்கு வருகின்ற நஷ்டமும், பாதிப்பும் உண்மை தான். இது எப்படி இருக்கிறது என்றால் நமக்கு ஒருவரிடம் இருந்து வரவேண்டிய ஆயிரம் ரூபாயை வசூல் செய்வதற்காக கோர்ட்டில் வழக்குப் போட்டு, கோர்ட் செலவு மற்றும் வக்கீல் செலவு என்று இலட்ச ரூபாய் செலவு செய்வது போல இருக்கிறது. ஆயிரம் ரூபாய் வசூலிப்பதற்காக இலட்ச ரூபாய் வீண் செலவு செய்கின்றவர் மிகவும் அறிவில்லாத ஒரு வேலையை செய்கின்றார் என்று நமக்குத் தெரிகின்றது. பண விஷயத்தில் நஷ்டம் வரும்போது நமக்கு நிதர்சனமாகத் தெரிகின்ற உண்மை consciousness விஷயத்தில் நஷ்டம் வரும்போது அவ்வளவு தெளிவாகத் தெரிவதில்லை. இருந்தாலும் இந்த நஷ்டத்தையும் உணர்ந்து இத்தகைய அறிவில்லாத வேலைகளைச் செய்யாமல் நம்முடைய Higher Selfஇன் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு அதனுடைய தேவைகளுக்கு ஏற்றவாறு நடந்து கொள்வதுதான் நல்லது என்றாகிறது.

நம்முடைய Higher Selfஐ மதித்து நடக்க வேண்டும், மற்றும் அதைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்றால் நாம் மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டுமென்றால் அதனால் வரக்கூடிய பண நஷ்டம், பொருள் நஷ்டம், மான நஷ்டம் மற்றும் உரிமையை இழத்தல் என்று இப்படி வரக்கூடிய பலவிதமான நஷ்டங்களை எப்படி அனுமதிப்பது மற்றும் தாங்கிக் கொள்வது என்ற கேள்வி எழுகிறது. நம்முடைய உடைமைகளையும், உரிமைகளையும் பிடுங்கிக் கொண்டு, நம்மை அவமானப்படுத்தி, நம்மை ஒதுக்கி வைத்து, நம்மை ஏமாற்றி அதில் சந்தோஷம் காண விரும்புகின்ற மனசாட்சியில்லாத மற்றும் பேராசை பிடித்த, சுரண்டக்கூடிய எண்ணம் கொண்ட பொய்யான மற்றும் தவறான மனிதர்களின் செயல்பாடுகளை எப்படி ஏற்றுக் கொள்வது? மற்றும் எப்படி இதற்கெல்லாம் இடம் கொடுப்பது? என்ற கேள்வி திரும்பத் திரும்ப வரத்தான் செய்யும். இந்த ஆபத்து மிகவும் நிஜமாகத் தெரியலாம். ஆனால் இதை சீரியஸாக எடுத்துக் கொண்டு நம் உடைமைகளையும், உரிமைகளையும் காப்பாற்றிக் கொள்வதற்காக lower selfஇல் செயல்படுகின்றவர்களோடு சண்டையில் இறங்க வேண்டும் என்று நாம் அவசரப்பட்டுவிடக் கூடாது. நமக்குள் இருக்கும் இந்த Higher Self என்பது ஒரு பெரிய கடல் போன்றது. கடலுக்குள் இறங்கி ஆயிரக்கணக்கானவர்கள் அந்த கடல் நீரை இரண்டு வாளி மற்றும் மூன்று வாளி அளவில் மொண்டு கொண்டு வீட்டிற்கு எடுத்துச் சென்றாலும் அந்தக் கடல் நீரின் மட்டம் ஒரு இன்ச் அளவிற்குக் கூட குறையாது. நம்முடைய Higher Self இப்படித்தான் இருக்கிறது. அதற்குள் இருக்கும் ஆன்மீக சக்தி என்பது அளவற்றது. கடலின் பரப்பு நம்முடைய பார்வைக்கு எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கிறதோ அதே அளவிற்குச் சூட்சுமப் பார்வை உள்ளவர்களுக்கு Higher Selfஇல் காணப்படும் ஆன்மீக சக்தியின் அளவும் பிரம்மாண்டமாகத் தெரியும். Lower selfஇல் உள்ளவர்களால் நமக்கு வருகின்ற ஒவ்வொரு நஷ்டத்தையும் ஈடு செய்யும் வகையில் இழந்ததைவிட நூறு மடங்கு அதிகமாகவும், ஆயிரம் மடங்கு அதிகமாகவும் நம்முடைய Higher Selfஏ நாம் எதை இழந்தோமோ அதையே திருப்பித் தரும். பேராசை பிடித்த, சுரண்டும் எண்ணம் உள்ள ஒருவருடைய தவறான தொடர்பு மற்றும் நடவடிக்கைகளால் நமக்கு ஆயிரம் ரூபாய் நஷ்டம் வந்திருக்கிறதென்றால், இதனால் நாம் மனமுடைந்து போகாமல், ஆத்திரம் வந்து நிதானம் இழக்காமலிருந்தால் அதே ஆயிரத்தை பத்தாயிரமாகவோ அல்லது இலட்சமாகவோ நம்முடைய Higher Selfஏ நமக்குத் திருப்பித் தரும். இம்மாதிரியே நம்மோடு பிஸினஸ் ப்ராஜெக்ட்டில் பார்ட்னர் ஆக வந்தவர் நமக்குரிய பங்கை பிரித்துக் கொடுக்காமல், சொன்ன வார்த்தையைக் காப்பாற்றாமல் எல்லாவற்றையும் அவரே எடுத்துக் கொண்டு போனாலும் நம்முடைய அறிவை ஆச்சரியத்தில் மூழ்க வைக்கும் வகையில் நம் கையை விட்டுப்போனதைவிட பல மடங்கு பெரிய இன்னொரு புதிய ப்ராஜெக்ட்டை நம்முடைய Higher Selfஏ நமக்குக் கைமேல் பலனாக டெலிவரி செய்யும். நாலு பேர் பொது இடங்களில் அவமானப்படுத்தி, உதாசீனப்படுத்தியிருந்தால் அதனால் நம் சமநிலையை இழக்காமல் நாம் அமைதியாக இருந்தால் இம்மாதிரி நூறு பொதுநிகழ்ச்சிகளுக்குப் பின்னால் நமக்கு அழைப்பு வரும். நாமே வெட்கப்படுமளவிற்கு நம்மைப் புகழ்ந்து பாராட்டி பல பேர் ஓயாமல் பேசுவார்கள். இம்மாதிரியே ஆதாயத்தைத் தேடுகின்ற பரிவு மற்றும் பாசத்தின் அருமையை உணராத அற்ப மனிதர்களிடம் நம்முடைய அன்பையும் பிரியத்தையும் அளவு கடந்து வழங்கி இன்று ஏமாந்து நிற்கிறோம் என்ற நிலையில் நாம் இருக்கலாம். அதனால் இதற்காக வருத்தப்பட்டு தண்ணீரில்லாத பாலைவனத்தில் துவண்டு போயிருக்கின்ற செடியைப் போல நாம் வாடிப் போக வேண்டாம். மனித சுபாவத்தைப் புரிந்து கொள்வதற்காக உணர்ச்சி லெவலில் நஷ்டப்பட்டு இப்படி ஒரு பாடம் கற்றுக் கொண்டதாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் இந்தப் பாடத்தை எப்பொழுது கற்றுக் கொண்டுவிட்டோம் என்று நம்முடைய Higher Selfக்கு புரிகிறதோ அப்பொழுதிலிருந்து அது நம் வாழ்க்கையை நேர் எதிராக மாற்றி, வறண்டு போன உள்ளங்களைக் கொண்டுள்ள பழைய ஆட்களுக்குப் பதிலாக அன்பாலும் ஆதரவாலும் நம்மைத் திணறடிக்கின்ற அளவு கடந்த நல்லெண்ணம் கொண்ட புது உறவுகளை நம்முடைய Higher Selfஏ நமக்கு நிரந்தரமாக ஏற்படுத்திக் கொடுக்கும்.

நம்முடைய Higher Selfக்கு இவ்வளவு பெரிய ஆற்றலும் திறனும் இருக்கும் போது சின்ன புத்தி கொண்ட மனிதர்களுடன் சண்டை போட்டுக் கொண்டு நம்முடைய நேரத்தையும் எனர்ஜியையும் நாம் ஏன் வீணடிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. நம்முடைய Higher Self நமக்கு வழங்கக்கூடியது கோடீஸ்வரனுடைய சேவிங்ஸ் போன்றது. Lower selfஇல் இருப்பவர்கள் நம்மிடமிருந்து பிடுங்கிக் கொண்டு போவதென்பது கோடீஸ்வரனுடைய பிக்பாக்கெட்டில் இருக்கின்ற சில்லரைக் காசுகளைக் குப்பத்துச் சிறுவர், சிறுமியர்கள் பிக்பாக்கெட் அடித்துப் போவது போன்றது. எவ்வளவுதான் சில்லரைகள் பிக்பாக்கெட் அடிக்கப்பட்டாலும் கோடீஸ்வரனுடைய கோடிக்கணக்கிலிருக்கின்ற பாங்க் பாலன்ஸ் சிறிதளவும் குறையாது. பெருந்தன்மையான கோடீஸ்வரரென்றால் குப்பத்துச் சிறுவர், சிறுமியரைப் பார்த்து, "உங்களுக்குத் தினமும் ஐஸ்கிரீம் வாங்கவும், மிட்டாய் வாங்கவும் தானே சில்லரை வேண்டும்? இதற்கு ஏன் பிக்பாக்கெட் அடிக்கிறீர்கள்? பிக்பாக்கெட்டே அடிக்க வேண்டாம். என்னிடம் நேரடியாகவே வந்து கேளுங்கள். ஒன்று சில்லரையாகவே தருகிறேன், அல்லது ஐஸ்கிரீமும் மிட்டாயுமாகவே வாங்கித் தருகிறேன். நீங்களும் ஜாலியாக ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டு என்னோடு வாருங்கள். அதை விட்டுவிட்டு வாக்கிங் போகின்ற சமயத்தில் என் பாக்கெட்டில் கையை விடாதீர்கள்'' என்று அமைதியாக அவர்களிடம் பேசி அவர்கள் மனதை மாற்றுவார். இப்படி ஒரு கோடீஸ்வரர் குப்பத்துச் சிறுவர், சிறுமியரிடம் பெருந்தன்மையாக நடந்து கொள்வதைப் போல நம்மைத் தொந்தரவு செய்யும் Lower self இல் உள்ள மனிதர்களிடம் நாமும் பெருந்தன்மையாக நடந்து கொள்ள வேண்டும்.

இதுவரையிலும் Higher Selfஐப் பற்றி ஒரு general instruction கொடுத்தேன். இப்பொழுது Higher Selfனுடைய இயற்கையும் தன்மையும் என்ன, மற்றும் அதனுடைய நியதிகளும் செயல்படும் விதிமுறைகளும் என்ன என்று பார்ப்போம். நமக்குள் இருக்கின்ற இறை அம்சமான ஆங்கிலத்தில் "Psychic Being" என்றும் தமிழில் "சைத்தியபுருஷன்" என்றும் சொல்லப்படுவதைத் தான் நான் Higher Self என்கிறேன். இந்த Psychic Being என்ற Higher Self எந்நேரமும் ஓர் ஆனந்தத்தில் தான் இருக்கிறது. இதனுடைய spiritual energyக்கு அளவே கிடையாது என்று சொல்லும் அளவிற்கு அது Infiniteஆக உள்ளது. நாம் ஒரு கோடி தடவை கூட Higher Selfனுடைய எனர்ஜியை பயன்படுத்தினாலும் அது சிறிதளவும் குறையாது. இதிலிருந்து வெளிப்படக்கூடிய ஒளியினுடைய பிரகாசம் எப்படிப்பட்டது என்று சொல்ல வேண்டும் என்றால் நடுப்பகலில் தெரிகின்ற ஆயிரம் சூரியனின் பிரகாசத்தைவிட இதனுடைய வெளிச்சம் அதிகமானது என்று சொல்லலாம். கோடை வெயிலில் நடுப்பகலில் சூரியனை நேரடியாக இரண்டு நிமிடம் பார்த்தால் கூட அது நம் கண் பார்வையை பாதிக்கும். ஆனால் நம் Higher Selfனுடைய வெளிச்சம் சூரியனைவிட பிரகாசமானது என்றாலும் அதைப் பார்ப்பதால் நம் கண்கள் கூசாது, வலிக்கவும் செய்யாது. அந்த வெளிச்சத்தில் இறை ஞானம், இறை அன்பு, இறை பலம், தெய்வீக சாந்தி மற்றும் தெய்வீக மௌனம், மற்றும் தெய்வீக ஆனந்தம், எனர்ஜி என்று நமக்குத் தெரிந்த எல்லா positive Divine vibrationsகளும் அடங்கி இருக்கின்றன. ஒரு ரேடியோ செட்டிற்குள் ரேடியோ அதிர்வலைகள் நுழைவது நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. அம்மாதிரியே நம்முடைய Higher Self என்பது மேற்கூறிய Divine vibrationகளை எல்லாம் கண்ணுக்குத் தெரியாத வகையிலும் ஒரு non-physical முறையிலும் ஒரு ஒட்டுமொத்த all-in-one packageஆக நம்முடைய surface personalityக்கு நிமிடத்தில் வழங்கி விடுகிறது.

தொடரும்....

******



book | by Dr. Radut