Skip to Content

11. அன்னை இலக்கியம் - உன் திருவுள்ளம்

அன்னை இலக்கியம்

"உன் திருவுள்ளம்....."

விசாலம்

அனலாய் கொதித்தது பூரணிக்கு. முனகியவாறே படுத்திருந்த அவளை, அவளுடைய அம்மா தொட்டு எழுப்ப வந்தாள். பகீரென்றது. "என்ன இப்படிக் கொதிக்கிறதே உடம்பு! பூரணி, பூரணி, என்னம்மா ஆச்சு? நாளை மறுநாள் கடைசி பரீட்சை ஆச்சே, என்ன செய்வது?'' என்றவாறே கவலையுடன் அவள் அருகில் அமர்ந்தார். முனகியவாறே எழுந்த பூரணி, "சுத்தமா ஒன்றும் முடியலம்மா, உட்காரகூட முடியல, என்ன செய்யப்போறேன், தெரியல. கஷ்டப்பட்டு மூன்று வருடங்கள் படித்து இப்படி கடைசி பரீட்சை எழுதாமல் கோட்டை விடப் போறேனா, தெரியல''. அழுகைதான் வந்தது பூரணிக்கு.

"சரி அழாதே. அழுதால் உடம்பு ஜாஸ்திதான் ஆகும். அப்பா ஆபீஸிலிருந்து வரட்டும். டாக்டரிடம் போய்விட்டு வந்துவிடலாம்'' என்றவாறு அம்மா அன்னை முன் அமர்ந்துவிட்டார்.

பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்த பூரணி ஓரளவு நன்றாகப் படிக்கும் மாணவி. மூன்றாவது வருடம் இறுதியாண்டு. பரீட்சைகள் ஆரம்பித்துவிட்டன. முதல் நான்கு நாட்கள் உற்சாகமாக எழுதிவிட்டாள். ஐந்தாவது நாள் பரீட்சைக்கு கிளம்பும்போது தலைவலி, உடல் அசதி இருந்தது. ஒரு குரோஸின் மாத்திரையை சாப்பிட்டுவிட்டு கிளம்பிவிட்டாள். ஏதோ பரீட்சை பயம், அதனால் உடம்பு அசதியாக இருக்கிறது என்று நினைத்தவளுக்கு தொடர்ந்து ஜுரம் வருவதும் போவதுமாக இருந்தது. மாத்திரை சாப்பிட்டால் ஜுரம் குறையும், எழுந்து உட்கார்ந்து படிப்பாள். இரவு ஜுரம் அடிக்கும். மீண்டும் ஒரு மாத்திரை, இப்படியாக எல்லா தேர்வையும் எழுதி முடித்துவிட்டாள். ஒரே ஒரு தேர்வு physics practical மாத்திரம் பாக்கி இருந்தது.

அப்பொழுதுதான் உடம்பு தகிக்க ஆரம்பித்தது. "அன்னையே காப்பாற்று, காப்பாற்று'' என்றவாறே படுத்திருந்தாள். பூரணியின் அப்பா வந்தவுடன் டாக்டரிடம் அழைத்துச் சென்றார். எல்லா சோதனைகளும் முடிந்தன. "typhoid'' என்றார் டாக்டர்.

"ஜாக்கிரதையாக கவனித்துக் கொள்ளுங்கள். ரொம்ப தீவிரமாக இருக்கிறது, bed rest எடுத்துக் கொள்ளட்டும். எங்கும் அலைய வேண்டாம்'' என்றார்.

"டாக்டர், இன்னும் ஒரே ஒரு examதான் பாக்கியிருக்கிறது. மூன்று வருட உழைப்பு வீணாகிவிடுமே. எப்படியாவது எனக்கு ஜுரத்தை குறைத்து, தேர்வு எழுதும் அளவுக்குச் சரி செய்து விடுங்கள்'' என்று கெஞ்சினாள் பூரணி.

"என்னம்மா விளையாடுகிறாயா? உடம்பு முக்கியமா, தேர்வு முக்கியமா? இப்பொழுது எழுதவில்லை என்றால் என்ன? வரும் Septemberல் எழுதிவிடு, அவ்வளவுதானே''.

வீட்டிற்குத் திரும்பிய பூரணிக்கு தலைவலிதான் அதிகமாயிற்று. September மாதம் தேர்வு எழுதினால் வெறும் Completion Certificateதான் கிடைக்கும். என்னதான் இருந்தாலும் அதற்கு மதிப்பு ஒரு மாற்று கம்மிதான். "அன்னையே ஏதாவது வழி காட்டேன். எனக்கு எது நல்லது என்று தோன்றுகிறதோ அதைச் செய். என்ன முடிவு எடுப்பது என்று எனக்குத் தெரியவில்லை. நீ என்ன முடிவு எடுக்கிறாயோ அதை ஏற்றுக் கொள்கிறேன். அன்னையே உன் திருவுள்ளப்படி நடக்கட்டும்'' என்று சொல்ல ஆரம்பித்தாள் பூரணி.

"ஏம்மா, நம்ப நீலா, கலைக் கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராக இருக்கிறாளே, அவளைப் போய் பார்த்து என்ன விதிமுறைகள், என்ன செய்வது, இப்ப எழுதாமல் உடல் நிலைக் காரணமாக Septemberல் எழுதினால் எப்படி கணக்கில் எடுத்துக் கொள்வார்கள் என கேட்டுவிட்டு வருகிறேன். ஸ்ரீராமும் நிர்வாகப் பொறுப்பில்தானே இருக்கிறார். அவருக்கு ஏதாவது விஷயம் தெரிகிறதா என பார்த்துவிட்டு வருகிறேன். நீ கவலைப்படாமல் ஓய்வு எடுத்துக்கொள்'' என்று பூரணியின் அப்பா காலில் செருப்பை மாட்டிக் கொண்டு கிளம்பிவிட்டார்.

நீலா அத்தை சாதகமாக ஏதாவது பதில் கூறினால் தேவலை என யோசித்தவாறே பூரணி அயர்ந்து தூங்கிவிட்டாள்.

"பூரணி, பூரணி, எழுந்திரும்மா. அன்னையின் கருணையைப் பார்! அன்னை உன்னைக் கைவிடவில்லை''.

"என்னப்பா! என்ன நடந்தது?''

"சொல்கிறேன், கேள்''.

"நீலா, பூரணிக்கு typhoid. நாளைக்கு physics practical exam இருக்கு. அவளால் மூன்று மணி நேரம் நின்று கொண்டு practicals செய்ய முடியாது. Septemberல் எழுதினால் பரவாயில்லையா? என்ன விதிமுறைகள் என்று எனக்குத் தெரியவில்லை. மிகவும் கவலைப்படுகிறாள்''.

"அண்ணா, இதைப் பற்றி என்னைவிட ஸ்ரீராமிற்கு அதிகம் தெரியும். அவர் நிர்வாகப் பிரிவில் இருப்பதால் rules எல்லாம் அத்துப்படி'' என்றவாறே "ஸ்ரீராம் இங்க கொஞ்சம் வருகிறீர்களா, அண்ணா வந்திருக்கிறார், பாருங்கள்'' என்று தன் கணவரை அழைத்தாள்.

"அடேடே, வாங்க, வாங்க. நான் ஏதோ accounts பார்த்துக் கொண்டிருந்தேன், கவனிக்கவில்லை. என்ன விஷயம், சொல்லுங்கள்''.

விஷயத்தை விலாவாரியாக மீண்டும் ஒரு முறை கூறலானார் பூரணியின் அப்பா.

"என்ன practicals, நாளைக்கு''.

"Physics practicals''.

"சரி, கீழே குவார்ட்டர்ஸில் physics lecturer திரு. கோபால் இருக்கிறார். அவரையே கேட்கலாம், வாருங்கள்''.

ஸ்ரீராமும், பூரணியின் அப்பாவும் கீழே அந்த விரிவுரையாளரைச் சந்திக்கச் சென்றனர். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட அவர்,

"உங்கள் பெண் எந்த collegeல் படிக்கிறாள்? எங்கு exam எழுதப்போகிறாள்?''

"மகளிர் கல்லூரியில் படிக்கிறாள். அங்குதான் தேர்வும் நடக்கப் போகிறது''.

"அடேடே, நான்தான் அந்தக் கல்லூரிக்கு கண்காணிப்பாளராகப் போகிறேன். கவலையை விடுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன். உங்கள் பெண்ணை பத்திரமாக ஒரு வண்டி ஏற்பாடு செய்து அதில் அழைத்து வாருங்கள். டாக்டர் சான்றிதழுடன் உங்கள் கைப்பட "இந்த மாதிரி எனது பெண்ணிற்கு உடல்நிலை சரியில்லாததால் அவளால் மூன்று மணி நேரம் தொடர்ந்து நின்று கொண்டு practicals செய்ய முடியாது' என எழுதி, ஒரு கடிதம் எனக்கு கொடுங்கள். அவள் வந்து என்ன experiment செய்ய வேண்டி வருகிறதோ அதற்கு செய்முறை விளக்கம் எழுதி, readings எடுத்துவிட்டு கிளம்பட்டும். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன். ஓர் அரை மணி நேரம் நிற்பதற்குரிய தெம்பு அவளுக்கு இருந்தால் போதும். Horlicks கொடுத்து அனுப்புங்கள். நான் கவனித்துக் கொள்கிறேன், கவலைப்பட வேண்டாம் என்று உங்கள் பெண்ணிடம் சொல்லுங்கள்''.

இதை அப்பா சொல்லிக் கேட்ட பூரணிக்கு விழிகளில் தாரைதாரையாக கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்தது.

"அன்னையே தாயினும் சாலப்பரிந்து எனக்கு அருள் புரிந்திருக்கிறாய். நீயே கதி என்ற எனக்கு வழி காண்பித்திருக்கிறாய். நன்றிம்மா, நன்றி'' என்று கூறியவண்ணம் நிம்மதியாக தூங்கலானாள்.

மறுநாள் காலை வீட்டில் ஒரே தடபுடல்தான். அம்மா ஒரு பக்கம் horlicks கரைத்து பிளாஸ்க்கில் நிரப்பிக் கொண்டிருக்க, அப்பா ஒரு புறம் பூரணிக்குத் தேவையானதை எடுத்து வைத்துக் கொண்டிருக்க, தம்பி ஒரு பக்கம் taxi கொண்டுவர கிளம்பிக் கொண்டிருக்க, துணைக்கு நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு சகோதர, சகோதரிகள் தயாராகிக் கொண்டிருந்தனர்.

அக்கா, தம்பி, தங்கை என்று இவர்கள் புடைசூழ, பிக்னிக்குக்கு கிளம்புவது போல் பூரணி தேர்வுக்குத் தயாரானாள். அந்த உடம்பிலும், காரில் பரீட்சைக்கு கிளம்பிய பூரணிக்கு, கார் சவாரி பெருமையாக இருந்தது. காரில் வந்திறங்கிய பூரணியைப் பார்த்து நண்பர்களுக்கு ஒரே குழப்பம். விஷயம் தெரிந்தவுடன் எல்லோரும் அவளுக்கு ஆறுதல் கூறி உற்சாகப்படுத்தினர். எல்லோருடைய நல்லெண்ணம் அவளுக்கு புதிய தெம்பினை அளித்தது.

தனக்கு வந்த Tanjent Galvanometer பரிசோதனையின் செய்முறை விளக்கம் எழுதி, readings எடுத்துவிட்டு, பேப்பரை மடித்து கண்காணிப்பாளரிடம் கொடுத்துவிட்டு வீட்டிற்குக் கிளம்பினாள் பூரணி.

இரண்டு மாதங்கள் கழிந்தன. "ஸார் போஸ்ட்''. பூரணியின் பெயருக்கு வந்த கடிதத்தைப் பிரித்த பூரணியின் அப்பா,

"அம்மா பூரணி, வாழ்த்துகள். நீ 1st classல் பாஸ் செய்திருக்கிறாய், அதுவும் உன் வகுப்பில் முதல் மாணவியாய்''.

அன்னையின் அறைக்கு ஓடிய பூரணி, அன்னைக்கு நெக்குருக நன்றி கூறினாள்.

முற்றும்.

********



book | by Dr. Radut