Skip to Content

13. யோக வாழ்க்கை விளக்கம் VI

யோக வாழ்க்கை விளக்கம் VI

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

II/24) அநாகரிகமாக அதிகப்பிரசங்கம் செய்பவனை நோக்கி "அன்னையின் குரலை எழுப்பியதற்கு நன்றி" என்று நாம் கூற வேண்டும்.

  • அநாகரிகம் அன்னையின் பலத்த குரல்.
  • காது கேட்காதவனிடம் பலத்த குரலில் பேச வேண்டும்.
  • படிக்க ஆரம்பிக்கும்பொழுது வாய்விட்டுப் படிக்கிறோம்.
  • மௌனமாகப் படிக்கும் பொழுது புரியாத இடத்தில் நிறுத்தி, வாய்விட்டுப் படித்தால் புரியும்.
  • புரியும் திறன் குறைவானால் உரத்த குரல் உதவும்.
  • நல்லவனுக்கு ஒரு சொல், நல்ல மாட்டிற்கு ஒரு அடி என்பது பழமொழி.

    ஒரு சொல் பலிக்காவிட்டால், பல முறை சொல்ல வேண்டும்.

    அது பலிக்காவிட்டால், உரத்த குரலில் பேச வேண்டும்.

    அதுவும் பலிக்காத பொழுது காரமாகப் பேசுதல் வேண்டும்.

    காரம் பலன் தாராவிட்டால் குத்தலாக, கேலியாக, கிண்டல் செய்ய வேண்டும்.

    இவையனைத்தும் பலன் தராவிட்டால், அநாகரிகமாகப் பேசும் சந்தர்ப்பம் அமையும்.

  • ஒருவர் நம்மிடம் அநாகரிகமாகப் பேசினால், அதற்கு முந்தைய நிலைகளால் நாம் அசையவில்லை எனப் பொருள்.
  • கஷ்டம் வந்த காலத்து யோசனை பிறக்கிறது.

    தொடர்ந்து கஷ்டம் வந்தால், ஆண்டவன் சோதனை செய்கிறார் எனப் புரிந்து கொள்கிறோம்.

    எடுத்துக் காட்டியது புரியவில்லை என்றபொழுது ஆண்டவன் இடித்துக் காட்டுகிறார் என நாம் அறிய வேண்டும்.

  • சொல் புரியாதபொழுது செயல் புரியும்.

    செயல் புரியாதபொழுது ஆபத்து விளங்கும் என்று வாழ்க்கை செயல்படுகிறது.

  • ஆபத்து வந்தபின் வாழ்வு மலர்வதைக் காண்கிறோம்.
  • லிடியா ஓடிப் போனபின் பெரும் திருமணங்கள் இரண்டு நடந்தது.
  • Mr. பென்னட் மனைவிக்கு இடத்தைக் கொடுக்க மறுத்தார்.
  • தான் பொறுப்பில் தவறியதை உணர்ந்தார்.
  • பொறுப்பை ஏற்றார்.
  • அவர் உணர்ந்து ஏற்ற பொறுப்பை அடுத்தவர் ஏற்று நிறைவேற்றினார்.
  • அதையும் தானே ஏற்க உறுதி பூண்டார்.
  • அப்பொறுப்பு தானே தன்னை நிறைவேற்றிக் கொண்ட அதிசயத்தைக் கண்டார்.
  • அநாகரிகமாக நடந்த லிடியா ஙழ். பென்னட்டின் காதுகளில்

    "பொறுப்பை ஏற்பது அவசியம்" எனக் கூறுவது.

  • அன்னை கூறுவதை ஏற்க முடியாதவர்க்கு அநாகரிகமான சொல் வருகிறது.
  • அதிகப் பிரசங்கம் அநாகரிகம்.
  • உள்ளேயுள்ள அதிகப் பிரசங்கம் வெளியே அநாகரிகமாக எழுகிறது.
  • நாகரிகம் நம் உயர்ந்த கடமைகளை உணர்ந்து செயல்படுத்துவது.
  • பண்பு நாகரிகத்தைவிட உயர்வு.
  • அது கடமையைக் கடந்த கண்ணியம்.

******

II/25) நம்மால் அம்பாள் வெற்றிலைப்பாக்கு எச்சிலை ஆர்வத்தோடும் நன்றியோடும் ஏற்க முடியுமா?

  • வெற்றிலைப்பாக்கு எச்சில் அமிர்தம்.
  • பக்தர் ஒருவர் சரஸ்வதி அனுக்கிரஹம் வேண்டி கோயிலில் நெடுநாள் தவமிருந்தார்.
  • ஒரு மூகன் கோவிலில் வலம் வருபவன், அவரைப் பின் தொடர்வது வழக்கம்.
  • அம்பாள் மனம் இசைந்து வரம் தர முடிவு செய்தாள்.
  • இறைவன் வரும் தருணம் (Hour of God) என்ற சிறு கட்டுரை பகவான் எழுதியவற்றில் சிகரமாக இருப்பது.
  • இறைவன் கருணை வெள்ளமாக, கனிவு நிறைந்த மூர்த்தியாக வருவதும் உண்டு.
  • பெரும்பாலும் இறைவன் நம்மை எப்படித் தேடி வருகிறார், என்ன வரம் தருகிறார், ஏற்றால் என்ன பலன், மறுத்தால் விளைவு என்ன என்பது அக்கட்டுரை.
  • உலக வழக்கப்படியே மேல் உலகிலும் செயல்கள் பூர்த்தியாகின்றன.
  • அவற்றுள் ஒன்று, நெடுங்காலம் பொறுமையாகத் தயாரித்து பேரளவில் முடிப்பதாகும்.
  • யுகாந்த காலமாக இறைவன் தயார் செய்து, பிரபஞ்சம் பலன் பெற வேண்டிய நேரம் வந்துள்ளது.
  • அதை மனிதன் அறிய இறைவனே நேரில் அறிவிக்க வந்துள்ள நேரம் இது என்கிறார்.
  • இந்த நேரம் மனிதன் விழிப்பாக இருந்தால் 30,000 ஆண்டுகளில் முடிவது உடனே முடியும்.
  • எளிய மனிதர் இந்த நேரத்தின் முக்கியத்தை அறியார்.
  • அரிதான மனிதர் அறிவார்.
  • அறிபவர் பெறுவதற்கு அளவில்லை. அவர் உலகுக்காகப் பெறுவார்.
  • அறிந்தவர் அலட்சியமானால் அழிவர் என்கிறார்.
  • இறைவனின் கருணை கண்ணைக் கேட்கும், பிள்ளையின் உயிரைக் கேட்கும், மனைவியின் கற்பைக் கேட்கும், தவம் செய்பவரைத் தடை செய்ய கந்தர்வப் பெண்களை அனுப்பும், ரோட்டில் தங்கக் கட்டியாக விழும், குடிசை வீடு மாளிகையாக மாறும், தேவாமிர்தமான மாம்பழமாக வரும், இனிய குழலோசையாக எழும் என நாம் கேள்விப்பட்டிருக்- கிறோம்.
  • அவரவர் குண நலனுக்கேற்ப வரும் என நாம் அறிவோம்.
  • தவம் பலித்தால் தகுதியிருப்பதில்லை என்பது ஒரு நிலை.
  • மோட்சம் வந்தால் பெறுபவர் மனநிலைக்கேற்ப அது உடனேயும் பலிக்கும், ஒரு இலட்சம் பிறவியும் பொருத்துப் பலிக்கும்.
  • ஒரு இலட்சம் பிறவியும் மனநிலையால் ஒரு க்ஷணமாகும்.
  • ஒரு க்ஷணமும் ஒரு இலட்ச பிறவியாகும். அது நம் மனநிலையைப் பொருத்தது.
  • எதை நம் மனம் ஏற்காதோ, அது வழியாக இறைவன் வருவான்.
  • குருவின் எச்சிலை விரும்பிப் போற்றிச் சாப்பிடுபவனுக்கு மோட்சம் உண்டு.
  • இராமானுஜர் அது போல் குருவின் எச்சிலையை விரும்பிய பொழுது மனைவி கணவன் வருமுன் அதைக் குச்சியால் எடுத்துப் போட்டுவிட்டார்.
  • தாய் குழந்தையின் மலம், மூத்திரத்தால் அசிங்கப்படுவ- தில்லை.
  • குருவின் எச்சிலை விழைய அறிவு போதாது. உணர்வு அவருடன் கலந்திருக்க வேண்டும்.
  • அம்பாள் கிழவி ரூபத்தில் வாய் நிறைய வெற்றிலைப் பாக்கை வரமாகக் கொண்டு வந்தாள்.
  • பக்தனுக்குக் கிழவியும், எச்சிலும் தெரிந்தன.
  • அம்பாளும், வரப்பிரசாதமும் தெரியவில்லை.
  • பக்தன் அதை வெறுத்து மறுத்தான்.
  • அருகிலிருந்த மூகன் கேட்டுப் பெற்றான்.
  • வரப்பிரசாதம் மூகனை வரகவியாக்கியது.
  • அற்புதம் நிகழப் போகிறது என நாம் அறிவோம்.
  • இப்பொழுது அற்புதம் நிகழ்கிறது என நாம் அறியவில்லை.
  • உலகம் எப்பொழுதும் அற்புதம், ஆனந்தம்.
  • அற்புதமான ஆனந்தத்தை அனுபவிக்கவே பிரம்மம் உலகை சிருஷ்டித்தது.
  • சிருஷ்டித்தது என்றால் நாம் குயவன் பாண்டத்தை சிருஷ்டித்தது போல் எனக் கருதுகிறோம்.
  • சமஸ்கிருதத்தில் சிருஷ்டி என்ற சொல்லுக்கு அவிழ்த்து விடுதல் என்பது (root) மூலமாகும்.
  • ஒரு ஸ்டோர் கீப்பர் அதிலிருந்து பொருள்களை எடுத்துக் கொடுப்பதை சிருஷ்டி ஒக்கும்.
  • உலகில் உள்ள அவ்வளவு பொருள்களும் அப்படியே ஸ்டோர் செய்யப்பட்டதாகாது.
  • இவ்வளவு பொருள்களின் சாரம், உண்மை பிரம்மத்திலிருக்கிறது.
  • சத்தியஜீவியம் எந்த உண்மையைக் கண்ணுற்றதோ, அந்த உண்மைகட்கு ரூபம், பாவம் கொடுத்து சிருஷ்டிக்கிறது என்பது தத்துவம்.
  • நாம் உலகம் ஆனந்தத்தை நோக்கிச் செல்கிறது என நினைப்பதுண்டு.
  • உபநிஷதம் ஆனந்தத்திலிருந்து ஆனந்தம் எழுந்து ஆனந்தத்தை நோக்கிச் செல்கிறது எனக் கூறுகிறது.
  • உலகில் ஆனந்தம் தவிர வேறில்லை.
  • இறைவன் எந்த நேரமும் ஆனந்தமயமானவன்.
  • வேறொரு ஆனந்தத்தை நாடி அவன் சிருஷ்டித்தான்.
  • அதிகபட்ச ஆனந்தத்தை நாடி சிருஷ்டியை நாடினான்.
  • அதிகபட்ச ஆனந்தம் மறைந்து வெளிவருவது.
  • இருளில் ஒளி மறைந்து வருவதும், வலியில் ஆனந்தம் மறைந்து எழுவதும், அறியாமையிலிருந்து அறிவு வெளிவருவதும், இயலாமையினின்று திறமை வருவதும் ஆனந்தத்தின் பல ரூபங்கள்.
  • ஆனந்தத்தின் ரூபங்கள் கணக்கிலடங்கா, அனந்தம்.
  • கொடுப்பது இன்பம், மறுப்பதும் இன்பம்.
  • பெறுவது இன்பம், பெற முடியாததும் இன்பம்.
  • இன்பத்தில் ஆழ்ந்து அகன்ற அற்புத ரூபங்களைக் காண வேண்டின் அதை நம்முள் காண்பதைவிட பிறரில் காண்பது சிறப்பு.
  • அனைவராலும் ஒதுக்கப்பட்டவரை நெருங்கி, அவர் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி, அவருக்குப் பிரியமானவை எவையென அறிய விரும்பினால், இதுவரை எவரிடமும் கூறாத செய்திகளைக் கூற முற்படுவார்.
  • அவருக்கு நம் மீது நம்பிக்கை அதிகமானால், மேலும் ஒளிவு, மறைவு இல்லாமல் பேசுவார்.
  • அதன் உச்சகட்டம் தன் திறமைகளை வியந்து பேசுவார்.
  • அது அனந்தம். எந்த அளவுக்கு எல்லாராலும் ஒதுக்கப்பட்டவர், எந்த திறமையுமற்றவர் எனக் கருதப்படுபவர், தன் உயர்ந்த திறமைகளை வியந்து பாராட்டுகிறார் என்பது ஆச்சரியத்திற்குரியது.
  • அவர் தன்னில் பாராட்டுவதை உலகம் பாராட்ட வேண்டும் என நினைப்பார்.
  • அது போல் ஒருவரை உளமாறப் பாராட்ட அவர் மீது அடுத்தவர் காதல் கொள்ள வேண்டும்.
  • அது மையலாக இல்லாமல் காதலாக இருக்க வேண்டும்.
  • அக்காதல் பக்தியானால் ஒருவருக்கு வெற்றிலைப் பாக்கு எச்சில் அமிர்தமாகும்.
  • அதற்குக் குறைந்த மனநிலையில் பக்தி பூரணமாகாது.

தொடரும்....

******

ஜீவிய மணி

விஷயம் விபரத்திலுள்ளது.

*****



book | by Dr. Radut