Skip to Content

11. அன்னை இலக்கியம் - அன்னையின் தரிசனம்

அன்னை இலக்கியம்

அன்னையின் தரிசனம்

இல. சுந்தரி

உமது கருணை வேண்டுமென்றுகூட இரக்கமாட்டேன். நீ எதைச் சங்கல்பிக்கிறாயோ அதையே நானும் சங்கல்பிப்பேன். என்னுடைய சக்தியெல்லாம் முன்னேறுவதற்காகவே முறுக்கேறி நிற்கிறது. இந்தக் கருவி இப்போது அதற்குச் சொந்தமல்ல. அது நினக்கே சொந்தம். நீ அதை அழிக்கலாம். அல்லது மகிமைப்படுத்தலாம். அதற்கென்று தனிச் சங்கல்பம் இல்லை. நீ இல்லாமல் அதனால் ஒன்றும் செய்ய முடியாது.

- ஸ்ரீ அன்னை.

பகவான் ஸ்ரீ அரவிந்தரும், ஸ்ரீ அன்னையும் திருவுடல் தாங்கி, புலன்களுக்கும் புலப்பட்ட பொற்காலத்தைச் சார்ந்த கதையிது. பகவான் ஸ்ரீ அன்னை அவர்களின் அருட்சூழலில் தங்கும் (பெரும்) பெரும் பேறு பெற்ற பாக்கியசாலிகளில் ஒருத்தி நம் கதாநாயகி. அவள் பெயர் பிரபாவதி. நம் பகவான் அவதரித்த புண்ணிய பூமியில் பிறக்கும் பேறும் பெற்றவள். பெற்றோரை இழந்ததால் பாபுலால் என்பவர் வீட்டில் வேலைக்காரப் பெண்ணாய் ஏற்றுக்கொள்ளப்பட்டவள். அன்னையின் அருளால் வங்காளத்திலிருந்து பாபுலால் குடும்பத்தாருடன் பாண்டிச்சேரி வரும் வாய்ப்பும், அவருடன் (அன்னையுடன்) அவர் திருவருட் சூழலில் வாழவும் பேறு பெற்றவள். முதன்முதலில் அவள் இங்கு தரிசனத்திற்காக அழைத்து வரப்படவில்லை. ஒரு குடும்பத்தின் வேலைக்காரப் பெண்ணாய் அவர்களுடன் வந்தாள். அவள் ஆன்மா முன்னிற்பதைக் கண்ட அன்னையே அவளை அங்கு தங்கவைத்துக் கொண்டார். அது ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி.

பாபுலால் பெரும் ஞானியோ, யோகியோ அல்லர். சாதாரண பக்தரே. வங்காளத்தைச் சேர்ந்தவர். ஸ்ரீஅரவிந்தர் வங்காளத்தைச் சேர்ந்தவர் என்பதே அவரைப் பாண்டிச்சேரிக்கு அழைத்து வந்தது. வந்த இடத்தில் ஸ்ரீஅன்னையின் தரிசனமும் கிடைத்தது. சாதாரண குடும்பஸ்த்தராகிய அவருக்கு அந்தத் தரிசனமே போதுமானதாயிருந்தது. மிகுந்த மகிழ்ச்சியுண்டாயிற்று. தன் துன்பமெல்லாம் தீர்ந்துவிடும்; ஸ்ரீ அன்னை மகாலஷ்மியின் அம்சமுமாய் இருப்பதால் இனி வளமையும் உண்டாகும் என்ற நம்பிக்கையும் பிறந்தது. அன்னையின் திவ்ய தரிசனத்தால் நிறைந்த அவர் புறப்படுமுன் மீண்டும் அன்னையைத் தரிசித்து அவர்க்குத் தம் வணக்கத்தை நன்றியுடன் தெரிவித்துப் போகப் பிரியப்பட்டார்.

சாதகர் ஒருவர் மூலம் தம் ஆர்வத்தை ஸ்ரீ அன்னைக்குத் தெரிவித்தார். திவ்ய அன்னையே ஏற்பாடு செய்த திருவிளையாடல் இது என்பதையும் அறியாதவர்.

அன்னை அவரை அழைப்பித்தார். சிறு குழந்தை போல் ஏகமகிழ்ச்சியுடன் உள்ளே சென்றார் பாபுலால். மகாராணி போல் கம்பீரமாய் அமர்ந்திருந்தார் ஸ்ரீ அன்னை. இவரைப் பார்த்து அன்புடன் புன்னகை செய்தார். மிகப்பணிவுடன் அவர் திருவடிகளுக்கு நமஸ்காரம் செய்தார். "அன்னையே! இப்படி ஒரு பாக்யம் கிடைக்கப் போகிறது என நான் கனவிலும் நினைத்ததில்லை. மிகுந்த மனநிறைவுடன் ஊர் திரும்பப் போகிறேன். இத்தகைய நிறைவைத் தந்த உமக்கு என்ன கைம்மாறு செய்வேன்! உமக்களிக்கத் தகுந்த ஏதுமில்லாதவன் நான்'' என்று மனம் உருகி, கை கூப்பினார் பாபுலால்.

"உள்ளபடியே எனக்கு ஏதேனும் அளிக்க விரும்புகிறாயா?'' என்று சிரித்தவண்ணம் கேட்டார் அன்னை.

அவருக்கு வெட்கமாயிற்று. திரும்பிச் செல்ல இரயில் செலவிற்கென்று சிறு தொகையே வைத்திருந்தார். குடும்பத்துடன் வந்திருப்பதால் அத்தொகை தேவைப்படும் என்பதால் அதில் சிறிதைக் காணிக்கையாக்கத் தயங்கினார்.

"ஆம் அன்னையே. உள்ளபடியே உமக்குக் காணிக்கையாக்க என்னிடம் ஏதுமில்லை என்றுதான் நினைக்கிறேன். என் கையில் மீதமுள்ள தொகை குடும்பத்தாருடன் திரும்பிச் செல்லவே போதுமானது'' என்று மிகவும் வெட்கப்பட்டுச் சொன்னார்.

அன்னை மீண்டும் சிரித்தார். "எனக்குப் பணம்தான் தேவை என்று உன்னிடம் யார் சொன்னது?'' என்றார்.

"பக்தர்கள் காணிக்கையைத் தவிர உம் போன்ற தெய்வத்திற்கு என்ன தர முடியும்?'' என்று உருக்கமாய்க் கூறினார்.

"எனக்குத் தேவையான ஒன்று உன்னிடமிருந்தால் அதைத் தந்துவிடுவாயா?'' என்றார் குறும்புச் சிரிப்புடன்.

"நிச்சயமாய்த் தருவேன் அன்னையே'' என்று உணர்ச்சி வசப்பட்டார்.

"நான் கேட்ட பிறகு நீ மறுத்தால் என்ன செய்வது?'' என்றார் அன்னை.

"அப்படி மறுக்கும் பொருளையா நீர் கேட்பீர், எனக்குப் பயன்படுத்தத் தெரியாததையன்றோ நீர் கேட்பீர். எப்படி மறுப்பேன்'' என்றார் பணிவாக.

"அப்படியானால் எனக்குரிய ஒன்று உன்னிடமிருக்கிறது. அதைத் தந்துவிடு'' என்றார்.

"சொல்லுங்கள் அன்னையே, உமக்குரிய ஒன்றை உம் அனுமதியின்றி நான் எடுத்துப் போகமாட்டேன். அதை உம்மிடமே தந்துவிடுவேன்'' என்றார் மேலும் நயமாக.

அன்னை சற்று நேரம் ஒன்றும் கூறாமல் அவரைப் பார்த்துச் சிரித்தவண்ணமிருந்தார்.

அன்னையின் இத்தகு திருவிளையாடல்களில் மனம் தோய்ந்து ஜீவனில் புனிதம் பெற்ற சாதகர் ஒருவர் பாபுலாலைவிட ஆர்வமாக அன்னையின் திருமுகத்தையே தரிசித்தவண்ணம் நின்றிருந்தார்.

"அப்படியானால் உன்னுடன் வந்திருக்கும் பிரபாவதியை என்னுடன் விட்டுச் செல்'' என்றார்.

பாபுலால் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவள் அவர் அழைத்து வந்த பெண்தான் என்றாலும் அவருடைய மகள் என்ற உரிமை கிடையாது. வேலைக்காகத் தம் குடும்பத்தை நாடி வந்த பெண். அவளைத் தர தனக்கேது உரிமை என்று தயங்கி நின்றார்.

"என்ன பாபுலால், விருப்பமில்லையா?'' என்றார் அன்னை.

மிகுந்த வெட்கவுணர்வுடன், தயக்கமாகப் பேசினார் பாபுலால். "அதில்லை மதர், அவள் என் பெண்ணில்லை என்பதால், அவளைத் தர எனக்கு உரிமையுண்டா என்றுதான் தயங்குகிறேன்'' என்றார்.

"சரி, அவளை இங்கே கூப்பிடு. அவள் விருப்பத்தைக் கேளுங்கள். அவள் விரும்பினால் இருக்கட்டும். இல்லையெனில் நீயே அழைத்துச் சென்றுவிடு'' என்றார் அன்னை.

பாபுலால் குடும்பத்தினர் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தனர். அவரவர் பொருட்களை சரிபார்த்து வைத்தனர். பிரபாவதியோ, இன்னும் சிறிது நேரத்தில் இந்தப் புனிதச் சூழலை விட்டுப் போய்விட வேண்டுமே என மனமில்லாது ஏக்கமாய் அமர்ந்திருந்தாள். "பிரபாவதி, என்ன என்னவோ போலிருக்கிறாய்? பிறந்த வீட்டை விட்டுப் போகும் புதுமணப்பெண் போலல்லவா மனமில்லாமல் உட்கார்ந்திருக்கிறாய். புறப்படத் தயாராக வேண்டாமா? இன்னும் சிறிது நேரத்தில் பாபுஜி வந்துவிடுவார்'' என்றாள் எஜமானி.

"அன்னையே! உம் திவ்ய தரிசனத்திற்கு நன்றி. ஒரு தகுதியும் இல்லாத எனக்கும் உம் கருணையால் உம் தரிசனம் கிடைத்தது. இதை என் வாழ்நாள் முழுதும், ஏன் அடுத்தடுத்த பிறவிகளிலும் கூட நினைவு வைத்திருப்பேன்” என்று அந்தரங்கமாக எண்ணியவண்ணம் எழுந்தாள்.

பாபுலால் வந்தார். பரபரப்பாய்க் காணப்பட்டார். ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. "அம்மா பிரபாவதி, இங்கே வா. உன்னை மதர் கூப்பிடறாங்க'' என்றார். எல்லோருக்கும் ஒரே தவிப்பு. "எதற்காகக் கூப்பிடக்கூடும். ஏதேனும் மரியாதை இல்லாமல் செய்துவிட்டாளோ? அப்படிப்பட்ட பெண் அல்லளே அவள்' என்று எஜமானி தவித்தாள். "என்னாயிற்று? ஏதேனும் தவறாக நடந்துவிட்டாளா?'' என்று தன் கணவரிடம் கேட்டாள்.

இப்போது விரிவாகப் பேச நேரமில்லை. எனவே, "அதெல்லாம் ஒன்றுமில்லை. இவளை அழைத்து வரச் சொன்னார்'' என்று மட்டும் கூறி, முன்னே சென்றார். பிரபாவதி அவரைப் பின் தொடர்ந்தாள். அவள் மனதில் எவ்வித சலனமுமில்லை. "இந்த வாய்ப்பில் மீண்டும் ஒரு முறை அன்னையைத் தரிசித்துவிடலாம், கொடுப்பதற்கு ஏதுமில்லை என்றாலும் என் இதயத்தை அவரிடம் ஒப்படைத்துவிடலாம். மானசீகமாய் செய்யக்கூடியது அதுவே' என்றெண்ணி சாந்தமாகச் சென்றாள்.

"அன்னை அவளிடம் என்ன கேட்கப் போகிறார். அதற்கு அவள் என்ன பதில் சொல்வாள்” என்று பாபுலாலுக்கு ஒரே தவிப்பு. அருகில் நின்ற சாதகரோ, உலகில் உள்ள சர்வத்துக்கும் சொந்தக்காரரான அன்னை தமக்குரியவள் என ஒருத்தியைக் கேட்டதும், பாபுலால் தயங்கியதையும் எண்ணி தமக்குள் சிரித்தவண்ணம், பிரபாவதியின் பதிலை ஆவலுடன் கவனிக்க எண்ணினார்.

சலனமில்லாத மனத்துடன் சாந்த சொரூபியாய் வந்தாள் பிரபாவதி. அன்னையைப் பணிவுடன் நமஸ்கரித்து எழுந்தாள். அவள் மனம் அவருடன் பேசிக் கொண்டது. "எங்கோ அநாதையாய்க் கிடந்த என்னை இவர்கள் மூலம் அழைப்பித்து, உம் திவ்ய தரிசனமும் தந்து, பார்வையற்றவனுக்குப் பார்வையைக் கொடுத்து, அவன் பார்த்து ரசிக்கும்போது பார்வையைப் பறித்துக் கொண்டது போல உம்மைப் பிரிந்து செல்ல வைத்தீரே. இது உமக்குத் தகுமா?”

அனைத்து உயிரின் இயக்கத்திற்கும் தாமே பொறுப்பான அன்னை இந்தப் பெண்ணின் உள்ளத்துணர்வைப் புரிந்து கொள்ள மாட்டாரா, என்ன?

அவளை முன்னே அழைத்து, "உனக்கு இங்கேயே இருக்க சம்மதமா?'' என்றார் அன்னை.

"இதற்குத்தான் காத்திருந்தேன்" என்பது போல் அவர் பாதங்களில் நமஸ்கரித்து, எழ மனமில்லாது கிடந்தாள்.

அவள் இதற்குச் சம்மதிக்கமாட்டாள் என்று கருதிய பாபுலாலுக்கு இது வியப்பாக இருந்தது.

அருகே நின்ற சாதகருக்கோ ஆனந்தமாக இருந்தது. அன்னை நம் ஆன்மாவில் நுழைந்து நம்மை முன்னே கொண்டு வருபவர். இல்லையெனில் இப்படியொரு நாடகம் நடத்தி இருப்பாரா என்ன! பிரபாவதியின் உள்ளம் புரிந்துதான் அவர் இப்படிக் கேட்டிருக்கிறார் என்று சாதகருக்குப் புரிந்தது. பாபுலாலுக்குப் புரிய வாய்ப்பில்லை.

தொடரும்.....



book | by Dr. Radut